சரவணன் மனசுல சுகந்தி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 23,033 
 
 

நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, ‘என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது.

‘ஒண்ணே ஒண்ணு… கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான்.

நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் ‘ஊத்துக்குளி வெண்ணெயைப்போல இருக்கியேடி… வழுக்குறியேடி…’ என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். கைத்தமலையில் முருகன் அமர்ந்திருப்பதால், தை மாதத் தேரோட்டம் இங்கு விசேஷம். நான் இங்கு சொல்லவருவது சுகந்தி என்கிற வழுக்கும் வெண்ணெயைப் பற்றி.

என் தங்கை சித்ராவை அவளின் கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே, அவளின் விருப்பத்தின் பேரில் சேலம் சக்திவேலுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்தோம். சக்திவேலுக்கு சேலத்தில் நல்ல வசதி. நகருக்குள், பத்து கார்கள் வாடகைக்கு ஓடுகின்றன. சொகுசுவண்டிகூட இரண்டு வைத்திருக்கிறார். ஊத்துக்குளியில் இருந்து சேலத்துக்குக் காதல் எப்படிச் சென்றது? எல்லாம் இந்த முகப்புத்தகத்தின் வாயிலாகத்தான்.

முகப்புத்தகத்தினால் இப்படி சில நல்ல காரியங்களும் நடந்தேறிவிடுகின்றன. நான் அதில் இல்லை. ஆனால், சீக்கிரம் ஒரு அக்கவுன்ட் தொடங்கிவிடுவேன். என் சுகந்தி 4,000 நண்பர்களோடு அதில் இருப்பதாக சிவா சொன்னான். ‘அதில் அவள் அப்படி என்ன செய்துகொண்டிருக்கிறாள்?’ எனக் கேட்டேன் அவனிடமே. ‘பூக்களின் படங்கள் போட்டு காலை வணக்கம் போடுவாள்’ என்றான். கூடவே உபரித் தகவலாக ‘அதற்கு வாழ்த்துச் சொல்லி 200-க்கும் மேல் கமென்ட்டுகளும், குறைந்தபட்சம் 500 லைக்குகளும் குவியும்’ என்றான். போட்டி பலமாகத்தான் இருக்கும்போல எனக்கு.

‘சீக்கிரமே நானும் முகப்புத்தகத்துக்கு வரவேண்டும்’ என்றேன் சிவாவிடம். ‘காதல் வந்தால், கவிதையெல்லாம் எழுத வேண்டும் அல்லவா?’ என அப்பாவியாகக் கேட்டேன். அவன் அதற்கும் வழிவகைகளைச் சொல்லிக் கொடுத்தான். ‘முகப்புத்தகத்தில் ஏராளமானோர் கவிதை எழுதி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும், அதில் இருந்து ஒன்றை எடுத்து, தன் பக்கத்தில் தன்னுடைய கவிதையாகப் போட்டுக்கொண்டால் போதும்’ என்றும் சொன்னான். அதாவது அவன் ‘இட்லி’ எனக் காதலியை வர்ணித்து எழுதியிருந்தால், நான் அதை ‘வடை’ என மாற்றிப் போட்டுக்கொள்ள வேண்டுமாம். அட!

சரவணன் மனசுல சுகந்திசிறந்த கவிதைகளை முகப்புத்தகத்தில் இருந்து கொத்தும் முறையைச் சொன்னான் சிவா. நல்ல கவிதையை யாரேனும் எழுதி போஸ்ட் செய்திருந்தால், இவன் அவர்கள் உள்பெட்டியில் போய், ‘உலகத்திலேயே சிறந்த கவிதை இது… இந்த போஸ்ட்டை எடுங்கள். அதை வார இதழில் பணியில் இருக்கும் நண்பனுக்கு அனுப்பியிருக்கிறேன். அது சீக்கிரமே அந்த இதழில் உங்கள் பெயருடன் வெளியாகும்’ என ஊதிவிடுவானாம். பின்னர் அது நீக்கப்பட்டதா எனப் பார்த்துவிட்டு, அந்தக் கவிதையில் சில ரப்பர் வேலைகள் செய்து, புதிய கவிதையாக அவன் பக்கத்தில் ஏற்றி, லைக் வாங்கி இன்பமுறுவானாம். அட… அட!

இந்த வெங்கடேஷ்வரா ஆஃப்செட் அச்சகத்தில், தொழிலாளர்கள் 100 பேருக்கும் மேல் இருக்கிறோம். நான் எந்த நேரமும் கணினிக்கு முன்பாகத்தான் அமர்ந்திருக்கிறேன்… இரண்டு வருடங்களாக. சிவா எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். பணிகள் எனப் பார்த்தால், ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரமும் ஆபீஸ் வேலையே இருக்கிறது. இவன் எந்த நேரத்தில் இந்த உள்பெட்டி வேலைகளைச் செய்கிறான் என்றே தெரியாது. அதுவும்போக அச்சக முதலாளி அப்படி ஒரு நல்லவர். அவர் தந்தையார், வயதான காலத்திலும் அச்சகத்துக்கு வந்து அமர்ந்து, கணக்கு வழக்கு பார்த்துச் செல்வார். ஊத்துக்குளியைச் சுற்றிலும் அரிசி ஆலைகள் பல இருப்பதால், அச்சகத்தில் வேலைக்கு என்றுமே பஞ்சம் இல்லைதான்.

சுகந்தி, அச்சகத்துக்கு வந்துசேர்ந்து மாதங்கள் பல ஆகிவிட்டன. அவள் கிட்டத்தட்ட முதலாளியின் வேலைகனத்தில் பாதியைக் குறைத்துவிட்டாள். எந்த நேரத்திலும் முகம் சுணங்கிக்கொள்ளவே கூடாத ஸீட்டில், அவள் அமர்ந்திருந்தாள். போனில் பேசும் பார்ட்டிகளுக்கு நிதானமாகப் பதில் சொல்வதில் இருந்து, எந்த நேரமும் தான் உண்டு தன் கணினி உண்டு என இருக்கிறாள். அவளுமே முகப்புத்தகத்தில் திருட்டுத்தனமாக எப்போது சென்று ‘காலை வணக்கம்’ போடுகிறாள் என்றே தெரியவில்லை. சுகந்தி வந்து சேர்ந்த நாளில் இருந்து, அச்சகம் எந்த நேரமும் டியூப்லைட் வெளிச்சம்போல பளீரென இருந்தது.

காதல் என்றால் வேப்பங்காய் போல கசந்த எனக்கு, சுகந்தியின் வரவு அதை ஆப்பிள் ஆக்கிவிட்டது. இந்த உதாரணம் சரிதானா என்றெல்லாம் தெரியாது. தோன்றியதை உடனே சொல்லிவிடுவது என் இயல்பு. சேலை, சுடிதார் என சுகந்தியிடம் எத்தனை எத்தனை ஆடைகள் இருக்கின்றன என்ற கணக்கே தெரியவில்லை. நல்ல வசதியான குடும்பத்துப் பெண், இங்கே வந்து ஏன் இப்படி பார்ட்டிகளுக்குப் பம்மிக்கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது என்றே நினைத்தேன்.

ஆனால், அப்படி அவள் வந்ததால்தானே எனக்குள் ஒரு புதிய செடி வேர்விட்டிருக்கிறது. ஆக, யாரோ மேலே நோட்டு போட்டு வாழ்க்கையை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் நம்பத் தொடங்கினேன். ஆபீஸில் நல்லவேளையாக எல்லோரும் திருமணமான கைகள். ஆகாமல் இருப்பது நான் மட்டும்தான். அதுவும்போக சுகந்திக்கு முன்பாக ‘அழகி’ கொடி நாட்டியவர்கள் மூக்குக்கண்ணாடி போட்ட ஸ்வீட்லினும், மூக்குக்கண்ணாடி அணியாத பத்மாவும்தான்.

பத்மாவுக்கு அச்சகத்தில் மெஷின்மேன் பாலகிருஷ்ணனோடு காதல் என எல்லோருக்கும் தெரியும். கல்யாணச் சாப்பாடு எப்போது போடுவார்கள்

என்பதுதான் தெரியாது. ஸ்வீட்லின் பற்றி சொல்லவேண்டும் என்றால், குனிந்த தலை நிமிர்ந்த பெண்; சற்றே மாநிறம். அதுவே அவளுக்கு அழகுதான். ஆனாலும், சம்பளத்தில் பாதித் தொகையை தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பல வருடப் போராட்டத்தில் செலவழித்துக்கொண்டிருந்தாள். நிறம் மாறிய பிறகுதான், அச்சகத்தினுள் களமாட

இறங்குவேன் என்பது போன்றே நடந்துகொள்வாள்.

ஓர் ஆணும் பெண்ணும் அமைதியாக அமர்ந்து பேசிக்கொண்டே ஒரு டீ சாப்பிட முடியாத ஊராக அல்லவா இருக்கிறது ஊத்துக்குளி. கூடவே டீ அருந்துபவர்கள்கூட ஆச்சர்யமாகப் பார்த்து, ‘இதுக எல்லாம் எங்கே உருப்படப்போவுதுக?’ என்றே பார்வையை ஓட்டுவார்கள். ஒரு காபி ஷாப்போ அல்லது ஐஸ்க்ரீம் பார்லரோ இல்லாத இந்த ஊரில் காதலிப்பதற்கோ, காதலியை அமரவைத்து கடலைபோடுவதற்கோ எந்த வசதியும் இல்லை.

அது தெரிந்துதானோ என்னவோ வேப்பமரம் ஸ்டாப்பிங்கில் பேருந்துக்கு நின்றுகொண்டிருந்த சுகந்தி, பைக்கில் சென்ற என்னை… ‘நிற்க’ எனக் கைகாட்டி நிறுத்தினாள். எனக்குள் படபடப்பு கூடிக்கொண்டது. திடீரென நான் சொல்ல நினைத்த வார்த்தையை அவளே, ‘ஐ லவ் யூ சரவணன்!’ எனச் சொல்லிவிட்டாள் என்றால், நான் என்னாத்துக்கு ஆவேனோ?!

அப்படி நானோ, நீங்களோ நினைத்த மாதிரி எல்லாம் அவள் காதலைச் சொல்வதற்காக வண்டியை நிறுத்தவில்லை. அவளைப் பொறுத்தவரையில், நான் மட்டுமே அச்சகத்தில் நல்ல மாதிரி என்ற நற்சான்றிதழை வழங்கவே நிறுத்தியிருக்கிறாள். அன்றில் இருந்துதான் நான் கொஞ்சமாக தாவாங்கட்டைக்குக் கீழாக வரும் முடிகளை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். அது ஒரு நல்ல தொடக்கத்துக்கான அறிகுறி என நீங்கள் நினைக்கலாம். நானும் அப்படித்தான் நினைத்தேன். பின்பாக நடந்த விஷயங்கள் அப்படி அல்லவே!

சரவணன் மனசுல சுகந்தி2சுகந்தி, முதலாவதாகச் சொன்ன விஷயமே எனக்குப் பெரிய அதிர்ச்சி. சுகந்தி திருமணமான பெண் என்பதே அது. இந்தப் பாழும் மனசு இப்படியா முதலாவதாகப் போய், ‘காதல்’ என திருமணமான பெண் மீது விழுந்து தொலைக்க வேண்டும்? யார்தான் வந்து எனக்கு ஆறுதல் சொல்வார்கள்? நிதானமாக அவளின் கால்களை நோட்டம் போட்டேன். மெட்டி, செருப்பு வாரோடு பின்னிப்பிணைந்து கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சன்னமாக இருந்தது.

சுகந்தியின் கணவர் பல்லகவுண்டன் பாளையத்தில் கம்பெனி ஒன்றில் மேனேஜர். இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் செங்கப்பள்ளியில் ஒரு மண்டபத்தில் நடந்து முடிந்து, வருடம் இரண்டு போய்விட்டதாக, திருப்புக் காட்சியை ஞாபகமாக என்னிடம் சொன்னாள். கணவருடன் இல்லற வாழ்க்கை நடத்தியது மூன்று மாதங்கள் மட்டுமேதானாம். இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் பல இருந்ததால், பொட்டியைத் தூக்கிக்கொண்டு சுகந்தி ஊத்துக்குளி ஆர்.எஸ்-கே அம்மா வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னாள்.

எனக்கு என்னடா என்றால், நான் அவ்வப்போது சுகந்தியைப் பார்த்துக் கொஞ்சமேனும் கொஞ்சம் காதல் பார்வை பார்த்ததைப் புரிந்துகொண்டுதான் அல்லது என் கண்களில் தென்பட்ட காதலைத் தெரிந்து கொண்டுதான், முன்னெச்சரிக்கையாகத் தன்னைப் பற்றிய செய்திகளைச் சொல்கிறாளோ என நினைத்தேன். எது எப்படியோ… அவள் அருகே நின்று அவள் குரலையும் அவளையும் ரசிப்பதற்குக் கொடுப்பினை இருக்கிறது பாருங்கள் எனக்கு. இதற்கே நான் முன்ஜென்மத்தில் வயதானவர்களுக்கு சாலையைக் கடக்க உதவியிருக்க வேண்டும்; பிச்சைக்காரர்களுக்கு, பார்த்த இடத்தில் எல்லாம் பைசாக்கள் போட்டிருக்க வேண்டும்.

தன் விஷயங்களைப் பற்றி ஓரளவு சொல்லி முடித்த சுகந்தி அடுத்ததாக, என்னைக் கூப்பிட்ட காரியத்தில் கண்ணானாள். அதாவது வனத்தில் தன் காரியத்தில் குறிக்கோளாக இருக்கும் வேடனின் நிலைபோல. அவள் கணவன் ஒரு பாசக்காரப் பயல் என்று, இப்போதுதான் இவளுக்கு விளங்கிற்றாம். எல்லோர் வீட்டிலும் நடப்பதுபோன்று கோபித்துக்கொண்டு பெட்டியைத் தூக்கி வந்தவளை அழைத்துப்போக, கணவன் இவள் வீட்டுப் பக்கமே வரவில்லையாம். அப்படியெனில், அவர் அந்த ஊரில் தனக்கு என ஒரு கீப்பை வைத்துக்கொண்டுதானே இருக்க வேண்டும் என்றாள்.

‘கீப்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் விளங்காமல், ‘அப்படின்னா என்னாங்க சுகந்தி?’ என்றேன். ‘அதான் சின்னவீடுனு சொல்வீங்களே…’ என்றாள். ‘அட அப்படியெல்லாம் இருக்காதுங்க சுகந்தி. மூணு மாசம் வாழ்ந்தேன்னு சொல்றீங்க, உங்களுக்குத் தெரியாதா அவரைப் பத்தி!’ என நான் பேசியதில் நிம்மதியாக உள்ளுக்குள் சந்தோஷமானாள்போல.

ஞாயிற்றுக்கிழமை 10 மணி வாக்கில் நான் அவள் கணவனிடம் தூது சென்று, அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் எனக் கண்டறிந்து வந்து சுகந்திக்குச் சொல்ல வேண்டுமாம். ‘அவர் இதேபோல, நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்… எனக் கேட்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா?’ என்றேன். வெட்கப்புன்னகை பூத்தாள் சுகந்தி.

பொது இடம் என்றும் பாராமல் சுகந்தியைக் கட்டிக்கொள்ளத் தூண்டியது அந்த வெட்கப் புன்னகை. பெண்கள் வெட்கப்பட்டால் அவ்வளவு அழகாக இருக்கும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன். திரைப்படங்களில் நாம் பார்க்கும் நாயகிகளின் வெட்கம் எல்லாம் சும்மாய்யா. எப்படியோ தன் பிரச்னைக்குத் தீர்ப்பு சொல்லும் நாட்டாமை ரேஞ்சுக்கு என்னை நினைத்துக்கொண்டாள்போல. கடா மீசை வைத்துக்கொண்டு, வெள்ளை வேட்டி சட்டையில், சுகந்தியின் கணவர் பிரதாப் வீட்டுக்கு, ஜீப்பில் இருந்து கூலியாள் குடைபிடிக்க இறங்கிச் சென்று, அவர் வீட்டின் சோபாவில் அமர்ந்து, ‘ரெண்டுல ஒண்ணு சொல்றா இப்ப… எங்க புள்ளகூட வாழ்க்கை நடத்துவியா… மாட்டியாடா, என்றா சொல்றே?’ என வசனம் பேசுவதாக நினைத்துச் சிரித்துக்கொண்டேன்.

ஆனால், பல்லகவுண்டம் பாளையத்தில் பிரதாப் வீட்டின் நிலவரம் அப்படி இல்லை. வீடு அப்படி அழகாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் ஒரு தோட்டம் என்பது மாதிரி பலவகையான மரங்களும் செடிகளும் இருந்தன. வீட்டில் பிரதாப்பும் அவர் அம்மாவும்தான் இருந்தார்கள். கொய்யாமரத்தில் அப்படி அழகாக, உருண்டையாக, பெரிய பெரிய சைஸில் இப்ப பழுத்து விழுந்துடுவேனாக்கும் என்ற நிலையில் நிறையத் தொங்கின. கிளம்பும்போது ஒரு பை நிறைய வீட்டுக்கு வாங்கிச் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதேபோல நெல்லிச் செடியிலும் செடி பூராவும் சிறுநெல்லிகள் வேறு. அதிலும் கொஞ்சம் பையில் போட்டுக்கொடுக்கச் சொல்ல வேண்டும்.

என் பேச்சுக்களை முதலில் காதுகொடுத்துக் கேட்ட பிரதாப், பின்பு விரக்தியின் விளிம்பில் நின்று பேசினார். சுகந்தி தொட்டதற்கு எல்லாம் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு உர்ரென இருக்கும் பெண்ணாம். அட! சின்னச் சண்டை என்றால் சாப்பிடவே மாட்டாளாம். அட! அழகு இருக்கும் இடத்தில் ஆபத்துக்களும் இருக்கும்போல. அச்சகத்தில் சுகந்தி வேலைக்கு வந்துகொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னபோது, அவர் முகம் எக்கச்சக்க சங்கடத்தில் இருந்ததைக் கவனித்தேன்.
பெட்டியைத் தூக்கிக்கொண்டு வரும் அளவுக்கு அப்படி என்ன பிரச்னை உங்களுக்குள்? என சுகந்தியிடமும் நான் கேட்கவில்லை. இவரிடமும் கேட்க சங்கடமாக இருந்தது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் எனப் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், நடக்க இருப்பதாவது நல்லவையாக இருக்கட்டுமே என்றபோது, என் வயதுக்கு இப்படி பொறுப்புஉணர்வுடன் பேசுவது பிடித்திருக்கிறது என்றார். மனைவி, கணவன் என இருவரிடமும் நான் வாங்கிய நன்னடத்தைச் சான்றிதழை, எங்கே சென்று அடுக்குவது எனத் தெரியவில்லை.

சரவணன் மனசுல சுகந்தி3இறுதியாக ‘சுகந்தியை வீட்டுக்கு அழைத்துவந்து வாழ்க்கையை சுகமாக வாழப்பாருங்கள்… ஆசையை வைத்துக்கொண்டு, எதற்காக இன்னமும் சின்னப்பிள்ளைத்தனமாக இப்படிப் பிரிந்து ஆளுக்கு ஒரு மூலையில் சிரமப்பட வேண்டும்?’ என்றேன்.

‘பொட்டி தூக்கிச் சென்றவளுக்கு, வருவதற்கு வழியா தெரியாது?’ என்றார்.

அவர் பக்கமும் நியாயம் இருப்பதை உணர்ந்து, அடுத்த வாரம் வருவதாகச் சொல்லி வணக்கம் வைத்து எழுந்தேன். அவரின் அம்மா நான் கேட்காமலேயே ஒரு பையில் நான் விருப்பப்பட்ட கனிகளைப் போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார்.

திங்கள் அன்று, என்னிடம் இருந்து தகவலை அறிந்துகொள்ள சுகந்தி தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள். மதிய உணவு நேரத்தில்தான் என்னிடம் பேசுவதற்கே அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பல கண்கள் வேறு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கண்டாள் இல்லை.

‘எப்ப வர்றேன்னு அவரு சொன்னாரு சரவணன்?’ – அவளது பார்வையே காலையில் இருந்து இதே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தது. ‘பொட்டி தூக்கிட்டுப் போனவளுக்கு வர்றதுக்கு வழி மறந்துபோச்சா?’னு கேட்டாருங்க’ என்றேன். என்ன இருந்தாலும் பாவம், அவள் முகம் தொங்கித்தான்போயிற்று அப்போது. சுகந்திக்கு மீண்டும் பெட்டியோடு போய் அங்கு நிற்க தன்மானம் இடம் கொடுக்கப்போவது இல்லை எனத் தெரிந்தது.

இதில் எனக்கும் அல்ப ஆசை இருந்ததை உங்களிடம் மறைப்பானேன். ‘நான் இருக்கேன்டா உனக்கு!’ எனக் கட்டிக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைப்பதுபோல் எல்லாம், இரவு நேரத்தில் படுக்கையில் குப்புற விழுந்து நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி நினைத்துக்கொள்வதுகூட எனக்கு சுகமாக இருந்தது.

அந்த வாரம் முழுவதுமே சுகந்தி குழப்பத்தில் இருந்தாள். பிரதாப்பிடம் கடைசியாக என்னை அனுப்ப முடிவெடுத்துச் சொன்னபோது, ‘சரி’ என்றே தலையாட்டிவிட்டுச் சென்றேன். போக கொய்யாவும் நெல்லியும் தீர்ந்துவிட்டன. இரண்டுமே உடல்நலத்துக்கு நல்லவை என டி.வி-யில் ஒரு பெரியவர் சொல்லிக்கொண்டிருந்தாரே!

இந்த முறை அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது கையில் ஒரு கிஃப்ட் பார்சலைக் கொடுத்து, சுகந்தியிடம் கொடுத்துவிடும்படி சொன்னார். திங்கள் அன்று சுகந்திக்குப் பிறந்த நாளாம். அதற்கான அன்புப் பரிசு என்றார். என் வீட்டில்தான் அந்த அன்புப் பரிசுக்குக் கெடுதல் வந்துவிட்டது. மச்சானும் தங்கச்சியும் சேலத்தில் இருந்து வந்திருந்தார்கள். நான் வெளியே சென்று வந்த நேரத்தில் சித்ரா, ‘ரொம்ப தேங்க்ஸ்ணா… எனக்கு ரொம்பப் பிடிச்ச நீலக் கலர்ல எனக்குன்னே தைச்ச மாதிரி எடுத்திருக்கியே…’ என சுகந்தியின் கணவர் கொடுத்த சுடிதாரை அணிந்துகொண்டு நடந்து வேறு காட்டினாள்.

விஷயத்தை விளக்கிச் சொன்ன பிறகு சங்கடப்பட்டவள், என்னோடு பானு சில்க்ஸ் வரை வந்து, அதே வண்ணத்தில் அதே அளவில் வேறு சுடிதார் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள். அடுத்த நாள் காலையில் நான் சுகந்திக்கு என் பரிசாக அந்த கிஃப்ட் பார்சலை நீட்டியபோது, ‘என் பிறந்த நாள் இன்னிக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் சரவணன்?’ என்றாள் கையில் வாங்கிக்கொண்டே. ‘அதான் முகப்புத்தகத்துல இருக்கே’ எனச் சொல்லிச் சமாளித்தேன். பிறந்த நாள் மகிழ்ச்சியில், பிரதாப்பிடம் நான் சென்று வந்த விஷயம் பற்றி கேட்க மறந்திருந்தாள் சுகந்தி.

அன்று நான் வீட்டில் இருந்து டிபன் பாக்ஸில் உணவு கொண்டுவரவில்லை. மதியம் உணவு இடைவேளை சமயத்தில் நானும் சிவாவுடன் இணைந்து சாப்பிட வெளியில் கிளம்பும்போது, அந்தக் காட்சியை ஆபீஸ் அறைக்கு வெளியே பார்த்து அதிர்ந்து நின்றோம்.

ஆபீஸுக்கு உதவியாக 50 வயது தாண்டிய முனியன் என்பவர் இருந்தார் பல வருடங்களாக. அவரின் கன்னத்தில்தான் சுகந்தி கையை வீசி அடித்திருந்தாள்.

‘நீங்கெல்லாம் மனுஷனா… மிருகமா? சரவணன் எனக்குத் தம்பி மாதிரி! ரெண்டு பேருக்கும் லவ்வு, லவ்வுன்னு வேலை செய்றவங்ககிட்டல்லாம் சொல்லிச் சிரிச்சுட்டிருக்கிறதுதான் உங்க வேலையா? உங்க பொண்ணா இருந்தா இப்படித்தான் சொல்லிட்டிருப்பீங்களா?’

திடீரென, அந்தக் கட்டடம் முழுவதுமே ஆட்டம் ஆடி என் தலை மீதே சரிவதுபோல இருந்தது. ஆபீஸ் அறையில் இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டேன் நான். என்ன மனிதன் நான்? எனக்கு என் மீதே வெறுப்பாக இருந்தது. அதிலும், ‘நீங்க ஏன் சரவணன் இதுக்கெல்லாம் அழுதுட்டிருக்கீங்க? அழாதீங்க!’ என சுகந்தி, என் அருகில் நின்று சொல்லும்போது, என்னால் தாங்கிக்கொள்ளத்தான் முடியவில்லை.

அடுத்த நாளே… காலையில் நான் சுகந்தியை பெட்டியோடு கூட்டிப்போய் பிரதாப் வீட்டில் விட்டுவந்தேன் என்பதை, உங்களுக்கு மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன் இப்போதைக்கு!

– ஜூலை 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *