எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 3,993 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

“இதுதான் கிருஷ்ணகுமாரோட ரூம்…”

ஒரு வரைபடமாகவே வரைந்து காட்டி விளக்கினான் செல்வம். 

“அதாவது-மாடி?” கரிகாலன் கேட்டான்.. 

“ஆமா. மாடிக்குப் போற மாடிப்படியின் கீழ் இருக்கிற ரூமுக்குள் போய்தான் சிவசிதம்பரம் பணம் எடுத்திட்டு வந்தார்…” 

“ரசீது வேண்டாம்னு சொல்லிக் குடுத்தார்னா-அது கணக்கில் காட்டாத பணமாத்தான் இருக்கணும்” 

“நினைவுல வச்சிக்க அந்த ரூம்லதான் பணம் இருக்கணும்…”

”நகைகளையெல்லாம் எங்கே வச்சிருக்கானோ மனுசன்-வீட்ல இருக்கோ இல்லை – பேங்க் லாக்கர்ல இருக்கோ…?” 

“போன அன்னைக்கே அதையெல்லாம் க்ளீயரா நோட் பண்ணிடு. ஒரு நிமிஷத்தைக்கூட வேஸ்ட் பண்ணாதே… நாலைஞ்சு நாள்தான் – அதுக்குள்ளே விஷயத்தை முடிச்சிடணும்…”

“அதெல்லாம் க்ளியரா பண்ணிடுவேன்… ஆனா, அங்கே இருக்கிற நாலைஞ்சு நாள்ல உன்னை நான் காண்டாக்ட் பண்ணவா வேண்டாமா?” கரிகாலன் கேட்டான்.

”அதை நான் இன்னும் முடிவு பண்ணலை. ஆனா, நீ செவ்வாகிழமை அங்கே போன அப்புறம்; புதன்கிழமை காலையில் நான் ஒரு விசிட் அடிப்பேன்- சும்மா கிருஷ்ணகுமாரைக் கண்டு பிடிக்கிற வேலையா பேங்ளூர், கொச்சின் எல்லாம் போய் பாத்துட்டு வந்திட்டேன், எங்கேயும் அவன் கண்ல படலைன்னு ஒரு பொய் அழுகை; அழறதுக்காக வருவேன்… என் மகன் நேத்திக்கி அவனாவே திரும்பி வந்திட்டான்னு ரொம்ப சந்தோஷமா அந்த சிவசிதம்பரம் சொல்வான். ஓகே சார்! ரொம்ப சந்தோஷம் எனக்குன்னு சொல்லிட்டு குட்பை சொல்லி எழுந்து வந்திருவேன்…” 

“தூள் கிளப்பற மாதிரியான ஐடியா செல்வம்…”

“இன்னிக்கி வெள்ளிக்கிழமை. அடுத்த சனிக் கிழமை ஹெளரா மெயில்ல நமக்கு டிக்கெட் ரிசெர்வ் பண்ணிடறேன்…” 

“அதாவது முதல்ல சொன்ன மாதிரி மூணு டிக்கெட்?” 

“வேணும்னா ரெண்டே ரிசர்வ் பண்ணிடுவோம். முதல்ல ஒரு கவுண்டர்ல நின்னு ஒண்ணு ரிசர்வ் பண்ணிக்கிறேன்; ஒன் அவர் கழிச்சி வேற ஒரு கவுண்டரில் நின்னு இன்னொன்னு பண்ணிக்கிறேன்.” 

“அப்ப இந்த மாதிரி செய்…” 

‘ஒரு டிக்கெட்டை சென்ட்ரல்ல பண்ணிடு. இப்ப மாம்பலத்திலேயும் கம்ப்யூட்டர் ரிசர்வேசன் ஓப்பன் பண்ணிட்டானே… இன்னொரு டிக்கெட்டை உடனே மாம்பலம் வந்து ரிசர்வ் பண்ணிடு…” 

“அதுவும் நல்ல ஐடியாதான்… அப்படியே பண்ணிடறேன்.”

“ஆனா செல்வம்; ஒண்ணே ஒண்ணுதான் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நான் போய் அவனுங்க வீட்ல நான் தான் கிருஷ்ணகுமார்னு சொல்லிட்டு உக்காந்திருக்கப் போகிற அந்த நாலைஞ்சு நாள்ல திடீர்னு அந்த ஒரிஜினல் கிருஷ்ணகுமாரே எதிர்பாராமே திரும்பி வந்து நின்னா என்ன பண்றது…?” 

செல்வமும் இந்தக் கோணத்தை யோசித்தே பார்க்காததால் யோசனையில் ஆழ்ந்துவிட்டான்… 

“இதை நான் யோசிச்சே பாக்கலை கரிகாலா…”

“யோசிச்சு பார்க்கணுமே…”

செல்வம் சில நிமிஷங்கள் யோசித்துப் பார்த்து விட்டுச் சொன்னான். 

“இல்லை, கரிகாலா இதில் யோசிச்சிப் பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லை. அப்படி அந்த ஒரிஜினல் கிருஷ்ணகுமார் பயல் திடுதிப்னு திரும்பி வந்தான்னா-கண் இமைக்கறதுக்குள்ளே பறந்திடு அந்த இடத்தில் இருந்து…” 

“தேவைப்பட்டா பெரிய அளவிலேயே ஆக்ஷன் எடுத்திடறேன்…” 

“அதுக்காக அவசரப்பட்டு யாரையும் தீர்த்துக் கட்டாதே… உன்னை ரொம்ப ஈசியா ஃபாலோ பண்ணிடுவான்… இந்தக் கொலையை முடிஞ்சா நடத்திட்டு கல்கத்தா ஓடப்ளான் போட்ற காரணமே உன் அடையாளத்தை ட்ரேஸ் பண்ணிடக் கூடாதே என்கிறதுக்குத்தான்…” 

“நாம் ப்ளான் போட்டபடி விஷயம் சக்சஸ் ஆச்சின்னு வச்சிக்க -அப்ப நான் கடைசி வரைக்கும் கிருஷ்ணகுமார்தான் செல்வம்…” 

“ஸாரி; என்ன சொல்றேன்னு புரியலை.” 

“அதாவது செவ்வாய்க்கிழமை காலையில் நான் அங்கே போகப் போகிறேன். போய், ஏதோ மனசில் நிம்மதி இல்லாமேதான் வீட்டை விட்டு ஓடினேன்; ஆனா ஓடிப்போன இடத்திலேயும் எனக்கு நிம்மதி இல்லை; அதான் வந்திட்டேன்னு சொல்லிட்டு என்னோட ரூமுக் குள்ளே போய் உக்காந்திக்கப் போறேன். அங்கே போய் உட்கார்ந்த வேலை முடிஞ்சதும், கெடைச்சதை யெல்லாம் ஜோரா அள்ளி வாரிக்கிட்டு, யாரும் இல்லாத நேரமா பார்த்து, முதல்ல அவங்க மகன் கிருஷ்ணகுமார் ஒரு சீட்டு எழுதி வச்சிட்டு கிளம்பிப் போன மாதிரி, நானும் ஒரு வரி எழுதி வச்சிடறேன். இனி நான் திரும்பியே வரப் போவதில்லைன்னு… மறுபடியும் அந்த சிவசிதம்பரம் கோஷ்டி வாயில் விரலை வச்சிக்கிட்டு உக்காரட்டும். மறுபடியும் அருமை மகன் ஓடிப் போயிட்டானேன்னு ஒப்பாரி வைக்கட்டும்… என்ன சொல்றே?” 

”நான் இதில் என்ன சொல்றதுக்கு இருக்கு… நாம் போட்ட பிளான்படி அப்படியே நடந்திட்டா போதும் கரிகாலா..” 

”நடக்க ஆரம்பிச்சாச்சி செல்வம்… அதிர்ஷ்ட தேவதை நம்மைத் தேடி வந்தாச்சி. அதனாலேதான் என் போட்டோவைப் பாத்து அவங்க மகன்னே நெனைச்சது…! அந்த நெனைப்பு ஒண்ணு போதும் சிவசிதம்பரத்தை ஓட்டாண்டி ஆக்கறதுக்கு…”

திடீரென கரிகாலனுக்கு மனத்துள் வெறிமூண்டது. குரலை உயர்த்திப் பேசினான். 

“சிவசிதம்பரம்! என் பணக்கார கம்மனாட்டி! கொடுத்த மூவாயிரம் ரூபாய்க்கு ரசீது வேண்டாம்னா சொல்றே…! பாரு ரசீது குடுக்காமலே உன் வீட்டுப் பணம் அத்தனையும் கொள்ளை அடிச்சிட்டுப் போறேன்… உன் வீட்ல இருக்கிற உன் பொண்டாட்டி நகை அத்தினியையும் சாப்பிடறேன் பார்ரு வறேண்டா வறேன் செவ்வாய்க் கிழமை கார்த்தால வரேன்…” 

“ஏய் கரிகாலா-ச்சீ! என்ன அதுக்குள்ளே இப்படி இமோஷனலா பேசறே…” செல்வம் உரிமையுடன் நண்பனை அதட்டினான். 

“வெறி செல்வம். பல வருஷ வெறி, ஒவ்வொரு அப்பன்கள் மேலேயும் இருக்கிற ஆலகால வெறி…” 

“அந்த வெறிதான் வேண்டாங்கிறேன்… மறந்து போய் சிவசிதம்பரம் வீட்ல இந்த வெறியைக் காட்டிடாதே…” 

”இன்னொரு விஷயத்தை நீ சிவசிதம்பரம் கிட்டே கேட்டியானு தெரியலை…” என்றான் கரிகாலன். உணர்வு மூட்டத்தைத் தணிக்க சிகரெட் ஒன்றை எடுத்துப்பற்ற வைத்த வாறே.. 

“என்ன?” 

“அந்தப் பையன் ஓடிப் போனபோது பணம் கிணம் நெறைய எடுத்துக்கிட்டு போனானா; அதைக் கேட்டியா அந்த ஆளை?” 

“சே! மிஸ் பண்ணிட்டேன் பாத்தியா?” 

செல்வம் அவசரமான குற்ற மனநிலையுடன் கேட்டான். 

“அதில் ‘ரெண்டு விஷயம் நமக்குத் தெரிய வரும் செல்வம். ஒண்ணு -அவங்க அப்பனுக்குத் தெரியாம எவ்வளவு அமௌண்ட் அவன் தேத்திக்கிட்டுப் போயிருக்கான் என்கிற விஷயத்ல-அவ்வளவு பண நடமாட்டம் வீட்டில் ஈஸியா இருக்குன்னு தெரியும். ரெண்டு-அவன் எடுத்துட்டுப் போன பணம் ரொம்ப ஜாஸ்தின்னா ரொம்ப நாளைக்கு அவன் வீட்டுக்குத் திரும்பி வரமாட்டான்!” 

“போய் உடனே ஒரு போன் அடிச்சி கேட்டுட்டு வந்திரட்டுமா?” செல்வம் கேட்டான். 

“ஓடு ஓடு.அது ரொம்ப முக்கியம்” 

சட்டையை எடுத்துக் கொண்டு செல்வம் ஓடினான். இருபது நிமிடங்களில் திரும்பி வந்தான். 

”பணம் கொஞ்சம் நெறையத்தான் எடுத்துக்கிட்டு போயிருப்பான் போலிருக்கு. சிவசிதம்பரம் கெரெக்ட் அமௌண்ட் எவ்வளவுன்னு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டார். அதைச் சொல்றதுக்கே வெக்கமா இருக்காம்.” 

“எப்படிக் கேட்டே…”

“எடுத்துட்டுப் போயிருக்கிற தொகைக்கு ஏத்த படியான ப்ளான்ல போயிருப்பான். அதுக்காகத்தான் கேட்டேன்னேன். பணம் எவ்வளவு எடுத்திட்டுப் போனா லென்ன? மனசு மாறி என் மகன் எங்கிட்டே திரும்பி வந்தா போதும்னு சொல்லிட்டார்…”

“நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச அப்புறம் நல்லா வரட்டும். ஸோ-ப்ளான் அவ்வளவுதானே?” கரிகாலன் கேட்டான். 

“அவ்வளவுதான். இன்னியோட நாம் பிரியறோம்… அந்த ஆளு தந்த மூவாயிரம் ரூபாயை உன்கிட்டே தந்திடறேன். எடுத்திட்டு எங்கே வேணுமானாலும் போய் சுத்து. கரெக்டா செவ்வாய்க்கிழமை காலையில ஊர் ஊரா சுத்தி அலைஞ்சவன் மாதிரி போய் இறங்கிடு… இடையில பார்த்து பேச முடிஞ்சா பேசுவோம், இல்லேன்னா நேரா அடுத்த சனிக்கிழமை சென்ட்ரல்ல ஹௌரா மெயில்ல மீட் பண்ணிப்போம்…” 

“ஹௌரா மெயில்ல மீட் பண்றதுக்கு முந்தி எங்கேயாவது மீட் பண்ணினா தேவலை செல்வம்…” 

“அப்படியா சொல்றே?” 

“அது பெட்டர். நேரா ட்ரெய்ன்ல மீட் பண்ணினா நம்ம டென்ஷனே காட்டிக் குடுத்தாலும் குடுத்திரும்…”

“சரி; அப்ப ஒண்ணு பண்றேன். அடுத்த வெள்ளிக் கிழமை உட்லண்ட்ஸ்ல ரூம் போட்டுத் தங்கிக்கிறேன். முதல்ல நீ கிடைச்சதைச் சுருட்டிட்டு அங்கே வந்திரு. அங்கேயிருந்து சனிக்கிழமை நைட் நேரா சென்ட்ரல் போயிடலாம்…” 

”முடிஞ்சா வெள்ளியே வந்திடறேன். அப்படி இல்லேன்னா சனிக்கிழமை மத்யானத்துக்குள்ளே வந்திடறேன்…”

“ஒருவேளை- போட்டபடி ப்ளான் சனிக்கிழமைக்குள் முடியலைன்னா?” 

“டிக்கெட்டை கேன்சல் பண்ணிடு.”

”அப்ப; எதுக்கும் வர்ற திங்கள் போய் அடுத்த திங்களும் ரெண்டு டிக்கெட் ரிசர்வ் பண்ணி வச்சுக்கிறேன்…” 

“அதுவும் நல்ல ஐடியாதான்… அப்ப நான் கிளம்பிக்கிறேன். நீ?” 

“நான் எங்கேயும் போகப் போறதில்லை. ரெண்டு நாள் நல்லா தூங்கப் போறேன்… நீ ரெண்டு மூணு ஜீன்ஸ் நல்லதா வாங்கிக்க…” 

“வாங்கிக்கறேன்…” 

“திங்கக்கிழமை மறுபடியும் ஒரு தடவை பார்லர் போய் ஃபேஸியல் பண்ணிக்க…” 

‘“சரி.” 

“நல்லா எல்லா விஷயத்தையும் ஞாபகத்ல வச்சிக்க… கொஞ்சங்கூட இமோஷனலா ஆகி விஷயத்தைச் சிக்கலாக்கிக்காதே… நமக்கு இது வலிய வந்திருக்கிற பெரிய சான்ஸ்… இதை மிஸ் பண்ணிடக்கூடாது…”

“மிஸ் பண்ணவே மாட்டேன் செல்வம். கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்… ஏன்னா; இது வேற ஒரு வழியில் ஒரு சந்தர்ப்பம். ஒரு பணக்கார அப்பனோட வாழ்க்கையில மறுபடியும் ஒரு அவமானத்தையும் பெரிய வருத்தத்தையும் நான் உண்டு பண்ணப் போறேனே… அது போதும் எனக்கு… நீ வேணும்னா வந்து பார் எப்படி அந்த ஆளை ஆட்ரா ராமான்னு ஆட்டி வைக்கப் போறேன்னு..” 

“வரத்தானே போறேன்…!” 

“சே! என்ன அருமையான நாடகம் பார்…”

“சினிமாகாரன் எவனுக்காவது இதை அப்படியே எழுதிக் குடுக்கலாம் கரிகாலா…” 

“அப்ப நம்முடைய எல்லாச் சாலைகளும்…”

“குற்றங்களை நோக்கி…” 

‘ஓகே.ஸி.யு” 

“ஸி.யு. குட்நைட்…”

வேண்டிய பொருட்களுடன் கரிகாலன் தெருவில் இறங்கி நடந்தான். ஆட்டோ ஸ்டாண்டில் சில ஆட்டோக்கள் நின்றன. ஒன்றில் ஏறி அமர்ந்து “பிராட்வே பஸ்டாண்ட் போப்பா” என்றான்… “பிராட்வே பஸ்ஸ்டாண்டில் இறங்கி பத்து நிமிடங்கள் அங்கும் இங்குமாக நடந்தான். பின் வேறொரு ஆட்டோ பிடித்து திருவல்லிக்கேணியில் சரஸ்வதியின் வீட்டுக்குப் போனான்… 

“என்னங்க ஆச்சு- உங்க ப்ளான்?” சரஸ்வதி கேட்டாள். 

“ப்ளான் போட்டது போட்டதுதான். சரி; உடனே வேண்டிய துணிகளை எடுத்திட்டு கிளம்பு…”

“எங்கே கிளம்ப?” 

“கோயம்புத்தூர். அங்கிருந்து மூணு நாளைக்கு ஊட்டியில் லூட்டி அடிக்கிறோம்… பின் திங்கக்கிழமை நைட் கோயம்புத்தூர்ல கிளம்பி செவ்வாய்க்கிழமை மார்னிங் மெட்ராஸ் திரும்பறோம். நீ நேரா டிரிப்ளிகேண். நான் நேரா ராஜா அண்ணாமலைபுரம்… உம் கிளம்பு கிளம்பு… “

“பத்தே பத்து நிமிஷம் இருங்க கிளம்பிடறேன்…” சொன்னபடியே பத்து நிமிஷங்களில் சரஸ்வதி கிளம்பி விட்டாள். களிப்புடன் ஒருமுறை அவளை அணைத்து முத்தமிட்டான் கரிகாலன். 

செம்பியம் மதுரைசாமி மடம் தெருவின் மாடியறையில் செல்வம் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோயமுத்தூர் செல்கிற சொகுசான வீடியோ பஸ்ஸில் கரிகாலனும் சரஸ்வதியும் சாய்ந்து கிடந்தபடி மணல் கயிறு திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டபடி- குதூகலமாகப் பயணமாகிக் கொண்டிருந்தார்கள்… 

அத்தியாயம்-8

தொடர்ந்து சரஸ்வதியுடன் இருந்திருப்பதின் இன்பச் சிலிர்ப்பும் உதகமண்டல வானிலையின் ஆனந்தமும் கரிகாலனை மிகவும் பூரிப்பான தோற்றத்தில் காட்டின. ஞாயிற்றுக்கிழமைக்கு உரித்தான விடுமுறைப் பயணிகளும் நகர்ந்து கொண்டிருக்க பொட்டானிக்கல் கார்டன் ஜனங்கள் நிறைந்து காட்சி அளித்தது. உவகையுடன் மெலிதாக சரஸ்வதியை அரவணைத்தபடி நடந்து கொண்டிருந்த கரிகாலனை ‘எக்ஸ்க்யூஸ் மி…” என்ற குரல் அழைத்துத் தடுத்தது. கரிகாலன் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயதை ஒத்த இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். 

“யெஸ்…?” என்றான் கரிகாலன். 

“நீங்க மெட்ராஸிலிருந்துதானே வர்றீங்க?” அந்த இளைஞன் மிகவும் மென்மையாகக் கேட்டான். 

கரிகாலன் பதில் சொல்ல ஒரு விநாடி யோசித்தான். 

பின் “ஏன் கேக்கறீங்க?” என்றான் 

“நீங்க மிஸ்டர் சிவசிதம்பரத்தோட மகன் கிருஷ்ணகுமார் தானே?” 

சரேலென நெற்றிமேட்டில் நட்சத்திரம் மின்னினாற் போலிருந்தது. கரிகாலனின் சர்வ உணர்வுகளும் அந்த இளைஞனை எதிர்கொள்ள குவிந்து விட்டிருந்தன. கச்சிதமாய் வரைந்து வைத்திருந்த வரைபடத்தில் எதிர்பாராமல் ஒரு கரிய கோடு குறுக்கிடுவது போலிருந்தது. கரிகாலன் உஷாராகிக் கொண்டு விட்டான். 

“நீங்க யார்?” 

அந்த இளைஞன் தன்னுடைய அடையாள கார்டை எடுத்து நீட்டினான். கரிகாலன் அதை வாங்கிப் பார்த்தான். ஆனந்த் என்ற அந்த இளைஞன் மார்னிங் ஸ்டார் என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிகிறவன். அதைப் பார்த்ததும் கரிகாலன் சற்றே அதிர்ச்சி அடைந்தான். நீந்தத் தெரிந்தவனும் கடலில் உயர்ந்து வருகிற பெரும் அலையைக் கண்டு எச்சரிக்கை அடைகிற உணர்வு நிலையில் தான் அவனும் இருந்தான். அலையில் மூழ்காமல் எழும்பிக் குளிப்பதில் ஒரு சாதுர்யம் உண்டு. அந்தச் சாதுர்யத்துடன் கரிகாலன் ஆனந்த் என்ற இளைஞனை எதிர் நோக்கத் தயாராகி விட்டான்… அடையாள கார்டை மடித்து அந்த இளைஞனிடம் கொடுத்தான். 

“ஆமா; நான் கிருஷ்ணகுமார்தான்…” என்றான். 

“உங்களைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லி உங்க ஃபாதர் எங்களை அப்பேராச் பண்ணியிருந்தார்.” 

“அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?” கரிகாலன் பொய்யான படபடப்புடன் கேட்டான். சரஸ்வதி வேண்டுமென்றே பின்தங்கி நின்று கொண்டாள். 

“உங்க வீட்ல எல்லாருமே ரொம்ப அப்செட் ஆகிப் போயிருக்காங்க… நீங்க வீடு போய்ச் சேர்ந்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க எல்லாரும்…”

“உங்களுக்கு அவங்க சந்தோஷப்பட்டா போதும்…?” 

“ஸாரி; பர்சனலா கேக்கறேன்னு பார்க்காதீங்க.. உங்களுக்கு என்ன ப்ராப்ளம் வீட்ல.”

“மன்னிக்கணும். என் ப்ராப்ளத்தைப் பத்தி மத்தவங்க கிட்டே என்னால பேச முடியாது…”

“உங்க ஃபாதரால உங்களுக்கு இனிமே எந்த ப்ராப்ளமும் வராது…” 

“என்னால் அவருக்கு ப்ராப்ளம் வருமே…!” 

“உங்களுக்காக எந்த ப்ராப்ளத்தையும் ஃபேஸ் பண்ணுவார்…”

“இதை நீங்கதான் சொல்றீங்க…”

“இல்லை மிஸ்டர் கிருஷ்ணகுமார்! உங்க ஃபாதர் ரொம்ப ஃபீல் பண்றார்… பெட்டர்-நீங்க வீடு திரும்பறது. 
உங்க அப்பாவுக்காக இல்லாவிட்டாலும் உங்க மதருக்காக வாவது வீடு திரும்புங்க… அப்பா மேல இருக்கிற கோபத்துக்கு அம்மாவையும் தண்டிக்கிறீங்க…”

கரிகாலன் யோசனை செய்வது போல நடித்தான். செவ்வாய்க்கிழமை அவனாக மாறி வீடு திரும்பி விட்டதாகத் திட்டமிடப்பட்டிருந்த நாடகத்தில் இது எதிர்பாராத திருப்பம். நாடகத்தின் இறுதி வெற்றிக்காட்சிக்கான முன்னுரை இது. துப்பறியும் நிறுவனத்தார் கண்டு பிடித்ததாக அமைவதில் நாடகம் யதார்த்தமாகவும் துவக்கம் கொள்கிறது. சிறிது தணிந்துவிட்ட பாவனைக்கு தொனியை மாற்றிக் கொண்டு கரிகாலன் சொன்னான்: 

”அம்மாவுக்காக என்னிக்காவது ஒருநாள் நான் எங்க வீட்டுக்குத் திரும்பத்தான் செய்வேன் ஆனா, இன்னிக்குத் திரும்பறதா இல்லை…” 

“என்னிக்கோ திரும்பப் போறதை இன்னிக்கி திரும்பலாமே…”

“நீங்க பேர் வாங்கிக்கலாம்னு பாக்கறீங்க…” 

“அது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லையே…”

“எங்கே தங்கியிருக்கீங்க மிஸ்டர் ஆனந்த்?” ஆனந்த் தங்கியிருக்கும் இடத்தைச் சொன்னான். 

“ஆறு மணி நேரம் கழிச்சி நான் சொல்றேன்- வீடு திரும்பறேனா இல்லையான்னு… போய் உங்க ரூம்ல இருங்க…” 

“நீங்க வந்து சொல்லணும்னு அவசியம் இல்லை. நான் வரேன் நீங்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு…” 

“நான் எங்கே தங்கியிருக்கேன்னு தெரிஞ்சிக்கப் பாக்கறீங்க.” 

“அதை நான் தெரிஞ்சு ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சி. ரூம் நம்பரே சொல்வேன்…” 

“அடிசக்கை! ஜோராத்தான் துப்பறிஞ்சிருக்கீங்க…”

கரிகாலன் மனத்திற்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினான். எதிர்பாராமல் அவன் தங்கியிருக்கும் ஹோட்டலின் குறிப்பேட்டில் அவனுடைய பெயரை கிருஷ்ணகுமார் என்றுதான் பதிவு செய்திருந்தான். 

“கோயம்புத்தூர் கிளம்பறதுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?” ஆனந்த் கேட்டான். 

“ஈவினிங்குக்கு அப்புறமா கிளம்பர மாதிரி ஏற்பாடு பண்ணுங்க…” 

”ஓயெஸ்…” 

“இப்ப உடனே போய் உங்க கம்பெனிக்கும் எங்க  ஃபாதருக்கும் போன் பண்ணுவீங்கன்னு நெனைக்கிறேன்.” 

“என் கடமை ஆச்சே…”

“ஒரு விஷயத்த போன்ல எங்க ஃபாதர்கிட்டே கட் அண் ரைட்டா சொல்லிடுங்க. நான் வீடு திரும்பிட்டேன் என்கிற கும்மாளத்ல ஊர்ல இருக்கிறவனுங்களுக்கெல்லாம் அதைச் சொல்லி அனுப்பி ரகளை பண்ணக்கூடாது அவர். பத்து நாளைக்கு யாரும் என்கிட்ட வரக்கூடாது; என்னை எந்தத் தொந்தரவும் பண்ணக்கூடாது. வீட்டை விட்டு ஓடி வந்தேனே தவிர, இங்கேயும் எனக்கு நிம்மதி இல்லை… அதனாலேதான் வீடு திரும்பிப் போய்ப் பார்க்கலாம்னு மறுபடியும் எனக்கே ஒரு சான்ஸ் குடுத்துக்கறேன். தொண தொணன்னு எதையும் கேட்கச் சொல்லாதீங்க என்னை. பத்து நாள் தனியா என்னை விட்டுடச் சொல்லுங்க…அதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டார்னா வரேன்…”

“கண்டிப்பா ஒத்துப்பார் சார்…”

“எனக்கும் சந்தோஷமா வாழணும்தானே ஆசை…” 

“எல்லோருடைய ஆசையுமே அதுதானே…” 

“இப்ப மணி பத்து. மூணு மணிக்கு வாங்க. கோயம்புத்தூர் போய் அங்கிருந்து மெட்ராஸ் கிளம்பிரலாம்…” 

“அப்ப நான் இப்பவே போய் போன் பண்ணிச் சொல்லிடறேன்.” 

“குட்லக்…” கரிகாலன் கம்பீரமாகச் சொன்னான். ஆனந்த் என்ற இளைஞன் உற்சாகத்துடன் வேகமாக ஓடினான். 

“பாத்தியா சரசு-விதி எப்படி விளையாடுதுன்னு…” கரிகாலன் மகிழ்ந்து போய் கேட்டான். 

“அதெப்படிங்க – நீங்க சொன்ன வார்த்தையை நம்பி உடனே ஓடிட்டாரு…” 

”அவன் போனாலென்ன? அதோ தூரத்ல அவனோட உதவியாளர் ஒருத்தர் நின்னுதான் நம்மை வாட்ச் பண்ணிட்டிருக்காரே…”

சரஸ்வதி ஆச்சர்யத்துடன் சுற்றிலும் கவனித்தாள்.

“அப்படியெல்லாம் பார்க்காமே-வா.” 

“இன்னிக்கி அந்த ஆள்கூடவே கிளம்பிடப் போறீங்களா?” 

“ஆமா…துப்பறியறவன் கண்டுபிடிச்சி என்னைக் கூட்டிட்டு போனதா இருக்கட்டுமே..”. 

“நான்?” 

“நீயும்தான். மெட்ராஸ் போனதும் நீ ட்ரிப்ளிகேன் போயிடு. நான் இவன்கூட ராஜா அண்ணாமலைபுரம் போயிடறேன்…”

“அந்த ஆனந்த் ரொம்ப ஜென்டில்மேன்.” சரஸ்வதி சொன்னாள். 

“எப்படிச் சொல்றே?” 

“என்னை யாருன்னு ஒரு வார்த்தைக்கூட கேக்கலையே உங்களை…” 

“சரி சரி வா; ரூமுக்குப் போயிடலாம்… இன்னும் கொஞ்சம் இருக்கிற ஊட்டி நேரத்தையும் தூள் கிளப்பிரலாம்…” 

சரஸ்வதியை அழைத்துக் கொண்டு தங்கியிருக்கும் ஹோட்டலை நோக்கி கரிகாலன் விரைந்தான்.

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *