புஜ்ஜி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 4,207 
 
 

ஒரு கதகதப்பான காற்று தழுவிக் கொண்டு போன பிரமை. பனி இறங்கிக் கொண்டிருந்தது.

பைக் ஓட்டுவதில் சிரமம் தெரிந்தது. ஆனாலும் போக வேண்டும்.

நால்வழிப் பாதை வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.

மேம்பாலத்திற்காக உயர்த்திய மண் மேட்டில் தான் இப்போது இரு புற வாகனங்களும் போய்க் கொண்டிருந்தன. கீழ்ப் பகுதியில் போக்குவரத்து இல்லை. பழைய சாலையை பெயர்த்து போட்டிருந்தார்கள்.

சட்டென்று வண்டிகள் நின்று விட்டன. ஹாரன்கள் அலறி அதுவும் ஓய்ந்து விட்டன. போகவும் இல்லை.. வரவும் இல்லை.

எஞ்சினை அணைத்துவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றி முன்னால் வைத்தான். கைபேசி சிணுங்கியது. குறுஞ்செய்தி வந்திருக்கும் அடையாளம்.

‘ஹாய்.. புஜ்ஜி.. கவித நல்லா இருக்குபா’

தமிங்கிலத்தில் செய்தி. என்ன கவிதை அனுப்பினேன்.. யோசித்தான். ஓ..

பெயரியல் நிபுணர்

பெயர் மாற்றச் சொன்னார்..

மறுத்தேன்..

‘புஜ்ஜி’ என்றாய்.

மகிழ்கிறேன்!

‘வழியில மாட்டிகிட்டேன் டா.. டிராபிக் ஜாம்’

‘ப்ரெட் இல்லியா’

‘கடிக்காதடா செல்லம்.. பசி கொல்லுது..’

‘பக்கத்துல டீக்கடை இல்லியா’

‘இந்த பக்கம் மண் மேடு.. அந்த பக்கம் பொக்லைன்.. எதைத் திங்கட்டும்’

‘கோவமா பா’

‘ஊஹூம்.. சந்தோசம்’

‘நான் இப்ப பண்ணட்டும்.. டிபன் எடுத்துகிட்டு வரவா’

‘நடக்கிறத பேசுடா’

‘கால் பண்ணவா..’

‘ம்ம்.. சுத்தி ஒரே சத்தம்.. அவனவன் பொறுமை போய் ஹார்ன் அடிச்சே கொல்றான்’

‘ரொம்ப பசிக்குதா பா’

‘சட்டையை திங்கலாமான்னு யோசிக்கறேன்..’

‘ப்ளூல செக் வச்ச ஷர்ட் தானே’

‘ம்’

‘அது எனக்கு பிடிச்ச ஷர்ட் பா’

‘ம்’

‘நீ ம் கொட்டறது நல்லா இருக்கு பா’

‘அடிப்பாவி.. ரசனையா’

‘நிஜமாவே.. காதுக்குள்ள ம் சொல்ற பீலிங்’

‘ம்’

‘வேணாம் பா.. அப்புறம் வண்டி புடிச்சு வந்திருவேன்’

‘நீ ம் சொல்லு’

‘எதுக்கு’

‘உன்னோட ம் புடிச்சு போயித்தானே உன்னை லவ் பண்ணேன்’

‘பொய்யி’

‘போடி.. பிகு பண்ணாத..’

“கோவமா பா”…

”என்ன பண்றே.. டிராபிக் கிளியர் ஆயிருச்சா’

‘இன்னும் ரெண்டு நாள் ஆவும்.. கிளியர் ஆக’

‘ம்’

‘பிளீஸ் டா.. ஒன்ஸ் அகைய்ன்’

‘ம்’

‘கொல்றடி.. அய்யோ.. கடவுளே.. என் வண்டிய மட்டும் அப்படியே தூக்கி வெளியே விட்டுரேன்’

‘ம் சொன்னா என்ன பண்ணுது உனக்கு’

‘புரியாத மாதிரி கேட்காத..’

‘உன்னைப் பார்த்தா இன்னும் வளரவே இல்லாத சின்னப் புள்ளை மாதிரியே இருக்க’

‘என்ன பண்ற..”

‘சின்ன புள்ள’

‘ஓ.. டைப் பண்ண லேட்டா.. கதை மாதிரி பெருசா அடிக்காத.. சின்ன சின்னதா அனுப்பு’

‘நீயும் தான் கதை அடிக்கறே’

‘இல்லடா.. நிஜமாவே.. ஐ லவ் யூ’

‘பொய்யி’

‘நம்பாட்டி போ’

‘ம்’

‘மறுபடியுமா.. என்னால முடியலடா’

‘இப்ப எப்படி இருக்கு..’

‘ஜிவ்வுனு இருக்கு’

‘ச்சீ.. டிராபிக் ஜாம்’

‘ம்ஹூம்’

‘பசிக்குதா’

‘ம்’

‘ஒண்ணு தரட்டுமா’

‘கொண்டா..’

‘கன்னத்தைக் காட்டு’

‘சூப்பர்.. இந்த கன்னம்’

‘பசி போச்சா’

‘அதிகமாயிருச்சு’

‘சீக்கிரம் வாப்பா’

‘நானா பிடிவாதம் பிடிக்கறேன்’

‘ஹார்ன் சத்தம் கேட்குது’

‘ஆங்.. கொஞ்சம் நவுருது’

‘வந்துரு..வந்துரு..’

‘கிளியர் ஆயிரும் போல.. அப்புறம் மெசேஜ் பண்றேன் டா’

சர சரவென வழி கிடைத்த ஜோரில் வாகனங்கள் விரைந்தன. அவனது பைக்கும்..

அரைமணியில் வீட்டுக்கு வந்து விட்டான். அழைப்பு மணி அடிப்பதற்குள் அவளே கதவைத் திறந்து விட்டாள்.

டைனிங் டேபிள் மீது சுடச் சுட காபி.

‘புஜ்ஜி..’

அவள் கையில் கைபேசி. ஏதோ மெசேஜ் அடித்தாள்.

‘நல்லா பேசிகிட்டு இருந்தோம்ல..’

அருகில் இழுத்து அவள் கண்களைப் பார்த்தபோது சற்றே கலங்கிய விழிகள். உதடால் கண்களை ஒற்றினான்.

உள்ளிருந்து அம்மா வந்தாள்.

‘தவிச்சுப் போயிட்டாடா.. அவ கவலையை என்கிட்ட சொல்லவும் முடியல.. செல்லை வச்சு பைத்தியம் மாதிரி மெசெஜ் அடிச்சுகிட்டே இருந்தா.. அவளுக்கு பேச வரலைங்கிற குறை இன்னிக்குதான் எனக்கே கஷ்டமா இருந்ததுடா’

இங்கிதம் புரிந்தவளாய் அம்மா நகர்ந்து போக.. உதட்டசைவில் ‘புஜ்ஜி’ என்று புரிந்து கொண்டு..

ஒரு கதகதப்பான காற்று தழுவிக் கொண்டு போன பிரமை அவனுக்கு..

– பெப்ரவரி 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *