தூக்கம் பற்றிய இரண்டாவது கேள்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 8,621 
 

“…. மதிப்புரை, அறிமுக உரை என்றெல்லாம் எனக்குப் பாகுபடுத்தி அல்லது பகுத்துப் பேச வராது என்பதனால் எனக்குத் தோன்றியதை தயார் செய்து வந்திருக்கிறேன். அதை மதிப்புரையாகவோ விமர்சன உரையாகவோ எடுத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு“

அரங்கத்திலிருந்த கூட்டத்தைப் பார்த்துப் பேசியபடி இடது கையிலிருந்த புத்தகத்தையும், புத்தகமளவிற்கு தடிமனாயிருந்த குறிப்புத்தாள்களையும் இலாவகமாய் கைமாற்றிக் கெண்டார் தோழர் சுப்புராயலு. இயல்பாக அவர் உடல் நிமிர்ந்ததில் இன்னும் சற்று உயரமானார். தெளிந்த பார்வையுடன் கூட்டத்தின் அத்தனை தலைகளையும் மேற்பார்வை இட்டபடி தொடர்ந்தார்.

“இந்த கருத்து கூடுகை அமைப்பானது இதுபோன்ற தீவிரமான இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதன் வழியே சமூகத்தை உற்று நோக்கி, கண்காணித்து, சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் முக்கியமான பணியைச் செய்து வருகிறது. அவ்வகையில் அதன் பொறுப்பாளர்களான அம்புலி கிருஷ்ணனையும், தம்மம் கருப்புச் சாமியையும் மனதார பாராட்டுகிறேன்.

கருத்து கூடுகையின் இன்றைய நிகழ்வில் கவிஞர் அம்மாசியின் ‘தூங்கி வழிபவனின் இரவுக் கனவு அல்லது சிதைந்து தூக்கத்தின் புலம்பல்‘ என்ற கவிதைக் தொகுப்பினைப் பற்றி பேச விழைகின்றேன்.“

கணீரென்ற குரலில் அவர் துவங்கவும் பார்வையாளர்களிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த தம்மம் கருப்பசாமி இடையூறு ஏற்படாதவாறு அருகில் கிடந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

தோழர் சுப்புராயுலு தொடர்ந்தார்.

“புத்தகத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ‘தூங்கி வழிபவனின் இரவுக் கனவு அல்லது சிதைந்த தூக்கத்தின் புலம்பல்‘ – இது போன்ற இரட்டைத்தலைப்புகள் தேவையைப் பொறுத்தோ, ஒரு வசதிக்காகவோ அல்லது ஒரு புதுவித பாணிக்காகவோ வைக்கப்படுகின்றன. பொதுவாக தொகுப்பு நூலினைப் படிக்கும் போது தலைப்புக் கவிதை அல்லது கதை அல்லது கட்டுரை அந்நூலின் சாராம்சமாய் இருக்கும் ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இல்லை என உளவியல் உதாரணங்களை காட்டி என்னுடன் விவாதிப்பார் அம்புலி கிருஷ்ணன். அவர் கூறுவதும் ஒரு கோணத்தில் சரிதான்.

இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள சுமார் 45 கவிதைகளுள், மொத்தம் 43 கவிதைகள் என்று நினைக்கிறேன், தூக்கத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. இது எனக்கு வியப்பளித்தது . எல்லா கவிதைகளுமே தூக்கம் அது தரும் உற்சாகம் உடல்பலம், மனபலம், அதீக தூக்கம் தரும் சோம்பல் உணர்வு, தூக்கமின்மையின் அவஸ்தை, தூங்க அனுமதிக்கப்படாத நிலைமைகள் என முற்றிலும் தூக்கம் பற்றியே பேசுகின்றன. ஒரே பாடுபொருள், சில இடங்களில் கூறியது கூறல் போன்ற சில குறைகள் இருந்த போதிலும் எனது வாசிப்பனுபவத்தில் இந்த நூல் புது அனுபவத்தை தந்தது. நான் இரசித்தவற்றை உங்களுக்கு காட்டுகிறேன்.“

தோழர் சுப்புராயலு குறிப்புக் காகிதங்களையும் புத்தகத்தையும் புரட்டிக் கொண்டிருந்தபோது அந்தக் கூட்டத்திற்கு புதிதாய் அல்லது தெரியாத்தனமாய் வந்திருந்த சில கல்லூரி இளைஞர்கள் நெளிய ஆரம்பித்தார்கள். மீண்டும் கையெழுத்து நோட்டு கூட்டத்தில் வலம்வர ஆரம்பித்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் கவனம் சிதறுபவரல்லர் தோழர் சுப்புராயுலு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பணி ஓய்வு பெற்றிருந்த சில அன்பர்கள் இலக்கிய அமுதம் பருக ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் தோழரும் அழைக்கப் பட்டிருந்தார். தோழருக்கும் அந்த அன்பர்கள் வயதுதான். என்றாலும், ‘அலை வரிசை ஒத்து வராது‘ என்பார். அந்த அன்பர்கள் இலக்கிய விற்பன்னர்கள் இல்லையென்றாலும் ஏதோ ஒரு விஷயம் செய்கிறோம் என்ற திருப்தியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தோழர் அங்கு பேசியது ‘பிரேம்-ரமேஷின் சிதைவுகளின்-ஒழுங்கமைவு‘ நூலைப்பற்றி எப்பொழுதும் போல் இம்முறையும் புத்தகத் தடிமனுக்கு குறிப்புத் தாள்களுடன் அவர் பேச ஆரம்பிக்கவும் கூட்டத்திற்கு வந்த இருவரைத் தவிர ஏனையோர் ஒழுங்கமைக்கவே இயலாத அளவிற்கு சிதைந்து சிதறிப் போனதற்கு தோழர் சுப்புராயுலுவின் வெளிப்பாட்டு உத்திதான் காரணமென்பதை சிதையாமல் ஒழுங்காயிருந்த இருவரும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அந்த இருவரில் ஒருவர் அம்புலி கிருஷ்ணன் என்பது இங்கு அவசியமில்லை என்பதால் இருவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் கூட்டம் முடிந்தபிறகு இருவரில் இன்னொருவரான கவிஞர் பொன்.பாலு சற்று கிண்டலாக ஆனால் அக்கறையுடன் கூறிய வெளிப்பாட்டு உத்தி சார்ந்த சில ஆலோசனைகளை தோழர் பின்னாட்களில் பின்பற்றத் தவறவில்லை.

ஆயினும் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு விடுவது அவர் இயல்பு. தேடிய குறிப்புத்தாள் கிடைத்ததும் தோழர் உற்சாகமாகப் பேச்சைத் தொடர்ந்தார்.

“தொகுப்பிற்குள் போகும் முன் தூக்கம் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். தூக்கம் – ஈவிரக்கமற்ற பயங்கரமான வேட்டைக்காரன். தன் வேட்டைக் கருவிகள் அனைத்தையும் இலாவகமாய் பயன்படுத்தி தன் இரையை அது வீழ்த்துகிறது. அதன் நுண்ணிய வலையில் சிக்கிய இரை எதுவும் வெகுதூரம் தப்பி ஓடமுடிவதில்லை. தூக்கம் எப்போதும் தனித்து வருவதில்லை. தான் வருவதற்கு முன்பே சில முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு விடுகிறது. உடலோ, உள்ளமோ சோர்ந்து போன உயிர்கள் தூக்கத்தின் முன் எளிதில் வீழ்ந்து விடும். தூக்கம் தேர்ந்த வேட்டைக்காரன்போல் செயல்படுகிறது. களைப்புற்ற உயிர்களின் காதில் தன் இரகசியச் செய்திகளை முணுமுணுக்கிறது. நைச்சியமாகப் பேசியபடி இரைமீது தன் பலத்தை மெல்ல மெல்ல பிரயோகித்து வீழ்த்துகிறது.

உண்மையில் தூக்கம் என்பது என்ன? தத்துவார்த்த ரீதியிலும், மருத்துவரீதியிலும், உளவியல் ரீதியிலும் நாம் நிறைய விளக்கங்களைப் பெற இயலும். தூக்கத்தைப் பற்றி பலரும் பலவித வியாக்கியானங்களைத் தந்திருக்கிறார்கள். ஆனால் “அம்மாசி”யின் இந்தக் கவிதைத் தொகுப்பின் வழியாக தூக்கம் என்ற அரூபமான ஒன்றைப் பற்றி நாம் வேறு சில கண்ணாடிகளை அணிந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

சில கவிதைகளை நான் வாசித்துக் காட்டி விடுகிறேன்

‘திறந்த என் இமை மூடி

மூடிய என் இமைக்குள்

எப்படி நுழைகிறாய்‘ எனத் தொடங்கும் இந்த தலைப்பில்லாத கவிதை தூக்கத்தை அதன் மூலம் கனவினை வரவேற்கிறது. அநேகமாக உற்சாகமான மனம் மட்டுமே கனவுகளைச் சந்திப்பதற்காக தூக்கத்தை வரவேற்கும் என்பது இளையோர் உளவியல். மென்மையான உணர்வு ஓடும் இந்தக் கவிதை தூக்கத்திற்காகவும் கனவிற்காகவும் நம்மை ஏங்க வைக்கிறது. மேலும்….”

சற்றும் சளைக்காமல் வெவ்வேறு கவிதைகளை வாசித்துக் காட்டி கிட்டத்தட்ட பொழிப்புரை வழங்கிக் கொண்டிருந்தார் தோழர் சுப்புராயுலு. கூட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த எல்லைக் காவல் முனீச்வரன் கேமிராவுடன் தோழரினருகே சென்றான். தோழரின் இடதுபக்கம், வலதுபக்கம் என எட்டுத் திசைக் கோணங்களிலும் ஃபிளாஷ் வைத்து பட்மெடுத்துத் தள்ளினான். தோழருக்குத் தொந்தரவில்லையென்றாலும் கூச்சமாயிருந்தது. எல்லைக் காவல் முனீச்வரன் விடுவதாயில்லை.

எல்லைக் காவல் முனீச்வரனுக்கு “தோழர்”என்றதும் அவரது நேவி ஸ்டைல் சல்யூட் தான் நினைவுக்கு வரும். ஒரு முறை வழக்கமான ஒரு தேநீர்க் கடையில் எல்லைக் காவலனைப் பார்த்துவிட்ட தோழர் சைக்கிளை ஓரங்கட்டி நிறுத்தி விட்டார். உடலை விறைப்பாக்கி தோழமை உணர்வு பொங்க ஒரு நேவி சல்யூட் வைத்தார்.

“வணக்கம் காம்ரேட்”

எல்லைக் காவல் முனீச்வரன் பதறி எழுந்து வாய் நிறைய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பதில் வணக்கம் வைத்தான்.

“வணக்கம் தோழர் டீ சாப்டுறீங்களா…..?“

“ம்.. சாப்பிடலாமே காம்ரேட். அப்புறம் பாரீஸ்ல இருந்த மாதிரி எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் சந்திச்சுப் பேசுறதுக்கு ஒரு ரெஸ்டாரன்ட் பார்க் இருக்கணும். இல்லேன்னா நமக்குன்னு பெரிய ஹாலோட ஒரு தனிப்பட்ட நூலகம் கட்டணும்னு எனக்கு ஒரு ஆசை காம்ரேட்.“

எல்லைக் காவல் முனீச்வரன் சிரிக்காமல் துடுக்காக சொன்னான்.

“கட்டிடலாம் தோழர். முதல்ல முதல் ரெடி பண்ணுங்க“

அவனது தொனியை தோழர் சிறிதும் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை.

“நீங்க முதல்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. டிஸ்ட்ரிக் லைப்ரரில மூலதனம் எடுத்து வச்சிருக்கேன். ஜமதக்னி மொழி பெயர்ப்பு. இத்தன நாள் தொழில் சங்கத்தில இருந்தும் இப்பதான் மூலதனம் படிக்கிறதுக்கு தகுதியும் திராணியும் வந்திருக்கிறதா நினைக்கிறேன்”. சற்று ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.

தோழர் நேரடியான அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்டவர். தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்ட ஒரு தனியார் மில்லில் சங்கம் கட்ட பெரும் முயற்சி மேற்கொண்டவர். கலை இலக்கியத்தில் ஆர்வமும், சங்கம் முதல் பின்-நவீனம் வரை விரிந்த ஆழமான வாசிப்பும் உடையவர்.

“அதுக்கென்ன தோழர் நீங்க படிச்சிட்டு எங்களுக்கும் புரியுறா மாதிரி நயமா சொல்லுங்க.“

“அப்பிடியில்லை காம்ரேட். உங்களை மாதிரி இளைஞர்கள் நிறைய படிக்கணும். புத்தகங்களை, மக்களை சமூக அமைப்பை தொடர்ந்து படிக்கணும். அதுவும் நீங்க ஒரு கவிஞர் பரவலாக நிறைய வாசிக்கணும். சரி கையிலே ஏதோ வச்சிருக்கீங்க.“

எல்லைக் காவல் போலியாய் சிடியை மறைத்தான். “அய்யய்யோ இது நித்யானந்தன் இல்லை தோழர். என்னோட முதல் கவிதைத் தொகுப்பு வருதில்ல, அதத்தான் சிடியா மாத்தி வைச்சிருக்கேன்.“

“ஆமா சொல்லியிருக்கீங்க. தலைப்பு என்னது காம்ரேட்?“

“தனியனாய் சிகரம் தொடு. இனிமே தான் பிரிண்டிங் ஆரம்பிக்கணும் தோழர்“

“தனியனாய் சிகரம் தொடு“ வாய்க்குள் முணுமுணுத்த தோழர் திருப்தியின்றி தலையசைத்தார்.

“உலகயமாக்கலை எதிர்க்க வேண்டிய குரலெல்லாம் இப்படி ஆதரவுக் குரலா ஒலிக்கிறதே. இந்தத் தலைப்பு அமைப்பிற்கு அணி திரட்டலுக்கு எதிரான தலைப்பு, உலகமயச் சூழலுக்குச் சாதகமான தலைப்பு, நிராகரிக்கப்பட வேண்டிய தலைப்பு காம்ரேட்.“

திடீரென்ற அவரது விமர்சனத்தை எல்லைக் காவல் எதிர்பார்க்கவில்லை. “இல்லை தோழர்… வந்து… இப்பதான்… நான்…“

“பரவாயில்லை காம்பரேட். நிறைய வாசிங்க தேடித் தேடிப்படிங்க. தலைப்பு ஏன் தவறுன்னு உங்களுக்குப் புரியவரும்“

பின்னாட்களில் எல்லைக் காவல் முனீச்வரனின் இரண்டாவது கவிதைக் தொகுப்பான ‘பொறியாய் … சுடராய்… பிழம்பாய்…‘ முதல் கவிதை தொகுப்பாய் வெளியிடப்பட்டது. (முதல் கவிதைத் தொகுப்பும் தலைப்பும் அச்சிலேறவில்லை என்பதால்).

தோழரின் கண்கள் பளிச்சென்று தெரியும் வண்ணமிருந்த புகைப்படைத்தை திருப்தி என்ற பிறகுதான் எல்லைக் காவல் முனீசீவரன் அவரை விட்டு அகன்றான். அம்மாசி யின் கவிதைகளைப் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் தோழர்.

“தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கவிதை. சிதைந்த தூக்கத்தின் புலம்பல் என்ற தலைப்பில்…

‘பீரங்கிகள் துளைத்த நகரில்

பெரும் தூக்கம் படர்ந்திருந்தது

வெற்றுச் சுவரெங்கும் எதிரொலிக்கிறது

தூக்கத்தின் ஓயாத ஓலக்குரல்…‘ இறுதி வரிகள்

‘கேட்பாரற்று கிடந்த விளையாட்டுப் பொம்மைகளுடன்

தூக்கம் விளையாடிக் கொண்டிருந்தது.‘ இதை வாசிக்கும் போது தோழரின் குரல் வேகமெடுத்ததுடன் தடுமாறியது.

தூக்கம் என்பது என்ன? ஓய்வு, தற்காலிக மரணம், சோம்பல், உடலின் புத்துணர்வூட்டும் நடவடிக்கை என நிறைய விளக்கங்கள் உள்ளன. இந்தக் கவிதை என்ன சொல்கிறது. பீரங்கிகள் துளைத்த நகரில் என்ன மிஞ்சும்?. தூக்கம் யாரைச் சென்று சேரும்? இறுதி வரிகள் ‘கேட்பாரற்றுக் கிடந்த விளையாட்டுப் பொம்மைகளுடன் தூக்கம் விளையாடிக் கொண்டிருந்து.‘ பீரங்கிகள் உலாவும் நகரத்தில் உயிரற்ற உடல்கள் தாம் அநாதையாய்க் கிடக்கும். இங்கு தூக்கம் விளையாடிக் கொண்டிருந்தது எனில் இங்கு தூக்கம் என்பதன் அர்த்தம்தான் என்ன? தற்போதைய அரசியல் சூழலில் அது எந்த நகரம் அல்லது எந்த நாடு என்ற கேள்விகள் எழுந்து பெரும் அவஸ்தையை ஏற்படுத்துகின்றன.“ பேச்சினை நிறுத்தி அரங்கத்தில் கண்களை ஊடுருவிப் பார்த்தார். பின் சற்று நிதானமாய்த் தொடங்கினார்.

“தூங்கி வழிபவனின் இரவுக் கனவு. கனவு, தூக்கம் பொதுவில் இவை இரவோடு தொடர்புடையவை. தூக்கம், ஓய்வு புத்துணர்விற்கான ஊக்கி. இரண்டிற்குமான குறியீடு. இரவு இருளின் குறியீடு. இருள் வெளிச்சம் – இரவு x பகல். இது இருமை எதிர்வு. இரவு x பகல் என்ற இந்த கால மாறாட்டம் ஆதி மனிதனை ஒரு ஆழ்ந்த மயக்க நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. இரவும் பகலும் ஏன் எப்படி மாறுகின்றன என்பது அவன் முன் வளர்ந்த பெருங்கேள்வி. ஆதியில் பூமியின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு இனக்குழுக்களும். இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடியலைந்திருக்கிறார்கள். இதனை நாம் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளின் வாயிலாக அறியலாம். ஒருகதை. முன்பு வானம் பூமிக்கு வெகு அருகே மனிதனின் தலையைத் தட்டும்படி தாழ்வாக இருந்ததாம். தன் தலையில் இடித்ததால் கிழவி ஒருத்தி எட்டிப்போ என கடிந்து கொண்டதால், வானம் வெகு தொலைவு சென்று விட்டதாகவும், இன்னமும் செல்வதாகவும் இந்திய மரபில் ஒரு நாடோடிக் கதை உண்டு. இது போன்று இரவு பகல் பற்றி நிறைய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. அன்மையில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் வாசிக்கக் கிடைத்த ஒரு நாட்டுப்புறக் கதையினை இங்கு நினைவுகூற விழைகின்றேன். மிகப்பழங்காலத்தில் மனிதனொருவன் மகிழ்ச்சியை தேடியலைந்து கடைசியாக மலையுச்சியிலிருக்கும் கடவுளிடம் அதைப்பற்றி விசாரிக்கச் செல்கிறான். அது எந்த நாடு என சரியாக ஞாபகமில்லை அநேகமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.“

பொறுமையாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த அம்புலி கிருஷ்ணன் மெல்லிய ஆனால் அழுத்தமான குரலுடன் எழுந்தார். “உட்புகுவதற்கு மன்னிக்கனும். அது ஸ்காண்டிநேவிய பகுதி இல்லை. பல்கேரியா. தோழர் குறிப்பிட்ட அந்த இணையதளத்தை நானும் பார்த்தேன். தேநீர் ஆறிக் கொண்டிருப்பதால் தோழர் தேநீர் சாப்பிடுற நேரத்துல நான் சில விஷயங்களை அரங்கில் பகிர்ந்து கொள்ளலாம்னு நினைக்கிறேன்.“

தோழர் சுப்புராயுலு சாவகாசமாய் அமர்ந்தபடி தேநீர்க் குவளையை கையிலெடுத்துக் கொண்டார். காத்திரமான படைப்பாளியாக அறியப்பட்ட கருத்துக் கூடுகையின் பொறுப்பாளரான அம்புலி கிருஷ்ணன் மேடையாகப் பாவிக்கப்பட்ட இடத்திற்கு வந்தார். தீர்க்கமான பார்வையில் கூட்டத்தை ஓரிரு வினாடிகள் அலசிவிட்டு அழுத்தமான தொனியில் தெளிந்த உச்சரிப்புடன் பேசத் துவங்கினார்.

“அந்த இணைய தளத்தின் கதைப்படி கதையின் காலம் கில்காமெஷின் காலத்திற்கு முற்பட்டது. விவசாயி ஒருவன் மகிழ்ச்சியின் கடவுளைத் தேடியலைந்து பின் இறுதியில் சந்திக்கிறான். கடவுளிடம் கேட்பதற்காக இரண்டு கேள்விகளைத் தயார் செய்து வைத்திருக்கிறான். கடவுளிடம் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் தனது முதல் கேள்வியைக் கேட்டான். ‘மகிழ்ச்சி என்பது என்ன?‘ என்பதுதான் அவனது முதல் கேள்வி. விவசாயியின் மொழியில் மகிழ்ச்சி தூக்கம் இரண்டிற்கும் ஒரே வார்த்தைதான் பயன்பாட்டிலிருந்து. இடம் சூழலைப் பொறுத்து அர்த்தங்களைப் புரிந்து கொள்வார்கள். தவிரவும் எந்தக் கேள்விக்கும் தனக்குத் தெரிந்த ஏதேனுமோர் பதிலைச் சொல்வது கடவுளின் பாணி. என் பதில் சரி உன் கேள்வி தான் தவறு என மடக்குவதில் கடவுள் கில்லாடி மகிழ்ச்சி என்றால் என்ன? என்ற கேள்வியை தூக்கம் என்பது என்ன? என புரிந்து கொண்ட கடவுள் தூக்கத்தைப் பற்றி மிக நீண்ட பிரசங்கத்தை ஆரம்பித்தது. எங்கே விவசாயி இரண்டாவது கேள்வியையும் கேட்டு, தான் திணறி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் முதல் கேள்விக்கான பதிலையே மிக நீளமாக நீட்டி முழக்கி சொல்லி வந்தது கடவுள். இரவும் பகலும் ஏன் எப்படி உருவாயின இரவின் தன்மை என்ன? பகலில் தன்மை என்ன? என்பது பற்றி தன் பாட்டி தனக்குத் சொன்னதை விவசாயியிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தது கடவுள். பகலில் தத்தம் வேலைகளை கவனித்துவிட்டு, இரவில் முதல் கேள்விக்கான பதிலைத் தொடர்வது இருவருக்கும் வழக்கமாகிவிட்டது. என்றைக்கு இரண்டாவது கேள்வி கேட்கப்படுகிறதோ அன்று சூரியன் பெரிதாகி பூமியை விழுங்கிவிடும். இரண்டாவது கேள்வி மிக இரகசியமானது. மிகமிக வீரியமானது என்பது விவசாயிக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தெரியாது. இரவு பகல் மாற மாற அவர்களின் உரையாடல் தொடர்கிறது. உரையாடல் தொடரத் தொடர இரவு பகல் மாறுகிறது. ஷெஹ்ர்ஷாதியின் கதை கூறல் 1001 இரவுகள் மட்டும் நீடிக்கிறது. ஆனால் இவர்களின் உரையாடல் இன்னமும் தொடர்ந்து கொண்டே வருகிறது‘ என கதை முடியும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது விஷயம் இது ஒரு நாட்டுப்புறக் கதையல்ல என்பதைத்தான். நெட்டில் ஏதோ ‘டெக்ஸ் வில்லர்‘ என்பவர் தன் பிளாக்கில் எழுதியது இது. சில அபத்தங்களுடன் ஒரு நாட்டுப்புற கதை வடிவில் இந்த கற்பனைக் கதை அமைந்துள்ளது என்பதை மட்டும் தெரிவித்துக் கொண்டு தோழருக்கு வழிவிடுகிறேன். நன்றி.“

அம்புலி கிருஷ்ணனில் தலையீடு மாறுதலான ஒலியலைகளை அந்த அரங்கினுள் பரப்பியிருக்க வேண்டும். அரங்கம் சிறிது இலகுவாய் உணர்ந்தது. அமர்ந்திருந்த தோழர் சுப்புராயுலு எழுந்தார்.

“காப்பாற்றிய காம்ரேட் அம்புலி கிருஷ்ணனுக்கு நன்றி. அவர் கூறியது போல் அது நாட்டுபுறக் கதை வடிவில் கூறப்பட்ட ஒரு புனைவுதான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மிக வீர்யமான அந்த இரண்டாவது கேட்கப்பட்டுவிடக் கூடாது என்று வாசக மனம் பதறும். அந்தக் பதறலும் பதைபதைப்பும் அம்மாசியின் கவிதைகளில் வெளியிடப்பட்டு நம்மை நிலை குலையச் செய்கின்றன.

கனத்த விழிகளின் மௌனம் தூக்கம் மறுக்கப்பட்ட உயிர்களைப் பற்றிய கவிதை.

‘எங்களின் நிணத்தை நக்கி

ஊளைச் சதை போட்டவர்களின் எக்காளம்

இரவினைப் பற்றி எரியச் செய்கிறது

எங்களின் மிச்ச உறக்கத்தை

கொத்தாகப் பற்றி உலுக்கி

சுவரில் அறைகிறது

சாட்சியாய் இருக்கும் உங்கள் மௌனம்‘ மௌன சாட்சிகளாயிருக்கும் நம்மைச் செவுளில் அறையும் இந்தக் கவிதைக்கு நாம் என்ன பதில்வினை செய்ய போகிறோம்?

உண்மையில் தூக்கம் என்பது ஓய்வு. ஓய்வு மட்டுமல்ல. தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றலை உடலுக்கும், மனதிற்கும் தரவல்லது. அப்படியிருக்கையில் ஒவ்வொருவருக்கும் ஓய்விற்கான உரிமையை உறுதி செய்வது ஒரு மேம்பட்ட சமூகத்தின் கடமையாகிறது. இந்தக் கவிதை அந்த உணர்வினை நம்முள் அழுத்தமாய்ப் பதிக்கிறது. ஆனால் இங்கு உண்மை நிலை என்ன வாயிருக்கிறது? இங்கு ஓய்வெடுப்பதற்கு, தூங்குவதற்கு, சாப்பிடுவதற்குக்கூட நேரமின்றி பஞ்சாலைகளிலும், தொழிற்சாலைகளிலும், கரிமருந்துகளிடையேயும் எண்ணற்ற குழந்தைகளும், இளம் பெண்களும், தொழிலாளர்களும் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரமும், ஓய்வும் இருக்கிறதா என்பது பெருங்கேள்வி.

தூக்கத்தை வேறோர் கோணத்திலும் காணவியலும் Sleepless wolvers அதாவது, ‘உரக்கமற்ற ஓநாய்கள்‘ என்றொரு ஆங்கிலத் திரைப்படம் என் நினைவிற்கு வருகிறது. கருத்துக் கூடுகையில்கூட அந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறோம். அநேகமாக அரங்கிலிருந்தும் 50 பேரில் 20, 30 பேராவது பார்த்திருப்பீர்கள்.

அமெரிக்காவில் வெள்ளையர் குடியேற்ற காலகட்டக் கதையிது. நெவேடா மாகாணத்தில் ‘நவஜோ‘ இன செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் தம் படைப்பிரிவுகளை நிலை கொள்ளச் செய்யும் இராணுவம், அப்பகுதி ‘நவஜோ‘ செவ்விந்தியர்களை எந்த முகாந்திரமுமின்றி கடுமையாகத் தாக்குகிறது. குடிசைகள் சூறையாடப்படுகின்றன. கிராமம் தீக்கிரையாக்கப்படுகிறது. பெண்டு பிள்ளைகள் அத்தனை பேரும் கொல்லப்படுகிறார்கள். இரத்தமும் சதையும் சிதறித் தெறித்த அந்தப்பிராந்தியத்தில் மரண ஓலமும் அடங்கிவிட, மிஞ்சுவது மயான அமைதி மட்டுமே. சில மணி நேரங்களில் அந்தப் பகுதியே சின்னா பின்னமாக்கப்பட்டு, நவஜோ குடியிருப்புகள் முற்றிலும் சிதைக்கப்படுகின்றன. வேட்டையாடுவதற்காக தொலைவில் சென்ற நவஜோ வீரர்களைத் தவிர ஏனையோர் கொல்லப்படுகின்றனர். உயிர் பிழைத்த நவஜோக்கள் சூளுரைக்கிறார்கள் பழி வாங்குவதென. கடுமையான உடலுரமும், நெஞ்சுரமுடைய நவஜோ வீரர்கள் வெள்ளையரைப் பழிவாங்கும்வரை தூக்கத்தைத் துறப்பதென சூளுரைக்கிறார்கள். பழிவாங்கும்வரை துங்காமல் தம் வெறியை அணையாமல் வளர்த்துக் கொள்கிறார்கள். வெள்ளை இராணுவம் தூங்கும் இரவு வேளைகளில் திடீர் திடீரென்று வெறியுடன் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கிறார்கள். நிலைகுலைந்துபோன இராணுவம் இன்னொரு படைப்பிரிவையும் துணைக்கு வரவழைத்து பதில் தாக்குதல் தொடுக்கிறது. பீரங்கிகளின் முன் தாக்குப்பிடிக்க இயலாமல் நவஜோ வீரர்கள் இறுதியில் வீரமரணம் அடைகிறார்கள். அன்றைய இரவில் மலை முகட்டில் ஓநாய்கள் ஓலமிடுவதோடு படம் முடிவடைகிறது. மேலோட்டமாக ஒரு பழிவாங்குதல் கதைபோல் தோன்றினாலும் படமாக்கிய விதமும் கதை சொன்ன விதமும் நம்மை அவஸ்தைக்குள்ளாக்கிவிடும் அம்மாசியின் கவிதைகள்போல். APOCALYPTO உட்பட இந்த வகைப் படங்களுக்கு sleepless wolves முன்னோடி என்றே சொல்லலாம். படம் பார்த்தபின் நம்முள் நிறைய கேள்விகளும் கோபமும் எழும்.

அதிகாரம் தன் கொடூர கரங்களை நீட்டியபடி ஒரு இனத்தின் தூக்கத்தை பறித்துத் துவம்சம் செய்ததே… அதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்குறது? தூங்கும் குழந்தையின் கன்னத்தில் ஈ உட்கார்ந்தாலே பொறுக்க இயலாத மனங்களைப் பெற்ற நாம், தூக்கத்திற்காக கதறியழும் எண்ணற்ற உயிர்களைப் பார்த்தபடி வாளாவிருக்கிறோமே? உடலைச் சுருக்கி ஓய்வுக்காகக் கெஞ்சும் உயிர்கள் இன்னமும் இருக்கின்றனவே? அப்பாவி உயிர்கள் அடித்துக் கிழிக்கப்பட்டு மீளாத தூக்கத்தில் கிடத்தப்பட்டு, குவிக்கப்பட்ட உடல்களின் மீதேறியமர்ந்த அதிகாரத்தை எதிர்த்து நம் நெஞ்சை நிமிர்த்தி கரங்களை உயர்த்திக் காட்ட வேண்டாமா? உலகம் அழிந்துவிட்டு போகிறது. தூக்கத்தைப் பற்றிய அந்த இரண்டாவது கேள்வியும் கேட்கப்பட வேண்டும் தோழர்களே! அது எவ்வளவு வீரியமான கேள்வியாக இருந்தாலும் சரி. நமது உணவை, நமது தூக்கத்தை, நமது வாழ்வைப் பறிப்பவர்களின் உலகம் வெடித்துச் சிதறட்டும். நம் தூக்கத்தைத் துறந்து சூளுரைக்க வேண்டிய நிலையில் இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வேறெந்த கதையிலும்… ….“

தோழர் சுப்புராயலு சற்று அதிகமாய் உணர்ச்சி வயப்பட்டிருந்தார். எல்லைக் காவல் முனீச்வரனின் முகத்தில் ஒட்டியிருந்த மிச்ச சொச்ச தூக்கத்தை நவஜோ செவ்விந்திய வீரன் வாசலை நோக்கி துரத்திக் கொண்டிருந்தான். எல்லைக் காவல் முனீச்வரனால் நன்றாகப் பார்க்க முடிந்தது. நவஜோ வீரன் கையில் ஈட்டியுடன் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்ததை சுற்று முற்றும் பார்த்தான். எல்லோருடைய கண்களுக்கும் கையில் நீண்ட ஈட்டியுடன் நவஜோ வீரன் நன்றாகத் தெரிந்தான். சிவந்த கூர்மையான கண்களுடன் ஈட்டியை ஏந்தியபடி வேட்டை நடனம் ஆடிக் கொண்டிருந்தான் நவஜோ வீரன். யாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தோழர் மட்டும் உணர்ச்சி வயப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *