ப்ரியம்வதா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,058 
 
 

சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன். அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்
முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.

எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் வாசகியாய் முதல் விமர்சகியாய் மாறிப்போனாய். தொலைபேசியில் தொடர்ந்த நம் நட்பு சந்தித்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தோம். மழை ஓய்ந்த மாலையொன்றில் பறக்கும் ரயிலேறி உன் அலுவலகம் வந்தேன்.

கவிதை பேசிக்கொண்டே கடற்கரை சென்றோம் நாம். ஐந்தடி சிகரம் நீயென்று புரியவைத்தது உன் ஆழ்ந்த இலக்கியவாசம். டால்ஸ்டாயும்,நெருதாவும் வந்துபோனார்கள் நம் நட்புக்குள்.

உலக திரைப்படம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாய். உன் கனவுகளையும் என் கனவுகளையும் நாம் பகிர்ந்துகொண்ட நவம்பர் மாத மழைநாள் உனக்கு நினைவிருக்கிறதா தோழி?

நட்பின் மற்றொரு பரிமாணத்தை உன்னில் கண்டேன்.என் வீடுதேடி வந்து என் அறையெங்கும் சிதறிக்கிடக்கும் கவிதைபுத்தகங்களை ஒழுங்காய் அடுக்கி வைத்துவிட்டு தலையில் கொட்டிச் செல்லும் அற்புத தோழி நீ. உன் மடியில் முகம் புதைத்து என் கனவுகளை எல்லாம் உன்னில் கொட்டிவிட துடித்த மனதை கட்டுப்படுத்தி உன்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி வீடு திரும்பினேன்.

வெயில் சுடுகின்ற மார்ச் மாத நாளொன்றில் ப்ரியம்வதாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் எனத் தெரிந்து துடித்துப் போனேன். வதா என்னை நெருப்புக் குழியில் தள்ளிய துரோகி என்று தெரிந்தும் அதை நீ செய்தாய், எனக்கு பகை என்றால் உனக்கும் இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் அவளைப் பற்றி உனக்குத் தெரியாது அவள் அனல் காற்றைப் போன்றவள், நீயோ தென்றல். உன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து பின்னொரு நாளில் தூக்கி எறிந்துவிடுவாள். நீ மென்மனதுக்காரி உன்னால் தாங்க முடியாது என்றுதான் உன்னை நான் தாங்கப் பார்க்கிறேன். ஆனால் இப்போது சில நாள்களாய் என்னை உன் கரங்கள் தள்ளி விடுகின்றன.

நானும் வதாவும் கடற்கரை காற்றின் ஈரமான சுவாசத்துடன் மென்மையாக கை கோர்த்து கதைத்த காலங்களைப் பற்றியெல்லாம் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கு அப்போது நானும் என் அருகாமையும் காதலைப் போன்ற ஒன்றும் தேவையானதாக இருந்தது. அவளது வெறுமையான மாலைகளை என் கவிதைகள் இட்டு நிரப்பியது, தளும்பத் தளும்ப. அக்கறையான வார்த்தைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் வேஷமாய் போனது காலம் எனக்களித்த துயரான பரிசு.

அவள் மாறிப்போவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. மாற்றம் காணாதது ஏது சொல் காவ்யா? நீயும் தான் சில பொழுதுகளில் மாறிப்போகிறாய். விஷம் தீட்டிய வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்துப்போட்டு வடிந்த குருதியைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாய்.

அதன்பின் காயங்களுக்கு மருந்தாகவும் மாறியிருக்கிறாய்.பெண் என்பவள் பெரும் மாயவலை. சிக்க வைத்து சிக்க வைத்து சிரிப்பவள். தானும் சிக்கிக் கொள்பவளாய் பாவனை செய்பவள். கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டு தன் வானில் தன் சிறகையே கதகதப்பாக்கிக் கொண்டு பறந்துவிடுபவள். வதாவும் அப்படித்தான் செய்தாள். காதலை சொல்லப் போகும் நாளிற்காக நான் காத்துக் கிடந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தேன். அவளிடம் சொல்லியும் சொல்லாத என் காதலை பிரகடனப்படுத்த முற்றிலும் தயாரானேன்.

அன்று என்னை எக்மோர் மியூசத்திற்கு அழைத்திருந்தாள். கடைசியில் நானே அருங்காட்சியகத்தில் வைக்கப்படப்போகும் பொருள் போலாவேன் என்று நினைத்திருக்கவில்லை. அவள் புது உடை அணிந்திருந்தாள். தலையில் எனக்கு பிடித்த மல்லிகைச் சரம். உதட்டில் புன்னகையுடன் என்னை வரவேற்றாள். என் பையினுள் அவளுக்கான வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை துடித்துக் கொண்டிருந்தது.

என்னடா ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கிறாய் என்று தண்ணீர் பாட்டிலை தந்தாள். நான் பெருகி வழிந்தோடும் வேர்வையை துடைத்து ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன். அது அவளின் தினம் போலும், விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். இடையில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சொல்லிவிடலாம் என்று பொறுமை காத்தேன். அவளின் அத்தனை உளறல் பேச்சுக்களையும் உலகின் தலைசிறந்த கவிதைகளைப் போலெண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில் அவளிடம் என் காதலை சொல்ல முனைந்த போது “சிவா,உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள்.

ஆர்வமும்,பதைபதைப்பும் என்னை தொற்றிக்கொண்டன.

அவள் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.

“உங்க ரூம்மேட் குமாரை நான்.. ” அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று திரும்பி விறுவிறுவென்று வெளியேறி விட்டேன் காவ்யா. என் அறைத்தோழன் குமாரையா அவள் காதலிப்பது. என்னைக் காதலிப்பதாய் அல்லவா அவள் ஒவ்வொரு செயல்கள் இருந்தன, எப்படி எங்கே இவர்கள் காதலை வளர்த்தார்கள், அதென்ன செடியா வளர்ப்பதற்கு என்று இந்த நேரத்திலும் அபத்தமாய் என் புத்தி இடித்துரைத்தது.

காதலை பெரிதும் மதிக்கும் உணர்வினன் நானென்று தெரியும்தானே காவ்யா? என் காலின் கீழ் பூமி உருண்டு கொண்டிருந்தது. சொற்களற்ற சொல் என் தொண்டைக் குழிக்குள் அமர்ந்து கொண்டு என்னை திக்க வைத்தது. ஒருவழியாய் அவளிடமிருந்து தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது.

குமாரும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காண்பித்திருந்தேன். அவனைப் பற்றி சில சமயம் சொல்லியிருக்கிறேன். எதேச்சையாக ஒரு நாள் அவள் என்னை சந்திக்க வந்திருந்த போது நான் அங்கிருந்திருக்கவில்லை. குமாரும் அவளும் பேசியிருக்கிறார்கள். அதன்பின் அவர்களின் பேச்சுக்கள் நிற்கவேயில்லை…இன்று என் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட மித்ர துரோகிகளிடம் நான் எப்படி முன்பு போல் பழகுவது. அவளுக்கு என் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமிருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் புலம்பியிருக்கமாட்டேன். என்னைத்தான் முதலில் அவள் காதலித்தாள், என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் தள்ளிப்போடும் குணம் என்னை குழியில் தள்ளிவிட்டது.

ஆனால் என் காதலை நான் சொல்லியிருந்தாலும் இவர்களின் காதல் நடந்தேறியிருக்கும். என்னை ஒதுக்கித்தள்ளியிருப்பாள், தூக்கி எறிந்திருப்பாள் அந்த மாயக்காரி. ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று பொருளைப் போல காதலை நிலைப்படுத்திவிட்டாள். நல்ல வேளை நான் தேர்ந்தெடுக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டேன். அது வரையிலும் காயம் அதிகமேற்படாமல் தப்பினேன். ஆனால் இது ஆறா வடுவாய் என்னிதயத்தில் ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.

நீ அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பது எதன் பொருட்டு என்றெனக்குத் தெரியவில்லை. நேசம் கொண்ட நெஞ்சில் நீ நெருஞ்சி முள்ளை ஏன் சொருகுகிறாய். காதல் இருக்கும் திசையை விட்டு விலகி நட்பு தேசத்தில் வந்திறங்கினால் இங்கும் அதே கொடுமை. என் மீது குறைப்பாடா அல்லது பெண்கள் என்றாலே இப்படித்தானா? புரியவில்லை இனிய தோழி. உருகிக் கரைந்து மடிந்து கொண்டிருக்கும் நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். காதல்தான் என்னை கசக்கி பிழிந்து ரத்தமும் சதையுமாய் கிழிந்தெறிந்துவிட்டது நட்பாவது என்னிடம் நிரந்தரமாய் இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு என் மனக்குமறலையெல்லாம் கொட்டி ஒரு மின்னஞ்சல் உனக்கு அனுப்பினேன்.

என் வாழ்வின் மொத்த அதிர்ச்சியும் உன் பதிலில் உறைந்திருந்தது.

டியர் சிவா,

மிகச்சுருக்கமாக உன்னிடம் ஓர் நிஜம் சொல்கிறேன்.

குமார் என் காதலன். ப்ரியம்வதா என் தோழி. எங்களை சேர்த்துவைக்க முயன்றவர்களில் மிக முக்கியமானவள்.

ப்ரியம்வதாவைத்தான் நீ நேசித்தாய் என்பது இவ்வளவு நாளாய் எனக்கு தெரியாது.

-காவ்யா.

என் தேவதையை இக்கணமே பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என் அன்பின் தோழியே உனக்கு என் திருமண வாழ்த்துக்கள்.இப்போது நிதானம் கலந்த அவசரத்துடன் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.அலைபேசி சிணுங்கியது.”ஹலோ சிவா” ப்ரியம்வதாவின் குரலை கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் “வதா,நானே உன்னை பார்க்க வரலாம்ணு” நான் முடிப்பதற்குள் இடைமறித்தவள் “சிவா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றாள்.

– Saturday, September 26, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *