நிகழ்ந்தும் நிகழ்ந்தபடி…ஒரு கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 22,470 
 
 

சாலைகளில் தொடர்ந்த படி வாகனங்கள் சென்றபடி… வந்தபடியே இருக்கின்றன. ‘நம்மை சுற்றிலும் ஒரு பெரும் இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்த இயக்கத்தில்தான் நாமும் பினைக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறோம்’ என்று பலமுறை நினைத்திருக்கிறேன் நான். இப்போதும் அடியேன் அதையே நினைக்கிறேன் பேருந்துக்காக பத்து நிமிடங்களுக்கு மேலாக காத்து நிற்கும் இந்த நேரத்தில்.

சற்று முன்பு இங்கே வந்து நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண் வித்யாவை போலவே இருக்கிறாள். வித்யா என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவள். பத்தாம் வகுப்பு வரை என்றால் முதல் சந்திப்பு எப்போது? என்றால்? அது எட்டாம் வகுப்பில் நிகழ்ந்தது. அவள் பள்ளிக்கு புது வருகை.

முன்பு கோயம்பத்தூரில் ஏதோ ஒரு பள்ளியில் படித்தவள் என்றும் அவளது அப்பாவிற்கு பணி மாற்றம் வந்ததால் இங்கு வந்தவள் என்றும் என் வகுப்பு மாணவர்கள் பேசிக்கொண்டனர் ஏன் மொத்த பள்ளியும் என்றே சொல்லலாம். அவளை பார்பதற்காக தினம் தினம் பல மாணவர்கள் எங்கள் பிரிவு பக்கம் வந்துசென்றபடி இருந்தனர். இதனால் மாணவர்கள் பலருக்குள் சண்டையும் எழுந்ததிருக்கிறது.

எல்லோரையும் போலவே எனக்கும் அவளிடம் பேச விருப்பம் இருந்தது. எப்போதும் அவள் கண் பார்வைலேயே இருக்க விரும்புவேன். முதன் முதலில் அவளாக தான் என்னிடம் பேசினால். ஏதோ மதிப்பெண் பற்றி பேசினாள்… சரியாக நினைவில்லை ஆனால் அவள் பேசிமுடித்த பலநிமிசங்களுக்கு பின்னும் இதயம் பலமாக துடிப்பதை உணர்ந்தேன். மேலும் என்னுள் அவளுக்கு சரியான முறையில்தான் பதில் அளித்தேனா என்று சந்தேகம் வேறு இருந்தது.

நானும் பின்னோரு நாள் அவளிடம் பேசிவிட முடிவெடுத்தேன் “நீ மாக்ஸ்ல எத்தன மார்க்?” இது தான் நான் அவளிடம் பேசிய முதல் வார்த்தை. அதன் பின் நாங்கள் பல முறை பேசி இருக்கிறோம் எல்லாம் புத்தகங்களை பற்றியும், பார்த்த சினிமாக்கள் பற்றியும், வகுப்பு ஆசிரியர்களை பற்றியும். ஆனால் அவளிடம் பேசிகொள்ள வேண்டும் என்கிற காரணம் மட்டுமே நிஜம். மேலும் ஒரு நினைவு… ஒரு முறை அவளது சைக்கிள் நிறுத்தத்தின் நெரிசலில் மாட்டிக்கொண்ட போது எடுத்து தந்து உதவி இருக்கிறேன்.

வித்யாவிற்கும் எனக்குமான பிற கதைகளை பின்பு கூறுகிறேன். அதற்கு முன்பு இப்போது என் அருகில் இருப்பவள் ‘வித்யாவே தான்’ என்று தீர்க்கமான எண்ணம் தோன்றுகிறது. அவளிடமே கேட்டுவிடலாம் என முடிவெடுத்துவிட்டேன். ….

..

.

“எஸ்குயிஸ் மீமீமீமீ….., உஉ..ங்க பேரு வித்…யா தானே?”

“ஆஆ….மாம்” தொடர்ந்து யோசிக்கிறாள்…

“என்ன தெரியுதா? நியாபகம் இருக்கா?”

யோசித்தாள்.. “அசோக்கா?”

“ஆமாம்” என்று சொல்லியபடி சிரித்தேன். அவளும் சிரித்தாள் மீசையுடன் என்னை அடையாளம் தெரியவில்லை என்றும். கண்களை கொண்டேதான் என்னை அடையாளம் கண்டாள் என்றும். மேலும் நானாக வந்து பேசாதிருந்தால் அவளுக்கு என்னை தெரிந்து கொண்டிருப்பது இயலாது என்றும் கூறினாள்.(சிரித்தபடியே) ஆமாம் அவள் என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தாள். அப்போது நான் பார்பதற்கு குள்ளமாக இருப்பேன். என் வகுப்பு மாணவர்கள் சிலருக்கு மீசை அரும்பி இருந்த போதும் எனக்கு அதற்கான அறிகுறியே தென்படவில்லை எனப்பதில் மிகுந்த வருத்தம் மீசை முளைக்குமோ? முளைக்காதோ? என்ற மிகுந்த அச்சத்தில் இருந்தேன். எட்டாம் வகுப்பில் படிக்கும் போது என்னிடம் பேசிய அளவிற்கு கூட பத்தாம் வகுப்பில் வித்யா என்னிடம் பேசவில்லை. இடையில் ஒன்பதாம் வகுப்பு அவள் வேறு ஒரு பிரிவில் படித்தாள் இருந்தும் அவ்வபோது பார்த்து கொள்வதுண்டு ஆனால் பேசுவதில்லை. அதன் பின்பு எங்கு போனாள் என்று தெரியவில்லை. இன்று தான் சந்திக்கிறோம். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கோயம்பத்தூரில் படித்ததாகவும் பின் அவளது தந்தை இறந்து போனதாகவும். நர்சிங் படித்து தற்போது சென்னையில் ஒரு பிரபலமான ஹோச்பிடலில் பணிபுரிவதாகவும் மேலும் தற்போது அம்மாவுடன் சைதாபேட்டையில் தங்கிருப்பதாகவும் கூறினால்.

“நீ சென்னைலையா இருக்க? என்ன பண்ற?” என்றாள் ஆர்வமுடன்.

“இல்ல, நான் ஒரு வேலையா சென்னை வந்தேன்.. திருச்சி ஹுண்டாய்ல இன்-சார்ஜா இருக்கேன்.”

“சென்னைல.. ட்ரை பண்ணலையா?”

“இல்ல எனக்கு அந்த ஐடியா இல்ல… நீ எப்படி இருக்க கல்யாணம்???”

“ம்ம்… (ஆச்சு என்பதுபோல தலைஆட்டினாள்).. உனக்கு?”

“இப்போ… ஜூலைல அதுக்கு தான் பிரண்ட்ஸ்கு இன்விடேசன் குடுக்கலாம்னு வந்தேன்..” “சந்தோசமா இருக்கு அசோக்” என்றாள். அவள் சிரிப்பு எனக்கு பழைய நினைவுகளை மீட்டு கொடுத்தது. “என் காலேஜ் பிரெண்ட்ஸ் இருக்காங்க இங்க… கண்டிப்பா நீயும் உன் ஹச்பண்டோட வரணும்… குழந்தங்க இருக்காங்களா?”

“இல்ல…அசோக். நான் கண்டிப்பா வருவேன் உன் கல்யாணத்துக்கு”

“இப்போ வீட்டுக்கு தானே போற… நானும் வரேன்.. வீட்டுக்கு வந்து குடுத்தமாதிரி ஆகிடும்..”

“மத்தவங்களுக்கெல்லாம் குடுத்துடியா..?”

“இன்னம் ரெண்டு பேருக்கு குடுக்கனும்..பின்ன குடுத்துக்கலாம் ப்ரெச்சன இல்ல”

“நான் வீட்டுக்கு போகல… உன்கிட்ட சொல்றது… ஒன்னுமில்ல.. எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருசத்துல ஹஸ்பன்ட் ஆக்சிடென்ட் ல இறந்துட்டாரு..“ அவள் சொல்லிகொண்டிருக்க இதை சற்றும் எதிர் பார்க்காத நான் தொடர்ந்து அவள் பேசிய வார்த்தைகளை கவனிக்க தவறிவிட்டேன்.. அதிர்ச்சியாக இருக்கிறது .. அவளது பேச்சில் எந்த தடுமாற்றமும் இல்லை. அவள்… ஆனால் இந்த நிலைமையில் எனது திருமண செய்தியை கூறியதை தவறாக நினைக்கிறேன்.

“சாரி வித்யா.. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல”

“பரவால்ல.. ட்ரன்க் அண்ட் டிரைவ்.. ஒன்னும் பண்ணமுடியல.. அதுக்கப்புறம் தான் வேலைக்கு போக ஆரமிச்சேன்.. ஆரம்பத்துல புடிக்கல அப்றமா புடிச்சிடிச்சு.. ஒரு நாளைக்கு எத்தன ஆக்சிடென்ட் கேஸ் வருது தெரியுமா அசோக்.”

முன்பை விட வித்யா ஒரு தைரியமான பெண்ணாக தோற்றமளிக்கிறாள்.. நாங்கள் தொடர்ந்து பேசிகொண்டிருகையில் தற்போது அவள் தனக்கு ஆண் துணை வேண்டும் என்றும் முடிவெடுத்து திருமணம் செய்ய இருக்கிறாள். இணையத்தில்தான் வரன் பார்த்தது. அவரும் மனைவியை இழந்திருக்கிறார். அவருக்கும் இது மறுமணம். தற்போது வித்யா அவரை சந்திப்பதற்காக கிண்டி செல்லயிருக்கிறாள். இருவருமாக சென்றுகொண்டிருக்கிறோம். எப்போதும்போல நகர நெரிசலில் பேருந்து.பேருந்திற்குள் வித்யா பெண்களுக்கான பகுதி இருக்கையில் அமர்ந்திருந்தாள். நான் நின்று கொண்டிருந்தேன். நான் எடுக்க முயன்றும் டிக்கெட்டை இருவருக்குமாக அவள் எடுத்துவிட்டாள். நேரம் அதிகம் இருக்கிறது. பள்ளிக் கதையை தொடராலாம்.

பத்தாம் வகுப்பிலிருந்து வித்யா என்னுடன். இதைவிட சந்தோசமான ஒன்று அப்போது கிடையாது எனக்கு. வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் முதல் நண்பர்களின் பெற்றோரிலிருந்து அப்பா அம்மாவும் பொது தேர்வு குறித்த பயத்தினை எனக்கு தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருந்த சமயம் அது. இருந்தும் வித்யா எல்லாவற்றையும் தாண்டி என்னுள் இருந்தாள்.

தினமும் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் முதலில் வித்யாவை பார்வை தேடும். முன்பை விட வித்யா அப்போது அழகு. மாலையில் அவள் தோழிகளுடன் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்வாள். அவள் பார்வைக்கு படாமல் மறைந்து அவள் பள்ளியின் பிரதான சாலையை கடந்து செல்லும் வரை பார்த்துவிட்டு வீடு செல்வேன்.

விடுமுறை நாட்களில் அவள் வீட்டின் பக்கமாக அடிக்கடி சென்றபடியே இருப்பேன். ஆனால் ஒருமுறை கூட அந்த நாட்களில் அவளை சந்தித்ததில்லை. அப்படி ஒரு முயற்சியும் நான் எடுக்கவில்லை. ஆனால் ஒரு முறை அவள் வீட்டிலிருந்து அதே தெருவில் இருக்கும் டைலர் கடைக்கு சென்றுவந்தாள் அப்போதும் அங்கு நான் இருந்தது அவளுக்கு தெரிந்திருக்காது. இவற்றையெல்லாம் இப்போது அவளிடம் சொன்னால் வித்யா எப்படி ஏற்றுக்கொள்வாள் என்று என் மனம் நினைக்கிறது.

பின்… நான்கைந்து மாதங்கள் கடந்திருக்கும். அவளுடன் ஒரு சில விளையாட்டுக்களை நிகழ்த்த ஆரம்பித்தேன். அவள் படித்து கொண்டிருப்பாள் பெரும்பாலும். அப்போது அவள் அருகில் இருக்கும் சுமித்ராவிடம் செய்கையில் அவளை அழைக்க சொல்லிவிடுவேன். பின்பு அவள் என்னை பார்க்கும் போது.. கூப்பிட்டதை காட்டிக்கொள்ளாமல் என் அருகில் அமர்ந்திருக்கும் கார்த்திக்குடன் பேசிகொண்டிருப்பேன். அப்படி பலமுறை செய்து வந்ததில் சுமித்ராவிடம் நான் கூப்பிட்டாள் தன்னிடம் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டாள் வித்யா.

பிறகு அடுத்த அஸ்திரத்தை கையில் எடுப்பேன் அது… அவள் கண்களில் படுமாறு எழுதபடாத வெற்று காகிதத்தினை மடித்து காட்டுவேன். பின்பு பாடம் நடக்கும் வேளையிலும் என்னை கவனிக்க தொடங்கிவிடுவாள் வித்யா. பிரிவேளைகளின் இடைவெளியில் அந்த மடித்த காகிதம் புத்தகத்தின் இடையில் வைக்கப்பட்டு கார்த்திக் வழியாக வித்யாவிடம் சேரும் என்னால். வித்யா உடனே ஆர்வமாக பிரித்து பார்ப்பாள்… அவளையே கவனித்து கொண்டிருப்பேன். அடுத்த வகுப்பு ஆசிரியர் வருகையில் எழுந்திரிக்கும் போது அவளை திரும்பி பார்ப்பேன். ஏமாற்றத்தோடு என்னை முறைத்து பார்ப்பாள்… அவள் அப்படி பார்ப்பது பிடிக்கும் ஆதலால் மீண்டும் காகித(காதல்) விளையாட்டு…

எப்போதும் எதையும் எழுதாமல் குடுக்க முடியாது அல்லவா. சிலமுறை மையத்தில் “ஐ…………………………………………….. (என்று புள்ளிகளை மறுபக்கம் வரை கொண்டுசென்று) ………………………………………………ஸ்ஸ்ஸ்ஸ்…….. வேணுமா?” என்று முடிப்பேன். அவள் விரல் ஆட்டுவாள்(என்னை கொன்றுவிடுவாளாம்). இப்படி ஒருமுறை விளையாட்டாக ஏதோ எழுதி சிஸ்டர் என்று முடித்து எழுதிவிட்டேன்.

அவள் கோவமாக என் அருகே வந்து கோவமாக பேப்பரை வீசினாள்… “கொன்னுடுவேன் பிரதர்” என்றபடி சென்றாள். பேப்பர் கார்த்திக் மீது விழுந்தது.. அதில் நான் எழுதி இருந்த வாக்கியத்தில் சிஸ்டரை அடித்திருந்தாள் வித்யா.

கிண்டி வந்துவிட்டோம்.

“அவர்.. பஸ்ல நாம வரும்போதே ரெண்டு தட போன் பண்ணாரு. குறிஞ்சி ஹோட்டல்ல ரொம்ப நேரமா வெயிட் பண்றாராம். நீ இன்விடேசன் குடு அசோக். நான் கண்டிப்பா வரேன். நீ கிளம்பனும்னா கிளம்பு எவ்ளோ நேரமாகும் தெரியல”

“பரவால்ல… வித்யா நான் வெயிட் பண்றேன் நீ போயிட்டு வா” அவளை அனுப்பி வைத்தேன்.

அவளுக்காக காத்திருக்கும் இந்த சமயத்தில் ஒரு சிகரெட்டும் டீ யும் ஆனது. பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மீண்டும் ஒரு சிகரெட் பிடித்தேன்… மெல்ல என் வாழ்வில் வந்த பெண்கள் அனைவரையும் ஒருமுறை நினைத்து பார்க்க தொடங்கிவிட்டேன்.

மூக்கில் நடந்த ஒரு அறுவை சிகிச்சையின் போது அம்மாவுக்கும் எனக்கும் சேர்த்து தினமும் ரஞ்சனி அவள் வீட்டிலிருந்து மூன்று வேலைகளுக்கும் சாப்பாடு எடுத்து வந்தாள். நான் தற்போது பணிபுரியும் வேலை எனக்கு கிடைக்க உதவிய கல்லூரி தோழி இந்து. தொலைபேசியில் காதலையும் காமத்தையும் என்னுடன் மணிக்கணக்கில் பேசிய அஸ்மிதா பின்பு அலுவலகத்தில் நட்பு ஏற்படுத்திக்கொண்ட கவிதா (அவளே எனக்கு இப்போது மனைவி ஆகபோகிறவள்) இப்படி எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர்.

ஒரு ஆணிற்கு எத்தனையோ ஆண் நண்பர்கள் இருந்தாலும். பெண்ணிற்கு எத்தனையோ பெண் தோழிகள் இருந்தாலும். ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஆறுதல், துணை, அன்பு, காமம் என்று எல்லா எதிர்பார்ப்புகளும் நிகழ்கிறது. சரியோ தவறோ நம்பிக்கையுடன் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் தேடியபடியே இருக்கின்றனர் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். அப்படிதான் இந்த வித்யாவும் ஒருத்தி. எனக்கும் கவிதாவுக்குமான தற்போது நடக்க இருக்கும் திருமணம் மதத்தின் பின்னணி இல்லாமல் பெற்றோர், உறவினர், நண்பர்கள் மத்தியில் திருச்சியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக நடக்க இருக்கிறது.

ஏனெனில் மத பின்னணி இல்லாமல் திருமணம் செய்து கொள்ள எனக்கு கொள்கை இல்லை ஒரு வித ஆசை ஆனால் வித்யாவின் இரண்டாவது திருமணத்தில் விமர்சையாக கொண்டாட்டங்கள் இருக்குமா? ஏனெனில் மணமக்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். உறவினர் நண்பர்கள் என்றிருந்தாலும் கொண்டாட்டங்கள் குறைவாக இருக்கலாம்.

இன்னும் சற்று நேரத்தில் வித்யா வந்துவிடுவாள். நான் அவளுடன் அவள் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை அளிப்பேன். அவள் என் திருமணத்திற்கு வருவாள். அவளது திருமணத்திற்கு அழைக்க குறைந்த நட்பு வட்டாரம் இருந்தாலும் அழைப்பில் நானும் இருப்பேன்.. நம்புகிறேன். நிச்சயமாக அழைப்பாள்.

நானும் எனது திருமணம் முடிந்த நிலையில் கவிதாவுடன் செல்வேன் இப்படியாக என் சிந்தனை ஏன் ஒரு எழுத்தாளனை போல தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க. இதற்கெல்லாம் முன்பு வித்யா திரும்பி வருவதற்குள் சிகரெட் வாடை தெரியாமல் பாக்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற புதிய சிந்தனை இடைமறிக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *