நிர்மலாவின் இதயத்தில் ராகுல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 31,861 
 
 

அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, “இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா” என்றார்.

“ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்” என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார்.

`இன்னிக்கும் உப்புமாவாப்பா?’ எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்பாட்டு விஷயத்துக்கு எல்லாம் சிணுங்குகிறாள்’ என்பது வெளியே உங்களைப் போன்றோருக்குத் தெரிந்தால் அசிங்கம்தானே? அதனால் மாற்றி, “என்னப்பா விஷயம்… இன்னிக்கு உப்புமா செஞ்சிருக்கீங்க?” எனக் கேட்டுவைத்தேன்.

என் வார்த்தையில் இருந்த கிண்டலை உணர்ந்தவராக, “ஒண்ணும் இல்லைம்மா, எல்லாம் நம்ம நன்மைக்குத்தான். எத்தனை நாளைக்குத்தான் நாம இப்படியே இருக்கிறது சொல்லேன்?” என்றார்.

`புதியதாக ஒரு சமையல்காரியை வீட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டாரோ?’ என்றே நான் யோசித்தேன். `அப்படியும் இல்லை’ என்பது அவரின் பேச்சின் போக்கில் இருக்கவே, மெலிதாக எனக்குள் அந்தப் பயம் தலைகாட்டியது. அப்பாவின் பேச்சு, என்னைக் கூடிய சீக்கிரம் இல்லை… இல்லை… `மாப்பிள்ளை’ என ஒருவரைப் பார்த்து முடித்துவிட்டதாகவே இருந்தது.

`அப்படியானால் என் ராகுலை நான் என்ன செய்வது? ஐயோ அப்பா, அதுமட்டும் முடியாது! ராகுல் இதோ என் இதயத்தில் அமர்ந்திருக்கிறான். அதே மாதிரி ராகுலின் இதயத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். நான்கு வருடங்கள் ஆயிற்றுதான்… நாங்கள் இருவரும் நேரில் பார்த்து. உங்கள் முன்னால்தானேப்பா, ராகுலுக்கு நான் சத்தியம் செய்துதந்தேன். வருடங்கள் தாண்டியதும் எல்லாம் மறந்து அழிந்துபோய்விட்டதா?’ – நினைவுகளில் இருந்த என்னை, அப்பாவின் குரல்தான் மீண்டும் இயல்புக்குக் கொண்டுவந்தது.

நிர்மலாவின் இதயத்தில் ராகுல்1

‘`என்னம்மா நீ… உப்புமாவை சாப்பாடு பிசையிற மாதிரி பிசைஞ்சுட்டு இருக்கே? நான் என்ன சொல்றேன்னு கேட்டியா இல்லையா?

நீ ஏதோ குழப்பத்துல இருக்கேன்னு நினைக்கிறேன்’’ என்றவரிடம், ‘`ஆமாப்பா, நீங்க என்ன சொன்னீங்கனு கவனம் இல்லாம இருந்துட்டேன்’’ என்றேன்.

‘`என் ஆபீஸ்ல `கனகம்னு புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்காங்க’னு அன்னிக்கு சொன்னேன்லம்மா?’’ நிஜமாகவே அப்படி ஒருவரை அவர் சொல்லவில்லைதான் என்றாலும், “ஆமாப்பா, `அவங்க ரொம்ப நல்லவங்க’னு சொன்னீங்க” என்றதும் அவர் குழப்பமாகி, பின் மீண்டும் தொடர்ந்தார்.

“அவங்க கணவர் இறந்து, இப்ப ஆறேழு வருஷம் ஆகிருச்சுபோல! பத்து வருஷ வாழ்க்கையில அவங்களுக்குக் கொழந்தை குட்டியும் இல்லை! இங்கே உன் அம்மா இறந்தும் ஆறேழு வருஷம் ஓடிப்போயிருச்சு. கனகம்கிட்ட நான் பேசினதுல அவங்க என்கூட ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க சம்மதம் தெரிவிச்சுட்டாங்க’’ என்றவர், மூன்று டிபன்பாக்ஸில் உப்புமாவை நிரப்பிக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு என் முந்தைய நாள் கனவின் ஞாபகமே வந்தது.

`அப்பாடா! எங்கே என்னை ஒரு கெளபாய்க்கு அவசர அவசரமாகக் கட்டிக் கொடுத்துவிடுவாரோ’ என்ற கவலையில் இருக்க, அப்பாதான் ஒரு கனகத்தைக் கட்டிக்கொள்ள இந்த நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார் என்பது புரிந்ததும் நான் நிம்மதியானேன். ராகுல் எனக்குத்தான். அப்பா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ராகுலின் அப்பாவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வீணாகக் குழம்பிவிட்டேன்போல.

இந்த மூன்று டிபன்பாக்ஸ் கனவு, எனக்கு இரவில் எந்த நேரத்தில் வந்தது என்றே தெரியவில்லையே! எப்போதும் அப்பாவுக்கு ஒன்றும், எனக்கு ஒன்றும் என்றுதானே தினமும் வீட்டில் இருந்து கிளம்புகிறோம். `ஃபைனல் டெஸ்டினேஷன்’ படத்தில்தான் நடக்கப்போகும் விபத்துக்கள் அனைத்தும் முன்பாகவே ஒரு கேரக்டருக்குத் தெரிந்துவிடும். அதுமாதிரி அல்லவா இப்போது எனக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. என்ன நிம்மதி என்றால், விபத்து நடப்பதுபோல் எல்லாம் நான் கனவு காணவில்லை.

‘`என்னம்மா, எதுக்கு மூணு டிபன்பாக்ஸுனு பார்க்கிறியா? கனகம்தான் `நீங்க செஞ்ச உப்புமாவை இன்னிக்கி ஒரு பிடி பிடிச்சிடறேன்’னு சொன்னாங்க. அதான்’’ என்றவரிடம் புதிதாக புன்சிரிப்பைப் பார்த்தேன்.

அன்று கல்லூரியில் தோழியிடம் விஷயத்தைச் சொன்னபோது அவளோ, `‘நீதான் ராகுல்… ராகுல்னு எந்த நேரமும் ராகுல் நினைப்பாவே இருக்கே. அவன் இப்ப எங்கே, எப்படி இருக்கான்னு ஒரு தகவலாவது உனக்குத் தெரியுமா? `சத்தியம் வாங்கிட்டான்’னு வேற சொல்றே. அப்படி வாங்கினவன் இத்தனை வருஷத்துல ஒருவாட்டியாவது உன்னைப் பார்க்க வந்தானா? அவன் இந்நேரம் யாரோட ஜாலியா இருக்கானோ’’ என்றவளின் கொமட்டில் ஒரு குத்துவிடலாம்போல கோபம் வந்தது எனக்கு.

என் முகம் போன போக்கை உணர்ந்தவள், ‘`இப்ப என் மேல உனக்குக் கோபம்தான் வரும்டி. இந்த விஷயத்தை நீ நல்லா யோசிச்சுப்பார்த்தீன்னா அதுல இருக்கிற உண்மை உனக்குப் புரியும். அப்போதைக்கு, பெரியவங்க ஒரு பேச்சுக்கு என்ன வேணும்னாலும் சொல்வாங்க. அதை நம்பிக்கிட்டு நாலு வருஷமா இருக்கியே. உன்னை நினைச்சா, எனக்குப் பாவமா இருக்குடி’’ என்றாள்.

`இப்படி எல்லாம் விளக்கம் பேசும் தோழிகளைக் கூட வைத்திருந்தால் பயங்கரமான காதல்கூட பம்மத்தான் செய்யும்’ என நினைத்துக்கொண்டேன். போக, ராகுல் அப்படி எல்லாம் செய்யக்கூடியவனா? ராகுல் எனக்கானவன். ஊலலலல்லா… ஊஊலலல்லா! மானாமதுர மாமரக் கிளையிலே! அவன் கண்ணு ரொம்ப அழகா… அவன் வெட்கம் ரொம்ப அழகா… எந்தக் கேள்வி எனைக் கேட்டாலும் என்ன நான் பாடுவேன்?

பெருந்துறை பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்பு வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்குள் ராகுல் மீது அந்தச் செடி வளர ஆரம்பித்தது. அவனும் `நிர்மலா… நிர்மலா…’ என, கவிதைகளாக எழுதி என்னிடம் கொடுத்துக் குவித்துக்கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் இருக்கும் அவனை, எனக்குப் பிடித்துப்போனதற்கு, தனியாக எந்தக் காரணத்தையும் அடுக்கிக்கொண்டிருக்க முடியாது.

விஷயம் தலைமையாசிரியையிடம் செல்ல, பஞ்சாயத்துக்காக இருவரின் அப்பாக்களும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். ராகுல், பள்ளி முழுக்க விஷயம் அம்பலமாகிவிட்டதற்காக அழுகிறானா… அவன் அப்பாவுக்குத் தகவல் போனதற்காக அழுகிறானா… இல்லை எனக்காக அழுகிறானா என்றே தெரியவில்லை. ஆனால், கடைசி நிமிடம் வரை அழுதபடியே நின்றுகொண்டிருந்தான் தலைமையாசிரியை அறையில்.

இறுதியாக, அப்பாக்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். ராகுல் படிப்பை முடித்து நல்ல வேலை ஒன்றில் அமரும் வரை, இருவரும் சந்தித்துக்கொள்ளவே கூடாது. இதுதான் முடிவு. பின்னர் இரு பெற்றோர்களும் பிள்ளைகளைக் கட்டிக்கொடுத்து சம்பந்திகளாகிவிடுவது. விஷயம் எவ்வளவு சுலபம் பாருங்கள்!

ராகுல், இறுதியாக தன் வலது கையை என்னிடம் நீட்டினான் அழுதபடி… ‘`நான் சத்தியமா உன்னைக் கைவிட மாட்டேன் நிர்மலா. என் வாழ்க்கையில் உன்னைத் தவிர வேற யாரும் எனக்கு மனைவியா வரவே முடியாது. நீ எனக்காகக் காத்திருக்கணும் நிர்மலா! `காத்திருக்கேன்’னு இப்ப எனக்கு சத்தியம் பண்ணிக் குடு’’ என்றதும், மளாரெனப் பாய்ந்துபோய் அவன் கை மீது எனது வலது கையை வைத்து சத்தியம் செய்துகொடுத்தேன்.

நினைத்துப்பார்த்தால், நேற்றுதான் இந்த விஷயம் பள்ளியில் நடந்ததுபோன்றே இருந்தது. போக, ராகுல் என்பவன் யார்… அவன் வீடு, பெருந்துறையில் எங்கே இருக்கிறது… அவன் அப்பா என்ன தொழிலில் இருக்கிறார்… அவனுக்கும் என்னைப்போன்றே அம்மா இல்லையா? எதுவுமே எனக்கு அப்போது தெரியாது. ஏன் இப்போதுகூடத் தெரியாது. என்ன இருந்தாலும், என் அப்பாவுக்கு அவர் யார் என்ற விவரம் எல்லாம் தெரியும் அல்லவா! தெரிந்திருக்கத்தானே வேண்டும். `ராகுலைத் தவிர எந்த டோப்புருவையும் நான் கட்டிக்கொள்ள மாட்டேன்’ என சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன் என்பது எல்லாம் அப்பாவுக்கும் தெரியும்தானே!

`ராகுல் என்னை அடைந்தே தீருவது’ என, இப்போது படிப்பை முடித்து ஒரு வேலையில் அமர்ந்திருக்கலாம். முதல் மாதச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேராக என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் அல்லது அவன் அப்பா அவனுக்குப் புதியதாக ஒரு தொழிலைத் தொடங்க பண உதவி செய்திருக்கலாம். எப்படியாயினும் சீக்கிரமாக அவன் என் வீட்டு வாசலுக்கு வந்துவிடும் நாள் தூரத்தில் இல்லைதான்.

அவன் முதன்முதலாக என்னைப் பார்க்கும்போது, நான் நீலவர்ண சுடி அணிந்திருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அதைவிட அவனும் நீலவர்ண முழுக்கைச் சட்டை அணிந்திருந்தால்? ஆஹா! `கொத்தாணிக் கண்ணாலே என்னைக் கொத்தோட கொன்னானே! உச்சாணிக் கொம்பேத்தி என்னை உக்காரவெச்சானே! ஒரு நெல்லுக்குள் என்னை ஒளியவெச்சே உமியா என்னைப் பறக்க வெச்சே!’

அப்பாவுக்கும் கனகம் மேடத்துக்கும் என் கல்லூரிக்கு எதிரே இருக்கும் திண்டல் முருகன் கோயிலில்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அப்பாவால் நினைத்த காரியத்தை உடனே சாதித்துக்கொள்ள முடிகிறது. என்னால்தான் முடிவது இல்லை. `படுத்தால் உறக்கம் வரலை… பாய் விரித்தால் தூக்கம் வரலை..!’னு லூஸுத்தனமான கவிதை மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

புது சித்தியின் சமையல் அமர்க்களமாக இருந்தது. புதுசுக்குத் துணியைக் கடுசாக வெளுத்துப் போட்டுக்கொள்வதுபோல அவர் வீட்டையே மாற்றியிருந்தார். பழைய சாமான்கள் கிடந்த அறையைச் சுத்தப்படுத்தி, ஆட்களைவிட்டு பெயின்ட் அடித்து எனக்கான படுக்கையறையாக அற்புதமாக மாற்றிக்கொடுத்திருந்தார். அன்றுதான் முதன்முதலாக புது சித்திக்குப் பிரியத்தின் பேரில் முத்தம் ஒன்று கொடுத்தேன்…

“தேங்க்ஸ் சித்தி.’’

“ `அம்மா’னு சொல்லு’’ என்றார்.

அப்பா, தினமும் தாவாங்கட்டையில் எட்டிப்பார்க்கும் வெள்ளைநிற முடிகளை ஷேவிங் செய்துகொள்ள நேரம் ஒதுக்கிக்கொண்டார். அப்பாவின் தோளில் கை போட்டுக்கொண்டு புது சித்தி ஆபீஸ் கிளம்பினார். சித்தியின் ஸ்கூட்டி வீட்டில் சும்மா நிற்க, அதை எடுத்துக்கொண்டு பெருந்துறையில் நகர்வலம் வர ஆரம்பித்தேன்.

அப்படி நகர்வலம் வந்த ஒரு நேரத்தில்தான், ராகுலின் நண்பன் சீனுவை மகாலட்சுமி தியேட்டர் முன்பாக துணிக்கடை வாயிலில் பார்த்து, அவனை நெருங்கி நிறுத்தினேன் ஸ்கூட்டியை. அவனுக்கு என்னை யார் என்றே தெரியவில்லை. ராகுலை விசாரித்தபோதுதான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். ராகுலுக்கு, காஞ்சிக்கோவில்தான் சொந்த ஊராம். அவன் அப்பா சுந்தரமூர்த்தி டெலிபோன் டிபார்மென்ட்டில் வேலையில் இருந்தாராம். ராகுல் பள்ளியில் இருந்து சென்றதும் மேற்கொண்டு எல்லாம் படிக்கவே போகவில்லை என்றும், காஞ்சிக்கோவிலில் கோழிக்கடை போட்டிருந்ததாகவும் சீனு சொன்னான். அவன் சொன்னவற்றை மனதில் பதியவைத்துக்கொண்டேன். சீனுவுக்கு நன்றி சொல்லி கிளம்பலாம் என்றபோது, ‘`துணிமணி எடுக்கணும்னா இங்கேயே வா நிர்மலா. இது எங்க கடைதான்’’ என்றான். தலையாட்டிவிட்டு கிளம்பினேன்.

ஆக, காஞ்சிக்கோவிலில்தான் ராகுல் இருந்திருக்கிறான். `கறிக்கோழிக் கடை வைத்திருக்கிறான்’ என்பதுதான் உறுத்தலாக இருக்கிறது. அவன் இந்த நேரம் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்! லூஸுப்பயல். அவனைச் சந்தித்து, `இதெல்லாம் சுத்தப்படாது ராகுல். நாம ஒரு மருந்துக்கடை போட்டு பொழைச்சுக்கலாம் அல்லது அல்லது அல்லது…’ இப்படி ஏதேதோ தொழிலில் அவனை உட்காரவைத்து ரசித்துக்கொண்டிருந்தேன், ராஜ் என் வீடு வந்து சேரும் வரை. ராஜ்?

`விடிகாலையில் காணும் கனவுகள் அனைத்தும் நடந்தேறிவிடும்’ என்றுதானே எல்லாரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்? அன்று என் கனவில் எங்கள் வீட்டின் முகப்பு அறை ஸ்டேண்டில் நான்கு ஜோடி மிதியடிகள் இருப்பதாக கனாக்கண்டு திடுக்கிட்டு விழித்தேன். ஒன்று எனது, ஒன்று அப்பாவுடையது. மற்றொன்று சித்தியுடையது. இன்னொன்று ஆண்கள் விளையாட்டின்போது அணியும் ஷூ மாதிரி தெரிந்ததே! பார்த்தால் அன்று மாலை வீட்டுக்குள் ராஜ்குமார் வந்துவிட்டான்.

ராஜ்குமார் என் புது சித்தியின் தம்பிதான். பெருந்துறை குன்னத்தூர் சாலையில் வெப் டிசைன் ஆபீஸ் போட்டிருக்கிறானாம். வாடகை வீட்டில் தங்கியிருந்தவனை `நம் வீடுதான் இவ்ளோ பெருசா இருக்கே. இங்கேயே தங்கிக்கோயேன்’ என அப்பா அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டார். என் அப்பா இந்த அளவுக்கா முட்டாளாக இருப்பார்? வயசுக்குவந்த பெண் ஒருத்தி வீட்டில் இருக்க, திருமணமே ஆகாத கன்னிப் பையன் ராஜ்குமாரை எப்படித் தங்க அனுமதிக்கலாம்? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிவிட்டால் நாளை நான் எப்படி ராகுல் முகத்தில் விழிப்பது… என் கதை முழுவதும் அப்பாவுக்குத் தெரியாதா? அப்பாக்கள் திடீரென புது கல்யாணத் திருகலில் லூஸு அப்பாக்களாக மாறிவிடுகிறார்கள்போல!

நானாக அப்பாவிடம் தனித்துப் பேசவும் முடியவில்லை. போனில் பேசலாம்தானே என்றாலும் சொந்த அப்பாவிடம் போனில், `ராஜ் நம்ம வீட்டுல வேண்டாமப்பா’ என என்னால் எப்படிச் சொல்ல முடியும்? அப்பா இப்போது எல்லாம், வாரம் ஒருமுறை தலைக்கு கருஞ்சாயம் பூசிக்கொண்டு அடையாளம் தெரியாதவண்ணமாக மாறிக்கொண்டிருக்கிறார். வயிற்றில் இருந்த சின்ன அழகான தொப்பையைக் குறைக்க, வீட்டின் மாடியில் S, W, Y எனப் பலவிதமாகப் படுத்து எழுகிறார். போதாதற்கு ராஜ் வேறு, ‘மாம்ஸ், அப்படி இல்லீங்க மாம்ஸ். இப்படி…’ எனக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

‘`உங்க டாட்டர் ஏன் எந்த நேரமும் முகத்தை இறுக்கமாவே வெச்சிருக்காங்க மாம்ஸ்?’’ என்று ஒருநாள் அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கும்போது ராஜ் கேட்டுவிடவே, எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பாதி உணவுடன் எழுந்து கை கழுவக் கிளம்பிவிட்டேன். அவனோ, மிரண்டு தவித்துப்போய் நான் கை கழுவும் இடத்துக்கே வந்து, `‘ஸாரி… ஸாரி… ஸாரி நிர்மூ. ப்ளீஸ்… நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்பா!’’ என்று அவன் கெஞ்சக் கெஞ்ச எனக்கு அழுகை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

புது சித்திதான் வந்து என்னை அணைத்துக்கொண்டார். அப்பாவோ இங்கே நடப்பவற்றைக் கண்டுகொள்ளாமல் சப்பாத்தியைப் பிய்த்து சட்னியில் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். புதுக் கல்யாணத் திருகலில், அப்பாக்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மறந்து பொம்மைகளாகிவிடுகிறார்கள்போல!

அன்று இரவு படுக்கையில் படுத்தபோது நிம்மதிபோயிருந்தது. ராஜ்குமாரை, சித்தி ஏதோ திட்டத்தோடுதான் வீட்டுக்குள் கொண்டுவந்திருக்குமோ? ராஜ்குமாருக்கு ஒரு குறைச்சலும் இல்லைதான். போக, நல்லவனும்கூட. ஆனால், எனக்குத்தான் அவனைப் பார்த்தாலே பற்றிக்கொண்டுவருகிறது. ராகுலுக்குத் துரோகம் செய்யவைத்துவிடுவான் படுபாவி. அன்றைய தூக்கத்தில், ராகுலோடு அவனது க்ரக்ஸில் பின் ஸீட்டில் அமர்ந்து நான் பயணிப்பது போன்று கனவு வந்தது. காலையிலேயே அப்படி நடந்துவிடுமா என்ன?

எழுதிவைத்தாற்போல ஸ்கூட்டியின் டயர், செத்த தவளை மாதிரி தரையில் அப்பி நின்றிருந்தது. அப்பா வழக்கம்போல புது சித்தியுடன் ஸ்கூட்டரில் `பை பை!’ சொல்லி கிளம்பிவிட்டார். `ஸ்கூட்டியின் டயரை ராஜ் பஞ்சராக்கியிருப்பானோ? சேச்சே! ராஜ் அப்படிச் செய்யக்கூடியவன் அல்ல’ – தனக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் தன் க்ரக்ஸை கொஞ்சமாகத் துடைத்து, சாலையை நோக்கித் திருப்பி நிறுத்திவிட்டு `வருவாளா… மாட்டாளா?’ என்பது மாதிரி என்னைப் பார்த்தான். அந்தச் சாப்பாட்டு சம்பவத்துக்குப் பிறகு, ராஜ் என்னைக் கண்டால் ஒதுங்கி ஒதுங்கிச் சென்றுகொண்டிருந்தான். இப்போதுகூட சித்திதான் இவனிடம், ‘நிர்மலாவை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டு ஆபீஸ் போ’ என்று சொல்லிச் சென்றாள். அதற்காகத்தான் காத்திருந்தான். கனவு நிஜமாகப்போகிறது.

நான் பொய்யாக்கலாம் என்றாலும், இன்று காலேஜ் சென்றே ஆக வேண்டும். விடுப்புப் போட்டுக்கொண்டு… `ஐய்யய்யோ… அது போர்!’ நானாகச் சென்று அவன் பின்னால் அமர்ந்துகொண்டேன். அப்போதும் அன்றைய சம்பவத்துக்கு மிக மென்மையாக மன்னிப்புக் கேட்டான். `உசுரே போகுதே மனசைத் தாடி என் மணிக்குயிலே…’ ஐயோ கொல்லாதேடா என்னை! நான் ராகுலுக்கெனப் பிறப்பெடுத்தவள்!

பேருந்து நிறுத்தத்தில் என்னை இறக்கிவிட்டவன், `‘அப்ப, நீ என்னை மன்னிக்கவே மாட்டியா நிர்மூ?’’ என்றான்.

நிர்மலாவின் இதயத்தில் ராகுல்2

இவனென்ன எப்போ பார்த்தாலும், `நிர்மூ… நிர்மூ’ என்று?’

`‘நிர்மூ, நான் உன் வீட்டுல தங்குறது உனக்கு டிஸ்டர்ப்பா இருக்காடா? நான் வேணா பழையபடி ரூம்லயே தங்கிக்கிறேனே…’’ என்றான்.

‘`ஒண்ணும் வேண்டாம். அப்புறம் வீட்டுல என்னைத் திட்டுவாங்க’’ என்றேன்.

‘`அப்ப மன்னிச்சுட்டதா சொல்லுடா நிர்மூ’’ என்றான்.

பேருந்து வரவே, `‘சரி சரி, மன்னிச்சுட்டேன் ராஜ். எனக்கு பஸ் வந்திருச்சு பை’’ என்று சொல்லி, பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஜன்னல் இருக்கையில் அமர்ந்தபடி, வெளியே நின்றிருந்த
வனைப் பார்த்தேன். அவன் முகத்தில் பழைய சந்தோஷத்தைப் பார்க்க முடிந்தது. பேருந்து கிளம்பும்போது அவன் எனக்கு கையசைத்தான்.

பக்கத்தில் இருந்த தோழிதான் என் தொடையைக் கிள்ளினாள். “இவருதான் அந்த ராகுலா? சூப்பரா இருக்காப்ல. நீ காத்திருந்ததுல ஒண்ணும் தப்பே இல்லைடி” என்றாள்.

அவளுக்கு விளக்கம் சொல்லவேண்டி வந்தது. “ராகுல்தான் என் உயிர்” என்று அவளிடம் கோபமாகச் சொன்னேன்.

“அதை ஏன் இப்படிக் கோபமா சொல்றேடி?” என்று திருப்பி என்னை மடக்கினாள் அவள்.

“ஆமாம்ல.”

கடைசியாக ஒன்று சொன்னாள் பாருங்கள், வெப் டிசைன் ஒன்றை அவளுக்குச் செய்து தரச் சொல்லி, ராஜ்குமாரிடம் இன்று மாலையே போய் நிற்கப்போவதாக! அதற்கும் கோபமே எனக்கு வந்தது. இப்படித் தொட்டதற்கு எல்லாம் கோபம் வர என்ன காரணம் என்றே தெரியவில்லை எனக்கு.

அடிக்கடி வரும் கனவுகள் பற்றி சொல்லிக்கொண்டே வந்தேன் அவளிடம்.

`‘நீ என்ன `நூறாவது நாள்’ நளினியாடி? கனவு வருதாம், நிஜத்துல நடக்குதாம்! அப்ப ராகுல் மட்டும் ஏன் கனவுல வரலை? ராகுலோட கறிக்கோழிக் கடையில நீயும் கறி வெட்டிக்கிட்டு இருக்கிறாப்ல கனவு வர மாட்டேங்கு?’’ என்றவளை, தொடையில் கிள்ளிவைக்கத்தான் முடிந்தது என்னால்.

பேசாமல் ராஜ்குமாரிடம் தன் பழைய காதல் விஷயத்தைச் சொல்லிவிடுவதுதான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும். ஆக, என் விஷயத்தை ஒரு நல்ல நாளில் வீட்டின் மொட்டைமாடியில் அமர்ந்து அவனுக்குத் தெரிவித்தேன். முதலாகவே அவன் அதிர்ச்சியாகிவிட்டது நன்றாகவே தெரிந்தது எனக்கு. இருந்தும் அவன் க்ரக்ஸின் பின்னிருக்கையில் அமர்ந்து காஞ்சிக்கோவில் சென்றேன். நல்லவேளை… நேற்றைய கனவில் அவனோடு பேருந்தில் அவன் தோளில் சாய்ந்து சென்றுகொண்டிருப்பது போன்று கனவு கண்டிருந்தேன். அது நடக்கவில்லை.

ராஜ்தான் ஒவ்வொரு கறிக்கோழிக் கடையாக விசாரித்து, இறுதியில் அந்தக் குடும்பம் பவானி சென்றுவிட்டதாக அறிந்துகொண்டான். நல்லவேளை, அவர்களை பார்சல்செய்து அனுப்பிவைத்தவர் ஒரு கறிக்கடைக்காரர். அனுப்பிவைத்த இடத்தையும் கூறினார். அடுத்த நாள், நான் கண்ட கனவு நிஜத்தில் நடந்துவிட்டது. பவானி சென்றுகொண்டிருக்கும்போது தூக்கம் சுழற்ற அவன் தோளில்தான் சாய்ந்து பயங்கரமாகத் தூங்கியிருக்கிறேன். பவானி பேருந்து நிறுத்தத்தில் தட்டி எழுப்பி என்னை இறங்கவைத்தான். இரவு பூராவும் ராகுலைச் சந்தித்துவிடுவதாகவும், அவன் ஓடிவந்து ‘நிர்மலா!’ எனக் கத்திக் கட்டிக்கொள்வதுமாகவே நினைத்து நினைத்து விடிய விடிய தூங்காமல் கிடந்தால், பேருந்தில் தூங்காமல் இருக்க முடியுமா என்ன?

பவானியில் சுந்தரமூர்த்தி வீட்டைக் கண்டுபிடித்து நாங்கள் போய் நிற்கும்போது, அந்த வீட்டில் வேறு ஒரு குடும்பம் இருந்தது.

‘`ஆமாங்க ஆமாங்க! நீங்க கேக்குற சுந்தரமூர்த்தி ஆறு மாசம் முன்னால ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருங்க! இந்தா பக்கத்துத் தெருவுலதான் நாங்க வேற வீட்டுல குடியிருந்தோம். அவரு பையனுங்களா? அவனெல்லாம் மனுஷனே இல்லைங்க! அப்பா இறந்த அன்னிக்கி என்ன குடிங்கிறீங்க? இப்ப ரெண்டு மாசம் முன்னாலதான் அம்மாவைக் கூட்டிட்டு வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனான். வீடு காலியானதும் இது கொஞ்சம் விஸ்தாரமா இருக்குனு நாங்க வந்துட்டோம். எங்க போனாப்லைனு கேக்கிறீங்களா? தெரியலீங்களே!” என்று அவர் கை விரிக்கவும், ராஜ் என்னை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வந்துவிட்டான்.

`என் முகத்தில் ஏதாவது தெரிகிறதா?’ என, என் கையில் பெப்ஸியைத் திணித்துவிட்டுப் பார்த்தான். நான் அவன் முகத்தில் ஏதாவது தெரிகிறதா எனத் தேடினேன். பேருந்தில் நாங்கள் பெருந்துறை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். ராஜ், போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நான் அவன் போனில் பேசும் அழகைத் திருட்டுத்தனமாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். படுவா, அதைக் கண்டுவிட்டான்போல! ‘அப்புறம் கூப்பிடறேன்’ என்றவன், போனை அணைத்துவிட்டு என்னைப் பார்க்கும்போது நான் தலையை வெளியே வேடிக்கை பார்ப்பவள்போல திரும்பியிருந்தேன்.

‘`நிர்மூ, நான் பவானியில வந்து இறங்கினதும் `அந்த ராகுலை நீ சந்திக்கக் கூடாது’னு மனசுல நினைச்சேன் நிர்மூ’’ என்றான் என் முகத்தைத் திருப்பி. அவனின் இடது கையைப் பிடித்துக்கொண்டே, ‘`நானும்தான் ராஜ்’’ என்றேன்!

– பெப்ரவரி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *