எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 3,766 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

புத்தம் புதிய உடைகளில் வேண்டுமென்றே இரண்டு மணி நேரம் தாமதமாகச் சிவசிதம்பரத்தின் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டின் எதிரில் ஆட்டோவில் போய் இறங்கினான் செல்வம். வெளிப்புற கேட் இரண்டும் விரியத் திறந்து வைக்கப்பட்டிருந்தன. போர்ட்டிகோவில் பழைய மாடல் அம்பாசிடர் நின்றது. சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அல்சேசன் நாய் செல்வத்தைப் பார்த்ததும் குரைத்தது. உடனே அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் செல்வச் செழிப்பான தோற்றத்தில் உள்ளிருந்து வேகமாக வெளி வராந்தாவிற்கு வந்தார்… 

“நான் விக்ரமன். மத்யானம் போன் செய்து பேசினேன் -” செல்வம் சொன்னான். 

“ப்ளிஸ் கம்… நான்தான் சிவசிதம்பரம்…” 

“வணக்கம்” 

“வணக்கம். உள்ளே வாங்க தம்பி…” சிவசிதம்பரம் மிகவும் அன்புடன் செல்வத்தை வரவேற்றார். செல்வம் அவருடன் ஹாலுக்குள் சென்றான். ஹால் விசாலமாக இருந்தது. ஹாலில் இருந்தே மாடிக்கு அழகிய படிக்கட்டு சென்றது. ஸோனி கலர் டி.வி யின் மேல் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமாரின் வண்ணப் புகைப்படம் செல்வத்தின் பார்வையில் உடனே பட்டது. அவனுள் நம்பிக்கை விழுதுகள் பலமாகவே அசைந்தாடின. கரிகாலனை இந்த வீட்டிற்குள் கிருஷ்ணகுமாராக உலவவிடுவது நினைத்ததற்கும் மேல் இலகுவான விஷயமாகப் பட்டது. அந்தக் கிருஷ்ணகுமாரின் புகைப்படத்தை நோக்கிக் கையை உயர்த்திக் காட்டி செல்வம் கேட்டான்: “அந்த போட்டோவில் இருக்கிறதுதானே உங்க மகன் கிருஷ்ண குமார்?” 

“பரவாயில்லை தம்பி… என் மகனோட விளம்பர போட்டோ உன் மனசில் ஆழமா பதிஞ்சிருச்சி…” சிவசிதம்பரம் சிறிது மனம் நெகிழ்ந்து சொன்னார். 

“உங்க விளம்பரம் ஆழமா பதிஞ்சதாலேதான் சார்-உங்களுக்கு நான் போனே பண்ணினேன்…” 

“என்ன தம்பி சாப்பிடறீங்க… காஃபி ; டீ…?”

“ஜஸ்ட் காஃபி…”

“தேவம்மா…” சிவசிதம்பரம் உள்ளே நோக்கி குரல் கொடுத்தார். 

“இதோ வரேங்கய்யா…” என்றபடி ஒரு அம்மாள் வேகமாக வந்தாள். 

“இவருக்கு ஒரு காஃபி கொண்டு வா… அம்மாவை எங்கே?” 

“பின்னாடி தோட்டத்ல இருக்காங்கய்யா…” 

“இங்கே வரச் சொல்லு…” 

“சரிங்கய்யா…”

“சொல்லுங்க மிஸ்டர் விக்ரமன்,” சிவசிதம்பரம் செல்வம் பக்கம் திரும்பினார். 

“உங்க மகனை எத்தனை நாளா காணோம்?” 

“இன்னைக்கோட பன்னிரெண்டு நாளாயிடுச்சி…”

“வீட்லெ யார் கூடேயும் எதுவும் மனஸ்தாபமா?”

“அப்படியெல்லாம் பெரிசா மனஸ்தாபம்னு எதுவும் கெடையாது”

“கூப்பிட்டிங்களா?” என்றபடி ஒரு பெண்மணி வந்தாள். அவளுடைய காதுகளில் ஜொலித்த வைரக் கம்மல்களை செல்வத்தின் கூரிய பார்வை உடனே கணக்கிட்டது. 

“நீயும் இப்படி உட்கார். இவர்தான் அப்ப போன் பண்ணியவர்… நம்ம கிருஷ்ணகுமாரைக் கண்டுபிடிக்க முயற்சி பண்றதுக்காக வந்திருக்கார்…” 

அந்தப் பெண்மணியும் சிவசிதம்பரத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள். அப்போது செல்வத்திற்கு காப்பி வந்தது. நன்றி சொல்லி கோப்பையை வாங்கிக் கொண்டான். “அப்ப அந்த டிடெக்டிவ் கம்பெனிக்காரங்க?” சிவசிதம்பரத்தின் மனைவி கேட்டாள். 

“அவங்க அவங்களோட வழியில பார்த்துக்கிட்டு இருப்பாங்க…” 

”எந்த டிடெக்டிவ் கம்பெனியில் அப்ரோச் பண்ணியிருக்கீங்க?” செல்வம் கேட்டான். 

“மார்னிங் ஸ்டார்!” 

“நல்லா பண்ணுவாங்க.” 

“இதுக்கு முன்னாடி நீங்க இந்த மாதிரி கேஸ் எதுவும் அட்டெண்ட் பண்ணியிருக்கீங்களா விக்ரமன்?” 

”பண்ணியிருக்கேன் சார்…” 

”ஓயெஸ்”. 

“எப்படி தனி ஆளா பண்ணுவீங்க” 

“பேங்களூர், பாம்பே, டில்லி எல்லாத்திலும் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட மனுசங்க இருக்காங்க. நிறைய சி.பி.ஐ. ஆளுங்ககூட எனக்குத் தெரிஞ்சவங்கதான்… இங்கேயே போலீஸ் டிபார்ட்மெண்ட்ல தெரியாத ஆள் கெடையாது எனக்கு… அதனால-என்னால் தனியா இருந்து முயற்சி பண்ண முடியுமான்னு சந்தேகப்படாதீங்க…” 

“நோ நோ சந்தேகப்படலை…” 

“நம்பிக்கையும் இன்வால்வ்மெண்ட்டும் இல்லாமே எந்தக் காரியத்திலும் நான் இறங்கவே மாட்டேன்.”

“தேங்க்யூ மிஸ்டர் விக்ரமன். நீங்களாகவே இப்படி வந்து என் மகனைக் கண்டுப்பிடிச்சித் தரேன்னு நம்பிக்கை யோட சொல்றது ரொம்ப சந்சூதாஷமா இருக்கு எனக்கு… ஏன்னா; கிருஷ்ணகுமார் ஒரே மகன் எங்களுக்கு…” 

வீட்டை விட்டு தெருவில் இறங்கியதும் பளிச் சென்ற குளிரில் கனத்த ஒரு மழைத்துளி முகத்தில் விழுந்தாற் போலிருந்தது செல்வத்திற்கு. ஒரே மகன்… 

“டாட்டர்ஸ்தான் மூணு பேர்” சிவசிதம்பரம் தொடர்ந்து சொன்னார். 

“அப்படியா! கிருஷ்ணகுமார் உங்களுக்கு ஒரே மகனா?… ஸாரி சார்; இதை நான் எதிர்பார்க்கலை. ஒரு மகன்; அதுவும் இந்த இருபத்தாறு வயசில; அதுவும் இவ்வளவு பெரிய குடும்பத்ல பிறந்தவன் இப்படி எங்கே போனான்னே தெரியலைன்னா – நெஜமாகவே கொடுமை தான் சார்…!” 

“சாதாரணமாகக் கொடுமையா… இந்தப் பன்னி ரெண்டு நாளா தூக்கம் கெடையாது தம்பி எங்களுக்கு… கிருஷ்ணகுமாருக்குக் கல்யாணம் பண்றதுக்கு வேற பெண் பார்த்துட்டு இருந்தோம்… இப்படி ஓடிப் போயிட்டான்- அநியாயமா.” 

சிவசிதம்பரத்தின் மனைவி கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

“ஆனா ஒண்ணு சார்…” செல்வம் தயங்கினான். “சொல்லுங்க விக்ரமன்.” 

“ரொம்பப் பெரிய காரணம் இல்லாமே கிருஷ்ண குமார் வீட்டைவிட்டு ஓடிப்போயிருக்க முடியாது…” 

“அந்தக் காரணம் என்னன்னுதானே தெரியலை”

“ஒரு வேளை இப்படி இருக்கலாமா சார்?”

“எப்படி விக்ரமன்?’ 

”கிருஷ்ணகுமாருக்கு விருப்பம் இல்லாமே வேறு யாராவது ஃபோர்ஸ் பண்ணி அவனைச் சட்டத்துக்கு விரோதமா கூட்டிட்டுப் போயிருக்கிறதுக்குச் சாத்தியம் உண்டா?” 

“யூ மீன் கிட்நாப்பிங்?” 

“யெஸ்.” 

“இல்லை… அவனே ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டுத் தான் போயிருக்கான்…” 

“அந்த லெட்டரை நான் பார்க்கலாமா?” 

“இதோ எடுத்திட்டு வரேன்…”

சிவசிதம்பரம் எழுந்து ஓர் அறைக்குள் போய் எடுத்து வந்து செல்வத்திடம் தந்தார். செல்வம் காகிதத்தைக் கவனத்துடன் பிரித்துப் படித்தான். 

பெற்றோர்களுக்கு, 

என்னைத் தேட வேண்டாம். நான் போகிறேன். என்னுடைய மனோநிலைகளுக்கு ஏற்றபடியான வாழக்கைச் சூழல் வீட்டில் இல்லை என்பதுதான் எனது வெளியேற்றத் துக்குக் காரணம். என் வெளியேற்றம் உங்களை அதிகம் பாதித்து கஷ்டப்படுத்தவே செய்யும். எனக்கு வேறு வழி யில்லை. மன்னித்துவிடுங்கள். விடை பெறுகிறேன். 

கிருஷ்ணகுமார்… 

கடிதம் மிகவும் சுருக்கமாகத்தான் எழுதப்பட்டி ருந்தது. இரண்டு முறை படித்துவிட்டு, செல்வம் சிவ சிதம்பரத்திடம் கொடுத்தான். 

“ரொம்ப சென்சிடிவ் பாய்…” சிவசிதம்பரம் சொன்னார். 

“இந்தச் சின்ன லெட்டர்லேயே தெரியுது”.
 
“பொதுவா சொன்னா விக்ரமன்; இந்தக் காலத்துப் பையன்களே சரியில்லை… ரொம்ப அமானுஷ்யமா எதையோ திங்க் பண்ணிக்கிட்டு ஒரு கற்பனை உலகத்திலே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க… சமூக அமைப்புக்களையே வெறுக்கிறாங்க…” 

“கிருஷ்ணகுமாரோட நண்பர்கள் என்ன சொல்றாங்க?” 

“அவனுக்கு நண்பர்கள் ரொம்பக் குறைச்சல்… இருக்கிறவங்களும் ஒரு மாதிரி ஃப்ரீக். ட்ரக் அடிக்ட்ஸ்…”

“அப்ப கிருஷ்ணகுமாரும் போதை மருந்துகள் யூஸ் பண்ணுவாரா?” 

“அதிர்ஷ்டவசமாக அவனுக்கு அந்தப் பழக்கங்கள் கிடையாது. கிருஷ்ணகுமாருக்கு நம்முடைய சமுதாய கன்வென்ஷன்ஸ் சரிப்பட்டு வரலை. அமெரிக்காவில் போய் ஸெட்டில் ஆயிடணும்னு ஆசைப்பட்டான். எங்களுக்கு அவனை அமெரிக்காவுக்கு அனுப்ப இஷ்டமில்லை. நல்லபடியா கல்யாணத்தைப் பண்ணிட்டு இங்கேயே இருக்கட்டும்னு நெனைச்சோம்… கல்யாணம் பண்ணிட்டா சரியாயிடும்னு அவனுக்கு இஷ்டம் இல்லாமலே பெண்ணும் பார்த்துக்கிட்டு இருந்தோம்…” 

“எனக்கு கிருஷ்ணகுமாரோட போட்டோஸ் ஏழெட்டு வேணும் சார்… அதுவும் முழு உருவமும் தெரியற மாதிரி இருந்தா பெட்டர்” செல்வம் சொன்னான். 

“ஆல்பங்கள் இருக்கு. கொண்டு வந்து தரேன். வேண்டியதை எடுத்துக்கோங்க… என் மகள்கள் கல்யாண கேசெட்ஸ் இருக்கு. அவைகளையும் போட்டுப்பாருங்க…”

“உங்க மூணு மகள்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா?” 

“ஆயிடுச்சி. நான் கொஞ்சம் கன்சர்வேட்டிவ் டைப் விக்ரமன். என் எல்லாப் பொண்களுக்குமே பத்தொன்பது வயசில் கல்யாணம் செஞ்சு வச்சிட்டேன். கிருஷ்ணகுமார் சம்மதிச் சிருந்தாபோனவருஷமே அவனுக்கும் நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்திருப்போம்…” 

“ஒரு கேள்வி கேக்க மறந்திட்டேன். கிருஷ்ண குமாருக்கு பெண்களுடன் ஃப்ரண்ஷிப்; அல்லது குறிப்பிட்ட ஏதாவது ஒரு பெண்கிட்டே காதல்-இந்த மாதிரி ஏதாவது உண்டா?” 

“எங்களுக்குத் தெரிஞ்சி ஒரு பெண்கிட்ட ரொம்ப நெருங்கிப் பழகினான். ஆனா அது காதலா இல்லையானு எங்களுக்குத் தெரியாது. அந்தப் பொண்ணுக்கு ரெண்டு வருஷத்துக்கு முந்தி கல்யாணம் ஆயிடுச்சி…” 

“கிருஷ்ணகுமார் பற்றி இன்னும் ஏதாவது சொல்லனும்னா சொல்லுங்க…” 

“அடிக்கடி தாடி வைப்பான். எடுப்பான். என்கூட சரியா பேசமாட்டான். என்னைப் பிடிக்காது அவனுக்கு. எளிமையா வாழணும்னு சொல்வான்… ரொம்ப சிக்கனம்… ஸ்மோக் பண்ணுவான்… சாப்பிடறதுன்னா பிடிக்கவே பிடிக்காது… எங்கே போனாலும் ஜுஸ் சாப்பிடுவான்…”

“அதுவும் திராட்சை ஜுஸ்’னா உசிரு…” சிவசிதம்பரத்தின் மனைவி குறுக்கிட்டுச் சொன்னாள். 

“இதுக்கு மேல் அவனைப் பத்தி வேற என்ன சொல்றதுன்னு தெரியலை விக்ரமன்” 

“போதும் சார்… இவ்வளவு போதும்…” 

“முதல்ல இவருக்கு வீடியோ கேசெட்டைப் போட்டுக் காட்டுங்க…” என்றாள் சிவசிதம்பரத்தின் மனைவி. 

சிவசிதம்பரம் கேசெட் எடுக்க எழுந்து உள்ளே போனார். செல்வம் மனத்துள் மிகவும் உற்சாகமடைந்து நிமிர்ந்து அமர்ந்தான். அதிர்ஷ்டக் காற்று தங்களுக்குச் சாதகமாகவே வீசுவது அவனைக் களிப்பூட்டியது. சிவசிதம் பரத்தின் மனைவியின் இரண்டு கைகளிலும் பதினான்கு வளையல்கள் இருந்தன. சாதாரணமாக வீட்டில் இருக்கின்ற சமயத்திலேயே லட்சரூபாய் பெறுமான ஆபரணங்களில் இருந்தால், விசேஷ தினங்களில் அந்த அம்மாள் இன்னும் எத்தனை லட்சரூபாய் பெறுமான நகைகள் அணிவாள் என செல்வம் கணக்கிட்டுக் கொண்டிருந்த போது, சிவசிதம்பரம் கேசெட்டுடன் வந்து ‘டெக்’ கில் பொருத்தி இயங்க விட்டார்…கிருஷ்ணகுமார் தோன்றிய முதல் ஃபிரேமைப் பார்த்ததுமே செல்வம் உணர்வு வயப் பட்டான்… கல்யாண வரவேற்புப் பணியின் பின்னணியில் தெரிந்த இளைஞன் அவனுக்கு கிருஷ்ணகுமாராகத் தெரிய வில்லை; அவனின் ஆருயிர் நண்பண் கரிகாலனாகத்தான் தெரிந்தான்…

அத்தியாயம்-4

மூன்று முறை கரிகாலன் செல்வம் கொண்டு வந்திருந்த வீடியோ கேஸெட்டைப் போட்டுப் பார்த்து விட்டான். அவனுக்கும் திட்டம் பூர்ணமாக அமைந்து விட்டாற் போலவே இருந்தது. கிருஷ்ணகுமாராக ராஜா அண்ணாமலைபுரம் விஜயம் செய்வது எதிர்பார்த்ததற்கும் மேல் இலகுவானதாகவும் தெரிந்தது. 

”சரி; போதும் செல்வம்; டி.வி யையும் டெக்கையும் கடையில் கொண்டு போய்க் கொடுத்திரு,” என்றான். 

”பாரேன்-ரெண்டு மூணு போட்டோ இருந்தா தாய்யான்னு கேட்டா உடனே வீடியோ கேஸெட்டையே எடுத்தாந்து குடுத்துட்டான்…” 

“பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி… “

“சாதாரணப் பாலா… மசாலா பால் கரிகாலா.. கெட்டியான மசாலா பால்…” 

“பூராவும் ஜீன்ஸ்தான் போட்டிருக்கான் பையன்…”

“வாய்ஸ் ஒண்ணுதான் தெரியலை… அதில் மட்டும் ரொம்ப நிதானமா நிறுத்தி ‘எக்ஸ்போஸ்’ பண்ணிக்க…” 

“முகம் கொஞ்சம் என்னுடையதைவிடச் செழிப்பு…” 

“நாளைக்கு பார்லர் போய் ஃபேஸியல் பண்ணிக்க…” 

“ஜுரம் அடிச்சி லேசா தாடி வளர்ந்திருக்கிறதும் நல்லதா போச்சி பார்…”

“எல்லாமே நமக்குச் சாதகமாகவே இருக்கு கரிகாலா…”

“இனிமே விஷயம் என் கையில இருக்கு…” 

“இன்னிக்கி செவ்வாய்க்கிழமை… அடுத்த செவ்வாய்க்கிழமை காலையில நீ சிவசிதம்பரம் வீட்டுக்குப் போயிடறே… போய் அஞ்சே அஞ்சு நாள்… சனிக்கிழமை ப்ளான் பண்ணினபடி கெடைக்கறதைச் சுருட்டிக்கிட்டு கெளம்பி வந்திடறே…” 

“நீ கல்கத்தாவுக்கு ரெண்டு பெர்த் இப்பவே போய் ரிசர்வ் பண்ணிடு” 

“மூணு பெர்த்தா ரிசர்வ் பண்ணிடுவோம்… ரெண்டு பேரா ரிசர்வ் பண்ணி கிளம்பின மாதிரி இருக்க வேண்டாம்…”

“அதுவும் சரிதான்… இந்த இடத்தைக் காலி பண்றதா வேண்டாமா?” கரிகாலன் கேட்டான். 

“அதான் தெரியலை. என்ன பண்றதுன்னு… “

“அட்வான்ஸை திருப்பித் தரமாட்டேன்னு சொல்வான்.”  

“பார்ப்போம்…” 

“காலி பண்ணிடுவோம்-சொல்லாமலேயே… ஆனா கிளம்பிப் போகும்போது பூட்டைப் போட்டுத் தொங்க விட்டுட்டுப் போயிடுவோம். என்னிக்காவது சந்தேகப்பட்டு பூட்டை உடைச்சிப் பார்த்துக்கட்டும்… என்ன சொல்றே?” 

“அப்படியே பண்ணிரலாமா?” 

“அதான் நல்ல ஐடியா…”

“ஆமாமா… அவன்கிட்டே போய் காலி பண்றோம்னு சொல்லிக்கிட்டு; அநாவசியமா பதில் சொல்லிக்கிட்டு…” 

“ஒரு முக்கியமான விஷயம் அந்த ஆளை நீ கேட்டி யானு தெரியலை, சிவசிதம்பரம் மகன் காணாமல் போன விஷயத்தை போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக் கானான்னு கேட்டியா?” 

“கடைசில எந்திருச்சி வரும்போதுதான் கேட்டேன். கம்ப்ளெயிண்ட் பண்ணலையாம்… பண்ணினா போலீஸ் காரன் கண்டு பிடிக்கிறானோ இல்லையோ; போலீஸ் காரனோட பிடுங்கலைத் தாங்க முடியாதுன்னு போலீஸ்ல சொல்லலையாம்…” 

“பரவாயில்லை. போலீஸ்காரன் யோக்யதையை அந்த ஆள் தெரிஞ்சி வச்சிருக்கான்…” 

“நமக்கும் பிரச்சினை இல்லையே.” 

“இந்தக் கேசெட்டை எப்ப எடுத்திட்டுப் போய் குடுக்கப் போறே?” 

“சாப்பாட்டுக்கு மேல போறேன்… நீ எப்ப ஃபேஸியல் பண்ணிக்கப்போறே?” – செல்வம் கேட்டான். 

“நாளைக்குப் பண்ணிக்கட்டுமா?” 

“டாஜ்ல பண்ணிக்க…” 

“அந்தச் சிவசிதம்பரத்துக்கு என்ன தொழிலாம்?” 

“ஷிப்பிங் ஏஜென்ஸி…”

“ஆபிஸ்?” 

“தம்புச் செட்டி தெருவுல.”

“அந்தப் பயல் கிருஷ்ணகுமார் ஆபிஸ்க்கெல்லாம் போவானா இல்லையா?” 

”சரியா போகமாட்டான் போலிருக்கு. நெனைச்சா போவானாம்… அடிக்கடி ட்ரைவ் – இன்னுக்குப் போய் உக்கார்ந்திருப்பானாம்…” 

“வீட்ல பணம் நெறய வச்சிருப்பான்களோ வச்சிருக்க மாட்டான்களோ-தெரியலை.” 

“எப்படியும் ப்ளாக் மணி நெறய வச்சிருப்பான். அது வீட்லேதானே இருக்கும்…”

“நாம போட்ற ப்ளானுக்குத் தகுந்த மாதிரி பணமும் நகையும் நெறய கெடைச்சாத்தான்…” 

“ஒண்ணும் தேறாதுன்னா அந்தப் பொம்பளையை அடிச்சி மல்லாத்தின்னாலே போதும் கரிகாலா… லட்ச ரூபாய்க்கு மேலே தேறும்…” 

“லட்சரூபாய் போதாது நமக்கு கல்கத்தா போய்ச் செட்டில் ஆகிறதுக்கு…”

“லட்சரூபாய் போதாதுதான். ஒரு பேச்சுக்குச் சொல்றேன். ஒண்ணுமே கிடைக்காமே போறதுக்கு லட்சரூபாய் பெரிய விஷயம்தானே”

“சிவசிதம்பரத்தோட கல்யாணமான பொண்ணுங்கல்லாம் வந்தா பேஜாரா இருக்கும்… எத்தனை பேர்கிட்டே தான் நடிக்கிறது..?” 

‘போனதும் சொல்லிடு அந்த ஆள்கிட்ட சும்மா எல்லாருக்கும் சொல்லி அனுப்பிக் கூட்டம் சேர்க்க வேண்டாம்னு…” 

“முதல் ஆர்டர் அதுதான்…” 

“அப்ப நீ டாஜ் கிளம்பறியா கரிகாலா?” 

”நீ?” 

”நான் இந்தக் கேசெட்டையெல்லாம் சிவசிதம்பரத் தோட ஆபிஸ்ல கொண்டுபோய் குடுத்திட்டு நல்ல பிள்ளை மாதிரி கொஞ்ச நேரம் அவன்கூட உக்காந்து பேசிட்டு இருந்திட்டு ரெண்டு மூணு வேலை இருக்கு-அதையும் முடிச்சிட்டு வந்திடறேன்…”

“ஒரு ஐடியா செல்வம்!” விரல்களை ஆனந்தத்துடன் சொடுக்கியபடி கரிகாலன் சொன்னான். 

“என்ன என்ன?” 

”நீ சிவசிதம்பரம்கிட்டே என்னுடைய போட்டோவை எடுத்திட்டுப் போய் காட்டு…”

“காட்டி?” 

“கிருஷ்ணகுமாரோட வேறொரு போட்டோ இது. ஒரு ஸ்டூடியோவில கஷ்டப்பட்டுத் தேடி கண்டுபிடிச்சி இந்த போட்டோவை வாங்கினேன்னு சொல்லிக் காட்டு…”

“கை குடு கரிகாலா… மூளை உனக்குப் பிரமாதமா வொர்க் பண்ணுது.” 

“என்னோட ஒரு போட்டோவைக் காட்றது ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கிற மாதிரி..ஒண்ணு – என் போட்டோவைப் பார்த்து ஏதாவது வித்தியாசம் தெரியற மாதிரி சிவசிதம்பரத்துக்கு தோணுதா இல்லையான்னு ஒரு ஆஸிட் டெஸ்ட் பண்ணிரலாம். ரெண்டு-நீ ரொம்ப சுறு சுறுப்பா வேலை பண்ணி அவங்க வீட்லேயே இல்லாத கிருஷ்ணகுமார் பயலோட புதுபோட்டோவை தேடிக் கண்டு பிடிச்சி கொண்டு வந்திருக்கிற மாதிரி நல்லா இம்ப்ரெஸ் பண்ணி எஸ்டாப்ளிஷ் பண்ணிரலாம்… என்ன சொல்றே?”

“முதல்ல உன்னோட போட்டா ஒண்ணை செலெக்ட் பண்ணி குடு…” செல்வம் உற்சாகத்தில் மிகவும் உரக்கப் பேசினான். 

“ஒரு நிமிஷம்…” 

கரிகாலன் தன்னுடைய வண்ணப் புகைப்படம் ஒன்றை எடுத்துச் செல்வத்திடம் நீட்டினான். கிருஷ்ணகுமார் புகைப்படங்களுடன் அதை ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்தபின் முழு திருப்தியுடன் கரிகாலனின் போட்டோவை செல்வம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். 

”அப்ப நான் டாஜ் கிளம்பறேன்,” கரிகாலன் சொன்னான். 

“நான் சிவசிதம்பரத்தைப் போய்ப் பாக்கிறேன்.” 

“ஆளுக்கொரு பக்கம்தான் போறோம். ஆனாலும்…”

”நம்முடைய எல்லாச் சாலைகளும் குற்றங்களை நோக்கித்தான்…”

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *