அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாவண்ணம் மறைக்கத் தெரிந்தவர்களுமல்லர்.
வீட்டு வாசலில் இரண்டு நாட்களாகத் தண்ணீர் ஊற்றப்படாதிருந்த போகன்வில்லாச் செடிகள் வாடியிருந்தன. வெண்ணிறப்பளிங்குத் தரையில் அதன் செம்மஞ்சள் நிறப்பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து குப்பையாகிக் கிடந்ததைக் கவனிக்காமல் அஸ்விதா என்ன செய்கிறாளெனக் கோபம் வந்தது. வழமையாக இதன் பராமரிப்பு எல்லாம் அவள் பொறுப்பில்தான். இதில் நீங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வீட்டிலும் பெண்கள் இது போன்ற வேலைகளைத் தாங்களே பொறுப்பெடுத்துச் செய்பவர்களாக இருப்பார்கள்.
அழைப்பு மணியை மூன்று முறை விட்டு விட்டு அடித்தேன். அது எனது வருகைக்கான சங்கேதமொழி. அஸ்விதாவிற்கு மட்டுமே தெரிந்த பாஷை. ‘ஆறு மாதத்திற்கு முன்னர் உன்னழகிய சங்குக்கழுத்தில் தாலி கட்டிய உன் கட்டிளம் கணவன் வந்திருக்கிறான் ‘ என அவளிடம் ஓடிப்போயுரைக்குமொலி. வழமையாக ஒரு அழைப்பிலேயே ஓடி வந்து கதவைத்திறந்து ஒதுங்கி வழிவிட்டு நிற்பவள் இன்று நான்கைந்து முறை அழைப்புமணியை அழுத்தியும் திறப்பவளாக இல்லை. எனக்கு மிகவும் எரிச்சலாக வந்தது.
ஒருவேளை தூங்கிக் கொண்டிருப்பாளோ என்றும் நினைத்தேன். ஆனால் இதுவரையில் அவளை எனக்கு முன்னதாகத் தூங்கியவளாக நான் கண்டதில்லை. இறுதிச் சனிக்கிழமை காலை வரையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது எழுதியபடியே இருந்தவள். இப்பொழுதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பாளோ எனத் தோன்றிடினும் அவளுக்கு அதற்கான எந்த எழுதுகருவியையோ, காகிதத் தாள்களையோ நான் விட்டு வைக்கவில்லையே என்பதுவும் நினைவில் வந்தது.
கதவின் பக்கத்திலிருந்த ஒற்றை யன்னல் வழியே கையை நுழைத்து கதவின் உள்கொக்கியை விடுவித்துத் திறந்தேன். எனது வீட்டுக் கதவு திறக்கப்படும் போதும் , மூடப்படும் போதும் சன்னமாக ஒலியெழுப்பும். நீங்கள் கேட்டீர்களானால் அடுத்த முறை வரும் போது ஏதேனும் எண்ணெய்ப் போத்தலை எடுத்து வந்து கதவின் மூலையில் பூசிவிடுவீர்களென நினைக்கிறேன். அந்தளவுக்கு அகோரமான சப்தம் அதிலிருந்து வரும். இந்தச் சத்தத்திற்கு அவள் எங்கிருந்தாலும் வாசலுக்கு வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. மிகவும் அழுத்தக்காரி என நினைத்துக் கொண்டேன்.
வீட்டின் உள்கூடத்தில் சனிக்கிழமை காலையில் நான் எரித்த காகிதங்களினதும் அவை சார்ந்தவற்றினதும் கரிக்குவியல் அப்புறப்படுத்தட்டிருந்தமை எனது கோபத்தையும் எரிச்சலையும் மட்டுப்படுத்தியதோடு , தீயின் கரங்கள் கரும்புகை ஓவியங்களாய்ப் பளிங்குத்தரையில் வரைந்திருந்த எல்லாத்தடயங்களையும் அவள் கழுவிச் சுத்தம் செய்திருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது.
அவள் நல்லவள்தான். அமைதியானவள்தான். எனது முன்னைய காதலிகளைப் போல எனது பணத்தினைக் குறிவைத்து அது வேண்டும், இது வேண்டும் என்று நச்சரித்துக் கேட்பவளல்ல. கண்ணியமானவள். நாணம், ஒழுக்கம் நிறைந்தவளும் கூட. எனது பிரச்சினைகளெல்லாம் அவளது எழுத்துக்கள் சம்பந்தமானதாகவே இருந்தன. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாள். எழுத்தின் அத்தனை பரிமாணங்களும் அவளது விரல்களினூடே தாள்களில் கொட்டப்படவேண்டுமென்பது போல ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தமைதான் எனக்குப் பிடிக்கவேயில்லை.
அவளைப் பெண் பார்த்து நிச்சயிக்கும் முன்பே வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணப்பெண்ணுக்குப் பொழுதுபோக்கு எழுத்துத்தானென்று கட்டாயம் மணமகனிடம் சொல்லச் சொன்னாளாம். அதை இந்த மணமகன் மிகச் சாதாரணமாகத்தான் எண்ணியிருந்தேன். பணமும் சொத்துக்களும் நிறைந்தவளுக்கு எழுத்து ஒரு பொழுதுபோக்காக இருப்பதென்பது கல்யாணத்தை நிறுத்தும் அளவிற்குப் பெரிய பிரச்சினையாக நான் கருதாததால் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த ஒரு சுபயோக சுபதினத்தில் அஸ்விதா என் மனைவியென்றானாள். திருமணத்திற்குப் பின் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவளது ஆறாவது விரலாகப் பேனா இருப்பது புரிந்தது.
எல்லாவற்றையும் எழுதிவந்தாள். நகரும் ஒவ்வொரு கணத்தையும் ஏன் மூச்சையும் கூடத் தன் தினக்குறிப்பேட்டில் பதிந்து வருபவளாக இருந்தாள். கடந்த மாதம் இந்தத் திகதியில், இந்த மணித்தியாலத்தின் இந்த நிமிடத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களென உங்களால் இப்பொழுது கூற முடியுமா? ஆனால் அவளிடம் கேட்டால் அவளால் முடியும்.
அதற்காக அவள் தனது நேரங்களனைத்தையும் எழுதியபடியேதான் செலவழிக்கிறாளென நீங்கள் எண்ணக்கூடாது. வழமையாக இந்த சமூகத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளனைத்தையும் ஒழுங்கு தவறாமல் நிறைவேற்றுவாள். ஒவ்வொருநாளும் விதம்விதமாக எனக்குப்பிடித்தமான உணவுகளாகட்டும், அலங்காரமாகட்டும், எல்லாவற்றிலும் மிகச் சிரத்தையெடுத்து அழகாகச் செய்தவள் அவள். சொல்ல மறந்துவிட்டேன். அவளது கண்கள் மிகவும் அழகியவையாக இருந்தன. அந்தக் கண்களின் மாயசக்திதான் என்னை அவள் பக்கம் ஈர்த்தனவோ என்னவோ…?
நான் சொல்லவந்ததை விட்டு எங்கெங்கோ போகிறேனென நினைக்கிறேன். இப்பொழுது என்னைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். எனக்குப் பயங்கரமாகக் கோபம் வரும். எதற்கென்றில்லை. ஒருமுறை வீதியில் ஒளிச்சமிக்ஞை அனுமதிக்காக வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டுக் காத்திருக்கையில் பக்கத்து வாகனச் சாரதி மிகச்சத்தமாகவும் உல்லாசமாகவும் தனது வானொலியை முடுக்கிவிட்டு இலேசாக நடனமாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கோபம் பொங்கிற்று. எனது பக்கத்திலிருந்த அஸ்விதாவின் அழகிய கரத்தினை சிகரெட்டால் சுட்டுத்தான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடிந்தது.
அவள் மகா பொறுமைசாலி. எனக்கு வரும் கோபத்தையெல்லாம் நான் அவளிடம்தான் காட்டவிழைந்திருக்கிறேன். கையில் கண்டதைத் தூக்கியெறிந்திருக்கிறேன். அவள் எழுதிவைத்த காகிதங்கள் கண்ணில் பட்டால் கிழித்தெறிந்திருக்கிறேன். சில சமயங்களில் அவளைச் சிகரெட்டால் சுட்டிருக்கிறேன். சரி விடுங்கள். முகஞ்சுளிக்கிறீர்கள். அதற்கு மேல் வேண்டாம்.
எனக்கும் அஸ்விதாவிற்குமான இறுதிச்சண்டை கடந்த சனிக்கிழமை காலையில் வந்தது. சண்டையென்றும் சொல்வதற்கில்லை. இருவரும் பலசாலிகளாகவும் இறுதியில் ஒருவர் வெற்றி கொள்வதும் மட்டுமே சண்டையெனப்படுமெனில் அது சண்டையே இல்லை. எனது கரம் மட்டுமே மேலோங்கும் ஒரு கோபத்தின் ஆதிக்கம் எனக் கொள்ளலாம்.சனி, ஞாயிறு வழமை போலவே எனக்கு விடுமுறை தினங்கள். சனியன்று பகல் வரையில் நன்றாகத் தூங்கியெழுவேன். அன்றைய சனியும் வழமை போலவே தூங்கிக் கொண்டிருக்கும் போது விடிகாலையில் தூக்கத்தில் எனது கைபட்டு கட்டிலுக்கருகில் வைத்திருந்த தண்ணீர்ப்பாத்திரம் நிலத்தில் விழுந்து சிதறிய அந்தச் சத்தத்தில் நான் விழித்துக் கொள்ள வேண்டியவனானேன்.
எனது தூக்கம் கலைந்ததற்கான கோபமும் எரிச்சலும் மிதந்து பொங்கிற்று. அருகில் படுத்திருக்க வேண்டிய அவளைத் தேடினால் அங்கு அவள் இருக்கவில்லை. அவள் பெயர் சொல்லி இயன்றவரை சத்தமாகப் பலமுறை அழைத்துப் பார்த்தும் பயனற்ற காரணத்தால் மூடியிருந்த என்னறைக் கதவைத் திறந்து அவளைத் தேடினேன். அவள் மாடியின் வெளிப்புற வராந்தா ஊஞ்சலில் அமர்ந்து தன் நீண்ட ஈரக் கூந்தலை உலர்த்தியவளாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
மிதமிஞ்சிய கோபத்தோடு அவளை நெருங்கிய நான் அவளது கன்னத்தில் அறைந்ததோடு நிற்காமல் அவளது கையிலிருந்த தினக்குறிப்பேடு, மையூற்றும் பேனா, அதன் நீலக் கறை துடைக்கும் வெள்ளைத் துணி, இன்னும் அவ்வளவு காலமாக அவள் எழுதிச் சேர்த்து வைத்திருந்த அத்தனைக் காகிதங்களையும் சேகரித்து வீட்டின் உள்கூடத்தில் போட்டு எரித்தேன். அதனை எரிக்கும் வரையில் அவள் கண்ணீர் நிறைந்த கண்களோடும் , சிவந்த கன்னத்தோடும் எனது செய்கையைத் தடுக்க முனைந்தவாறு என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்ததுவும் நான் அவளை உதறியதில் இரு முறை வீசப்பட்டுப் போய் நிலத்தில் விழுந்ததுவும் இன்னும் நினைவிலிருக்கிறது.
உங்கள் தோளில் ஒரு எறும்பு ஊர்கிறது பாருங்கள். அதனைத் தட்டிவிடுங்கள். ஆம். இந்த எறும்பைப் போலத்தான் அன்று அவளும் தூரப்போய் விழுந்தாள். கோபத்தின் வெறியில் அன்று நான் முற்றிலுமாக என்னிலை மறந்தவனாக இருந்தேன். பாருங்கள். இப்பொழுது கூட உங்களிடம் அவள் வரையும் ஓவியங்களைப் பற்றிச் சொல்லமறந்து விட்டேன். அவள் மிகவும் அழகாக ஓவியங்களும் வரைவாள். திருமணமான இரண்டாவது நாள் ஒரு மாலை வேளையில் அவள் வரைந்த ஓவியங்களை எனக்குக் காட்டினாள். அவை மிகவும் அழகானவையாகவும், வண்ணமயமான காட்சிகளாகவுமிருந்தன. ஆனால் நான் எனக்கவை பிடிக்காதவை போன்ற பாவனையோடு முகத்தினைத் திருப்பிக் கொண்டேன். அன்றிலிருந்துதான் அவள் வரைவதை விட்டிருக்க வேண்டும்.
அன்று அந்தக் காகிதக் குவியல்கள் முற்றிலுமாக எரிந்து முடிக்கும்வரை அங்கேயே நின்றிருந்தேன். நிலத்தில் விழுந்த இடத்தில் உட்கார்ந்தவாறே எரிவதைப் பார்த்துச் சோர்ந்திருந்தாள் அவள். சிவந்த கன்னத்தினூடே கண்ணீர் நிற்காமல் வழிந்தபடி இருந்தது. அது முற்றாக எரிந்து முடிந்ததும் நான் எனது தூக்கத்தைத் தொடரப் போனேன். அறைக் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு அன்று நிம்மதியாக உறங்கினேன்.
அவள் சிறிது நேரம் அழுதுகொண்டிருந்திருப்பாள். நான் எழும்பிக் குளித்து முடிக்கையில் சாப்பாட்டு மேசையின் மீது எனக்குப் பிடித்தமான உணவு காத்திருந்தது. அவள் எழுதுவதையும், அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்துவதையும் தவிர்ந்த மற்ற எல்லாக் காரியங்களையும் வழமையைப் போலவே மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் நிறைவேற்றினாள். அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்த நான் சொல்லவுமில்லை. அவளாக அப்புறப்படுத்துவாளென்றே எண்ணியிருந்தேன்.
அன்றைய மதிய உணவிற்குப் பின்னரும் வழமையான ஒவ்வொரு சனிக்கிழமையைப் போன்றே எனது பெண் சினேகிதியைச் சந்திக்கச் சென்று அவளுடன் தங்கியிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போதும் அந்தக் கரிக்குவியல் அப்படியே இருந்தது. மிகுந்த களைப்புடனிருந்த நான், அஸ்விதா எனக்காகச் செய்திருந்த இரவுச் சமையலையும் புறக்கணித்தவனாகத் தூங்கி எழுகையில் எனது காலுறைகள் அகற்றப்பட்டிருப்பதையும் அலுவலகத்துக்கான ஆடை நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டேன். அன்று காலையில் வழமையாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பவேண்டியவனாக இருந்தேன். எனது கைத்தொலைபேசியை சினேகிதி வீட்டில் மறந்து விட்டுவந்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்புவதாகத் திட்டம்.
காலையில் நான் வெளியேறும் போது அகற்றப்படாமலிருந்த கரிக்குவியல் இப்பொழுது சுத்தமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது. வழமையாக எனது ஒவ்வொரு அசைவிற்கும் என் முன்னே வந்து நிற்பவள் அன்று முன்னாலேயே வராதது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்தது. முதன்முறையாக மெல்லிய குரலில் அவளை வீடு முழுவதும் தேடத் தொடங்கினேன். அவளுக்குப் பிடித்தமான ஊஞ்சலிலோ, சமையலறையிலோ கூட அவளிருக்கவில்லை. இந்த இடத்தில் இதனையும் நான் சொல்ல வேண்டும். என் முதல் காதலி பரிசளித்து நான் ஆசையாக வளர்த்துவந்த என் ஒற்றைக் கிளியை அஸ்விதா கூண்டை விட்டும் திறந்து பறக்கவிட்டிருந்தாள். அதனாலேயே எனக்கு அவள் மேல் மீண்டும் அளவுகடந்த கோபம் வந்தது.
மிகக் கடுமையாக வீடுமுழுதும் அவள் பெயரெதிரொலிக்கச் சத்தமெழுப்பியபடி படுக்கையறையைத் திறந்த போது அவள் அழகிய விழிகளை மூடிப் படுக்கையிலிருப்பது தெரிந்தது. நான் அவ்வளவு பலமாகச் சத்தமெழுப்பியும் எழும்பாததால் கோபம் மிதமிஞ்சி அவளை நோக்கிக் கையில் அகப்பட்ட பூச்சாடியால் வீசியடித்தேன். அது அவள் நெற்றியில் பட்டுக் கீழே விழுந்து பெருஞ்சத்தத்தோடு சிதறியது. ஆனால் அவளிடமிருந்து எந்தச் சலனமுமில்லை. எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளருகே போய் பலங்கொண்ட மட்டும் பிடித்துலுக்கினேன்.
அவள் மிகவும் குளிர்ந்து போனவளாக இருந்தாள். இதழோரமாக வெண்ணிற நுரை வழிந்து காய்ந்து போயிருந்தது. மூக்கினருகே விரல் வைத்துப் பார்த்தேன். இறுதியாக, அவள் இறந்து போயிருந்தது புரிந்தது. மனதின் மூலையில் அதிர்ச்சி தாக்க உடனே எனது பெண் சினேகிதிக்குத் தொலைபேசி, விபரத்தைச் சொன்னேன். சனியன் ஒழிந்துவிட்டதெனச் சொல்லி அட்டகாசமாகச் சிரித்தவள் உடனடியாக என்னைக் காவல்துறைக்கு அறிவிக்கும் படியும் இல்லாவிட்டால் பின்னால் சிக்கல் வருமென்றும் பணித்தாள். அவள் சொன்னபடியே காவல்துறைக்கு அறிவித்ததுதான் எனது தப்பாகப் போயிற்று.
அவர்கள் வந்து பல விசாரணைகள் மூலம் என்னைத் திணறடித்தனர். நான் இது தற்கொலையென உறுதிபடச் சொன்ன போதும் இறப்பிற்கான காரணம் எதையும் எழுதி வைக்காமல் இறந்துபோனதால் கொலையாக இருக்கக் கூடுமெனச் சொல்லி என்னைச் சந்தேகித்தனர். பாவி.படுபாவி.. ‘வாழப்பிடிக்கவில்லை. ஆதலால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என ஒரு வரியெழுதி வைத்துவிட்டுச் செத்தொழிந்திருந்தாலென்ன? மரணவிசாரணை அறிக்கைகளும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் எனக்கெதிராகவே இருந்தன.
நான் அவளைத் தள்ளிவிட்டு விழுந்த அன்று அவளது வலது கை விரல்களிலொன்று எலும்பு முறிவிற்காளாகியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக அவள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியிலிருந்திருக்கிறாள். விசாரணையின் போது நான் காலையில் வீட்டிலிருந்து சென்றதாகப் பொய்யாய்ச் சொன்ன நேரத்துக்குச் சற்றுமுன்னர்தான் அவள் விஷத்தினை அருந்தியிருந்திருக்கிறாள். கதவின் தாழ்ப்பாள்க் கொக்கியில் இறுதியாப் பதிந்த கைரேகை எனதாக இருந்ததோடு , இறுதியாக பிணத்தின் தலையில் பூச்சாடியால் அடித்திருந்ததும் என்னைக் கொலைகாரனெனத் தீர்ப்பெழுதப் போதுமானதாக இருக்கிறது. எனினும் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதுவரையில் விசாரணைக் கைதியாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.
எனது பெண் சினேகிதி சாட்சியங்களோடு எனக்கு உதவிக்கு வருவாளென நினைத்தேன். ஆனால் அவள் இதுவரை வரவில்லை. அவள் தனது கணவனுக்குப் பயந்திருக்கக் கூடும். எனது சிறைத் தோழனே… இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். என்ன குற்றத்தைச் செய்துவிட்டு நீங்கள் சிறையிலிருக்கிறீர்கள் ?
மீண்டுமொன்றை ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டேன். அஸ்விதா ஒரு பிறவி ஊமைப் பெண்.
பிரசுரமான இதழ்கள்
# அகநாழிகை இலக்கிய இதழ்
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
சொல்லமுடியாத ஒரு உணர்வு! மனதை பிசைகிறது! அருமை!!!
அற்புதமான நடை. கடைசி வரி… சொல்ல வார்த்தை இல்லை..
migavum நேர்த்தியாக sollappatta kathai.
மிக அருமையாக இருந்தது உங்கள் கதை
திரு ரிஷான் ஷெரிப்,
அற்புதமான கதை. மிகவும் சரளமான நடை. சொல்ல வந்ததை மிகவும் அருமையாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் புகழ்பெற்ற எழுத்துக்களைப் படிப்பது போலவே இருந்தது. இது இலங்கை தமிழோ? மிகவும் இனிமை. என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட கதை இது.