சூடான கிரீன் டீயைப் பருகியபடியே தன் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த கட்டு பைல்களை மேய்ந்து கொண்டிருந்தான் கார்த்திக். ரீனா கதவை திறந்து கொண்டு வருவது கண்ணாடியில் தெரிய, சுழல் நாற்காலியில் சுழன்று அவளுக்கு குட் மார்னிங் சொன்னான்.
“”என்ன குட்மார்னிங்… வெரி பேட் மார்னிங் டு மீ”
“”ஹேய்… வாட் ஹேப்பன் மா”.
“”கார்த்திக்… காலையிலிருந்து உன் மொபைலுக்கு டிரை பண்றேன். ரெஸ்பான்úஸ இல்ல. சரி நீ ஏதாவது கோல்மால் பண்ணி ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருப்பனுதான் நேர்லயே வந்தேன். எங்க போய் தொலஞ்ச நீ…”
“”கூல் ரீனா. 8க்கெல்லாம் நான் ஆபீஸ் வந்துட்டேன். இந்த பைல்கூடத்தான் 2 மணி நேரமா போராடிட்டு இருக்கேன். நீ வேணா சாட்சிக்கு பியூன கேட்டுக்கோ”
“”விளையாடாத கார்த்திக். எங்கம்மாவும் அப்பாவும் எவனோ ஒருத்தன் போட்டோவ காண்பிச்சு கட்டிக்கோனு டார்ச்சர் பண்ணிட்டிருக்காங்க தெரியுமா? அதப்பத்தி உங்கிட்ட பேசலாம்னு பாத்தா நீ வேற. எங்க உன் மொபைல குடு..”
“”ஓகே… செக் இட்” டேபிளின் மேல் இருந்த மொபலை பார்வையால் காட்டினான்.
அறையின் ஏ.சி. குளிரிலும் ரீனாவின் நெற்றியில் வியர்வை முத்துக்கள் பூத்தன.
“”ஹேய்… என்ன இது டவரே சுத்தமா இல்ல. என் மொபைலும் இப்படிதான் இருக்கு. பாரு கார்த்திக்”.
இரண்டு மொபைல்களையும் கையில் எடுத்து நீட்டினாள் ரீனா.
டைட் ஜீன்ûஸ தளர்த்திக் கொண்டபடியே அலைபேசிகளை வாங்கியவனின் புருவங்கள் இரண்டும் சுருங்கின.
“”எங்காவது மழை பெய்யுதா? ஏன் நெட்வொர்க்கே இல்ல. ஓகே… ஆஃப் அன் ஹவர் கழிச்சுப் பார்க்கலாம்”.
மஞ்சள் நிற சுடிதாரில் அந்தக்கால அமலா சாயலில் இருந்த ரீனா தன் நீள கேசத்தை சரிசெய்தபடியே “ப்ச்’ என்றாள்.
“”சரி சரி, எம்.டி. வர நேரமாச்சு. நீ கிளம்பு”.
”நான் கேன்டீன்ல வெயிட் பண்றேன். பிரேக் டைம்ல வா உன்ன பேசிக்குறேன் ”
செல்ல பாசாங்கு காட்டி நகர்ந்தாள் ரீனா.
சற்று நேரத்திற்கெல்லாம் அலுவலகம் முழுவதும் சலசலப்புக்கு ஆளானது. எல்லோரும் அவரவர் அலைபேசியைக் கையில் ஏந்தியபடி ஏதேதோ பேசிக் கொண்டிருக்க இருப்பு கொள்ளாமல் கேபினை விட்டு வெளியே வந்தான் கார்த்திக்.
“”என்ன ரஞ்சன், வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்?”.
“”கார்த்திக் உனக்கொன்னு தெரியுமா? எல்லாருடைய செல்போனும் செயலிழந்துட்டு வருது. அதாவது டவர் கிடைக்காம சுத்தமா பிளாக் ஆயிடுச்சு” தன் குறுந்தாடியை தடவியபடியே சொன்னான் ரஞ்சன்.
“”வாட்… எல்லோரோடதுமா?”
“”எஸ், அப்ப உனக்கும் நடந்து முடிஞ்சிடுச்சா?”
“”ஆமான்டா, என்ன அதிசயமா இருக்கு”
“”உலகம் முழுக்கவே காலையிலருந்து இதே நெட்வொர்க் பிரச்சனை தானாம். கிட்டத்தட்ட எல்லா உலக நாடுகள்லயும் இதுதான் டாக் ஆஃப் தி டெüன். யு.எஸ்ல இருக்குற என் ஃபிரண்ட் மூலமா விஷயம் தெரிஞ்சது”.
“”அடக்கடவுளே… வேற என்னடா சொன்னான்?”
“”ம்… நம்ம நாட்டுல இப்பதான் பாக்கவே தொடங்கியிருக்கோம். ஆனா அவங்க அதுக்குள்ள விஞ்ஞானிகள் கிட்டயே தோண்டி துருவி எடுத்துட்டாங்களா?”
“”இரண்டு நாள் முன்னதான் கடவுள் துகள் கண்டுபிடிச்சி எல்லா விஞ்ஞானிகளும் மகிழ்ச்சி கடல்ல ஆழ்ந்தாங்க. என்னடா களேபரம் இது?”
”நெட்வொர்க் டிரான்ஸ்மிஷன் ஏற்பட காரணமான கதிர்வீச்சு உலகம் முழுக்கவே தடைபட்டதுதான், இதுக்கான காரணமா சொல்றாங்க”.
“”உண்மையாவா?” வாய் பிளந்தபடி நின்றான் கார்த்திக்.
“”அட… அதுக்குள்ள பித்துப் பிடிச்சா மாதிரி நின்னா எப்புடி. பூமியோட பாதை எதனாலயோ தடைபட்டு மாறுபட்டிருக்கு. அதனாலதான் பூமி கோளுடைய செயல்பாடு முழுசா வேறுபட்டிருக்காம். இதுல ஒவ்வொரு செயற்கைகோளும் செயலிழந்துட்டே வருதாம். உலகம் முழுக்க செயற்கை கோள் உதவியோட ஒளிபரப்பாகுற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒவ்வொண்ணா தடைபட்டுட்டே வர்றதா சொல்றாங்க. இதுல ஒரே ஆறுதலான விஷயம், தரைவழி தொலைபேசி மட்டும்தான் ஓரளவுக்கு தொடர்பு எல்லைக்கு உள்ள வருது. அதுகூட எத்தனை நாளைக்குன்னு தெரியல”
முகம் முழுவதும் மிரட்சியை பூசிக்கொண்டு கார்த்திக்கை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் ரீனா.
“”கார்த்திக், என்ன எல்லாரும் என்னென்னவோ சொல்றாங்க? பூமி தன்னோட பாதையிலருந்து விலகி போயிட்டிருக்காமா? பூமியோட புவிஈர்ப்பு விசை மூலமா சரியான கட்டமைப்பா இருந்த பால்வெளி அண்டம் எப்படி இப்படி ஆகும்? ஐயையோ அது போற வேகத்துல எந்த கிரகத்தோட முட்டி மோதுமோ தெரியலியே. வாழ்க்கையே ஏதோ இங்கிலீஷ் படம் பாக்குற மாதிரி ஆயிடுச்சே… ஐயோ ஆமா, சயின்டிஸ்ட்டெல்லாம் என்ன சொல்றாங்களாம்?”
“”ரீனா, ஏன் இப்புடி புலம்பிட்டே போற… டேய் ரஞ்சன், அவதான் கேக்குறா இல்ல… சொல்லித் தொலையேன்டா”.
“”டேய், நான் மட்டும் என்ன அப்துல்கலாமோட பக்கத்து வீட்ல இருந்தா வரேன்? காலையிலருந்து என் காதுக்குள்ள எல்லாரும் போடுற விஷயத்ததான் சொல்லிட்டிருக்கேன். விஞ்ஞானிகளாலும் ஆராய்ச்சிகள் இல்லாம முழுசா எந்த முடிவுக்கும் வர முடியல. மாற்றங்கிறது மனித வாழ்க்கையில மட்டுமில்ல, விண்வெளிக்கும் பொருந்தும். எதுவும் எப்பவும் நடக்கலாம்னு கருத்துச் சொல்றாங்க. பூமியோட பாதை மாறும்போது பூமிய வேற வேற வேகத்துல சுத்திட்டிருக்கிற எண்ணற்ற செயற்கை கோள்களும் ஒண்ணோôட ஒண்ணு மோதலாம்னும் இல்லாட்டி கொஞ்சமா பூமிய நோக்கி இறங்க ஆரம்பிச்சு காற்று மண்டல உராய்வு காரணமா தீப்பற்றி முற்றிலும் நாசமாகிட்டு வரும்னும் ஆருடம் சொல்றாங்க. செயற்கை கோள்லாம் செயல் இழந்துட்டா முன்ன மாதிரி ஆண்டெனாவோட மல்லுகட்டிதான் டி.வி. பாக்கணும்”.
“”ரஞ்சன், சும்மா ஏதாவது சொல்லி பயமுறுத்தாத”.
“”டேய் கார்த்திக். நான் என்ன பேய் பட டிரெய்லரா ஓட்டிட்டிருக்கேன். எனக்கும் இத சொல்லும்போதே அடிவயிறெல்லாம் ஜிலீருங்குதுடா. எனக்கென்னவோ உலகம் அழிவ நோக்கி போயிட்டிருக்குன்னு நினைக்கிறேன். மனிதனோட கண்டுபிடிப்புங்கெல்லாம் அந்த சூழ்நிலைக்கு ஒத்து போகாம செயல் இழந்துட்டு வருது”.
“”பெரிய விஞ்ஞானி, வாய மூடுடா… சும்மா பூச்சாண்டி காட்டிட்டு”.
கார்த்திக்கை தன் பக்கம் திருப்பிய மீனா, “”ஐயோ கார்த்திக், நீ முதல்ல நம்ம மேட்டருக்கு வா. உனக்கும் எனக்கும் கல்யாணமாகுறதுக்குள்ள இந்த உலகம் அழிஞ்சிடுமா? அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்… நம்ம பெத்தவங்க சம்மதத்த எதிர்பார்த்தா நீ எனக்கு 60 வயசுலதான் தாலி கட்டுவனு. இப்ப அதுகூட முடியாது போலருக்கு”.
“”ச்சு… ரீனா அவந்தான் ஏதோ உளர்றான்னா நீ வேற. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. இப்படித்தான் முன்ன 2000 மில்லினியத்துல பூஜ்யத்தோட பயன்பாடு மாறுபாட்டால கணினிங்கள பயன்பாட்டுக்கு கொண்டு வர்றது பெரிய சிக்கல்னு சொன்னாங்க. ஆனா இரண்டே நாள்ல அதுக்கான தீர்வைக் கொண்டு வந்தாங்க. நம்ம சயின்டிஸ்டுங்க பத்தி என்ன நினைச்சே. அவ்வளவு லேசுல விட்டுடுவாங்களா? கண்டிப்பா இதுக்கான மாத்து வழிய சீக்கிரம் சொல்லுவாங்க பாரு”.
“”அப்ப அதுவரைக்கும் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?”
“”ரீனா… பொறுமையாக இரு. நான் இன்னைக்கே வீட்ல இதப்பத்தி பேசறேன், போதுமா?”
அந்த கேபின் முழுதும் அவரவர்களின் மூச்சுக்காற்றே உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. பகை, போட்டி, வேலை, பொறாமை எல்லாவற்றையும் மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள் சுரத்தின்றி.
3 மாதங்கள் ஓடியும் உலகம் முழுவதும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருந்தது.
அலைபேசியின் அலறல், தொலைக்காட்சியின் தொல்லைகள் இல்லாமல் அமைதியாக இருப்பதாக வீட்டுப் பெரியவர்கள் ஆனந்தப்பட்டார்கள்.
“”இப்போல்லாம் கண்ட நேரத்துல மணி அடிக்கறது இல்ல. என் பேரப்பசங்க என்கூட ரொம்ப நேரம் செலவிடுறாங்க… நான் சொல்ற கதைகள ஆர்வமா கேட்டுக்குறாங்க” என்று புன்னகை பொங்க கூறிக் கொண்டிருந்தார் கார்த்திக்கின் பக்கத்து வீட்டு சீனியர் சிட்டிசன் சிவகிரி மாமா.
“”இப்போல்லாம் நாங்கோ ஒன்னா வொக்காந்து சாப்பிடுறோம் தெரியுமோ?” என பொக்கைவாய் தெரிய சிரித்தார்.
அவருக்கு விடை கொடுத்துவிட்டு கேட்டை இழுத்து பூட்டி சாலையில் நடந்து கொண்டிருந்தான். எதையோ பறிகொடுத்தது போல கல்லூரி மாணவன் ஒருவன் புத்தகப் பையுடன் நடந்து கொண்டிருந்தான். அவனது கட்டை விரல் காற்றில் அலைந்து கொண்டிருந்தது. எஸ்.எம்.எஸ். அனுப்பி அனுப்பி நரம்பு தளர்ச்சியான விரல்கள் போலும் என மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டான் கார்த்திக்.
வழியில் காயின் பாக்ஸ் போன்களில் நீண்ட கியூ வரிசை. இப்போது நின்றால் பேசிவிட்டு வர 1 மணி நேரம் தாண்டும் போலும். ஊருக்குப் போன அப்பாவும் அம்மாவும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என ஒரு விவரமும் அறிய முடியவில்லை. தரைவழி இணைப்பெல்லாம்தான் எப்போதோ துண்டித்தாயிற்றே. இதுகூடப் பரவாயில்லை. இணைய சேமிப்பில் சேர்த்து வைத்த கம்பெனி சீக்ரெட் ஃபைல்ஸ்களின் கதி என்ன? என்று மேலாளர் தினம் வெம்பி வெதும்புவது பார்க்கவே பாவமாக இருக்கும்.
ரிப்பேர் ஆன காயின் பாக்ஸ்களை எல்லாம் சரிசெய்யும் படலம் ஜோராய் ஒருபக்கம் அரங்கேறிக் கொண்டிருந்தது. காதலர்கள், நிருபர்கள், இளைஞர்கள் எல்லோரும் யாரை நோவது எனப் புரியாமல் கிட்டத்தட்ட உச்சக்கட்ட விரக்தியில் அலைந்துக் கொண்டிருந்தனர். ராணுவ வீரர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் நொந்து போயினர்.
கார்த்திக்கிற்கும் கிட்டத்தட்ட வாழ்க்கையே கடினமாகிவிட்டதைபோல் உணர்ந்தான். புதுப்புது வரவுகளும் கண்டுபிடிப்புகளும் மனிதனுக்கு உதவ வருவதைப் போல்தான் ஆரம்பத்தில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. பின் அதுவே அணு அணுவாக மனிதனை கபளீகரம் செய்துவிடுகிறது என்று தெளிவாக உணர்ந்தான்.
இந்த மூன்று மாதத்தில் ரீனாவிற்கு தினம் ஒரு கடிதம் என எழுதித் தள்ளினான். இடையில் இரண்டு பேனா நண்பர்கள் கூட பரிச்சயமாகிப் போனார்கள். பத்தாயிரம் பதினைந்தாயிரம் என அவரவர் வாங்கிய அலைபேசிகள் கண்ணாடி சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளரின்றி வெறிச்சோடிக் கிடந்த அந்தக் கடையைப் பார்வையால் கொத்தியவன் ரீனா தனக்காகக் காத்துக் கொண்டிருப்பாளே என தன் நடையை வேகம் கூட்டினான்.
ஊதா நிற சேலையில் அழகு பெட்டகமாய் பூங்காவின் உள் திண்ணையொன்றில் வீற்றிருந்தாள் ரீனா. மெல்ல நெருங்கியவன் அவளை கண்களால் விழுங்கினான். முன்பெல்லாம் தினம் ஒரு மணிநேரம் பேசி, கொஞ்சி, சண்டையிட்டு, சமாதானம் பேசியவர்களாய் இருந்தாலும் தற்போதெல்லாம் சந்திக்கும்போது ஏற்படும் அடர்ந்த மெüனம் அவர்களுக்கே புதிதாகவும் புதிராகவும் இருந்தது.
பார்வை கிளர்ச்சியில் விடுபட்டு மெல்ல வார்த்தை பரிமாற்ற தளத்துக்குள் இருவரும் நுழைந்தனர்.
“”ரீனா, உன் கவலைக்கெல்லாம் ஒரு முடிவுகாலம் வரப் போகுது”.
“”என்ன சொல்ற கார்த்திக்?”
“”இன்னும் ஒரு வாரத்துல பழையபடி எல்லோரும் தங்களோட அலைபேசியில பேசி மகிழலாம். அதற்கான புது சிப் கண்டுபிடிப்போட கடைசி கட்ட நடவடிக்கையில இருக்கோம்னு நாசா அறிவிச்சிருக்கு”.
“”அப்படியா?”
“”அதுக்காகத்தான் காத்துட்டிருந்தேன் நான். இல்லன்னு சொல்லல. ஆனா நாம தினம் வார்த்தைகளால பேசிக்காம, வரிகளால பேசிக்கிற சுகம் இருக்கே… இது எனக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுத்திருக்கு. வரிகளுக்கு இருக்குற வலிமை ரொம்பப் பெருசு. கடிதத்துல இருக்குற அந்த உயிர்த்தன்மை, ஈர்ப்பு… தினம் நாம 1 மணிநேரம் பேசினாலும் வராது. இனிமே நீ மொபைல்ல பேசாட்டியும் பரவாயில்ல, எனக்கு 2 நாளுக்கொருதரம் கடிதம் எழுது. அதோட நம்ம பெத்தவங்க சம்மதிக்க எத்தனை வருஷமானாலும் நான் காத்திருப்பேன். இது சத்தியம்” என்றபடி அவன் தோளில் சாய்ந்தாள்.
ஸ்பரிச நெகிழ்வில் ஜிகிர்தண்டா குடித்தாற்போன்ற “ஜில்’ மனிதன் ஆனான். கண்கள் ஆனந்தத்தில் சொருகியது.
கண் திறந்து எழுந்தவன் படுக்கைக்கு பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து ரீனாவிற்கு கடிதம் எழுதத் தொடங்கினான்.
“” டேய் கார்த்திக், என்னடா தூங்கி எழுந்ததும் எழாததுமாய் எதையோ கிறுக்கிட்டிருக்க?” அடுப்படியில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் கார்த்திக்கின் அம்மா கற்பகம்.
“”நத்திங் மா… லெட்டர் எழுதிட்டிருக்கேன்”.
“”கடுதாசியா… இந்த வீட்டுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாததா எதையோ சொல்ற?”
“”பின்ன என்னம்மா… 3 மாசமா செல்போன்ஸ் உபயோகப்படுத்தாம எல்லாரும் இப்ப இதத்தான பண்ணிட்டிருக்காங்க”.
அடுப்படியிலிருந்து அறையை நோக்கி வேகமாக வந்தவள். “”டேய், என்னடா எதெதுவோ உளர்ற. இதுக்குத்தான் இராவுல சுருக்குப் பாதைனு அந்த சுடுகாட்டுப் பக்கமா வராதன்னு தலைபாட அடிச்சிக்குறன். 2 கிமீ. அதிகமானாலும் பரவாயில்ல அண்ணாச்சி கடை பக்கமா சுத்தினே வா”.
“”என்னம்மா நீ எது எதுக்கோ முடிச்சி போடுற?”
“”டேய், இராத்திரி அத்தனை முறை செல்போன் மணி அடிச்சும் நீ முழிச்சிக்காம பேய் அடிச்சிப் போட்டவன் மாதிரி படுத்துட்டிருந்தப்பவே நினைச்சேன் ஏதோ ஆயிருக்குனு. இதோ குளிச்சிட்டு வரேன். முதல்ல போய் உனக்கு மசூதியில மந்திரம் போடணும் சாமி”.
மிரண்டு ஓடினாள் அம்மா.
“”என்னது, இராத்திரியெல்லாம் செல்போன் மணி அடிச்சிக்கிட்டே இருந்துச்சா?” தலையணை அடியிலிருந்த அலைபேசியின் பொத்தானை அழுத்தினான். ரீனாவிடமிருந்து 5 மிஸ்டு கால்களை காட்டியது. டவர் பக்காவாக இருந்தது.
கடவுள் துகள் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளின் ஸ்பெல் கவரேஜ் நிகழ்ச்சியை நேற்றிரவு ஒருமணி நேரம் உன்னிப்பாக பார்த்ததின் விளைவு அவனுக்கு இப்போது விளங்கியது.
“”அப்போ ரீனா, செல்போன், காதல் கடிதம்… கனவா?”
“ஙே’ என விழித்தான் கார்த்திக். பாதிப்பிலிருந்து விலகாதவன் 4 வருட காதலில் ரீனாவிற்கு முதல் காதல் கடிதத்தை மேற்கொண்டு எழுதத் துவங்கினான்.
– பவித்ரா நந்தகுமார் (டிசம்பர் 2013)