பனி பொழியும் மலை தந்த ஒரு பதுமை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 18,391 
 
 

குளிர் காலம் முடிந்து மலர்களும் மரங்களும் பூக்க ஆரம்பித்து விட்டன!இந்த சியாட்டில் நகரத்தின் உண்மை அழகு புடமிட்டு தெரியும் நேரம்!கண்ணனுக்கு பொழுது போகவில்லை!அந்த மலையின் முகப்பில் சென்று உருகும் பனிமலையையும் ,தெளிவான நீரோடை ,நீர்வீழ்ச்சிகளையும் பார்க்க ஆசை!

மலை முகப்பு! நிறைய பேர் இருந்தார்கள். மெதுவாக நடந்து அடிவாரத்திற்கு போய்க்கொண்டிருந்தான் . ஒரு கேமரா லென்ஸ் மூடி அவன் முன் விழுந்தது!

ஹலோ! அது என்னுது! உங்க கேமராவைப் பார்க்கிறீங்க!

கண்ணன் மேலே பார்த்தான் ! ஆச்சர்யம் !பனி மலை எதிரொலி போல் தமிழ்!அதை விட தெளிவாக அந்தக் குரல்!

உயரத்திலிருந்து” பதட்டத்துடன் பார்க்காதீங்க! நான் சொன்னது காது கேட்டுச்சா! என்று சொல்லிக் கொண்டே மேல் விளிம்புக்கு வந்து விட்டாள்.

ஐயோ !அப்படி எட்டிப் பார்க்காதீங்க ! நான் எடுத்திட்டு மேல வரேன் ” என்று கண்ணன் கத்தி முடிப்பதற்குள் அவளுடைய கேமரா பையும் கீழே விழுந்தது!

சொல்றதைக் கேளுங்க !எட்டிப் பார்க்காதீங்க !நான் மேல வந்துண்டே இருக்கேன்! என்று ஓடினான்

இவன் கத்திய குரல் கேட்டு பாஷை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்!இவன் பதட்டப்படுவதை புரிந்து கொண்டார்கள் .

கண்ணன் மேலே ஓடினான்! சற்றே மூச்சு வாங்கியது.ஆசுவாசப் படுத்திக் கொண்டு ” என்னங்க நீங்க! எட்டிப் பார்த்து கீழே விழுந்தா என்ன ஆகிறது!ஸ்னோ ஸ்லிப்பரி எப்படி இருக்கு பாருங்க! லென்ஸ் மூடிதானே ” என்றான்

எக்ஸ்குஸ்மீ!லென்ஸ் மூடி உங்களுக்கு ஆர்டினரியாக இருக்கலாம்!அது எனக்கு முக்கியமானது! ஐ டோன்ட் வாண்ட் டு லூஸ் எனிதிங் !என்றாள்

.கண்ணன் எற இறங்க அவளை பார்த்தான்!

“அடேங்கப்பா!சரியான பொண்ணுடா இது ! கொஞ்சம் ஜாக்கிரையாதான் இருக்கணும் ” என்று மறுபடியும் அவளை பார்த்தான் .அசல் நம்ம ஊரு பொண்ணுதான் !பளிச்சென்று ஒரு அழகு!கூட குறுகுறுப்பா புத்திசாலித்தனத்துடன் சட்டென்று ஈர்க்கும் முகம்!

பேசப்பேச பார்த்துக்கொண்டே இருக்கத் தோணும் சுபாவம்!

என்ன பார்க்கிறீங்க!என்றாள்.

இல்ல!சட்டென்று லென்ஸ் கவர் விழுந்தாலும் அது எப்படி சரளமான தமிழ் பேசறீங்க !

அதுவா!இந்த மூஞ்சிய வரும்போதே அங்கேயே பாத்துட்டேன்!அதுதான் எழுதி ஒட்டி இருக்கே நம்ம ஊர்தான்னு!

கண்ணன் சிரித்தான்!சிரிக்கும்போதே அவளின் செயலை கவனித்தான் அந்த மலர் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தெரிந்து மறைந்தது!அதை ரசிக்க அவன் தவறவில்லை!

ஆக ! நான் வரும் போதே என்னோடு வம்பு இழுக்கனும்னு தீர்மானம் பண்ணிட்டீங்க! என்றான் .

ஹலோ!மிஸ்டர்! எனக்கென்ன வேற வேலை இல்லையா !உங்களை மார்க் பண்ணி வம்பிழுப்பதற்கு!என்றாள் .

அங்கே கார் பார்க்கிலேயே உங்களை பார்த்திட்டேன்!சட்டென்று பார்க் பண்ணாம அங்கே இங்கேன்னு அலைஞ்சீங்களே! இன்னும் கொஞ்சம் விட்டா எதோ நான்தான் மேலே இருந்து லென்ஸ் மூடிய வேணும்னு போட்டேன்னு கூட சொல்லுவீங்க! என்றாள்.

ஐயோ! ஆள விடுங்க மேடம்! மேலிருந்து எட்டிப் பார்த்து ஸ்லிப் ஆனா என்ன ஆகி இருக்கும்னு பயந்துதான் ஓடி வந்தேன் .

சாரி! தொந்தரவு கொடுத்திட்டேன் .மன்னிக்கவும்! என்று நகர ஆரம்பித்தான்.

அதற்குள் ” ஏ சந்தியா! உன்ன எங்கெல்லாம் தேடறது!இங்க யாரை வம்பிழுக்கறே! என்று அவள் தோழி வந்துவிட்டாள்.

போக ஆரம்பித்த கண்ணனின் கால்கள் தானாக திரும்பியது.

அதெல்லாம் ஒண்ணும் இல்லேடி ரேணு! என் காமெரா லென்ஸ் கீழே விழுந்திடிச்சு !நான் எட்டிப் பார்ப்பதற்குள் கேமரா பையும் விழுந்திட்டது ! இவர்தான் பதறிப் போய் அதை எடுத்திண்டு கொடுத்தார் .இந்த ஸ்லோப்பிலே எட்டிப் பாத்து நான் விழுந்திருவேன்னு அவருக்கு பயம்! என்றாள்.

என்னடி !சந்தியா!அங்கங்கே ஸ்னோ ஸ்லிப்பரி நிறைய இருக்கு! நீ கொஞ்சம் ஸ்லிப் ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்!இவர் பதபதைச்சுஓடி வந்ததில் தப்பே இல்ல! என்று கடிந்து கொண்டு ,கண்ணன் பக்கம் திரும்பி சாரி!உங்க உதவிக்கு ரொம்ப நன்றி! இவளுக்காக நான் திரும்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன் ” என்றாள் .

உங்க உதவிக்கு மறுபடியும் தேங்க்ஸ் ! என் பெயர் ரேணுகா ,இவ பேரு சந்தியா என்றாள்.

பரவ இல்ல மிஸ் ரேணுகா! ஆனா அவங்க பேச்சிலே வம்பு ஜாஸ்தி!இன்டரஸ்டிங்கா இருந்தது! என் பெயர் கண்ணன் . நான் வரேன் என்று திரும்பினான்.

கண்ணன்!எங்க போறீங்க !அதுதான் ஏற்கெனவே அவ வம்பு இழுத்திட்டாளே! போகாதீங்க !நாங்களும் வரோம் “என்றாள் ரேணு.

கண்ணனுக்கு புரிய கொஞ்சம் நேரம் ஆயிற்று!இப்படி ஒரு வம்பிலே மாட்டிக்கப் போறோம் என்பதை நினைத்து!ஆனாலும் ஒரு ரசனை மிக்க அனுபவம் ஆரம்பிக்கிறது என்று அவனுக்கு அப்போ தெரியாது!

சரி !நான் உங்க கூடவே வரேன்!இப்போதைக்கு நீங்க ரெண்டு பேர்தானா அல்லது இன்னும் யாரானும் வருவார்களா ! இந்த ஒண்டி ஆளை ரவுண்டு கட்டி அடிக்க” என்றான் சிரித்துக்கொண்டே !

அட!அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!நீங்க சொன்னபடி நாங்க ரெண்டு பேர்தான் .கூட யாரும் இல்ல! அப்போ நீங்க ஒண்டி ஆளுதானா என்றார்கள்.

அந்தக் கடைசி வார்த்தையின் அர்த்தத்தை கண்ணன் புரிந்து கொள்ள தவறவில்லை!

இப்போ இல்லை!எப்பவும் நான் ஒண்டி ஆளுதான் !என்றான் சிரித்துக்கொண்டே!

டி!சந்தியா!ஜாக்கிரதையாகப் பேசு!இருந்துக்கோ! என்றாள் ரேணு ஒரு நமட்டு சிரிப்புடன் !

அய்ய! இவர் இப்படியே இருக்க வேண்டியதுதான் !என்ன ஏன் இதுலே இழுக்கிறே !என்றாள் சந்தியா .

கண்ணன் மௌனமானான் .அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

பேசிக் கொண்டே மலையின் சற்று உயரமான இடத்திற்கு வந்து விட்டார்கள்.

பனி சூழ்ந்த எவர் கிரீன் மரங்களும் ,அருவியின் அழகான நீரோட்டமும் ,அத்தனை அழகையும் தன்னுள் அடக்கி ஓவியமாக காட்சி தரும் ஏரிகளும் ,இயற்க்கை இறுமாப்புடன் பார்ப்பவரை மயக்கும் சியாட்டில் நகரின் புற அழகு என்றும் பசுமை யானது!

மெதுவாக கண்ணன் ரேணுகாவின் பக்கம் திரும்பினான்.

ரேணு! இவ எப்போதுமே இப்படித்தான் பேசுவாளா? இப்பதான் அறிமுகமானோம் .பேச ஆரம்பிச்சிருக்கோம்.ஆனா! ரொம்ப நாள் பழகின மாதிரி பேசறாளே! என்றான் .

கண்ணன்! இவளுக்கு சின்ன வயசிலிருந்தே நான் உயிர் தோழி!இந்த ஊருக்கு கூட ஒண்ணாதான் படிக்க வந்தோம்.கலகலப்பா பேசுவா!ஆனா இப்படிப் பேசி நான் பார்த்ததில்லை !ரொம்ப சர்ப்ரைஸா இருக்கு!

கண்ணன்! நீங்க என்ன பண்றீங்க !தெரிஞ்சுக்கலாமா ?நாமதான் சகஜமா பேச ஆரம்பிச்சிட்டோமே! என்றாள் ரேணு.

கண்ணன் சொன்னான்.நான் லாசஞ்செல்ஸ்லேதான் படிச்சு முடிச்சேன்.இங்கே வேலை கிடைச்சுது.இந்த ஊரின் இயற்கை அழகும் அமைதியும் பார்த்து இங்கேயே கன்டின்யு பண்றேன்.

நாங்க ரெண்டு பேரும் மாஸ்டர்ஸ் முடிக்கறோம் .மேற்கொண்டு இங்கேயேதான் கன்டின்யு பண்ணுவோம்.இந்த ஊரை விட மனசில்லை!

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு அமெரிக்க குடும்பம் இவர்களை நோக்கி வந்தனர். சாரி ரேணு! வீ ஆர் லிட்டில் லேட்!என்று.

நோ பிராப்லம் கிறிஸ்டி ! என்று சொல்லி ,பிறகு கண்ணனைக் காண்பித்து மீட் மிஸ்டர் கண்ணன் ! என்று அறிமுகம் செய்து ,கண்ணனிடம் இவள் கிறிஸ்டி ! எங்க ரூம் மேட்,இது அவ அப்பா அம்மா .இவர்கள் கூடதான் நாங்க வந்தோம்.இங்கே அவங்க பேமிலி கெட் டு கெதர் இருக்கு ! அப்படியே எங்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள் என்று முறைப் படி அறிமுகம் நடந்தது.

தேங்க்ஸ் !ரேணு ,சந்தியா நீங்க இவர்களோடு ஜாயின் பண்ணிக்குங்க !

நான் கிளம்பறேன் என்றான் கண்ணன் .

நோ கண்ணன் !யு ஆர் நாட் கோயிங்! லெட் அஸ் கோ டுகெதர் பார் லன்ச் .பிளீஸ் ஜாயின் அஸ் ! என்று கிறிஸ்டியும் அவள் பெற்றோரும் சொன்னார்கள்

அப்பொழுதுதான் சந்தியா சட்டென்று கண்ணன் அருகில் வந்து “பிளீஸ் எனக்காக” என்று முகத்தில் ஒரு அழகான கனிவுடன் அவனிடம் மெதுவாகச் சொன்னாள்.

கண்ணனுக்கு அந்தப் பார்வையும் ,அதனுடன் பரிவான உரிமையுடன் வந்த வார்த்தைகளும் வேறு ஒரு மொழி கூறி மயக்கியது!

சந்தியா! எனக்கு நான் என்று சொல்ல முடியாமல் தடுமாறினான்.

அவள் அவனை முகம் சிவக்க பார்த்த விதமும் பேசிய மொழியில் கண்களும் கனிவு தனைக் கொட்டி “மறுக்காமல் வாருங்கள்”என மௌன மொழியில் அவனைக் கிரங்கச் செய்து ,அவன் தன்னை மறந்து அவர்களுக்கு தலை அசைத்தான்.

காதல் கனிவுறுவதில் நேரங்கள் நியமங்கள் வருவதில்லை! சில நொடிகள் போதும் என்று காலத்தால் வரையப்பட்ட பதிவேடு .அது இங்கே உருவானது!

அழகான பனி சூழ் மலையின் அடி வானத்தில் அன்பான இரு உள்ளங்கள் ஒருமித்த உறவு சொல்ல விழைகின்றன !பட படவென்று சற்று முன் வார்த்தைகளால் வெடித்த அந்த பெண்பாவை ,பதுமையென மெல்ல தலை அசைத்து ,அவளின் அழகிய கண்கள் இமைகளோடு பண்ணிசைத்து,பாங்கான காதல் மொழி பரிவுடன் அவனிடம் பேசின!

இவனும் தன்னை மறந்து அந்த தனி உலகிற்கு பயணம் செய்ய தன்னை தயார் செய்யலானான்..

பிறகு கண்ணன் கிறிஸ்டியிடம் ” கிறிஸ்டி !ஒரு சின்ன ரிக்வஸ்ட் !நான் நேர ரெஸ்டாரண்டுக்கு வந்துடறேன் ,அதுக்குள்ளே இங்க ரெண்டு இடங்கள பார்த்திடுவேன் ” என்றான்.

கிறிஸ்டியும் “எஸ் கண்ணன் !எனக்கும் இங்கே என் உறவினர்களை மீட் பண்ண வேண்டியிருக்கு!என்றாள்.

அதற்குள் சந்தியா ரேணுவிடம் ” நீயும் வரையா.நம்ம இவனோட போயிட்டு வரலாம்”என்றாள்.ரேணு புத்திசாலி!புரிந்து கொண்டாள்.மெதுவா அவளிடம் “மெதுவா போயிட்டு வா !நான் உன்னை லஞ்சலே பார்க்கறேன் “என்றாள்.அதற்குள் கண்ணன் காருக்குப் போய் விட்டான்.

ரேணு!எனக்கு தனியா கார் வரைப் போக தயக்கமா இருக்கு!நீயும் வாடி அட்லீஸ்ட் அவனிடம் சொல்லிட்டு வா “என்றாள்.

கொஞ்ச நேரம் முன்னாலே அவன் கிட்டே பொரிஞ்சு கொட்டினே!இப்போ என்னடி ஆச்சு உனக்கு ! என்றாள் ரேணு.

எனக்கே தெரியலே!இனிமே அவன் கிட்டே சண்டை போடமாட்டேன் “என்றாள் கொஞ்சலாக ரேணுவிடம்.

எப்படி உனக்கு இவ்வளவு ஆசையும் ஆர்வமும் வந்தது சந்தியா!வா !நான் வந்து உனக்காக அவனிடம் சொல்றேன் .ஆனா உன்ன வச்சுண்டு அவன் என்ன பாடு படப் போறானோ தெரியலே!என்றாள் சிரித்த படி!கார் ஸ்டார்ட் பண்ணுவதற்குள் இவர்களை பார்த்து விட்டான் கண்ணன்.” வெல்கம்!வரீங்களா! ஒரு பெரிய ரவுண்டு போலாம்”

கண்ணா!கிறிஸ்டியோடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு!இவளைக்

கூட்டிட்டு போ!லேட் ஆகாம லஞ்சுக்கு வந்துருங்க !என்றாள் ரேணு.

கண்ணன் கார் கதவை திறக்கப் போனான் .

நீ ஒண்ணும் திறக்க வேண்டாம் !நானே உட்கார்ந்துக்கிறேன் “என்று பொய் கோபத்துடன் சந்தியா உள்ளே உட்கார்ந்து கொண்டாள்.

“என்னடி!இப்பதானே சொல்லி கூட்டிண்டு வந்தேன் !அதுக்குள்ளே மறுபடியும் ஆரம்பிச்ட்டே!என்று ரேணு அவளிடம் கடிந்து கொண்டு

கண்ணா!இது ஒரு குழந்தை!ஆனா நல்ல அழகா வளர்ந்திருக்கு !பார்த்து கூட்டிண்டு போ!என்றாள்.

கண்ணன் சிரித்தான் ! நல்லா பார்த்துக்கிறேன் !பத்திரமா கொண்டு சேர்க்கிறேன். என்றான் கார் கிளம்பியது .

சந்தியா கண்ணனிடம் “சிரிக்கிறதை பாரு!நின்னு என் கிட்டே ஒரு வார்த்தை வரையா போகலாம் சொன்னா என்ன !நாதானே உன்னைப் போகாதே ன்னு ஆசைப் பட்டு அப்போ நிறுத்தினேன் .நீ ரொம்ப மோசம் ! என்று குழந்தை கோபத்துடன் கண்கள் நிறைய கண்ணீருடன்

கண்ணனுக்கு உள்ளூர மட்டற்ற மகிழ்ச்சி!என்ன ஒரு களங்கமில்லாத மனசு!என்னை தீர்மானமா எப்படி தன் மனசுலே நிறுத்தி வச்சிருக்கா!

கடவுளே!நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன் !

காரை சாலை ஓரமா நிறுத்தி டவல் எடுத்து அவள் கண்களை அழகா

துடைத்து ,அவள் முகத்தில் படரும் கூந்தலை மெதுவாக ஒதுக்கி ,அந்த களங்கமில்லா முகத்தை தன் எதிரிலே நிறுத்தி ,

“சந்தியா!என்னுடைய அதிர்ஷ்டமோ புண்ணியமோ தெரியாது !இந்த பனிமலை முகப்பில் கடவுள் உன்னை எனக்கு காண்பித்து விட்டார்.இனிமே எனக்கு எல்லாமே நீதான்!தயவு செய்து என்னையும் கலங்க விடாதே! என்றான் அளவற்ற பாசத்தோடு !

சந்தியா மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.அவளின் அழகிய கண்களிலும் அன்பு மனதிலும் அவன் நிறைந்து இருந்தான்.

இவ்வளவு ஆசையை மனசுக்குள்ளேயே வச்சிண்டு ,நான் அழுது கலக்கினப்புறம் மொள்ள சொல்றே !அங்கே மலை மேலே உன்கிட்ட சண்டை போட்ட அந்த நிமிஷம் முதல் எனக்கு வேற எதுவும் உன்னைத் தவிர தெரியலே கண்ணா!என்னாலே ஆசையாக கூட பேசத் தெரியாது!

ஆனா அத்தனையும் அடக்கி உன்னை நினைச்சிண்டு இருக்கேன்!எனக்கு இதிலிருந்து மாற தெரியாது கண்ணா!என்று அவன் கைகளை தன்னுள் அடக்கிக் கொண்டு சொன்னாள்.

வெளியில் அழகான குளிர்ந்த மெல்லிய காற்று!இயற்கை எழில் தன் பரவசத்தை அந்தக் காற்றுடன் இணைந்து பாடியது!

களங்கமற்ற இரு உள்ளங்கள் தங்களின் அன்பையும் பரிவையும் தெளிவுரப் பகிர்ந்து ,ஒருமித்த தங்கள் எதிர் வாழ்வுக்கு உறுதியுடன் ஊன்றுகோல் பதித்தனர்.

சந்தியா!நாம் போகிற வழியில் நல்ல அருவியும் நீரோடையும் இருக்கிறது!

பார்த்துட்டு பிறகு லஞ்சுக்குப் போகலாம் என்றான்.

சந்தியா சரி என்று சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு தனக்கு உரியவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

பார்க்கிங்கில் காரை விட்டு மெதுவாக அருவிப் பாதைக்கசென்றார்கள்.வானத்தையே பார்க்க முடியாத அளவிற்கு அடர்ந்த மரங்கள் !சோலைகள்! சலசலவென்று நீரோடை சத்தத்தில் அங்கும் இங்கும் நடக்கும் மனிதர்கள்!

கண்ணா!அந்தப் பூக்களை பாரு!என்று பாதையை விட்டு உள்ளே மலர்ந்து குலுங்கும் பூக்களை ரசித்து சொன்னாள் .சட்டென்று அய்யோ கண்ணா !என்று பாய்ந்து அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

என்ன!என்ன ஆச்சு! என்றான் பதைபதைப்புடன் .இரண்டு மான்கள் அந்த பூச்செடியிலிருந்து மரு பக்கம் ஓடியது!

அட!மான்கள் இங்கே சகஜம்தானே !என்றான்

தெரியும்! நீதான் கூடவே துணைக்கு இருக்கயே!எனக்கு என்ன பயம்!என்று அவள் சொன்னாலும் அவனைத் தழுவிய பிடியை அவள் விடவே இல்லை!

ஆனாலும் குழந்தைதான் நீ சந்தியா! நான் ரொம்பக் கொடுத்து வைத்தவன்

என்று அவள் நெற்றியில் செல்லமா முத்தமிட்டு ,மெதுவாக அவளை அணைத்து அருவிக்கு அழைத்துப் போனான்.

தெளிவான நீர்!சோ வென்று சப்தம் வந்தாலும் ,சங்கீதமாக வந்தது!அந்த அருவியை சுற்றி அழகான வானவில்.தன்னை மறந்த காதலர்கள்!அங்கங்கே இயற்கையை புடமிட்டு ரசிக்கும் ரசிகர்கள்!

கண்ணா!இதுமாதிரி நான் வந்ததே இல்லை!நான் ரொம்ப ஹாப்பி ஆக இருக்கேன்!என்று அவன் நெஞ்சில் தன்னை புதைத்துக் கொண்டாள்.

கண்ணா!நான் அருவி பக்கத்திலே போய்விட்டு வரட்டுமா!நீயும் வா என்றாள்.

நீ போயிட்டு வா!நான் உன்னையே பார்த்திண்டு உட்கார்ந்துண்டு இருக்கேன்!அங்கெதான்நிறைய பேர் இருக்காங்களே!என்றான்.

அவளை பார்த்து ரசிக்கும் பரவசத்தில் ஒரு சிறிய கவிதை எழுதினான்.

சோவென்ற தொடர் இசையில் சுவை மிகும் அழகு நீரோட்டம் !

சுகம்தரும் வனங்களிடை மானென துள்ளும் மனம் நிறை மங்கை

அவள்

இதழிலும் இதயத்திலும் என்றும் ஒரு மலர் சிரிப்பு !

கோபம் வரும்!ஒரு கொஞ்சும் குழந்தை போல !

தாபத்துடன் தயங்காமல் வரும் அவள் சொற்கள் இனிய அருவி போல

சிற்பங்களும் சிலைகளும் இவளழகை காண வியக்கும்!

நளின நடையில் ஒரு நாயகியின் பாவம்!

என் மனதோடு இசைபவளை ,என்னோடு இணைந்தவளை

என்னவள் என்று எப்படி இணைத்தாய் என் இறைவா !

இனிவரும் நாளெல்லாம் என் உயிரிழையில் இவளன்றி யானில்லை!

கனி அவள் நலம் காண யான் விழைவேன் !இது உறுதி !

கண்ணன் இதை எழுதி முடிப்பதற்குள் கண்ணா!என்ன தமிழ் லே எழுதறே!நான் பார்க்கலாமா !என்று அவனிமிருந்து எடுத்துக் கொண்டாள்.

ஒரு முறை படித்தாள்.மறு முறையும் படித்தாள் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சலனமே இல்லாத நேரங்கள் அந்த அருவியின் இசை தவிர !

கண்ணா!என்னை காருக்குக் கூட்டிண்டு போ ! என்றாள் .அந்தக் கணம் முதல் அவள் அவளாக இல்லை!எதோ ஒரு கனவு உலகத்திற்கு அவனோடு பிணைந்து ஒருமித்து இணைந்து விட்டாள்.

காருக்குள் உட்கார்ந்த பிறகும் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.சந்தியா !என்று அவன் அவளை மெதுவாக அசைத்த போது கண்ணா !அழகான கவிதை நொடிப் பொழுதில் என்னை எழுதினே! அவ்வளவு தகுதி எனக்கு இருக்கா !என்றாள்.

சந்தியா!என் மனதில் உள்ளதை எழுதினேன் .இதுக்கு மேல உன்னைப் பற்றி என் நெஞ்சுக்குள்ளே நிறைய இருக்கு!ஒன்று மட்டும் உறுதி!

சந்தியா என்ற வட்டத்துக்குள் நான் போய்ட்டேன்.அது ஒரு வழிப் பாதை.

என் வாழ்நாள் முழுதும் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது !

ரெஸ்டாரெண்ட் வந்தது.

என்னடி !கண்ணெல்லாம் கலங்கி இருக்கு !என்றாள் ரேணு.

அவன் எழுதிய வரிகளை ரேணுவிடம் காண்பித்து ,அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.ஒரு முறைக்கு இருமுறை படித்த ரேணு ,

இமைவிழி கண்கள் சிறிது கலங்க ,சந்தியா! நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கே! காட் பிளஸ் யு!என்று அவள் கைகளை குலுக்கியபடி .

கிரிஸ்டியுடனும்,அவள் பெற்றோடனும் கண்ணன் பேசி கொண்டிருந்ததால் இதை கவனிக்கவில்லை.

லன்ச் முடிஞ்சு கிரிஸ்டி அவள் பெற்றோருடன் வீட்டுக்குப் போய் நாளை பார்க்கலாம் என்று சொல்லிப் போனாள்.கண்ணனும் இவர்கள் இருவரையும் ஷாப்பிங் மால் சுற்றிவிட்டு மாலை அவ்ர்கள் இடத்தில கொண்டு விட்டான்.

மறுநாள் காலை .கண்ணன் அவசரமாக ஆபீஸ் கிளம்பும்போது வீடியோ கால் !வீடியோவில் அவள் ! கண்ணா !இந்த வாரத்தோட ஆல் எக்ஸாம் ஓவர் .சாயங்காலம் வந்து எங்கேயானும் கூட்டிண்டு போ! என்று சிணிங்கினாள்.

முதல்லே படிப்பை முடி!மிட் வீக்கிலே எல்லாம் என்னாலே வரமுடியாது !

அஞ்சு நாள் பொறுத்துக்கோ!வந்து கூட்டிண்டு போறேன் !

அஞ்சு நாளா!முடியாது!நடுவிலே வந்து என்ன பார்த்துட்டுப் போ!

இல்லேன்னா நான் சாப்பிடமாட்டேன் !என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள் .

என்னடா இது வம்பா இருக்கு! சரி போனை ரேணு கிட்டே கொடு !

அதற்குள் ரேணு கண்ணா! ராத்திரிலேருந்து இவ அலம்பல் தாங்கலே!

தயவு செய்து உன் வீட்டுக்கு கூட்டிண்டு போய்டு!

கண்ணன் சிரித்தான் !

சரி ரேணு !புதன் கிழமை வருகிறேன் ! அவளை ரகளை பண்ணாமல் இருக்கச்சொல்லு.

டோன்ட் ஒரி கண்ணா! நாங்க பார்த்துக்கறோம் .நீ உன் ஆபீஸ் வேலைய பாரு! என்றாள்.

அவள் அடம் பிடிப்பது அவனுக்கும் தன்னை மறந்து அவளுடன் இருப்பது போல ஒரு நினைவு அவனையும் விடவில்லை!

என்னடி சந்தியா!ரகளை பண்ணி அவனை வர சொல்றே!புதன் கிழமை வரேன்னு சொன்னான்.நல்ல வேளை! மாஸ்டர்ஸ் முடிச்சிட்டே!கொஞ்ச நாள் முன்னாலே கண்ணனைப் பார்த்திருந்தா என்ன ஆயிருக்கும்!

சந்தியா சொன்னாள்.”அதெல்லாம் தெரியாது ! இது போல சந்திப்புகள்

எப்போ எப்படி வரும் என்பது ஒரு புரியாத புதிர் என்று படிச்சிருக்கேன் .இப்போதான் அந்த அர்த்தம் புரியறது!எனக்கு ஒரு விவரிக்க முடியாத தீராத நினைப்புகள் வந்து அதுவே எப்பொழுதும் வேணும்னு தோணுது!

நானும் என்னை டைவர்ட் பண்றேன் !முடியலே! என்று தன்னை அறியாமல் தன் தோழியிடம் மனதில் உள்ளதை சொல்லிக் கொண்டே போனாள்.

இயற்கையான இந்த இனிய உணர்வுகள் இவளை மீறிக் கொண்டு இனம் தெரியா உவகை பொங்கும் தெவிட்டாத காதல் கனவுகளை இவள் மனம் பூராவும் தெளித்து ,எந்நேரமும் அவனை சுற்றி வட்டமிட வைக்கிறது!அவற்றை கட்டுப் படுத்த முடியாமல் வேறு புதிய கனவுகளை காண விழைகிறாள்.காதல் கனவுகள் வலிமை ஆனாலும் அழகானது!

என்னதான் டிஜிட்டல் விநோதங்கள் படங்களாக ஓடி மறைந்தாலும் நேரில் பேசி ,மென்மையான உணர்வுகள் பரிகாசத்திலும் ,ஊடலிலும் இருக்கும் நினைவுகள் தனி அழகுதான்!

சந்தியாவின் செயலிலும் நினைவுகளிலும் கண்ணன் தான் முழுக்க இருந்தான்.

புதன் வந்தது! சொன்னபடி கண்ணன் அன்றிரவு டின்னருக்கு பெல்வியு ஸ்கொயருக்கு கூட்டிக் கொண்டு போனான் .இவர்களின் நெருக்கமான அன்பும் பரிமாற்றங்களும் ,அவள் தோழிகளுக்கு ஆச்சர்யமும் ஆர்வத்தையும் அதிகரித்தன.!

சந்தியாவுக்கு ஆர்வமும் நெருங்கி உறவாடினால்தான் காதல் என்ற எண்ணம் இல்லாமல் ,அவனைப் பார்த்ததிலேயே மனநிறைவு கொண்டாள் .கண்ணனுக்கும் அவளுடைய அளவான நிறைந்த அன்புடன் அழகுடன் உரசும் இனிய தன்மையை தன்னை மறந்து ரசித்து மகிழ்ந்து போனான்.

டின்னர் முடிந்து காம்பஸில் கொண்டு விட்டு “சனிக் கிழமை தயாராக இருங்கள் “என்று சொல்ல ரேணுவும் கிரிஸ்டியும் வாசலுக்குப் போய் விட்டார்கள் .என்னடி சந்தியா! என்ன பண்றே !என்று ரேணு கேட்க “போனை சீட்லே தேடறேன் .நீ போ ! என்று சொன்னாலும் போன் அவள் கையில்தான் இருந்தது!

தேங்க் யு கண்ணன் மை டியர்! ராத்திரி உன்ன நினைச்சிண்டே தூங்குவேன்” என்று சொல்லி அவன் கன்னத்தில் ஆழமாக தன் முகத்தைப் பதித்து விட்டு ஓடி விட்டாள்.

எதிர் பாராத நெருங்கின அந்த இனிய உணர்வினால் தன்னை மறந்த கண்ணன் ,பின்னால் உள்ள கார் இவனுக்கு பிளாஷ் பண்ணி ஹார்ன் கொடுக்கும் போது தான் இந்த செயல் உலகத்திற்கு வந்தான்.

இனிய காதல் உறவுகள்!அந்தப் பெண்ணின் அன்பும் ,உறவும்,நினைவும் அவனை முற்றிலும் புதியவனாக மாற்றியதை அவனால் உணராமல் இருக்க முடிய வில்லை!

கார் ஓடும்போது பக்கத்துக்கு சீட்டில் அவள் கன்னங்கள் குழிய,குழந்தை சிரிப்புடன் மயக்கும் பார்வை போல அடிக்கடி அந்த சீட்டைப் பார்த்து மயங்கினான்.

மறுநாள் .அவன் ஆபீசில் வரும் திங்கள் அன்று வேலை நிமித்தமாக

ஜெர்மனிக்குப் போகச் சொன்னார்கள் சரி என்று பிரயாண ஏற்பாடுகள் தயார் பண்ணலானான்.

மதியம் லஞ்சில் அவனுக்கு ஒரு போன் அவன் அப்பாவிடமிருந்து .

கண்ணா! நான் ஊருக்குப் போயிட்டு அம்மாவோட இங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தாச்சு !அம்மா உன்னைப் பார்க்கணும் சொல்றா !வந்துட்டுப்போ ரெண்டு நாளைக்கு “என்றார்.

அப்பா!நான் ஆபீஸ் வேலையா யூரோப் போறேன் .அடுத்த வாரம் வரேன் “என்றான்

அதற்குள் சந்தியாவிடமிருந்து போன் ! கண்ணா !நீ உடனே சாயங்காலம் வா!எனக்காக அல்ல!இங்கே ரேணு திடீர்னு என்னெல்லாமோ பேசறா!ஊருக்குப் போகணும்னு சொல்றா !அபார்ட்மெண்ட விட்டுப் போகணும்னு பேசறா !எனக்கு என்ன செய்யறது என்றே தெரியலே!

கண்ணனுக்கு ஒண்ணும் புரியலே!சரி !ரேணு நம்பரைக் கொடு !நான் பேசறேன் என்றான் .

ரேணு!ரேணு!போனின் அந்தப் பக்கம் குரல் இல்லை!மறுபடியும் ரிங் ஆவதற்குள் ரேணு பேசினாள்.”கண்ணா! நான் உடனே உன்னைப் பார்க்கணும்!நான் உன்னை மீட் பண்றது சந்தியாவுக்கு தெரியாக் கூடாது.என்னாலே சாயங்காலம் வரை வெய்ட் பண்ண முடியாது !சாயங்காலம் ஆனா சந்தியா என்னை தேடுவாள் .பாவம்!என்றாள்.

கண்ணனுக்கு ஊருக்குப் போவதினால் ஆபீஸ் வேலை அவ்வளவு இல்லை! சரி !வரேன்!என்றான்.

எங்க யுனிவர்சிட்டி வர வழிலே காபி ஷாப்புக்கு வந்திடு !காத்திட்டிருக்கேன் .என்றாள்.

ரேணு! முகமெல்லாம் வாடி இருக்கு !என்ன பிரச்சனை!கவலைப் படாதே !நான் உதவி செய்யறேன் !

கண்ணா!என் கவலை எல்லாம் உன்னையும் சந்தியாவைப் பற்றித்தான்!

என்ன சொல்றே ரேணு !என்றான்

ஆமாம் கண்ணா ! போன வாரம் உன் அப்பா அம்மாவும் என் அப்பா அம்மாவுடன் கோயம்புத்தூர் ரயில்லே டிராவல் பண்ணும்போது நம் இருவர் பேச்சுசகஜமா வந்து நம்ம கல்யாணம் வரை பேசி முடிவு பண்ணிட்டாங்க !

என் அக்கா வீடு லாஸ் ஏஞ்செல்ஸ்லே உங்க வீட்டுப் பக்கத்திலேதான் இருக்கு.என்னை நீ அங்கே பெண் பார்ப்பதாக ஏற்பாடு !

கண்ணனுக்கு உண்மையாகவே தல சுத்த ஆரம்பிச்சிடுச்சு.!

ரேணு சொன்னாள் .”கண்ணா! நானும் ஒரு நல்ல தோழி!தவிர நானும் ஒரு பெண்!சந்தியாவைப் போல அப்பழுக்கற்ற குழந்தை உள்ளம் கொண்ட வளை நான் ஒரு போதும் வாட விட மாட்டேன் !உன்னைப் பற்றி எண்ணற்ற கனவுகளுடன் தயாராக இருக்கிறாள்.நான் ஒரு தீங்கு மனசால் கூட செய்யமாட்டேன்.அவள் என்னுடனேயே வளர்ந்தவள்.தவிர உன் போல நல்ல அன்புள்ளம் கொண்டவன் அவளுக்கு கிடைத்து அவளின் பெரும் பாக்கியம்!

ரேணு பேச பேச கண்ணன் அழுது கொண்டிருந்தான்.ஏதோ ஒரு தெய்வம் ரேணு உருவில் வந்து அவனை அரவணைத்துக் கொண்டிருந்தது.

ரேணு !என்று அவள் இரு கரங்களையும் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டான் .

பெண்மையின் மிக உயர்ந்த பண்பும் ,பெருந்தன்மையும் ,தியாக உணர்வும் ரேணுகா உருவில் வந்து ஒளி வீசியது!

மறுபடியும் ரேணுகா பேசினாள்.

கண்ணா!எனக்கு எக்ஸாம் முடிஞ்சாச்சு! என் பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணுவது நான் நேரில் போக வேண்டும் .நான் உடனே ஊருக்கு போகணும் என்றாள் .

ரேணு!உடனே நான் உன் டிக்கட்டுக்கு ஏற்பாடு பண்றேன் .உன்னோட மிக உயர்ந்த மனசுக்கு நான் நன்றி சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடு !என்றான்.

ரேணு மறுக்கவில்லை!ஏற்றுக் கொண்டாள்.

கண்ணா! எங்களைப் பார்க்க வருவதை நிறுத்தாதே !என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

பிரியமான உயிர் தோழிக்கு எதுவும் செய்ய பெண்கள் நிறைய இருக்கிறார்கள் .கண்ணனுக்கு ஒரு அதிர்ஷ்டம் !ரேணு வந்தாள்.

நினைக்க நினைக்க வியந்து போனான்.

வெள்ளி மாலை வந்தது.வீக்கெண்டில் எப்பொழுதும் கிரிஸ்ட்டி வீட்டுக்குப் போய் விடுவாள்.கண்ணனிடமிருந்து கால் வந்தது.’ரெடியா இருங்கள் .வெளியே போகலாம் “என்று.

கார் போய்க் கொண்டிருந்தது.

சந்தியா சொன்னாள் .கண்ணா!இவகிட்டே பேசினாயா.!கொஞ்சம் கொயட்டா இருக்காளே “என்றாள்.

ஆமாம் .பேசினேன் .அவளுக்கு ஊர்லே அப்பா அம்மாவைப் பார்க்கணும் போல உள்ளது .அது அவ பேமிலி மேட்டர் .சண்டே ஊருக்குப் போறேன் சொன்னாளா.என்றான்

ஆமாம் சொன்னாள் .என்றாள்.

அப்புறம் சந்தியா!நான் ஆபீஸ் விஷயமா ஜெர்மனி போறேன்.நீ சமத்தா அழாம இருக்கணும் .நான் வெள்ளிக்கிழமைக்குள்ளே வந்திடுவேன் .

கண்ணா இவளும் இல்ல !நான் தனியா இருக்கணும் .கிரிஸ்டிகிட்டே சொல்லிட்டுப் போ என்றாள்

ஏன்!நீ சொல்ல மாட்டாயா !

கண்ணா !எனக்கு எல்லாமே நீதான் !நீதான் என்னைப் பார்த்துக்கணும் .என்று தோழி இருப்பதையும் மறந்து அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள்.சந்தியா .

அப்புறம் வீக் எண்டிலே தனியா இருக்க மாட்டேன்.

கவலைப் படாதே!தனியா உன்னை விட மாட்டேன் என்றான்.

என்று அவன் சொன்னப்புறம்தான் அவள் சிரித்தாள் .இந்த அருமையான ஊடல் காட்சியை ரேணு மிக அருமையாக ரசித்துக் கொண்டிருந்தாள் .

ரெஸ்டாரண்டில் விரும்பியதை சாப்பிட்டு விளையாட்டாக பேசிக் கொண்டார்கள்.ரேணுவும் கைகலப்பாக இருந்தாள்.

கண்ணன் சந்தியாவிடம் சந்தியா!நான் எது செய்தாலும் உனக்கு தெரியாம இருக்கக் கூடாது.ரேணுவுக்கு நான்தான் டிக்கட் வாங்கினேன்.

என் கூடத்தான் பாதி தூரம் பிரயாணம் செய்யறா.வரும்போது அவளாத்தான் வருவாள்.சரியா!என்றான்.

ஒரு நிமிஷம் சந்தியா அவனைப் பார்த்தாள்.ரேணுவைப்பார்த்தாள்.

வாட் எ கிரேட் பர்சன் யு ஆர் !மை டியர் சுவீட்டி கண்ணன் !லவ் யு மை டியர் !என்று கண்ணனை இறுக்கிக் கொண்டாள்.

ரேணுவோட சின்ன வயசிலே இருந்தே ஒண்ணா இருந்திருக்கேன்.நேத்திக்கு அவள் கண் கலங்கினப்போ என்னசெய்வது தெரியாமல் தவிச்சப்போ ,எனக்குன்னு வந்த நீயும் எனக்கு மேல் அவளிடம் அன்பா இருக்கிறதை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .நாங்க ரெண்டு பேரும் நீ எங்களுக்கு கிடச்சதற்கு கடவுளுக்கு நன்றி சொல்றோம் ! என்று கண்கலங்கிய பெருமையுடன் .

ரேணுவோ மனது விம்ம கண்ணீர் துளிர சந்தியாவை இருக்கக்

கட்டிக் கொண்டாள் .இவ்வளவு நல்ல மனதுடைய சந்தியா தனக்கு கிடச்சதற்கு கண்ணன் உணர்ச்சி வசமானான்

சண்டே மாலை கண்ணன் ரேணுகாவை கூட்டிக் கொண்டு ஏர்போர்ட்

போய் விட்டான்.சந்தியாவும் கிரிஸ்டியும் சந்தோஷமா வழி அனுப்பிச்சாங்க.

கண்ணன் வியாழன் அன்றே திரும்பிட்டான்.இந்த அஞ்சு நாள்லே ஒரு ஐம்பது தரமானும் போன் பண்ணியிருப்பே!அப்பாடி!நான்தான் வந்திட்டேனே.உனக்காக அந்த ஊர்லே வெளியவே போகலே!போனா

என்ன விட்டுட்டு தனியா ஊர் சுத்தறேன்னு ஆரம்பிச்டுவே. நாளைக்கு

சாயங்காலம் பார்க்கிறேன் அது வரைக்கும் பொறுத்துக்கோ!என்று

ஒரே பேச்சில் பேசினான் சந்தியாவிடம் .

சந்தியாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி !தன் மனத்தைக் கொள்ளை கொண்டவன் பேச்சிலே!

வெள்ளி மாலை .டோர் பெல் சத்தம் கேட்டு கண்ணனுக்காக வேகமாக

ஓடினாள்.சந்தியா.

ஆச்சர்யம் !ரேணு அவள் பின்னால் அவள் அக்கா ரேவதி !

அக்கா!நீங்களும் ஊருக்குப் போனீர்களா!

இல்லை சந்தியா!நான் லாஸ் ஏஞ்சல்ஸ் லிருந்து வரேன்.இவளை ஏர்போர்ட்லே மீட் பண்ணினேன்.கூட வரேன்!இங்கே எனக்கு ரெண்டு நாள் வேலை இருக்கு.என்றாள் ரேவதி.சந்தியா தன் போனை அடிக்கடிபார்த்துக்கொண்டாள்அவளாக கண்ணனைக் கூப்பிட பயம்!அவனிடமிருந்து போனும் வரலே !ஆச்சர்யமாக இருந்தது..

மறு நாள் சனிக்கிழமை .வழக்கமா சனி ,ஞாயிறு மெதுவாகத்தான் எழுந்திருப்பார்கள் .எட்டுமணிக்கு கமகமவென்று மணக்க காபி போட்டுக் கொடுத்தாள் அக்கா.சியாட்டில் பார்த்து நாளாச்சு !ரெடியா இருங்க !பிரெக்பாஸ்ட் முடிச்சு கொஞ்சம் ஊர் சுற்றிட்டு லஞ்சுக்கு வெளியே போலாம் என்று அக்கா சொல்லிட்டு குளிக்கப் போய்ட்டாள்.

சந்தியாவுக்கு ஒண்ணும் புரியலே!அவனிடமிருந்து மெசேஜ் வரலே!அனுப்பவும் பயம்!

எல்லோரும் வெளியே கிளம்பினார்கள்.அக்காதான் கார் ஓட்டினாள்.டவன் டவுன் மார்க்கட் ஷாப்பிங் என்று ஊரைசுற்றிவிட்டு பெல்வியு வில் ஒரு அழகான வீட்டில் கார் நின்றது.

அக்கா!லஞ்சுக்கு ரெஸ்டாரண்ட் போலாம் சொன்னீர்களே என்றாள் சந்தியா.” போலாம்.இங்கே இந்த வீட்டுக்குப் போயிட்டு”என்று ரேவதி

சொல்லிவிட்டு டொர்பேல் அழுத்தினாள்.

நல்ல லக்ஷணமா வயதான தம்பதியர் கதவைத் திறந்து ,வாம்மா ரேவதி!வாங்க எல்லாரும் ‘என்று உள்ளே சென்றார்கள்.நல்ல பெரிய வரவேற்பு அறை! அமைதி ,நிதானம் ,தீர்க்கம் நிறைந்த அந்த அம்மணி !

என்ன சாப்படறீங்க!என்று உபசரித்தாள்.

அப்புறம் ரேவதி !இதிலே யார் உன் தங்கை !என்றாள்’

இது என் தங்கை ரேணுகா !அவள் சந்தியா !என்தங்கைக்கு மேல !இவங்க ரெண்டு பேரும் ஒண்ணாகத்தான் வளர்த்தாங்க !

அப்படியா!ரொம்ப சந்தோஷம்! அப்புறம் அம்மா சந்தியா !இங்க வாம்மா ! ரொம்ப அமைதியா இருக்கயே! என்ன பண்றே!என்று அன்போடு அவள் தலையை வருடிக் கொண்டே !

மாஸ்டர்ஸ் முடிச்சிருக்கேன் ஆன்டி !என்றாள்.

அப்படியா !என்று சொல்லும்போதே மறுபடியும் டொர்பேல் அடித்து ரேவதி போய் கதவைத் திறந்தாள்.திறந்தால் கண்ணன் நின்று கொண்டிருந்தான்.

கண்ணா உள்ளே வா!!என்றாள் அந்தப் பெண்மணி !

சந்தியாவுக்கு பிரமிப்பு தாங்கலே!

என்ன பாக்கறே!சந்தியா! அவன் என் பையன் கண்ணன் ! அவனை உனக்கு ரொம்பப் பிடிக்குமா!

அய்யோ ஆன்டி! அவளை இருக்கக் கட்டிக்க கொண்டு விசும்பினாள்.

சந்தியா ! இதோ பாரு !அழ கூடாது! ரேவதி சொன்னா நீ ஒரு குழந்தை

என்று! நெஜம்தான்!ஆனா ஒரு அழகான குழந்தை! எனக்கு மருமகளா

வர போறே! இந்த அழகான குழந்தையை நான் மகளாத்தான் பார்த்துப்பேன்! அழுகையை நிறுத்து!என்று அன்பான அரவணைப்புடன்!

சந்தியாவுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது! இந்த ஒரு வாரத்தில் ரேணுவின் மகத்தான செயலும் ,அதற்கு அவள் அக்காவும் மற்றவரும்

காட்டின அன்பும் அரவணைப்பும்!

இப்பொழுதான் கண்ணன் பக்கம் மெதுவாக திரும்பினாள்.”அவனை

முறைக்காதே .அவனுக்கு தெரியாது !இது ஒரு பிளான் பண்ணின சர்ப்ரைஸ் !” என்றாள் ரேவதி.

அக்கா !என்று அவளையும் ரேணுவையும் இருக்கக் கட்டிக்க கொண்டாள்.அந்த அன்புப் பரிமாற்றம் அங்குள்ளவர் மட்டுமல்லாமல் ஸ்கேய்ப் மூலம் இருவருடைய பெற்றோர்களும் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு குட் நியூஸ் !என் தம்பி பையன் வெங்கடேஷ் நம்ப ரேணுவுக்குப் பொருத்தமானவன்.அவர்கள் சம்மதித்தால் முடிவு செய்யலாம் .

எனக்கு கூட தெரியும் ஆன்டி!வெங்கடேஷ் லா சேம்பருக்கு நான் கூட

ஒருதரம் போய் இருக்கேன் என்றாள் ரேவதி.

பெண்மையின் உயர்வு ,அன்புள்ளம் ,சிறந்த தியாக மனப்பான்மை

கூடிய ஒரு அருமையான சூழ்நிலையில் அந்த அழகுப் பெண்

சந்தியா தன் காதலனின் அன்புக் கரங்களில் இனிதாக இணைந்தாள்.

இது தெளிவான உளம் நிறைந்த களங்கமில்லா அன்புள்ளம் கொண்ட ஒரு அழகுப் பெண்ணின் காதல் கதை !

3 thoughts on “பனி பொழியும் மலை தந்த ஒரு பதுமை

  1. நினைவுகளின் கோர்வைகள் நெஞ்சத்தை சுற்றி சுற்றி எழுத்து வடிவமாக என்னை எழுத முனையும்போது ,கதைகளின் கருத்துக்களோடு உருவமைப்பு அமைய வேண்டும் என்ற ஆர்வம் என்னில் இயற்கையாக உண்டு.படிப்பவர் மனதில் அவை நிறைவாகப் பதிந்து ,அவர்கள் அளிக்கும் ஊக்கம் என்ற அருமையான சான்றுகள் என் எழுத்தின் பயனை என் நெஞ்சம் நெகிழ நெடு நாள் வைக்கிறது!
    அந்த அன்பு உள்ளங்களுக்கு என்றும் நலமுற என் வாழ்த்துக்கள் !

  2. Dear Nithya venkatesh,
    Never had such high and grand appreciation from anybody except you.I was little occupied .
    Let me write shortly to make you happy.

    Anna

  3. Sankar Anna romba naal aachu unga kadhaikalai padichi…inga ithanai per kadhai yezhuthinaalum yenaku unga kadhai than romba pidichiruku Anna … Innum niraiya kadhai yezhuthunga Anna.. unga kadhaiyai padukka Naa aarvama kaathikittu iruken Anna…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *