தலைநகரில் ஒரு காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 14,116 
 
 

ஒரு கேள்வியை, கேட்காமலே விட்டுவிட்ட அந்தக் கேள்வியே இத்தனை வருடங்களாக மனதில் சுமந்து கொண்டிருந்தான் செல்வன். பல சமயங்களில் அது அவன் மனதில் ஓரத்தில் எஞ்சிவிட்ட வலியாகவும், ஏக்கமாகவும் மறக்க முடியாத நினைவுகளாகவும் அவஸ்தையாகவும் அவனுக்குள்ளிருந்து வதைத்தது. . விழுங்க முடியாலும் வெளியேற்ற முடியாமலும் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாக அவனைத் தவிக்க வைத்தது .

தனது அறையில் அமர்ந்து புத்தகத்தின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்த செல்வனின் நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி புரண்டன.

தலைநகர் தில்லியில் செல்வன் வசித்த அந்த இனிமையான நாட்களில் அது ஒரு வசந்தகால மாலைப் பொழுது.

“தென்றல் இலக்கிய பேரவை குழுவினர் தங்களை அன்புடன் வரவேற்கின்றனர்” , தில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன்புறம் கட்டப்பட்டிருந்த பேனர் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது . வழக்கமாக இருக்கும் வட இந்திய முகங்களுக்குப் பதிலாக நிறையத் தமிழ் முகங்கள். இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் என வந்த வண்ணமிருந்தனர்.

சற்றுத் தயங்கிய படியே உள்ளே நுழைந்தான் செல்வன். இருபத்தைந்து வயது இளைஞன். கொஞ்சமாக இலக்கியம் தெரியும். எப்போதாவது கவிதைகள் எழுதுவான்.

வரவேற்பறையில் பணியிலிருந்த பால் வண்ண பஞ்சாபி பெண் ஒருத்தி, விசாரித்த சிலரிடம்…”டமிழ் பங்சன் அட் தேட் ப்ளோர் ஹால் சி ப்ளீஸ்…” எனச் சொல்லிய வண்ணமிருந்தாள். வரவேற்பறையின் சொகுசும் ஆடம்பரமும் அவனை அவனைச் சற்று பிரமிக்க வைத்தது. அங்கிருந்த மோனோலிசா சித்திரத்தின் கண்கள் அவனைப் பார்த்த மாதிரியே இருந்தது. அதை ரசித்தபடியே நடந்தான். கதவுகள் விலகிட விழுங்கிக் கொண்ட மின்தூக்கியின் உள்ளே மறைந்தான். மெல்லிசையுடன் மேலெழும்பிய அந்த மின்தூக்கி மூன்றாம் தளமென்ற அறிவிப்புடன் அவனையும் உடன் இருந்த சிலரையும் வெளியேற்றி விட்டு கதவினை மூடிக்கொண்டது.

இருநூறு பேர் அமரக்கூடிய அந்த ஹால் பாதி நிறைந்திருந்தது. சில்லென்ற ஏசிக்காற்று ஹால் முழுதும் பரவியிருக்க பக்கவாட்டுச் சுவர் ஓரமாய் இருந்த இருக்கையைத் தேடி அமர்ந்தான். தெரிந்தவர்கள் யாராவது கூட்டத்துக்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தான். அப்படி யாரும் தென்படவில்லை.

புறப்படும் முன் நண்பன் ரமேஷை அழைத்த போது “இலக்கியக் கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா…நான் ஹிர்திக் ரோஷனின் ஹிந்தி புதுப்படம் பார்க்கப் போரேன்” என்று மறுத்து விட்டான்.

விழா மேடையில் ஒரு சிறுமி பாரதியின் கண்ணம்மா பாடலை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். “சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா…சூரிய சந்திரரோ…”வரிகள் அறை முழுதும் எதிரொலித்தது.

அப்போது கையில் நிறையப் புத்தகங்களுடன் சுவரோரமாய் இருந்த நடைபாதையில் சற்று பரபரப்புடன் நடந்து வந்தாள் ஒரு இளம் பெண். அவனது இருக்கையைக் கடந்து செல்கையில் அவளது கைநழுவி புத்தகங்கள் கீழே விழுந்திட குனிந்து புத்தகங்களை எடுக்க முயன்றாள் அவள். அவளுக்கு உதவியாகக் கீழே சிதறிக்கிடந்த புத்தகங்களை எடுத்து அடுக்கிக் கொடுத்தான் செல்வன். பளிச்சென்று முகத்தில் விழுந்த கற்றை முடியை ஒதுக்கிக் கொண்ட படி அவன் முகம் பார்த்து நன்றி என்றாள் அவள்.

அவளின் அழகிய கண்களில் சிலவிநாடிகள் சிக்கித் தவித்தான் அவன். “வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ…” வரிகள் ஒலித்தன. ஜுன்ஸ், சிவப்பு நிற குர்தாவில் வானத்திலிருந்து வந்து இறங்கிய தேவதை போல் இருந்தவளை சில விநாடிகள் மிக அருகில் பார்த்தான். நிலா முகத்திலும் அவளின் நீல விழிகளிலும் மீண்டுமொரு முறை சிறைப்பட்டு விடுபட முடியாமல் சில மணித்துளிகள் தத்தளித்தவன் அவள் அங்கிருந்து அகல சுய நினைவை அடைந்தான் .

அவள் அணிந்திருந்த ‘பேட்ஜ்’ அவள் விழாக் குழுவைச் சேர்ந்தவள் என்று காட்டியது. நேராக நடந்து சென்றவள் ஒரு முறை திரும்பி பார்க்க மாட்டாளா என்று மனம் ஏங்கினாலும் அவளிடமிருந்த ஏதோ ஒன்று அவனுக்கு அவள் மீதான ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

“வணக்கம். விழாவிற்கு வருகை வந்துள்ள அனைவரையும் தமிழ்த்தாயின் தாழ் வணங்கி, தென்றல் இலக்கிய பேரவை சார்பில் வருக வருகவென வரவேற்று மகிழ்கிறோம்…” என்று ஒலித்த அந்த மதுரமான குரல் அவளுடையது தான் என்பதை அறிந்ததும் அவனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவளே அந்த விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று அறிந்ததும் அவன் மனதில் ஆர்வமும் வியப்பும் இன்னும் அதிகமாகத் தனது குஷன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தான்.

விழாவில் முக்கிய விருந்தினர்கள் பேசியவற்றின் சாரம்சங்களை வர்ணனைகளுடனும் மேற்கோள்களுடனும் கோர்த்து அவள் பேசியது அழகாக இருந்தது. பிரமித்தபடி நோக்கிக் கொண்டிருந்தவன் மனதில் சில கேள்விகள்…

இவ்வளவு அறிவு ஜீவியாய் இருக்கிற ஒரு பெண்ணின் நட்பு தனக்கு கிடைத்தாலே பெரிய விஷயம் என்று தோன்றியது.

மிகப்பரந்த புத்தக வாசிப்பு அனுபவம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது செல்வன் எழுதும் கவிதைகளை அவனுடைய நண்பர்கள் சிலர் “மச்சான் நீ நல்லா எழுதுறடா” என்று பாராட்டியதுண்டு.

விழா முடிந்து அனைவரும் வெளியே வர அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர் சிலர். அவளைத் தேடியவன் அவள் புத்தக விற்பனையில் மும்முரமாக இருப்பதைக் கண்டான். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவளிடம் பேசிட நினைத்து அங்குச் சென்றான். சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு கூட்டம் வெளியேறும் வரை காத்திருந்தவன் அவளிடம்…

“என் பெயர் செல்வன்…

நீங்க விழாவில் நல்லா பேசினீங்க…” என்றான்.

“நன்றி சார்..” பதில் சொன்னாள்.

“உங்க அமைப்புல உறுப்பினரா சேரலாமா…”

“நிச்சயமாக…” என்றவள்.

“இந்தப் படிவத்தை நிரப்பிக் கொடுங்கள்…பதிவுக்கட்டணம் நூறு ரூபாய். உறுப்பினராக சேர்றவங்களுக்கு ஐம்பது ரூபாய் மதிப்புள்ள இந்தப் புத்தகம் அன்பளிப்பாகத் தரப்படும்” என்றாள். உறுப்பினர்களைப் புத்தகம் வாசிக்க வைக்க அந்த அமைப்பினர் மேற்கொள்ளும் சிரத்தை அவனுக்குப் புரிந்தது. படிவத்தை நிரப்பி பணத்தையும் சேர்த்து அவளிடம் கொடுக்கையில்…

“செல்வி…உன் போன் ரிங் ஆவுது”… என்றபடி அவளின் தோழி அவளது செல்பேசியை நீட்டினாள். அவள் பெயர் “செல்வி” என்பது அவனுக்குள் ஒருவித பரவசத்தை உண்டாக்கியது. சில விநாடிகளிலேயே அவள் அணிந்திருந்த பேட்சில் தெரிந்த “தாமரைச்செல்வி” என்ற பெயரை கவனித்தான்.

அந்தப் பெயர் அழகாய் இருந்தாலும் அது செல்வி என்றே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

“அடுத்த கூட்டம் எப்போங்க…”

அவளிடம் கேட்டான்.

“இந்தாங்க…” என்று அழைப்பிதழைத் தந்தாள். “ஒவ்வொரு மாசமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நேஷ்னல் பள்ளி வளாக கட்டிடத்தில் கூட்டம் நடக்கும். அவசியம் வந்து கலந்துக்குங்க…”

“தேங்ஸ். அவசியம் வரேங்க..”

அவள் விழிகளை நேருக்கு நேராய் பார்த்தபடி பதில் சொன்னான். மனதுக்குள் இருந்த உணர்வுகளை விழிகளில் வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டான். நட்புடன் புன்னகைத்துவிட்டு விடைபெற்றான்.

இன்னும் ஒரு மாத இடைவெளிக்குப்பின் தான் மீண்டும் அந்தத் தங்க நிற தமிழ் தேவதையைச் சந்திக்கமுடியும் என்பதுதான் கொஞ்சம் தவிப்பாய் இருந்தது.

இந்த சம்பவத்திற்குப் பின் செல்வனுக்குள் நிறைய மாறுதல்கள். செல்வியைப் பற்றிய நினைவுகளுடன் நாட்கள் நகர அவளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திட அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது.

செல்வி பொறியியல் பட்டதாரி. தில்லியுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கைநிறைய சம்பளம். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிற நவீன யுவதி ஒருத்தி இவ்வளவு ஆழமாக இலக்கியங்கள் குறித்து விவாதிப்பது அவனுக்கு வியப்பாக இருந்தது. இவன் தில்லியில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியிலிருந்தான்.

ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

செல்வி நிறையப் பேசினாள்.மில்டன், ஷெல்லி, பாரதி என மிகப்பெரிய படைப்பாளிகளின் கவிதை வரிகளை வியந்து ரசித்துப் பேசினாள். சிறுகதைகள், நாவல்கள் பற்றி அலசினாள். வாழ்வியல், தத்துவம் என எல்லாத் துறைகளிலும் அவருடைய சிந்தனை அவனை வியக்க வைத்தது.

அவளோடு கைகோர்த்து தில்லி மாநகரின் சாலையில் நடந்த மாலைப் பொழுதுகள் மிகவும் ரம்யமாக கழிந்தன. அவன் தன்னை அறியாமலேயே மனதுக்குள் அவளை நேசிக்கத் தொடங்கியிருந்தான். செல்வி ஒரு நல்ல தோழியாக நட்போடு பழகினாள்.

அவனுக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் செல்வி அழைத்ததற்காகக் கர்நாடக இசைக் கச்சேரி, பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அவளுடன் சென்று வந்தான். அவளும் இவனுடன் சேர்த்து கிரிக்கெட் மாட்ச் பார்த்தாள்.

நண்பன் ரமேஷிடம் ஒருநாள் செல்வியுடனான அவனது நட்பைப் பற்றி மனம் திறந்து பேசினான்.

“மச்சான்… நீ அவளைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேனு நினைக்கிறேன். அவள் உன்னைக் காதலிக்கிறாளா…

இந்த மாதிரி நிறையப் புத்தகங்கள் படிக்கிற தத்துவங்கள் பேசுற பொண்ணுங்க நல்ல தோழியா இருக்கலாம்.

ஆனால் காதலியா இருக்க முடியுமான்னு தெரியல… இலக்கியம் பேசுறவ வீட்டில விளக்கேற்றவும் கேள்விகள் கேட்கலாம்…” என்றான் ரமேஷ் .

அப்போது செல்வனுக்கு விழா மேடையில் அவள் விளக்கேற்றியது நினைவுக்கு வந்தது. ஆனாலும்

நண்பனின் பேச்சைக் கேட்டபின் அவனுக்குள் சில கேள்விகளும் சந்தேகங்களும் முளைக்கத் துவங்கின.

ஒரு நல்ல தோழியாக உள்ள பெண்ணிடம்… காதலிப்பதாகச் சொன்னாள் என்ன நினைப்பாளோ. உன் மேலே நான் எவ்வளவு மதிப்பு வச்சிருக்கேன் கடைசில நீ இவ்வளவுதானா…என்பாளோ.

காதலை பருவக்கோளாறு என்றோ உடல் ரீதியான ஈர்ப்பு என்றோ பாலுணர்வின் வெளிப்பாடு என்றோ சிந்திக்கக்கூடியவளா இவள்…

இவளிடம் நான் உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் என்று பேசினால் முட்டாள்தனமாக நினைப்பாளோ…

கலீல் ஜிப்ரானின் “என் ஆழ்மனதில் இருந்து ஒரு பறவை…” படித்திருக்கிறாயா என்று கேட்கிற ஒரு பெண்ணிடம் என் ஆழ்மனதில் பறக்கும் பட்டாம் பூச்சிகளை அறிவாயா நீ…என்று கேட்பது… அபத்தமாக இருக்குமோ என்று பட்டது. காதலிப்பதற்கு இந்தப் பூமியில் எத்தனையோ அழகான பெண்கள் இருக்கும் போது இந்த அறிவுப்பூர்வமான அழகிய ராட்சஸியை தான் சந்திக்க நேர்ந்தது..தனது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா அவனுக்குள் பதில் காண முடியாத கேள்வியாய் உருவெடுத்தது.

ஆனால் அவளிடம் எப்படியும் தன் காதலைச் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தான். அதனால் ஒருவேளை அவளுடைய நட்பையே அவன் நிரந்தரமாக இழக்க வேண்டியிருக்கலாம்…என்ற பயம் மனதின் ஒரு மூலையில் தொற்றிக்கொண்டது.

தில்லியின் டிசம்பர் மாத குளிர் காலத்தின் ஒரு மாலை நேரம். இந்தியா கேட் மைதானம் பசுமையாக இருந்தது. மனிதர்கள் புசுபுசுவென்று உலன் சுவட்டர்களுக்குள் கொஞ்சம் பருமனாகவும் அழகாகவும் தெரிந்தனர். புல் தரையில் செல்வியுடன் அமர்ந்திருந்தான்.

செல்வி புடவையில் சிலை போலிருந்தாள். எண்ணைக்குளியலோ ஷாம்ப்புவோ அவள் கூந்தல் சற்றுத் தளர்ந்து அவள் அழகை மேலும் மெருகேற்றியிருந்தது. அவள் கூந்தலில் சூடியிருந்த அந்த ஒற்றை ரோஜாவைப் பார்க்க பொறாமையாய் இருந்தது அவனுக்கு.

செல்வி பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ரசித்தபடி …”பேட்டி இதர் ஆவோ”, என்றாள். “எவ்வளவு அழகாக இருக்கிறாள் அந்தக் குழந்தை” என்றாள்.

“உங்களை மாதிரியே…”என்றான் செல்வன்.

அவளிடம் பெரிதாக ரியாக்ஸன் எதுவுமில்லாத மாதிரி இருந்தது. ஒருவேளை அவள் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் மறைக்கிறாளோ என்று நினைத்தான். செல்வி அந்தக்குழந்தையின் கன்னங்களை தொட்டுக் கொஞ்சினாள்.

“உங்களுக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்குமா” என்றான்.

“ஏன்…உங்களுக்குப் பிடிக்காதா என்ன…” பதிலாக எழுப்பிய கேள்வியுடன் அவனை உற்றுப்பார்த்தாள்.

“இல்லை… புத்தகங்கள் தத்துவங்கள் மட்டும்தான் பிடிக்குமுன்னு நெனச்சேன்…”

“ஏன் நான் உங்களுக்கு மனுஷியா தெரியலையா…”

“இல்ல. அப்படி எதுவுமில்லைங்க. சரி…காதல் பாசம் இதப்பத்தி யெல்லாம் நீங்க என்ன நினைக்கிறிங்க…”

“இதையெல்லாம் அறிவுப்பூர்வமா அலசுற மாதிரியே உணர்வு பூர்வமாவும் அணுகவும் தெரியனும். காதல் என்பது எந்த அளவுக்கு உடல் சார்ந்ததோ அதே அளவுக்கு மனம் சார்ந்த விஷயம்.

அதுக்காக காதல்னா உருகிக் கிடக்கிறதோ, உணர்ச்சி வசப்பட்டு கைகளை அறுத்துக்கறதோ இல்லை. துணையை இயல்பா ஏத்துக்கறது. பரஸ்பரம் உணர்வுகளை மதிக்கிறது.

அடிப்படையில் மனிதமனம் நேசிக்கவும் நேசிக்கப்படவும் ஏங்குகிறது. பிறக்கிற குழந்தைக்கு தாயன்பு தேவைப்படுகிறது. வளர்ந்த பிறகு சசோதரர்கள், நண்பர்கள் இவங்களுடைய ஆதரவும் நட்பும் தேவைப்படுது.

வாழ்க்கை துணையின்னு வரும் போதும் இப்படித்தான். இதெல்லாம் ஒரு வகையில் சுயநலம் தான். ஆனால் நல்ல புரிதலுடன் கூடியது. உறவுகளில் ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுக்கறதுன்னா அது இரண்டு பக்கத்திலிருந்தும் வரனும். ஒருத்தர ஒருத்தர் டாமினேட் பண்ண முயற்சிக்கக்கூடாது. பரஸ்பரம் இருவருக்கும் நடுவுல பேலன்ஸ் பண்ணிக்கிட்டு போறது தான் வாழ்க்கை…” செல்வி பேசிமுடித்தாள்.

விளக்குகள் வெளிச்சம் உமிழ இந்தியா கேட் தங்க நிறத்தில் மின்னியது. கன்னங்களை உறைய வைப்பது போல் குளிர் காற்று படர்ந்தது.

அப்போது தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவள் அவசரமாகச் செல்ல வேண்டும் மீண்டும் சந்திப்போம். சி .யூ . எனப் புறப்பட்டாள். எப்படியாவது செல்வியிடம் காதலைச் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அதற்குப் பிறகு அவன் தன் மனதிலிருந்த காதலைப் பற்றி அவளிடம் பேச நினைத்த போதெல்லாம் அவனுக்குள் இருந்த தயக்கம் அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. . இவ்வளவு நாட்கள் நல்ல நண்பர்களாக பழகிவிட்டு காதலைப் பற்றி அவளிடம் கேட்பது அவர்களது நட்பைக் கொச்சைப் படுத்தியது போல் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் அவளிடம் கேட்காமலேயே இருந்து விட்டான் செல்வன்.

இப்படித்தான் கேட்கப்படாத பதில் கிடைத்திடாத எத்தனையோ கேள்விகள் எல்லோர் வாழ்க்கையிலும் இறுதி வரை கேள்விகளாக நினைவுகளாக மட்டுமே எஞ்சி விடுகின்றனவோ…

ஒருவேளை அதைக் கேட்டிருந்தால் என்ன மாதிரியான பதில் கிடைத்திருக்கும் அதனால் அவன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்… யூகங்கள் மட்டுமே பதிலாகிவிட்ட ஒரு கேள்வியை அவன் தனக்குள்ளேயே எத்தனையோ முறை கேட்டுப் பார்த்திருக்கிறான் இன்றுவரை.

சில சமயங்களில் செல்வியிடம் அதைக் கேட்பது மாதிரி கற்பனை செய்து பார்த்திருக்கிறான். எதிர்ப்புறமாக செல்வி அமர்ந்து அவள் சொல்லுவதாக நினைத்துக் கொள்கிற அந்தப் பதில், அவனது உள்மனதின் ஆசையோ என்று சந்தேகப் பட்டிருக்கிறான் . நன்றாக உறங்கிப் போன ஓர் இரவில் அவன் கண்ட கனவில் அந்தக் கேள்வியை ஒரு முறை அவளிடம் கேட்டிருந்தான். ஆனால் செல்வியிடம் இருந்து பதில் வருவதற்குள் அவனது உறக்கம் கலைந்து விட்டது. அன்று முதல் பல இரவுகளில் உறக்கம் வராமல் தவித்திருக்கிறான். ஆனால் அந்தக் கனவு மீண்டும் ஒரு முறை அவனுக்கு வரவே இல்லை .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *