சுள்ளிக்காட்டு அல்லிக்கொடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 9,776 
 
 

“அல்லி….அல்லி….” என சத்தமிட்டபடி ஓடிவந்தாள் அல்லிக்கொடியின் தாய் மல்லி. “காட்ல மேஞ்சுட்டிருந்த பொட்டக்குட்டிய குள்ள நரி தூக்கீட்டு ஓடீடுச்சிடீ….” தேம்பி தேம்பி அழுதாள்.

“தே…என்னத்துக்கு சின்னக்கொழந்தையாட்ட இப்படி தேம்பி அழுது தொலைக்கறே….? அடிக்கொருக்கா நடக்கற விசியந்தானே…. முந்தா நேத்துங்கூடத்தா பக்கத்துக்காட்டு பாரிஜாதத்தோட கெடாக்குட்டிய தூக்கீட்டு ஓடீடுச்சு. அவ அழுதாளா..‌? நோவு வந்து செத்துப்போச்சுன்னு நெனைச்சுப்போட்டு கம்மஞ்சோத்தக்கரைச்சு சின்ன வெங்காயத்தக்கடிச்சு வகுத்த நப்பீட்டு வா. பருத்திக்காட்ல நாலு சாக்கு பருத்தியாகும். கொண்டு போயி சனிக்கெழம சந்தைல போட்டுட்டு அந்தக்காசுக்கு ஒரு பொட்டக்குட்டிய வாங்கீட்டு வந்து போடலாம்” என மகள் கூறக்கேட்டு சாந்தமானாள் மல்லி.

அடுத்த நாள் சந்தைக்கு கொண்டு செல்ல பருத்தி மூட்டையை எடுக்க வண்டி ஓட்டி வந்த வண்டிக்காரன் மகன் ராசு மூட்டையை எடுத்து வண்டியில் ஒத்தை ஆளாக  ஏற்ற முடியாததால் அல்லியை அழைத்தான். அருகே சென்றவளிடம் கை கோர்க்க கையை நீட்டினான். அல்லி முதலாக வெட்கப்பட்டவளாகத்தயங்கினாள். 

“சாக்க தலவுல புடிச்சா மூட்ட வழுக்கிப்போகும். கை கோர்த்தா டக்குனு மேல ஓடிடும்” என்றதும் வேறு வழியின்றி அவனது வலது கைக்குள் தனது இடது கையை இணைத்து நான்கு மூட்டைகளையும் வண்டியில் ஏற்றிட உதவியவளுக்கு ஏனோ உதறலாக இருந்தது. உடல் நடுங்கியது. முதன் முதலாக ஒரு ஆணின் கைகளைப்பற்றியது தான் காரணம். அப்போது ஆடுகளை மேய்த்துக்கொண்டு வந்த அவளது தாய் மல்லி தனது மகள் ஒரு ஆணுடன் மூட்டைகளை வண்டியில் ஏற்றுவதைப்பார்த்து விட்டு பதறியபடி அருகில் வந்தவள் ” கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பனே… அதுக்குள்ள வலுசப்புள்ள நீ எதுக்கு ஒரு வலுசப்பையங்கையப்புடிச்சே….? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆயிப்போச்சுன்னா உங்கொப்பனுக்கு ஆரு பதுல் சொல்லுவா? ஊரு ஒலகத்துல உன்னைய ஆரு வந்து பொண்ணுக்கேப்பா?” தாய் கோபத்துடன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலும், உடல் நடுக்கம் நிற்காததாலும் ஓடிச்சென்று வீட்டிற்குள் படுத்துக்கொண்டாள் அல்லி.

படுத்தவளை அவளது மனம் படுத்திருக்க விடவில்லை. எழுந்து ஜன்னல் வழியே  வண்டிக்கார ராசு வண்டி ஓட்டிச்செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு தூக்கம் வராமல் தவித்தாள். ராசுவோடு கைகோர்த்துக்கொண்டு எங்காவது செல்ல வேண்டும் போல் இருந்தது. 

சந்தைக்குச்சென்று பருத்தியை விற்று விட்டு ஆட்டுக்குட்டி வாங்கி வர தயாரான தந்தை மாரப்பனிடம் சென்று” அப்பா” என்றாள்.

“சொல்லு சாமி. சந்தைல ஒனக்கு என்ன வாங்ககயாரது?”

“நானும் வாரேன்…”

“நீ என்னத்துக்கு அங்கெல்லாம்? பொட்டப்புள்ள ஊட்ல இருந்தாத்தா மதிப்பு. கண்ணாலங்கட்டிக்கொடுத்த பின்னால எங்க வேணும்னாலும் போலாங்கண்ணு. இப்போதைக்கு என்ன வேணும்னு சொல்லு நானே வாங்கியாறேன்”

“அது உங்களுக்கு வாங்கத்தெரியாது. நானே வந்து அளவு பாத்து வாங்கோணும்” என அல்லி சொல்வதை குறுக்கிட்ட தாய் மல்லி “அதெல்லாம் காட்டுக்குள்ள சுத்தற உனக்கெதுக்கு? வேலில போற ஓணான மடில போட்டு முடிஞ்சாளாம் சிறுக்கி, அந்தக்கதையால்ல இருக்குது. ஒடம்புக்கு ஒத்ததுணியப்போடறதுக்கு வழியக்கானமாமா…. உள்ளொன்னு கேக்குதாமா… அதெல்லாம் டவுன்ல படிச்ச கழுவாடுக போடறது. நமக்கெதுக்கு நாகரீகமெல்லாம். அப்புடி வாங்கோணும்னா கண்ணாலத்துக்கு பாத்துக்கலாம்” என கூறிய தாயை முறைத்துப்பார்த்தாள்.

பருத்தி விற்பதை சாக்காக வைத்து ராசுவை இன்று சந்தித்து விட வேண்டுமென திட்டம் போட்டாள். மகள் போடும் திட்டத்தை முறியடிப்திலேயே குறியாக இருந்த தாய் மல்லி “என்ற சைசு உன்ற ஒடம்புக்கு செரியா இருக்கும். உன்ற அப்பங்காரன் மசமசன்னு வேவாரிக கேக்கற வெலைக்கு பருத்தியக்கொடுத்துப்போட்டு, சொல்லற வெலைக்கு ஆட்டுக்குட்டிய வாங்கியாந்துருவாரு கேணங்கணக்கா. அதுக்காச்சும் நாங்கூடப்போறதுதாந்தேவலை. நீயி சுள்ளிக்காடுக்குள்ள ஆட்ட ஓட்டீட்டு போயி சித்த மேச்சலுக்கு உட்டுப்போடு. சொல்லிப்போட்டேன் ஆமா” எனக்கூறிய தாயின் பேச்சைத்தட்ட முடியாதவளாய் திட்டத்தைக்கிடப்பில் போட்டாள்.

மனிதர்கள் திட்டம் போட்டது சில சமயம் நடக்காமல், திட்டமிடாதது நடக்கும் போது விதி என நினைக்க வைத்து விடுகிறது.

மனதிலிருந்து அழிக்க முடியாத சந்திப்பாக ராசுவின் நினைவிலேயே சாப்பிடக்கூட விருப்பமின்றி தாயின் மீது அளவு கடந்த கோபத்துடன் காட்டுக்குள் ஆடுகளை மேய்க்கச்சென்றாள் அல்லி.

மாலை நேரம் வரை பசியை மறந்து காட்டிலேயே படுத்து உறங்கியவளை வேலிக்குள்ளிருந்த விசபாபாம்பு தீண்டி விட “ஐயே” என அலறினாள். சற்று தொலைவில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிநேகிதி பாரிஜாதம் ஓடி வந்து விசயம் அறிந்து சத்தமிட்டாள். பாதையில் செல்பவர்கள் ஓடி வந்தனர். அக்கூட்டத்திலிருந்த ஒரு வாலிபன் தன் இடுப்பு அரணாவிலிருந்த கத்தியை எடுத்து பாம்பு கடித்த இடத்தில் கீறிவிட்டு, யோசிக்காமல் வாயை அவளது காலில் வைத்து ரத்தத்தை உறிஞ்சியெடுத்து துப்பினான். பின் காயத்துக்கு மேலே தனது துண்டை எடுத்து இறுக்கமாகக்கட்டுப்போட்டான். கண் விழித்தவள் தனக்கு உதவுவது ராசு என தெரிந்ததும் மீண்டும் மயங்கினாள்.

மயங்கியவளை மார்பில் தாங்கி தோளில் போட்டபடி வைத்தியர் வீட்டிற்கு ஓடினான். வைத்தியரும் மூலிகையை அரைத்து குடிக்கக்கொடுத்து விட்டு, வேப்ப மரத்தின் இலையில் பாடம் அடித்தவுடன் நினைவு திரும்பி எழுந்தவளை சந்தையிலிருந்து வந்ததும் கேள்விப்பட்டு ஓடி வந்த தாய் மல்லி வாறி அணைத்துக்கொண்டு அழுதாள். அங்கே தன்னைக்காப்பாற்றியவன் ராசு என அறிந்ததும் அவனை நேராகப்பார்க்க இயலாதவளாய் வெட்கப்பட்டவாறு தலைகவிழ்ந்த படியே கைகூப்பி வணங்கி நன்றி சொன்னாள்.

ராசுவின் மீது முன்பு இருந்ததை விட மன நெருக்கம் அதிகமானதை உணர்ந்தாள் அல்லி.

‘தைப்பொங்கலன்று தான் சிநேகிதிகளுடன் கும்மியடிக்கச்செல்ல அம்மா மல்லி அனுப்புவாள். அப்போது ராசுவைச்சந்தித்து வெட்கத்தை விட்டு பேசி விட வேண்டும்’ என திட்டம் போட்டிருந்தாள்.

பொரி கடலையுடன் வீட்டில் தாய் மல்லி சுட்டு வைத்திருந்த முறுக்கை கையிலேயே பொடித்து கலக்கி வைத்துக்கொண்டாள். தாவணி பாவாடையணிந்து தேவதை போல் தெரிந்தாள்.

சினேகிதிகளுடன் நான்கு மைல் தொலைவில் உள்ள அரச மரத்து விநாயகர் கோவிலுக்கு நடந்தே ஊர் கதை அளந்து கொண்டே சென்றனர். சென்றவுடன் முதலில் விநாயகருக்கு கொண்டு சென்ற பலகாரங்களை முன் வைத்து மூன்று சுற்று சுற்றி வந்து தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கொள்ளும் போது ராசு நினைவில் வர கண்ணை மூடிய படி ‘அடுத்த வருசத்துக்குள் ராசு என்னை தொட்டு தாலி கட்டிப்போட்டா நூத்தி எட்டுத்தேங்காய் ஈடு காய் போடறேன்’ என வேண்டி கண் திறந்த போது ராசு அவள் முன் விநாயகரை வழிபட்டுக்கொண்டிருந்ததைக்கண்டவுடன் வெட்கம் பிடுங்கித்தின்ன கொழுசு சலக், சலக்கென ஒலிக்க அங்கிருந்து ஓடிச்சென்று மூச்சு வாங்க நின்றாள். சிநேகிதிகளும் குழப்பத்துடன் அவள் பின் ஓடி வந்து “ஏண்டி இப்படி தலை தெறிக்க ஓடி வந்தே….? கொஞ்சம் இல்லே, விழுந்திருந்தீன்னா வியாகருக்கு உன்ற தலை சிதறு தேங்காயா ஆயிருக்கும்” என்றாள் சிநேகிதி வள்ளி.

“அந்த வண்டிக்காரம் பையன் ராசு என்னக்கட்டிப்பிடிக்கிறமாதிரி கிட்ட வந்தான். அதனாலதான் பயந்து ஓடி வந்துட்டேன்” என்றாள் முதலாகப்பொய் சொன்ன அல்லி.

“அவன் கட்டிப்பிடிக்க வந்தானா…? உன்னை அவன் கட்டிப்பிடிக்கோனும்னு நீ நெனைச்சியா….?”

“சீ போடி. நான் அப்படிப்பட்ட ஆளா….?” 

“அவன் நீ சொன்னாலும் உன்னைக்கட்டிப்பிக்க மாட்டான். ஏன்னா, அவனோட வருங்கால பொண்டாட்டி, மாமம் பொண்ணு குத்துக்கல்லாட்டா நான் இருக்கறேங்கிற பயம். அது மட்டுமில்ல அவன் என்னைப்பாக்கத்தான் இங்கே வந்திருக்கறான். நான் கட்டியிருக்கிற இந்த பாவாடை, ரவிக்கை, தாவணியே அவன் சந்தைக்கு போனபோது எடுத்துட்டு வந்ததுதான் ” என வள்ளி சொன்னதைக்கேட்டு அதிர்ந்த அல்லி, அங்கிருந்து தனியாக, ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்து வீட்டைச்சாத்தி கதறி, கதறி அழுதாள். உயிர் சிநேகிதி வள்ளிக்கு பல வகையில் சாபம் கொடுத்தாள். தன் மனம் கவர்ந்தவன் தன் சிநேகிதியை கல்யாணம் செய்வதை நினைக்கவே முடியாதவளாய் பக்கத்தில் உள்ள கிணற்றில் ஓடிச்சென்று மன வேதனையோடு குதித்து விட்டாள். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாய் பார்த்து விட அலறியபடி ஓடி வந்து கூச்சலிட்டாள். அப்போது அவளைத்தேடி வந்த சிநேகிதி வள்ளியும், ராசுவும் இதைக்கேட்டு ஓடிவந்து செய்வதறியாது திகைத்த நிலையில், சற்றும் யோசிக்காமல் அல்லியைக்காப்பாற்ற ராசு கிணற்றில் குதித்து விட்டான்.

கிணற்றிலிருந்து தோளில் போட்டு அல்லியைத்தூக்கி மேலே ஏறி வந்த ராசு அவளைத்தரையில் படுக்க வைத்து நெஞ்சுப்பகுதியை அழுத்த, குடித்த தண்ணீர் வாய் வழியாக வெளியேறியதும் கண் விழித்தவள் தன் முன்னே ராசு நிற்பதையும், அவன் தன்னை இரண்டாவது முறையாகக்காப்பாற்றியதையும் அறிந்து சுற்றிலும் பலரும் நிற்பதை மறந்து, ராசுவை இறுக்கமாகக்கண்டிப்பிடித்து அவனது மார்பில் தலையை சாய்த்துக்கொண்டாள். அவனும் அவளது செயலை ஏற்றுக்கொண்டது போல் அவளது முதுகில் தட்டிக்கொடுத்தது நம்பிக்கையை ஏற்படுத்தியதால் அல்லிக்கொடி மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *