நினைவில் நின்றவள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 13,064 
 
 

அலுவலக வேலையில் மனம் லயிக்காது விச்சு என்கிற விஸ்வநாதன், லாவண்யாவையே நினைத்துக் கொண்டிருந்தான். அவளை இரண்டு நாட்கள் முன்புதான் பெண் பார்த்துவிட்டு வந்திருந்தான்.

லாவண்யாவின் அழகில் சொக்கிப்போய் உடனே சம்மதம் தெரிவித்தான். அடுத்த இரண்டு மாதங்களில் தனக்குத் திருமணம் என்கிற நினைப்பே அவனுக்கு மிகுந்த சந்தோஷமாகவும்; அதே நேரத்தில் சற்றுப் பயமாகவும் இருந்தது.

மாலை நான்கு மணியிருக்கும். இன்டர்காம் ஒலித்தது.

ரிசப்ஷனிஸ்ட், “சார், பாலவாக்கத்திலிருந்து மேகலான்னு ஒரு பொண்ணு உங்களைப் பார்க்க வந்திருக்காங்க…” என்றாள்.

“மேகலாவா? யார் அவங்க?”

“உங்க வுட்பியோட தங்கைன்னு சொன்னாங்க…”

“ஓ… என் காபினுக்கு ரெண்டு நிமிஷம் கழிச்சு அனுப்புங்க…”

“ஓகே சார்.”

விச்சு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஷர்ட் காலரை சரி பண்ணிக் கொண்டான். கர்சீப்பால் முகத்தைத் துடைத்தான். தான் மணக்கப் போகிறவளின் தங்கையைப் பார்க்கப் போகிற மெலிதான இனிமை அவனுள் வியாபித்தது. மேகலா என்று ஒருமுறை சொல்லிப் பார்த்தான். அந்தப் பெயர் அவனுக்கு பரிச்சயமானதாகத் தோன்றியது.

சட்டென அவன் மனத்துக்குள் ஒரு சந்தேகமும் ஊடுருவியது.

நான்கு வருடங்களுக்கு முன் தான் விரட்டி விரட்டிக் காதலித்த ஒரு பெண்ணின் பெயரும் மேகலாதான். ஆனால் இவனுடைய காதலை அவள் மிக நாகரீகமாக மறுத்துவிட்டாள். எனினும் அவளை அவனால் எளிதில் மறக்க முடியவில்லை. ஒருவேளை வரப்போகிற இந்த மேகலா அந்த மேகலாவாகவே இருந்துவிட்டால்…?

நினைத்த மாத்திரத்திலேயே விச்சுவுக்கு லேசாக வியர்த்து விட்டது. நாற்காலியின் நுனியில் ஓய்வின்மையுடன் அமர்ந்திருந்தான். சில வினாடிகள் நிசப்தமாகக் கழிந்தன.

அலுவலகப் பணியாள் கதவைத் திறந்துவிட, அந்தப் பெண் அறைக்குள் நுழைந்தாள். நான்கு வருடங்களுக்கு முன், அவளின் அபிமானப் பார்வை தன்மேல் விழாதா என்று அவள் போகிற பாதைகளில் அவனின் பார்வையை பல மாதங்கள் அலைய விட்டுப் பின் தொடர்ந்திருக்கிற அதே மேகலாதான்…!

ஆனால் அன்றைய மேகலா இளம் கல்லூரி மாணவி. இன்றைய மேகலா முழுப் பொலிவும் பெற்ற பரிபூர்ண நங்கை…. அன்றைய மேகலாவைப் பார்க்கிறபோது இளம் மழைத் தூறலின் ஆரம்பத் துளிகள் என மனம் குளிர்ந்து சிலிர்க்கும். இன்றைய மேகலாவைப் பார்க்கிறபோது கூடிவரும் கரிய மேகக் கூட்டத்தின் முதல் முழக்கம் என நெஞ்சுத் துடிப்பில் அச்சம் பரவுகிறது….

சில கணங்களுக்கு அவர்கள் இருவரின் உலகங்களும் நிசப்தமாய் இருந்தன. வந்தவளை சுதந்திரமாக வரவேற்கிற தீரமற்று அவன் அவளை திகைப்புடன் பார்த்தான். அக்காவை மணக்கப் போகிறவனை வணங்கும் பிரக்ஞையற்று மேகலா விச்சுவை அதிர்ந்துபோய் பார்த்தாள்.

மனப் பின்னடைவு எதுவும் ஏற்பட்டிராத தோரணையில் அவள் அவனைப் பார்த்து புன்னகை செய்தவாறு, “வணக்கம்…” என்றாள். பதிலுக்கு அவனும் புன்னகை பாவனையைக் காட்டப் பார்த்தான். “வணக்கம்” என்று ஈனமான குரலில் சொன்னான்.

ஷர்ட்டின் பட்டனைத் திருகிக்கொண்டே “உட்காருங்க” என்றான்.

“தேங்க்ஸ்…”

ஒரு பூ மலர்ச்சியின் விரிதலாக அவளைச் சுற்றிக் கொண்டிருந்த மொர மொரப்பான ரோஜா நிற காட்டன் புடவையைக் கண்ணியத்துடன் பற்றிக்கொண்டு அவனெதிரில் அமர்ந்துகொண்டாள் மேகலா. அவள் அமர்ந்தபின் தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்ட அவனின் முழங்கால்கள் லேசாக நடுங்கின. அவனின் மனமும் அவனுள் தலை குனிந்திருந்தது. கைகளின் விரல்களை கோத்துக் கோத்து பிரித்தவாறே மேகலாவைப் பார்த்தும் பார்க்காததுமாக இருந்தான்.

“அக்கா உங்ககிட்ட கொடுக்கச்சொல்லி அவளோட ரெண்டு போட்டோவை என்கிட்ட கொடுத்தனுப்பிச்சா…” காகித உறையை அவனிடம் நீட்டினாள்.

“தேங்க்ஸ்…”

லாவண்யாவின் புகைப்படங்களைப் பார்க்கிற தைரியம்கூட இல்லாமல் அந்த உறையை வாங்கி மேஜையின் டிராயருக்குள் வைத்துக்கொண்டான்.

“உங்களோட போட்டோஸ் வாங்கிட்டு வரச்சொன்னா… தரேன்னு சொல்லி இருந்தீங்களாமே…?”

அவளின் இந்த விகற்பமே இல்லாத நேர் அணுகுதல் அவனால் சற்றுத் தாங்க முடியாததாக இருந்தது. இயல்பாகத் திறந்து கொள்ள முடியாமல் அவனின் மனச் சதுக்கம் மூடிப் போயிருந்தது.

“என்ன பேசவே மாட்டேங்கிறீங்க..?”

அவன் மீது குற்ற மனப்பான்மையே இல்லாத அவளின் தொனியைக் கேட்டு அவனுடைய மனமுகம் சிறிதே தலை நிமிர்ந்தது. தயக்கத்தை தவிர்த்து விடுகிற பிரக்ஞையுடன் அவளைப் பார்த்து, ”ஸாரி.. போட்டோ எதுவும் உடனே குடுக்கிற மாதிரி இல்லை… புதுசா எடுத்து ரெண்டு நாள்ல அனுப்பி வைக்கிறேன்…”

“அய்யோ, உங்க போட்டோவை வாங்கிட்டுப் போகலைன்னா லாவண் என்னைத் திட்டுவா.”

மேகலாவின் வெகுளியான இந்த வெளிப்பாடு அவனை இம்சை பண்ணியது. அவளெதிரில் மிகவும் போலித்தனத்துடன் அமர்ந்திருப்பதை அவனாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்யாணமும் வேண்டாம் மண்ணும் வேண்டாம் என எழுந்து ஓடிவிடலாம் போலிருந்தது.

கடந்த கால நினைவுகளைக் கடுகளவும் காட்டிக்கொள்ளாத அவளின் இக்கண முன்னிலையை எதிர்நோக்க அவனுக்கு அவமானமாகக்கூட இருந்தது. அவள் அவன் புகைப்படத்தை மிக இயல்பாகக் கேட்டாலும், லாவண்யாவுடன் தீர்மானிக்கப் பட்டிருக்கிற தன் விவாஹத்தின் உறுதிப்பாடு சட்டென விச்சுவின் மனத்திற்குள் சந்தேகத்திற்கு உரியதாக பலவீனப்பட்டு பெயர்ந்து கொண்டிருந்தது.

“சரி, என்னோட அக்காகிட்ட போய் சொல்லிடறேன், நீங்க பேசவே மாட்டீங்கறீங்கன்னு…” பொய்யான பாவனையில் எழுந்து கொண்டாள். உடனே விச்சு சற்று சுதாரித்துக்கொண்டான். இன்றைய முதல் நிமிடங்களிலேயே தோற்றுப்போக அவனுடைய அறிவு அனுமதிக்கவில்லை. சற்று இயல்பாக சாய்ந்துகொண்டு, “அதில்லை மிஸ் மேகலா… பொதுவாகவே நான் பெண்களுடன் பேச கொஞ்சம் சந்கோஜப்படுவேன், அவ்வளவுதான். ப்ளீஸ் ரிலாக்ஸ். என்ன சாப்பிடுகிறீர்கள்?”

“காபி சொல்லுங்க போதும்.”

விச்சு பஸ்ஸரை அழுத்தி இரண்டு காபிக்குச் சொன்னான். பின் அவளை நேருக்கு நேராகப் பார்த்தான். லாவண்யாவுடன் ஏற்கப்பட்டிருக்கிற திருமண ஒப்பந்தம் முறிந்து போகப்போகிறதாக இருந்தாலும்கூட, இந்தக் கணம் மேகலா என்ற பெண்ணின் எதிரில் கூனிக்குறுகி விடக்கூடாது என்ற வலிந்த பிரக்ஞையில் மிகவும் புதிய குரலில், “நான் பெண் பார்க்க வந்தன்னிக்கி நீங்க ஏன் உங்க வீட்ல இல்ல?” என்று கேட்டான்.

“திரும்பி வந்துடலாம் என்கிற நினைப்பிலேதான் மயிலாப்பூர் சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தேன். அதுக்குள்ளே ஊர் பூராவும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கலாட்டா ஆயிட்டதால வரமுடியல…”

காபி வந்தது. இருவரும் அருந்தினார்கள்.

“மறுபடியும் எங்க வீட்டுக்கு எப்ப வர்றீங்க?”

அவள் அப்படி உரிமையுடன் கேட்டது விச்சுவை சற்று நெகிழ வைத்தது.

அவள் எதிரில் தன்னைக் கொஞ்சம் அற்பமாகக்கூட நினைத்தான். இந்தச் சூழலே அவனுக்கு துக்ககரமாக இருந்தது. அவளைக் கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்து விடலாம் போலிருந்தது.

“என்னங்க பதிலே சொல்ல மாட்டேன்கிறீங்க..?” மேகலா விடாமல் கேட்டாள்.

“நிச்சயதார்த்தமெல்லாம் முடியட்டுமே…” விச்சு சமாளித்தான்.

“அந்த சென்டிமென்ட் எல்லாம் பார்க்க வேண்டாம். ஜூலை பதினைந்து என்னோட பர்த்டே… கண்டிப்பா அன்னிக்கி நீங்க எங்க வீட்டுக்கு வந்தாகணும்…”

மேகலாவின் இந்த சுதந்திர வெளிப்பாடு அவனை மிகவும் வினோதத்தில் ஆழ்த்தியது. அவளின் இச் சுதந்திர நிலை உண்மையானதுதானா; இல்லை, தன்னைப்போலவே மனத்துக்குள் தடுமாற்ற சுழற்சியில் இவளும் சுழன்று கொண்டிருக்கிறாளா…? அவனால் அவளின் நிஜமான நிலையை நிச்சயமாய் அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும், வெளியில் தெரிகிற அவளின் சுதந்திரமான வெளிப்பாட்டில் தானும் கலந்து கொள்வதுதான் கல்வித் தகுதியைச் சார்ந்த நாகரீகம் என்று நினைத்து, “லாவண்யாவோட பர்த்டே எப்போ?” என்றான்.

வீசி எறியப்பட்ட தானியங்களைக் கண்டதும் சிறகடித்துப் பறந்துவரும் நெஞ்சு உயர்ந்த புறாவின் இறக்கைகள் போல மேகலாவின் கண் இமைகளும் பட படத்துக் கொண்டன.

“ஹைய்யா… நல்லா ஏமாந்தீங்களா? ஜூலை 15 ஒண்ணும் என்னோட பர்த்டே கிடையாது. அன்னிக்கிதான் லாவண் அக்கா பர்த்டே…”

கே.பாலசந்தர் படத்தில் வரும் குறும்பு நிறைந்த ஒரு நடிகையின் பாவனையுடன் மேகலா சொன்னதும், அவன் சிரித்துவிட்டான்.

“நீங்க கண்டிப்பா வரீங்க…” பொய்யான கோபச் சிணுங்கலோடு எழுந்து சென்றவள், கதவருகில் போனதும் திரும்பிப் பார்த்து புன்னகைத்து “ஸீ யூ” சொல்லிவிட்டு வெளியேறினாள்.

விச்சுவின் உள் மனத்துக்குள் விவரிக்க முடியாத ஒரு வலி விரிந்து பரவியது.

லாவண்யாவுடன் நிகழ இருக்கிற திருமண நிச்சயதார்த்தத்தை உடைத்து விடுகிற மன அவசரம் அவனுள் பீறிட்டது. இந்தப் பெண்ணின் எதிரில் அந்த லாவண்யாவுடன் தாம்பத்யம் நடத்துவது என்பது ஒரு சிறைத் தண்டனைக்கு ஒப்பானதாகத்தான் இருக்கும் என அவனின் அறிவு கலங்கியது.

கடந்து சென்ற நிமிடங்கள் உண்மைதானா என்ற ஐயம் அவனுள் வாய்க்கால் நீர்போல சலசலத்துச் சுழியிட்டது. நிஜமாகவே மேகலா நான்கு வருடங்களுக்கு முற்பட்ட ஞாபகங்களின் குறுகுறுப்பு துளிக்கூட இல்லாமல்தானா இத்தனை நிமிடங்கள் அவனுடன் இயல்பாக பேசிவிட்டுப் போனாள்? இல்லை; அவளும் உள்ளும் புறமும் வேறு வேறாகப் பொய் முகங்களைக் காட்டிவிட்டுத்தான் தப்பித்து ஓடியிருக்கிறாளா?

அவனால் எந்த விதமாகவும் அனுமானிக்க முடியவில்லை. சிறிதுநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்தான். மேகலா கொடுத்துச்சென்ற லாவண்யாவின் புகைப்படங்களை ஆவலுடன் எடுத்துப் பார்த்தான். லாவண்யாவின் சிரித்த தோற்றங்களில் விதியின் விஷமச் சிரிப்பு மேலோங்கித் தெரிந்தது.

என்றைக்கோ தான் காதலிக்க விரும்பிய ஒருத்தியின் அக்காவை இன்று திருமணம் செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் அவளின் எதிரிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமாயென்று தன்னையே கேட்டுக் கொண்ட கேள்வி அவனை ஆவேசப் படுத்தியது. ஏதோவொரு முற்பகலில் தான் செய்த ஒரு செயலுக்கு வேறொரு பிற்பகலில் இப்படியொரு நிசப்தமான அவமதிப்பா?

லாவண்யா என்கிற அழகான, அப்பாவியான ஒரு பெண்ணுக்கு தன்னால் எந்த ஒரு மனச் சஞ்சலமும், சந்தேகமும் பிற்காலத்தில் ஏற்ப்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் இப்போது அவளுக்கு தான் செய்யக்கூடிய மரியாதை என்று எண்ணிக் கொண்டான்.

விஸ்வநாதன் தலையை பலமாகக் குலுக்கிக் கொண்டான்.

வேண்டாம் இந்த விபரீதம்… மேகலா இத்தனை நேரம் அத்தனை சுயேச்சையாகப் பேசிச் சென்றதுகூட அவனைத் தண்டித்ததாகத்தான் தெரிந்தது அவனுக்கு. இப்படியே தொடரப் போகிற ஆயுள் தண்டனைக்கு கண்டிப்பாக அவன் தயார் இல்லை.

லாவண்யாவுடன் ஏற்பட இருக்கிற திருமண வாழ்க்கை என்ற விஷப்பரீட்சை அவனுக்கு அவசியமும் இல்லை.

நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு லாவண்யாவிடமிருந்து விலகிவிட முடிவு செய்தான்.

என்றோ தோல்வியடைந்த காதல் முயற்சி, இன்று அவனைப் பழி வாங்கிவிட்டது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நினைவில் நின்றவள்

  1. கண்ணன் சார்,

    ஒன்ஸ் அகைன் யு ரொக்கெட்

    7061901800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *