காதல் ரேகை கையில் இல்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 23,293 
 
 

எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி வருவதும், மலர்ந்து விட்டால் தேனை அருந்தி விட்டு விலகிச் செல்வதும் தேனிக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கின்றேன் ஆனால் இப்படியொரு ஈர்ப்பு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சினிமாப் படங்களில் சில நடிகைகளைப் பார்க்கும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சஞ்சலப்படுவது உண்மைதான். நிழற் காட்சிபோல மறுகணம் அது மாயமாய் மறைந்துவிடும். ஆனால் இது என்ன மாயம், இன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கனவுலகில் இருந்து நான் மீண்ட போது அவள் மறைந்து போயிருந்தாள். அவளை இன்னுமொரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனசு ஏங்கியது. இந்தக் கூட்டத்தில் அவளை எங்கே தேடுவது? தென்றலாய் வந்தவள் சட்டென்று என் மனதில் சூறாவளியை ஏன் ஏற்படுத்தினாள்? என் தவிப்பு என்னவென்று அவளுக்குப் புரியப் போவதில்லை, ஆனாலும் மனசு எதற்கோ தவித்தது.

வரவேற்பு மேசையில் உட்கார்ந்திருந்த பெண்ணோடு சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அவள்தான்; திடீரென மறைந்திருந்தாள். சரி, இத்தோடு விட்டு விடுவோம் என்று நினைத்துக் கொண்டு நகர்ந்தேன். விரிவுரை நடக்கவிருக்கும் அறை எங்கே இருக்கிறது என்று முதலில் தேட வேண்டும். விரிவுரைக்குச் செல்லுமுன் கோப்பி ஒன்று அருந்தினால் நல்லாயிருக்கும் போல இருந்தது. பூட் கோட்டில் இருந்த ரிம்ஹேட்டனுக்குச் சென்று வரிசையில் நின்றேன். வரிசை மெல்ல நகர்ந்தது. வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாலும் மனசெல்லாம் அவள் நினைவாகவே இருந்தது. தற்செயலாகத் திரும்பிப் பார்த்தேன். மறுவரிசையில் அவளும் நகர்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இது வெறும் மாயையா அல்லது நிஜமா ஒரு கணம் சுயநினைவு பெற்றுத் திரும்பிப் பார்த்தேன். நிஜம்தான் என்பதை உணர்ந்தேன். திரும்பவும் அவளைக் கண்டதில் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது. அவள் என்னைப் பார்த்ததாகத் தெரியவி;ல்லை. ஆனாலும் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்தேன். இப்படி ஒருத்தன் அவளை விழுங்கி விடுவது போலப் பார்க்கிறேனே என்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் அவள் கோப்பியை வாங்கிக் கொண்டு. நகர்ந்தாள். பூட்கோட்டில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கோப்பியை மெல்ல மெல்ல ருசித்து அருந்தினாள். நானும் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கோப்பியை அருந்தினாலும் என்னுடைய கவனம் எல்லாம் அவள்மேல்தான் இருந்தது. ஒவ்வொரு தடவையும் அவளது உதடுகள் அந்தக் கோப்பையில் பதிந்த போது எனக்குள் ஏதேதோ உணர்வுகள் எழுந்து என்னைப் பரவசப்படுத்தியது.

மனசு ஒரு நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன். முதல் நாள் என்பதால் விரிவுரை தொடங்குமுன் அங்கே சென்று தகுந்த இடத்தில் அமர விரும்பினேன். ஏற்கனவே சிலர் அங்கே வந்து அமர்ந்திருந்தார்கள். நான் எனக்கு வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டேன். தென்றல் தழுவிச் சென்றது போல, இனிய சுகந்தம் காற்றில் மிதந்து வந்து என்னைத் தழுவியது. நிமிர்ந்து பார்த்தேன். சற்றும் எதிர் பாராத ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. யாரைத் தேடினேனோ அவளேதான், எனக்கு அருகே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

‘ஹலோ ஐ ஆம் ரீனா ஹிரோக்கி’ என்றாள். ஒரு கணம் எனக்கு கைகால் இயங்கவில்லை. ஆனாலும் சமாளித்துக் கொண்டு ‘ரஜீவன்.. கிளாட் ரு மீட்யூ’ என்று கை கொடுத்தேன். அவள் சகஜமாகக் கை கொடுத்துவிட்டு. நடக்க இருக்கும் விரிவுரை பற்றிப் பேசினாள். தன்னை யார் என்று அறிமுகப் படுத்தினாள். என்னை நானும் அறிமுகப் படுத்திக் கொண்டேன். ஏதாவது அவளுடன் பேசவேண்டும் என்பதற்காக, ‘ரீனா என்றால் என்ன அர்த்தம்?’ என்றேன். ‘ஜாஸ்மின்’ என்றாள். என் சுவாசத்தில் மல்லிகை மணத்தது. அவள் மல்லிகைதான்! ‘எனக்கும் பிடிக்கும’; என்றேன். புன்னகை உதிர்த்தாள்.

அதன் பின் விரிவுரை நடக்கும் நாட்களில் அவளை அடிக்கடி சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. அவளைப் பற்றிய தொடர் நினைப்பு அவள் மீது ஏற்பட்ட ஒரு வகை ஈர்ப்பு என்றுதான் நினைத்தேன். இந்த வயதில் ஏற்படும் இயற்கையான கவர்ச்சிதான் என்னை அவள் பக்கம் திருப்பியிருக்கலாம். அடிக்கடி அவளைச் சந்திப்பதும் எங்களுக்குள்ளான கருத்துக்கள் ஒன்று பட்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்.

பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணத்தை ஏற்பதாக இதுவரை நம்பிக் கொண்டு கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் என் மனம் அவளைச் சுற்றியே வருவதை உணர்ந்தேன். கைரேகை பார்த்து அதைத்தான் சொன்னார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று, காதல் ரேகை கையில் இல்லை என்பது எனக்குப் புரியலாயிற்று. கருத்துப்பரிமாற, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பொதுவான ஒரு மொழி இருந்தது ஒரு வேளை காரணமாக இருக்கலாம். இவளைப் பற்றி அம்மாவிடம் சொன்னால் அம்மா கேட்கும் முதல்கேள்வி என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். அவள் என்னுடைய இனத்தவளா, என்னுடைய மதத்தவளா, அல்லது எனக்கு உறவினரா, என்னுடைய நாட்டவளா கேள்விகள் இப்படித்தான் இருக்கும். இதற்கு என்ன பதில் சொல்ல முடியம், சாதகமாக எதுவும் இல்லையே! இது காதல் என்றால், அவளும் என்னை விரும்பினால் முடிவு எடுப்பது நாங்களாகத்தான் இருக்க வேண்டும். யாருக்கு யாரென்று ஆண்டவன் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறான் என்பார்கள். அது போல எனக்கு இவள்தான் என்று ஒரு வேளை எழுதி வைத்திருக்கலாமோ?

அன்று வலன்ரைன் தினம். செரிடன் கல்லூரி வளாகம் கலகலப்பாக இருந்தது. வழமைபோல நட்புக்கு அடையாளமாக எல்லோரும் நண்பர்களுக்கு ஏதாவது கொடுத்தார்கள். ரீனா தனது தோழிகளோடு கலகலப்பாகப் பேசிக் கொண்டு நின்றாள்.

‘ஒஹாயோ ரீனா’ என்றேன். ஆச்சரியமாய் பார்த்தாள். அவளது அந்த ஆச்சரியம் கலையுமுன்பே நானும் ஒற்றை ரோஜா ஒன்றை அவளிடம் நீட்டினேன். நான் மட்டுமல்ல அவளுடன் பழகிய வேறு சிலரும் ஏதாவது கொடுத்தார்கள். எந்த மறுப்பும் இன்றி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டாள். விரிவுரை முடிந்து வீடு செல்ல முற்பட்டபோது அவள் ஓடிவந்து சிறிய அன்பளிப்பு பெட்டி ஒன்றை தந்து ‘ஹப்பி வலன்ரைன்’ என்றாள். நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டேன். எனது நட்பை மதித்து அதைக் கொடுத்திருக்கிறாளே என்று எனக்குள் ஒரு கிளுகிளுப்பு. ‘வீட்டுக்குப் போனதும் பிரிச்சுப் பாருங்க’ என்று சொல்லி அவள் வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. என்னவாய் இருக்கும் என்ற ஆவலோடு வீட்டிற்குச் சென்றேன். அந்த சிறிய பெட்டியைப் பிரித்துப் பார்த்தேன்.

ஆண்கள் கழுத்திலே கட்டும் அழகான ஸ்காவ் ஒன்று மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு அழகான வலன்டைன் கார்ட்டில் ஜப்பானிய கவிதை ஒன்று ஆங்கிலத்தில் பேனாவால் எழுதப்பட்டிருந்தது. வாசித்துப் பார்த்தாலும் அதன் பொருள் விளங்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபோது சட்டென்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கவிதை நூல் ஞாபகம் வந்தது. அவசரமாக எடுத்து மேலோட்டமாகத் தட்டிப் பார்த்தேன்.

Waga seko

Sode kafu yo no Ime narasai

Makoto mo kimino Aferisi goto si!

Afazu tomo Ware we uramizi

Kono makura Ware to omofite

Makite sanemase!

எனக்கு அன்பளிப்பாய் கொடுத்த யப்பானிய காதற் பாடல்கள் அடங்கிய மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்தான் அது, அதை எடுத்து பக்கங்களைப் புரட்டினேன்.

ரீனா என்ன எழுதியிருப்பாள் என்பதை அறிவதில் ஆவல் பிறந்தது. என் பதட்டத்தில் எதுவுமே புரியவில்லை. ‘முட்டாள்! நட்போடு பழகினால் அதைக் காதல் என்று எடுத்துக் கொள்வாயா? கடைசியில் நீயும் ஒரு சராசரி இளைஞன் என்பதைக் காட்டி விட்டாயே’ என்று யப்பானிய மொழியில் திட்டியிருப்பாளோ?

எப்படியும் கவிதையில் என்ன எழுதியிருக்கின்றது என்பதை அறியப் பொறுமையாகத் தேடினேன். நான் ஆவலோடு தேடிய கவிதை அங்கே இருந்தது. ஒவ்வொரு வரியாக வாசித்துப் பார்த்தேன்.

என் காதலனே ஆடைபுறம் மாறிட
கனவு வரும், உண்மையாக உன்னையே
நேரில் கண்டது போல!
சேராவிடினும் நான் துன்புற மாட்டேன்
இந்த அணையை நான் என்று எண்ணிடுவாய்
அணைத்து உறங்கிடுவாய்!

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவள் கவிதையில் சொன்னபடியே அவள் கொடுத்த ஸ்காவை அணைத்துக் கொண்டு தூங்கியது சுகமான அனுபவமாக இருந்தது. மறுநாள் விரிவுரையின்போது அவளைச் சந்தித்தேன்.

‘ஹாய் ரீனா ஐஸிரெறு’ என்றேன்.

முகம் சிவக்க கைகள் இரண்டையும் நாடியில் வைத்தபடி விழி உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தாள்.

எப்படி இது சாத்தியமாயிற்று என்று எனக்குப் புரியவில்லை. ஜப்பானிய மொழி உங்களுக்குப் புரியாதவரையில் நான் தப்பித்தேன்.

(நன்றி: பாடல் உதவி – முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஜப்பானியக் காதற் பாடல்கள் என்ற நூலில் இருந்து.)

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *