ஆதிரையும் நாற்பது ஆமிகாரரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,737 
 
 

ஆதிரைக்கு விரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது

மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ?

இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது.

இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப் பார்க்கலாம்தான். ஆனால், வலு கண்டிப்பான வீட்டில இருந்த பெட்டை படிக்கிற காலத்தில உங்கெல்லாம் ஏன் திரியுது?

முள்ளியவளைத் தெரியாதவைக்கும் வித்தியானந்தா கொலிச் எண்டதொரு பேர் காதில அடிபட்ட நினைவிருக்கலாம். அந்த ஏரியாவில் ஃபேமஸ் ஆனபள்ளிக் கூடம் அதுதான். இவளும் அதில் தான் படிச்சாள். இந்த சம்ப வத்தை விதி என்பதா… சதி என்பதா என்று தெரியாமல்தான் பெட்டையின்ற ஃபேமிலி இன்று வரை இருக்குது. அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

சுந்தரலிங்கமோ, வைத்தியலிங்கமோ என்பது மாதிரியான ஒரு பெயருடன் நல்ல பெரிய ஸ்ரேஜ் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்தது. அந்த ஏரியாவில் பட்டிமன்றம் நடந்தாலும் சரி, இயக்கத்தின்ர பிரசாரம் நடந்தாலும் சரி, அங்குதான் நடக்கும்.

ஒருநாள் இயக்கம் அங்கு தெருக்கூத்துப் போட்டது. அந்தக் காலத்தில நாலைந்து தெருக் கூத்து கோஷ்டிகள் இருந்தன. எல்லோரும் பஞ்சவர்ண கலர் களில உடுப்புப் போட்டு வருவினம். கொஞ்சப் பேர் சிவப்பு, மஞ்சள் கரை உடுப்போட வருவினம். பெட்டை முன் வரிசையில் இருந்து பார்க்குது.

அது ஜெயசிக்குறுக் காலம். வவுனியாவில இருந்து வெளிக்கிட்டு கண்டி வீதியைப் பிளக்கிறதுதான் ரத்வத்தையின்ர திட்டம். இயக்கம் விடேலை. வந்த ஆமி மாங்குளம் கடக்க மாட்டாமல் நிக்குது. தெருக்கூத்தில இதனை அருமையாகச் சித்தரிச்சினம். நிறையப் பேர் பச்சை உடுப்புக்களுடன் (சிங்களவர்) பாய்ந்து வருகினம். சிவப்பு, மஞ்சள் தரப்பு (இயக்கம்) பின்னுக்குப் பின்னுக்கு வந்து மேடையின் விளிம்பில நிக்கினம். இன்னும் கொஞ்சப் பேர் இதொண்டிலும் சம்பந்தம் இல்லாமல் சமைச்சுச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம் (வன்னிச் சனமாம்).

அந்த நேரம் மேடையில ஓராள் வந்து, அந்தக் கால ரி.ஆர்.மகாலிங்கத்தின்ர குரலில பாடத் தொடங்கும். ‘பார்வையா ளரா இருக்காமல் பங்காளராகு வோம். எல்லோரும் சேர்ந்து இறுதி யுத்தத்தை வெல்வோம்’ எனப் பாட்டின் சாரம் இருந்தது. பாட் டைக் கேட்டு சமைச்சுக் கொண்டு இருந்த ஆம்பிளையள், பொம்பிளையள் எல்லாம் சேர்ந்து பச்சை உடுப்புக்காரரை ஒரு தள்ளுத் தள்ளுவினம். பச்சை உடுப்புக்காரர் பிடரி அடிபட விழுகினம். ஒருவன் புலிக் கொடியுடன் அணி நடையில் வந்தான். இதுதான் அன்றைய தெருக்கூத்து.

முன் வரிசையில இருந்த பெட்டை தள்ளுறவையோட சேர்ந்து தானும் ஒரு கையினால் சின்ன புஸ் பண்ணி பச்சை உடுப்புக்காரரை விழுத்திப்போட்டு, சுதந்திர மண்ணில் படிப்பை கொன்ரினியு பண்ணுவம் என யோசித்தாள்.

அடுத்த நாள் ரியூசனுக்குப் போனவள் வீட்டுக்குத் திரும் பேல. முள்ளியவளை அரசியல் துறை பொறுப்பாளரின் ஸ்கோ ரில் ஒன்று கூடியது. அந்த நேரம் அரசியல் துறையில் ஒரு நடைமுறை இருந்தது. 10 பேரை இயக்கத்துக்குச் சேர்த்துக் குடுத்தால், சேர்க்கிறவருக்கு புது சைக்கிள் குடுப்பினம். இவளையும் சேர்த்து பத்தாக்கி யார் சைக்கிள் வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இவள் நாலு மாதம் றெயினிங் எடுத்து தகடு, குப்பி, ஒரு துவக்கு, 120 ரவுண்ஸ், இரண்டு ஜே.ஆர். குண்டு வாங்கினாள்.

இவளுக்குக் கிடைத்தது ரி. 56 துவக்கு. துவக்கு வகைகளுக்குள்ளயே பழைய கிழவியள் மாதிரி கொஞ்சமும் ஸ்ரைல் இல்லாத துவக்கெண்டால், இந்தியனின் எஸ்.எல்.ஆரும் சைனாக்காரனின்ட ரி 56-ம்தான். ஆனாலும் என்ன தண்ணி, சேறு, புழுதி எதுக்கை போட்டெடுத்து அடிச்சாலும் இது குழப்படிவிடாமல் சொல் பேச்சுக் கேக்கும் என்று கிடைத்ததை வைத்துத் திருப்திப்பட்டுக்கொண்டாள்.

றெயினிங் முடிய இவளின் ரீம் போனது அம்பகாமம் காட்டுக்கு. ஜெயசிக்குறு ஒப்பரேசன் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அந்த நேரம் அறிவிக்குது. அறிவித்த கையோட றிவிபல ஒப்பரேசன் தொடங்குது. மாங்குளத்தில இருந்து கிழக்குப் பக்கம் போகும் வீதியில, ஒட்டிசுட்டான் மட்டும் ஆமி. காட்டுக்குள்ளால முத்தையன்கட்டுப் பக்கம் ஆமியை வர விடாமல் தடுக்கும் பொறுப்பு இவளின் ரீமுக்கு.

இவளின்ர ரீம் காட்டுக்குள்ள 500 மீற்றருக்கு ஒரு பொசிசன் போட்டினம். ஆட்கள் தொகை காணாதது காரணம். ஒரு பொசி சன்ல நாலு பேர். காட்டுக்குள்ள 500 மீற்றர் இடைவெளி என்பது கொஞ்சம் ஓவர்தான். ஆமிக் காரன் புகுந்து விளையாடுவான்.

இப்படியான சிற்றிவேசனில 18 நாட்களைக் கடத்திவிட்டாள். இப்பதான் மெயின் ஸ்ரேசனில இருந்து மெசேஜ் வருது. ஆமி மூவ் பண்ணப் போறானாம். எல்லாப் பொசிசனிலயும் சண்டைக்கு ரெடியாகட்டாம். இவளும் கண்ணுக்குள் காப்போத்தில் நல்லெண்ணெய் ஊற்றின கணக்காக வலு கவனமாக வோச் பண்ணிக்கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்தில தூரத்தில் ரவுண்ஸ் சத்தம் கேக்கத் தொடங்குது. சரி, ஆமிக்காரன் ஸ்ராட் பண்ணிட்டான். நாமும் ஆரம்பிக்க வேண்டியதுதான் என இவள் துவக்கின் சேப்ரி பின்னைத் தட்டினாள். லீடர் பெட்டை சீறி விழுந்தாள். “ஆமிக்காரன் கண் காணாத இடத்தில நிக்கிறான். நீ என்ன சத்த வெடியா வைக்கப்போறாய்?” என. “சரி கிட்ட வரட்டும். நல்லா எய்ம் பண்ணி அடிப்பம்” என இருந்தாள்.

சத்தம் மெள்ள மெள்ள கிட்டவாக வருது. வோக்கியில மாறி மாறி நாலைந்து பேர் கொமாண்ட் பண்ணிக்கொண்டு இருக்கினம். எல்லோரும் ஒரு விஷயத்தைத்தான் சொல்லுகினம். “ஒருத்தரும் பயப்பிடாதயுங்கோ… ஆமிக்காரன் கிட்ட வரட்டும். நல்லாக் குடுங்கோ… ஒருத்தரும் தப்பக் கூடாது.”

இப்போது இவளின் தலைக்கு மேலாக ரவுண்ஸ் சீறிக்கொண்டு போகுது. லீடர் பெட்டை, “வந்திட்டான் அடி… அடி” எனக் கத்துறாள். இவள் மெள்ளத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆமியின் அசுமாத் தம் தெரியுது. சேப்ரியைத் தட்டி ரிகரில கைவைக்க மட்டும்தான் பெட்டைக்கு விரல் ரைப்படிச்சதும் ரென்சனும்.

பிறகு, பெட்டை வலு திறமான சண்டைக்காரி யாகினாள். சண்டை கனநேரமாக நடக்குது. இவ ளுக்கு வலது பக்கத்தில இருந்த இரண்டு பொசிசனும் ஆமியிடம் விழுந்துவிட்டதாக வோக்கியில மெயி னுக்கு அறிவிக்கினம். என்ன நடந்தாலும் பொசி சனில இருந்து பின்னுக்குப் போவது இல்லை என பெட்டையள் முடிவெடுக்கினம். இவையின் பொசி சனை அரை வட்டமாக ஆமி சுற்றிவளைத்துவிட் டான். ஆர்.பி.ஜி., பீ.கே. என சகல அஸ்திரங்களையும் ஆமிக்காரர் பயன்படுத்துகினம். பெட்டையளும் விடுகிறதா இல்லை.

போகப் போக நிலைமை இறுகத் தொடங்குது. இன்னும் இரண்டு மூண்டு பொசிசன் ஆமியிடம் போகுது. ஆபத்தான வேலைதான். இந்த ஏரியாவில இந்த நாலு பெட்டையளும்தான் நிக்கினம். மெயி னில இருந்து இவைக்கு கொமாண்ட் வந்தது. ‘உந்தப் பொசிசனைவிட்டு உடனே பின்னுக்கு வாங்கோ’ என. லீடர் பெட்டை இவளைப் பார்த்தாள். இவள் வோக்கியைப் பறித்தாள். “மெயின் மெயின்… என்ன நடந்தாலும் நாங்கள் பின்னுக்கு வர மாட்டம். விட்ட பொசிசன்களைப் பிடிக்க றை பண்ணுங்கோ, நன்றி.”

இயலுமான வரை தாக்குப் பிடிப்பம் என நாலு பெட்டையளும் நிக்கினம். நாலு பெட்டையள முடிக்க 40 ஆம்பிளையள் சுத்தி நிக்கினம். ஆனாலும், பெட்டையள் உசும்பினமில்லை. திடீரெனப் பின்னுக்கு இருந்தும் அடி வருது. அநேகமாக அதொரு பீ.கே. ஆக இருக்க வேணும். பெட்டையளின் தலைக்குள் மின்னல் அடித்தது. நாலு பக்கமும் வளைத்து பொக்ஸ் அடித்துவிட்டானா?

இவள்தான் பின் பக்கம் கவனித் தாள். பின்னால் இருந்த பாலை மரத்துடன் இருந்து ஒருவன் பீ.கே. அடிக்கிறான். கொஞ்ச நேரம் சமாளிக்கலாம். ஆனால், தொடர்ந்து சண்டை பிடிக்க முடியாத நிலை வருது. நாலு பேரிடமும் இருந்த ரவுண்ஸை எண்ணினால் 50தான் வரும். 50 ரவுண்ஸ் என்பதுஏ.கே-யை ஓட்டோவில விட்டு, ரிகரில் விரலை வைத்து கண்ணை ஒரு முறை மூடித் திறக்க காலியாகிவிடும். இவளிடம் ஒன்று இன்னொருத்தி யிடம் ஒன்று என மொத்தம் இரண்டு குண்டுகள்தான் இருந் தன.

“சரி, நடக்கிறது நடக்கட்டும்… இயலுமான வரை முயலுவோம். கண்டபடி ரவுண்ஸை வீணாக்காமல் ஆமி பங்கருக்க உள் நுளைய முயன்றால் மட்டும் சுடுவம்” என முடிவெடுத்தனர். எதிர்ப் பக்கம் இருந்து சூடு வருவது குறைந்ததும் ஆமிக்காரரும் உற்சாகமாயிற்றினம். பெட்டையள் எண்டாலே ஆமிக்காரர் வலு எழுப்பமாகத்தான் நிற்பினம். இதுக்குள்ள சுடுறதுக்கு ரவுண்ஸும் இல்லை என்றால் கேட்கவும் வேணுமா?

மிக அண்மையில் நிலையெ டுத்திருந்த ஒருவனை நோக்கி ஒருத்தி குண்டு ஒன்றை எறிந் தாள். இப்பொது ஒரே ஒரு குண்டு மட்டும் எஞ்சியிருந்தது.

எல்லாப் பெட்டையளின் முகமும் இருண்டுவிட்டது. இனி செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இனியும் தாமதித்தால், தலை மயிரிலை பிடிச்சுத்தான் இழுத்துக்கொண்டு போவான். இறுகிய குரலில் லீடர் கேட்டாள், “என்ன செய்வம்?” எல்லோரும் அமைதியாக இருந்தனர். லீடர் சொன்னாள், “நான் உயிரோடு பிடிபட மாட்டன். குண்டை என்னட்ட தா. நான் குண்டடிக்கப்போறன்.”

“நானும் உயிரோடு பிடிபடமாட் டன்” இவள் சொன்னாள். மற்ற இருவரும் இதே முடிவை எடுத்தனர்.

ஒரு குண்டைவைத்து நால்வரும் இறந்துபோவது எனத் தீர்மானித்தனர். இவளிடம்தான் குண்டு இருந்தது. இவள் கிளிப்பைக் கழட்டி நாலு பேருக்கும் நடுவில் போடுவாள். அது ஆறு செக்கனோ எட்டு செக்கனோ இதுகளின்ர தலையில என்ன எழுதியிருக்கோ, அந்த நேரம் வெடிக் கும். இந்த நேரம் புதிதாக வெடிச் சத்தங்கள் கேட்டன. “எங்கட ஆக்கள் வந்திட்டினம்போல” ஒருத்தி சொன்னாள். “ம்… இறங்கீட்டினம் போலத்தான் இருக்குது. ஆனால், அவயள் வாறதுக்கிடயில எங்களைப் பிடிச்சுக்கொண்டு போயிடுவான். இனியும் லேற் பண்ணக் கூடாது.”

தங்களை மீட்க ஒரு அணி வருகிறது என்பது நால்வருக்கும் புரிந்தது. ஆனால், அதற்காகத் தாமதிப்பதால் பலன் கிடைக்குமா என்பதை நிச்சயம் செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தனர். “நீ கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போடு” – லீடர் இவளுக்குக் கட்டளையிட்டாள். இவள் கண்ணை மூடிக்கொண்டு குண்டை எடுக்கவும் லீடர் வோக்கியில் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” சொன்னாள்.

இவள் கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போட்ட கணத்தில், வோக்கியில் பொறுப்பாளரின் குரல் ஒலித்தது. “பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ. நாங்கள் வந்திட்டம். உங்களுக்குப் பின்னால இருந்த பீ.கே-காரனையும் போட்டிட்டம். நாங்கள் வந்திட்டம்.”

மிகுதி என்ன சொல்லப்பட்டது என்பது இவளுக்கு விளங்கவில்லை. உதவி அணிகள் பக்கத்தில் வந்தும் அவசரப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் லீட ரைப் பார்க்க, அவள் பேயறைந்து போய் நின்றாள். கணம்தான். இவளது மூளைக்குள் மின்னல் வெட்டியது. பாய்ந்து குண்டின் மேல் படுத்தாள். ஆறு செக்கனோ, எட்டு செக்கனோ தெரிய வில்லை. குண்டு வெடித்தோய, இவளது உடல் சிதறல்கள் படர்ந்திருக்க… மற்ற மூவரும் விறைத்து நின்றனர்!

– செப்டம்பர் 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *