காதலே காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 2,664 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைமாட்டில் எரிந்துகொண்டிருந்த கைவிளக்கை அணைத்து விட்டுப் படுக்கலாமென்ற எண்ணத்துடன் தெய்வானை நிமிர்ந்தாள். அப்போது தான் வாசல்பக்கமாக அந்தச் சப்தம் கேட்டது. ‘எக்எக்’ என்ற விக்கலின் ஓசையும், வேதனையின் பிரதிபலிப்பான அனுங்கல் சப்தமும்…ஐயையோ, யாரோ பெண்குரல் போலிருக்கிறதே!

“யாரது!” என்று கேட்டுக் கொண்டே, பதிலை எதிர்பாராமல் தெய் வானை எழுந்து, கையில் விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசல் பக் கம் போனாள். அங்கே வேதனை அலைகளை எழுப்பிக் கொண்டி ருந்தது ஒரு பெண்தான்; யாரோ ஒரு இளம்பெண். விளக்கு வெளிச்சத் திலே தெய்வானை அந்தப் பெண்ணின் நிலைமையை ஆராய்ந்தாள்.

சிசு இருக்கும் வயிற்றுடனே உடலின் முழுப் பாரத்தையும் ஒரு காலிற் தாங்கி மறுகாலை இலகுவாகப் பெயர்த்து நடந்துவந்து தொடர்ச்சியான விக்கலுடனும், வெளிறிய முகத்துடனும் நிற்கும் அந்தப் பேதைப் பெண்ணைப் பார்த்தபோது தெய்வானையின் மனம் வேதனைப்பட்டது. “யாரோ ஒரு அயோக்கியன் கசக்கி எறிந்துவிட்டான்;

‘பாவம்!’ என்று அவள் எண்ணினாள். தலைவாசலிலே அவளை உட்காரவைத்துவிட்டு அடுப்பிற் கொதித்துக் கொண்டிருந்த நீரில் சிறிது தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தாள். அதைக் குடித்தபோது சிறிது தெம்பு வந்து விக்கலும் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வந்தது.

தெய்வானை அவளை மிக ஆதரவாக அழைத்து உள்ளே உட்கார வைத்து “மகளே, நீ யார் என்பதை நான் அறியக்கூடாதோ” என்று கேட்டாள்.

அவள் உண்மையைச் சொல்ல விரும்பவில்லை. “நான் ஒரு அநாதை” என்றாள்.

“மகளே, ஒழியாதே, உண்மையைச் சொல்! நீ சொகுசாக வாழ்ந்த பெண். உன் மேனி யிலே நிழலில் வளர்ந்த அந்த மெல்லிய சாயல் இன்னும் முற்றாக மறைந்துவிடவில்லை” என்று தெய்வானை சொன்னாள். இந்த உலக நிகழ்ச்சிகளிலே பழமுந்தின்று வித்துமெறிந்த தெய்வானைக் கிழவியிடமும் பொய் சொல்ல முடியுமா?

இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு – சரஸ்வதிக்கு – அழுகையே வந்தது. தான் இந்த விஷயமறிந்த மனுஷியிடம் பொய் சொன்னதற்காகவும் நாணப்பட்டாள். நிலத்தைப் பார்த்தபடி இருந்தாள்; கண்ணில் நீர் துளித்தது. தன் அழுகையை அடக்கிக்கொண்டு தெய் வானைக்கு ஏதோ சாட்டுச் சொல்லித் தன்னைக் காப்பாற்ற எண்ணினாள்; முடியவில்லை.

“இதெல்லாம் இப்பொழுது உலகத்தில் இயற்கை. இதற்காக வருத்தப்படாதே” என்று தெய்வானை தேறுதல் கூறினாள். அவள் நிலைமையைக் கண்டு அவளிடம் ஒன்றும் கேளாமல் விட்டிருக்க வேண்டும். பாவம், அவளுடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்கியே இப்படிக் கேட்டாள்.

சரஸ்வதி சேலைத் தலைப்பை எடுத்துக் கண்ணத் துடைத்தாள். தெய்வானை மேலே ஒன்றும் கேட்கவில்லை. அவளுக்கு ஆறுதல் கூறி அவளை அழைத்துக் கொண்டுபோய் பசியாற்றினாள். மத்தியானம் தனக்குச் சமையல் செய்து வைத்திருந்த சோற்றில் இருவரு மாகப் பகிர்ந்து சாப்பிட்டார்கள். அந்த உலர்ந்த சாதம் உள்ளே போகக் கஷ்டப்பட்டது. ஆனா லும் வயிற்றிலே பசி இருக்கிறதல்லவா? ஒருவாறு கஷ்டப்பட்டு இடையிடையே நீரைக் குடித்து அதைச் சாப்பிட்டிறக்கினாள். சாப்பிடும் போது “மகளே, நீ செல்லமாக வளர்ந்த பெண் போலக் காணப்படுகிறாய்! இப்படியாக அலைந்து கொண்டு திரியாதே, பிரசவகாலம் நெருங்கு கிறது. இங்கேயே இரு நான் உனக்கு வேண்டிய ஒத்தாசை செய்கிறேன். பிரசவம் முடிந்த பின்னும் விரும்பினால் போ. “இங்கேயே இருப்பதானால் இன்னும் நல்லது. எனக்கும் உதவி யாக இருக்கும்” என்று தெய்வானை சொன்னாள்.

தெய்வானையின் பரோபகார சிந்தையைக் கண்டு சரஸ்வதி உள்ளம் குளிர்ந்தாள். இதுவரை எத்தனையோ பேர் அவளைப் பார்த்து ‘வேசி’ என்றார்கள்; ‘கெட்டுப்போனவள் என்றார்கள். அவளைப் பார்த்துக் காதோடு காது குசுகுசுத்து நகைத்தார்கள். பெண்களே இப்படி எல்லாம் செய்தார்கள். அப்படியானவளுக்குத் தெய்வானையின் ஆதரவு பெரிதல்லவா?

சரஸ்வதி தன் சொந்த வீட்டை விட்டுப் புறப்பட்டபின் இன்றுதான் இந்த சொகுசான படுக்கை. அதிற்படுத்தவுடன் அந்தப் படுக்கையின் சுகத்தை அவள் நயக்கவில்லை . பழைய நினைவுகள் வந்து சிந்தனைக்குள்ளாக்கி அவளை வருத்தின. இடையிலே தெய்வானை சொன்னாள்: “பெண்ணே , நான் உன்னைப் போல அனாதரவாகவே இருக்கிறேன். பிறக்கும் போதே தாயைத் தின்றுவிட்ட என் பேரனை வளர்த்தேன். அவன் காவாலிகளுடன் கூடி ஒவ் வோர் பண்டமாகக் கொண்டு போய்த் தாரைவார்க்கிறான். இன்றைக்கு எங்கே எந்தக் காட் டிலே நிற்கிறானோ அறியேன். கையிலே இருப்பது செலவானவுடன் வருவான். காணியை விற்றுக்கொண்டு போவதற்கு, அந்தக் கழிசறையால் எனக்கொரு ஆறுதலும் கிடையாது.”

தெய்வானை வருந்துவதைக் கண்ட சரஸ்வதிக்கு ‘உலகிலே துன்பம் சகஜம்’ என்ற எண்ண த்தினால் சிறிது ஆறுதலும் பிறந்தது. சிறிது நேரம் இருட்டிலே இருவரும் மௌனமாகப் படுத்திருந்தார்கள். பின்பு தெய்வானை ஆரம்பித்தாள்: “உனக்கு இந்த அநீதி இழைத்தவன் யார்?” – இதை கேளாமலிருக்க அவளால் முடியவில்லை.

“இல்லை; எனக்கு யாரும் அநீதி செய்யவில்லை” என்று சரஸ்வதி சொன்னாள்.

“அப்படியானால், நீவிவாகஞ் செய்து உன் புருஷன் இறந்து…”

“அப்படி நான் விவாகஞ் செய்திருந்தால் விதவையானாலும் சுகமாக வாழ்ந்திருப்பேன். இக்கதி நேராது.”

“என்ன நடந்தது? விஷயத்தைச் சொல்லேன்”

“அவர் என்னைக் காதலித்தார்…..” என்று தொடங்கியவள் அப்பாலே என்ன சொல்வது, எப்படிச் சொல்வதென்று தெரியாதவளாய் நிறுத்திக் கொண்டாள்.

“காதலித்தாரா?….ஆனால் இந்த அயோக்கிய வாலிபர்கள் இருக்கிறார்களே, காதல் காதல் என்று வட்டமிடுவார்கள், கோழிக்குஞ்சைக் கண்ட பருந்து மாதிரி! ஆனால் இவர்களுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாது. எத்தனை மலர்களில் தேனுறுஞ் சலாமோ, அத்தனை மலரையும் நாசமாக்கி விடுவார்கள்!” என்று தெய்வானை தான் அறிந்தவரையிலே சொன்னாள்.

“அவர் அப்படியானவரல்ல!” என்றாள் சரஸ்வதி.

“அவர் இப்பொழுது எங்கே!”

“நான் இருப்பது பட்டணம்; அவருடைய ஊரின் பெயரை மறந்து விட்டேன். எனக்கு நல்ல நினைவிலிருந்தது; மறந்துவிட்டேன்…”

“உன்னைக் காதலித்தார் என்றாயே; பின் ஏன் பிரிந்தார்?” ‘என் பெற்றார் அறியாமல் அவருடன் நான் செல்வதென்று தீர்மானித்தோம்…”

“அவரை விவாகஞ் செய்ய உன் பெற்றார் விரும்பமாட்டார்களா?”

“விரும்பவில்லை”

“பல சீரையும் நோக்கியே பெற்றார் மணம் முடித்து வைப்பர். நான் காதல் மணம் கூடாது என்று சொல்லவில்லை. இது காதல்தானா அல்லது மோகமா. நிரந்தரமானதா அல்லது அந்த நேர அவதியைப் பொறுத்ததா, என்று தீர்மானிக்கு முன் உணர்ச்சித் துடிப்பிலே அவதிப்பட்டுவிடுவீர்கள். பிற்காலத்தை நோக்கமாட்டீர்கள். நன்மையாக முடிந்தால் சரி;அல்லது போ பத்து!” என்றாள் தெய்வானை.

பிறகு, “அப்பால் என்ன நடந்தது” என்று கேட்டாள்.

“தன்னூருக்குப் போய் எல்லா ஒழுங்குகளும் செய்துவிட்டு என்னை அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னார். ஆனால் அவர் மீண்டு வரவில்லை. என்ன ஆபத்கோ என்னைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கு அவமானத்தை வைத்து அவர்களின் கண் முன்னே இருக்க நான் விரும்பவில்லை.”

“நீ என்னதான் சொன்ன போதிலும், அவன் உன்னை அணாப்பியே விட்டான்! என்றாள் தெய்வானை.

“ஐயோ, அநியாயம்! அப்படிச் சொல்லாதீர்கள்! அவர் ஒருபோதும் அணாப்பவில்லை” என்று சரஸ்வதி திடமாகக் கூறினாள்.

“நீ சிறு பெண். உலகம் தெரியாதவள். என்ன சொன்ன போதிலும் நான் நம்பமாட்டேன். அவன் உன்னை அணாப்பியே விட்டான். நிஜமனிதனிலும் நடிகன் கைதேர்ந்தவன். பிடி படாமல் நடப்பதே அவன் முதற்கடமை” என்றாள் தெய்வானை.

“கடவுள் மீது சத்தியஞ் செய்து கொடுத்துவிட்டுப் போனார். அப்படி ஒருபோதும் செய்திருக்க மாட்டார் அவர்!”

“சரி, மகளே; நீ நித்திரை செய். முடிந்த காரியத்திற்கு வாதாடி என்ன?”

“என்றோ ஒருநாள் அவரைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனோ தெரியாது”

“சரி சரி பேசாதே. ஆறுதலாக நித்திரை செய்” என்று தெய்வானை பேச்சை முடித்தாள்.

ஒருவர்க்கொருவர் ஆதரவாக இப்படியே நாட்களைக் கடத்திக்கொண்டு வந்தார்கள். தான் ஒரு அந்நிய வீட்டில் வசிப்பதாகச் சரஸ்வதி எண்ண வில்லை. உடம்பு சிறிது சிறிதாக மினுங்கிக்கொண்டு வந்தது. பரட்டை மயிர் கறுத்துப் பழைய நெளிவும் விட ஆரம்பித்தது. முகம் வெளிறிய நிலையிலும் சிறிது பிரகாசமடைந்தது. தெய்வானையின் ஆதரவில் துன்பத்தை அதிகமாக மறந்து கொண்டே வந்தாள் சரஸ்வதி.

ஒருநாள் அங்கே ஒரு வாலிபன் வந்தான். அவளைக் கண்டதும் சரஸ்வதி ஸ்தம்பித்துப் போய்விட்டாள். என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. ஓடிப்போய் ஆனந்தக் கண்ணீர் பெருக அவன் கால்களில் விழுந்தாள். தன் எண்ணம் வீண்போகவில்லை என்று பூரித்தாள். அவன் அவளைப் பொருட்படுத்தவில்லை. காலை விடுவித்துக் கொண்டு உள்ளே போனான்.

“பாட்டி, யார் இந்தப் பெண்!” என்று ஒன்றுமறியாதவன் போலக் கேட்டான். வெளியே நிகழ்ந்ததைத் தெய்வானை காணவில்லை.

“பாவம் அனாதைப் பெண்” என்றாள் தெய்வானை.

“சரிதான். இது என்ன விபசார விடுதியா, தெருவாலே போகிறவர்களையெல்லாம் அழைத்து வைத்துக் கொள்ள!’ என்று தெய்வானை மீது கோபித்தான், அருமைப் பேரன்!

“பாவம் கெர்ப்பணி. அவள் எங்கே போவாள்?”

“கிழட்டுப் பிணமே! நான் சொல்லுகிறேன். மறுவார்த்தை பேசாது உடனே அனுப்பிவிடு!” என்று பாட்டியைப் பார்த்து அதிகாரத் தொனியோடு கட்டளையிட்டான் அவன்.

உள்ளே இந்த நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, சரஸ்வதி வெளியே புறப்பட்டுக் கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். எல்லை காண முடியாத சமுத்திரந்தான் இனிமேல் அவளுக்கு இந்த உலகத்திலே தஞ்சம் கொடுக்கக் கூடியது.

– மறுமலர்ச்சி மாசி – 1947.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *