கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 5,980 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆற்றங்கரையை ஒட்டிய தோப்பின் ஓரத்தில் அமர்ந்து நீரில் தெரியும் தன் பிரதிபிம்பத்தைக் கவனித் துக் கொண்டிருந்தாள் ஒரு குடியானவக் குமரி. அவளைச் சுற்றிலும் பரந்திருந்த மணல் வெளியில் பழுத்து மஞ்ச ளாய்ப் போன இலைகள் சிதறிக்கிடந்தன; பழுப்பிலைகள் எந்தவித அரவமுமின்றி அவளது தலைக்கு மேலாக உதிர்ந்து விழுந்து அவளது தோளிலும் துணியிலும் பதிந்து உட்கார ஆரம்பித்தன. பல இலைகள் அவளது முந்தியில் விழுந்து கிடந்தன. அந்த இலைகளில் ஒன்றை யெடுத்து, அதைத் தன் விரல்களால் சுற்றிச் சுழற்றிக் கொண்டிருந்தாள்; மற்றொரு கையில் நீண்டு வளர்ந்து நெளியும் ஒரு கொடி மிளாரை வைத்திருந்தாள். அவள் உயரமாகவும் ஊதிப்பாகவும் இருந்தாள். குடியானவர்கள் அணியும் ஆடைகளில் அவள் அணிந்திருந்தது உயர்தரமான ரகம்; எனினும் அவளது உருண்ட முகத்தில் சோகம் பிரதிபலித்தது. நீர்ப்பரப்பின் மீது நிலைத்து நின்ற அவளது கண்கள் தீக்ஷண்யமும் திடமும் கொண்டு சிந்தனை வயப்பட்டிருந்தன.

கரையருகே சமீபத்தில் தான் மயிர் கத்தரித்துவிடப் பட்ட ஆடுகள் இலைகளை மேய்ந்து கொண்டிருந்தன; அவையனைத்தும் துரதிருஷ்டசாலிகளைப் போல் அனுதாபத்துக் குரியன போல் தோன்றின. ஆற்றுக்கு அப்பாலுள்ள மரங்கள் இலையுதிர் காலத்தின் வர்ணமாற்றத்துக்கு ஆளாகி, பழுப்பு நிறத்துக்கு அடிமையாகிக் கொண்டிருந் தன. செக்கச் சிவந்த ரோவான் கோத்துக்கள் ரத்தக் காயங்களைப் போல் துருத்தி நின்றன. அன்றைய தினம் அமைதியும் சூரிய ஒளியும் கதகதப்பும் நிறைந்த தினம்; செல்லாகிப் போகும் பருவ காலத்தின் சோகச் சூழ்நிலை நிறைந்து நின்ற நாள்.

அந்தப் பெண்ணுக்குப் பின்னால் கிடந்த இலைகள் சலசலத்தன; ஒரு நெட்டையான வாலிபன் அவளருகே நெருங்கி வந்தான். சூரிய ஒளியில் பதப்பட்டுப்போன அவ னது முகத்தில் இளந்தாடி முளைத்திருந்தது; அவனது காலில் ஜோடுகள் இல்லை; ஆடையும் கிழிந்து தும்பாய்ப் போன கந்தல் தான்.

அந்தப் பெண் அவனைப் பரிபூரணமாகப் பார்க்காது முகத்தை லேசாகத் திருப்பிக் கொண்டு தணிந்த குரலில் பேசினாள்:

“நான் ரொம்ப நேரமாய்க் காத்திக்கிட்டிருக்கேன்…”

அந்த வாலிபன் அவளுக்குப் பக்கத்தில் மணலில் உட்கார்ந்தான் ஆட்டுத் தோலாலான பாதரட்சைகள். பழுப்பு நிறமான தலைக்குட்டை, கண்ணைப் பறிக்கும் நிறம் படைத்த சீட்டித் துணியாடை – அவன் அவளது கோலா கலமான அலங்காரத்தை ஏற இறங்கப் பார்த்து முடித் தான். பிறகு அவளிடம் சிரித்துக் கொண்டே பேசினான்.

“இன்றைக் கென்ன? நீ ஒரே அழகு சொரூபமாக இருக்கிறாயே!”

ஆனால், மறுகணத்திலேயே உணர்ச்சி நிறைந்து ஒளி சிதறும் அவனது பிரகாசமான கண்கள் அந்தக் குமரியின் அகன்று விரிந்த நீலக் கருமணிகளில் படர்ந்துள்ள சோக பாவத்தைக் கண்டு விட்டன. பதறிப்போய்த் தலையைச் சிலுப்பிக்கொண்டே அவன் அவளிடம் சத்தமாகக் கேட்டான்.

“என்ன விஷயம்? நீ அவரிடம் சொல்லிவிட்டாயா?”

“ஆமா”

“சரி , அவருக்கு ரொம்பக் கோபம் வந்துதோ?”

“அவர் என்னை அடிச்சார்!”

“கிழட்டுப்பிசாசு! அப்படியா?…சரி . பிறகு என்ன சொன்னார்?”

“நீ ரொம்ப ஏழைன்னு ….” அந்தப் பெண் பெருமூச் செறிந்து கொண்டே மீண்டும் நீர்ப்பரப்பில் பார்வையைச் செலுத்தினாள்.

அந்த வாலிபன் தலையைத் தாழ்த்திக் கொண்டே சொன்னான்.

“சரி-த்தான்……. அவர் சொன்னது நிசம்… இல்லையா?”

அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று அவர்களது பக்கமாக வந்தது; வாயிலுள்ள இரையை அசை போட்டுக்கொண்டே, பஞ்சடைந்த தன் குறு குறுத்த கண்களால் அவர்களை ஏறிட்டுப் பார்த்தது – ஒரு மீன் ஆற்று நீரில் துள்ளிப் பாய்ந்தது; அதன் துள்ளலால் தெறித்துச் சிதறிய நீரில் சூரிய ஒளி வெள்ளி மயமாக மின்னி மினுக்கிச் சொடுக்கி மறைந்தது. தூரத்தில் எங்கோ யாரோ ஒரு ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மாடு கனைத்தது; ஒரு நாய் கோபா வேசமாகக் குலைத்தது. பூம் பூம் என்ற தமர ஒலி மங்கிப் போய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“நான் ஏழைதான். அது நிசம் ; ரொம்ப நிசம்தான் நான் வேறே எப்படி இருக்கமுடியும்? என் உடம்பு நல்ல ஸ்திதியிலே இருக்கு என்பதைத் தவிர வேறே எனக் குன்னு ஒரு ஸ்திதி இல்லை. என்றாலும் நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு நல்லா வாழ்ந்திருக்க முடியும். இல்லையா, பாலஷ்கா!”

அவன் அவளது தோள்களைத் தொட்டுக்கொண்டே அவளது முகத்தைப் பதிலை எதிர் பார்ப்பது போல் பார்த் தான்.

“அவர் என்ன சொன்னார் தெரியுமோ? அவனைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். ஒரு பணக்காரக்குடி யானவனுக்கு அவன் ஒன்றும் மருமகனாக வரப் போறதில்லை.’ அப்படின்னார் ” அந்தப் பெண் திடீரென்று உணர்ச்சி பரவசமாகி, “அவன் ஒரு பிச்சைக்காரப் பயல். அவன் என்னிடம் வேலைக்காரனாக இருக்கக் கேட்கலாம். என் மருமகனாக இருப்பதற்காக அல்ல…. அப்படின்னும் சொன்னார்?” என்று சொன்னாள்.

“சரி, நீ என்ன பண்ணினே?” என்று சோர்ந்து போய்க் கேட்டான் அந்த வாலிபன்.

“நீ என்னதான் நினைச்சிருக்கே என்று நான் சத்தம் போட்டேன்.”

“ம்…சரி . நீ அவரிடம் என்ன சொன்னே?”

நான் என்னத்தைச் சொல்றது? நான் உன்னைத் தான் காதலிக்கிறேன். வேறே யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்கிறதைத் தான் சொன்னேன்.”

“அதுக்கு என்ன சொன்னார்?”

“அதுக்குத்தான் அவர் என் தலைமீது ஓங்கி அடிச்சார்; என் தலை மயிரைப் பிடிச்சு இழுத்தார். உன் நாக்கை நறுக்கித் தூர எறிஞ்சுடுவேன். இனிமே அவன் பேரைச் சொன்னே – இருக்கு’ என்று எரிஞ்சு விழுந்தார்.”

“என் பெயரையா?” என்று ஏகத்தாளமாகச் சொல் விக் கொண்டே அவன் நீரில் காரி உமிழ்ந்தான்.

“அப்புறம், அம்மா என் மீது பாய ஆரம்பிச்சிட்டாள். “நாம் நல்ல தசையிலே இருக்கோம். நமக்கு அந்தமாதிரி பான ஆள் மருமகனாக வரலாமோ? நமக்கென்ன வேறே மாப்பிள்ளை கிடைக்காமலா போச்சி’ அப்படின்னா.”

அந்தப் பெண் பேசிய பாவனையைப் பார்த்தால் அவளே அதை யெல்லாம் ஒப்புக் கொள்வது மாதிரித் தோன்றியது… அவள் முகத்தை வக்கிரமாகச் சுழித்தாள்; அவளது தாயும் தந்தையும் எந்த மாதிரி பேசினார்களோ அதைப்போலவே கோபம் தாபம் தீர்மான பாவத்துப் னேயே அவற்றைச் சொல்ல அவள் அரும்பாடுபட்டாள்.

அந்த வாலிபன் அவள் சொன்னதை யெல்லாம் அமைதியாகக் கேட்டான், அவனது கால்களால் மணலை அமுத்தி மிதித்துக் குழி பறித்துக் கொண்டிருந்தான்.

ஒரு பறவைக் கூட்டம் ஆற்றுப் பரப்புக்கு மேலாகக் கீச்சிட்டுக் கொண்டு பறந்து சென்றது; அந்தப் பறவைக் கூட்டத்தை அவனது கண்கள் தொடர்ந்து சென்றன. ஆற்றுக்கு அப்பாலுள்ள காட்டுக்குள் அவை பறந்து கண் மறைந்தவுடன், அவன் கேலி தொனிக்கும் பாவனை யில் பேச ஆரம்பித்தான்.

“என் தலைவிதி என்னன்னு எனக்குத் தெளிவாத் தெரியுது – இந்த வயல் வெளி மீது வீசும் காற்றை நீமல்ல. இது ஒண்தடிகொண்ட எப்படிக் கட்டிப் பிடிக்க முடியாதோ, அது போலவே அந்த விதியையும் உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது.”

அந்தப் பெண் அவனை ஆர்வத்தோடும் சோகத் தோடும் பார்த்தாள், பெருமூச்சு விட்டாள். அவனோ தூர தொலைவை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான்.

“உங்க அப்பா அப்படிச் சொன்னா, அப்படித்தான் நடக்கும். அவர் மனத்தை நீ ஒண்ணும் மாத்திட முடி யாது. அவர் அவ்வளவு தீர்மானமாயிருக்கார். நீ அவர் தலைமேலே தடிகொண்டு தாக்கினாலும், கிழட்டுப் பிசாசு. அது ஒண்ணும் அசைந்து கொடுக்கப் போறதில்லை… இல்லையா? அவர் ஒண்ணும் விட்டுக் கொடுக்க மாட்டார்.”

அவர் மாட்டார்? நான் என் கண் முழி பிதுங்கக் கதறிக்கூட அவர் மனசு இளகக் காணமோ?” என்று தலையைக் குலுக்கிக் கொண்டே அந்த யுவதி பெரு மூச்சு விட்டாள்.

“சரி, இதுதான் முடிவு. நாம் அதிர்ஷ்டக் கட்டைகள். இல்லையா, பாலஷ்கா; இதுதான் நம்ம தலைவிதி. இல்லையா?”

“சரி, நாம் இனி என்ன பண்ணுகிறது?” என்று தணிந்து துயரம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவள்.

“என்ன நினைக்கிறே? நான் இங்கேருந்து போயி, எங்காவது ஒரு பாக்டரியிலே வேலை பார்க்கப்போறேன், அந்த வேலையும் புடிக்கலேன்னா, வேறே எங்கேயாவது போவேன். அதனாலே… இப்போ நாம் ஒருவருக் கொருவர் விடை பெற்றுக்கொள்ள வேண்டியது தான்”

அவள் அவனைத் தனது அகன்ற கண்களால் வெறித்துப் பார்த்தாள்: மறுகணம் அரவமின்றித் தன் முகத்தை அவனது மார்போடு புதைத்துக் கொண்டாள்.

அவன் ஒரு கரத்தால் அவளை வளைத்து அணைத்தான்; நடு நடுங்கும் அவளது தோள்களைப் பார்த்தான். பிறகு தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருக்கும் நீர்ப்பரப்பில் தங்கள் இருவரது உருவங்களும் கண்ணாடியில் தெரிவதுபோல் பிரதிபலிப்பதைப் பார்க்க ஆரம்பித்தான்

“நான் என்மனத்தில் எத்தனை தடவை எப்படியெப்படி யெல்லாமோ கற்பனை பண்ணிப் பண்ணிப் பார்த்திருக்கேன் என்பதும் உனக்குத் தெரியும். நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒண்ணா உழைக்கிற மாதிரி யெல்லாம்…”

அவன் பேச்சை நிறுத்தினான். ஒரு வேளை, தன் மார்போடு முகத்தைப் புதைத்துக் கிடக்கும் அந்த யுவதியைத்தான் கல்யாணம் பண்ணி வாழ்வதாக அவன் மீண் டும் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கலாம், அல்லது ஒரு வேளை அவனால் இனிமேல் தான் எதையுமே கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது என்பதையேனும் அவன் சிந்தித்திருக்கலாம்.

ஆமாம். உதாரணமாக, நான் கதிர் அறுப்பது மாதிரி, நீ கதிரடிப்பது மாதிரி. அல்லது நான் சூட்டிப் பது மாதிரி நீ பூப்புடைக்கிற மாதிரி…அதையெல்லாம் விட்டுத்தள்ளு. நம்ம ரெண்டு பேரும் குழந்தைகளைப் பெத்தெடுத்து, சுகமா வாழறமாதிரி … ஒன்று அல்லது ரெண்டு பசு அத்தோடே சில ஆடுகள் … அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தால், இப்போக்கூட உனக்கு ஆனந்தமாயிருக்கும்.”

அந்தக் குமரி வாய் விட்டுப் பொருமினாள்; தனக்கு நெருங்கிய உறவில் யாரேனும் இறந்துவிட்டால் ஒரு கிராமப் பெண் எப்படி யழுவாளோ அந்தமாதிரி பொரு மினாள்.

“அழாதே, அழுது என்ன ஆகப் போகிறது?” என்று அமைதியுடன் சொல்லிக்கொண்டே அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன்.

“ஸ்டீபன்… என் அருமை. எனக்கே சொந்தமான.”

அவள் தன் பொருமலுக்கிடையே ஏதேதோ புலம்பினாள்.

அவர்களுக்கு மேலாக ஆற்றங்கரைத் தோப்பின் பழுத்த இலைகள் சோக மயமாக வட்டமிட்டுச் சுழன்று வாடி யுதிர்ந்தன; மெதுவாகத் தடவிச் செல்லும் மெல்லிய காற்றினால் ஆற்று நீர்ப்பரப்பில் இளஞ் சிற்றலைகள் பிறந்து ஓடின.

“எல்லாம் சரியாப் போகும்” என்று அந்த இளைஞன் தைரிய மூட்டும் குரலில் சொன்னான். “என்னைப் பத்தி நினைச்சால் ஆரம்பத்திலேதான் உனக்குக் கொஞ்சம் துயர்மாக இருக்கும், பிறகு அது பழகிப் போயிடும். பெண்களே எதையும் பழக்கத்தில் சமாளித்துக் கொள்ளக் கூடியவங்க தான். நீ என்னை மறந்துடுவே. அதுதான் முடிவு. நான் ஒருத்தன் இருந்தேன்கிறதையே நீ மறந்து போயிடுவே.”

“ஸ்டீபன்! இந்த மாதிரியெல்லாம் பேசாதே. ஒரு போதும்… ஒருபோதும் உன்னை நான் மறக்க மாட்டேன் நீ இல்லாமெ நான் எப்படி உயிரோடிருக்கிறது? நெஞ்சிலே இருதயம் இல்லாம வாழ்ற மாதிரியல்ல இருக்கும்”

“உனக்குக் கல்யாணம் ஆகும்; எல்லாம் ஒண்ணு தான்” என்று துக்கம் தோய்ந்த புன்னகையோடு சொன்னான் இளைஞன்.

“மாட்டவே மாட்டேன். இந்த உலகத்தில் நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்?” என்று பரிதாபமாகக் கதறினாள் அந்தப் பெண்.

“கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவங்க உனக்கு உத்தரவு போடுவாங்க. நீயும் அதன்படி செய்வே அவங்க என்னைக் கட்டிக்கக் கூடாதின்னு சொன்னாங்க; நீ அதுக் குப் பணிஞ்சு கொடுத்தே, வேறொருத்தனைத் தான் கட்டிக் கணும்னு சொல்வாங்க; அதுக்கும் நீ பணிஞ்சி தான் குடுக்கப்போறே. அது அப்படித்தான் நடக்கும். நீ காலம் முச்சூடும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது !”

“ஆனால், நீ ஏன் வேறெ இடத்துக்குப் போகப் போறே, ஸ்டீபன்? இங்கே யாச்சும் தங்கியிரேன். உன்னைத் தூரத்தில் வைத்துப் பார்த்தாவது என் மனசை ஒரு கணமாவது தேத்திக்கிட மாட்டேனா? இனிமே என் வாழ்க்கை எப்படிப் போகப்போகிறது?”

அவன் அவளது இரங்கும் சொற்களைக் கேட்டான்; அவளது முகத்தை இளம் புன்னகை ததும்பப் பார்த்தான்; ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.

“நான் எதுக்காக இங்கே தங்கணும்? பாலாஷ்கா! நீ பேசறது ஒண்ணும் சரியாப் படலே. நான் இங்கேயே இத்தனை நாளும் இருந்தேன்னா அதுக்குக் காரணம் நான் இளைஞனாயிருந்தேன், நீயும் இருந்தே. உன் கிழட்டு அப்பா அவ்வளவு மோசமான ஆசாமியாக இருக்க மாட்டார்னு வினைச்சேன். முதல்லே எதிர்த்தாலும் பின்னால் வழிக்கு வந்திடுவார்னு நினைச்சேன். ஆனால், இப்போதோ நான் நினைச்சது தப்புன்னு தெரிஞ்சி போச்சி. ஐவான் மாமா என்னைப் பத்தி ஒண்ணுக்குப் பத்துத் தடவை அவரிடம் சொல்லிப் பாத்திருக்கார்; இருந்தாலும் அவர் விட்டுக் கொடுக்கலே. காது கொடுத்துக் கெட்கலெ. நீங்கள்ளாம் பணக்காரங்க… அதுனாலே உங்களுக்கெல்லாம் ஒரே பெருமை கௌரதை ஆகையினாலே, நான் எங்கேயாவது போய்த்தான் ஆகணும்…மேலும்…உன்னை வேறெ ஒருத் தனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கிறதையும் நான் பார்க்க விரும்பலை. பார்க்கவே விரும்பலே!”

“நீயும் தானே ஒரு வேளை கல்யாணம் பண்ணிக் குவே!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் அந்தக் குமரி.

“நான் அதைப்பற்றி ஒண்ணும் நினைக்கலே. ஆனா உன் விஷயமா இருந்தா, அது வேறெ விஷயம். ஏனென்றால் நீ அழகான பொண்ணு…நல்ல ஆரோக்கியமுள்ளவள். வேலை செய்யணும்கிற அக்கறை இல்லே. நாம் ரெண்டு பேரும் ஒண்ணாப் போயிருந்தா அது நல்லாயிருந்திருக்கும்”

மீண்டும் ஒரு முறை அவன் பெருமூச் செறிந்தான் பிறகு மௌனமானான்.

“ஸ்டீபன்” என்று அவள் அழுத்தத்தோடு கூப்பிட்டாள்.

“இது இப்படித்தான் நடக்கும். எனக்குக் கல்யாணம் ஆகிறதையும் நீ விரும்பலே; உனக்குக் கல்யாணம் ஆகிறதையும் நான் விரும்பலே. நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்றத்துக்கு முன்னால் எப்படியிருக்கணும்கிற தையே நீ தெரிஞ்சிக் கிட்டதாகத் தெரியலே. ஆனா, மத்த வங்களுக்குத் தெரியும். ஒரு பெண்ணுக்கு, குடும்பப் பாங்கு தெரிஞ்சிருந்தா, அவள் விரும்புறமாதிரியே கல்யாணமாகிப் போயிடும். உனக்கு அந்த வழியும் தெரியலே, என்னையும் பரிபூரணமாகக் காதலிக்கலே….என்னமோ …”

“ஸ்டீபன்!” என்று அழுது கேவிக்கொண்டே அவ னது முகத்துக்கு நேராகத் தன் கண்களை உயர்த்தினாள்

அவள். “ஆனா, நீ கல்யாணமே பண்ணிக்காம இருந்தா, அது பாவம்… பாவகாரியம். எப்படிப் போனாலும் நான் ஏதாவது தில்லு முல்லு பண்ணினா என்னை அவங்க அடிச்சு நொறுக்குவாங்க, நொண்டியாக்குவாங்க… எப்படி யும் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்காதபடி செஞ்சுப் புடுவாங்க.”

“சரி” என்று அமைதியாகச் சொன்னான் அந்த இளை ஞன். “அது உன் காரியம். அதை நீ தான் முடிவு செய்யணும். நீ மட்டும் என்னை நிசம்மாவே காதலிச்சேன்னா, ஒண்ணுரெண்டு அடிபட்டால் தான் என்ன மோசமாப் போச்சு? ஒண்ணும் குடி முழுகிப்போயிடாது!”

அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்; அவனை விட்டு விலகிப் பிரிந்து திரும்பிக்கொண்டாள். அவன் மேலைத் திசையில் மூழ்கிக் கொண்டிருக்கும் சூரியனைக் கையால் முகத்துக்கு நிழல் கொடுத்து ஏறிட்டுப் பார்த்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்:

“மணியும் நாலுக்கு மேலே இருக்கும் போலிருக்கு. தேவாலய பூஜைக்கு சீக்கிரம் மணியடிச்சிடுவாங்க. நாளைக் காலையிலே நான் அதிகாலையிலேயே எழுந்திருப்பேன். உடனே புறப்பட்டுப் போயிடுவேன். அத்தோடு இந்த விஷயமும் ஒரு வழியா முடிஞ்சி போயிடும் “

“அதைப்பத்தி, என்னைப்பத்தி நீ வருத்தம் கூடப் பட மாட்டியா?” என்று கண்ணீர் ததும்பிய கண்களோடு கேட்டாள் அவள்.

“வருத்தப்படுவேனோ இல்லையோ, அது என் கவலை யில்லே!” என்று சோர்ந்து சோகக்குரலில் சொன்னான் அவன்.

அவன் தண்ணீரைப் பார்த்தான். அந்தப் பெண் தன் இருகரங்களாலும் முகத்தை மூடிக்கொண்டு தலை இங்கு மங்கும் அசைந்தாட, தோள்கள் இரண்டும் நடுநடுங்கித் துடிக்க அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான். ஒரு ஆறு வயதுக் குழந்தை சிணுங்கி அழுவதுபோல இரக்க மும் தணிவும் நிறைந்த குரலில் அவள் அழுது கொண் டிருந்தாள். அந்த யுவன் தன் பற்களைக் கடித்துக்கொண்டு ஒரு பலமான வாக்குறுதியளித்தான். அதே சமயம் அந்தப் பெண்ணைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண்டான் வெகு நேரம் வரையிலும் அவன் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தான்; அவளோ புண்பட்ட நெஞ்சோடு துயரக் குரலில் அழுது அழுது கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

சரி சரி போதும் என்று அவன் அவளைப் பார்க்காம லேயே முடிவாகச் சொன்னான். அவன் சொன்னதை அவள் கேட்கவுமில்லை; கேட்க விரும்பவுமில்லை. பிறகு அவன் அவள் பக்கமாகத் திரும்பி, அவளைத் தன் கரங்க ளால் பலமாகப் பிடித்தான், அவளைத் தன் காலடியில் பிடித்துத் தள்ளுவது போன்ற நிலையில் அவளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தெளிவற்ற குரலில் ஆக்ரோஷம் நிறைந்த தன் முகத்தை அவள் முகத்துக்கு நேராக வைத் துக் கொண்டு பேசினான்.

போதும் போதும். என்னை மேலும் அலைக்கழிக் காதே. வா இங்கே . எல்லாம் நம் விதி. வா, பாலஷ்கா! வான்னா இல்லாவிட்டால் நான் இந்த நிமிஷமே போயிடுவேன். ஆமாம். போயிடுவேன் ஒரேயடியாப் போயிடுவேன்”

அந்தப் பெண்ணோ அவனது அரவணைப்பிலிருந்து விடுபடத் திமிறிக் கொண்டே அழுதுகொண்டிருந்தாள்.

“பெண்களே இப்படித்தான்!” என்று கோபங்கலந்த எரிச்சலோடு சொன்னான் அவன். “நீங்க ஏன் எல்லாத்தையும் படுமோசமான நிலைக்கு ஆளாக்கி, காதல் செய்றீங்க? எல்லாத்தையும் குட்டிச்சுவர்தான் ஆக்கினே; இப்போ உக்காந்து ஒப்பாரி வைக்கிறே. நல்லாயிருப்பே. உன் சினுங்கலைக் கொஞ்சம் நிறுத்து!”

அவன் அவளை உதறியடித்துவிட்டு எழுந்து நின் றான். அவள் அந்த மணற் பரப்பிலேயே இருந்தாள்

தன் தலையை முழங்கால்களுக் கிடையில் புதைத்தவாறே இருந்தாள். அவன் அந்தப் பெண்ணின் முகத்தையே வெகுநேரம் பார்த்தான்; ஏக்கம்பிடித்த கண்களால் பார்த் தான், அவன் முகம் சுருங்கியது. பிறகு அவன் சொன்னான் :

“சரி… நான் வருகிறேன்.”

“சரி. போய்வா” என்று லேசாகத் தலையை அவனை நோக்கி உயர்த்திக்கொண்டே முனகினாள் அவள்.

“நாம் கடைசித் தடவையா முத்தமிட்டுக் கொள்வோம்” என்றான் அவன்.

அவள் எழுந்து நின்றாள்; தன்னை. அவனது மார் போடு பொருந்த அணைத்துக்கொண்டு அவனது கழுத்தைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டாள். அவன் அவ ளது உதடுகளில் அசுர வெறியோடு அழுத்தமாக முத்த மிட்டான். கன்னத்தில் முத்தமிட்டான். பிறகு அவளது கரங்களை விலக்கிக்கொண்டே அவன் பேசினான்:

‘நாளை நான் போய்விடுவேன். போய் வரட்டுமா? கடவுள் உனக்கு நல்ல வாழ்க்கையை அருளட்டும். அவங்க உன்னை ஸாஷ்கா நிக்கோனோவுக்குத்தான் கட்டிக் குடுப் பாங்கன்னு நினைக்கிறேன். நல்ல பயல் தான். கொஞ்சம் மந்த புத்தி; ஆளும் நோஞ்சான்; அவ்வளவுதான். அவன் விஷயம் எப்பொழுதுமே அப்படித்தான். சரி, வரட்டுமா?”

அவன் அங்கிருந்து அகன்றான். அவள் தன் முகத்தை, சிவந்து கன்றி வீங்கிப் போயிருந்த தன் முகத் தைத் திருப்பி அவன் போவதைப் பார்த்தாள்; ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கை பிறந்தது போல, அவள் அவனை மீண்டும் கூப்பிட்டாள்.

“ஸ்டீபன்!”

“என்ன?” என்று திரும்பிக்கொண்டே கேட்டான் “போய்வா”

“வருகிறேன்” என்று உரத்த குரலில் சொன்னான் அவன். சிறிது நேரத்தில் அவன் தோப்புக்கு அப்பால் கண் மறைந்து போய்விட்டான்.

அவள் மீண்டும் மணலில் உட்கார்ந்தாள் : மௌன மாகக் கண்ணீர் வடித்து அழுதாள்.

முன்னைப்போலவே மரத்திலிருந்து உதிரும் பழுப் பிலைகள் மிதந்து விழுந்தன, தெள்ளத் தெளிவான ஆற் றுப் பெருக்கு நிர்மலமான வான மண்டலத்தை, ஆற்றங் கரையை, தோப்பின் மரங்களை, அந்தப் பெண்ணை யெல் லாம் கண்ணாடிபோலப் பிரதிபலித்தது.

ஆடுகள் அவள் பக்கம் நெருங்கி வந்து நின்றன. தமது உருண்ட பஞ்சடைந்த கண்களால் அவளை ஏறிட்டு வெறித்து நோக்கின. அவை பார்த்த அந்தப் பார்வையில் ஒரு வியப்புணர்ச்சி பிரதிபலிப்பது போல் தோன்றியது. இவ்வளவு பலம் பொருந்திய இந்த இளங்குமரி – தன் கையிலுள்ள கொடி மிளாரினாலேயே அவர்களை அடித்து நொறுக்கக்கூடிய பலம் பொருந்திய இந்தக் குமரி இப்படி அழத்தானா செய்யவேண்டும் என்று அதிசயப்படுவது போல் இருந்தது அந்த ஆடுகளின் வியப்புணர்ச்சி!

– சந்திப்பு – ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை – எழுதியவர்: மாக்ஸிம் கார்க்கி – தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன் – முதற் பதிப்பு – டிசம்பர் 1951

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *