புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடி பால்கனிக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நான் படிக்க அமர்ந்தபோதுதான் எதிர் வீட்டு பவானி அவள் வீட்டு பால்கனியில் பளீரென்று தோன்றினாள். இடையில் சாலை. போக்குவரத்து. !!
‘சே…! படித்தாற்போலத்தான் ! ‘மனம் சளித்தாலும் பார்வை அவளை அப்பியது.
நல்ல களையான உருண்டை முகம்.
செக்கச் செவேர் தர்பூசணிப் பழத்தைப் போல் எப்போதும் ஈரப்பூச்சுள்ள கடித்துத் தின்னச் சொல்லும் உதடுகள்.
அங்கே இங்கே நில்லாது குறுகுறுத்து அலைபாயும் மறைந்த ஸ்ரீவித்யா நடிகை கண்கள்.
மொழு மொழு குண்டு ஆப்பிளை சரி பாதியாக வெட்டி ஒட்டப்பட்டுள்ள கன்னங்கள்.
பளீர் சிரிப்பில் வெளீரென்று தெரியும் வெண்முத்துப் பற்கள்.
எச்சில் விழுங்கினால் வெளி தெரியும் சங்கு கழுத்து.
கழுத்துக்குக் கீழே…..’ வேண்டாம் !’ என்று மனது தடை போட்டது.
பாவாடை , ஜாக்கெட் , தாவணிகள் மறைத்தது தவிர….கிறுகிறுக்க வைக்கும் பளபளக்கும் இடுப்புப் பகுதி.
தொட்டால் உடைந்து விடும் சின்ன இடை.
உரித்த வாழைத்தண்டு செழுமை கால்களில் கொலுசுகள்.
இதுதான் பவானி !
எப்படி படிக்க முடியும்…?
எத்தனை ஏணி வைத்தாலும் ஏறாது. விழுந்து விழுந்து படித்தாலும் பிடி மண் ஒட்டாது.
அது என்னவோ… சிறிது நாட்களாகவே…குறிப்பாக ஒருவார காலமாக நான் மாலை படிக்க மாடிக்கு வந்தால்…கண்கொத்தி பாம்பாக இருந்து இவளும் வருகை.!!
என்னைப் படிக்கவிடாமல் செய்வதில் இவளுக்கென்ன சந்தோசம், மகிழ்ச்சி. ?? சண்டாளி. !!
ஒழுங்காக நிற்கின்றாளா என்றாலும் அதுவுமில்லை. ஒற்றைக் கையை ஒயிலாக இடுப்பில் வைத்துக் கொண்டு நெஞ்சை அள்ளும் ஓரப்பார்வை, மோகன சிரிப்பு.
விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க வந்த மேனகை மாதிரி…படுத்தி எடுக்கிறாள் பாதகத்தி…..!!
இரட்டைச் சடையில் ஒன்றை எடுத்து கையில் சுற்றிக் கொண்டு நிற்கும் அந்த ஒயிலென்ன.?….. கண்களில் காதல் காந்தம் என்ன..?
ஏன்தான் மனுசி இப்படி உயிரை வாங்குகிறாளோ..?!
‘ஏ..! காதல் கரும்பே ! கற்பகவிருச்சமே !எத்தனை நாளைக்கடி இப்படி பார்வையாலேயே படுத்தி எடுத்துக்கொண்டு இருப்பாய்..? என்னைப் பிடித்திருக்கின்றது, விரும்புகிறாய் என்றால் ஓடி வந்து….” ஐ லவ் யூ !” சொல்லவேண்டியதுதானே..?! ‘ – ஆத்திரப்பட்டது மனம்.
ஒருத்திக்கு…. ஒருவன் மீது எவ்வளவு தான் ஆசை , காதல் இருந்தாலும் வெட்கத்தை விட்டு தன் மனத்தைத் திறந்து காட்டுவாளா..? முண்டம் ! முண்டம் ! ஒரு கோடுதான் காட்டுவாள். அதைப் புரிந்து கொண்டு ஆண்தான் அடுத்து செயல்படவேண்டும். பார்க்கவேண்டும், பேச வேண்டும். !! அதை விடுத்து….? மனம் இடித்தது.
“ஓ…! என்னை விரும்புவதால்தான் இவள் இப்படி வந்து நின்று படுத்தி எடுக்கின்றாளா..? கோடு போடுகிறாளா..?! இது தெரியாமல் நான் ஒரு மடையன் படிப்பு படிப்பு என்று.!
வேறு வழி இல்லை மடக்கிவிட வேண்டியத்துதான். !! என்று நினைத்து விரித்த புத்தகத்தை எதிரில் இருந்த மேசை மீது கவிழ்த்து அருகிலிருந்த கைபேசியை எடுத்தபோது அது உயிர்த்தெழுந்து அழைத்தது.
பார்த்தேன்.
பெயரில்லா…. எண்கள். அறிமுகமில்லாதது.
‘ இது என்ன சிவா பூசையில் கரடி …? ‘ என்று அவளை பார்த்தேன். அவள் காதில் கைபேசி.
‘நான்தான். எடுங்க..’என்பதுபோல் எனக்கு சைகை.!!
அவளேதான். !! ஆச்சரியம்…!!
‘ஓ பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது. நேரடியாக அவளே சொல்லப்போகிறாள் ! ‘ – மனம் எம்பிக் குதிக்க…உயிர்ப்பித்து காதில் வைத்தேன்.
“தாத்தா !…”அவள் குரல்.
மனம் பொசுக்கென்றானது.
‘அறுபது வயது ஆணை இருபது வயது பெண் ஒருத்தி எப்படி அழைப்பாள்..? மனம் சமாதானப்பட்டது. நமக்கு அழைப்பு முக்கியமில்லை. விசயம் ! ‘ நினைத்து…
“என்ன பவானி..?” என்றேன்.
“நானும் உங்க பேரன் வினிஷும் உயிருக்குயிராய்க் காதலிக்கிறோம். நீங்கதான் பெரிய மனசு பண்ணி…உங்க வீட்டிலேயும் எங்க வீட்டிலேயும் பேசி எங்க கலியாணத்தை முடிக்கனும் !” சொன்னாள்.
‘ஓ… என்னை அந்தப் பார்வை பார்த்து சிரித்து மயக்கியது எல்லாம் இந்த சேதி சொல்லத்தானா…? ! இது புரியாமல் என் வயது, நிலைமை பற்றி யோசிக்காமல்…’ – என்று நினைக்கும்போதே எதிரில் கவிழ்ந்து கிடக்கும் என்னைப் பார்த்து ராமாயணம் சிரித்தது.
“என்ன தாத்தா யோசனை..?” என்றாள்.
“ஓ… ! அதுக்கென்ன தாராளமா முடிக்கிறேன் !” சொல்லி அவளை பார்த்தேன்.
“நன்றி தாத்தா” கோகிலா மலர்ந்து கைபேசியை அணைத்தாள்.
இருந்தாலும்…..
அறுபது வயதானாலும்… தலைக்கு கருப்பு அடித்து, எந்தவித நோய்நொடி இல்லாமல், நல்ல வாட்ட சாட்டமாய், நன்றாகத்தானிருக்கிறேன். இதெல்லாம் எதிரில் வரும் பெண்களுக்கு எங்கே தெரிகிறது….? எல்லாரும் அந்தந்த வயதிற்குத் தகுந்த ஆட்களாகத்தான் பிடிக்கிறார்கள்!! – என்று மனம் ஆதங்கப்பட்டது, பெருமூச்சு விட்டது.!!!!!