உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற ஒளி குன்றாத, அந்தச் சிரஞ்சீவி, நாட்களில், அவனின் ஆத்மார்த்தமான இலட்சியத் தேடல்களுக்கு, ஒரு நல்ல துணையாகவும், ஆதர்ஸம் மிக்க, ஒரு வழிகாட்டி போலவும், அப்போது, அவனோடு கூடவே, பாரதியும் இருந்தாள். வெறும் பார்வையளவில், காணவே, முடியாமல் போன, அவனின் மானஸீகக் கனவு நாயகி அவள்.
கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து, வருடங்களுக்கு, முன்னால், ஒரு யுகத்தைத் தாண்டிய, காலப் பகுதியில் தான், அவளுடனான, அந்த, அறிமுக பரிச்சயம், அவனுக்குக் கிடைத்தது. அவனின் ஆத்ம நண்பன் பாலு மூலமே, பாரதியின் களங்கமற்ற, நட்பு அவனுக்குக் கிடைத்தது. பாலுவைச் சந்திப்பதற்காக, ஒவ்வொரு ஞாயிறும் அவனுடைய அந்தக் கிராமமான ஏழாலைக்குக் கிரி தவறாமல், போய் வருவான் அவனது ஊரான ஆனைக்கோட்டையிலிந்து, ஏழு மைல் கல் தொலைவில் அது இருக்கிறது, நீண்ட தூரச் சைக்கிள் பயணம் தானென்றாலும் நண்பனைச்சந்திக்கப் போகிற மகிழ்ச்சியில், களைப்பே தெரியாமல் ஓடிய நாட்கள் இன்னும் நெஞ்சில், நினைவுச் சரமாக நிழலாடுகிறது. மிகுதி நாட்களில்அச்சகப் பணியுடனேயே, பொழுது போய் விடும். டவுனிலுள்ள ஒருஅச்சகத்திலேதான் அச்சுக் கோர்க்கிற வேலை அவனுக்கு. அதில் கைதேர்ந்த அனுபவசாலி அவன். இந்த நாட்களைப் போல், கம்பியூட்டர் வசதி ஏதுமில்லாத காலம்.. தினமும் தமிழ், படித்தே, தமிழ் புலமை கொண்ட ஒரு பண்டிதன், போல அவன் இருக்கிறான். நன்றாகவே தமிழ் எழுதக் கற்றுக் கொண்டிருப்பதால், சொந்தமாகவே அவன் ஒரு, சிற்றேடும் ,வெளியிட்டு வந்தான். யாழ்ப்பாண|த்திலேயே அது நல்லவிலை போனது. மாதமொருமுறை வாணி, என்ற, பெயரோடு, கலை இலக்கிய மலராக அதுவெளி வந்து கொண்டிருந்தது, அவனின் இலட்சிய, வேட்கை கொண்டமன உணர்வுகளை, வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க ஒரு களமாகவே அது இருந்தது.அதற்குத் துணையாக, வெவ்வேறு கலைஞர்களின் படைப்புகளையும் அவன், வெளியிட்டு வந்தான்.
அதற்குப் பொறுப்பாசிரியனாக, அவனே இருந்தான். பத்திரிகைக் கடைகளில் அது சுடச்சுட விலை போகும். அவனது தமிழ்ப் புலமைக்குக் கிடைத்த பெருமை அது, பாலுவின் கிராமத்திற்குப், போகும்போதெல்லாம், இந்தப் பத்திரிகை குறித்தே, அவர்களிடையே விமர்சனக் கருத்தியல் பரிமாற்றங்களெல்லாம் நிகழும்.
பாலுவும் அவனைப் போலவே, ஆத்ம தேடல்கள் மிகுந்த, ஓர் இலட்சிய இளைஞன். நல்ல பேச்சாளன். அதிகம் படித்திருக்காவிட்டாலும், அனுபவ வாழ்க்கை, மூலம், தான் கற்றுத் தெளிந்தவைகளை மேடையேறி, உணர்ச்சிகரமாகப் பேசக் கூடிய, பேச்சுவல்லமை கொண்டவன் அவன். சுண்ணாகத்திலுள்ள தேனீர்க் கடையொன்றில், விற்பனைப் பணியாளனாக, அவன் இருக்கிறான். அவனுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமே லீவு நாள்.
அவனின் நெருங்கிய தங்கை உறவு, முறை, கொண்ட, சுவேதாவின், ஓலை வீட்டுத் தலைவாசலில் தான், அவர்களின் அந்த மாலை நேரச் சந்திப்பு நிகழும். பாரதி சுவேதாவின் நெருங்கிய, தோழி மட்டுமல்ல, தூரத்து உறவும் கூட. அவள் வீடும், பெரிய பரப்பளவு கொண்ட, எல்லை வேலியைத் தாண்டிப், பக்கத்திலேதான், இருந்தது. சுவேதா அடிக்கடி, அவள் வீட்டிற்குப் போய், வருவாள். பாரதிக்கோ வீட்டில், கட்டுப்பாடு அதிகம்.அவளின் ஒழுக்கத்தைக், கூட்டிக் காப்பதில் அவ்வளவு தீவிரம். வீட்டுப் பெரியோருக்கு அதிலும் குறிப்பாக, அப்பாவுக்கு, அவர் போகட்டும் பாரதியைப் பொறுத்தவரை, வீடு உலகமல்ல. மானஸீகமாகவே அவளுக்கு, இந்த உலகம், பிடிபடும்.
மனிதர்களைத் தரிசனமாகவே காண்கிற ஆன்ம தேடல், அவளிடம் நிறையவே இருந்தது.கல்லூரியில் படித்த நாட்களில், அவள் தமிழில் எழுதும் திறன் படைத்த, அபூர்வ திறமைகளுடனேயே கொடி கட்டிப் பறந்தவள்.படிப்பு நின்ற பின் அதுவே அவளின் உலகமுமாயிற்று. அவள் எழுதும் கவிதைகள் சுயாதீனமானவை.
இயல்பாகத் தங்கு தடையின்றி, மடை திறந்த, வெள்ளம் போல, அவள் மனதிலிருந்து கவிதை மழை கொட்டும் அவள் சராசரிப் பெண்களினின்றும் மிகவும் மாறுபட்டிருக்கின்ற சிறந்த மானுடப் பண்புகளையே, தன் பிறவிச் சுபாவமாகக் கொண்ட அப்பழுக்கற்ற துல்லியமான ஒரு கலைத் தேவதை.
கலையும் வாழ்வும், ஒன்றாகவே பின்னிப் பிணைந்திருக்கின்ற, உயிரோட்டமான, வாழ்க்கைப் பயணம் அவளுடையது. இதன் பொருட்டே அவளின் கவிதையும் கூட. வெறும் பத்திரிகை விளம்பரத்தை எதிர்பார்த்தோ, புகழ் மயக்கம் காரணமாகவ, அவள் அதைச் செய்யவில்லை. தன் சுய விழிப்பான ஆத்ம திருப்தி ஒன்றுக்காகவே, தமிழ் மூச்சுக் கலந்து வெளிப்படும், அவளின் இந்தக் கலை வாழ்க்கை. சுவேதா அதைக் கண்கூடாகவே, கண்டிருக்கிறாள்.
ஒருகூண்டுப்பறவையாக,அடைபட்டுக்கிடக்கிறநிலையிலும்,மானஸீகமாக,உலகையே, கரைத்துக் குடித்த, உணர்ச்சிவசப்பட்டு,மெய்மறந்து, அவள் வடிக்கும் கவிதைகள், மனிதர்களுக்குப் பயன்பட்டு, தன் சத்தியத் தன்மை இழக்காமல் சிரஞ்சீவியாக நிலைத்து, நிற்பதற்கு என்ன வழி என்று சுவேதா பெரும் கவலையோடு யோசித்து, மனம் கரைந்து நின்ற வேளையில் தான் பாலு மூலமாகக் கிரியின் அறிமுகம், அவளுக்குக் கிடைத்தது. பிறகென்ன! அவள் மூலமாகவே, பாரதியின் கவிதைகள், கிரியின் கைக்கு வந்து சேர்ந்தன. அவற்றைப் படித்துப் பார்த்து , விட்டு ஆர்வமாக அவன் கேட்டான்.
“இவற்றை நான் பிரசுரிக்கலாமா?”
‘“என்ன சொல்லுறியள்?”
“சுவேதா இவை ஏன் மண்ணில் புதையுண்டு போன மறை பொருளாக இருக்க வேணும்? என்ரை பத்திரிகையில் போட்டாலென்ன?”எத்தனை பேர் பயன் பெறுவார்கள்!!”
“ஓ! தாராளமாக! என்ரை விருப்பமும் இதுதான்”
பாரதியை நேரில் பார்க்கத்தான் முடியவில்லை. அவளின் உன்னதமான கவிதை வரிகளே,அவளை இனம் காட்டும். .எளிய நடையில் அவள் எழுதும் கவிதைகள், தமிழின் சுவை குன்றாத, தெளிந்த நீரோட்டம் போல் வாசகர் மத்தியில் புகழ் கொண்டு விளங்கின. கிரியின் பத்திரிகை, வாழ்வில் இது ஓர் அற்புதமான திருப்பம். அவளை இதற்காக, நேரில் சந்தித்து வாழ்த்துக் கூற முடியாமல் போனாலும், கடிதம் மூலமாக அவKளோடு அதைப் பற்றி, மானஸீகமாக அவனால் நிறையவே பேச முடிந்தது இந்தக் கடிதத் தொடர்பு, பாரதியின் அப்பா அறியப் பகிரங்கமாகவே நடந்தது.. பாரதியின் ஒழுக்கம் தவறாத, அப்பழுக்கற்ற புனிதமான மனம் மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. அவளும். அப்படித் தான் இருந்தாள் உணர்வுகளைப் பங்கப்படுத்தும், வாழ்வின் சலனப் பொறிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமலே விடிபட்டு விலகி நிற்கும், ஆத்ம தரிசனத் தேடல் மிகுந்த ஒரு மானஸீகக் கலை வாழ்க்கை அவளுடையது.சராசரிப் பெண்களைப் போல புறம் போக்கு மயமான ஆடம்பர வாழ்க்கையின் சலனங்களுக்குள் சிக்கிப் பங்கமுற்றுப் போகிற சலன புத்தி அவளுக்குக் கனவில் கூடவந்ததில்லை. இது பற்றி நிறையவே அவள் கிரியோடு மனம் திறந்து, பேசியிருக்கிறாள்.
எல்லாம் கடிதம் மூலமாகத்தான். கிரிக்கும் இதே மனநிலைதான். கவிதை மூலமாகவும், கடித வழித் தொடர்பு மூலமாகவும் அவளைப் பற்றி அவன் அறிய நேர்ந்த உண்மை. ஊன வாழ்வு இருட்டினிடையே அவள் ஓர் ஒளிவீசும் கலங்கரை விளக்கம். இந்த உண்மை தெரியத் தெரிய, அவனை அறியாமலே அவன் மனதில் ஓர் ஆன்மீகத் தாபம்.இந்த ஒளியை அவளின் உருக்குலையாத உன்னதமான மானசீக மனதை, ஊன வாழ்வில் அகப்பட்டுத்துருப்பிடித்து,அழிந்து போகவிடாமல் காப்பாற்ற வேண்டுமானால்,நான் இவளுக்கு நல்லது செய்தேயாக வேண்டுமென்று அவன் விரும்பினான். அதெப்படி? இவ்வளவு நாளும் இவள் எனக்கு உடன் பிறவாச் சகோதரி மாதிரி இருந்தவள். தானே கடிதத்தில் கூடச் சகோதரி என்று தானே குறிப்பிட்டு எழுதுவேன். இப்போது ஏன் இந்த மனமாற்றம்? பாரதி இதை பற்றி நான் கேட்கப் போனால் என்ன நினைப்பாள்? காதல் தீது என்பாளா?. இது காதலா? அல்லது அதிலும் வேறானதா? உண்மையில் இது காதலேயில்லை. பாரதி நேரில் பார்ப்பதற்கு எப்படியிருப்பாளோ? ஒரு நாள் கூட அவளை நான் இந்த ஊனக் கண் கொண்டு பார்த்ததில்லை. சுவேதா வீட்டுக் கிடுகு வேலிப் பொட்டினூடே கவிதை தர நீள்கிற ,அவளின் கை மட்டும் தான் என் பார்வைக்கு எட்டியது. .அப்பால் அந்த ஒளி, மங்கிய நிழல் சஞ்சாரத்தினிடையே வாழ்வோடு ஒன்றுபட்ட ஓர் உருக்குலையாத சத்தியப் பிழம்பாய்,அவளை மானஸீகமாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.அந்த மானஸீகத் தேவதையை வாழ்வின் இருள் படியாமல், உருக்குலைந்து ஒளி குன்றிப் போகவிடாமல், காப்பாற்றி வாழ வைக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறதே!. நிச்சயம் இதை அவள்புரிந்து கொள்வாள்.
அவன் முடிவெடுத்து விட்டான். அதைத் தொடர்ந்து அவன் எழுதிய கடிதம் அவளிடம் போய்ச் சேர்ந்தபோது வழக்கமான சந்தோஷசத்தோடு, அதைப் பிரித்துப் பார்த்தவள், அவனின் இந்த மாறுபட்ட கடித வாசகங்களினால் மிகவும் மனம் குழம்பித் துயரம் கொண்டாள். அவள் இதை எதிபார்க்கவேயல்லை. “திடீரென்று அவனுக்கு என்ன நேர்ந்தது? வெறும் உடல் கவர்ச்சியினால் உந்தப்பட்டு, என்னை மணம் முடிக்க விரும்புவதாக எழுதியிருக்கிறானே! இதை எப்படி ஏற்றுக் கொள்வது? அப்பா அறிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார். .காதலில் அவருக்கு உடன்பாடில்லை. மேலும் என் முகமறியாமல் கிரி எப்படி என்னை விரும்ப மனம் துணிந்தார்? உண்மையில் நான் எப்படி இருக்கிறேன்? எனக்குப் புரியேலை. எல்லாம் கடந்து நான் நிற்கிறன் இதை எப்படி அவருக்குப் புரிய வைப்பன் .என் வாழ்க்கைக் கனவுகள் இலட்சியங்களெல்லாம்,, நான் வடிக்கும் கவிதைகளோடு மட்டும் தான்.“
“என்னை அவர் முன் பின் பார்த்ததில்லை. நேரில் முகம் பார்க்காமலோ பழகாமலோ இப்படியொரு, காதல் ஈர்ப்பு எவ்வாறு சாத்தியமாகும்? அப்படிஒரு பெண்ணின் மனதை மட்டுமே அறிந்து அன்பு செய்ய முடியுமென்றால் அதன் புனிதம் எவ்வளவு தெய்வீகமானது. நான் இப்படி ஒரு தெய்வீகக் காதலுக்கு ,உண்மையில் தகுதியுடையவள் தானா?. இதைக் கிரியிடம் தான் போய்க் கேட்க வேண்டும் இதன் நோக்கமென்ன? அதுவும் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கு. அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்கப் பயமாக இருக்கு. அவர் காதலின் எதிரி. கண்மூடித்தனமான காதலில் ,நம்பிக்கையற்றவர். இது ஒரு போதும் நடக்காது. பாவம் கிரி. எனது இந்த மறுப்புக் கடிதம் ,கண்டு அவர் மனம் உடைந்து போகவும் கூடும். பரவாயில்லை. எழுதிப் போட்டு விட வேண்டியது தான்’
கிரி இதை எதிர்பார்க்கவில்லை இது அவனுக்குத் தீவிர அன்பின், ஒரு முதல் பயணம் தான். கிட்டத்தட்ட நல்நோக்குக் கொண்ட ஒரு கொள்கைப் பிரகடனம் என்று கூடச் சொல்லி விடலாம். அவளை அவளின் புனிதங்களோடு, மாற விடாமல் உயரத்தில் வைத்து வாழ வைக்க விரும்புகிற கொள்கை. “எதுவானால் என்ன? பரஸ்பரம் இதை அவள் புரிந்து கொள்ளாமல் போனது, யாருடைய தவறு? இதற்காக அவளைக் கோபிக்க முடியவில்லை. அவள் இல்லாவிட்டால் என்ன? இந்த வெறுமையை நிரப்ப இன்னொரு பெண் வருவாள்.. எப்படியாவது வாழ்ந்து விட்டுப் போறன்.. வெறும் உடம்பு வாழ்க்கை .அதற்கொரு கல்யாண விழா.” வெறும் நாடகமாய் அது தொடரும். கூடவே பாரதியும் உடன் இருப்பது போல உள்ளார்ந்த மனச் செறிவுகளில், அவளின் நிழல் விழுத்தாத ஒளிப் பிழம்புத் தடங்களே உயிர் கொண்டு நடமாடித் திரிவது போல அவனுக்குப் பிரமை மூளும். வெறும் பிரமை தான் .அவளுக்குக் கடிதம் எழுதுவது அடியோடு நின்று போனாலும், அவளின் நினைப்பை மட்டும் விட முடியவில்லை. இதற்கிடையே அவளது கல்யாண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அவள் இதற்கு எப்படி இணங்கினாளென்பதே பெரிய ஆச்சரியம் தான்.“பாரதி நீவாழ்க.! உன்னைப் பூவாய் தாங்கிக் கண்களில் ஒற்றிக் கொள்ளவரப் போகிறவன்,உண்மையில் ஒரு யோக புருஷன் தான். உன் காலடி பட்ட மண்ணும் உயிர் கொண்டு எழும். சடங்களும் கண் விழித்துச் சாமரம் வீசும், இனி வரப் போகிற நாட்களில், நீ இல்லாமற் போனாலும் எனது வாழ்க்கைக்கு ஒரு மானஸீக வழிகாட்டியாக, நீ என்றும் என்னுடனேயே இருப்பதாய் நான் உணர்கிறேன்.”
காலம் போனதே தெரியவில்லை. அவனது வாழ்விலும் எவ்வளவு மாற்றங்கள். மனைவி பிள்ளை குட்டி என்ற பந்த பாச உலகம் ஒரு புறம் அது ஒரு மாயத் தீட்டுப் போல் வந்து அவனைப் படாதபாடு படுத்திற்று அப்படித் தீட்டுக் குளிக்க நேர்ந்தாலும்,அவனது இயல்பான மானஸீக உலகம் வெளிச்சமாகும் போது, இடறுகின்ற இருள் வாழ்வின் அந்தகாரமே அடியோடு விட்டுப் போன மாதிரி, அவன் அலாதியான சந்தோஷத்தோடு கனவில் நடக்கிற மாதிரி நடப்பான். இந்த நடைப் பயணத்தின் ஒரு முடிவான ஒளிக் கோலம் போலவே, அவனால் பார்க்க முடியாமல் போன பாரதியின் முகமும் அவன் கண்களுக்குப் பிடிபடும்.
அவளை ஒரு முறையாவது, சந்த்தித்து விட வேண்டுமென்பதே அவனின் அப்போதைய விருப்பமாக இருந்தது. அவள் எங்கிருக்கிறாளோ? என்னவானாளோ? அவள் கவிதை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறதா? ஒன்றும் புரியவில்லை. அவளை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது? ஊனம் உருக்குலைகிற மகா இருள் இப்போது. எங்கு பார்த்தாலும் வாழ்வின் சிதறல்கள், பொருள் இழந்து போன வாழ்க்கை நடுவே அவளை எங்கே என்று தான் போய்த் தேட முடியும்? எனினும் ஒரு சிறு நப்பாசை அவளின் கிராமத்திற்கே, போய்ப் பார்த்து விட்டு வந்தாலென்ன? முன்பு போல் சைக்கிளில் போகிற நிலைமையுமில்லை.
வழியெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். எல்லா இடமும் சோதனைச் சாவடிகள் இருப்பதால், அவன் எத்தனை முறைகள் சைக்கிளை விட்டு ஏறி இறங்க வேண்டும். இந்தக் கெடுபிடிக்கு மத்தியில் நாதியற்ற சூழலில், உயிர் ஆராதனை செய்யும் பாரதியின் நினைவே மனதுக்குச் சிறிது, ஆறுதலை அளித்தது அவள் முகத்தில் விழிப்பதே இப்போதுள்ள கறைத் தீட்டுக்கு ,ஒரு பரிகாரமாகவும் இருக்குமென்று அவனுக்கு நம்பிக்கை வந்தது.பாலுவும் இப்போது ஊரிலில்லை அவன் மலையகம் போய், வேல பார்க்கத் தொடங்கி வெகு காலமாகிறது அவனிருந்தாலாவது பாரதியைக் காண ஓரளவு வசதியாக இருக்கும். சுவேதா இருப்பாள்தானே பாரதியைக் காண இது வசதியாக இருக்குமென்று நம்பிகையோடு கிளம்பினான் பாரதியினுடைய அந்த அழகான கிராமம் முற்றிலும் களையிழந்து கிடந்தது அவன் மனம் குதூகலித்து நடந்து போன ஒளிப் பாதைகளெல்லாம் புதர் மண்டிக் கிடந்தன. அதில் கால் வைக்கவே மனம்கூசியது மெல்ல நடந்து சென்று சுவேதா வீட்டுக் கதவைத் தட்டினான் அவளும் இருக்கிறாளோ, இல்லையோ? அப்பவெல்லாம் அவளின் வீடு வெறும் மண் குடிசைதான்.
இப்போது கல் வீடாகக் கம்பீரம் கொண்டு நின்றது. அவன் கதவைத் தட்டியதும் சற்றே வயதான ஒரு பெண்தான் வந்து கதவைத் திறந்தாள் அவள் வேறு யாருமில்லை. சுவேதாவே தான் அவள் இன்னும் மாறவில்லை அவனைக் கண்டதும், தயங்கிப் பின் வாங்குவது போல் ஓர் உள்ளீடான தயக்கம் தெரிந்தது.
“என்ன பார்க்கிறியள்/ என்னைத் தெரியேலை? நான் கிரி. உங்கடை அண்ணன் பாலுவின் நண்பன்”
“ஓ! இப்பதான் .ஞாபகம் வருகுது.. உள்ளே வாங்கோ”
அவளைப் பின் தொட்ர்ந்து, அவன் உள்ளே போய் அமர்ந்து கொண்டு கேட்டான்
“நீங்கள் தனியத்தான் இருக்கிறியளே?”
“இப்ப நான் மட்டுமே…………..”என்று அவள் மேலே கூறத் தொடங்கு முன் அவளை இடைமறித்துப் பேச்சை மாற்ற விரும்பி மீண்டும் அவன் கேட்டான்.
“பாரதி எங்கை?”
அவள் அழாத குறையாகத் தடுமாறிக் கொண்டே கூறினாள்.
“அதையேன் கேக்கிறியள்? ஏதோ இருக்கிறாள்.”
“என்ன சொல்லுறியள்?”
இதற்கு ஒன்றும் சொல்ல வராமல் அவள் மெளனமாய் இருப்பதைக் கண்டு அவன் மனம் பதறிப் போய், உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான்.
“நான் பாரதியைப் பார்க்க வேணும்”
“இதோ! கூட்டிக் கொண்டு வாறனே”
அவள் போய்ச் சில நிமிடங்கள் கழித்து, மூடு திரை விலகி, நிலையிழந்த வெறும் நிழல் சித்திரமாகப் பாரதி வந்து சேர்ந்தாள்..
அவள் எழுதும் உயிர் வார்ப்பான சத்தியக் கவிதைகளின், சாயல் மாறாத ஒளிப் பிழம்பாகவே அவளை அவன் முன்பெல்லாம் மானஸீகமாகத் தரிசித்து மனம், நெகிழ்ந்து போயிருக்கிறான். அது அவளின் புறம் போக்கு வாழ்வு நிலையிலல்ல.. ஊனுடல் தரித்து நிற்கிற, அவளின் அந்த வாழ்க்கை, விதி நியதிகளுக்கேற்ப மாறிப் போகவும் நேரிடலாம். பாவக் கணக்கு வந்து கருவறுத்து விட்டுப் போகவும் கூடும். உண்மையில் இழப்பு வாழ்க்கையில் சுவேதா கூறியிருப்பது போல்,இப்போது அவள் வெறும் கூடு .விபரீத வாழ்க்கை முடிவுகளினால் அவள் எதிர்பாராத விதமாகவேநிறைய வடுப்பட்ட காயங்களுக்குள்ளாகித் தோலுரிந்த நடைப் பிணமாக அவள் கண்களில் நிலைத்த சூனியத்துடன் வெறுமை கொண்டு நின்றிருந்தாள் . அவனின் முன்னால் வரவும் மனம் கூசிக் கதவு நிலை வாசலருகே முகம் வெறித்து நிலையழிந்து நின்று கொண்டிருந்தாள். அதை பார்த்து விட்டுச் சுவேதா வெகுளித்தனமாகக் கூறினாள்.
“வந்து இரும் பாரதி! உம்மைப் பார்க்கத்தானே இவர் வந்திருக்கிறார்’’
அதன் பிறகு அவள் மிகவும் கூச்சத்துடன், அவன் முன்னால் வந்து அமர்ந்து கொண்டாள். அவளது அகன்று விரிந்த கண்கள், அவனையே துருவித் துருவிப் பார்க்கிற உணர்வில், அவன் வெகு நேரம் வரை ஒன்றும் பேசத் தோன்றாமல் மெளனமாகவே இருந்தான். ஒரு கூண்டுப் பறவையாக, இல்லைக் கிளி போல, இவளைக் கட்டிக் காத்து வளர்த்து விட்டார்களே! இப்போது மேலே உயர வானில் பறக்க முடியாமல் , இவள் சிறகொடிந்த பறவை போலானாளே!. சபல வாழ்க்கையென்னும் பெருந்தீயில் எரிந்து கருகிப் போன இவளின் அந்த அழகான வண்ணச் சிறகுகளையே மனதில் நினைவு கூர்ந்தவனாய் பெரும் ஆயாசத்தோடு அவன் கண்களை மூடிக் கொண்டான். தனக்கு உடன்பாடான எத்தனையோ விடயங்களில் மனம் ஒன்றுபட்டு மானஸீகமாகவே தன்னை ,நெருங்கி வந்து உறவாடிவிட்டுப் போன அந்தப் பழையகிரியா இவன், என்று புரியாமல் அவள் மனம் குழம்பினாள். “கண்களைத் திறந்து பார்க்கவும் முடியாமல் சோகம் கனத்த முகத்துடன் அவன் ஏன் உறைந்து போன சிலைபோல அம்ர்ந்திருக்கிறான்? இதை பற்றி அவனிடம் மனம் திறந்து கேட்டாலென்ன?”என்ற யோசனை மிகுந்தவளாய், அவனை ஆழ்ந்து உற்றுப் பார்த்தவாறே, தயங்கிய குரலில் அவள் கேட்டாள்.
“என்ன கிரி ? ஒன்றும் கதைக்காமல் இருக்கிறியள்? ஏன் இந்த மெளனம்?”
அதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனவனாய், தன்னைச் சுதாரித்துக் கொண்டு விட்ட பாவனையில், விழிகளை மெல்லத் திறந்து அவளைச் சோகமாக ஏறிட்டுப் பார்த்தவாறே, மனம் நெகிழ்ந்து போய்ச் சொன்னான் அவன்
“நான் இதை எதிபார்க்கேலை-……..”
“எதை…..?”
“உங்களுக்கு இப்படியொரு நிலைமை வந்ததே! மானஸீகமாய் என் மன எண்ணங்களுக்கு உடன்பாடாய்,, அப்பவெல்லாம் உங்களை முழுமையான ஆத்ம ஒளி கொண்ட ஒரு சத்திய தேவதையாகவே ,நான் தரிசிக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் இன்று எல்லாமே பொய்யாகி விட்ட மாதிரி இருக்கு”
“நீங்கள் என்ன சொல்லுறியள்?”
“நான் இதை எதிர்பார்க்கேலை” சராசரிப் பெண்களை விட மேலான ஒரு நல்ல வாழ்க்கை உங்களுகுக் கிடைச்சிருக்க வேணும். நடக்கவில்லையே பொய்யின் கறை பட்டு நீங்கள் முழுவதும் எரிந்து போன மாதிரித் தானே இருக்கு”
“பொய் என்று நீங்கள் எதைச் சொலுறியள்?”
“சந்தோஷம் தரும் என்று, எதை நம்பி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டீகளோ, அது நடக்காமல் போனால் ஒரு, பொய்யின் கறைதானே அது.”
“நீங்கள் என்ன சொல்ல வாறியளென்று ,எனக்கு விளங்குது நான் அப்படி அழிந்து போனதாக உங்களிடம் ஆர் சொன்னது?”
“இப்ப அது பிரச்சனையில்லை. உங்களைப் பார்த்த வினாடியே உணர்வு பூர்வமாய் இதை என்னால் உணர முடியுது சொல்லுங்கோ உங்களுக்கு என்ன ஆச்சு?’
“நீங்கள் நினைக்கிற மாதிரி, எனக்கு ஒன்றுமே நடக்கேலை. புறம் போக்காக எவ்வளவோ விடயங்கள் நடந்திருக்குது. இது ஒரு மாய விளையாட்டு மாதிரி. ஒன்றுக்கொன்று, பூரணமாகவோ, வெவ்வேறு
விதமாகவோ, மனங்கள் பிளவுபட்டுப் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் போனால்,இது ஆர் விட்ட தவறு?இந்த உறவுச் சகதியினுள்
சிக்கி அழிந்து போகிற நிலைமையிலும், நான் இருக்கேலை .எனது உயிர்ச் சத்தியம். இதனால் அழிந்து விட்டதாகவும் என்னால் நினைக்க முடியேலை. அப்படி எவர் கண்ணிலும் பட்டால் இது உண்மையாகி விடுமே? சொலுங்கோ கிரி”
“எது உண்மை? எது சாசுவதம்? ஒரு சமூகப் பிரகடனமாகவே அதைக் குரலை உயர்த்தி அவள் சொல்லுகிறபோது, மெய்மறந்து அதை அவன் கேட்டுக் கொண்டிருந்தான். சடம் மரத்துப் போன வாழ்க்கையில் அவள் தன் உண்மைத் தன்மை இழ்க்காமல், இன்னும் மாறாமல் இருக்கிற சத்தியப் பிழம்பாகவே கண் முன்னால் ஒளிர்ந்து, பிரகாசிப்பது கண்டு அவன் வெகுவாகப் புல்லரித்துப் போயிருந்தான். அவளுள் சிரஞ்சீவியாகவே, உயிர் வாழ்கிற ,அந்தச் சத்தியம் இருக்கும் வரை அவளுக்கு ஏது அழிவு? அதை அறிவு பூர்வமாக உணரத் தவறியதால் தான் இப்படியொரு பார்வைக் குற்றம் அவளை அவள் வழியில் அறிந்து கொள்ள முடியாமல் போனதற்காக இப்போது அவன் தன்னையே நொந்து கொண்டான் சாகாவரம் பெற்ற ஒரு சிரஞ்சீவிக் கவிதை, போல இருக்கிற அவளை ஒரு காலத்தில் அழிய விடாமல் வாழ்விக்க வேண்டுமென்று நான் விரும்பினேனே! என்னவொரு மடமை என்ற குற்ற உணர்வினால், தோன்றுகின்ற அந்தவேதனையையும் மீறி அவன் தனக்குள்ளேயே வெட்கம் கொண்டு சிரிப்பது போலவும் பட்டது.
– வீரகேசரி (நவம்பர் 2008)
பிரபாகரன் அறிவது,
வழிபாடு என்ற என் கதை பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு முதற்கண் என் இதய பூர்வமான நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் குறிப்பிட்டு எழுதிய பிறகுதான் கவனம் கொள்ள முடிந்தது.மேலும் இது தவிர்க்க முடியாமல் நேர்ந்த தவறுதான்.இரு மனங்களினிடையே நிகழ்கின்ற புனிதமான மானசீக உறவே இக்கதையின் மையப்பொருள் என்பதால்த்தான் தாங்கள் குறிப்பிட்ட இந்த வார்த்தையை அடிக்கடி பிரயோகிக்க வேண்டியதாயிற்று.எனினும் அதைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.இனி எழுதும் போது கவனமாக எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி
ஆனந்தி
அதிகமாக மானஸிகம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
கதாசிரியால் இன்னும் குறைவான வார்த்தைகளால் கட்டுக்கோப்புடன் எழுத முடியும், முயன்றால்.
சொ.பிரபாகரன்