ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 3,278 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

அத்தியாயம்-11 

மாலை மணி நான்கு. 

சங்கர்லால் ஓட்டலில் சிற்றுண்டிச்சாலைக்கு நல்ல நாயகத்துடன் சென்று உட்கார்ந்தார். 

“மெய்நம்பியை நாம் எப்போது போய்ப் பார்க்கலாம்?” என்று கேட்டார் நல்ல நாயகம் 

“நீங்கள் வரத் தேவையில்லை. நான் மட்டும்தான் போகப்போகிறேன். நீங்கன் இங்கேயே இருங்கள்” என்றார் சங்கர்வால்.

நல்லநாயகம் விழிப்புடன் பார்த்தார்.

சங்கர்லால் சொன்னார்:”நான் ஓட்டல் அறையிலிருந்து மெய் நம்பியின் எஸ்டேட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். மெய்நம்பி, பங்களாவில் இல்லை என்றும், அவர் எங்கே சென்றார் என்பது தெரியாது என்றும், நாளை மாலைதான் வருவார் என்றும் சொன்னார்கள் நான் என் பெயரைச் சொல்லவில்லை.”

“அப்படியானால் நாளை மாலைதான் நீங்கள் போவீர்கள். அதுவரையில் நீங்கள் இங்கேயே இருக்கவேண்டியது தானா?”

“நீங்கள் வேண்டுமானால் போகலாம்.”

நல்லநாயகத்திற்கு ஒன்றும் புரியவில்லை. 

சங்கர்லாலின் பார்வை ஓட்டலின் பூந்தொட்டிக்குப் பக்கத்தில் உட்கார்த்திருந்த ஒரு மனிதனின் மீது இருந்தது. அவர் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். 

நல்ல உயரமான மனிதன் அவன். மூக்குச்சற்று நீளமாக இருந்தது. நீண்ட கழுத்து, கழுகுப் பார்வை, நீல நிறக் கம்பளிக் கோட்டும், அதே நிறத்தில் கால் சட்டையும் அணிந்திருந்தான் அவன் கையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டி ஒன்று இருந்தது. 

சங்கர்லாலுக்கு அவன் யார் என்பது தெரிந்துவிட்டது. அவர் அந்த மனிதனின் புகைப்படத்தைப் பல தடவைகள் கமிஷனர் அலுவலகத்தில் பார்த்திருக்கிறார். கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் செல்லையா என்பவன் அவன். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவன் இங்கே அஸ்ஸாமில் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று வியப்படைந்தார் சங்கர்லால். ஆனாலும், பொழுது போக்குக்காக அவன் என்ன செய்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க அவர் முடிவு செய்தார் 

சங்கர்லால் தேநீர் பருகிவிட்டு, நல்லநாயகத்திடம் சொன்னார் “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. அந்த வேலையைக் கவனித்துவிட்டு நான் வருகிறேன், நீங்கள் என்னைத் தேடாதீர்கள்!” 

நல்லநாயகத்திற்கு எதுவும் விளங்கவில்லை. என்றாலும் அவர் சங்கர்லாலிடம் எதுவும் கேட்களில்லை. “ஆகட்டும்” என்றார். 

செல்லையா, பில்லுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே நடந்தான், சங்கர்லால் மெல்ல எழுத்தார். எவரும் ஐயப்படாத வகையில் அவர் நடந்தார். 

ஏறக்குறைய நாலு கெஜத் தொலைவில் செல்லையா நடந்துகொண்டிருந்தான். அவன் கையில் கொண்டு சென்ற அட்டைப் பெட்டியில் என்ன இருக்கும் என்று எண்ணியபடி அவன் பின்னால் சங்கர்லால் நடந்தார். அவன் அந்தப் பெட்டியை எவரிடம் கொடுக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார் சங்கர்லால். 

செல்லையா சம்பியின் எல்லையைக்கடந்து, ஒரு காட்டு வழியில் நடந்தான். சிறிது தொலைவு சென்றதும் ஓர் ஆறு தெரிந்தது. அந்த ஆற்றின் கரை ஓரமாகச் சென்றான் அவன். 

சங்கர்வால் மரங்களின் மறைலில் நின்று அவனுக்குத் தெரியாமல் அவனைத் தொடர்ந்தார். 

ஆற்றங்கரையில் செல்லையா கையிலிருந்த பெட்டியுடன் நின்றான், அவன் எவரை எதிர்பார்த்து நிற்கிறான் என்பது தெரியவில்லை. 

சங்கர்லால் சற்றுத் தொலைவிலேயே நின்றார். 

செல்லையா கைக் கடிகாரத்தைப் பார்த்தான், பிறகு ஆற்றின் தண்ணீரைப்பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சற்றுத் தொலைவில் மோட்டார்ப்படகு ஒன்று வரும் ஓசை கேட்டது. அந்தப் படகு சற்றுப்பெரியது. மெல்ல வந்தது அது. காட்டில் எஸ்டேட்டுகளில் வேலை செய்பவர்களை ஏற்றிச் செல்லப் பயனபடுத்தப்பட்ட மோட்டார்ப் படகு அது. அதில் யார் வேண்டுமானாலும் ஏறிச்செல்லலாம் என்று தெரிந்துகொண்ட சங்கர்லால், மோட்டார்ப் படகு வந்து நிற்பதற்குள், மெல்ல மெல்ல நடந்து செல்லையாவுக்குப் பக்கத்தில் சென்றுவிட்டார்.

படகையே பார்த்துக்கொண்டிருந்த செல்லையா, சங்கர்லாலைப் பார்க்கவில்லை, படகு நின்றதும், அவன் தாவிப் படகில் குதித்தான்.

சங்கர்லாலும் அவன் பின்னாலேயே ஏறினார். 

செல்லையாவின் கையிலிருந்த அட்டைப் பெட்டியை உற்றுப்பார்த்தார் சங்கர்வால். அதில் என்னதான் இருக்கும் என்று பிடுங்கிப் பார்த்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது சங்கர்லாலுக்கு! சட்டைப்பையிலிருந்த சில்லறைக் எடுத்துப் படகில் செல்ல டிக்கட் வாங்கினான் செல்லையா.

சங்கர்லால் டிக்கட் வாங்கச் சட்டைப் பைக்குள் கைவிட்டபோது, அவரிடம் ஒரு பைசாகூட இல்லை! 

சங்கர்லால் பையைத் துழாவினார். அவர் தன் மணி பர்சைக் கொண்டுவரவில்லை. அவர் சட்டைப்பையில் சில்லறைக் காசுகூட இல்லை. 

படகில் டிக்கெட் தருபவன் சற்று விழிப்புடன் அவரையே பார்த்துக்கொண்டு நின்றான். சங்கர்லால் காசு கொண்டுவரவில்லை என்பதைத் தனது முக உணர்ச்சியால் வெளிப்படுத்திவிட்டு, படகை நிறுத்தும்படி சொல்ல வாயெடுத்தார். அப்போது, செல்லையா அவருக்குப் பக்கத்தில் இன்னும் நெருங்கிவந்து, “துன்பம் கொள்ளாதீர்கள் சங்காலால்! எங்கே போகவேண்டும் என்று சொல்லுங்கள். நான் டிக்கெட் வாங்குகிறேன்” என்றான். 

சங்கர்லாம் மெல்லச் சிரித்தார். 

செல்லையா ‘சங்கர்லால்’ என்று சொன்னதும் பக்கத்திலிருந்தவர்கள் திரும்பிச் சங்கர்லாலை உற்றுப் பார்த்தார்கள மிகுந்த வியப்புடன்! 

சங்கர்லால் மெல்லச் சொன்னார்: “நீ போகிற இடத்துக்குத்தான் நானும் வருகிறேன்”. 

செல்லையா சிரித்துக்கொண்டே, “நான் உங்களிடம் கேட்காமலே டிக்கட் வாங்கியிருக்கவேண்டும்!” என்று சொல்லிவிட்டு சங்கர்லாலுக்காக ஒரு டிக்கட் வாங்கினான். 

சங்கர்லால் எதுவும் பேசவில்லை. செல்லையாவும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. படகு ஓடியபோது, மோட்டாரின் ஓசை சற்று மிகுதியாகவே கேட்டது. 

ஒரு கல் தொலைவு வந்ததும், படகு ஓர் இடத்தில் நின்றது. செல்லையா சங்கர்லாலைப் பார்த்து. “இங்கே தான் நான் இறங்கப்போகிறேன்! இறங்கிக்கொள்ளுங்கள்” என்றான். 

சங்கர்வால் அவன் பின்னால் இறங்கினார். 

இருவரும் இறங்கியதும், படகு உடனே புறப்பட்டுப் போய்விட்டது. அங்கே வேறு எவரும் இறங்கவில்லை. காட்டில் சற்று அடர்ந்த பகுதி அது! 

“அடுத்தபடியாக என்ன?” என்றான் 

“நீ போகவேண்டிய இடத்துக்கு நீ போய்க்கொண்டே இரு!” 

“என்னுடன் இன்னும் நீங்கள் வரப்போகிறீர்களா?” ”ஆமாம்.’ 

செல்லையா மெளனமாக நடந்தான். அவனுடன் சங்கர்லாலும் நடந்தார். 

கொஞ்சத் தொலைவு நடந்ததும். “சிறைக்குச் செல்லுவது என்பது எனக்குப் பிடிக்காத ஒன்று” என்றான் செல்லையா! 

“அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது? பார்க்கலாமா?” என்றார் சங்கர்வால்.

செல்லையா சிறிது நேரம் சிந்தித்தான். சங்கர்லாலிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எண்ணியவனைப் போல் பெட்டியை அவரிடம் கொடுத்து, “நீங்களே இதைத் திறந்து பாருங்கள்” என்றான். 

சங்கர்லால் அந்தச் சிறிய அட்டைப் பெட்டியை வாங்கினார். அது அவ்வளவு பளுவாக இல்லை. உள்ளே என்ன இருக்கும் என்று ஊகம் செய்தவரைப்போல், அதை அவனிடமே கொடுத்து, “நீயே திற. நான் மின்பொறி விளக்கை அடித்துப் பார்க்கிறேன்” என்றார். 

அப்போது கொஞ்சம் இருட்டிலிட்டதால், மின்பொறி விளக்கின் உதவி தேவைப்பட்டது. சங்கர்லால் மின்பொறி விளக்கைத் தனது சட்டைப்பையிலிருந்து எடுத்து. பெட்டியின்மீது அடித்தார். 

செல்லையா, அந்தச் சிறிய அட்டைப் பெட்டியின்மீது கட்டியிருந்த ரிப்பனை அமிழ்ந்தான். பிறகு. அதன் மூடியைத் திறந்தான். உள்ளே மெல்லிய சிலப்புக் காகிதங்களில் பல வைரங்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன! 

சங்கர்லால் மெல்லச் சிரித்தபடி, ஒரு சில பொட்டலங்கனை எடுத்துப் பிரித்துக் காட்டும்படி சொன்னார். 

செல்லையா சில பொட்டலங்களை எடுத்துப் பிரித்துக் காட்டிவிட்டு, மீண்டும் அப்படியே அவைகளை மடித்து வைத்தான். 

“இவைகளை எங்கே கொண்டுபோகவேண்டும்?” என்று கேட்டார் சங்கர்லால்.

“இன்னும் இரண்டு பர்லாங்குத் தொலைவு நடந்ததும் ஒரு வெட்டவெளி தெரியும். அந்த இடத்தில் ஒரு சிறிய விமானம் அங்கே வந்து இறங்கும். அந்த விமானத்தில் வருகிறவர்களிடம் இந்தப் பெட்டியைக் கொடுத்துவிட்டு மீண்டும் நான் திரும்பிப் போய்விடுவேன்?” 

“எங்கே?” 

“சம்பி என்னும் ஊருக்கு. இரவுப் பொழுதை அங்கே கழித்துவிட்டு. மீண்டும் விடிந்ததும் புறப்பட்டுவிடுவேன்”.

“நீ எங்கிருந்து இந்த வைரங்களைக் கொண்டு வருகிறாய்?”

“பர்மாவிலிருந்து?” 

“விமானத்தில் எத்தனை பேர்கள் வருகிறார்கள்? அவர்கள் யார்? சற்று விவரமாகச் சொல்லு” 

“விமானத்தில் இரண்டு பேர்கள் வருவார்கள். ஒருவர் விமானி, மற்றொருவர் மெய்நம்பியின் எஸ்டேட்டில் பொறுப்பாளராக இருந்துவரும் வேலப்பன்!”

சங்கர்லாலுக்கு இந்தச் செய்தி சற்று ஊக்கத்தைத் தந்தது.

“மெய்தம்பியின் பங்களா இருக்குமிடம் உனக்கு தெரியாதா?” என்று கேட்டார் சங்கர்லால். 

“தெரியாது.” 

“தெரிந்துகொண்டு போவதுதானே?”

“மெய்நம்பியிடம் எஸ்டேட்டில் வேலை செய்பவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவர் இருக்குமிடம் தெரியாது! அவருடைய பெயருக்குத் தொலைபேசி இருக்கிறது. அதில் பேசினாலும் எவரும் மெய்நம்பி இருக்குமிடத்துக்குப் போவதில்லை. ஏனென்றால், அவர் எவரையும் அங்கே. வரும்படி அழைப்பதில்லை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர் மற்றவர்களை வந்து பார்ப்பார்”. 

“உனக்குப் பணம் தருவது யார்?” 

“பெரும்பாலும் வேலப்பன்தான் வருகிறார்! அவரே பணத்தைக் கொடுத்துவிட்டு, இந்தப் பெட்டியை வாங்கிச் சென்றுவிடுவார்!”

“இந்த வைரங்களை நீயே வாங்கிவந்து மெய்நம்பிக்கு விற்கிறாயா?” என்று கேட்டார் சங்கர்லால். 

செல்லையா இதைக் கேட்டு விட்டுச் சிரித்தான். “மெய் நம்பிக்கு நான் எதையும் விற்பதில்லை. இந்த வைரங்கள் அவருடையது. மெய் நம்பியின் ஆட்கள் இல்லாத இடம் இல்லை. ரங்கூனில் உள்ள அவருடைய மனிதர் இந்த வைரங்களை வாங்கி வைத்திருந்தார். அவைகளை நான் கடத்தி வருகிறேன். அவ்வளவுதான்!” 

“அப்படியானால் நான் சொல்லுகிறபடி நீ செய். விமானம் வந்ததும் நீ வழக்கம்போல் இந்தப் பெட்டியை விமானத்தில் வருகிறவர்களிடம் கொடுத்துவிட்டு, பணத் தைப் பெற்றுக் கொண்டு போய்விடு. நான் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”

“அவ்வளவு தானே? அவர்களைப் பிடிக்க மாட்டீர்களே” 

“எவரையும் இப்போது பிடிக்கப் போவதில்லை!” 

அத்தியாயம்-12

நேரம் ஓடியது. 

விமானம் ஒன்று பறந்து வரும் ஓசை கேட்டது. 

சங்கர்லாலும் செல்லையாவும் வானத்தைப் பார்த்தார்கள். சிவப்பு விளக்கு மட்டும் பளிச்சென்று தெரிந்தது. 

செல்லையா மின்பொறி விளக்கைப் பலதடவை வானத்தில் அடித்துச் சாடை காட்டினான். விமானம் வட்டமிட்டுக் கீழே இறங்கியது. 

சங்கர்லால் பாறையின் மறைவில் இருந்து விலகி, மெல்லச் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டு பார்த்தார். 

விமானம் நிழலைப் போல் தெரிந்தது. விமானத்திலிருந்து ஓர் உருவம்மட்டும் இறங்கி வந்தது. அந்த உருவத்தை நோக்கி நடந்து சென்றான் செல்லையா. இரண்டு உருவங்களும் ஏதோ பேசிக் கொண்டன. சிறிது நேரத்தில் ஓர் உருவம் விமானத்தில் ஏறியது. உடனே, மற்றொரு உருவமும் விமானத்தில் ஏறியது. 

செல்லையாவும் விமானத்தில் ஏறிவிட்டான் என்பனத சங்கர்லால் உணர்த்துகொண்டார். ஆனால் அவர் அதிர்ச்சியடையவில்லை? 

விமானம் புறப்பட்டது. அது புறப்பட்டதும், தாழப் பறந்து பாறையின் பக்கம் வந்தது. பாறையின் மீது அது பறந்தபோது விமானத்திலிருந்து எவரோ மிஷின் துப்பாக்கியால் சுட்டார்கள். படபடவென்று நூற்றுக்கணக்கான குண்டுகள் பாறையைத் தாக்கின. 

விமானம் இரண்டு மூன்று தடவைகள் வட்டமிட்டுத் தாழப் பறந்து பாறைக்கு நேரே வந்தது. அப்போது குண்டுகள் பொழிந்தன மிஷின் துப்பாக்கியிலிருந்து. 

சங்கர்வால் சிரித்துக் கொண்டு புதரின் மறைவில் நின்றார். பிறகு கால் சட்டைப் பைகளில் கைகளை விட்டுக் கொண்டு நடந்தார். 

அவர் சம்பிக்கு நடந்து போக முடிவு செய்தார். வேறு வழியில்லையே. அவர் நடந்து கொண்டிருந்தபோது- 

சற்றுத் தொலைவில் போய்விட்ட விமானம் எதிர்பாராமல் ஓர் இடத்தில் விழுந்து நொறுங்கியது. அது விழுந்ததும் அப்படியே தீப்பிடித்துக் கொண்டது. 

சங்கர்லால் ஓடிக்கொண்டே இருந்தார். விமானம் விழுந்த இடம் சற்றுத் தொலைவில் இருந்தது. அவர் அந்த இடத்தை அடைவதற்குள் விமானம் முழுவதும் தீப்பற்றிக் கொண்டு- 

வெடித்துச் சிதறியது. 

சங்கர்வால் கால்சட்டைப்பைகளில் கைகளை விட்டபடி சற்று மெல்ல நடந்தார். 

விமானம் வெடித்ததால், இங்கும் அங்குமாகச் சிதறித் தீ மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தீப்பிடித்த விமானத்தில் வெந்து கருகிக் கொண்டிருந்தான் ஒரு மனிதன். 

சங்கர்லால், கருகிப் போயிருந்த இந்த மனிதனுக்குப் பக்கத்தில் சென்று பார்த்தார். அவன்- 

செல்லையா. 

விமானத்தில் இருந்த மீதி இரண்டு பேர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் இருவர் மட்டும் எப்படித் தப்பிச் சென்று விட்டார்கள்.

சங்கர்லால் நேரத்தைக் கடத்தாமல் மீன்பொறி விளக்கை அடித்துச் சுற்றுப் பக்கத்தில் பார்த்தார். 

விமானியும் வேலப்பனும் சென்ற இடமே தெரியவில்லை. 

சங்கர்வால் சிறிது நேரம் வரையில் அவர்களைத் தேடிப் பார்த்து மெல்ல நடந்தார். அவர் கால்கள் ஒரே விரைவுடன் நடந்தன. அவர் வவது கை மின்பொறி விளச்கை அடித்து வழியைக் காண உதவி செய்தது. அவருடைய இடது கை கழுத்துப் பட்டையைத் தளர்த்தி விட்டுக் கொண்டே சென்றது. அவர் மனம் எண்ணியது; ‘செல்லையா ஒரு பெரிய தவறு செய்துவிட்டான். நான் வந்திருப்பதைப்பற்றி வேலப்பனிடமும் விமானியிடமும் அவன் சொல்லி விட்டிருக்கிறான். அவர்கள் இருவரும் சங்கர்லாலால் அவனுக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி அவனையும் விமானத்தில் ஏற்றிச் சென்றார்கள். முடிவில் செல்லையா இறந்து விட்டான். வேலப்பனும், விமானியும் தப்பி விட்டார்கள்’. 

சங்கர்லாலின் மனம் விடாமல் சிந்தனை செய்தது. அவர் கால்கள் விடாமல் நடந்தன. கடைசியில் ஒரு வழியாக அவர் சம்பியை அடைந்தார். 

அத்தியாயம்-13 

விடிந்தது. சங்கர்லாலும் நல்லநாயகமும் ஜீப்பில் புறப்பட்டார்கள். மெய்நம்பியின் எஸ்டேட்டைக் காட்டும் அரசாங்கத்தாரின் படத்துடன் நல்லநாயகம் புறப்பட்டார். அந்தப் படத்தை வைத்து வழிகளைக் கண்டுபிடித்து விடலாம் என்று நம்பியது அவர் மனம். 

காட்டை அடைந்ததும் ஜீப்பை எந்தப் பக்கம் செலுத்துவது என்று நல்ல நாயகத்துக்குத் தெரியவில்லை. சாலைகள் எப்படியெல்லாமோ சென்றன. படத்தில் இருக்கும் சாலைகளுக்கும் காட்டில் உள்ள சாலைகளுக்கும் வேறு பாடு ஒன்றும் இல்லாவிட்டாலும் பழக்கமில்லாததால் எல்லாமே அவருக்குப் புதிதாக இருந்தன. 

வழியில் காட்டில் ஒரு சில மனிதர்கள் தென்பட்டார்கள், நல்லநாயகம், மெய்நம்பியின் பங்களா எங்கே இருக்கிறது என்று கேட்க ஜீப்பை நிறுத்தியபோது அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். மற்றும் சிலர் மெய்நம்பியின் பங்களா எங்கே இருக்கிறது என்று சொல்லாமல் நழுவினார்கள், மற்றும் சிலர் வாயைத் திறந்து ‘தெரியாது’ என்று ஒரே மாதிரியாகப் பதில் சொன்னார்கள். 

சங்கர்லாலும் நல்லநாயகமும் காட்டுப் பாதையில் சுற்றிவிட்டுக் கடையில் ஒரு பெரிய பங்களாவைக் கண்டு பிடித்தார்கள். அந்த பங்களாதான் மெய்நம்பியின் பங்களாலாக இருக்கவேண்டும் என்றும் சொன்னார் நல்லநாயகம். சங்கர்லால் ஒன்றும் பேசவில்லை. அவர் அந்தப் பங்களாவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். 

ஜீப் விரைந்தது. 

ஜீப் பங்களாவின் முன் நின்றது. 

அவர்கள் இருவரும் இறங்குவதற்கு முன். பங்களாவி விருந்து பணியாள் ஒருவன் ஓடி வந்தான். அவனுக்கு முன் வேட்டை நாய்கள் இரண்டு குரைந்துக்கொண்டு ஓடி வந்தன. 

வேட்டை நாயைக் கண்டதும் சங்கர்லாலும் நல்லநாயகமும் கீழே இறங்கவில்லை. அப்படியே ஜீப்பில் உட்கார்ந்திருந்தார்கள் 

பணியாள் நாய்களை அதட்டினான். அவைகள் நின்று விட்டன. ஆனால் குரைப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அப்போது, மற்றொரு பணியாள் வந்து நாய்களைக் கட்டி இழுத்துச் சென்றான். அவன் பங்களாவின் பின்புறமாக அவைகளை இழுத்துச் சென்றதும்தான், சங்கர்லானும் நல்லநாயகமும் கீழே இறங்கினார்கள். 

முதலில் ஓடிவந்த பணியாள், “நீங்கள் இருவரும் யார் என்று தெரியவில்லையே?” என்றான். 

நல்லநாயகம் உடனே சொன்னார்: “நாங்கள் இருவரும் மெய்நம்பியைப் பார்க்க வந்தோம். இவர்தான் துப்பறியும் நிபுணர் சங்கர்லால். என் பெயர் நல்லநாயகம் அடுத்த எஸ்டேட்டில் நான் இருக்கிறேன்!” 

பணியாள் இருவருரையும் மாறிமாறிப் பார்த்தான் அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை!

“எங்கள் முதலாளி இந்தப் பங்களாவில் இல்லை. இந்தப் பங்களாவில் இருந்தால் அமைதி இல்லை என்று வேறு ஒரு பங்களா கட்டிக்கொண்டு போய்விட்டார். எப்போதாவதுதான் இங்கே வந்து தங்குவார்!” என்றான் அவன். 

சங்கர்லால் உடனே கேட்டார்; “மெய்தம்பி இப்போது இருக்கும் பங்களா உனக்குத் தெரியாதா?”

“தெரியாது ஐயா! பொறுத்துக் கொள்ளுங்கள்!”

“இந்தப் பங்களாவில் இப்போது யார் இருக்கிறார்கள்?” 

“பணியாட்களைத் தவிர ஒருவரும் இவர்.”

“வேலப்பன் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார் சங்கர்லால். 

“வேலப்பனும் மெய்நம்பி வரும்போதுதான் இங்கே வருவார்! அவரும் மெய்நம்பியின் பங்களாவுக்குப் பக்கத்தில் தான் எங்கேயோ தங்கியிருக்கிறார்!” 

சங்கர்லால் மெல்லப் பங்களாவை நோக்கி நடந்தார். பணியாள் அவரைத் தடுக்கவில்லை. நல்லநாயகம் பேசாமல் அவரைத் தொடர்ந்தார், 

சங்கர்லால் பங்கனாவுக்குள் நுழைந்து பார்த்தார். பங்களா ஓர் அலுவலகத்தைப் போலிருந்தது. உள்ளே இரண்டு மூன்று பணியாட்களைத் தவிர வேறு ஒருவரும். இல்லை. பங்களாவின் பின்புறம் இருந்த கார் கூடங்கள் காலியாக இருந்தன. 

மாடியின்மீது இருந்த தொலைபேசியைப் பார்த்தார். சங்கர்லால், பணியாளைக் கூப்பிட்டு, “இங்கிருந்து மெய் நம்பி தங்கியிருக்கும் பங்களாவுக்குத் தொடர்பு கொள்ளலாம் அல்லவா?”

“ஆமாம்” 

“தொடர்பு கொண்டு சங்கர்லால் மெய்நம்பியைக் காண விரும்புவதாகவும். அவர் இல்லாலிட்டால் வேலப்பனைக் காண விரும்புவதாகவும் சொல்லு”. 

பணியாள் தொலைபேசியை எடுத்து டயல் செய்தான். நேற்று சங்கர்லால் அழைத்த அதே எண்ணைத்தான்  அவனும் சுழற்றினான். அப்போது அவன் கைகள் நடுங்கின. சங்கர்லால் அதைப் பார்க்காததைப்போல் வேறு பக்கம் பார்த்தார் 

தொலைபேசியைக் காதில் வைத்துச் சிறிது நேரம் காத்திருந்த பணியாள் எவருடனோ பேசினான். சங்கர்லால் சொன்னதை அப்படியே சொன்னான். பிறகு, தொலைபேசியை வைத்துவிட்டு, சங்கர்லாலைப் பார்த்துச் சொன்னான்: “மெய்நம்பி பங்களாவில் இல்லை! வேலப்பன் நேற்று மாலை எங்கேயோ சென்றவர் திரும்பி வரவே யில்லையாம்!” 

சங்கர்வால் அவனுக்கு ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு நல்லநாயகத்துடல் வெளியே வந்தார். 

இருவரும் ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார்கள். 

ஜீப் புறப்பட்டதும் சங்கர்லால் சொன்னார்; ‘”அதோ பாருங்கள் நல்ல நாயகம்! தொலைபேசியில் கம்பிகள் இங்கிருந்து வேறு எங்கேயோ போகின்றன. அந்த தொலைபேசிக் கம்பிகள் எங்கே போய் முடிகிறதோ அங்கேதான் மெய் நம்பியின் புதுப்பங்களா இருக்கவேண்டும். வழியைப் பார்க்காமல் ஜீப்பை விடுங்கள்! வேலப்பனும் விமானியும் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்!” 

ஜீப் மேடு பள்ளங்களையெல்லாம் கடந்து சென்றது தொலைபேசிக் கம்பிக்குப் போகப் போகக் கம்பங்கள் இல்லை. மரங்களின் மீது அந்தக்கம்பி தொடர்ந்து இணைக்கப்பட்டுச் சென்றது! 

“இந்தக் கம்பிகள் ஏன் மரக்கிளைகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டார் நல்லநாயகம்.

சங்கர்லால் சொன்னார்; “தொலைபேசி இலாகாவினர் இந்தக் கம்பிகளை இணைக்கவில்லை! மெய்நம்பி தாமாக இந்தக் கம்பிகளை இழுத்திருக்கிறார். விடுங்கள் பார்க்கலாம்”. 

ஜீப் விரைந்து சென்றது. தொலைபேசிக் கம்பிகளும் போகப் போக நீண்டு கொண்டே சென்றனர் 

அத்தியாயம்-14 

ஜீப், முடிவில்லாத ஒரு பயணத்தைத் தொடங்கி விட்டதைப் போலிருந்தது. நல்லநாயகம் சலிப்படைய வில்லை!

ஜீப் தொலைபேசிக் கம்பி சென்ற வழியைத் தொடர்ந்து சென்றது சில இடங்களில் தொலைபேசிக் கம்பி, மலைகளின் மீது சென்றதால் ஜீப், சுற்றி வளைந்துகொண்டு வந்து, மறு பக்கத்தில் தெரிந்த தொலைபேசிக் கம்பியைத் தொடர்ந்து செல்லவேண்டியதிருந்தது. 

நல்லநாயகம் கொஞ்சம் களைப்படைந்து விட்டதை உணர்ந்து, சங்கர்லால் ஜீப்பை அவரே ஓட்டத் தொடங்கினார். 

ஜீப் ஓடி கொண்டேயிருந்தது. சங்கர்லால் பேசாமல் ஜீப்பை ஓட்டினார். அவருடைய உதடுகள் உலர்ந்து போயிருந்தன. அவருக்குத் தேநீர் பருகவேண்டும் போலிருந்தது ஆனால் தெர்மாஸ் கூஜாவில் கொண்டுவந்த தேநீர் காலியாகிவிட்டது. இவ்வளவு நீண்ட பயணம் இது என்று தெரிந்திருந்தால் அவர் இன்னும் சிறிது தேநீரைக்கொண்டு வந்திருப்பார். ஆனால், அவர் இதைப்பற்றித் துன்பம் கொண்டதாகத் தெரியவில்லை. ஜீப்பின் முன்னால் இஞ்சினிலிருந்து வந்த ஆவியைக் கண்டதும் அவர் துன்பம் கொண்டார். ஜீப்பிலிருந்து புதிய ஓசை ஒன்று வந்தது. 

ஜீப் சரியாக ஓடவில்லை. ஜீப்பின் இஞ்சினுக்குத் தேவையான தண்ணீர் காலியாகிவிட்டது! அதனால்தான் இப்போது ஆவி மிகுதியாக வந்து, மிகவும் புகை வரத் தொடங்கி விட்டது. 

சங்கர்லால் ஜீப்பை நிறுத்தினார். அவர் ஏன் ஜீப்பை நிறுத்தினார் என்று நல்லநாயகம் புரிந்துகொண்டார். ஆகையால் அவர் ஒன்றும் பேசாமல், உலர்ந்துபோன உதடுகளை நாக்கினால் தடவினார். நாக்குக்கூட உலர்ந்து போயிருந்தது? 

சங்கர்லால் சுற்றுப்புறத்தில் பார்த்தார். மனிதர்கள் வாழுகின்ற இடமாக அது தெரியவில்லை. எங்கேயும் ஒரு மனிதனைக்கூடக் காணோம்! ஒரு வீட்டைக்கூடக் காணோம்! 

“ஜீப்பில் இன்னும் நீண்ட தொலைவு போகமுடியாது” என்றார் நல்லநாயகம். 

“இனிமேல் இப்படியே ஜீப்பை ஓட்டிச்செல்வது மிக ஆபத்துதான்! எங்கிருந்தாவது தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றியபிறகு தான் மீண்டும். ஜீப்பை ஓட்ட வேண்டும்” என்றார் சங்கர்லால். 

“ஜீப்பில் வாளி இருக்கிறது. பக்கத்தில் எங்கேயாவது தண்ணீர் இருச்கிறதா என்று பார்த்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டு நல்லநாயகம் சங்காலாலின் பதிலுக்குக் கூடக் காத்திராமல், வாளியை எடுத்துக்கொண்டு நடந்தார். 

சற்றுந் தொலைவில் ஒரு சிறிய குன்று தெரிந்தது. அந்த குன்றின்மீது ஏறிப் பார்க்கலாம் என்று எண்ணியபடி நடந்தார் சங்கர்லால்.

பாறைகளையும், கரடுமுரடான வழியையும் கடந்து அவர் அந்தக் குன்றின்மீது ஏறினார். குன்றின் உச்சியை அவர் அடைந்ததும், குன்றுக்கு அப்பால் பார்த்தார். அப்போது, அங்கே கண்ட காட்சி ஒரு புதிய உலகத்துக்கு வந்ததைப் போல் இருந்தது! சங்கர்லால், வைத்த விழி வாங்காமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். 

குன்றுக்கு அப்பால், ஆறு ஒன்று தெரிந்தது. ஆற்றில் கரை ஓரங்களில் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு இனிய செடிகள் வளர்ந்திருந்தன. அந்த ஆறு ஓர் இடத்தில் இரண்டாகப் பிரிந்து, மீண்டும் மற்றோர் இடத்தில் ஒன்றாக சேர்ந்து சென்றது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இரண்டாகப் பிரிந்து, மீண்டும் இணைந்த இடத்துக்கு இடையில், உயரமான தீவைப்போல் ஓர் இடம் இருந்தது அந்தத் தீவு சற்றுப் பெரிதாகவே இருந்தது. அந்தத் தீவின் நடுவில், ஓர்அழகிய பங்களா கட்டப்பட்டிருந்தது. பங்களாவைச் சுற்றிலும் அழகான தோட்டம். தீவுக்குச் செல்ல மூங்கிலால் கட்டப்பட்ட ஒரு பெரிய பாலம் தெரிந்தது. 

சங்கர்வால் அப்படியே அசைவற்று நின்றபடி நீண்ட நேரம் அந்தப் பங்களாவைப் பார்த்தார். அதுதான் மெய் நம்பியின் இருக்க வேண்டும் என்று புருப்பங்களாவாக எண்ணினார் அவர். அந்தப் பங்களாவை, ஆற்றின் நடுவில் எப்படி மெய் நம்பி கட்டி முடிந்தார் என்று மிக வியந்தது அவர் மனம். மெய் நம்பி இயற்கையான சுற்றுப்புறத்தில், இப்படி ஓர் அழகிய பங்களாவைக் கட்டிவிட்டு, புதியவர் கண் எவரையும் ஏன் வரவேண்டாம் என்கிறார்! இதற்கு தாள் அவருக்குச் சரியான விடை கிடைக்கவிலலை. 

பங்களாவின் தோட்டத்தில் இரண்டு மூன்று பணியாட் கள் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் கள். அவர்களைத் தவிர, வேறு எவரும் வெளியே இல்லை! 

தொலைபேசித கம்பி பங்களாவுக்குச் செல்வதைக் ண்டார். ஆற்றின் இந்தக் கரையிலிருந்து மீண்டும் கம்பங்கள் நடப்பட்டு, அதிலிருந்து தொலை பேசிக் கம்பி கள் இணைக்கப்பட்டிருந்தன. 

சங்காலால் அந்தப் பங்களா இருக்குமிடத்துக்கு எப்ப டிப் போக வேண்டும் என்பதை அங்கே நின்றபடியே தனது இரு கண்களால் அளந்து பார்த்துக்கொண்டார்; பிறகு அப்படியே ஜீப்பை நோக்கி நடந்தார். 

நீண்ட நோத்துக்குப்பின், நல்ல நாயகம் காலி வாளி யுடன் திரும்பி வந்தார், “இந்தப்பக்கம் எங்கேயும் தண்ணீர் இல்லை! என்ன செய்வது என்று புரியவில்லை! அப்படியே ஜீப்பை ஓட்டிச் செல்ல வேண்டியதுதான்!” என்றார். 

“பக்கத்தில் ஓர் ஆறு நிறையத் தண்ணீர் ஓடுவதைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்றார் சங்கர்லால். 

நல்லநாயகத்தால் நம்ப முடியவில்லை. 

சங்கர்லால் அடுத்தபடியாகச் சொன்னார்: “மெய் நம்பியின் பங்களா இருக்குமிடத்தையும் கண்டு பிடித்து விட்டேன்!” 

நல்லநாயகம் மேலும் வியப்புடன் பார்த்தார். “இங்கே யிருந்தபடி அதற்குள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்றார் அவர். 

“அதோ அந்தக் குன்றின்மீது தற்செயலாக ஏறிப் பார்த்தேன். குன்றுக்கு அப்பால் நான் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை! மெய்நம்பி, மிக வியக்கத்தக்க வகையில் அந்தப் பங்களாவைக் கட்டியிருக்கிறார். ஆறு ஓர் இடத்தில் ரெண்டாகப் பிரிந்து, மீண்டும் சற்றுத் தொலைவில் கூடுகிறது. பிரிந்து செல்லும் ஆற்றின் நடுவில் தீவுபோல் உள்ள இடத்தில் பங்களாவைக் கட்டியிருக்கிறார்!” என்று சற்று விளக்கமாகச் சொன்னார் சங்கர்லால். 

சங்கர்லால் சொன்னதைக் கற்பனை செய்து பார்த்த நல்ல நாயகம் கேட்டார்: “உங்களையே வியப்புள் ஆழ்த்திய அந்தப் பங்களா உண்மையிலேயே எழிலுடன்தான் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய மிக அழகான பங்களாவைக் கட்டிவிட்டு, இந்தப் பங்களாவை அவர் ஏன் இவ்வளவு இரகசியமாக வைத்திருக்கவேண்டும்?” 

சங்கர்லாலின மனமும் மீண்டும் மீண்டும் இதே கேள்வியைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆகையால், அவர் சிரித்துக்கொண்டே ஜீப்பின் பானட்டை மூடிவிட்டு, நல்லநாயகம் ஏறி உட்கார்த்ததும் ஜீப்பைச் செலுத்தினார். 

அரை மணி நேரப் பயணத்துக்குப்பின், மலைகளையும் குன்றுகளையும் சுற்றிக்கொண்டு வந்தபின்பு, அந்த அழகிய பங்களாவை அவர்கள் கண்டுபிடித்தார்கள். 

நல்லநாயகம் பேசமுடியாமல் விழிப்புடன் உட்கார்ந்திருந்தார் 

சங்கர்லால் ஜீப்பைச் சற்று விரைவாகச் செலுத்தி, அந்த மூங்கில் பாலத்தின்மீது ஓட்டினார். அந்த முங்கில் பாலம் சற்று ஆடியது! ஆனால் நல்ல வேளையாக அது விழவில்லை! 

ஜீப், பங்களாவின்முன் சென்று நின்றது. அப்போது, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பணியாள் ஒருவன் வாளியை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தான். “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? யாரும் காரில் இப்படி வரக்கூடாது தெரியுமா?” என்றான். 

சங்கர்லால் மூங்கில் பாலத்தைக் காட்டி “நாங்கள் அந்த முங்கில் பாலத்தின் மீதுதான் வந்தோம். இங்கே எவரும் இப்படி வரக்கூடாது என்று எனக்குத் தெரியாது!” என்றார். 

அந்த நேரத்தில், நன்றாக உடை அணிந்த இளைஞன் ஒருவன் பங்களாவிலிருந்து வந்தான், அவன் சங்கர்லாலையும் நல்லநாயகத்தையும் பார்த்ததும் விரைந்து வந்து இருவரையும் உற்றுப் பார்த்தான். பிறகு “நல்ல நாயகமும் சங்கர்லாலும் எங்கள் எஸ்டேட்டுக்கு வருவது எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் மிகப் பெரிய வரவேற்புக் கொடுத்திருப்போம்! பெரிய ஐயா கூட இல்லையே! உள்ளே வாருங்கள்” என்றான். பிறகு அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்: ‘’என் பெயர் பூவழகு. எஸ்டேட்டின் உதவிப் பொறுப்பாளராக என்னை மெய்நம்பி சேர்த்திருக்கிறார். நீங்கள் இருவரும் பழைய பங்களாவுக்கு வந்ததாக அங்கேயிருக்கும் பணியாள் சொன்னான். ஆனால், நீங்கள் இங்கே வருவதாக அவன் சொல்ல வில்லை! வேட்டையாட இந்தப் பகுதிக்கு வந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.” 

“மெய்நம்பி எங்கே போயிருக்கிறார்?” 

“கல்கத்தாவுக்கு” என்றான் பூவழகு. 

“வேலப்பன் எங்கே?” 

“தெரியவில்லை. நேற்று மாலை விமானத்தில் சென்றவர் திரும்பவில்லை.”

“விமானத்தில் எங்கே சென்றார்?”

”கல்கத்தாவுக்குச் சென்று மெய்நம்பியை அழைத்து. வரப் புறப்பட்டார். இன்று காலையில் மெய்நம்பி தொலைபேசியில் என்னை அழைத்து விமானம் வரவில்லை என்றும் வேலப்பனும் வரவில்லை என்றும் கூறினார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை!” என்றான் பூவழகு. 

சங்கர்லால் நல்லநாயகத்தைப் பார்த்தார். பிறகு திரும்பிப் பூவழகைப் பார்த்து, “விமானம் விபத்துக்குள்ளாகிலிட்டது” என்று சொன்னார். 

இதைக் கேட்டதும் பூவழகு தாக்குண்டவனைப் போல “உண்மையாகவா? எங்கே?” என்றான். 

“காட்டிலேயே அது விபத்துக்குள்ளாகி விழுந்து தீப்பற்றிக் கொண்டு எரிந்தது. இதை என் கண்ணால் நான் கண்டேன்,” 

“அப்படியானால் விமானியும் வேலப்பனும் என்ன ஆனார்கள்?” என்று கேட்டான் பூவழகு.. 

”அவர்கள் இருவரும் விபத்துக்குள்ளான விமானத்தில் இல்லை. ஆகையால் அவர்கள் எப்படியோ குதித்துத் தப்பிப் போய்விட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.”

”குதித்திருந்தால் அடிபட்டிருக்குமே?” என்று கேட்டான் பூவழகு. 

“அவர்களுக்கு அடிபட்டிருந்தால் அவர்கள் ஒரே இடத்தில் அல்லவா விழுந்து கிடப்பார்கள். விமானம் விழுந்த இடத்தில் சுற்றுப்புறத்தில் எங்கேயும் அவர்களைக் காணவில்லை. விமானத்தில் மட்டும் ஒரு மனிதன் இறந்து கிடந்தான்”. 

பூவழகுக்கு மிகுந்த தாக்குதவைத் தந்தது இந்தச் செய்தி. 

*இருவர்தானே அந்த விமானத்தில் சென்றார்கள். மூன்றாவது மனிதன் எப்படி அதில் வரமுடியும்? இறந்து கிடந்தவர் விமானியாக இருக்குமோ?” என்று கேட்டான் பூவழகு. 

“விமானி அல்லன்,” 

“வேறு யார்? உங்களுக்கு விமானியைத் தெரிய நீதி இல்லையே.” என்றான் பூவழகு 

“விமானியைத் தெரிய நீதியில்லைதான். ஆனால் வெளிநாடுகளிலிருந்து விலை உயர்ந்த பொருள்களைக் கடத்தி வரும் செல்லையாவை எனக்குத் தெரிய நீதி இருக்கிறது”. 

பூவழகு சோர்ந்து போய் நின்றான் அவன் முகத்திலே ஏற்பட்ட மாறுதல் கண்டு சங்கர்லால் வியப்படையவில்லை. 

“மெய்நம்பி கல்கத்தாவில் தங்கியிருக்கும் இடம் உனக்குத் தெரியும் அவ்வவா?” என்று கேட்டார் சங்கர்லால், 

‘”தெரியும்” என்றான் பூவழகு. 

“அவருடைய முகவரியைக் கொடு” 

“நீங்கள் அவரைக் காணப் போகிறீர்களா?” என்று கேட்டான் பூவழகு. 

“ஆயாம்” என்றார் சங்கர்லால், 

பூவழகு கொஞ்சம் தயங்கினான், பிறகு, “இன்று பெரிய ஐயா திரும்பி வந்திருக்க வேண்டும். விமானம் செல்லாத தால் திரும்பி வரவில்லை. நீங்கள் போவதற்குள் அவர் இங்கே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள், அதனால், எதற்கும் நான் நீங்கள் கல்கத்தா போவதைப்பற்றி அவரிடம் சொல்லி விடுகிறேன்” என்றான். 

“வேண்டாம். அவருடைய முகவரியையும் தொலைபேசி எண்ணையும் மட்டும் எனக்குக் குறித்துக் கொடு, மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் சங்கர்லால். 

பூவழகு வேறு வழியின்றி ஒரு காகிதத்தில் மெய் நம்பி கல்கத்தாவில் தங்கியிருக்கும் இடத்தின் முகவரியைக் குறித்துக் கொடுத்தான். அதில் தொலைபேசியின் எண் இருந்தது. 

அப்போது பணியாள் ஒருவன் தேநீர்க் கோப்பைகளுடன் வந்தான். முதலில் சங்கர்லாலிடம் ஒரு கோப்பையையும், பிறகு நல்லநாயகத்திடம் ஒரு கோப்பையையும் கொடுத்துவிட்டு மீதியிருந்த ஒரு கோப்பையைப் பூவழ்கிடம் கொடுத்தான். 

மூவரும் ஒரே நேரத்தில் தேநீரைப் பருகப் போன நேரத்தில்- 

திடீரென்று மாடி மீதிருந்து எவரோ அலறும் குரல் அந்தப் பங்களாவையே தூக்கி எறிவதைப் போலிருந்தது!

திடீரென்று வீல்வீல் என்று ஒரு பெண் அவறும் ஓசையும் கதவை ஆற்றலுடன் தட்டும் ஓசையும் கேட்டது. அப்புறம்- 

அமைதி, 

அந்த அலறல் ஓசை கேட்டதும், சங்கர்லால் தேநீர் கோப்பையை அப்படியே வைத்துவிட்டு அப்படியே எழுந்தார். நல்லநாயகம் நடுக்கத்துடன் தேநீர்க் கோப்பையை அப்படியே கீழே போட்டுவிட்டார். பூவழகு பிடித்திருந்த கோப்பை நடுங்கியது. அதுவும் தவறி கீழே விழுந்திருக்கும். ஆனால், அதற்குள் அவன் கோப்பையைப்பக்கத்தில் இருந்த முக்காலியின் மீது வைத்து விட்டு மாடிக்கு ஓடினான். 

சங்கர்லால் அவன் பின்னால் ஓடினார். இருவருக்கும் பின்னால் நல்லநாயகம் ஓடினார். 

மாடியிலிருந்த ஓர் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது பூவழகு ஓடிப்போய் அந்த அறையில் கதவைச் சாவி போட்டுத் திறந்தான். 

உள்ளே- 

ஒரு பெண் கதவுக்குப் பக்கத்தில் அப்படியே விழுந்து கிடந்தாள். 

அவள் மயங்கி விழுந்து கிடந்தாள்! 

பூவழகு திரும்பிச் சங்கர்லாலைப் பார்த்தான் ”பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வந்தபோது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை மெய்நம்பி அறிந்தால் மிகவும் துன்பம் கொள்ளுவார்” என்றான். 

சங்கர்லால் பூவழகைப் பார்த்துவிட்டு, கீழே விழுந்து கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்தார் அவளுக்கு நாற்பததைந்து வயது இருக்கும். தலை சற்றுக் கலைந்திருந்தது. கண்கள் மூடியிருந்தன. முச்சுத் திணறியது. அவளின் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் சங்கர்லால் சற்று வியப்படைந்தவர் போல் காணப்பட்டார். அவர் திரும்பி நல்லநாயகத்தைப் பார்த்தபோது, நல்லதாயகமும் சற்றுத் தாக்குண்டவரைப் போல் இருந்தார். 

இதற்குக் காரணம், நல்லநாயகத்தின் எஸ்டேட்டில் பணியாற்றி வந்த வேண்மகள் முகத்திற்கும், இந்தப் பெண்ணின் முகத்திற்கும் ஒற்றுமை இருந்தது தான். வேண்மகள் நாற்பத்தைந்து வயதில் எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. இந்தப் பங்களாவில் அலறி விட்டு இப்போது விழுந்து கிடக்கும் இந்த அம்மாளைப் பார்த்தால் போதும். அப்படியிருந்தாள் அவள்.

அத்தியாயம்-15 

“ஏன் இவள் இப்படி அலறி விட்டு மயக்கத்துடன் விழுந்து கிடக்கிறாள்? என்ன நடந்தது?” என்று கேட்டார் சங்காலால்.

“பொறுத்துக்கொள்ளுங்கள். இவள் மெய் தம்பியின் மனைவி. இவளைப் பூட்டியே வைத்திருக்கவேண்டும் என்பது மெய்நமபியின் கட்டளை!” என்றான் பூவழகு. 

“மெய்நம்பியின் மனைவிக்கு வெறி பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார் சங்கர்லால். 

“ஆமாம்”. 

“இதற்குச் சிகிச்சை செய்யக்கூடாதா?” 

“இந்த உண்மை வெளியே எவருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கிறார் மெய்நம்பி. இங்கே காட்டில் உள்ள சிறந்த வைத்தியர்களெல்லாம் மூலிகைகளையும் நாட்டு மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் பயனில்லை” 

“வெறி பிடித்தவர்கள் நாட்டு வைத்தியத்தினால் குணமாவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார் நல்லநாயகம்.

“நாங்களும்தான் நம்பவில்லை. ஆனால், பெரிய ஐயா சொன்னதைத் தட்டிச் சொல்லவோ, எதிர்த்துச் சொல்லவோ, இங்கே யாருக்கும் துணிவு இல்லை” என்றான் பூவழகு. 

அப்போது பணியாள் ஒருவன் ஒரு குவளையில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்தான். பூவழகு அதை வாங்கி அந்த அம்மாள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். அந்த அம்மாள் கண் விழித்துப் பார்த்தாள். பிறகு எழுந்து, மெல்லச் சன்னல் பக்கமாகச் சென்று அங்கே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அழத் தொடங்கினாள். 

பூவழகு சங்கர்லாலைப் பார்த்து, “புதியவர்களைக் கண்டால இப்படித்தான் இந்த அம்மாள் அழத் தொடங்கிவிடுகிறாள்!” என்று சொல்லிலிட்டுக் கதவைச் சாத்திப் பூட்டினான். பிறகு அசட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிரித்து வைத்தான். 

சங்கர்லால் கேட்டார் “இவ்வளவு அழகிய பங்களாவைக் கட்டிவிட்டு இரகசியமாக இந்த இடத்தை ஏன் வைத்திருக்கிறார் மெய்நம்பி?” 

பூவழகு சொன்னான்: “உண்மை இதுதான். இந்த இடத்தில் இப்படி ஓர் அழகிய பங்களாவை எப்படிக் கட்ட முடிந்தது என்று மற்றவர்கள் வியக்கும்படி, ஒரு நாளைக்குத் திடீரென்று உலகம் அறியச் செய்யவேண்டும் என்பது மெய் நம்பியின் கனவு! ஆனால் உங்களைத் தவிர வேறு எவரும் இன்னும் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை!” 

சங்கர்லால் பூவழகைப் பார்த்து, “நாங்கள் இருவரும் இந்தப் பங்களாவைச் சுற்றிப் பார்க்கலாமா?” என்று கேட்டார். 

பூவழகால் மறுக்க முடியவில்லை. “இந்தப் பங்களாவின் இரகசியம் இனி ஒன்றும் இல்லை. ஆகையால்,நீங்கள் சுற்றிப் பார்ப்பதில் குற்றம் எதுவும் இல்லை. நானே உங்களை அழைத்துப் போகிறேன்” என்று சொல்லிப் பூவழகு சங்கர்லாலையும் நல்ல நாயகத்தையும் அழைத்துச் சென்றான், ஒவ்வொரு அறையாக, எல்லா அறைகளையும் காட்டினான் 

கீழே பங்களாவின் பின்புறத்தில் பூட்டப்பட்டிருந்த சில அறைகளைச் சங்கர்லால் பார்க்கவேண்டும் என்று கேட்டபோது, பூவழகு தயங்கினான். “அவை எளிய அறைகள், கிடங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவைகளில் தேயிலை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன” என்றான். 

“மெய்நம்பி எல்லாவற்றிலும் புதுமையை உண்டாக்கியிருக்கிறார். ஆகையால் அந்தக் கிடங்குகளையும் பார்க்கலாமே என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் சங்கர்லால். 

இனிமேல் பூவழகால் எப்படி மறுக்க முடியும். பூவழகு, கிடங்குகளைத் திறந்துவிட்டான். உள்ளே நிறையத் தேயிலை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோணிப் பைகளையெல்லாம் பார்த்து வந்து சங்கர்லால், நல்லநாயகமும் பூவழகும் தேயிலைத் தோட்டங்களைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது மெல்ல நழுவிப் பக்கத்தில் மறைவாகச் சென்று, அடியில் இருந்த சில மூட்டைகளைக் காலால் உதைத்தார். ஒவ்வொரு முட்டையாகக் காலால் உதைத்துக் கொண்டே வந்தார். ஒரு மூட்டையை உதைத்தபோது- 

அந்த மூட்டைக்குள் ஏதோ பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்ததைப்போல் இருந்தது! அவருடைய கால் வலி எடுத்துக்கொண்டது. 

அவர் மெல்ல அந்த மூட்டையை அமுக்கிப் பார்திதார். உள்ளே மிகக் கடினமான பொருள்கள் தட்டுப்பட்டன!

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *