மரியா கேன்ட்டீன்

 

‘‘ஒரு மரியா கேன்ட்டீன்…’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர்.

‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’

‘‘சேவியர்ஸ்… எய்ட்டி செவன் – நைன்ட்டி செட்!’’ என்றேன் பரவசமாக.

ஏதோ அன்டார்டிகாவில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். ஆனால், என் பதிலைக் கேட்க அவகாசமில்லாமல் இடித்து மிதித்துக்கொண்டு ஏறிய கும்பலை நோக்கி, ‘‘உள்ளே போங்க… உள்ளே போங்க…’’ என்று கத்தத் தொடங்கிவிட்டார்.

மரியா கேன்ட்டீன், திருநெல்வேலியில் அழிக்க முடியாத ஓர் அடையாளம். பாளையங்கோட்டை

பஸ் ஸ்டாண்டைத் தாண்டி ஹைகிரவுண்ட் செல்லும் வழியில், சேவியர் கல்லூரிக்கும் ஜான்ஸ் கல்லூரிக்கும் இடையே தனித்த அடையாளத்தோடு நிற்கும் கட்டடம்.

நெல்லையின் எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் அதுதான் ஸ்பாட்… டாப்பு. அன்றைய கல்லூரி நடவடிக்கைகள் அங்கேதான் தீர்மானிக்கப்படும். ஸ்டிரைக் அடிக்கப் போகிறார்கள் என்றால், நெல்லை கமிஷனருக்கு முன்னால் மரியா கேன்ட்டீன் சேட்டனுக்குத் தெரிந்துவிடும்.

அந்த ஊரில் எந்தக் கல்லூரியில் படித்தவனாக இருந்தாலும் ஒருமுறையாவது மரியா கேன்ட்டீனில் சமோசா, டீ சாப்பிட்டிருப்பான். பெண்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. அதிலும் விதிவிலக்காக வெண்ணிலா என்னோடு மரியா கேன்ட்டீன் வந்திருக்கிறாள்.

‘‘என்னய்யா இடம் இது..? ஒரு ரூம்… வெளியே மூணு பக்கமும் வராண்டா. நாலு டேபிள் சேர். ஒரு ரெஸ்டாரென்ட் மாதிரியே தெரியலியே!’’ என்று ஆச்சர்ய பாவம் காட்டினாள். நான் அவளை ஒரு காபி சாப்பிடப் போகலாமா என்று கேட்டதும், ஏதோ பெரிய ரெஸ்டாரென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று நினைத்துவிட்டாள்.

‘‘இதுதான் எங்க ஃபேவரிட் ஸ்பாட். அநேகமாக இங்கே வர்ற முதல் பொண்ணு நீயாதான் இருப்பே!’’ என்று சிரித்தேன்.

அது உண்மைதான் என்பது போல டீ சப்ளை செய்யும் சேட்டன், வெண்ணிலாவை உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பார்த்தான்.

வெண்ணிலா எதுவும் கேட்காமலே கேக் கொண்டு வந்து கொடுத்தான். எனக்கு வழக்கம்போல எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒரு பிளேட் சமோசா, ஒரு டீ, அரை பாக்கெட் சிகரெட்!

‘‘ஓ… ஆர்டர் பண்ணாமலே எல்லாம் வருதுன்னா, ஐயா இங்கே ரெகுலர் கஸ்டமரா?’’

‘‘எப்பவுமே எல்லாருக்கும் இங்கே ஆர்டர் பண்ணாமலே எல்லாம் கிடைக்கும். சமோசா, டீ ரெகுலர். யாருக்கு எந்த சிகரெட்டுங்கிறது எல்லாம் ஒரே வாரத்தில் பழகிடும். ஒருதடவை எங்கப்பாவும் நானும் இங்கே வந்தோம். அப்பவும் இதே போல சிகரெட்டைக் கொண்டு வந்து வெச்சுட்டான்..!’’ என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு டீயை உறிஞ்சினேன்.

‘‘என்ன, அந்த சிகரெட் பாக்கெட்டை உங்கப்பா எடுத்துக்கிட்டாரா..? இப்படி ஏதாவது மொக்கையா ஜோக் அடிக்காதே!’’ என்று சிரித்த வெண்ணிலா, என்னையே கடிப்பது போல சமோசாவைக் கடித்தாள்.

‘‘இல்லல்ல… நான் பதறின வேகத்தைப் பார்த்துட்டு, கல்லாவில் இருந்தவர் ஓடி வந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துட்டு, ‘இதுக்கு முன்னால காபி சாப்பிட்ட கஸ்டமர் கேட்டதை பையன் இப்போ கொண்டு வந்து கொடுத்துட்டான். ஸாரி சார்!’னு சமாளிச்சுட்டார். டீ எப்படி இருக்கு?’’ என்றேன்.

‘‘எங்க ஹாஸ்டல் மெஸ்ஸைவிட நல்லா இருக்கு’’ என்றாள். வெண்ணிலா, மெடிக்கல் காலேஜ் மாணவி.

எனக்குக் கல்லூரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஹாஸ்டலுக்கு ஓடி, சோப்புப் போட்டு முகம் கழுவி, சட்டை- பேன்ட் மாற்றி, டவுன் பஸ்ஸைப் பிடித்து ஹைகிரவுண்டில் போய் இறங்குவேன். அங்குதான் மெடிக்கல் காலேஜும், வெண்ணிலா தங்கியிருந்த தனியார் ஹாஸ்டலும் இருந்தன.

வெண்ணிலாவும் கிட்டத்தட்ட தயாராக இருப்பாள். இருவரும் பேசிக்கொண்டே தினம் ஒரு திசையில் நடப்போம். அப்படி ஒரு தினத்தில்தான் அவளை மரியா கேன்ட்டீனுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு அடிக்கடி அவள் என்னுடன் மரியா கேன்ட்டீன் வரத் தொடங்கினாள்.

‘‘ஏம்ப்பா… வர லேட்டாகும்னு முன்னாடியே சொல்லியிருந்தா, நானும் லேட்டாவே வந்திருப்பேன்ல. நீ வந்திடுவேனு நம்பி கேன்ட்டீனுக்கு வந்து உட்கார்ந்துட்டேன். உங்க சேட்டன் பழக்கதோஷத்துல சமோசா, டீயோடு அரை பாக்கெட் சிகரெட்டையும் வெச்சுட்டுப் போயிட்டார். பக்கத்து டேபிள் பார்ட்டிங்க தெறிச் சுட்டாங்க தெரியுமா?’’ என்று ஒரு நாள் வெண்ணிலா சொன்னபோது சிரிப்பு பீறிட்டது.

வெண்ணிலாவை ரத்த தான முகாம் ஒன்றில்தான் சந்தித்தேன். எங்கள் கல்லூரியில் நான் சேர்மன். கூடவே என்.எஸ்.எஸ். தலைவர். அதனால், கல்லூரி ஏற்பாடு செய்த ரத்த தான முகாமை என்னை துவக்கி வைக்கச் சொல்லிவிட்டார் பிரின்சிபல்.

துவக்கிவைப்பது என்றால் ரிப்பன் வெட்டுகிற சமாசாரம் இல்லையே… ரத்தம் கொடுப்பது பற்றி எனக்குள் ஆயிரம் தயக்கங்கள் இருந்தன. மருத்துவக் கல்லூரி டீமில் வந்து இறங்கிய வெண்ணிலாதான், ரத்தம் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் வராது என்பதை விளக்கமாகச் சொன்னாள்.

சேர்மன் பதவிக்காக இல்லையென்றாலும், என்.எஸ்.எஸ். தலைவர் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிரின்சிபல் சொன்னதற்காக இல்லை என்றாலும்… வெண்ணிலாவுக்காக ரத்தம் கொடுக்கத் தயாரானேன். எத்தனை பாட்டில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று தாராளமாக அறிவித்தேன். மையமாகச் சிரித்தாள்.

என்னுடைய ரத்த தானச் சாதனைப் புகைப்படம், அடுத்த நாள் தினசரி பேப்பர்களில் வெளியானது. எங்கள் கல்லூரி சார்பாக ரத்தம் கொடுத்தவர்களுக்கான சர்டிஃபிகேட்டுகளுடன் வந்த வெண்ணிலா, ‘‘போட்டோவில் நீ ஒண்ணும் பயந்த மாதிரி தெரியலையே…’’ என்றாள். அப்படித்தான் ஆரம்பித்தது நட்பு.

‘‘இனிமேல் சகட்டுமேனிக்கு யார் கேட்டாலும் ரத்தம் கொடுக்கப் போய் நிற்காதே..!’’ என்றாள்.

‘‘அடப்பாவி… இப்படித் தொழிலுக்கே துரோகம் பண்றியே. உனக்கே இது நல்லாயிருக்கா?’’ என்றேன் பொய்க் கோபத்தோடு.

‘‘அதுக்கில்லைப்பா… உன்னோ டது ரொம்ப ரேர் குரூப். தேவைப் படும்போது மட்டும் கொடுக்க வேண்டிய ரத்தம். இன்னும் சொல்லப் போனா, ராயல் பிளட் குரூப்’’ என்றாள். அதில் என் சாதனை ஏதும் இல்லை என்றா லும், பெருமையாக இருந்தது. அதன் பிறகு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஆபரேஷன் என்று ஒருமுறை அவளே அழைத்தாள்.

அன்றைய தினம் மிகவும் முக்கிய மானது. அன்றுதான் வெண்ணிலாவிடம் என் காதலைச் சொன்னேன், அதுவும் எங்கள் நட்புக்கு சாட்சியாக இருந்த அதே மரியா கேன்ட்டீனில்.

நான் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்த வெண்ணிலாவின் கண்கள் நீரில் பளபளத்தன. ‘‘நீ இதை ஒரு நாள் சொல்வேனு எனக்குத் தெரியும்’’ என்றாள். ‘‘நீ சொல்லாத வரைக்கும் இன்னிக்குத் தப்பிச்சுட் டேன்னு ஒரு நிம்மதி பிறக்கும். இப்போ அதைக் கெடுத்துட்டே…’’ என்று வெண்ணிலா பேசிக்கொண்டே போக, எனக்குள் குழப்பம்!

ஒருவனுடைய காதல் விண்ணப் பம், ஒரு பெண்ணுக்கு சந்தோஷத் தைக் கொடுக்கும்; அல்லது, கோபத்தைக் கொடுக்கும். இப்படி ஒரு துயரத்தைக் கொடுக்குமா..? அறிமுகமே இல்லாத ஒருவன் என்றாலும் பரவாயில்லை; என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும்… ஏன்?

‘‘இல்லை, நான் சொல்லலைன்னே நினைச்சுக்கோ. நிதானமா யோசிச்சு முடிவு பண்ணு’’ என்று வெண்ணிலாவை பஸ் ஏற்றிவிட்டு, ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். ‘காதலைச் சொல்லி ஒரு பெண்ணைக் குழப்பிவிட்டோமோ..?’ என்று குழப்பம் எனக்கு.

அடுத்த நாளும் மரியா கேன்ட்டீனில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம்.

‘‘நான் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு நொந்து போயிருக் கேம்ப்பா! எனக்கு உள்ளுக்குள்ள ஒரு கனவு ஓடிட்டிருக்கு. நான் டாக்டர் ஆகியே தீரணும். என் கனவைக் கலைச்சுடாதே! உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னா, படிப்பு தடுமாறிடுமோன்னு பயந்து பயந்து உள்ளுக்குள் வெச்சுக்கிட்டு தவிச் சுட்டு இருந்தேம்ப்பா! ஆனா, நீயே சொன்னதுக்குப் பிறகு, மறுக்க முடியலை. கடைசி வரைக்கும் என்னோடு ஆதரவா, உறுதியா நிக்கணும். நிப்ப தானே? இல்லேன்னா நான் சுக்கல் சுக்கலா நொறுங்கிப் போயிடுவேன்’’ என்றபோது, வெண்ணிலா கண்களில் வெள்ளமாக நீர்.

சட்டென்று அவளுடைய கண்க ளைத் துடைத்துவிட்டு, கைகளைப் பற்றிக்கொண்டேன்.

‘‘என்ன வெண்ணிலா, என்ன பேசறே..? உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா..? இந்த மரியா கேன்ட்டீன் சாட்சியா சொல்றேன்… உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!’’

‘ப்பீய்ங்…’ என்ற விசில் சத்தத்துக்கு வண்டி குலுங்கி நின்றது.

‘‘சார்… நீங்க கேட்ட ஸ்டாப்பிங் வந்துடுச்சு!’’ என்ற கண்டக்டரின் உலுப்பலில் சுதாரித்து பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.

பஸ் நகர்ந்து போக, மரியா கேன்ட்டீன் இருந்த இடத்தை என் கண்கள் துழாவின. சுத்தமாக இடித்துச் சமதளமாக்கி காம்பவுண்ட் போட்டு வைத்திருந்தார்கள்.

சாட்சி இல்லையென்றாலும், குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

- 26th செப்டம்பர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
“அட்டெண்டர்! இங்கே வா! இந்த ஃபைலை எல்லாம் கொண்டு போய் மேனேஜர் ரூம்ல வை!” என்று உரத்த குரலில் அழைத்தார் பரசுராமன். அந்த அலுவலகத்தின் ஹெட் கிளார்க். அவன் அதைச் செய்து முடித்ததும், “அட்டெண்டர்! பிரின்ட்டருக்கு டோனர் மாத்து!” என்று உத்தரவிட்டார். “சார்! ...
மேலும் கதையை படிக்க...
மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. 'தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!' சாவியை எடுத்துக்கொண்டு ரூமை நோக்கி நடந்தேன். இவன் இப்படித்தான்... ஏதாவது கம்பெனி சிக்கினால் சிக்கனும் குவாட்டருமாகக் கொண்டாடிவிட்டு, அகால நேரத்தில் வருவான். ரூமைத் திறந்து ...
மேலும் கதையை படிக்க...
யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக்கொண்டு இருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இருளில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் குளிரைத் தாங்க வேண்டும் என்பதற்காகவும் கரிய நிற ராமசாமி காதை மறைத்து ...
மேலும் கதையை படிக்க...
‘‘அவனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க... படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்கட்டி யிருந்தார்கள். ‘‘இந்த வருஷம் மூணு நாள் கொடை ...
மேலும் கதையை படிக்க...
கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது ஆய்க்குடியில்! ஆய்க்குடி.... என் பால்யத்தின் பள்ளி நாட்கள் கழிந்தது அந்த ஊரில்தான். கோலி, செல்லாங் குச்சி, பம்பரம் என எல்லா விளை ...
மேலும் கதையை படிக்க...
விஜயவாடா ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல் இருக்கும். அந்த ராத்திரியிலும் தோசை விற்றுக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் காலாற நடக்கலாம் என்ற யோசனையில் இருக்கையைவிட்டு எழுந்தேன். மிக அவசரமான பயணம் என்பதால் ரிசர்வேஷன் கிடைக்காமல், ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் இருபத்தைந்து ...
மேலும் கதையை படிக்க...
சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது... நேற்று ராத்திரி அவர் செய்த காரியம்! எங்க ஊரிலேயே பெரிய வீடு சரவணன் மாமாவுடையது. காரவீட்டு சரவணன்னுதான் எல்லாரும் அவரைச் சொல்வாங்க. அவரோட சின்ன ...
மேலும் கதையை படிக்க...
கடைசி வீட்டு ஆச்சி!
‘‘கடைசி வீட்டு ஆச்சி செத்துப்போயிட்டா..!’’ பேச்சிமுத்துவின் குரல் எங்கோ கடலுக்குள் இருந்து ஒலிப்பது போல மெலிதாகக் கேட்டது. என்னால் செய்தியை உள்வாங்க முடியவில்லை. சில கணங்களில் செய்தி உறைத்த போது அதிர்ச்சியாக இருந்தது! ‘‘எப்படியும் நாளைக்குச் சாயங் காலம் ஆகிடும் தூக்குறதுக்கு. நீ ...
மேலும் கதையை படிக்க...
நான் இங்கு நலமே
அன்புள்ள பானுமதிக்கு, என் கையெழுத்து உனக்கு நினைவு இருக்குதா... எனக்கு கிட்டத்தட்ட மறந்தே போயிடுச்சு. இப்போதைக்கு என் நினைவில் இருக்கறதெல்லாம் கம்ப்யூட்டரின் கீ போர்டும் திரையில் ஒளிரும் எழுத்துருக்களும்தான்! சொன்னால் நம்ப மாட்டே... சில நேரங்களில் 'ஞு' எழுதுவது எப்படி என்பதில் குழப்பமே ...
மேலும் கதையை படிக்க...
அட்டெண்டர்!
எங்கடா போயிட்ட?
ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும்..!
மூன்றாம் திருநாள்!
சம்சாரி
ஒருத்தி
சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்
கடைசி வீட்டு ஆச்சி!
நான் இங்கு நலமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)