பிடி 22

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 23,253 
 
 

வசந்த் வெள்ளைத் தடியைத் தட்டித் தட்டித் தட்டுத் தடுமாறி பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்த போது அநேகமாய் அங்கே வேறு யாருமில்லை.

“ஹலோ, ஹலோ” என்ற அவன் குரலுக்கு பதில் குரல் எதுவுமில்லை. சாலையில் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகக் கார்களின் ஓசைகள்.

அவனுடைய உலகம் ஓசையும், மணமும், தொடுதலும்தான். வட்டம் சதுரம் எல்லாம் ஆட்காட்டி விரலால் தொட்டறிந்தவை. அருகில், அருகாமையில் எல்லாம் அவனுக்கு சப்தங்களின் அளவுகள்.

பிறர் உலகத்தை அவன் பார்த்ததில்லை. அம்மா அப்பா என்றிருந்தால் எப்படி? வண்ணங்கள் தெரிந்தால் எப்படி? ஒன்றும் தெரியாது. அதனால் அவனுக்குக் குறையொன்றுமில்லை. விடுதியில் வளர்ந்தவன். பரெய்லியில் கற்றவன். ஸ்காலர்ஷிப் கிடைத்து அமெரிக்கா வரை வந்து விட்டான். பார்வையற்றோருக்கான உபகரணங்கள் வடிவமைக்கும் ஆராய்ச்சி சாலையில் வேலையும், பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது. கிடைக்கிற சம்பளத்தில் செலவு போக எல்லாப் பணத்தையும் தன்னை வளர்த்த விடுதிக்கு அனுப்பி விடுவான்.

ஷூ ஓசை கேட்டது. யாரோ அருகில் வந்து நிற்கிறார்கள். மேலும் சில காலடி ஓசைகள். ஒரு பஸ் வரும் நேரம் நெருங்கி இருக்க வேண்டும். பேச்சுக் குரல், பர்ஃப்யூம் மணம் எல்லாம் வைத்து இரண்டு ஆண்கள், ஒரு பெண் அங்கே வந்து நிற்பதாய் அநுமானித்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ. லீஸ் பர்க் போகிற பஸ் வந்தால் சொல்ல முடியுமா?” மையமாய்க் கேட்டு வைத்தான்.

“ஷ்யூர்.” என்று பெண்ணின் பதில் குரல் கேட்டது. குரலின் தன்மையை வைத்து அவளுக்கு முப்பது வயதிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

இப்படி அநுமானித்து அநுமானித்தே அவன் பொழுதுகள் போய்க் கொண்டிருக்கின்றன. எப்போதோ கேட்ட, கேட்டவுடன் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொண்ட இந்தப் பழைய பாடலே அவனுக்குள் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும். ‘இது இரவா, பகலா?’ என அநுமானிக்கிற இந்தப் பெண்ணுக்கு கிடைத்த ஆணைப் போல தனக்கும் ஒரு பெண் எப்போதாவது கிடைப்பாளா?

பஸ்ஸின் ராட்சஸ ஓசை கேட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அவன் தோளைத் தட்டி, “ஹியர் ஈஸ் யுவர் பஸ்!” என்றாள்.

வசந்த் அவசரமாய் எழுந்தான்.

பிரம்புத் தடியைத் தட்டித் தட்டி பஸ்ஸின் அருகில் சென்ற போது – படிக்கட்டு தரைக்கு இறங்கும் ஓசை கேட்டது.

ஏறி ஆக்சசிபிள் இருக்கையில் அமர்ந்த பின் – பஸ் கிளம்பியது. பத்துப் பதினைந்தடி கூட நகர்ந்திருக்காது. ஏதோ கூச்சல் கேட்டது. அதைத் தொடர்ந்து பஸ் நின்று விட –

“டிரைவர், அவர் பையை பஸ் ஸ்டாப்பில் மறந்து விட்டார்.” என்று குரல்.

அதைத் தொடர்ந்து அவன் மடியில் அந்தக் கைப்பையை யாரோ வைத்தார்கள். “பஸ் ஸ்டாப்பில் இருக்கைக்குக் கீழே இந்தப் பையை மறந்து விட்டீர்கள்.”

பையைக் கொடுத்தவர் இறங்கிச் சென்று விட்டாராக இருக்கும். பஸ் கிளம்பி விட்டது.

தன் பேகை பஸ் ஸ்டாப்பில் வைத்த மாதிரி ஞாபகமே இல்லையே! தோளைத் தடவிப் பார்த்தான் வசந்த். அவனுடைய பை இன்னமும் தோளில்தான் இருந்தது. மடியைத் தடவிப் பார்த்தான். புதுசாக இருந்தது. அவன் பஸ் ஸ்டாப்புக்கு வரும் முன்பாகவே யாரோ அங்கே அந்தப் பையை மறந்து விட்டிருக்க வேண்டும். அந்த பென்ச்சின் மேல் அவன் உட்கார்ந்திருந்ததால் அவனுடையது என தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பஸ் கிளம்பி விட்டது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. இறங்கும் போது டிரைவரிடம் கொடுத்து விடலாம்.

பொறுமையாய்க் காத்திருந்தான்.

பல ஸ்டாப்களில் டொங் டொங் என்று மணி அடித்து பஸ் நின்று நின்று சென்றது. வசந்த் எப்படியும் கடைசி ஸ்டாப் வரை செல்ல வேண்டும். அது ஒரு சவுகரியம். யாரையும் கேட்க வேண்டியதில்லை. அமெரிக்க பஸ்களில் ஒவ்வொரு நிறுத்தத்தையும் மைக்கில் அறிவிக்கவே செய்கிறார்கள். இருந்தாலும் அந்தக் கரகர ஓசை எப்போதும் அவ்வளவு தெளிவாய் இருப்பதில்லை. யாரையாவது கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். கடைசி ஸ்டாப் எனும் போது அந்தத் தொல்லை இல்லை. எப்படியும் டிரைவர் இறங்கச் சொல்லி விடுவார்.

அதற்கப்புறம் நடை பாதையில் இரண்டு இடது, ஒரு வலது திருப்பத்தில் அவனுடைய காண்டோமினியம் வந்து விடும். ஐந்து படிகள் ஏறிய பின் எலிவேட்டர். மூன்றாவது மாடியில் இருபத்தைந்து அடிகள் எடுத்து வைத்தால் அவன் அபார்ட்மெண்ட்.

பஸ் கடைசி நிறுத்தத்தைத் தொட்டதும் – இறங்கும்போது, “ஹேவ் அ நைஸ் ரெஸ்ட் ஆஃப் தி டே.” என்று வாழ்த்திய டிரைவரின் திசையை நோக்கி அந்தப் பையை நீட்டினான் வசந்த்.

“இது என்னோட பை இல்லை. தவறுதலா என் கிட்டே தந்திருக்காங்க. இதை நீங்க உரியவங்க கிட்டே சேர்ப்பிக்க முடியுமா?”

“ஓ… ஸாரி… ஐ கான்ட் டேக் திஸ் ஃபார் செக்யூரிட்டி ரீஸன்ஸ்.”

தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை நறுக்குத் தெறித்தாற்போல மறுத்து விடுவதில் இவர்களுக்கு இணையில்லை.

இந்த அமெரிக்காவில் எல்லாமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான். யாரும் யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருப்பதில்லை. வற்புறுத்துவதுமில்லை. அதனால் பலனில்லை. பிச்சைக்காரன் கூட உரிமையாய், “எனக்குப் பணம் கொடு அல்லது டிஃபன் வாங்கிக் கொடு.” என்று படு கெத்தாகத்தான் கேட்பான். அம்மா, தாயே என்ற கெஞ்சல் இல்லை.

வசந்த் அந்த அநாமதேய கைப்பையுடன் பஸ்ஸை விட்டு இறங்கினான்.

அந்த பஸ் ஸ்டாப்பில் நாளைக்கு ஒரு அறிவிப்பை ஒட்டி வைக்கலாம் என்று முடிவு செய்தான். அறிவிப்பைப் பார்த்து பையின் உரிமையாளர் தொடர்பு கொள்ளக் கூடும்.

காண்டோமினியம் நோக்கி நடக்கையில் இன்னொரு யோசனை தோன்றியது. நுழைவாயிலில் இருக்கும் ஹெச் ஓ ஏ அலுவலகம் திறந்திருந்தால் மேரி ஆன் என்னும் மூதாட்டி இருப்பாள். அவளிடம் பேகில் என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொல்லலாம்.

மேரி ஆன் இருந்தாள்.

அது லெதர் பை என்றாள். பையின் மேல் Gift to Angela என எழுதியிருப்பதாகச் சொன்னாள். உள்ளே நிறைய போஸ்ட் கார்டு சைஸ் ஃபோட்டோக்கள். நெருக்கமாக ஓர் இளம்பெண்ணும், ஒரு கட்டுமஸ்தான வாலிபனும். அந்தப் பெண்தான் ஏஞ்சலாவாக இருக்க வேண்டும். அவன் பெயர் மைக் போலிருக்கிறது. மைக் அவளுக்கு எழுதிய காதல் கடிதங்கள். மூதாட்டி சாம்ப்பிளுக்கு சில வரிகளைப் படித்து விட்டு நடுங்கும் குரலில் சிரித்தாள். சின்னச் சின்ன பரிசுப் பொருட்கள் பல.

“இந்தப் பை ஒரு காதல் பொக்கிஷம் வாஸந்த்!” அவனை வாஸந்த் என்றுதான் மேரி ஆன் உச்சரிப்பாள். “இந்தப் பையனின் காதல் ததும்பும் வரிகளையும், அவர்களின் நெருக்கமான ஃபோட்டோக்களையும் பார்த்தால் ஏஞ்சலா இந்நேரம் இந்தப் பையைத் தொலைத்ததற்குப் பரிதவித்துக் கொண்டிருப்பாள்.“

“ஃபோன் நம்பர் ஏதாவது இருக்கிறதா?”

“பையில் இருக்கும் இந்த க்ரீட்டிங் மெயிலில் முகவரி மட்டும் இருக்கிறது.”

வசந்த் ஆர்வமாய்க் கேட்டான். “அட்ரஸ் என்ன மேரி ஆன்?”

அவள் முகவரியைச் சொல்ல – “ஓ.. என் ரிசர்ச் லேபுக்குப் பக்கம்தான். அந்த பஸ் ஸ்டாப்புக்கு அருகில்தான் இருக்க வேண்டும். தாங்க்யூ சோ மச் மேரி ஆன். நாளைக்கு நானே இதை அவளிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.”

அடுத்த நாள் மாலையில் லேபிலிருந்து சற்று சீக்கிரமே கிளம்பி விட்டான். முகவரியை விசாரித்துக் கொண்டே அந்த கம்யூனிட்டியை அடைந்தவன் – காலிங் பெல்லை அழுத்தி விட்டுக் காத்திருந்தான்.

அவள் இருந்தால் தேவலாம். இல்லை என்றாலும் கதவின் ஓரமாய்ப் பையை வைத்து விட்டுப் போய்விடலாம். எப்படியோ பாரம் குறைந்தால் சரி. ஆளைப் பார்த்துக் கொடுத்து விட்டால் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும். இல்லை என்றால் கொஞ்ச நாளைக்கு இந்தப் பை என்ன ஆனது என்று அவ்வப்போது ஒரு கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.

வசந்த்தின் மனதில் ஓடும் பலவிதமான யோசனைகளை நிறுத்த கதவு திறந்தது.

“ஏஞ்சலா….”

“நான்தான். வாட்ஸ் அப்?” என்றாள்.

நேற்று பஸ் ஸ்டாப்பில் அந்தப் பை கிடைத்த விபரத்தைச் சொன்னான் வசந்த். அவள் அப்படியே மகிழ்ச்சியில் கூக்குரலிடப் போகிறாள் என்றுதான் எண்ணினான். ஆனால் அவளிடமிருந்து ஓர் அசுவாரஸ்யமான பதில் வெளிப்பட்டது.

“ஓ… யூ கேம் ஹியர் ஆல் தி வே டு ஹேண்ட் ஓவர் திஸ் டு மி? இது குப்பைத் தொட்டியில் வீசி எறிய வேண்டிய பை. ஐ டோண்ட் நீட் இட்.”

குரலில் வண்டி வண்டியாய் வெறுப்பு. அவள் அந்தப் பையை வாங்கிக் கொள்ளக் கூட இல்லை.

சில விநாடிகளுக்கு வசந்த் குழப்பமாய் நின்றான். ஒன்றும் புரியாமல் கைத்தடியைத் தட்டிய படியே திரும்ப முயன்ற போது – அவள் அவனைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்க வேண்டும்.

“வெயிட். ஐயாம் ரியலி ஸாரி. பார்வைக் குறைபாட்டுடன் இவ்வளவு சிரத்தை எடுத்து இதை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்க முயன்ற உங்களைப் பாராட்டி நன்றி சொல்லி இருக்க வேண்டும். என்னுடைய பிரச்சனை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தப் பைக்குள் இருப்பது முறிந்து போன என் காதல். ஃபோட்டோக்களில் சிரிக்கிறானே… திமிர் பிடித்த மைக்… இந்தப் பரிசுகள், இந்தக் கடிதங்கள் எதுவுமே உண்மை இல்லை. ஆறே மாதங்கள்தான். ஒரு சின்ன தீ விபத்தில் எல்லாமே மாறி விட்டது. என் முகத்தில் திட்டுத் திட்டாய் சில தழும்புகள். நான் வசீகரம் அற்றவளாகி விட்டேன். நேற்றுதான் ஒரு முடிவுக்கு வந்து அவன் எனக்குக் கொடுத்த பரிசுகள், கடிதங்கள், வாழ்த்துகள், புகைப்படங்கள் எல்லாவற்றையுமே இந்தப் பையிலே போட்டு திருப்பிக் கொடுத்து குட் பை சொன்னேன். அவன் இதைச் சீந்தக் கூட இல்லை என்று நினைக்கிறேன். பஸ் ஸ்டாப்பில் எறிந்து விட்டுப் போயிருக்கிறான். உங்களைப் புண் படுத்தாமலிருக்க இதை வாங்கிக் கொள்கிறேன்”

வசந்த், “ஸாரி” என்றான். “கெட்டுப் போன நினைவுகளை உன்னிடம் கொண்டு வந்து திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை. அதுதான் இதன் இடம் என்றால் நானே இதைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விடுகிறேன்.” சொல்லிக் கொண்டே பையுடன் நகர்ந்தவன் சற்றே தயக்கமாய்த் திரும்பி நின்றான்.

“ஏஞ்சலா, உன் குரல் மிக வசீகரமாக உள்ளது.”

– 30 டிஸ 2015(நன்றி: http://www.sathyarajkumar.com/)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *