பரிகாரத் தொழில்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 9,984 
 

அந்த அறைக்குள் ஒரு அவஸ்தையான அமைதி பிடிவாதமாய் அமர்ந்திருக்க பிச்சுமணி தன் தொண்டைச் செருமலில் அதை உடைத்தார்.

தலை தூக்கிப் பார்த்த மகளின் அருகே வந்து அவள் தோளைத் தொட்டு, ‘த பாரும்மா… நான் மற்ற அப்பாக்களைப் போல காதலுக்கு எதிரி அல்ல… காதலை ஆதரிப்பவன்தான்… அது உண்மையான…நேர்மையான… ஏற்றுக் கொள்ளும் வகையிலான காதலாய் இருக்கும் பட்சத்தில்…”

‘அப்பா… எங்க காதலும் உண்மையான… நேர்மையான… காதல்தான் அப்பா” சவிதா மெல்லிய குரலில் சொல்ல,

‘ஆனால்… ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லையேம்மா”

‘ஏன்?… ஏன்? அப்படிச் சொல்றீங்க?”

‘பின்னே என்னம்மா?… ஒரு தொழிலதிபரோட மகளான நீ… ஒரு சாதாரண கல்யாணப் புரோக்கரைக் காதலிக்கறேன்னு சொன்னா… அதை எப்படிம்மா ஏத்துக்க முடியும்?”

‘அப்பா… நான் எப்படி ஒரு தொழிலதிபரோட மகளோ… அதே மாதிரி… அவரும் சிட்டியிலேயே பெரிய… புகழ் பெற்ற ஒரு லாயரோட மகன்தான்”

‘அவரோட அப்பாதான் லாயர்… இவரு சாதாரண கல்யாண புரோக்கர்தானேம்மா?”

‘ப்ச்…திரும்பத் திரும்ப கல்யாண புரோக்கர்னு சொல்லாதீங்கப்பா…அவரு பெரிய லெவல்ல திருமணத் தகவல் நிலையம் வெச்சு நடத்திட்டு வர்றார்… அவருகிட்டயே மூணு பேரு வேலை பார்க்கறாங்க”

அவள் சொன்னதைக் கேட்டு மெலிதாய் முறுவலித்த பிச்சுமணி ‘இங்க பாரும்மா… இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை… அவரு எம்.ஏ. படிச்சிருக்காருன்னு சொல்றே… அவரை நேர்ல வரச் சொல்லு… நான் பேசிப் பார்த்திட்டு… நேர்மையானவராயிருந்தா… நம்ம பிளாஸ்டிக் யூனிட்டுக்கு ஜெனரல் மேனேஜராப் போட்டுடறேன்… கொஞ்சமாவது அந்தஸ்தா இருக்குமில்ல?”

கேட்டுக் கொண்டிருந்த கவிதா திடீரென்று அழ ஆரம்பிக்க,

‘அட என்னம்மா?… எதுக்கு இப்ப அழறே?… நான் எதுவும் தப்பாச் சொல்லிடலையே…”

‘அதில்லைப்பா… நீங்க இப்பச் சொன்னதை நான் ஏற்கனவே அவர்கிட்டப் பேசிட்டேன்… ஒத்துக்க மாட்டேனுட்டார்… அந்தத் திருமணத் தகவல் நிலையத்தை ஒரு போதும் விடவே மாட்டாராம்…”

மேவாயைத் தேய்த்தபடி யோசித்தார் பிச்சுமணி.

; ‘சவிதா… நான் வேணா அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா?”

அவள் ‘சரி”யென்று தலையாட்டி விட்டு, ‘அப்பா… ஒரு வேளை அவரு உங்ககிட்டேயும் மறுத்துப் பேசிட்டா… நீங்க கோபப்பட்டு ஏதாவது முடிவெடுத்திடாதீங்கப்பா” அழுதாள்.

மகளின் அழுகையைக் காணச் சகியாதவராய் அங்கிருந்து நகர்ந்தார் பிச்சுமணி.

மறுநாள் மாலை ஆறு மணியிருக்கும், அந்தத் திருமண தகவல் நிலையத்தின் விசிட்டர்ஸ் சோபாவில் ராஜேசுக்காக காத்திருந்தார் பிச்சுமணி.

ஆபீஸிலிருந்த அந்தச் சிறுவன் ‘சார்… கொஞ்சம் பொறுத்துக்கங்க சார்… எப்படியும் இன்னும் அஞ்சு நிமிஷத்துல எங்க சார் வந்துடுவார்” என்று முப்பதாவது தடவையாகச் சொல்லி விட்டு தன் மொபைல் போனைக் குடைவதில் மும்முரமானான்.

சரியாக ஆறரை மணிக்கு உள்ளே வந்த ராஜேஸ் விசிட்டர்ஸ் சேரில் அமர்ந்திருந்த சவிதாவின் தந்தையைக் கண்டதும் முதலில் துணுக்குற்று பிறகு சுதாரித்துக் கொண்டு ‘சார்…வாங்க சார்… ஸாரி… கொஞ்சம் வெளி வேலை… அதான்”

‘இட்ஸ் ஓ.கே” என்றபடி எழுந்தவரைத் தன் பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்று தன் மேஜையின் எதிரில் அமர வைத்தான்.

உள்ளே வந்த பையனிடம் ‘டேய்…ரெண்டு காபி” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டு ‘சொல்லுங்க சார்” என்றான் ராஜேஸ்.

‘தம்பி… நான் ஒரு பிசினஸ் மேன்… எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது… எதுவாக இருந்தாலும் வெட்டு ஒண்ணு துண்டு; ரெண்டுன்னு பேசறவன் நான்… அதனால நேரடியாவே விஷயத்துக்கு வந்திடறேன்” என்று பீடிகையுடன் ஆரம்பித்துத் தன் எண்ணத்தைத் தெளிவாய் விளக்கி முடித்தார் பிச்சுமணி.

தன் மகளின் காதலையும் உடைக்க விரும்பாமல் அதே நேரம் இந்தப் பாழும் சமூகத்திற்காக வரப் போகும் மருமகனின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டவும் முயலும் அந்த தந்தையின் உளப் பாங்கினை சிறிதும் பிசகின்றிப் புரிந்து கொண்ட ராஜேஸ்,

‘அய்யா… ஒரு தந்தையின் நிலையிலிருந்து நீங்க பேசிய இந்தப் பேச்சையெல்லாம் முழுமனசோட நான் ஒப்புக்கறேன்… ஏத்துக்கறேன்… அதே நேரம்… ஒரு மகனா இருந்து நான் செய்ய வேண்டிய கடமையா நெனச்சுத்தான் நான் இந்த வேலையையே செஞ்சிட்டிருக்கேன் அதை நீங்களும் புரிஞ்சுக்கணும்”

அவர் புரியாமல் நெற்றி சுருக்க,

‘ஆமாம் சார்… உங்களுக்கு எங்க அப்பா… பிரபல லாயர்… சிவஞானத்தைத் தெரியும்னு நெனைக்கறேன்…அவர் இதுவரை எடுத்துக்கிட்ட கேஸ்ல கிட்டத்தட்ட எண்பது சதவீதம்… விவாகரத்துக் கேஸ்கதான்… சொல்லப் போனா… எனக்குத் தெரிஞ்சே அவர் சுமார் இருநூறு…முன்னூறுக்கும் மேலான விவாகரத்துக்களை வாங்கிக் கொடுத்திருக்கார்…” சொல்லி விட்டு இரண்டு நிமிடங்கள் நிறுத்திய அந்த ராஜேஸ், மீண்டும் தொடர்ந்தான்.

‘சொல்லுங்க சார்….இது எவ்வளவு பெரிய பாவம்… குருவிக் கூட்டைக் கலைக்கற மாதிரியான பாவமல்லவா?… புரோகிதர்கள் ஹோமம் வளர்த்து… மந்திரம் ஓதி…சேர்த்து வைக்கற ஜோடிகளை… சட்டத்தின் உதவியோட பிரிக்கறது… என் மனசுக்குப் பிடிக்கலை சார்… ஓ.கே… எல்லாக் கேஸ்களையும் அப்படிச் சொல்ல முடியாதுதான்… ஒரு சில கேஸ்களுக்கு விவாகரத்துதான் சரியான தீர்வாயிருக்கும்… அதை நான் ஒத்துக்கறேன்… ஆனா… என்னைப் பொறுத்த வரை பல கேஸ்கள் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததினால்தான் விவாகரத்தாகின்றன… அதனால தம்பதிகளைப் பிரிக்கற பாவத்தை என் தந்தை தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வர்றதினால… தம்பதிகளைச் சேர்த்து வைக்கற… அதாவது திருமண வரன்களை அமைத்துக் கணவன் மனைவிகளை இல்லற பந்தத்திற்குள் இணைத்து வைக்கற பணியை… இந்தத் திருமண தகவல் நிலையம் மூலமாக நான் செஞ்சிட்டு வர்றேன்..சார்… ஒரு வகைல இதை ஒரு பரிகாரம்னு கூட வெச்சுக்கலாம்”

அவனின் அந்த விளக்கம் மறுப்பேதும் கூற இயலாததாய் இருக்க ‘ஓ.கெ…மிஸ்டர் ராஜேஸ்… உங்க கொள்கையை நான் மதிக்கறேன்… போன நிமிடம் வரை… உயர்ந்த தொழில்களால் மட்டுமே அந்தஸ்து வரும்னு நான் நெனச்சிட்டிருந்தேன்… அப்படியில்லை… எந்தத் தொழில் ஆனாலும் அதைச் செய்கிற விதத்தில்… பார்க்கிற கோணத்தில் அந்தஸ்தைக் கொண்டு வரலாம்னு நீங்க நிரூபிச்சிட்டீங்க…” சொல்லியபடியே அவர் நாற்காலியிலிருந்து எழ,

‘சார்… ராஜேஸ் சார்” வெளியிலிருந்து ஒரு குரல் அழைத்தது.

‘யாரு…கிருஷ்ணசாமி அய்யாவா?… வாங்க!… உள்ளார வரலாம் வாங்க”

வந்து நின்ற பெரியவரின் கையில் ஒரு பழத்தட்டு.

‘என்ன சாமி இதெல்லாம்?” ராஜேஸ் கூச்சப்பட்டுக் கேட்க,

‘சார்… இனி எங்க பொண்ணுக்குக் கல்யாணம் என்பது கனவுல மட்டும்தான்னு தளர்ந்து போயிருந்த எங்களை ஊக்கப்படுத்தி… நொந்து போயிருந்த சமயங்களிலெல்லாம் உற்சாகப்படுத்தி… இப்ப அவளுக்கும் ஒரு நல்ல வரனை ஏற்பாடு பண்ணிக் குடுத்ததோட நில்லாம … நிச்சயத் தேதியையும் குறிச்சுக் குடுத்து… மண்டபத்தையம் புக் பண்ணிக் குடுத்திருக்கீங்களே… நீங்க… நீங்க… எங்க தெய்வம் சார்” வயதில் மிகவும் மூத்தவரான அவர் இளைஞனான ராஜேஸைக் கையெடுத்துக் கும்பிட,

பார்த்துக் கொண்டிருந்த பிச்சுமணிக்கு புல்லரித்தது. தன்னுடைய இந்த ஐம்பதியெட்டு வயது காலத்தில் இதுவரை தன்னை யாரும் அந்த அளவுக்குப் நெகிழ்ந்து பேசி கும்பிட்டதாக ஞாபகமே இல்லை.

‘அப்ப… நான் புறப்படறேன் தம்பி” சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார் பிச்சுமணி.

—– —– —– —– —– ——

வீட்டுக்குள் நுழைந்த அவர் “சவீதா, சவீதா” என்று அழைத்தபடியே போனார்.

அப்பாவின் குரலைக் கேட்ட சவிதா அங்கு வந்தாள்.

‘அம்மா… சவிதா… நான் மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசிட்டேன்மா”

‘என்ன சொன்னாரப்பா… அந்த கல்யாண புரோக்கர் வேலையை விட்டுட சம்மதிச்சிட்டாராப்பா?”

‘இல்லேம்மா… அவர் அதையே தொடர நான் சம்மதிச்சிட்டேன்மா”

அவள் புரியாமல் பார்க்க,

‘என் மாப்பிள்ளை திருமண தகவல் நிலையம் நடத்திட்டிருக்கார் என்பதுதான்மா எனக்குப் பெருமை… ஏன்னா அது ஒரு தொழில் இல்லைம்மா… புண்ணிய காரியம்”

சவிதா முகத்தில் சந்தோஷப் பூக்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *