36,பெருமாள்புரம்.

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 13,361 
 

ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டுமென தோன்றியது.கம்பெனியில் மீட்டீங் வைத்து அவன் சந்திக்க வேண்டிய வியாபார நபர்களைக் குறித்துக் கொடுத்தார்கள். எதுவுமே மனசில் இல்லை.வீட்டுக்கு அருகாமையில் உள்ள ரவுண்டானாவும் செல்லப்பா பரோட்டா கடையும் இப்போது இருக்குமா என்று தோன்றிற்று.

அந்த ரவுண்டானவை சுற்றி தான் இவன் தொட்டு பிடித்து விளையாடியிருக்கிறான்.அப்போதெல்லாம் மணி வீடு தான் பக்கத்து வீடு. ஒருதடவை அப்படி ஓடி ஓடி விளையாடிய போது தான் மணி அக்கா வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.அதற்குப் பிறகு மணி அம்மா பசங்கல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடாதேனு அவனிடம் சொல்லி விட்டதாக மணி சொன்னான். அம்மாவும் மணி அம்மாவும் காப்பிப் பொடி,மசாலா சாமான் பகிர்ந்து கொள்வது என்று ரொம்பவும் நெருக்கமாக இருந்தார்கள்.அம்மா அந்த மாதிரி நேரங்களில் பாட்டி பற்றியும் சொல்லி மாய்த்துக் கொள்வாள்.

“சரியா பன்னென்டு மணிக்கு சாப்பாடு வேணும்னு சொல்றாங்க..நான் என்ன தான் செய்ய முடியும் மணிம்மா…”என்றாள். மணி அம்மாவும் அம்மாவுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்வதுண்டு. பிள்ளைகளை அனுப்பி விட்டு எப்பவாது இருவரும் 11:30 ம்ணி காட்சிக்குப் போய் காசி விலாசில் பிரியாணி சாப்பிட்டும் வருவதுண்டு.மடியில் படுத்த போது அம்மாவின் கையில் பிரியாணி வாசம் வந்து இவன் “என்னை விட்டுட்டு போயிட்டல்லா..”என்று அழுதிருக்கிறான். அதற்காகவே அம்மா ஒரு தடவை இவனை ஐயப்பனுடன் சினிமா பார்க்க அனுப்பி இருக்கிறாள்.

ஐயப்பன் சினிமா கதைகள் சொல்வது மிகவும் பிரசித்தி வாய்ந்தது. கதை மட்டும் சொல்ல மாட்டான். டாடெயிங்,டாடெயிங் என்று டைட்டில் முதல் ஒவ்வொரு சீனுக்கும் ம்யூசிக் வேறு போடுவான்.ஐயப்பனின் அப்பா பெருமாள்புரத்தில் கடை வைத்திருந்தார். அதற்கடுத்தாற் போல் பாய் கடை. அப்புறம் செட்டியார் ஹோட்டல். அதுக்கப்புறம் நாடார் கடை. நாடார் கடையிலும் பாய் கடையிலும் அவ்வளவாக வியாபாரம் இருக்காது.அதனாலேயே பெரிதாக சரக்கும் இருக்காது. மத்தியான நேரம் ஐயப்பன் அப்பா கடையைப் பூட்டி விடுவதால் பாயின் கடையில் வியாபாரம் நடக்கும். அப்போதெல்லாம் அவரின் மனைவி தான் கடையைப் பார்த்துக் கொள்வாள். அமமாவுக்கு பாய் கடையில் வாங்கும் தேங்காயைப் பிடிக்காது.”அங்க வாங்காதீங்கனு எத்தன மட்டும் சொல்றது” என்று அப்பாவிடம் சலித்துக் கொள்வாள்.

இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னால் ஓச்சாங் குளத்துக்குப் பக்கம் ஒரு வீட்டில் தான் குடியிருந்தார்கள். அந்த வீட்டு ஓனர் பயங்கர பிரச்னைக்காரர்/ எங்கேயாவது வெளியே போயிருந்தால் கூட சுவர் ஏறிக் குதித்து தென்னை மரத்திலிருக்கும் தேங்காயெல்லாம் பறித்து விட்டுப் போய் விடுவார்.அது இவனின் அப்பாவிற்குப் பிடிக்காது.அதை விட அவர் அப்போது வாங்கிய சம்பள்ம் மிக குறைவு. 1000 ரூபாய் தான். அதிலேயே குடும்ப செலவு மட்டுமல்ல, அத்தையின் கல்யாணத்துக்கு வாங்கியிருந்த கடனெல்லாம் அடைக்க வேண்டும்.

அம்மா தாத்தாவும் செலவாளி.அதனாலேயே ஏகப்பட்ட கடஙள் வைத்திருந்தார்.அதில் சிலதுக்கு அப்பா ஷுயரிட்டி போட்டிருந்தார். அம்மாவுக்கு இரண்டு தங்கைகள். ஒருத்தரை விக்கரமசிங்கபுரத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்.அந்த சித்தப்பாவுக்கும் கடைசி சித்திக்கும் ஆகாது. சுமுகமாக வெளியே தெரியும் உறவு கேரம்,சீட்டு விளையாடும் போத்கு பிய்த்துக் கொள்லும். சித்தப்பா தோற்பது போலொரு நிலை ஏற்படும் போது கேரம் போர்டை தூக்கி தூர எறிந்து விடுவார்.அவரின் கோபம் ஒரு நிலையில் இருக்காது.திடுதிடுப்பென்று அவர் மதுரா கோட்ஸில் மிகப் பெரிய வேலைக்கு வந்தார். அப்படி உழைப்பார் என்று குடும்பத்தினர் எல்லாருமே சொல்வார்கள். அப்பாவுக்குத் தெரிந்த நண்பரின் மகனுக்குக் கூட வேலை வாங்கிக் கொடுத்தார். அவரைப் போல உழைத்தால் முன்னுக்கு வரலாம் என்று இவனுக்கு அப்போதெல்லாம் தோன்றும்.
இந்த வீட்டுக்கு வந்தப் பிறகு தான் கடைசி சித்திக்கு கல்யாணம் ஆனது. சொந்தத்தில் மாப்பிள்ளை தான். தாத்தா கல்யாணத்துக்காக மேலும் கடன் வாங்கியிருந்தார். அப்பா தான் ஒரு சிலதுக்கு பணம் கட்ட வேண்டி வந்தது. அத்தைக்கு ஆகும் செலவுகளுக்கு கணக்குப் பார்க்கும் அம்மா இந்தைப் பற்றியெல்லாம் பேசவே மாட்டாள். தாத்தாவும் அம்மாச்சி இறந்தப் பிறகு மூன்று மகள்களின் வீட்டிம் மாறி மாறி இருந்தார். மாமா சரியில்லை. சிறுவயதிலேயே குடிப்பழக்கம் தொத்திக் கொண்டது.மாமா சரியாக படிக்காததால் ஒரு வாத்தியார் அவரை அதிகமாக திட்டினார் என்றும் அதானாலேயே போதை பக்கம் போனார் என்றும் சொல்வார்கள்.

மதுரை பஸ் ஸ்டாண்டில் டிக்கெட் போடும் வேலையில் இருந்தார். கூட அம்மாச்சியின் சித்தி இருந்தார். அவர் கல்யாணம் பண்ணிக் கொள்லாததால் அம்மாச்சி வீட்டிலேயே இருந்து விட்டார். பெரிய ஆச்சி சமையல் புத்த்கமெல்லாம் எழுதுவார்.

தாத்தாவுக்கும் மாமாவுக்கும் ஏற்படும் தகராறுகளால் தாத்தா எப்பவாது அங்கே போவார். தாத்தா ராத்திரிப் படுக்க தலைக்கு தலையணை வைத்த அடுத்த நொடி இரண்டாவது சித்தப்பா தலையணையை உருவியிருக்கிறார். தாத்தாவுக்கு இது பெரிய மானப் பிரச்னையாகி விட உடனே நடுராத்திரி கிளம்பிப் போய் விட்டார்.
ரொம்ப மாதங்களாக தாத்தா எங்கே போனார் என்றே தெரியவில்லை. இதற்கிடையில் அப்பாவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.அம்மாவுக்கு கொஞ்சம் சுதந்திரம் வந்தாற் போலிருந்தது இப்போது. அப்புறமாக யாரோ ஒருவரின் தகவலால் தாத்தா மணப்பாறையில் இருப்பதாகவும் அங்கே அவர் நண்பரின் வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்தது. கடைசி சித்தி விழுப்புரத்தில் இருந்ததால் போய் பார்த்துக் கூட்டி வந்தாள். தாத்தாவை மறுபடி அவர் நண்பர் வர சொல்லி இருப்பதாக கடிதம் வந்து தாத்தாவும் இங்கு இருக்க போர் அடிக்கிறதென்றும் அங்கு நண்பரின் பிஸ்னஸ பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி கிளம்பிப் போனார்.

அந்த சமயத்தில் மாமாவுக்கு சிவந்திபுரத்தில் ஒரு பெண் பார்த்து எல்லாரும் கல்யாணம் செய்து வைத்தார்கள். மாமா அப்படியும் குடிப்பழக்கத்தை விடவில்லை.சித்தியும் தையல் வேலைப் பார்த்து வருடத்திற்கு ஒரு பிள்ளையும் பெற்றுக் கொண்டாள்.தாத்தா கல்யாணத்துக்கு முன் தினம் வந்து விட்டு அப்புறம் அன்று இரவே கிளம்பி விட்டார். இவன் அம்மா தான் எல்லாமே பார்த்து பார்த்து செய்தாள். அன்று தாத்தா பற்றி இவனது குடும்பத்தாரே வித்தியாசமாக பேசிக் கொண்டார்கள்.”மணப்பாறைல அந்தம்மா பின்னாலேயே அலையுறார்”என்று கடைசி சித்தப்பா சொன்னார். அதற்கு எல்லாருமே சிரித்தார்கள்.மாமா ஏதோ ஒரு பாட்டை கிண்டலாக அப்போது பாடியது இவனுக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது .அதை ஏன் யாருமே சீரியசாக யாருமே எடுத்துக் கொள்ளவில்லை என்று இன்று வரை இவனுக்குப் புரியவுமில்லை. அப்புறமாக தாத்தா மணப்பாறையிலிருந்து வந்தப்பிறகு,”அதுல தான் ஏதோ பிரச்னையாயிருக்கும்”என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.

இங்கு வந்தப்பிறகு தாத்தா அவர் நண்பரோடு சேர்ந்து கல்யாண புரோக்கர் வேலைப் பார்த்தார்.அது குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை. அம்மா அதை நாசூக்காக சொன்னதும் தாத்தா வீட்டுக்கு வராமல் வரன் பார்க்கும் இடத்திலேயே தங்க ஆரம்பித்தார்.அப்பா இரண்டு மூன்று முறை போய் பார்த்தும் தாத்தா வரவில்லை.அப்புறமாக திடீர் என்று தாத்தா ஊரில் தூரத்து சொந்தக்காரப் பெண்மணி ஒருவரின் வீட்டில் தங்கியதாக பேச்சு வந்தது. எப்பவாது இங்கும் இவன் வீட்டுக்கும் வந்து போவார். ஒரு மழை நாளின் இரவுப் பொழுதில் அப்பா அதிகமாக பூச்சி விழுகிறதென்று வெளிவாசல் விளக்கை சிக்கிரமே அணைக்க சொன்னார்.ஒரு ஒன்பது ஒன்பதரை மணிக்கு கதவு தட்டப்பட்டது. இவன் தான் கதவைத் திறந்து பார்த்தான்.தாத்தா இப்போது இருக்கும் பெண்மணியின் மகளும் மருமகனும் நின்றிருந்தார்கள்.

“உட்காருங்க”என்றார் அப்பா சட்டையை மாட்டினப் படி.”சாப்பிடுறீங்களா?”

“வேணாம் வேணாம் “என்றவர்கள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள்.அப்பா “சொல்லுங்க…”என்றார்.”இல்ல..தப்பா நினைக்கக்கூடாது…”என்றார் அந்தப் பெண்.
“உங்கப்பா இப்ப எங்க வீட்டுல இருக்காங்க. தப்பில்ல..ஆனா வீட்டுக்கு வர்றவங்க தப்பா நினைக்கிற மாதிரி…”என்றதும் அம்மா,,”நாளைக்கே இங்க வர சொல்லிடுறோம்.”என்றாள்.அவர்கள் போனப் பிறகு விழுப்புரம் சித்தி பக்கத்து வீட்டுக்குக் கூப்பிட்டு விஷயத்தை சொன்னாள் அம்மா. சித்தி அவள் வீட்டுக்கு கூப்பிட்டுக் கொள்வதாக சொன்னாள்.இங்கிருந்தால் மறுபடி கல்யாண வரன் கள் பார்ப்பார் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.

மறுநாள் காலைலேயே அப்பா அவர் ராஜ்தூத்தில் போய் தாத்தாவைக் கூட்டி வந்தார்.அன்று சாயங்காலமே மதுரை போய் அங்கிருந்து விழுப்புரம் போய் விட்டு விட்டு உடனே அப்பா திரும்பி விட்டார்.தாத்தாவைக் கைப்பிடித்து ஸ்கூலுக்கு கொண்டுப் போய் விட்ட மாதிரியிருந்தது இவனுக்கு.ஆனாலும் தாத்தாவால் அந்த ஹாஸ்டலில் இருக்க முடியாது என்றே தோன்றிற்று.அதே போல் சித்திக்கும் தாத்தாவுக்கும் எப்போதும் பிரச்னையாகவே இருந்தது. தாத்தா எப்போதும் வெளியேவே உட்கார்ந்திருப்பதாகவும் சாப்பிட அடம் பிடிப்பதாகவும் சித்தி கடிதமெழுதினாள். மாமாவும் சிவந்திபுரத்துக்கே வந்து விட்டதால் பெரிய ஆச்சியும் இரண்டாவது சித்தியின் வீட்டுக்கு வந்தார். அத்தைக்கும் பெரியாச்சிக்கும் நிறைய பிரசனைகள் வந்ததாய் பிறகாய் அம்மாவும் சித்தியும் பேசிக் கொண்டார்கள்.

இப்போது யோசித்தால் தாத்தாவும் பெரியாச்சியும் பிற்கால வாழ்க்கையில் பந்தாடப்பட்டதாகவே தோன்றியது. ஆனால் அந்த காலகட்டத்தில் இவனால் அப்படி நினைக்க முடியவில்லை. பெரியாச்சியை இங்கே வந்து விடுவதாக மதுரை சித்தி சொன்ன போது இவன் தான் அம்மாவிடம் சண்டைப் போட்டான்.”இது கூட உந்தங்கச்சியால பாத்துக்க முடியாதா ? உங்கப்பாவோட கடனெல்லாம் கட்டி முடிக்க எங்கப்பா தேவை.இதுனாச்சும் செஞ்சா என்ன?”

பெரியாச்சி ஒரு தடவை இங்கே வந்தப் போது,”கடவுள்ட்ட என்னை சீக்கிரம் எடுத்துக்கனு வேண்டிக்க” என்று சொன்னப்போது இவனுக்குள் ஏதோ புரட்டிற்று.பிறகு பெரிய ஆச்சியை மதுரையில் உள்ள ஒரு ஹோமில் சேர்த்தார்கள். அவரின் இறுதி நாட்களில் சுகமில்லாமல் போய் தாத்தா தான் கவனித்துக் கொண்டார்.ஆச்சி இறந்தப்பிறகு மறுபடியும் ஊருக்கு வந்து மறுபடியும் அதே வரன் பார்க்கும் இடத்தில் தங்கி அதே வேலையைப் பார்த்தார்.அது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவே இல்லை. எங்கேயாவது மார்க்கெட்டில் தெரிந்தவர்கள் பார்த்து “உங்க மாமா எ பையனுக்கு ஒரு இடம் சொன்னார்”என்று சொல்வது அப்பாவுகுப் பிடிக்கவில்லை.இதற்கிடையில் தாத்தா அவர் கடன் அடைக்க பழைய நிலம் ஒன்றை விற்பதாக இருந்தார். கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் 36,பெருமாள்புரத்தில் வாழ்ந்த அப்பாவுக்கு ஒரு வீடு கட்டும் ஆசை வந்தது.தாத்தாவிடமிருந்து அந்த நிலத்தை வாங்கினார்.இது கேள்விப்பட்டதும் மாமா வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக கடிதம் எழுதினார்.இவனுக்கு ச்சீ என்றாகி விட்டது.தாத்தாவைக் கூட்டி வைத்து பேசி மாமா வீட்டுக்குப் பேச அப்பா அனுப்பினார். பத்திரம் பதிவு செய்து விலைக்குத் தான் நிலம் வாங்குவதாக அப்பா செய்து கொண்டார்.மாமா வீட்டுக்குப் போய் தாத்தா யாருக்கு ஆதரவாக பேசினார் என்று எல்லாருமே சந்தேகப்பட்டார்கள்.

ஒரு நாள் காலையில் தாத்தா ரொம்பவும் சுகமில்லாமல் இருப்பதாக போன் வந்து அப்பா போய் ஆட்டோ வைத்து கூட்டி வந்தார். தாத்தா ரொம்ப இயலாமல் இருந்தார். அவரைக் குளிப்பாட்ட ஆள் வைத்தார்கள். உள்ரூமில் எப்போதும் படுத்தபடி இருப்பார்.அப்புறமாக அவரைப் பார்க்க யாருக்கும் முடியாததால் அவரையும் பெரியாச்சி இருந்த ஹோம்லயே சேர்த்தோம். அப்போது தான் அவருக்கு மூளை டி.பி இருப்பதாக சொன்னார்.

இரண்டு மூன்று மாதத்திலேயே தாத்தா இறந்துப் போனார்.அவரின் உடலைக் கூட வீட்டுக்கு எடுத்துப் போக முடியாது என்று மதுரை சித்தி சொல்லி விட்டார்.ஆஸ்பத்திரியின் ஒரு சர்ச்சுக்குள் உடலை வைத்து எடுத்து விட்டார்கள். தாத்தா அந்த காலத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தப் போது வீட்டுக்கு வருபவர்களுக்கு வெறும் பாலில் போர்ன்விட்டா போட்டுக் கொடுப்பாராம். திருவைக்குண்டத்தில் இருந்த போது இவன் லீவுக்குப் போகும் போது கடைசி சித்தியும் இவனும் மாட்டு வண்டியில் வசந்த மாளிகை படம் பார்த்ததெல்லாம் இவனுக்கு ஞாபகம் வந்தது.

இன்று அப்பா வீடு கட்டியிருப்பது தாத்தாவிடம் வாங்கிய நிலத்தில்.ஆனாலும் அந்த 36,பெருமாள்புரத்தில் வாழ்ந்த வாழ்க்கை தந்த அனுபவங்கள் போலெ ங்கேயும் வாய்க்கவில்லை.இவனுக்கும் குடும்பத்துக்குமன உறவு இவன் கல்யாணத்துக்குப் பிறகாய் துண்டிக்கப்பட்டு விட்டது. இவன் அப்பா ஒரு கீழ்சாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்ததை ஒத்துக் கொள்ளவே இல்லை.

ஆபிஸ் மீட்டிங் முடிந்து ஹோட்டல் போய் ஒரு குளியல் போட்டு ஒரு ஆட்டோவில் ஏறினான்.பெருமாள்புரம் ரவுண்டானாவில் இறங்கி வீட்டைப் பார்த்தான். பச்சை நிறம் மங்கி முன் ஜன்னல் கம்பிகள் வெளுத்து நின்றது வீடு.சுத்தி வர காம்ப்ளெண்ட் சுவரெல்லாம் கட்டியிருந்தது.பழைய கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்து போயின.வீட்டிற்கு முன் அப்பா, அம்மா,தாத்தா,பெரியாச்சி,சித்தி,சித்தப்பா எல்லாருமே நிற்பது போலிருந்தது. இவன் இருட்டுக்குள் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்தான்.சூழ்ந்து கிடந்த இருளுக்குள் வீட்டைத் தாண்டி நடக்கையில் ஒரு வாழ்க்கையைக் கடப்பது போல கால்கள் நடுங்கினப் படி இருந்தது இவனுக்கு.

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *