தங்கமூடி பேனா..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 3,828 
 

இரவு மதுரைவீரன் கெட்டப்பில் சிவகுமாரின் கனவில் மீண்டும் வந்தார் அப்பா கணபதி.

முறுக்கு மீசை, கையில் அரிவாள், கரிய அடர்த்தியான பயமுறுத்தும் புருவங்கள்…

“டேய்..சிவா.. உண்மையைச் சொல்லு..நீதானே எம்பேனாவ எடுத்த.! திருட்டு பயலே.
ரத்தம் கக்கியே சாகப்போற பாரு..”

போனவாரம் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் , கருப்பு கண்ணாடி, தொப்பி, கையில் துப்பாக்கியுடன் வந்தது அவனுக்கு அவ்வளவு பயம் தரவில்லை..மாறாக சிரிப்புதான் வந்தது..

“ஏய்.. என் பேனா உங்கிட்ட தான் இருக்கு..குடுக்கல..சுட்டுடுவேன் சுட்டு..”

அப்பா..இந்த ஜேம்ஸ்பாண்ட் உங்களுக்கு செட்டாகல.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.. தூக்கத்தில் கலகலவென்று சிரித்தான்..

ஆனால் இன்றைக்கு அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டான்.

“ஐய்யோ..சாமி.. சத்தியமா நான் திருடல..அது வந்து.வந்து.!”

“என்னடா வந்து..போயி..”

அரிவாளை ஓங்கினார்.

“அம்மா..அப்பா என்ன அரிவாளால வெட்ட வரா..”

படுக்கையெல்லாம் நனைந்து விட்டது..

“ஐய்யே..அம்மா..சிவாவப் பாரு.படுக்கையிலையே.. நாத்தம் தாங்கல..இவங்கிட்ட என்னால படுக்க முடியாது சாமி..”

“டேய்..சிவா..சிவாக்கண்ணு.. என்னடா ஆச்சு.மூஞ்சியெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போய்.
ஏதானும் கெட்ட சொப்பனம் கண்டயா..?

“அம்மா.. அப்பாதான் தெனமும் கனவில வந்து பயமுடுத்தறா அம்மா..!! எம்பேனா எங்க.எம்பேனா எங்கன்னு அடிக்கடி கேட்டு மிரட்றா..”

“ஐய்யோ..ஏன்னா கொழந்தைய இப்படி பாடா படுத்தறேள்.பெரிய்ய பேனா.

பகவானே.. இவர் ஆத்மா இன்னமும் ப்ரீதி அடையல போலிருக்கே..என்ன குற வச்சோம் உங்களுக்கு..??

ஒரு பேனாக்காகவா இன்னும் இந்த வீட்ட , மனுஷாள, சுத்தி சுத்தி வரேள்..?

கோந்த..வா.. பாத்ரூம் போய்ட்டு எல்லாத்தையும் மாத்திண்டு எங்கிட்ட வந்து படுத்துக்கோ..சாமி கிட்ட ஒரு சம்புடத்தில வீபுதி இருக்கும் பாரு..இட்டுண்டு வா..ஒரு காத்து, கருப்பும் அண்டாது..

ஈஸ்வரோ..ரஷது.”

காலையில் சிவகுமார் நேரம் கழித்துதான் எழுந்திருந்தான்.. நல்லவேளை..

ஞாயிற்றுக்கிழமை.. பள்ளிக்கூடம் இல்லை..

அம்மா சுடச் சுட இட்லியும் வெங்காயச் சட்னியும் பண்ணியிருந்தாள்.

“கோதை. உனக்கும் சிவாக்கும் தட்டெடுத்து வை.அவன சாப்பிட கூப்புடு..”

“ஏண்டா .சிவா.. ஒரு நாளப்போல என்னடா கனவு அது. பாவண்டா அப்பா..அந்த மனுஷன் ஒரு கரப்பாம்பூச்சிய அடிங்கோன்னாலே ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிப்பார்..

அருவாள பாத்தாலே நடுங்குவாரே.அவரா ஒன்ன வெட்டப்போறா.???

பகவானே. இவர் மனசில என்ன இருக்குன்னே தெரியலையே. பேனா தொலஞ்சு போனதுக்கா மனுஷன் இத்தனநாள் துக்கம் அனுஷ்டிக்கணும்..?

வருஷாப்திகம் வேற வர்ரது.. இந்த வருஷம் அவரோட ஆத்மா சாந்தியடைய பண்ணு ஈசுவரா..!!”

கணபதி , சங்கரி சொன்ன மாதிரி ஒரு அப்பாவி மனுஷன்.
எறும்பக்கூட மிதிச்சிடப் போறோமோன்னு தாண்டிப் போற சுபாவம்..

அவருக்கு முறுக்கு மீசையும் இல்லை..உரத்த குரலும் கிடையாது.
அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசாதவர்.

***

அன்றைக்கு வீட்டுக்கு வரும்போது கணபதி என்றுமில்லாத உற்சாகத்தில் இருந்தார்..

“சங்கரி, கோதை, சிவா, இங்கே சித்த வாங்கோ..சங்கரி, குடிக்க கொஞ்சம் ஜலம்…!

“என்னன்னா..ஒரே குஷி.ஏதோ பார்ட்டின்னு சொல்லிண்டிருந்தேளே.”

அன்று கணபதியின் இருபத்தைந்து வருட சேவையைப் பாராட்டி அவர்களுடைய பத்திரிகை அலுவலகத்தில் ஒரு பாராட்டு விழா..

இருபது வயதில் , சாதாரண ஒரு நிருபராகச் சேர்ந்து தனது எழுத்துத் திறமையாலும், அயராத உழைப்பாலும் உதவி எடிட்டராக , எல்லோரது அன்புக்கும் பாத்திரமாய் உயர்ந்து நின்றவரது சேவையைப் பாராட்டுவிழாவாக கொண்டாட தீர்மானித்தார் ஆசிரியர் திருஞானசம்பந்தன்.

“அப்பா..என்ன ..??? கூப்பிட்டேளா..??”

“ஆமாண்டா..சிவா. உனக்குத்தான் ரொம்ப பிடிக்கும்..இதோ பாரு..!”

கையிலிருந்த ஒரு சின்ன கருப்புப் பெட்டியைத் திறந்தார்..

உள்ளே தகதகவென மின்னியது தங்க மூடி போட்ட ஒரு கருப்பு பேனா..!

“அப்பா.என்னப்பா.தங்க பேனா. இதுவரைக்கும் இந்த மாதிரி பேனாவை நான் பாத்ததேயில்ல.”

சடாரென்று அதை எடுக்க வந்த சிவகுமாரின் கையைப் பிடித்து நிறுத்தினார்..

“தொடாம பாருங்கோ.. எல்லாரும் தொட்டு தொட்டு பாத்தா சீக்கிரம் அழுக்காயிடும்..நானே ஒரு நாள் உனக்கு எழுதத் தருவேன்.”

புஸ்ஸென்று காத்து இறங்கின பலூன் மாதிரி முகம் சுருங்கிப் போனான் சிவா.

சாதாரணமாய் எந்தப் பொருள் மீதும் அதிகம் பற்று வைக்காத அப்பா , இந்த பேனா விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை வீம்பு காட்டுகிறார்..??

“ஏன்னா.குழந்தை ஆசையா கேக்கறானே. ஒரு நிமிஷம் கைலதான் வச்சுண்டு பாக்கட்டுமே.???

“நானே குடுப்பேண்டி சங்கரி. இப்ப வேண்டாம்.!”

விரும்பும் பொருள், கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும் , கையில் கிடைக்கவில்லை என்றால் அந்த பொருளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி பிறப்பது தானே மனுஷ சுபாவம்.

பத்து வயது சிவாவுக்கும் அந்த வெறி பிடித்து விட்டது..

அன்றிலிருந்து அவனுடைய தூக்கமும் தொலைந்தது..

கனவில் சதா தங்கமூடி பேனா வந்தது.

சிவகுமார் இரண்டு முறை அப்பாவிடம் கெஞ்சாத குறை..

“அப்பா.. நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்.. சும்மா பாத்துட்டு தரேனே.”

“நாந்தான் ஒரு நாளைக்கு நிச்சியமா தரேன்னு சொன்னேனே.நச்சரிக்காத..!”

கணபதி சாதுதான்.. ஆனால் பிடிவாத பேர்வழி..

கல்யாணமே வேண்டாமென்று பிடிவாதத்தில் இருந்தவர் சங்கரியைப் பார்த்ததும் தலையாட்டி விட்டார்..

முதலிரண்டு பெண்களுக்கப்புறம் பிறந்தவன் சிவா.அடுத்து கோதையுடன் முடித்துக் கொண்டார்கள்…

பெண்கள் இரண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி விட்டார்..

சிக்கனமாய் குடும்பம் நடத்தத் தெரிந்தவள் சங்கரி.

அளவுக்கு அதிகமாய் ஆசைப்படாத குழந்தைகள்.

நிம்மதியான வாழ்க்கை..

பேனா வந்தது..கூடவே குடும்பத்தில் குழப்பமும் வந்தது..

ஒரு நாள் வீட்டில் யாருமில்லை.. அன்றைக்கு சிவா பள்ளிக்கூடத்தில் ‘ஃபவுண்டர்ஸ் டே’..விடுமுறை..

சிவாவுக்கு அந்தப் பேனாவை ஒரு தடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டுமென்ற ஆசை விசுவரூபம் எடுத்தது..

மெள்ள அப்பாவின் அலமாரியைத் திறந்தான்.. அதில் இரண்டு டிராயர்கள் இருக்கும்.

ஒன்றைத் திறந்ததும் கண்ணில் படும்படி மேலாக இருந்தது அந்த பெட்டி..

சத்தம் போடாமல் பெட்டியைத் திறந்து பேனாவை மட்டும் கையில் எடுத்தான்.

உடம்பெல்லாம் புல்லரித்தது. தடவிக் குடுத்தான்..

வழுவழுவென்று.!

பூனைக்குட்டியைத் தடவிக் குடுப்பது மாதிரி அத்தனை சுகமாக இருந்தது..

இப்போது லேசாக பயம் தெளிந்த மாதிரி இருந்தது. ஆனால் ஆசை, பேராசையாய் மாறியது..

எழுதிப் பார்த்தால்..???

அலமாரியை சாத்திவிட்டு ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு போனான்.!

இப்போது பயம் சுத்தமாக போய்விட்டது.

‘Parker‘ என்று மூடியில் எழுதி இருந்தது..

மூடியைத் திறந்தான்.நிப் பளபளவென்று மின்னியது.

இங்க் இருக்குமா..??

எழுத ஆரம்பித்தான். வழுக்கிக்கொண்டு போனது..

‘ அட! என் கையெழுத்து எத்தனை அழகாகத் தெரிகிறது…!

நேரம் போனதே தெரியவில்லை.

“டேய்.சிவா..கடங்காரன்.வாச கதவ மட்ட மல்லாக்க தொறந்து போட்டுட்டு எங்க போய்த் தொலஞ்சான்.???

சத்தம் கேட்டதும் பேனாவை மூடி டிராயர் பேக்கட்டில் போட்டுக் கொண்டே கீழே ஓடிவந்தான் சிவா..

“ஏண்டா இப்பிடி பொறுப்பில்லாம இருக்க.கதவு தொறந்தே கெடக்கு.. திருடன் வந்து அலமாரியத் தொறந்தாக்கூட தெரியாதே.‌”

திருடன் எதற்கு..???

யாரும் பார்க்காத போது சத்தம் போடாமல் பெட்டியில் வைத்து விடுவதாக திட்டம்..

ஆனால் பின்னோடு அப்பாவும் வந்ததுதான் அதிர்ச்சி.

“ஏன்னா. சீக்கிரம் வந்துட்டேள்..உடம்பு சரியில்லையா.?? கண்ணெல்லாம் செவந்திருக்கே.!”

“ஆமா.. சங்கரி..லேசா ஜூரம் அடிக்கிற மாதிரி..தலவலி வேற.!

நான் சித்த ரெஸ்ட் எடுத்துண்டு போலாம்னுட்டு வந்துட்டேன்.

நான் போய் படுத்துக்கறேன். யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ..

கதவைச் சாத்திக் கொண்டார்.. அங்குதான் அலமாரி இருக்கிறது.

சிவாவுக்கு இப்போது பயம் பிடித்துக் கொண்டது.

‘அப்பாவுக்குத்தான் உடம்பு முடியலையே..டிராயரத் தொறந்தா கூட பெட்டி அங்கேதான் இருக்கு..அத இப்போ எதுக்கு தொறக்கப் போறார்..??

கூடவே இன்னொரு சந்தேகம்..

‘இவர்பாட்டுக்கு முடியலைனு இரண்டு மூணு நாள் படுத்துண்டுட்டா பேனாவ எப்பிடி திருப்பி வைக்கறது.??

சரி..வரபடி வரட்டும்.!

அதை ஜியாமெட்ரி பாக்ஸில் போட்டு மூடிவைத்து விட்டு தூங்க பிரயத்தனம் செய்தான்..

தூக்கம் வந்தால் தானே..?

“டேய்..சிவா..எந்திரு.. ஸ்கூலுக்கு ரொம்ப லேட்டாச்சு..

ராத்திரியெல்லாம் என்னவோ மொனகிண்டிருந்த.ஏதாவது கனா கண்டியா.??

சிவாவுக்கு உதறலேடுத்தது.!

‘பேனாவைப் பற்றி உளறி வைத்திருந்தால்..?’

“என்னம்மா மொனகினேன்..?

“ஆமா. யாருக்கு புரியரது? சீக்கிரம் குளிச்சு கெளம்பற வழியப் பாரு..”

அவசரத்தில் தோசையை ஒன்றிரெண்டாய் விண்டு வாயில் போட்டுக்கொண்டு பையைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டான்.

போகும் வழியில் அவனுடைய சினேகிதன் ரங்குடு சேர்ந்து கொள்வான். திறந்த வாயை மூட மாட்டான்..

“டேய்.. என்னடா.. இன்னைக்கு ரொம்ப லேட் பண்ணிட்ட. பெல் அடிச்சிருக்கும் பாரு..”

சரியா பெல் அடித்து எல்லோரும் அசெம்ளியில் ஆஜர். !

பையை அப்படியே ஓரத்தில் வைத்துவிட்டு சேர்ந்து கொண்டார்கள்..

அன்றைக்கு காலையில் சேர்ந்தார்போல் இரண்டு பீரியட் கணக்கு..

ஜியாமெட்ரி பாக்ஸைத் திறந்தவன் வைத்த கண்ணை எடுக்கவில்லை…!

தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது தங்கப் பேனா.

“ஐய்யைய்யோ.பேனாவைக் கொண்டுவந்து விட்டோமே ‘ என்று ஒரு வினாடி பயந்தாலும், ‘ஆஹா.. இதுவும் நல்லதுக்குத்தான்’ என்று நினைத்துக் கொண்டு சட்டென்று காம்பசை மட்டும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக பெட்டியை மூடினான்..

அவ்வப்போது வகுப்பில் சிலர் பந்தா பண்ணுவதற்காக வீட்டிலிருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து ‘ பீத்து’ வார்கள்..

“டேய்..இங்க பாருங்கடா.. தாஜ்மகால்.. யாராவது பாத்திருக்கீங்களா.. எல்லாம் பளிங்கு..எங்க மாமா ஆக்ரா போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தாரு.”

அன்றைக்கு சக்திதான் ஹீரோ. அது வகுப்பு முழுவதும் ஒரு ரவுண்டு போய்வரும்..

ஒருநாள் ராமு ஒரு கைதட்டும் கரடி பொம்மையைக் கொண்டு வந்தான்..

“டேய்..ராமு..ராமு..! என்று வகுப்பே அவன் பின்னால்..!

நரசிம்மன் வாத்தியார் கண்டிப்பாக சொல்லி விட்டார்..

“இனிமே வீட்டிலேயிருந்து அப்பா..அம்மாவுக்கு தெரியாம ஏதானும் எடுத்திட்டு வந்தீங்க.. தெரியும் சேதி. வீட்டுக்கு நோட்டீஸ் போகும்..ஜாக்கிரத.”

ஆனாலும் சிவா இதை சினேகிதர்களுக்கு காட்டத்தான் போகிறான்..!

சாப்பாட்டு பெல் அடித்தது.

“ஏய்..இங்க வாங்கடா..சிவா என்ன வச்சிருக்கான் பாருங்க.!”

“டேய்..நிஜமாலுமே தங்கமாடா..??”

“ஆமா..பின்ன என்ன..??”

“எழுதுமாடா..??”

“சூப்பரா..!!”

“டேய்.குடுடா..ஒரே ஒரு கோடு கிழிச்சு பாத்துட்டு தரேன்..”

“நானே எழுதிப்பாக்கல. போங்கடா.”

உண்மையிலேயே அவனைச் சுத்தி மொத்த வகுப்பும்..!

பெல் அடித்த சத்தமே கேட்காத அளவுக்கு ஒரே ஆர்பாட்டம்.

வகுப்பு முடிந்து வீட்டுக்கு போகும்போது கூட பின்னால் பத்துப்பேர்.

ஒரு பேனாவுக்கு இத்தனை பவரா..??

“சிவா..அது நிஜமாலுமே தங்கம் கெடையாது. முலாம் பூசி இருக்கும்..”

“இருந்தாலும் இந்த பேனா வெல ரொம்ப இருக்குமாம்..எங்க சித்தப்பா சொல்லியிருக்காரு.”

“சரிடா.. நாளைக்கு பாக்கலாம்.!!”

மனம் குத்தாட்டம் போட்டது.

வந்ததுமே கோதையை வம்புக்கிழுப்பவன் இன்றைக்கு அவளை கண்டு கொள்ளவேயில்லை.

அம்மா குடுத்த முறுக்கையும், காப்பியையும் சாப்பிட்டு விட்டு பாடிக் கொண்டே புத்தகப் பையைத் திறந்தான்.

நல்லவேளை.. பக்கத்தில் யாருமில்லை.

பேனாவை எங்கே வைப்பது..??

பெட்டியைத் திறந்தான்.

பேனா..? பேனா..??? எங்கே காணம்..???

சிவா பிரமித்துப் போய் ஒரு வினாடி அப்படியே உட்கார்ந்திருந்தான்..

பாக்ஸைக் கொட்டி நன்றாகத் தேடினான்.

படபடவென்று வந்தது.

பைக்குள் விழுந்திருக்குமோ.??

உம்ஹூம்.. எங்கேயும் இல்லை.!

வாசலுக்கு ஓடி கொஞ்ச தூரம் போய்த் தேடினான்..

விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்..

“அம்பி..ஏண்டா அழற..?? வாத்தியார் திட்டினாரா.??”

அம்மாவிடம் சொல்லி விடலாமா.. வேண்டாம்..ஒரே ரகளையாகி விடும்..”

“அம்மா..வயத்த வலிக்கறது.!!”

“ஏண்டா..கோந்த.என்னமானும் சாப்பிட்டியா..பகவானே..ஈஸ்வரா. அவர்தான் ரெண்டு நாளா முடியலன்னு படுத்துண்டுட்டார்னா உனக்கும் ஏதாவதுன்னா.???

சிவாவுக்கு ஒண்ணு என்றாலும் தாங்காது சங்கரிக்கு..

ஆனால் அவள் பயந்தபடியே அன்றைக்கு படுத்தவர்தான்.

ஒருவாரம். பத்துநாள்.ஒரு மாசம் என்று போய்க்கொண்டே இருந்தது..

டைபாய்டு. ? மஞ்சள் காமாலை.?

வைரஸ் தொற்று. ?

மருந்து.. மாத்திரைகள்..

ஒன்றும் பலிக்கவில்லை..

“கடவுளே..பேனா கெடைக்கிற வரைக்கும் அப்பா படுத்துண்டே இருக்கட்டும்..!”

சிவாவுக்கு தன்மேலேயே வெறுப்பு வந்தது..இப்படியா வேண்டிப்பான் பெத்த பிள்ளை.?

சிவாவுக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கவில்லை..

“டேய் எனக்கென்னவோ வாசு மேல டவுட்டா இருக்குடா.??”

ரங்குடு ஒருநாள் அவனிடம் சொன்னான்.

வாசு அந்த வகுப்பில் எல்லோரையும் விட பெரியவன். முரடன்.. கொஞ்சம் கை நீளம்.

அவன்மேல் சில திருட்டுப்பழியும் இருக்கிறது.. ஆனால் எப்படி கேட்பது.???

பரீட்சை அருகில் வந்ததால் எல்லோரும் அதில் மும்மரமாகி விட்டார்கள்.

கடைசி பரீட்சை.. இனி ஒரு மாசம் விடுமுறை.

அப்பாவுக்கு உடம்பு சீரியசாகி விட்டது.. டாக்டர் இருதயத்தில் ஏதோ கோளாறு.. பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.

“சங்கரி..எனக்கென்னவோ சீக்கிரம் போய்டுவேன்னு தோணிண்டே இருக்கு. போய் அந்த டிராயரத் தொறந்து அதில பேனா வச்சிருப்பேன்..பெட்டியோட கொண்டுவா..

குழந்த ஆச பட்டப்போவே குடுத்திருக்கணும்.போறதுக்கு முன்னால் அவனுக்கு அத எங்கையாலேயே குடுத்தால் தான் என் கட்ட வேகும்.!

சங்கரி ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்ட மாதிரி டிராயரைத் திறந்து பெட்டியைக் கொண்டுவந்து கணபதி கையில் கொடுத்தாள்.

அவள் மனசு மரத்துப் போய் ரொம்ப நாளாச்சு..

“சிவாவ கூப்பிடு…”

பெட்டியைத் திறந்து பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்தார்..

“பேனா.பேனா..!?

பெட்டி காலியாயிருந்தது..

லேசாய் நெஞ்சு வலிப்பது மாதிரி இருந்தது.

“சங்கரி..எடுக்கும்போ எங்கியாவது விழுந்துதா பாரு..!”

அப்படி விழ சான்ஸே இல்லை.

அதற்கென்று செருகிக் கொள்ள ஒரு பேண்ட் வைத்திருக்கும் …

“காணமேன்னா.. நீங்க மறந்துபோய்..!”

சங்கரி முடிப்பதற்குள் அப்படியே மயங்கி விழுந்தார்.. விழுந்தவர் எழுந்திருக்கவேயில்லை..

‘அப்பா..’ நாந்தான் எடுத்தேன்னு சொன்னா ஒருவேளை எழுந்துண்டுடுவாரோ..?’

என்ன அசட்டுத்தனம்.. அப்புறம் தொலஞ்சத சொன்னா..?’

“பாவம்.கொழந்தைக்கு இந்த வயசிலேயே அப்பாவுக்கு காரியம் பண்ணும்படி வச்சுட்டானே அந்த பகவான்..”

காரியம் முடிந்து பிண்டத்தை காக்காய்க்கு வைக்கச் சொல்லி விட்டு கிளம்பினார் சாஸ்த்திரிகள்..

“காக்கா கொத்தினதும் நீங்கள்ளாம் சாப்பிடலாம்.”

குறைந்தது பத்து காக்காய் சுத்தி சுத்தி வருமே.ஒண்ணுக்குக் கூடவா பசிக்கல.’

கடைசி வரையில் காக்கா வரவேயில்லை..

“அவருக்கு ஏதோ மனசில குறயிருக்காப்பல தோணறது. என்னென்னு பாத்து ப்ரீதி பண்ணுங்கோ.”

யாரோ வயசானவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார்..

அன்றிலிருந்து புலம்ப ஆரம்பித்தாள் சங்கரி.

சிவாவும் மந்திரித்து விட்ட கோழி மாதிரி சுத்தி சுத்தி வந்தான்.

முழுப்பரீட்சைக்கு முன்னால் ஸ்டடி ஹாலிடேஸ்.

“நல்லா படிடா.”

“டேய் நாம கம்பைன் ஸ்டடி பண்ணலாமா..??”

“ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து நோட்ஸ் காப்பி பண்ணிக்கறேண்டா.!”

“ஆல் தி பெஸ்ட்..”

நண்பர்கள் ஆளாளாக்கு ஏதோ பேசிவிட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்..

“டேய்..சிவா.. கொஞ்சம் நில்லுடா. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.”

வாசுதான் தோளைத் தொட்டான்..

வாசுவுக்கு எங்கிட்ட என்ன பேச்சு..

“டேய்.. நான் சொல்லப் போறது ரொம்ப ரகசியம்.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு காட் பிராமிஸ் பண்ணு.!”

முதலில் வேண்டாம் என்று தோன்றியது…

சரி.. கடைசி நாள்.. என்ன பண்ணிடுவான்.?

கையில் பிளஸ் குறியிட்டு எச்சில் தொட்டு சத்தியம் பண்ணினான்.

“சாரிடா..உம்பேனாவ நான்தான் எடுத்தேன்.. கொஞ்சம் பணம் வேண்டியிருந்தது.. ரங்கன் கிட்ட வெறும் இருநூறு ரூபாய்க்கு வித்துட்டேண்டா.!”

“எந்த ரங்கன் ???நம்ப ரங்குடுவா.??

“சீ.பாவம் நீ வேற.டீக்கட நாயர் கிட்ட வருவானே .. ரவுடி ரங்கன்.அவங்கிட்டதாண்டா..! பாவம்..என்னால் தானே உங்கப்பா போயிட்டார்.!”

“எப்ப குடுத்த..???”

“அன்னைக்கு உங்கிட்ட திருடினேன்பாரு.. அடுத்த வாரமே.”

அந்த பேனாவை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஒரு வெறி பிறந்தது..

நாயர் சொன்ன பதில் சிவாவுக்கு ஏமாற்றமாயிருந்தது.

ரங்கன் இப்போது சிறையில்.

இன்னும் இரண்டு மாசமாகும் வெளியில் வர..

அதற்குள் பரீட்சை வந்துவிட்டது..!

சிவா, நன்றாகப் படிக்கக் கூடியவன்..எல்லா சப்ஜெக்டிலும் தொட்டும் தொடாமல் தேறியிருந்தான்.

ரங்கனும் விடுதலையானான்.

“தம்பி..அந்த பேனா..நல்லா நெனவிருக்கு. தங்க மூடி.நம்ப சேட்டே வாங்கிட்டாரு.”

சேட்டு அவருடைய நண்பர் ஒரு கட்சித் தலைவருக்கு அன்பளிப்பாய் கொடுத்து விட்டார்.

‘ம்..நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்..’

சிவா அம்மாவிடம் கூட மூச்சு விடவில்லை..

***

வருஷாப்திகத்துக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை.

சிங்கப்பூரில் இருக்கும் சங்கரியின் அண்ணா பையன் கிரிதரன் வந்திருந்தான்..

“அத்த .!!மாமா இத்தன சீக்கிரத்தில நம்மள விட்டுட்டு போவார்ன்னு நான் நெனைக்கவேயில்லை..

அப்பா போனப்புறம் அவர்தானே எனக்கு எல்லாம்.. அவர் இல்லைனா நான் இன்னைக்கு சிங்கப்பூர்ல இவ்வளவு பெரிய வேலல உக்கார முடியமா..

அவருக்கு குடுக்கணும்னு ஆச ஆசையா வாங்கிவச்ச பேனா..பாருங்கோ.. குடுக்க முடியாம.!!”

உண்மையிலேயே தொண்டை அடைத்தது.

“சிவா..இங்க வா..உங்கப்பா மாதிரி நேர்மையான.அறிவாளியான மனுஷனை பார்ப்பது ரொம்ப அபூர்வம்..

உனக்கு அவர் அப்பாவா கெடச்சது நீ செஞ்ச பெரிய புண்ணியம்.அவர் பேர காப்பாத்து..

அவருக்கு வாங்கி வச்ச பேனா.நீ வச்சுக்கோ.”

தகதகவென மின்னியது அந்தப் பேனா..

“கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோடா அம்பி..”

“சிவா..பாத்தியா..தொலஞ்ச பேனாவே திரும்ப கெடச்சிருக்கு.நீ எத்தன ஆசப்பட்ட..”

“அம்மா.. நான் ஒண்ணு சொன்னா நீ மாட்டேன்னு சொல்லக்கூடாது..

அப்பாவோட வருஷாப்திகத்துக்கு நாம் இதை ஒரு ஏழைப் பையனுக்கு தானம் பண்ணனும்.

அப்போத்தான் அப்பா மனசு திருப்த்தியாகும்னு எனக்கு தோணறது..

“ம்.பேஷா..!”

‘எனக்கு இத வச்சுக்கற தகுதி கெடையாது..நாஞ்செஞ்ச பாவத்துக்கும் அதுதான் பரிகாரம்.’

“என்னடா முணுமுணுக்கற..???”

காரியம் எல்லாம் முடிந்தது..

“காக்காய்க்கு சாதம் வச்சுட்டு நீங்க எல்லாம் சாப்பிடலாம்..”

“கா..கா..கா..”

சிவா கத்தி முடிக்கக் கூட காத்திருக்க பொறுமையில்லை பசியோடிருந்த அந்த காகத்துக்கு..!

பாவம்..எத்தனை நாள் பட்டினி கிடந்ததோ..???

சங்கரி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்…!

அப்பா மறுபடியும் கனவில் வருகிறார்..இப்பவெல்லாம் பயமுறுத்துவது கிடையாது..!

அப்பாவாகவே வருகிறார்..!

“சிவா.பேனால எழுதிப் பாத்தியா? எப்பிடி ஸில்க் மாதிரி வழுக்கறது பாரு..”

சிவாவை அப்படியே கட்டி அணைத்துக் கொள்கிறார்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *