பூப்பூத்தல் அதன் இஷ்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 12,310 
 
 

“இந்த நோட்சை இன்னிக்க நைட்டே காப்பி பண்ணிடுவேன். நாளைக்கு காலையில் உங்க நோட்டைக் கொடுத்துடறேங்க” என்றான் பிரகாஷ்

“சரி” என்ற நிஷா சற்று தள்ளி காத்திருந்த தன் தோழிகளோடு சேர்ந்து கொண்டு காலேஜ் கேண்டீன் நோக்கி நடந்தாள்.

வழியெல்லாம் மஞ்சள் பூக்கள் பூத்த மரங்கள் கிளைகளின் கூட்டணியில் நிழல் விரித்து வைத்திருந்தன.

கல்லூரிப் பூக்கள் எல்லாத் திசைகளிலும் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தன. சுடிதார் அணிந்த பூக்கள் ஜீன்ஸ் அணிந்த பூக்கள், டி ஷர்ட் அணிந்த பூக்கள்.

கட்லெட் சாப்பிட்டப்படி கேண்டீனில் வினோதினி குனிந்து, “நிஷா, ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றாள்.

சரிந்த துப்பட்டாவை சரி செய்து கொண்டு, “என்ன?” என்றாள் நிஷா

“பிரகாஷ் உன்னை லவ் பண்ணிட்டு இருக்கான்”

“வாட் நான்சென்ஸ்?”

“நிஜமாதான் சொல்றேன். சரியான சந்தர்ப்பம் பார்த்து உன்கிட்ட சொல்லப் போறதா செந்தில் கிட்ட சொல்லியிருக்கான். நேத்து செந்தில் என்கிட்ட சொன்னான்.”

“என்ன பேத்தல் இது? இது படிக்கிற வயசு! லவ் பண்ற வயசு இல்லை வினோ. நான் பிரகாஷ் கிட்ட ஃப்ரெண்ட்லியா தான் பழகிட்டு இருக்கேன்.”

“காதல் நட்புல ஆரம்பிக்கக் கூடாதா?”

“எனக்கு அப்படி ஐடியா இல்லை . நான் நிறையப் படிக்கணும் ஐ.ஏ.எஸ். எழுதணும்னு பிளான் இருக்கு. என் எதிர்காலம் பத்தி நிறைய கனவுகள் வெச்சிருக்கேன். அதை நோக்கி என்னை தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்.”

“ஸோவாட்?”

“நீ செந்தில் கிட்ட சொல்லி பிரகாஷ் கிட்ட சொல்லச் சொல்லு!”

“என்னன்னு?”

“இது சரியா வராதுன்னு சொல்லு. அந்த எண்ணத்தை மாத்திக்கச் சொல்லு. எப்பவும் போல நட்பா பழகறதா இருந்தா பழகச் சொல்லு. இல்லைன்னா அந்த நட்புகூட தேவையில்லை.”

“ஏன் இப்படி டென்ஷனாகறே? நீ ஆத்திரப்படறதுக்கு எதுவும் இல்லை . நீ சொன்னதை நான் செந்தில் கிட்ட சொல்லப்போறதில்லை”

“ஏன்?”

“திடீர்னு உன் மனசு மாறலாம்.”

“நீ சொல்லாட்டி போ! பிரகாஷ் என்கிட்ட நேரடியா சொன்னா அப்போ நானே சொல்லிக்கிறேன். எனக்கு காதல், கீதல் எல்லாம் ரெண்டாம் பட்சம். இப்ப என் கவனம் முழுக்க படிப்புலதான்” என்றாள் நிஷா உறுதியாக.

சாரதி தரையில் அமர்ந்து கேஸ் ஸ்டவ் அடுப்பின் ஓட்டைகளில் கம்பி நுழைத்து துடைத்துக் கொண்டிருக்க….. லலிதா கிரைண்டரில் இருந்து மாவு வழித்து பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருந்தாள்.

தன் அறையில் இருந்து வந்து அப்பா அருகில் அமர்ந்தாள் நிஷா. “நான் பண்றேன்ப்பா. நீங்க போங்க”

“பரவால்லை. நீ போய்ப்படிம்மா”

“அப்பா !”

“என்ன நிஷா?”

“நம்ம டி.விக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கலாம்ப்பா”

நிமிர்ந்து பார்த்தார். பார்வை அவளை துளைத்தது. சமையலறையில் இருந்து அம்மாவும் எட்டிப் பார்த்தாள்.

“எதுக்கும்மா ?”

“நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் வருதுப்பா, நாலெட்ஜ் இம்ப்ரூவ் ஆகும்.”

“வி’ சேனல்லயும், எம் டி.வி லயும் கண்ராவியா ஆடறதைப் பார்த்தா நாலெட்ஜ் இம்ப்ரூவ் ஆகுமா? என் ஃபிரண்டு சொன்னான். ஸ்டார் மூவிஸ்ல குடும்பத்தோட உக்காந்து படம் பார்க்க முடியலையாம். புதுசா எஃப் டி.வின்னு ஒண்ணுல ரொம்ப மோசமா நடந்து வர்றாங்களாம். இப்ப உனக்கு படிப்பு முக்கியமா? மனசைக் கெடுத்துக்கறது முக்கியமா?”

“அப்படி கேளுங்க என்னடி ஆச்சு உனக்கு? உனக்கு படிப்தைத் தவிர வேற எதுலயும் மனசு திரும்பிடக் கூடாதுன்னு தானே நாங்களே சீரியல் பார்க்கற ஆசையை எல்லாம் கட்டுப்படுத்திக்கிட்டு கேபிள் கனெக்ஷன் கொடுக்காம இருக்கோம்!” என்றாள் லலிதா.

“எதுலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. எதை எடுத்துக்கணும்னு பக்குவம் நமக்கு வேணும்மா. அப்பர் சொல்ற விஷயங்களை பார்க்கறதுக்காக நான் கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் சொல்லலை. டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் , நேஷனல் ஜியாகரபி சேனல்னு எவ்வளவோ பொது அறிவை வளர்க்கற சேனல்சும் இருக்கு எல்லா சேனல்லயும் நல்ல புரோக்ராம்சும் இருக்கு. செலக்ட் செஞ்சி பார்க்கலாமேம்மா.”

“நிஷா, என்ன நீ எதிர்த்துப் பேசுறே? ம்?” என்று அதட்டலாக சொன்ன சாரதி, “காலேஜுக்குப் போக ஆரம்பிச்சுட்டா பெரிய மனுஷின்னு நினைப்பா உனக்கு? பக்குவத்தைப் பத்திப் பேசறியே… உனக்கு என்ன பக்குவம் இருக்குன்னு எங்களுக்குத் தெரியும். படிக்கிற வேலையை மட்டும் பாரு.” என்றார்.

இருவரையும் வெறுப்பாகப் பார்த்துவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றாள்.

“எரிக்கிற மாதிரி பார்த்துட்டுப் போறா பாருங்க. மரியாதையே குறைஞ்சு போச்சு இந்த விட்டுல” என்றாள் லலிதா.

கல்லூரியில் இருந்து திரும்பின நிஷா புத்தகங்களை மேஜைமேல் வைத்துவிட்டு, “அம்மா! காபி” என்றாள்.

கொண்டார்றேன். உனக்கு லெட்டர் ஒண்ணு வந்திருக்கு. உன் ஃபிரண்டு பிரதிபா எழுதியிருக்கா. ரேடியோவுக்குப் பக்கத்தில் வெச்சிருக்கேன் பாரு” என்று அம்மா குரல் கொடுத்தாள்.

நிஷா அந்த மூன்று ரூபாய் கவரை எடுத்துப் பார்த்தாள்.

அது ஓரம் கிழிக்கப்பட்ருந்தது.

கடிதத்தை எடுத்துப் படித்தாள்.

காபியோடு வந்த அம்மாவிடம், “இதை யாரும்மா கிழிச்சது?”

“ஏன்? நான்தான்.”

“அவ என்னென்னவோ பர்சனலா எனக்கு எழுதிருக்கா. இதை எதுக்கும்மா நீ படிச்சே?”

“கவர்ல ஃப்ரம் அட்ரஸ் எதுவும் இல்லை . உன் பேருக்கு தபால் வந்திருக்க. பிரிச்சதுக்கப்புறம் தானே உன் ஃபிரண்டு எழுதினதுன்னு தெரிஞ்சது.”

“அப்படின்னா வேற என்னம்மா எதிர்பார்த்தே நீ?”

“வயசுப் பொண்ணை கண்கொத்திப் பாம்பு மாதிரிதானே பார்த்துக்க வேண்டியதா இருக்கு. என்னோட மல்லுக்கு நிக்காதே! உன் பேருக்கு என்ன தபால் வந்தாலும் பிரிச்சுப் படிச்சுட்டு அப்புறம் உன்கிட்ட கொடுக்கச் சொல்லி அப்பாதான் சொன்னாரு.”

“ச்சே” என்றாள் எரிச்சலோடு நிஷா.

கல்லூரி முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து தோழிகளோடு நிஷா பேசிக் கொண்டிருந்தபோது சியாமளா சிங்கப்பூர் டூர் போன அனுபவங்களை விவரித்தாள். திடீரென்று வாட்ச்சைப் பார்த்து பதறினாள் நிஷா.

“ஏய், டைமாச்சு. புறப்படலாம்.”

அவர்கள் எழுந்து கொண்டபோது அவர்கள் அருகில் வந்து ஸ்கூட்டரை நிறுத்திய சாரதியின் முகம் சிவந்திருந்தது.

“நிஷா, ஏறு வண்டியில!” என்றார் உத்தரவாக வீட்டுக்கு வரும் வரை எதுவும் பேசவில்லை . வந்ததும்…

“என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல? ம்? அஞ்சி மணிக்கு வீட்ல இருப்பே. இப்போ ஆறே கால்! பதறிப் போய்ட்டோம். காலேஜ்விட்டதும் நேரா வீட்டுக்கு வந்துடணும்னு சொல்லிருக்கேனில்ல!”

“இல்லப்பா, இன்னிக்கு எங்க செட்டுல ஒருத்தி சிங்கப்பூர் டூர் போயிட்டு வந்திருந்தா. அதைப் பத்தி சொல்லிட்டிருந்தா. அதில நேரம் போனது தெரியலை.”

“இதை நான் நம்பணும். சினிமா மியூசிக், யாரு யாரை லவ் பண்றான்னு வெட்டி அரட்டையைத் தவிர வேற என்ன பேசப் போறீங்க நீங்க?”

“இல்லப்பா…. நிஜமாதான்.”

“எதிர்த்துப் பேசற பழக்கத்தை முதல்ல விடு! அப்போதான் நீ உருப்படுவே. எனக்கு தெரியாதா உங்களைப் பத்தி? பேசுறா பெருசா!”

உதடுகளைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள் நிஷா.

கோபமாக வீட்டுக்குள் நுழைந்தார் சாரதி.

“எங்க? எங்கடி அவ உன் செல்ல புத்திரி! கூப்புடு அவளை! நிஷா! நிஷா!”

“என்னங்க ஆச்சு!” மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த நிஷா பதற்றமாக இறங்கி வந்து மூச்சிரைத்து, “என்னப்பா?” என்றாள்.

“என்ன படிக்கிறே? லவ் புக்கா? பாட புக்கா?” அவள் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார்.

“என்னப்பா இது?”

நேத்து மத்தியானம் நீ காலேஜ்ல கிளாஸ் அட்டெண்ட் செஞ்சியா?”

எச்சில் விழுங்கின நிஷா, “அது… வந்துப்பா…”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! அட்டெண்ட் செஞ்சியா?”

“இ… இல்லைப்பா”

“அடிப்பாவி! கிளாசுக்குப் போகாம எங்கடி போயிருந்தே? என்றாள் அம்மா .

“கேளு! நல்லாகேளு! என் ஃபிரண்டு பார்த்துட்டு வந்து சொல்லலைன்னா எனக்குத் தெரிஞ்சிருக்காது. ஏய்! நிஷா! எத்தனை தடவை இந்த மாதிரி கிளாஸை கட் பண்ணிட்டு சினிமாவுக்குப் போயிருக்கே? ம்?”

“அப்பா…. நேத்துதான் முதல் தடவைப்பா…. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப வற்புறுத்தி கூட்டிட்டுப் போய்ட்டாங்கப்பா.”

“சினிமாவுக்கா போயிருக்கா?” என்றாள் அம்மா.

“அதுவும் என்ன படம் டைட்டானிக் காதல் காவியம்னு எல்லா பத்திரிகையும் எழுதினாங்க இல்ல , அதான் உன் பொண்ணு காலேஜை கட் பண்ணிட்டுப் போய்ட்டா!”

“மன்னிச்சிடுங்கப்பா. இனிமே இப்படி நடக்காது .”

“தெரிஞ்சதால கேட்டேன். இந்த மாதிரி தெரியாம இன்னும் என்னவெல்லாம் நடக்குதோ…? இந்த லட்சணத்தல் ஐ.ஏ.எஸ். எழுதறதுதான் லட்சியம்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கிறா! காலேஜ் கிளாஸ்ல கிடைக்காத நாலெட்ஜ் உனக்கு டைட்டானிக்குல கிடைக்குதோ?”

கண்களில் கண்ணீர் பொங்க அமைதியாக நின்றாள் நிஷா.

கல்லூரி மரத்தடியில் சாய்ந்து அமர்ந்திருந்த நிஷா அவள் அருகில் வந்து நின்ற பிரகாஷைப் பார்த்தாள்.

“என்ன?” என்றாள்.

“நிஷா! உங்ககிட்ட ரொம்பநாளா வெளிப்படையா ஒரு விஷயம் பேச நினைக்கிறேன். நீங்க எப்படி நினைச்சாலும் சரி! நிஷா! ஐ லவ் யூ!” என்ற அவன் – அவள் முகத்தைப் பார்த்தான்.

சில விநாடிகள் மௌனமாக இருந்த நிஷா பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, “நானும்தான்” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *