தீராக்காதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 35,183 
 
 

இது என்ன மாதிரியான மனநிலை? சந்தோஷமா?சந்தோஷம் என்று எப்படி இதைச் சொல்ல முடியும்? வருத்தத்திற்குரிய செயலல்லவா இது. துக்கமான மனநிலை என்பதா?துக்கம் என்றும் சொல்லமுடியவில்லை. காற்றில் பறக்கின்ற இறகு போல மனது மட்டும் லேசாக இருக்கின்றது. ஆனால் கண்ணீர் தடையின்றி சுரந்து கொண்டே இருக்கிறது.

வலி தாங்காமல் வரும் கண்ணீர் அல்ல இது.பதில் சொல்ல முடியாத கேள்விக்கான பாரத்தின் வடிகால் இது. எதிர்காலம் பற்றிய பயம் இது.

ஆனால் இந்த தண்டனை எனக்கு வேணும் தான். பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்ல; அதையும் தாண்டி என்னை ஒரு கொலைகாரியாக ஆக்கி இருக்கிறது.
மறுபடி அவனைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு தலையாய் உருகி உருகி காதலித்து, வாசலிலே அவனக்காய் தவமிருக்கின்ற வேளையில், ஒரு நாள் அரிசியில் கல் எடுத்துக்கொண்டே அம்மா சொன்னாள், “இது நமக்கு சரிப்பட்டு வராது கீதா” அதிர்ந்து தான் போனேன். யாரிடமும் மூச்சுக்கூட விடவில்லை. வீட்டைத்தாண்டி எங்கும் போனதில்லை, கோயிலைத் தவிர. ஆனால் அம்மாவுக்க எப்படி?… தாய் அறியாத சூலா? கண்டிப்பும், அன்பும் நிறைந்திருக்கும் அம்மாவை மீற எப்போதும் நினைத்ததில்லை. “சோபா”வை நனைத்ததோடு அடக்கப்பட்டது என் துக்கம்.

அம்மா ஏதேதோ காரணத்தைச் சொல்லி அந்த வீட்டை காலி செய்தாள். புது வீட்டில் கோலம் போட்டு என் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

அவசரமாய் தேடினார்கள் வரன். அம்மா செய்த புண்ணியமோ, அப்பாவின் புத்திசாலித்தனமோ அற்புதமான மாப்பிள்ளை கிடைத்தார்.

தீராநதி போல ஓடிக்கொண்டே இருந்தது எந்த சலனமுமின்றி எங்கள் வாழ்க்கை, மிதந்து செல்ல படகுகள் இல்லை என்ற குறையைத் தவிர-அந்த வேலைக்கான இட மாறுதல் வரும் வரை.

எனக்கு முன்பே சென்று திருச்சியில் வீடு அமைந்தவுடன் வந்து அழைத்துப்போனார்.தன் கூட வேலைப்பார்ப்பவரின் வீட்டிற்கு அருகிலே வீடு பார்த்து இருப்பதாகவும்; புது இடம் என்று பயப்படத்தேவையில்லை என்றும் சொல்லி அழைத்துப்போனார்.

அங்க தான் அவனைப் பார்த்தேன், என் கணவரின் புது நண்பராக. “நம்மூரு தான் கீதா, பேரு செல்வம்” என அறிமுகம் செய்யும் போதே அவன் சொன்னான். “கீதாவை எனக்கு நல்லாத்தெரியும், எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் அப்ப” என்று சொல்லியவன், “வீட்டில் சாமான்கள் அடுக்க 2 நாளாவது ஆகும். அதுவரை நீங்கள் என் வீட்டில் தான் சாப்பிடணும்” என்ற சொல்லி தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவன் மனைவியும், குழந்தைகளும் என்னோடு நன்றாக ஒட்டிக்கொண்டார்கள். எங்கும் ஒன்றாகச் சென்றோம்.

எங்களுக்கு குழந்தைகள் இல்லாததால் அவர்கள் குழந்தைகள் எங்க வீட்டில் வந்து விளையாட என் கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். எனக்கு அதையும் தாண்டி.
அன்பு, பாசம் என அனைத்தையும் இவர் வழங்கி இருந்தாலும் செல்வத்தைப் பார்க்கும் போது கூடுதல் இன்பம் இருக்கத் தான் செய்தது.இரு குடும்பத்துக்கும் நெருக்கம் அதிகரித்துக்கொண்டே போனது.

திருச்சி வாழ்க்கை உற்சாகமாக இருந்தது. ஒரு நாள் என்னவரை பார்க்க வந்தவன் அவர் இல்லை என்று தெரிந்து திரும்பிச் செல்லும் போது சொன்ன வார்த்தையிலிருந்து ஆரம்பித்தது எனக்கு ஏழரை.

“நீ இப்பவும் அதே போலத் தான் இருக்க கீதா” அழகா அதிர்ந்து நிமிர்நதவளை நோக்கி,”தேவதை போல இருப்ப அப்ப… நீ தலை குளித்து துவட்டும் போது பார்க்க”… மறுபடி வார்த்தை கணைகளை வீசிக்கொண்டே இருந்தான்.

இந்த பத்து வருடத்தில் இது போல வசீகரமான வார்த்தைகளைக் கேட்டதே இல்லை நான். மொக்கிலே கருகிப் போய்விட்டதோ என்று நினைத்த ஒன்று மொட்டவிழ்கின்ற சத்தம் மெல்லியதாக கேட்க ஆரம்பித்தது. என் கண்களில் களவாணித்தனமும், வார்த்தைகளில் திருட்டுத்தனமும் ஆரம்பித்தது அன்றிலிருந்து தான்.

எங்களுக்கான தனிமையை நாங்கள் உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்தோம், இவர் சினிமாவிற்குக் கூப்பிட்டாலும், செல்வத்தின் மனைவி கோயிலுக்குக் கூப்பிட்டாலும் ஏதோ ஒரு சாக்கு சொல்லி விலகிக்கொண்டேன். அவனைத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டேன்.

“நீங்கள் வீட்டைக் காலி செய்த போது நான் எவ்வளவு கலங்கி போனேன் தெரியுமா?”

“ஏன்?”

“ஏன்னா…அது,அது வந்து நான் உன்னை…காதலிச்சேன்”

இதற்காகவே காத்திருந்தது போல நானும் என் இத்தனை வருட அழுத்தத்தை வெளிப்படுத்தினேன்.

“நானும் தான் நேசிச்சேன் உங்களை அப்ப…”

“அப்ப, இப்ப இல்லையா?”

வார்த்தைத் தூண்டிலில் மாட்டிக்கொண்டேன்.

“இரவும் அல்லாது பகலும் அல்லாது பொழுதுகள் உன்னோடு கழியுமா?” “என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளூதே”

என்று ஏதேதோ பாடல்கள், என் பதின்ம வயதில் நான் இழந்த, இழந்த கூட அல்ல அனுபவிக்காத காதலை எனக்குள் நுழைத்துக்கொண்டிருந்தன.

அவன் நெருக்கத்திற்காக அடி போட்ட வேளையில், நானும் ஏங்குகிறேன் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினேன்.

அவன் பிறந்த நாள் என்று சொல்லிக்கொண்டு வந்தான் இனிப்புகளோடு. யாரும் இல்லாத சமயமாய்ப் பார்த்து, இனிப்பைத் தருவது போல் கை தடவினான். அமைதியாய் இருந்தேன். கன்னம் தடவினான் தன் உதடுகளால்.மெய்மறந்து நின்றிருந்தேன்.

சின்ன வயதில் ஏதோ ஒரு கதையில் படித்த ஞாபகம் “அவன் தொட்டான் எனக்கும் மயக்கம்” என்று அதே நிலை தான். அவன் ஆக்ரமிப்பை என்னால் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தடுத்தாலும் அவன் விடவில்லை.

அந்த தவறுக்குப் பிறகு குற்ற உணர்வோ, என்னவோ அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்.
நான் விலகி இருந்த போதும் விதி அவனோடு என்னைச் சேர்த்தது.இல்லை இல்லை எனக்குள் அவனைச் சேர்த்தது.கருத்தரித்தேன்.

சந்தோஷ உச்சத்தில் என் கணவர் இது- சரியா? தவறா என்ற மனநிலையில் நான்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் செல்வத்தைச் சந்தித்த போது, “அடுத்தவன் பிள்ளைக்கே இந்த ஆட்டமா?”என்றான். அவனின் இனிப்பான வார்த்தைகள் வலிகிக ஆரம்பித்தது அன்றிலிருந்து தான்,

அடுத்து ஒரு நாள் “என்ன நேத்து கேபிள்காரன்கிட்ட அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த, புது கனெக்க்ஷன் கொடுக்கவா?”அவன் கேள்வியில் குத்தல் இருந்தது.

என்னை விபசாரி போல் சித்தரிக்கும் தைரியமிருந்தது.

நான் அவனோடு சேர்ந்தது,அவன் மீது நான் வைத்திருந்த தீராக் காதலினால், காமத்தினால் அல்ல. என் காதல் அவனில் வியாபித்திருக்க வேண்டும் என்பதற்காக என்னுள் அவன் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக. அவன் நிலையும் அப்படியே என்று நினைத்தது என் தவறு.

நான் தவறு செய்தேன், என்னைக்குத்து. வார்த்தைகளால் கொத்து. ஆனால் ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி மனிதனை, அதுவும் என் கண் முன்னே…

எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்த, அவர் அவமானப்பட நான் காரணம். நினைக்க நினைக்க நெஞ்சு வலித்தது.

அப்போது தான் முடிவெடுத்தேன். சாத்தானின் பிள்ளை தெய்வத்திடம் வளரக்கூடாது என்று கருவறுத்தேன்.பிள்ளையோடு சேர்த்து அவன் நினைவுகளையும்.

கரைத்துக்கொண்டிருந்தேன் கண்ணீரால்…

கண்ணீர் துடைக்கும் விரல் பட்டு கண் விழித்தேன். இதோஇதோ… நான் கண்ணீரால் கழுவ வேண்டிய பாதங்கள்.நான் பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய கைகள்.

“ஏன் கீதா அழுவுற, நமக்கு அவ்வளவு தான் கொடுப்பினை.விடு. நம்மோட அடையாளமா எதையாவது விட்டு போகணும் நாம் வாழ்ந்ததற்கு சான்றா.அது குழந்தையா தான் இருக்கணும்னு இல்லை.நம்மோட நல்ல செயல்கள் நம்மை நினைவுப்படுத்தலாம். நாலு மரக்கன்று நட்டால் அது கூட நம்ம அடையாளம் தான்” என்று சொல்லியவனிடம் சொன்னேன்.

“நாம் சென்னைக்கே போயிடலாங்க”.புறப்பட்டேன்,இங்கு நான் போட்ட கோலங்களை கலைப்பதற்காக. மனச இன்னும் இன்னும் லேசாகிக்கொண்டிருந்தது.

– இக்கதை குமுதம் இதழில் தீராக்காதல் என்ற பெயரில் 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.சு.ஸ்ரீதேவி என்ற எனது இயற்பெயரில் வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *