மென்மையான நினைவு!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 25,834 
 

ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை.

சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து விடுவதும் உண்டு. இதோ… இந்த ஓரத்து இருக்கையைப் போல.
பொதிகை எக்ஸ்பிரசின் தாலாட்டில் தூங்கி எழுந்து, முதல் விடியல் கீற்றை தரிசிக்க இயலும். நகர்ப்புற வாழ்வின் பரபரப்பில், கடைசியாக எப்போது விடியலைப் பார்த்தோம் என்று நினைத்துப் பார்த்தாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்…

மென்மையான நினைவு!

ஒரு கணம் திக்கென்றுதான் இருந்தது. ரமணனை பிரிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றன. அப்படியானால், நாளை முதல் எல்லாமே சுபம்தானா… அவள் வாழ்வின் விடியல், நாளைய கிழக்கில் இருந்து தான் துவங்கப் போகிறதா… இன்னும் சொல்லப் போனால், அவளும், ரமணனும் சேர்ந்துதான், விடியலை ரசிக்கப் போகின்றனரா, காலம் முழுமையும்… அற்புதம் நடக்குமா?

“”ஆட்டோ திடீர்ன்னு, பாதி வழில நின்னு உயிரை வாங்கிடுச்சு பாவை… சாரிடா,” என்று மூச்சிரைத்து நின்றாள் அருணா.

“”வா அருணா… இன்னும் உன்னைக் காணோமேன்னு கவலைப்பட்டேன்,” என்று, தோழியின் கைபற்றினாள் பாவை.

“”என்னது… காத்துகிட்டிருந்தியா… யாரு, எனக்காகவா?” சிரித்தாள் அருணா.

“”ஏன்… அதில் என்ன சந்தேகம் உனக்கு?”

“”முகம் அப்படியே, பவுர்ணமி நிலவாக தகதகக்குது… கண்ணுக்கு பதிலா ரெண்டு நட்சத்திரங்கள்… கடலைமாவு போட்டு தேச்ச மாதிரி பளபளன்னு கன்னம்… நாளைய சந்திப்பை நினைச்சு நினைச்சு, பாலிஷ் ஏறிப் போன பாவை… இதுல கவலையாம் கவலை,” மறுபடி சிரித்தாள் அருணா .

குப்பென்று, ஒரு கூடை மல்லிகை தாண்டிப் போனது. ஒரே சாயலும், உடையுமாக, இரட்டைப் பெண் குழந்தைகள், ஒருவர் கை பிடித்து, ஒருவர் நடந்து சென்ற காட்சியும், டிராலியில் இருந்த பித்தளைக் குடமும், முதியவர் எடுத்துச் சென்ற புத்தகத்தின் அட்டைப்பட நாதஸ்வரமும், புதிய உலகை சிருஷ்டித்தன.

தோழியின் கையில் இனிப்பைத் திணித்தாள் அருணா.

“”இன்னியோட எல்லா துன்பமும் விலகிடும் பாவை… நீ செய்த தியாகம், கடைப்பிடிச்ச பொறுமை, கட்டி காத்த பெருந்தன்மை எல்லாம், நல்ல பலனைக் கொண்டு வரும் காலம் இது பாவை,” என்றாள் கரகரத்த வார்த்தைகளில்.

“”நீ சொல்றது பலிக்குமா அருணா?” என்றாள்; குரல் நடுங்க.
பதில் சொல்லாமல், ஒரு கணம் அமைதியாய் நின்றாள் அருணா. பிறகு மெதுவாக, “”வத்சலா மேடம் சொல்வாங்களே, நம்பிக்கை… அது இல்லேன்னா, நாளை என்ற சொல்லே உருவாகியிருக்காதுன்னு நம்புவோம் பாவை… ரமணன் உனக்காகவே காத்திட்டிருப்பார்ன்னு நம்புவோம்.”

பாவையின் இதழ்கள் துடித்தன. எப்பேர்ப்பட்ட மன அழுத்தத்தில் அவள் இருப்பாள் என்று நினைத்துப் பார்க்கவே, அச்சமாக இருந்தது அருணாவுக்கு.

எந்த தைரியத்தில், ஐந்து வருடங்களை ஓட்டினாள்?

“உன் கடமைகளை முடித்து விட்டே வா… காத்திருக்கிறேன்… நீயாக என்னைத் தேடி வரும் வரையில், உன்னை எந்த வழியிலும் தொல்லை படுத்தாமல் காத்திருக்கிறேன் பாவை…’ என்று கல்லூரி ஆடிட்டோரியத்தில், கண்ணிய இடைவெளியில், கண்ணீர் துளிகளின் சாட்சியில், சொன்னானே ரமணன்… அந்த ஒரு தருணம் கொடுத்த வலிமையிலா, ஐந்து வருடங்களை ஓட்டியிருக்கிறாள்?
சினிமா, நாவலில் வருகிற மாதிரி, எவ்வித தொடர்பும் இல்லாமல், எப்படி இருக்க முடிந்தது? இதோ, தங்கைகளின் திருமணம் முடிந்து, அவர்களை துபாய்க்கு அனுப்பி, தன் கடமைகளை சீராக செய்து முடிக்கும் வரை, அவள் தன் நேசம் பற்றி பேசத்தான் இல்லை, நினைத்தாவது பார்த்திருப்பாளா நெஞ்சுக்குள்?

“”தோசையும், பொடியும் இருக்கு இதுல… இது, ஒய்.எம்.சி.ஏ., சாவி… தென்காசி ஸ்டேஷன்ல இருந்து, பத்து நிமிஷத்துல ஆட்டோல போய்டலாம்… ரிப்ரெஷ் பண்ணிக்கிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் போ, உன் சலீமை சந்திக்க…”

“”அருணா…”

“”சொல்லு…”

“”நான் ஒரு முட்டாள்ன்னு நினைக்கிறியா?” என்றவள், உடனே தொடர்ந்தாள்…

“”நீ இல்லென்னாலும், நான் நினைக்கிறேன் அருணா… நீ அப்படி நெனப்பேன்னு நெனைக்கிறேன்.”

வண்டியின் கோச் பார்த்து ஏறினதும் பாவை, அருணாவிடம், “”காதலாம், அஞ்சு வருஷம் ஹலோ கூட, அதுவும் போன்ல கூட சொல்லிக்கலியாம்… ஆனா, அமர காதலாம்… இவள் வாக்கு கொடுத்த மாதிரி, ஐந்து வருட முடிவில் ரயில் ஏறிப் போவாளாம்… காதலன் ரயில் வரும் திசையையே பார்த்து காத்துக் கொண்டிருப் பானாம்… எந்த ஊர் ஜோக் இது?’ இப்படித்தானே உன் நினைப்பு ஓடுது… சொல்லு?”

தோழியின் தோள் பற்றி உட்கார வைத்தாள் அருணா. அவள் பார்வை மிக்க கனிவும், கரிசனமு மாக, பாவையின் விழிகளைத் தழுவியது.

பின் மெல்ல, “”ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட் டும்… ஆயிரம் நினைக்கட்டும் … காதல், முழுக்க முழுக்க அந்தரங்க மானது… உனக்கும், ரமணனுக்கும் தவிர, வேற யாருக்கும் சொந்தமில்லாதது… நீ என்ன நினைக்கிற என்பதுதான் முக்கியம்…

“”தவிர, காதல் என்பது ஒரு அற்புதம் கூட இல்லையா பாவை… எல்லாருக் கும் வாய்க்குமா… நிச்சயமா இல்ல. கவலைப்படாம இரு… எல்லாம் பிரமாதமா நடக்கும்.”

“”அருணா… இப்படி மனசை பகிர முடியற தோழமை கிடைச்சிருக்கே எனக்கு… நான் ஒரு அதிர்ஷ்டசாலின்னு இதுலயே தெரிஞ்சிடுச்சு அருணா… நீ கிளம்பு… அம்பத்தூர் போகணுமே,” என்றபோது, நெகிழ்ந்திருந்தாள் பாவை .
புன்னகை, சிரிப்பு, சேர்ந்து நடத்தல், காத்திருத்தல் என, ஒவ்வொரு கட்டமாகக் கடந்த அந்த நட்பு, மிக அழகான காதல் என்ற வண்ணத்துப் பூச்சிப் பருவத்தை எட்டிய போது, இருவர் இதயங்களும் இடம் மாறியிருப்பதை இருவருமே உணர்ந்து கொண்டனர்.

கரிய நீல வானத்தைப் பார்க்கும் போதெல்லாம், இப்படிப்பட்ட அற்புத வானத்தின் கீழே, எப்படி கொடுமைகளும், மோசடிகளும் நிகழ்கின்றன என்ற கேள்விதான் எழும்.
ஆனால், அதே வானம் இப்போது, உலகின் சிறந்த குடையாக, நட்சத்திர டிசைன் வரைந்த வர்ண குடையாகத் தெரிந்தது, இருவருக்கும். நிலவின் முதல் வேலையே, தங்களுக்காக வானில் தோன்றுவது தான் என்று தீர்மானமாக நம்பினர்.
மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ? என்று, “வெண்ணிற இரவுகளில்’ உருகுகிற இவான் துர்கனேவ் போல அவனும், “என்னுயிர் நின்னதன்றோ’ என்று பாரதியை துணைக்கழைத்துக் கொண்டு அவளும், தங்கள் காதல் பொன்னுலகத்தை பரிபாலனம் செய்தனர்.

அப்பாவின் திடீர் மரணத்தில் வந்தது, காதலைப் பிரிக்கிற கத்தி.

அம்மாவை இழந்து ஏற்கனவே எட்டு வருடங்கள் ஆகியிருந்தன.

கேம்பஸ் நேர்காணல் நியமன உத்தரவுடன் அவளும், கனவு கரைந்து கொண்டிருந்த கண்களுமாக அவனும், ஆடிட்டோரியத்தின் வளைவுப் படிகளில் நின்றனர். அழுகை சுரப்பதற்கான குறைந்த பட்ச ஈரம் கூட, அவள் நெஞ்சில் இல்லை. தங்கைகள், ஒரு தம்பி. அந்த முகங்கள் மட்டுமே உ<ணர்வுகளை ஆக்கிரமித்திருந்தன.

சோகச் சிந்தனை படர்ந்த, அந்த சோர்வு முகத்தை, அவன் ஆறுதலுடன் பார்த்தான்.

“கவலைப்பட ஒன்றுமில்லை பாவை… அவர்களுக்கு தாயாக, தந்தையாக நீ இருக்கிறாய்… அவர்கள் விழியின் பாவை நீ… உன் கடமைகளை முடித்து விட்டுவா… ஐந்து வருடங்கள் தேவைப்படலாம்… முடித்துவிட்டு வா… நீயே என்னைத் தேடிக் கொண்டு வா…’ என்றான்.

“காத்திருப்பீர்களா ரமணன்?’ என்றாள். உடலும், வார்த்தைகளும் நடுங்கின.

அவன் முறுவலித்தான்.

“நம் காதல் காத்திருக்கும் பாவை… கிளம்பு…’ என்றான், அதே குளுமையுடன்.

“வருகிறேன்… உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்…’ என்று சொல்லி விட்டு நகர்ந்த போது, கண்ணீரும் அமைதியும் மட்டுமே இருந்தன.

கீட்சின் கவிதையைப் போல.

அருணா சொன்னபடி, குளித்து, உடை மாற்றி, வண்டி பிடித்து வில்லிபுத்தூர் செல்வதை எல்லாம் உடல் தான் செய்து கொண்டிருந்தது. மனதின் வேகத்தை அளக்க, இன்னும் எந்த உபகரணங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.

“ரமணன், எப்படி இருப்பீர்கள்… எனக்குள்ளே அதே புத்துணர்ச்சியுடன் இருக்கும் காதல், உங்களிடத்தில் இருக்குமா… வழிகாட்டவோ, புத்திமதி சொல்லவோ யாருமில்லாமல் இருந்த போதிலும்; உள்ளத்தை அடக்கியாண்டு, என் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியிருந்தேன் என்றால், அது நம் காதல் கொடுத்த கேடயமும், பாதுகாப்பும் தான்…’

அப்போது தான் கவனித்தாள்.

“இதென்ன… ரமணின் புகைப்படமல்லவா… சுவர் முழுக்க ஓட்டியிருக்கின்றனரே… ஏன்?’

நெஞ்சைப் பற்றிக் கொண்டு பார்த்தாள்; திகைத்தாள்!

“நிகழவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலில், அவன் வேட்பாளராக நிற்கிறான்; அசோக சக்கரம் சின்னத்தில்!’

முகவரி வந்து விட்டது.

வாசலில் தயக்கமாக நின்றபோது, உள்ளே காட்சிகள் தெரிந்தன.

மனுக்களும், மக்களும் குவிந்திருக்க, அனைவருக்கும் மணக்க மணக்க காபி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய டேபிள் போட்டு, யாரோ ஒரு பெண், சிரித்த முகத்துடன் குறிப்புகள் எழுதுவதும், உரையாடுவதுமாக இருந்தாள்.

சினிமாக்களில் வரும் அரசியல்வாதிகள் வீடு போல இல்லாமல், நல்லவராய் இருக்கிற சொந்தக்கார அண்ணனின் வீடு போன்று, சகஜத் தன்மை தெரிந்த முகங்களை, அவள் வியப்புடன் பார்த்தாள்.

“”வா பாவை… தெரியும் எனக்கு, நீ வருவேன்னு,” என்ற அந்தக் குரல், மின்னலை நெஞ்சிற்குள் நுழைத்தது.

“”ரமணன்…” என்றாள். அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.

அதே உயரம், அதே கனம், அதே கம்பீரம் இன்னும் கூடியிருந்த தன்னம்பிக்கை என்று ஏதோ தெய்வத்தின் அவதாரம் போல நின்றான். அந்தப் புன்னகை நிஜத்திலேயே நம்ப இயலாத மென்மையுடன் இருந்தது!

“”பாவை…” என்றான் அதனினும் மென்மையாக.

“”பெண் நீ… அதிலும் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் கைவிடப்பட்டவள். பானை பாரத்தை சுமக்க வேண்டிய சிட்டுக்குருவி… ஆனால், நீ கலங்கவில்லை. தெளிவாக இருந்தாய்… “கடமை, காதல் இரண்டிலும் வெற்றி பெறுவேன்…’ என்று தீர்மானமாக இருந்தாய்…

“”எனக்குள் புதிய ரமணன் அப்போதுதான் பிறந்தான்… “வீட்டுக் கடமைகளுக்காக அவள் எடுத்துக் கொள்ளப் போகும் இந்த ஐந்து வருடங்களில், நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று அந்த புதிய ரமணன் கேட்டான்… மெல்ல மெல்ல தீர்மானித்தேன்…

“”பிறந்த மண்ணுக்கு என்ன கடமை செய்தேன், என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்று யோசித்தேன்… பொது வாழ்க்கைக்கு அந்த சிந்தனை அழைத்து வந்தது, அன்பிற் சிறந்த தவமில்லை என்ற பாரதியின் வாக்கை கையில் ஏந்தி… இதோ மக்கள் பிரதிநிதி… போட்டி வேட்பாளரே இல்லை பாவை.”

அவள் கண்ணிமைக்காமல் கவனித்தாள்.

“”பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட வீரப் பெண்ணாக நீ வந்து நிற்கும் போது, உன்னருகில் நிற்க எனக்கு கொஞ்சமாவது தகுதி வேண்டாமா பாவை… சொல் பாவை, நான் நல்லவந்தானா… இந்த வீராங்கனைக்கு ஏற்ற வீரமறவன்தானா?” என்றான்.

இமைகளில் ஈரத்தைப் பார்த்தாள்.

“”என்னவென்று சொல்வேன் ரமணன்… உண்மையான காதல் எப்போதும் முன்னேற்றியே செல்லும் என்பதைத் தவிர,” என்று அவள் தழுத்தழுத்த போது, அவன் விரல்கள், அவள் முகத்தைப் பற்றியிருந்தன.

– மே 2012

Print Friendly, PDF & Email

2 thoughts on “மென்மையான நினைவு!

    1. நீங்க சொல்றது தான் சரி . கதையா இருந்தாலும் கொஞ்சம் எதார்த்தம் வேணாமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *