ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் போய் தேவராஜ சுவாமி கோவில் மேற்கு கோபுரம் வழியில் அத்தி வரதரை சேவிக்க நின்ற கூட்டத்தோடு கலந்து நின்றேன். ஏதோ ஞாபகமா ஷர்ட் பாக்கெட்டைப் பார்த்தா தெரிந்தது ஸ்பெஷல் தரிசன டிக்கட் கொண்டுவரவில்லை என்று. பெருமாளே!
குழம்பித் தவித்த என் தோள் மீது ஒரு கைவிழுந்தது. ” சார்! உங்கள மேடம் கூப்பிடறாங்க”. திரும்பினால் கோவில் சேர்ந்த ஒரு சிப்பந்தி.
செலுத்தப்பட்டவன் போல அவனுடன் நடந்தேன். கொஞ்ச தூரத்தில் ஒரு இன்னோவா. நாங்கள் நெருங்க அதன் பின் கதவு திறந்து சரச கல்யாணி இறங்கினாள்.
அழகாக வயதாகியிருந்தாள். அவள் அழகை வர்ணிக்க பின் நவீன உவமைகள் தேவைப்படும். நம்ம கவிஞர் தேஜஸ்வியத்தான் கேட்கணும்.
“டேய், வெங்கட்! தரிசனம் ஆயிடுத்தா?”
“இல்ல… ஆன்லைன் புக் செஞ்ச டிக்கட்ட எடுத்துட்டு வர மறந்துட்டேன்”
“சரி பரவாயில்ல.. என்னோட வா. VVIP தரிசன டிக்கட் இருக்கு. “
“ரொம்ப தேங்க்ஸ்” என்று அவளோடு சென்றேன். கூட வந்த சிப்பந்தி அங்கிருந்த காவல் துறையிடம் இவள் வைத்திருந்த டிக்கட் மற்றுமொரு லெட்டர் காட்ட, அவர் உடனே வேறு வழியாக எங்களை அனுமதித்தார். கிடுகிடுவென்று ramp ஏறி ஐந்தே நிமிடத்தில் அத்திவரதர் முன் நின்றோம். சிப்பந்தி மீண்டும் ஏதோ சொல்ல எங்களை கயிற்றை விலக்கி உள்ள விட்டார்கள். ஆபரண ஆபூஷணங்கள் ஜ்வலிக்க வரதர் சிரித்தார்.
சரச கல்யாணி சட்டென்று என் பக்கம் திரும்பி “நாம்ப மொதல்ல பாத்ததும் வரதர் சந்நிதிதான்” என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததையே சொன்னாள்.
வரதர் முன்னிலையில் பழைய நினைவுகளில் மூழ்க நேரமில்லாததால் வெளியே வந்தோம்.
“சென்னைதானே?” என்றாள்.
“தாம்பரம்”
“சரி என்னோடவே வா! வழில சாட்டுட்டு உன்ன தாம்பரம் டிராப் செஞ்சுட்டு ஏர்போர்ட் பக்கத்துல உள்ள என் ஹோட்டலுக்குப் போறேன். நாள காலம்பற தில்லிக்கு flight.”
கார் புறப்பட்டதும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
நான் ப்ளஸ் டூ படித்த காலம். சரஸா (நான் அப்படித்தான் கூப்பிடுவேன்) பத்தாவது. டிபி கோவில் லேன் டிபி கோவில் தெருவில் போய் முட்டும் இடத்தில் அவள் வீடு. அவள் அண்ணன் முரளி என் கிளாஸ்மேட்.
சரஸாவை ஒரு முறை பார்த்தவர்களுக்குத் தெரியும் அவள் மேல் காதல் கொள்ளாமல் இருப்பது முடியாது என்று. அதனால் நான் அவள் மேல் காதல் கொண்டேன் என்று உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
ஆனால் எனக்கும் ஒரு வில்லன். அவன் பெயரும் வெங்கட். நான் ஸீ வெங்கட். அவன் ஆர் வெங்கட். அவனும் சரஸா மேல் காதல் கொண்டான். ஆனால் விதி வேறு விதமாக யோசித்து வைத்திருந்தது. சரஸாவுக்கு என் மேல் காதல் வரச் செய்தது. அதற்கு நான் அந்தக் காலத்தில் ஒரு விதமான cuteஆக இருந்ததும் ஒரு காரணம்.
ஐஸ் ஹவுஸ் பீச்சும், பார்த்தசாரதி கோவிலும் (அங்குள்ள வரதர் சந்நிதியில் வைத்துத்தான் முரளியோடு அவளைச் முதலில் சந்தித்தேன்), கஸ்தூரி லைப்ரரியும் எங்கள் காதலுக்கு உரம் சேர்த்த இடங்கள்.
நான் என் காதலை அவளிடம் சொல்ல பலமுறை முயன்று தோற்றேன். அதற்கு என் பயந்த சுபாவம் ஒரு காரணம். ஆனால் சரஸா அதைப் புரிந்து வைத்திருந்தாள் என்பது ஒரு நாள் கஸ்தூரி லைப்ரரியில் எனக்குப் புரிந்தது. சுஜாதா நாவல்கள் வைத்திருந்த ஷெல்ப் அருகில் ஒரு சுபயோக சுப மாலையில் எனக்கு ஒரு முத்தம் தந்தாள்.
அந்த பத்து செகன்ட் முத்தம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. இரவு பகல் அவள் நினைவாகவே இருந்தேன். ஒரு நாள் ஆர் வெங்கட் என்னிடம் கேட்டே விட்டான். நான் நடந்தது எல்லாம் சொன்னேன். அவன் முகம் வாடிவிட்டது.
“அவகிட்ட ஐ லவ் யூ சொன்னியா?”
“இல்லடா.. ஒரு லெட்டர் எழுதித் தரலாம்ன்னு.. நீ எழுதித் தரயாடா? உனக்குத் தான் நல்ல கவிதை மாதிரி எழுத வருமே?’
ஆர் வெங்கட் என்னை ஒரு கொலைப் பார்வை பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நாள் ஸ்கூலில் வைத்து ஒரு கவர் தந்தான். “இந்தா நீ கேட்ட லெட்டர். படிச்சுப் பாரு பிடிச்சா கொடு”
ஆனால் நான் படிக்கவில்லை. படிக்காமலேயே அன்று மாலை அழகியசிங்கர் சந்நிதி பின்புறம் சுற்றி வரும்போது சரஸாவிடம் தந்துவிட்டேன்.
அதற்க்கப்புறம் நடந்தது வெகு விசித்திரம். சரஸா மறுநாளில் இருந்து என்னைத் தவிர்த்தாள். அப்புறம் சில காலம் கழித்து அவள் ஆர் வெங்கட்டை கல்யாணம் செய்துகொண்டு தில்லி பக்கம் போய் விட்டாள் என்று ஒரு சேதி. காலம் எங்களைப் பிரித்து இன்று காஞ்சியில் சேர்த்து வைத்த் விளையாட்டுப் பார்க்கிறது.
சட்டென்று கார் நிற்க நான் நினைவுகளிலிருந்து விடுபட்டேன். ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் நின்றிருதது. இருவரும் உள்ளே சென்று அமர்ந்தோம். மெனு பார்த்து ஆர்டர் செய்துவிட்டு சரஸா “ஏண்டா அப்படி செஞ்ச?” என்றாள்.
“நீ ஏன் அப்படி செஞ்ச சரஸா? “
“டேய், உன் லவ்வ என்கிட்டே சொல்லுவன்னு எவ்ளோ நாள் வெயிட் செஞ்சேன்? நீ என்னடான்னா பொசுக்குன்னு ஆர் வெங்கட் எழுதின காதல் கடுதாசிய என்னண்ட கொண்டு தந்த.. நா வேற என்ன செய்யறதாம்?
“என்ன ஆர் வெங்கட் லவ் லெட்டரா? அது எனக்காக அவன் எழுத்திதந்த லெட்டர்!”
“அப்ப நீதாண்டா சைன் பண்ணியிருக்கணும்? ஆனா அதுல ஆர் வெங்கட்ன்னு சைன் பண்ணியிருந்தது”
இரண்டு பேருக்கும் சட்டென்று எல்லாம் புரிந்துவிட்டது.
ரொம்ப நேர கனமான மௌனத்துக்குப் பின் “அப்போ நீ தந்த முத்தம்?” என்றேன் அபத்தமாக.
வெகு நேரம் என் கண்களையேப் பார்த்த சரஸா “பிடிக்கலேனா திருப்பித் தந்துடு” என்றாள் குறும்பாக.