நவியும் நானும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 7,799 
 
 

வெகு நாட்களுக்கு பின் நவியை கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்திப்பேன் என நினைத்துப்பார்க்கவில்லை. பார்த்ததும் கனவா? நனவா? என தெரிந்து கொள்ள என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.

நவி எனக்கு தூரத்து சொந்தம். அவள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு முறை வேறொரு உறவினர் வீட்டுத்திருமணத்தில் முதலாகப்பார்த்த போது முதலாக என்னைப்பார்த்து வெட்கப்பட்ட பெண் அவள் தான். அவளுடைய தாயின் பின் மறைந்தவாறு ஓரக்கண்ணால் என்னை பார்த்தாள். எனக்கும் லேசான உடல் நடுக்கத்துடன் ஈர்ப்பு வந்ததை உணர்ந்த பின் அவளைப்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென மனம் விரும்பியது.

அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே போகும் வரை கவனித்தேன். அவள் வேறு யாரிடமும் வெட்கப்படுவது போல் நடந்து கொள்ளவில்லை. அவளைத்தவிர அங்கு வந்திருந்த எந்தப்பெண்ணின் மீதும் எனக்கும் ஈர்ப்பு வரவில்லை.

பெண்களுக்கே உரிய பழக்கம் நேரில் பார்க்கும் போது தலையை குனிந்து செல்வதும், ஓரக்கண்ணால் பார்த்து விடுவதும், கடந்து சென்ற பின் திரும்பிப்பார்ப்பதும் தான். அதோடு கன்னத்தில் ஏற்படும் குழியை பிறர் பார்வையில் படுமாறு சிரிப்பதும் தான்.

நவியின் தாய் வழி பாட்டி எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அம்மாவைப்பார்த்து “என்ற பேத்தி நவிய உன்ற பையன் நிவினுக்கு கட்டி வெச்சரோணும்” என கூறும் போது அம்மாவும் “அதுக்கதுன்னு கடவுள் தலைல எழுதி வெச்சிருந்தா நடக்காமயா போயிரும். நாம மட்டும் நெனைச்சா நடந்திருமா? பொண்ணுக்காரங்களுக்கும் பிடிச்சிருக்கனம்” என பேசும் போது புரியாதது இன்று புரிந்தது.

அந்தப்பாட்டியும் இந்தத்திருமணத்துக்கு வந்திருந்தாள். நானும் நவி பார்க்கும் படியாக பாட்டிக்கருகில் சென்று அமர்ந்தேன்.

“வா நிவினு. என்ற பேத்தி நவி வந்திருக்கறா பாத்தியா? எப்படி பொண்ணு? நயன்தாரா கணக்கா இருக்காளா?” எனக்கேட்டதும், நானும் எனது பங்குக்கு “இல்லைங்க பாட்டி. அவங்களை விட சூப்பரா இருக்காங்க” என சொன்னதும் பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“உங்க தாத்தாவையே நாங்கட்டிக்கோணும்னு நெனைச்சேன். எங்களுக்கு வசதி கம்மின்னு உங்க தாத்தாவோட அம்மாக்காரி வேண்டாம்னு சொல்லிப்போட்டு, பெரிய எடத்துல சொத்தோட உங்க பாட்டிய கட்டி வெச்சா. உங்க பாட்டி வந்த நேரம் தொழில் நஷ்டமாயி குடியிருக்க இப்ப ஒரு ஊடுங்கூட இல்லாமப்போயிருச்சு. நாம் போன நேரம் சைக்கிள்ல போயிட்டிருந்த என்ற ஊட்டுக்காரரு ஒரு பங்களாவக்கட்டி, நாலு கார வாங்கி நிறுத்திப்போட்டாரு. இப்ப உங்களுக்கு வசதியில்லாட்டீமு உங்க குடும்பத்துக்கு என்ற பேத்தியாச்சும் கட்டிக்கொடுத்துப்போடோணும்னு நானும் வேண்டாத சாமி இல்ல போ” என கூற எனக்கும் சந்தோசம் கூடியது.

அவ்வப்போது நவி அவளது பாட்டியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு நம்பிக்கையை அதிகரித்தது. திருமணம் என்றால் இந்த ஜென்மத்தில் நவியோடுதான் என முடிவு செய்து விட்டேன். அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறும் போது மனம் வருந்தியது.

ஒருமுறை அம்மாவுடன் நவியின் வீட்டிற்கு கிருஷ்ணா ஸ்வீட்டில் முந்திரி கேக், பாதாம் அல்வா, பிஸ்தா லட்டு என விலை அதிகமுள்ள பலகாரங்களை வாங்கிக்கொண்டு போயிருந்தோம். 

என்னைப்பார்த்ததும் நவியின் மனம் பூரித்தது தெரிந்தது. எங்களை “வாங்க” என கூறி வரவேற்று வீட்டில் இருந்த பலகாரங்களை எடுத்து வந்து வைத்தாள். அப்போது தான் அவளது பேச்சை முதலாகக்கேட்டேன். இனிமையான குரல். பாடகியாகியிருக்கலாம் என தோன்றியது. சூப்பரான பில்டர் காஃபி போட்டுக்கொடுத்தாள். ஆனால் அவளுடைய அம்மாவுக்கு மட்டும் ஏனோ எங்களுடைய வருகை பிடிக்காமல், சரியாக முகம் கொடுத்து பேசாமல் வீட்டில் உள்ள வேலைகளை செய்து கொண்டிருந்தது என்னுடைய அம்மாவுக்கு பிடிக்காமல் “போகலாம்” என கிளம்ப, நவி “கொஞ்சம் இருங்க அப்பா வந்திடுவாரு” என கூறியதை மறுத்த அவளது அம்மா “இன்னைக்கு நைட்டு பத்து மணிக்குத்தான் வருவாரு” என எங்களை கிளம்பச்சொல்வதில் ஆர்வமாக, அவசரமாக இருப்பதை புரிந்து கொண்டு கிளம்பினோம். கிளம்பி சற்று தூரத்தில் செல்லும் போது நவியின் அப்பா வீடு நோக்கி அவரது காரில் செல்வதைப்பார்த்த போது நவியின் அம்மா பொய் சொன்னது புரிந்தது.

அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு முன் நவியின் தந்தையின் கார் நிற்பதைப்பார்த்து மகிழ்ச்சியுடன் உள்ளே சென்ற போது நவியின் திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்திருப்தைத்தெரிந்ததும் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க, எனது ரூமுக்குள் சென்று அறையைத் தாழிட்டுக்கொண்டு கதறி அழுதேன். எனது மனம் நவியை அந்தளவுக்கு விரும்பியிருந்தது அப்போது தான் புரிந்தது.

“பையனுக்கு வெளி நாட்டுல வேலை. இங்கேயும் சொத்து நிறையக்கெடக்குது. பங்களா மாதர சொந்த வீடு இருக்குது. நிச்சியத்துக்கே மாப்பிள்ளை ஊட்டுக்காரங்க இருபத்தஞ்சு பவுன்ல வைர நெக்லஸ் நவிக்கு போட்டிருக்காங்க. பென்ஸ் கார்லதான் பொண்ணுப்பார்க்கவே வந்தாங்க” என நவியின் அம்மா பெருமைகளைப்பேசி விட்டு கிளம்பினர். 

அவர்கள் கிளம்பிய பின் என் அம்மாவும் சிறிது நேரம் அழுதாள். “நாம இந்த நெலைமைல இருக்கிறத அவளப்பெருமைப்படுத்தி நம்மள சிறுமைப்படுத்து சொல்லாம சொல்லிட்டு போறா. உடு சாமி அவ பொண்ணு மட்டுலும் தான் இந்த ஒலகத்துல பொண்ணா. நீ ஊன்னு சொல்லு நூறு பொண்ணுங்களக்கொண்டு வந்து நிறுத்திப்போடறேன். அவங்க கூட தைரியமா பேசறத உட்டுப்போட்டு கோழ கணக்கா ஊட்டச்சாத்தி எதுக்கு அழுதே?” என் மனம் மாற அம்மா ஆறுதல் சொன்னாலும், நவியை என்னால் மறக்க முடியவில்லை. தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்துக்கொண்டு வேலைக்கும் செல்ல மனமில்லாமல் வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.

ஒரு முறை, ஒரே ஒரு முறை திருமண மண்டபத்தில் அவள் வெட்கத்துடன் என்னைப்பார்த்ததால் வந்த காதல் தான். நாங்கள் இருவரும் மனம் விட்டுப்பேசியதாலோ, நீண்ட நாள் பழக்கத்தாலோ பிடித்துப்போய் காதல் வரவில்லை. இரண்டு முறை சந்தித்த போதும் பேசியதில்லை. எல்லாமே கண்களால் ஏற்பட்ட காதல் தான். அதுவே மறக்க முடியாதபடி ஏக்கத்தைக்கொடுத்து, தூக்கத்தைக்கெடுத்து, துக்கத்தைக்கொடுக்கிறதென்றால் அதன் வலிமையை நன்றாக உணர முடிந்தது. தோல்வியும் ஒருவகையான சுகமாக மாறியது ஆச்சர்யம்தான்.

முதல் காதல் ஆணி வேர் போல ஆழமாக மனதில்‌ சென்று விடுவதால் எளிதில் வெட்டி வீச முடிவதில்லை. வெட்டினாலும் தளைத்து வளர ஆரம்பித்து விடுகிறது. அவளுடைய உறவுகளை பார்த்து விட்டாலே அவளது ஞாபகம் அதிகமாகி விடும் போது, அவளையே பார்த்து விட்டால்..‌.. பார்க்க நேர்ந்து விட்டது. இன்று என்னுடைய மனதின் பலவீனத்தை அவள் மேல் இன்றும் வைத்திருக்கும் காதலை என்னையும் மீறி என் மனம் வெளிப்படுத்த முயன்றது.

“எப்படி இருக்கீங்க….?” என அவள் கேட்டது உயிருக்குள் ஊடுறுவியது. கண்களில் கண்ணீர் பொங்க “ந..ந..ல்…லா…. இ….இருக்கேன்…..” என்றேன். அதற்கு மேல் பேச முடியவில்லை. 

“குழந்தைகள்….?” என்றேன்.

“ரெண்டு பசங்க. அதோ அங்கே சாப்பிட்டு இருக்காங்க…” அவள் கை காட்டிய பக்கம் பார்த்தேன். என் மனம் இன்னொருவரைத்தேடியது.

“அ…அவரு….?” என நான் கேட்டதும் அவளது கண்களில் கண்ணீர் துளி வெளிப்பட்டு முத்துப்போல் சிதறியது. மிகப்பெரிய வேதனையில் அவளது மனம் இருப்பது புரிந்தது.

“அவரோட டைவர்ஸ் ஆயிடுச்சு. கல்யாணமாகி ரெண்டு பசங்க பிறக்கிற வரைக்கும் அன்பா இருந்தாரு. அதுக்கப்புறம் ஆபீஸ்ல கூட வேலை செய்யற பொண்ணோட பழகிட்டு என்னை தினமும் சித்ரவதை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அமெரிக்காவுல வாழ்ந்திட்டு எனக்கும் வேலை இல்லாம பக்கத்துல வீட்டுக்கு வேலைக்கு போயி நானும் என் பசங்களும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தோம். அப்புறம் டைவர்ஸ் பண்ணிட்டு போன மாசந்தா இங்கே வந்திட்டோம். இப்ப அம்மா வீட்ல தான் இருக்கோம். இங்கேயே ஸ்கூல்ல போட்டாச்சு. இனி எனக்கு வேலை தேடனம். ஆமா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்களா?” அக்கரையுடன் கேட்டாள். அப்போது ஆர்டர் போட்ட காஃபி வந்ததும் உடனே சூடாக எடுத்து சுவைத்து குடித்தாள்.

“பத்து வருசமாச்சு. இந்த மாதிரி ஒரு நல்ல பில்டர் காஃபி குடிச்சு. என்ன தான் நவீனமா இருந்தாலும் வெளி நாட்ல நம்ம ஊரப்போல சாப்பாடு இல்லை. வயசான காலத்துல நம்ம ஊர்ல தான் செட்டில் ஆகனம்னு நெனைச்சேன். அது சீக்கிரமாவே நடக்கும்னு நினைக்கலே” சொன்னவள் வறட்சியாக சிரித்தாள்.

“எனக்கு கல்யாணத்துல ஆர்வமில்லை”

“ஏன் நிவின்? நீ ஆள் ஸ்மார்டா ஆள் சூப்பரா தானே இருக்கே?” என முதலாக எனது பெயரைச்சொல்லி , எனது அழகையும் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது. நவியும் பத்து வருடங்களுக்கு முன் பார்த்தது போலவே திருமணமாகாத பெண் போலவே இருந்தாள். 

“நான் வீடு வாங்கிட்டேன். கார் வாங்கிட்டேன். ரியல் எஸ்டேட் பிசினஸ் என்னோட நண்பன் மூலமா எதேச்சையா அமைஞ்சது. வேலையில்லாம, சொந்த வீடில்லாம இருந்த எனக்கு சீக்கிரமா நான் விரும்பிய எல்லாம் கிடைச்சது. ஒன்னத்தவிர…”

“அப்படியென்னது….?” ஆர்வமாகக்கேட்டாள்.

என்னால் சொல்ல முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. எதிரே அமர்ந்திருந்தவள் எனது மன நிலையைப்புரிந்து கொண்டு எழுந்து வந்து என்னருகே அமர்ந்து எனது கைகளைப்பற்றி “நாம விரும்பியது எல்லாமே கிடைக்காது. அல்லது தாமதமா கிடைக்கும். பொறுத்திருக்கனம். இல்லேனா மறக்க கத்துக்கனம். மனசு விரும்பறதெல்லாம் கெடைக்காது. சில சமயம் கெடைச்சதே நெலைக்காது. என்னை நெனைச்சுப்பாருங்க” என கூறியது ஆறுதலாக இருந்தது. இப்போது சொல்கிறேன் அவளது அருகாமையை என் மனம் மிகவும் விரும்பியது. 

சிலருக்கு சிலரைப்பிடிப்பது போல் பலருக்கும் பலரைப்பிடிப்பதில்லை. சமூக கட்டமைப்பு, பொருளாதார நிலை ஒத்துப்போகிறவர்களை ஒதுக்கி வைத்து விடுகிறது. தற்போது அவளது வெறுமையும், எனது வெறுமையும் ஒரே நிலை கொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் வெறொருவருடைய ஆறுதல், ஆதரவு தேவைப்பட்டது. இதனால் யாருக்கும் துரோகம் என்பதில்லை. யாருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படப் போவதில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்கள் பயன் படப்போகின்றனர்.

“என் வீட்டிற்கு போகலாமா?” என்றேன்.

‘சரி’ என தலையசைத்தவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரில் ஏறினாள்.

என் அம்மாவைப்பார்த்ததும் கட்டிப்பிடித்துக்கொண்டாள். அம்மாவுக்கு நவியை மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் குதூலகமானார்கள். சமையலறைக்குள் சென்ற நவி காஃபி யுடன் வெளியே வந்து அம்மாவுக்கும் எனக்கும் கொடுத்தவள், அவளும் எனக்கும் அம்மாவுக்கும் இடையிலிருந்த பகுதியில் நெருக்கமாக, பாசத்துடன் பக்கத்தில் அமர்ந்து காஃபியைக்குடித்து விட்டு மதியவேளை சமையலுக்குத்தயாரானாள். என்னோடு நிரந்தரமாக இணைந்து வாழ்வதற்கும் தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *