பூங்காவின் ஓரத்தில் தன் மூன்று சக்கர வாகனத்தை விட்டு இறங்காமல் தூரத்தை வெறித்தான் தினகரன்.
அருகில் உள்ள சிமெண்ட் இருக்கையில் மாதவி.
அதிக நேர வெறிப்பிற்குப் பின்…….
”நீ உன் முடிவை மாத்திக்கோ மாதவி..! “மெல்ல சொன்னான்.
“ஏன்…??….”
“சரிப்படாது !”
“அதான் ஏன்னு கேட்கிறேன்..!”
“உன் காதலை என்னால் ஏத்துக்க முடியாது.!”
“காரணம்…?”
“கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லே !”
“புரிலை..?!”
“நான் மாற்றுத்திறனாளி !”
“தெரிந்த விசயம்..! நான் குருடி இல்லே !”
“இவ்வளவு அழகானவள்… எதுக்கு இவனைக் கட்டிக்கிட்டாள், வறுமையா..? தாய் மாமன் என்கிற முறையில் தலையில் கட்டலா….? இல்லே… எவனிடமாவது ஏமாந்து வயிற்றில் வாங்கி…இப்படி பலப்படியாய் உன்னைச் சந்தேக கண் கொண்டு எச்ச நினைப்பாய்ப் பார்ப்பாங்க…”
“நான் அதை பத்திக் கவலைப்படலை..”
“நான் கவலைப் படுவேன். !”
“இது உங்களுக்கு அநாவசியக் கவலை. எனக்கு கண் நிறைந்த கணவன் வேணும்ன்னு கடவுளிடம் நான் வேண்டிக்கலை.”
“உன் நினைப்பு அதுவா இருக்கலாம். அதுக்கு நான் பலிக்கடாவாக விரும்பல..”
“அது இல்லை உண்மையான காரணம். உங்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. பெண்ணைத் தாம்பத்தியத்தில் திருப்திப் படுத்த முடியாது என்கிற பயம்..”
“அந்த விசயத்தில் நான் குறை கிடையாது. நான் ஆம்பளை !”
“அப்படி இருக்கும்போது என்ன தயக்கம். என்னைக் கட்டிக்கிட்டு நிருபீங்க.”
“முடியாது ! முடியாது !”
“இப்படி மறுக்கிறதுக்கு அதுதான் சரியான காரணமாய் இருக்க முடியும்..? இல்லே…காதலே தெரியாத, பெண்ணோட மனசு புரியாத ஜடமாய் நீங்க இருக்கனும் !”
தினகரனின் மனதில் ஈட்டி பாய்ந்தது.
“நான் ஜடம் இல்லே மாதவி . காதலிக்காதவனும் இல்லே…!”
மாதவி சடக்கென்று அவனைத் துணுக்குற்றுப் பார்த்தாள்.
“நானும் கல்லூரியில் படிக்கும்போது காதலிச்சேன். ரெண்டு பேரும் உயிருக்குயிராய்ப் பழகினோம். ரெண்டு பக்கமும் சாதி, மதம் எதிர்ப்பு. மனசு வெறுத்து ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சியில் போய் குதிச்சோம். எனக்குக் கால் போனது. அவளுக்கு உயிர் போனது. ! “கண்களில் கசிந்த நீரைத் துடைத்தான்.
“நீங்க காதலிச்ச அந்த அமுதாவோட தங்கைதான் நான். உடைந்து போன உங்க மனசுக்கு ஒத்தடம் கொடுக்கனும். உங்களைத் தவிக்க விட்டுவிட்டுப் போன அக்கா ஆசையை நிறைவேத்தி, அவள் ஆத்மா சாந்தி அடைய நான் ஆசைப் படுறேன். !”
‘அவளோட தங்கையா..!! ‘ – அதிர்ந்து பார்த்த தினகரன் மனசுக்குள்….
‘எப்படிப்பட்ட எண்ணம் ! ?? ‘ நினைக்க மலைப்பு வர…. மனசும் மாறியது. முகம் மலர்ந்தது.