புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது…
அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று சேலையில் அவள் வந்த அழகை வர்ணிக்க அடடா தமிழில் வார்த்தைகளே இல்லையா!
பூக்களால் செய்த சிலையோ?…பட்டாம்பூச்சிகள் இருவிழியோ?
இவள் என்ன பச்சைக்கிளி ஜாதியா? இல்லை புள்ளிமான் இனமா?
ஒரு பார்வையிலே வீழ்த்திவிட்டாளே என்னை? அந்த கருவிழிக்குள் தொலைந்தே போனதே என் சிறு இதயம்?
வாழ்ந்தால் இவளோடு வாழவேண்டும்…இல்லை இவள் விழிக்குள் குதித்து புனிதமாக உயிர்விட வேண்டும்!
சரவணனின் மனதில் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது..
இந்த நினைப்பிற்கு காரணம் கல்லூரியில் சரவணனுக்கு ஜூனியராக சேர்ந்திருக்கும் பூஜா.
ஐஸ்கீரிமில் செய்துவைத்த சிற்பம் போலிருப்பாள் பூஜா. யாருக்குத்தான் காதலிக்க தோன்றாது!
பூஜா கல்லூரியில் சேர்ந்து நான்கு நாட்களே ஆகிறது. அவளிடம் சென்று தன் மனதை திறந்தான் சரவணன்.
“பூஜா,ஒரு நிமிசம்”
ஐந்தரைஅடி பூ தலைதிருப்பி பார்த்தது.
“எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது,உன்னை பார்த்த உடனே எனக்கு புடிச்சிடுச்சி…உன் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை ரொம்ப அழகா,அற்புதமா இருக்கும்னு நினைக்கிறேன்…சீக்கிரம் ஒரு நல்ல பதிலை…அவன் முடிப்பதற்குள் வந்துவிட்டாள் அவள் தோழி ரீனா.
சட்டென்று அங்கிருந்து விலகி, “சே இந்த ஹிந்திக்காரி வந்து கெடுத்துட்டா” என்று அவள் தோழியை மனதிற்குள் திட்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் சரவணன்.
“ரீனா நம்ம சீனியர் சரவணன் என்கிட்ட ஏதோ சொன்னார் ஒண்ணுமே புரியலடி” ஹிந்தியில் சிரித்துக்கொண்டே சொன்னாள் பூஜா ஷெராவத்.
– Thursday, September 27, 2007