சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள் திரையிடப்பட்ட அந்த அறையில் சூரிய ஒளியின் ஊடுருவல் தென்பட்டது. கண்களைத் திறந்த அடுத்த நொடி அவன் தேடியது அவனது கைதொலைபேசியைத்தான். வழக்கமாய் அவனது கட்டிலின் வலதுபுறம் அமைந்து இருக்கும் மேசையை அங்குக் காணவில்லை, அதன் மேல் இருக்க வேண்டிய கைதொலைபேசியையும்தான். அளவுக்கு அதிகமான உடல் சோர்வுடன் அவனின் இடதுபுறம் திரும்பியவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி, அங்கே அவனுடன் அவன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பெண். புறங்காட்டி உறங்கியவள் யாரென்றுப் பார்க்க கூட அவனால் நகர முடியவில்லை. அவனால் காண முடிந்தது அவளுடைய அரை நிர்வாண முதுகை மட்டுமே.
யார் அவள்? நான் எங்கே இருக்கிறேன்? என்ன நடந்துச்சு? எனக்கு ஏன் இவ்வளவு அசதி?
எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை. பதிலைத் தேடி அவன் சுற்றும் முற்றும் பார்க்கும்பொழுது அவனுக்குக் கிடைத்தது மேலும் சில கேள்விகளே. தரையில் கிடக்கும் ஆடைகள், மேசையின் மேலே கிடந்த காலி மதுபானப் பாட்டில்கள் என அவனால் யூகிக்க முடியாத நிலவரத்தில் இருந்தது அந்த அறை. தனதருகில் சிறு அசைவை உணர்ந்து, கண் விழிப்பாள் என்ற பேராசையுடன் அவள் பக்கம் திரும்பினான் எழில். அங்கோ அணுவளவும் அசைவு இல்லை. உடல் சோர்வுடன் ஏற்பட்ட தலை வலியும் பசியும் அவளை எழுப்ப உந்தித் தள்ளியது.
அவளைத் தொடலாமா? தொடாமல் எப்படி எழுப்பறது? கூப்பிடலாம்னா என்னன்னு அழைக்கறது?
மனதில் இத்தனை கேள்விகளும் ஓட, அவளை வேறுவழி இன்றி முதுகில் தட்டி எழுப்பினான் எழில். மென்மையான உடல் அசைவுடன் கேட்டது அவளது இனிய குரல்.
“தூங்க விடுடா என்னை. இரவு முழுதும்தான் தூங்க விடல. அசதியா இருக்குடா”
என்றவள் மேலும் தலையணையை வசதிப் படுத்திக் கொண்டு உரங்கத் துவங்கினாள். எழிலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அய்யோ… யார்தான் இவள்? இரவு என்ன செஞ்சுத் தொலைச்சேன்?
தர்ம சங்கடமான நிலைமையில் செய்வது அறியாமல் புழுவாய் நெளிந்துக் கொண்டு இருந்தான் அவன். தன் பிரச்சனையை முழுவதுமாய் சொல்ல முடியா விட்டாலும் பசி என்ற ஒரு வார்த்தையைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் அந்தத் தூக்கத்திலும் அவளுக்கு இருக்க வாய்ப்பு உண்டு என்பதனைத் தீர்மானித்து, அவளை எழுப்பும் அடுத்த முயற்சியில் இறங்கினான். அவள் பெயர் என்னவென்று தெரியாதவனாய் அவனைக் காட்டிக்கொள்ள விரும்பாத எழில்,
“எனக்கு ரொம்பப் பசிக்கிது, என்ன செய்றதுனே தெரியல” என்றான்.
உண்மையிலேயே அடுத்து என்ன செய்வதென்று அவனுக்குத் துளி அளவும் யோசனை இல்லை. அவளிடமிருந்து வந்தப் பதில் அவனை மேலும் சங்கடத்திற்கு உள்ளாகியது.
“சரி! வா! ஒன்னா குளிசிட்டு சாப்பிடப் போகலாம்.”
உணர்வை வெளிக்காட்டாமல் நாசுக்காக அதனைத் தவிர்க்க வேண்டுமென எண்ணினான்.
“ம்ம்ம் பரவால… நீங்க முதல்ல போய்க் குளிங்க… நான் அதுக்கு அப்புறம் குளிச்சிக்கிறேன்.”
“சரி சரி இரவெல்லாம் கஷ்ட பட்டது நீதானே… புரியுது புரியுது… கொஞ்ச நேரம் படுத்து இரு… நான் குளிச்சிட்டு கூப்பிடறேன்… அப்புறம் போய்க் குளிச்சிக்கொ.”
அவளின் நக்கல் பேச்சை அவன் செவி மட்டுமே உள்வாங்கியதே தவிர அவனது மூளையை அது சென்றடையவில்லை. தனக்குள் தோன்றியப் பல கேள்விகளுக்கு விடையைத் தேடும் மும்முரத்தில் இருந்த மூளைக்கு, மேலும் வேலைக் கொடுத்தது அவளின் அடுத்தச் செயல். கடுகளவும் வெக்கம் இல்லாமல் பிறந்த மேனியாக எழுந்துக் குளியலறையை நோக்கி நடந்தால் அந்த மங்கை. முழு நிர்வாணமாய் அவளின் பின் உடலைக் காண முடிந்தக் கண்களுக்குத் தென்படாமல் போனது அவன் காணத் துடித்த அவளது முகம்.
சராசரி உயரம் கொண்டவளின் உடல்வாகு ரசிக்கும்படியே இருந்தது. பழங்காலத்து மணற் கடிகாரம் போல் இருந்தது அவள் உடலமைப்பு. ஒரு பெண்ணுக்குத் தேவையான உடலமைப்பு இதுதான் என்பது என்றோ எழிலின் மனதில் ஊற்றெடுத்த ஒரு எண்ணம். மாநிறம் என்பதற்கு முழு அர்த்தம் தரித்தது அவளது மேனியின் வண்ணம். பின் அழகே வசீகரிக்கும் வகையில் நடந்துச் சென்றவள், குளியறையினுள் நுழைந்துக் கதவை மூடினாள்.
இப்போதுதான் தன்னுடைய மூச்சுக் காற்றுச் சீராக உள்சென்று வெளியாவதை எழிலால் உணர முடிந்தது. அதனுடன் அவனது தலைவலியும் இலவச இணைப்பாகச் சேர்ந்துக் கொண்டது. அருகில் உள்ள மேசையின்மேல் தலைவலி மருந்தைத் தேட முற்பட்டான். அவன் கண்களில் தென்பட்ட அவனுடைய கார்ச் சாவி அவனது எண்ண அலைகளை வேறு பக்கம் திருப்பியது.
நீண்ட பயணம் மேற்கொண்டக் கலைப்புச் சற்றும் அறியாமல் செய்தது அவன் பயணித்த இடங்களின் இயற்கை அழகு. கடவுள் கண்களைப் படைத்ததற்கான அர்த்தத்தை அப்போதுதான் கண்டதுப் போலொரு பேரானந்தம் அவனுக்கு, வெண்பனி மறைக்கும் சூரிய ஒளியால் அவ்விடத்தின் காட்சிகளைக் கண்டதில். காரிலோ அதற்கு ஏற்றார் போல் ஒரு மயக்கும் இசை ஒலித்திருக்க, அவன் இயற்கையை ரசிக்கவா, இசையை ரசிக்கவா, அல்லது தன் தோளில் சாய்ந்திருக்கும் அந்தப் பெண்ணை ரசிக்கவா என்றக் குழப்பத்தில் பயணித்தது அவனுக்கு நினைவில் வந்தது.
ஞாபகம் வந்துருச்சி. இதுதான் நேத்து நடந்தச் சம்பவம். நான் இப்ப அந்த பெண்ணோடுதான் இங்க இருக்கேன். நான் வந்ததும் இந்த இடத்துக்குத்தான். இருந்தாலும் எனக்கு ஏன் அந்தப் பெண்ணோட முகம் மட்டும் நினைவுக்கு வர மறுக்குது?
தலைவலி மருந்தைப்பற்றி மறந்து ஆழ்ந்த சிந்தனையில் அசையாமல் ஜன்னல் அருகே நின்றுக் கொண்டிருந்த எழில், குளியலறை கதவுத் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான். அங்கே அந்தப் பெண். இம்முறை முகம் மட்டும் வெளியேக் காட்டித் தன் உடலைத் துவட்டத் துண்டை எடுத்துத் தருமாறு உரிமையுடன் பணித்தாள். அந்த நொடி அனைத்தும் தெளிவாகியது அவனுக்கு.
ப்ரியா!! என் காதலி… இல்ல இப்போ என்னோட மனைவி… இந்த முகத்தையா நான் மறந்தேன்?
இதனைப் பற்றியச் சிந்தனையில் அவனிருக்க, அவனுடைய உடல் ப்ரியா கேட்டதைச் செய்துக்கொண்டு இருந்தது. சடங்குகளில் அதிகம் ஈடுபாடு இல்லாத அவர்கள், கல்யாணம் முடிந்து அதே நாளிலே தேன்நிலவிற்காக இவ்விடம் வந்தடைந்தனர். மறுநாள் செல்லலாம் என்ற தன் தாயின் அறிவுரையை ஆலோசிக்கும் எண்ணம் கூட அவனுக்கு இல்லை. நேரத்தை வீணடிக்காமல் அவளுடன் இல்லற வாழ்வைத் தொடங்கும் அவனது ஆர்வம் அந்த அறிவுரையை தூக்கி எறிந்தது. அதே குளியலறைக் கதவுத் திறக்கும் சத்தம் அவன் சிந்தனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அழகிய உடை அணிந்து ஈரக் கூந்தலுடன் தேவதையாய் கண்முன் நின்றாள் ப்ரியா. அவன் கண்களில் நுழைந்து மனதைப் படித்தவள் போலொரு கேள்வி வந்தது அவளிடமிருந்து.
“என்னாச்சு? மறந்துட்டியா?”
மறந்ததைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அவன் தலையை எப்படி ஆட்டுவது என்று அறியாமல் எதோ செய்ய முயற்சித்தான். அவள் கேட்டக் கேள்விக்கு விடைகூட எதிர்ப் பார்க்காமல் தன் கூந்தலை உலர்த்தும் பணியில் ஈடுபட்டாள்.
“பசிக்குதுனு சொன்னியே… சீக்கிரம் போய்க் குளி… அப்படியே எங்க சாப்பிட போகலானு யோசிச்சி வை… நான் அதுக்குள்ள புறப்பட தயாராயிடுவேன்.”
அவள் சொன்னதில் பாதி மட்டுமே அவன் காதில் விழுந்தது. அதற்குள் அவன் சிறப்பாக செய்யக் கூடிய வேலையான தனக்குத் தானே கேள்விக் கேட்டுக் குழம்பி நிற்பதைத் தொடர்ந்துச் செய்யலானான்.
நான் எப்படி இவள மறந்தேன்? அவளுக்கு தெரிஞ்சிருக்குமோ? இருக்காது… சிரிச்ச முகமாத்தானே இருந்தா… நான் அவளையே மறந்துட்டேனு தெரிஞ்சும் அவளால சிரிச்சி இருக்க முடியாது.
கண்டதும் வந்தக் காதல் இல்லை அவர்களுடையது. பல வருட நட்பின் அடையாளமாய் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மரியாதை, அக்கறை, மற்றும் புரிந்துணர்வு போன்றவை, என்று அவர்களை காதல் பாதைக்கு இட்டுச் சென்றது என்று அவர்களே அறியவில்லை. காதலை வெளிப்படையாய் சொல்லிக் கொண்டதும் இல்லை. ஆனால் அவன் என்ன நினைப்பான் என்று அவளுக்கும், அவள் என்ன செய்வாள் என்று அவனுக்கும் நன்றாகத் தெரியும். இது போதாதா இனிமையான இல்லற வாழ்வுக்கு?
“சரி நீ இந்த இடத்த விட்டு அசையறதா தெரியல… இதுக்கு மேல நீ குளிச்சி, சாப்பிட போகணும்னா நம்ப lunch தான் சாப்பிடணும்… நீ குளிச்சிட்டு வா… நான் room service ல சாப்பாடு சொல்லி வைக்கிறேன்…. நம்ப இங்கேயே சாப்பிட்டுக்கலாம்.”
அவன் அதீதச் சிந்தனையால் இந்நேரம் தலைவலியால் அவதியுறுவான் என்பதனைப் புரிந்துக் கொண்டாள் ப்ரியா. அவனுக்கு மேலும் கஷ்டம் தரவேண்டாம் என்று எடுத்த முடிவு இது. இம்முறை வெறும் வாய் வார்த்தையில் மட்டும் சொல்லாமல் அவனைப் பிடித்து இழுத்துக் குளியலறையினுள் அனுப்பிக் கதவைச் சாத்தினாள் அவள். பல் தேய்த்து முடிக்கும் வரை மட்டுமே அமைதிக்காத்த அவனது எண்ணங்கள், மறுபடியும் கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தன.
எப்படி….
அடுத்தக் கேள்வி முழுவதாய் அவன் எண்ணத்தில் உதிர்ப்பதற்குள், குளியலறைக் கதவைத் திறந்தாள் ப்ரியா.
“நீ எப்படியும் குளிக்காம யோசிச்சிகிட்டுதான் நின்னுகிட்டு இருப்ப… அதான் நானே உன்ன குளிப்பாட்டி கூட்டிடுப் போகலான்னு உள்ள வந்துட்டேன்.”
பெரிய குளியலறைதான் அது. இருப்பினும் குளிப்பதற்கான பிரத்தியேக கண்ணாடி அறையினுள் இருவர் தாராளமாக நிற்பதுச் சற்றுக் கடினமே. எழிலின் பழைய உருவமாக இருந்திருந்தால் அவன் உடல் மட்டுமே அந்தக் கண்ணாடி அறையை நிரப்பி இருக்கும். அவனுடைய தற்போதைய உடலளவு ப்ரியாவுக்கும் கொஞ்சம் இடமளித்தது, அச்சிறிய கண்ணாடி அறையில். அவனுக்குக் குளிக்க உதவ வந்தவள், அவனைக் குளிப்பாட்டியே விட்டாள். இன்னும் சொல்லப் போனால் அந்த அறை அளவின் காரணம் அவளும் நனைந்து மறுகுளியலில் ஈடுபட்டாள். எது எப்படியோ காலையில் ப்ரியா நினைத்தது இனிதே நிறைவேறியது. அவர்கள் குளித்து முடித்து உடை அணியவும், அவர்களது உணவு அந்த அறையை அடையவும் சரியாக இருந்தது.
“என்ன பன்ற?”
உணவில் கைவைக்கச் சென்றவனை நிறுத்தியது ப்ரியாவின் கேள்வி. வழக்கம்போல் தன்னை மறந்துச் செய்யக் கூடாததை எதோ செய்துவிட்டோமோ என எண்ணிச் சிலையானான் அவன்.
“சாப்பிடபோறேன்…. ஏன்?”
“எதுக்கு? சாப்பாட கைல வச்சுக்கிட்டு மறுபடியும் இந்த சாப்பாட்டை எங்க பார்த்தோம்னு யோசிக்கப் போறியா? ஒன்னும் தேவையில்ல… உன்ன குளிப்பாட்ட தெரிஞ்ச எனக்கு ஊட்டி விடவும் நல்லாவே தெரியும்…. வாய திற.”
அம்மாவைப்போல் அதட்டிய அவளிடம் குழந்தையாய் பணிவதைத் தவிர வேறு வழி இல்லை அவனுக்கு.
“அம்மாவுக்கு call பண்ணியா?”
“Phone எங்க வச்சேன்னு தெரியல.”
ப்ரியா புன்னகைத்தாள் அவன் அம்மாவைப் பற்றி யோசித்திருக்க மாட்டான் என்பதனை அறிந்ததைப்போல். அவள் எழிலின் அம்மாவை தன்னுடைய கைதொலைபேசியில் அழைத்தாள். எதிர்புறம் பதில் வரும்முன் அந்தக் கைதொலைபேசியை அவனிடம் தந்தாள். தன் தாயின் குரலைக் கேட்டவுடன் அவனிடத்தில் ஒரு புதுத்தெம்பு. சோர்வை மறந்துக் களிப்புடன் பேசினான்.
10 வருடங்களுக்குமுன் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன தன் தந்தைக்குப் பிறகு எழிலுக்கு இருந்த உறவுகள் என்றால் அது ப்ரியா, அம்மா மற்றும் அவன் அன்புத்தம்பி மட்டுமே. அவன் தாய்க்கு எழில் என்றால் ஒரு தனிப்பிரியம். ஒவ்வொருத் தாய்க்கும் தன் முதல் பிள்ளை என்றால் தனிப்பிரியம் தான் போல். தம்பி எழிலின் நெருங்கிய நண்பன் என்றே சொல்லலாம், ஓராண்டுக்கு முன் வரை. எழில்-ப்ரியா கல்யாணத்தில் அவனுக்கு உடன்பாடு இல்லை. அவன் இக்கல்யாணத்தை முற்றிலும் வெறுத்தான். அதன் விளைவு சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறு மனவருத்தம்.
“அம்மா என்ன சொன்னாங்க?”
“பெருசா என்ன சொல்லப் போறாங்க? உடம்ப பார்த்துக்கோ, பத்திரமா இரு…. வழக்கமா சொல்றதுதான் … சரி நீ உன்னோட அப்பாக்கு call பண்ணலயா?”
அவனுடைய இந்தக் கேள்வி, அவள் இத்தருணத்தில் மறக்க நினைத்ததை நினைவூட்டியுது.
“வேணா!! இந்த இன்பமான தருணத்த நான் வீணடிக்க விரும்பல… போதுமான அளவுக்கு கஷ்டப் பட்டாச்சி… இன்னும் அவருக்கு call பண்ணி கஷ்டத்த கூட்டிக்க வேணா.”
“என்ன இருந்தாலும் அவுங்க உன்னோட அப்பா அம்மா… அது மட்டும் இல்லாம உன் நல்லதுக்குத்தான் அவுங்க இந்தக் கல்யாணத்த தடுத்தாங்க.”
“எனக்கு எது நல்லதுன்னு முடிவெடுக்கிற சுதந்திரமும் அவுங்கதான் கொடுத்து வளர்த்தாங்க…. தவறான முடிவாவே இருந்தாலும், காரணம் சரின்னா துணிச்சலா முடிவை எடுன்னு சொல்லிக் கொடுத்து வளர்த்தது என் அப்பாதானே?”
ஒரு பெண்ணுக்கு இந்த சமுதாயத்தின் பிரச்சனைகளை தனியே நின்றுச் சமாளிக்கும் துணிச்சல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ப்ரியாவின் தந்தை. அதற்கு ஏற்றார் போல்தான் மகளையும் எதற்கும் துணிந்த வீரமங்கையாகவே வளர்த்துள்ளார். முடிவின் முன் ஆழ்ந்த சிந்தனை, அச்சிந்தனைக்கேற்ற உறுதியான முடிவு, முடிவின்மேல் கொண்டப் பொறுப்பு என அனைத்தையும் திறம்பட செய்யும் குணம் அவளுக்கு.
“அப்படி வளர்த்த நாலதான் துணிச்சலானப் பொண்ணா இருக்க நீ இப்ப.”
“ஆனா, இப்ப அவுங்களுக்கு இந்தத் துணிச்சல்தான் பிடிக்கல.”
“அவுங்களுக்கு பிடிக்காதது உன்னோட துணிச்சல இல்ல, எழில.”
“எழில இல்ல, ஹன்டிங்டன.”
அவள் சொன்ன ஹன்டிங்டன் எனும் அந்த ஒரு வார்த்தை அவனது மனதில் ஈட்டிப்போல் துளைத்தது. அதனை வெளிகாட்டிக் கொள்ளாமல் எழில் பேச்சைத் தொடர்ந்தான்.
“இப்படி ஒரு வியாதிய கண்டுபிடிச்சது அவரு தப்பா?”
“நான் கண்டுபிடிச்சவர சொல்லல…. கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாழாப்போன வியாதிய சொல்றேன்.”
“அப்படி பார்த்தாலும் இப்படி ஒரு வியாதி உள்ளவனுக்கு எந்த பெத்தவங்கதான் பொண்ணு கொடுப்பாங்க? என் கூட பிறந்தவனுக்கே இதுல விருப்பம் இல்ல…. அப்பா தெரியாம அம்மாக்குப் பண்ணத, நான் தெரிஞ்சே உனக்குப் பண்றேனாம்…. நியாயம்தானே…. எப்படிப் பார்த்தாலும் இதுவும் ஒரு வகைல பாவம்தான்.”
இதுவரை பொறுமைகாத்த ப்ரியாவுக்கு அவனது புலம்பல் எரிச்சலை உண்டாக்கியது.
“எது நியாயம்? ஊரு உலகத்துல வியாதியோட யாரும் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா?”
“பண்ணிக்கிறாங்க, ஆனா இன்னும் 2 வருசத்துல சாகப்போறவன எந்த முட்டாளும் கட்டிக்க மாட்டாங்க.”
“வாயே மூடுடா… டாக்டர் சொல்லலாம் உனக்கு இன்னும் 2 வருசம்தான் வாழ்க்கைனு…. எனக்குத் தெரியும் நான் உன்கூட எவ்ளோ நாள் வாழ்வேன்னு.”
“5 வருசம் MBBS படிச்ச எனக்கோ இல்ல அந்த டாக்டர்க்கோ தெரியாதது என்ன உனக்கு தெரிஞ்சி போச்சு இப்போ?”
அவனுடைய நக்கல் பேச்சு அவளுக்கு மேலும் கோவத்தை வரவழைத்தது.
“என்னோட காதல் உன்ன என்கூட வாழ வைக்கும், நான் சாகறவரைக்கும்.”
“உலகத்துல உள்ள விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் கொடுத்து அனுப்பலாமா உன்னோட காதல. அப்படியாவது இதுக்கு ஒரு மருந்துக் கண்டுப் பிடிக்கறாங்களானு பார்க்கலாம்.”
“லட்சக் கணக்குல மக்களுக்கு இந்த வியாதி வந்து இருந்தா, இந்த பணம் ஆசை புடிச்ச விஞ்ஞானிகள் மருந்துக் கண்டுபுடிச்சி இருப்பாங்க இந்நேரம். 4 மில்லியன்ல ஒருத்தனுக்கு வர்ற வியாதிக்கு மருந்துக் கண்டுபிடிக்கறதுல போதுமான வருமானம் வராதே. அப்படி பட்டவங்களுக்கு என் காதல்னு இல்ல வேற எத கொடுத்தாலும் மருந்துக் கண்டுபிடிக்கப் போறது இல்ல.”
அவளின் வேதனையில் வெளிப்பட்ட புலம்பல் எதோ உலக தத்துவத்தை பறைசாற்றுவதுபோல் இருந்தாலும், எழிலுக்கு அவள் கணவனின் நிலைமையைக் கண்டு உலகையே சபிக்கும் கோபக்காரப் பெண்ணாகத்தான் தெரிந்தாள்.
“ஏன்டி இப்படி சாபம் விடற மாதிரிப் பேசற… லட்சக் கணக்குல மக்களுக்கு இந்த வியாதி வரணுமா? ஏற்கனவே என் அப்பா, இப்ப நான்…. நாங்களே இந்த வியாதிக்குப் பலியாகர கடைசி ஆளுங்களா இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.”
“நான் இருக்கற வரைக்கும் உனக்கு ஹன்டிங்டன் நோய் என்கிற வார்த்தையே மறக்க செய்வேன்.”
“நீ என்ன மறக்க செய்றது? அந்த வியாதியே சந்தோசமா அந்த வேலைய திறம்பட செஞ்சிகிட்டு இருக்கு. காலைல எழுந்திரிச்ச பிறகு…..”
எழில் சொல்லி முடிப்பதற்குள்.
“தெரியும் நீ மறந்துட்டேன்னு…. முழுக் காரணத்தையும் வியாதி மேல மட்டும் போடாத. சொல்ல சொல்ல கேக்காம, நான் வாழ்க்கைய அனுபவிக்கப் போறேன்னு சொல்லி நேத்து குடிச்சியே அந்த beer, அது கூட காரணமா இருக்கலாம்.”
“ஆனா…. நான்….. நான் வந்து….”
“எனக்குப் புரியுது, சொல்ல வேணா.”
வார்த்தைகளை உதிர்ப்பதில் பெரிய தடுமாற்றம் அவனுக்கு. எண்ணத்தில் உள்ளதை வெளிப் படுத்துவதில் ஒரு இயலாமை. சில காலமாக இப்படியும் ஒரு அவதியை அனுபவிக்கிறான். அவனது கைகள் சுயமாக நடுங்க ஆரம்பித்ததை உணர்ந்த ப்ரியா மனமுருகி அவனைக் கட்டி அணைத்து சமாதனப் படுத்தினாள்.
எழில் கண்களில் கண்ணீர் ஊற்றாகப் பெருக்கெடுத்தது.
“நான் சொல்லியே ஆகணும்… நான் இன்னைக்கு முதல் முறையா உன்னையே மறந்துட்டேன்… இது நடக்கும்னு தெரியும், ஆனா இவளோ சீக்கிரமா நடக்கும்னு நான் எதிர்பார்க்கள… என்னால அதத்தான் ஏத்துக்க முடியல…. நாளுக்கு நாள் மோசமா போய்கிட்டு இருக்கேன்.”
“மறதி ஒரு பெரிய பிரச்சனையே இல்ல… உனக்கு ஞாபகப் படுத்தத்தான் நான் உன்கூடவே இருக்கேனே?”
அவளின் வார்த்தைகளால் சமாதானம் ஆகும் நிலைமையில் எழில் இல்லை.
“நீ இருக்கதான்…. அதுதான் எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு…. இன்னும் வாழப்போற சில மாசங்கள்ல ஒரு நிமிடம்கூட வீணாக்காம உன்கூடவே செலவுப் பண்ணணும்னுதான் அம்மா பேச்சையும் கேக்காம கல்யாணம் முடிஞ்ச உடனே இங்க கிளம்பி வந்தேன்… கடைசியில என்ன நடந்துச்சு நேத்து? தலை வலிலேயும் உடம்பு வலிலேயும் நான் பட்டக் கஷ்டத்துக்கு விடிய விடிய மருத்துவம் பார்த்தே நம்ப இரவு முடிஞ்சிச்சி…. நீ இப்படி இருக்க வேண்டியவ இல்ல… இன்னும் சந்தோசமா வாழ வேண்டியவ.”
அவனை மேலும் பேச விடாமல் தடுக்க அவள் பேச முயன்றால். எழில் இருந்த நிலைமையில் சொல்ல வந்ததை சொல்லியே ஆக வேண்டுமென முடிவெடுத்தான்.
“என்ன பேச விடு… நான் இன்னைக்குப் பேசியே ஆகணும்…. இந்த வியாதி வந்ததுல இருந்து எனக்குள்ள என்னென்னமோ நடக்குது…. திடீர்னு மறக்கறேன், திடீர்னு ஞாபகம் வருது, கைகால் தன்னால நகருது, எந்த நேரமும் எதையாவது பற்றிய கவலை, இன்னும் என்னென்னமோ பண்ணுது. இப்ப கூட இதை எல்லாத்தயும் கோர்வையா பேச நான் படறபாடு எனக்குதான் தெரியும்.”
“இது எல்லாமே இந்த வியாதியோட பக்க விளைவுனுதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே? இத பத்தியே சிந்திச்சிகிட்டு இருக்கறதுல எதுவும் மாறப்போறது இல்ல… நீ நல்ல விசயங்கள யோசிச்சாதான் நல்லது நடக்கும்.”
“நல்ல விசயத்த யோசிக்கிறதா? நான் நல்லா தூங்கி மாசக்கணக்கா ஆகுது. இதுல எப்படி நான் நல்ல விசயத்த யோசிப்பேன்? என்னைக்காவது இந்த வியாதி முத்திப்போய் உன்ன ஏதாச்சும் பண்ணிட போறேன்னு பயமா வேற இருக்கு எனக்கு.”
“அப்படி ஒன்னு நடந்தா, உனக்கு முன்னுக்கு உன் கையாள சாகறதுல எனக்கு சந்தோசம்தான்.”
இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் நொடி அவளது கண்களிலும் கண்ணீர். நிலைமையை மோசமாக்க கூடாதெனும் ப்ரியாவின் தீர்மானம் சற்றும் நிறைவேறவில்லை என்பதனைப் புரிந்துக் கொண்ட அவள், அங்கு நிலவும் சூழலை மாற்ற முயற்ச்சித்தாள்.
“போதும்… நம்ப முடிவ பத்தி பேசி நிழல் காலத்த மறக்க வேணா…. இந்த நிமிடம் நான் உன்கூட…. வேற என்ன வேணும்?”
“இருந்தாலும்….”
மேலும் பேச விடாமல் அவனுடைய உதடுகளில் அவள் உதட்டினை பதித்தாள்.