ஸ்காபரோ வைத்தியசாலையின் நான்காம் மாடி கட்டிடத்தில உள்ள இருதய நோயாளிகளின் வார்டில் 421ம் அறையில் படுத்திருந்த இந்திரனுக்கு கடந்த மூன்று தினங்களில் நடந்தது எல்லாம் கனவு போலிருந்தது. முப்பது வயதுடைய இந்திரனுக்கு இந்த இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இருதயம் பாதிப்படையும்; என்று அவனது நண்பர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்ஜியோகிராம் செய்து பார்த்த பின்னர் இருதய வைத்திய நிபுணர் பிலிப்ஸ் சொன்னது இந்திரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“உமது இருதயத்தின தசைகள் வெகுவாக தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி இருதயத்துக்கு இரத்தம் போகும் மூன்று இரத்தக்குழாய்கள் வெகுவாக அடைப்புக்கு உள்ளாகியுள்ளது. அதி விரைவில் இருதய சிகிச்சை செய்யாவிட்டால் உமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்”
”ஏன் எனக்கு இந்த வியாதி வரவேண்டும்? பள்ளிக்கூடக் காலத்தில் நான் ஒரு விளையாட்டு வீரனாக பெயர் எடுத்தவன். ஓட்டம், வொலிபோல் , கால்பந்தாட்டம் எனப் பல விளையாட்டுகளில் பங்கு பற்றி பலரால் பாராட்டப்பட்டவன். அதுமட்டுமா நான் சாப்பிடும் உணவில் கூட கவனமாக இருந்தேன். அப்படி இருந்தும் நான் இந்த இளம் வயதில் இருதய நோயாளியாகிவிட்டேனே” கவலையுடன் தன் மனக்கவலையை தன்னருகே இருந்த ரூம் மேட் காந்தனிடம் முறைப்பட்டான்.
”சந்திரா மனிதனுக்கு எந்த நேரத்தில் எந்த நோய் தீடிரென வரும் என்பது தெரியாது. நீ ஊரில் இருக்கும் போது விளையாட்டு வீரனாக இருந்தது உண்மை. அதோடு உன் அம்மா வீட்டில் சமைப்பது பெரும்பாலும் மரக்கரி உணவு. இறச்சி சமைப்பதே கிடையாது. ஆனால் நீ கனடாவுக்கு நான்கு வருடத்துக்கு முன்னர் புலம் பெயர்ந்து வந்தபின்னர் உன் பழக்கவழக்கங்களும் சாப்பாடும் முற்றாக மாறிவிட்டது. அதை நீ ஒப்புக்கொள்ளவேண்டும் ”
“நீ எதைச் சொல்கிறாய் என்று எனக்கு தெரியும் மச்சான். நான் என்ன செய்ய?. நான் இங்கை வந்து ஒரு வருடத்திலை டீச்சராக இருந்த அப்பா ஹார்ட் அட்டாக்கிலை இறந்ததும் உனக்கு தெரியும். அதாலை குடும்பப் பாரம் என் தலையிலை வந்திட்டுது. கனடா வர எடுத்த கடன் கட்டியாக வேண்டும். எண்டை இரண்டு தங்கச்சி மாருடைய படிப்புக்கும் வருங்காலத்தில் திருமணம் செய்து வைக்கவும் காசு தேவை. ஊரிலை எங்களிடம் இருக்கும் பத்துபரப்பு காணியும் வீடும் எந்த மூலைக்கு போதும். உதெல்லாம் யொசித்து யோசித்து என் மூளை களங்கிப்போச்சு. கிடைச்ச வேலை எல்லாம் செய்யத் தொடங்கினன். பெரிய ரெஸ்டொரண்ட் ஓன்றிலை இரவிலை பீங்கான் களுவினேன். காலையிலை வீடு வீடாகப் போய் பேப்பர் போட்டன். பகலிலை பெக்டரியிலை வேலை. இப்படி ஒரு நாளைக்கு பதினெட்டு மணித்தியாலம் ஓய்வின்றி உழைத்தேன். அதனாலைத் தான் கனடா வந்த கடனை ஒருபடியாக தீர்க்க முடிந்தது . அடைவு வைத்த வீட்டடையும் காணியையும் மீட்க முடிந்தது , அனால் என்டை தங்கச்சிமார் கரை சேரும் மட்டும் நான் என் திருமண வாழககையை நினைச்சுப் பார்க்க ஏலாது”
“ உதெல்லாம் எனக்கு தெரிந்த விசயம் தான். முந்தி சிகரட் குடிக்காத நீ கனடா வந்தப் பிறகு தான் சிகரட் குடிக்க தொடங்கினாய். அதோடை கண்டது கடையதை சாப்பிட்டாய். அடிக்கடி குடிக்கவும் தொடங்கினாய். அதாலை நீ சாப்பிட்ட அளவு கூட கூடியதை நான் அவதானித்தேன். உனக்கு அதைப் பற்றி சொன்னால் பிடிக்காதோ என்று சும்மா விட்டுவிட்டேன். ”
“நீ சொல்லுறது அவ்வளவும் உண்மைதான் காந்தன். வேலைக் களைப்பும் மனதில் உள்ள குடும்பம் பற்றிய கவலைகளும் என் பழக்கங்களை மாற்றியது உண்மை. ஊரிலை என்னைப் பற்றி உனக்கு நல்லாய் தெரியும். ஆண் சகோதரங்கள் இல்லாத எனக்கு நீ அண்ணன் மாதிரி. உனக்கு என்னைத் திருத்த உரிமையுண்டு. ”
”கண் போன பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். உன் பழக்கததை பற்றி முந்தயே நீ சிந்தித்து நடந்திருக்கவேண்டும். இவைற்றை விட மனக் கவலை தான் உன்னை அதிகம் பாதித்திருக்கு. அதோடை இராப்பகலாய் ஓய்வில்லாமல் வேலை செய்து உன் உடமபை கெடுத்துக்கொண்டாய். உன் அப்பா இறந்தது ஹார்ட் அட்டாக்கில் , உன் தாத்தா இறந்ததம் அதே காரணத்தால் தான். அதனாலை நான் நினைக்கிறேன் உன் தகப்பன் வழி பரம்பரையில் மரபணுப்படி இரத்தத்தில கொலஸ்டிரோல் என்ற கொழுப்புச் சத்து அதிகம் இருக்குது போல எனக்கு தோன்றுகிறது. அதுவும் உனக்கு அட்டாக் வர காரணமாகயிருக்கலாம்”
”அதைத் தான் டாக்டரும் சொன்னார். அதனாலை நான் சாப்பிட்டிலை கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று. ”
அறைக்குள் வந்த நேர்சுக்கு இருவரும் கதைத்து கொண்டிருப்பது பிடிக்கவில்லை.
இவள் காந்தனைப் பார்த்து “இவர் உமது சகோதரனா? “ என்று கேட்டாள் .
“என் நண்பன் இவர். நாங்கள் இருவரும் ரூம் மேட்” பதில் சொன்னான் காந்தன்.
“அப்படியென்றால் இவரை டிஸ்டேர்ப செய்யாமல் பார்த்துவிட்டு போவது தான் நல்லது. நாளைக்கு மாலை அனேகமாக இவருக்கு சத்திரசிச்சை நடக்கலாம். அதனாலை இவர் அமைதியாக இருப்பது நல்லது.” சந்திரனின் கையில் இருந்து, பரிசோதனைக்கு இரத்தத்தை ஊசியனால் உரிஞ்சி எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் நேர்ஸ்
*****
”எனக்கு ஹார்ட் அட்டாக வந்து மூன்று நாளாகியும் மைதிலி என்னை வந்து ஆஸ்பத்திரியில் பார்க்கவரவில்லையே. இது தான் எஙகளது பல வருட காதலா?. ”
” சந்திரன். உனக்கு எதுக் கெடுத்தாலும் கவலைப்படுகிற குணம். மைதிலிக்கும் உனக்கும் ஊரிலை இருநதே காதல் இருந்ததம் அவள் கனடாவுக்கு உனக்கு முதல் வந்து படித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் இருப்பதும் எனக்குத் தெரியும். அப்படி வசதியான குடும்பத்தில அவள் இருந்தாலும் உன்னை மறக்காது உன்னோடு நட்பு கொண்டிருந்தாள். உனக்குத் தேவைபட்ட நேரம், காசும் கொடுத்து உதவியிருக்கிறாள். ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சொல்லியும் அவள் உன்னை பாக்க வரமால் இருந்திருக்கலாம். அதைப்பற்றி நீ திரும்பவும் திரும்பவும் யோசிக்காதே. முதலில் உன் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறட்டும். நான் அவளை எப்படியும் உன்னை பார்க்க கூட்டி வருவேன். நீ யோசிக்காமல் இப்போ ரெஸட் எடு. நான் நாளைக்கு நிட்சயம் லீவு போட்டிட்டு வருவன் ”
“அப்படியில்லை காந்தன். எனக்கு ஹார்ட் அட்டாக வர முன்னரே என்னோடை பேசுவதை குறைத்துக் கொண்டாள். ஒரு நாள் எனக்கும் அவளுக்கு நான் சிகரட் குடிப்பதைப் பற்றி வாக்குவாதம். நான் என் நிலையை சொல்லி அவளுக்கு புரியவைக்க நினைத்தேன். ஆனால் அவள் ஏற்கவிலலை. அதுனால் தானோ என்னவோஎன்னோடு பேசுவதை குறைத்துக்கொண்டாள்.”
”சரி சந்திரன் . எனக்கு இரவு வேலைக்கு போக நேரமாச்சு. நாளைக்கு எல்லாம் நல்லபடி நடக்கும் என்று நினைக்கிறன். சேர்ஜன் கூட சொன்னார் இந்தக் காலத்தில் இருதயத்தில சத்திரசிகிச்சை செய்வது பயப்படக் கூடிய விஷயமில்லை என்று. ஆனாலும் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து தசைகள் பாதிக்கப்பட்டதால் பத்து விகித ரிஸ்க் இருக்கிறதாம். நீ கனடாவில் இரிபது உன் அதிர்ஷடம். சத்திரசிகிச்சைக்கு ஒரு செலவும் இல்லை. ஊரில் இருந்தால் கதை வேறு ” . காந்தன் சொன்னான்
“ நீ சொல்வது உண்மை . ஆப்ரேஷன் முடிஞ்சு நான் குணமாகியாதும் நான் சேமித்தத காசில் ஆயிரம் டொலர்கள் வைத்தியசாலைக்கு கொடுக்கப் போகிறேன் .”
”நல்ல முடிவு .சரி நீ பலதை யோசித்து மனதை அலட்டிக்கொள்ளாமல் நல்லாகத தூங்கி எழும்பு. நான் வாறன் ” என்று கூறியபடி சந்திரனின கால்களை பெட்சீட்டால் மூடிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் காந்தன். அவன் போவதை கண்வெட்டாமல் கண்களில் கண்ணீர் தளும்ப பார்த்தபடி படுத்திருந்தான் சந்திரன்.
“காந்தன் முடிந்தால் வீட்டுக்க போனவுடன் மைதிலிக்கு போன் செய்து சொல்லு நாளைக்கு எனக்கு பை பாஸ் சேஜரி என்று”
காந்தன் சரி என்று தலையை ஆட்டிவிட்டு சென்றான்.
****
கோப்பாய் .கிராமத்தில் கணிதவாத்தியாயர் கணபதிப்பிள்ளையை தெரியாதவர்கள் இல்லை. “கணக்கு கணபதி” என்றால் பத்தாம வகுப்பு முதல் உயர்தர வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவரைத் தெரியும். கோண்டாவில் , நல்லூர் நீர்வேலி, கைதடி போன்ற கிராமங்களில் இருந்து அவரிடம் டியூசனுக்கு பல மாணவர்கள் வருவார்கள். அவருக்கு இருந்த மதிப்பின் அளவு, அவர் திடீரென ஹார்ட் அட்டாக்கிளால் இறந்த போது அவரது ஈமச்சடங்கில பங்கு கொண்ட மாணவர் தொகையே எடுத்துக்காட்டாகும். எந்த கடினமான கணக்கானாலும் ஒரு சிகரட் வாயில பற்ற வைத்து, புகையை உள்ளே இழுத்துவிட்டு நெஞ்சைத் தடவிய படி சிரமமின்றி செய்து முடிக்கும் திறமை உள்ளவர். அதைவிட கணக்கை இலகுவாக மாணவர்களுக்கு அவர் விளக்குவதே ஒரு தனி அழகு. ஜெயச்சந்திரன் இவரது மூன்று பிள்ளைகளில் மூத்தவன். மற்றைய இருவரும் பெண்கள். பெண்குழந்தைகளைப்போல் சந்திரன் படிப்பில் கெட்டித்தனத்தை காட்டாவிட்டாலும் விளையாட்டுத் துறையில் அவனது பெயர் ஓங்கி நின்றது. குடும்பத்தில் ஓர ஆண்குழந்தை என்ற காரணத்தால் கணபதி தம்பதிகள் மகனை கண்டித்து கட்டுப்பாட்டுன் வளர்க்கவில்லை. சந்திரனின் திடகாத்திரமான உடல் அழகிலும் , விளையாட்டுத் திறமையிலும் மயங்கி அவனை மைதிலி காதலிக்கத் தொடங்கினாள். சந்திரனின் தந்தையிடம்; கணக்கு கற்க வந்த அவளுக்கு சந்திரனின் முதல் சந்திப்பே காதலாக மலர்ந்தது. வசதியான குடும்பத்தில் பிறந்த மைதிலி சுமாரான அழகி. ஆனால் அவளில் ஏதோ ஒரு கவர்ச்சியைக் சந்திரனிடம் கண்டாள். அவர்கள் காதல் பெற்றோர்களுக்கு தெரியாமல் வளர்ந்ததிற்கு காரணம் மைதிலியின் வீடு கோப்பாயில் இல்லாமல் தைகடியில் இருந்ததே. ஆகவே இருவரும் வகுப்பு முடிந்தபின்னர் செம்மணிக்கருகே உள்ள கோவிலில் சந்தித்து பேசிக்கொள்வார்கள். மைதிலியின் பெற்றோருக்கு அவர்களின் காதல் தெரியவந்தபோது அவளை அங்கு வைத்திருந்தாள் பிரச்சனை பெரிதாகும் என்பதால்; கனடாவில அவள் மாமானிடம் அனுப்பனார் . மைதிலியின் பிரிவு சந்திரனைப் பாதித்தது. ஆனால் விதி அவர்களை திரும்பவும் கனடாவில் ஒன்று சேர்க்கும் என்று அவர்கள் இருவரும் நினைத்து பார்க்கவில்லை.
கனடா வந்த நான்கு வருடங்களாக வளராமல் முடங்கிக் கிடந்த காதல் மேலும் தளிர் விட்டு வளர்ந்தது. மைதிலி மாமனுக்கும் மாமிக்கும் அவளின காதல் விஷயம் தெரிந்தும் காட்டிக் கொள்ளவில்லை. அதுவே அவளுக்கு வசதியாக இருந்தது. தான் வேலை செய்த கொம்பெனியில சந்திரனுக்கு வேலை எடுத்து கொடுத்த பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தாள் மைதிலி . அவர்கள் நினைத்தது நடக்க முன்னர் அந்த சம்பவம் நடந்து விட்டது. ஒரு நாள் அதிகாலையில் கடும் குளிரில், பேப்பர் வீடுகளில் போட்டுகொண்டு வரும் போது திடீரென சந்திரனுக்கு நெஞ்சு வலி வந்தது. அவனது அதிர்ஷ்டம் அது நடந்தபோது ;வீட்டுக்காரர் ஒருவர் வெளியே வந்த பேப்பரை எடுக்கும் போது கவனித்துவிட்டார். உடனடியாக அம்புலன்சுக்கு அறிவித்ததால் அவன் உயிர் தப்பக்கூடியதாக இருந்தது.
*****
சந்திர சிகிசசை சந்திரனுக்கு நடந்து ஐந்து நாட்களாகியும் மைதிலி அவனை பார்க்க வராதது அவனுக்குப் ஆச்சரியமாக இருந்தத. காந்தன் தொலைபேசியல் தொடர்டபு கொள்ள முயற்சித்போது அவள் அவனோடு பேசுவதை தவிர்த்தாள். சந்திரச்சிகிச்சையின் போது மூன்று இரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளுக்கு பரிகாரம் காண வேண்டியிருந்தது . வைத்தியர்கள் எதிர் பாhத்த மாதிரி சிலமணி நேரங்களில சந்திரன் சுயநிலைக்கு வரவில்லை. அதோடு அவனது இரத்த அழுத்தமும் இருதயத்துடிப்பு சீராகவில்லை. அதனால் அவதானிப்புக்காக குறைந்தது ஒரு கிழமையாவது ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய நிலை சந்திரனுக்கு ஏற்பட்டது. தனக்கென சொந்தக்காரர் எவரும் இல்லாததால் காந்தனின உதவியையே சந்திரன் நம்பி இருந்தான். தனக்கு நடந்த சத்திர சிகிச்சையைப் பற்றி ஊருக்கு சொல்லவேண்டாம் என்று காந்தனை வேண்டிக் கொண்டான்.
அவன் மனதில் மைதிலி தன்னைத் தன் தேக நிலை காரணமாக ஒதுக்கிவைத்து விட்டாளா என்ற சந்தேகம் அவன் மனதில் ஒட்டிக் கொண்டது.
*****
சந்திரன் ஆஸ்பத்திரியல் இருந்து வீடு திரும்பும் போது பத்து நாட்களாகிவிட்டது. அவன் அறையை வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்காரர் ஒரு மலேசிய தமிழர். அவரது குடும்பம் அவனுக்கு பேருதவியாக இருந்தது காந்தனுக்கு ஆறுதலைக் கொடுத்தது. அதுவும் சாப்பாடு விஷயத்தில கவனமாக இருக்க வேண்டும். தினமும் அடிக்கடி மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவேண்டும். கவலையை தவிர்க்க வேண்டும். ஒரு மாதத்துக்கு கிழமைக்கு ஒரு தடவை குடும்ப வைத்தியரிடம் போய் காட்டவேண்டும என்று பல கட்டளைகளை ஆஸ்பத்திரி அவனுக்கு விதித்திருந்தது. குளிக்கும் போது காந்தன் உதவியாக இருந்தான். உணவை வீட்டுக்காரர் குடும்பம் தயாரித்து கொடுப்பார்கள எனச் சந்திரன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தன் தாய் பக்கத்தில் இருந்து கவனிப்பது போல் அவ்வீட்டுக்காரரின் மனைவி அவனை கவனித்தாள்.
மாதங்கள் மூன்று உருண்டோடின. அவனால் மைதிலியுடன தொடர்பு கொள்ளமுடியவில்லை. ஒரு நாள் காந்தனனிடம் தன்னை மைதிலி வேலை செய்யும் இடத்துக்கு கூட்டிப் போகும் படி சந்திரன் கெஞ்சிக் கேட்டான். அப்போது தான் காந்தன் சந்திரனிடம் உண்மையைச் சொன்னான்.
“ சந்திரா, உன் உடல் சீரான நிலைக்கு வருமட்டும் இந்த விஷயததை உனக்க நான் சொல்லாமல் தள்ளிவைத்தேன். எங்க உனது மன அழுத்தம் உடல் நிலையை பாதிக்குமோ என்ற பயம் எனக்கு.”
“ என்ன விஷயம் சொல்லு காந்தன். மைதிலி பற்றிதானே?. அவளைக் கண்டு பேசினாயா?”
“ ஆமாம் பேசினேன்”
“ எப்போ?”
“உனக்கு இருதய சத்திர சிகிச்சை நடக்க முன் “
“என்ன அவளுக்கு சொன்னாய்”?
: “ உனக்கு இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். உனக்கு ஏறடபட்ட ஹார்ட் அட்டாக்கினால் உன் இருதயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று விபரத்தை சொன்னேன். அவள் நான் உனக்கு நடந்ததை சொல்ல முன்னரே இந்த வீட்டுக்காரரின் மனைவி அவளுக்கு சொல்லியிருக்கிறாள். நான் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக்; கொண்டிருந்த அவள் சொன்ன வார்த்தைகள எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது”
“அப்படி என்ன சொல்லக் கூடாததைச் அவள் சொன்னாள். ?”
“உனது தேக நிலை இவ்வளவுக்கு பாதிப்படையும் என தான் எதிர்பார்க்கவில்லையாம். இனி உன்னால் திருமணம் செய்து தாம்பத்திய வாழக்கையை நடத்த முடியுமா என்ற சந்தேகம் தனக்கு வந்துவிட்டதாம். திரும்பவம் உனக்கு சில வருடங்களில் ஹார்ட் அட்டாக வர கூடிய சந்தர்ப்பமுண்டாம். இது போன்று தனக்கு தெரிந்த சினேகிதி ஒருத்தியின அண்ணனுக்கு நடந்ததாம். இருதய சத்திர சிகிச்சை நடந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் அவர் தான் காதலித்தவளை திருமணம் செய்தாராம். ஆனால் பாவம் அவள் திருமணம் செய்து இரண்டு மாதத்துக்குள் விதவையானாளாம். தான் தனது வருங்காலத்தை சிரழிக்க விருப்பப்படவில்லையாம். அதனால் தான், உனக்கும் தனக்கும் இடையே உள்ள காதலுக்கு முற்றுபுள்ளி வைக்க நன்றாக சிந்தித்தப்பின்னர் முடிவு செய்துள்ளாளாம்.”
“ மைதிலி என்ன விசர் கதை கதைக்கிறாள். என்றை ஹார்ட் சேர்ஜன் இதைப்பற்றி சத்திரசிகிச்சைக்கு முன்னர் என்னோடு பேசிய போது எனக்கு நல்ல விளக்கம் கொடுத்தார். அவர் இப்படி ஒரு நிலை எனக்கு திருமணத்தின் பின்னர் ஏற்படும் என்று சொல்லவில்லை இருதய சத்திர சிகிச்சைக்குப்பின்னர் திருமணம் செய்து குடும்பம் நடத்திவர்கள் பலர். திருமணமான பிறகு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவள் கணவனை ஒதுக்கி வைத்துவிடுவாளா?. எனக்கு வந்தது எயிட்ஸ் போன்ற வியாதியா?. அல்லது என் ஆண்மையை பாதிக்கும் நோயா?. ஏன் இப்படி மைதிலி விபரீதமாக சிந்தித்து முடிவெடுத்திருக்கிறாள். அப்போ என் மேல் அவள் கொண்டிருந்த காதல் தாம்பத்திய உறவுக்காகவா? “ஆவேசமாக சந்திரன் கேட்டான். அவனது முகம் கோபத்தால் சிவப்பதைக் காந்தன் கண்டான. அவனுக்கு பயம் வந்துவிட்டது.
“ சந்திரா. இதற்காகத்தான உனக்கு இவ்வளவு காலம் இதைச் சொல்லவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்லுகிறன். கோவிக்காதே. நீங்கள் இருவரும் பல வருடங்கள் காதலர்களாக இருந்திருக்கலாம். ஆனால் மைதிலியில் உனக்கு ஹார்ட் அட்டாக வரமுன்பே சில மாற்றறங்கள் ஏற்பட்டதை நான் அவதானித்தேன். அவள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விட்டு தூரத் தூர விலகிப் போகத் தொடங்கினாள். ஏன் தெரியுமா?”
“ தெரியாது சொல். “
“நான் விசாரித்து அறிந்ததில் அவளுக்கு அதிகாரியாக இருக்கும் கனேடிய வெள்ளையனுடன நெருங்கிய தொடர்புண்டாம். வெகு விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்களாம். உனக்கு ஏற்பட்ட இத் தேக நிலை பாதிப்பு அவளுக்கு காரணம் காட்ட உதவிவிட்டது. காதலை மதிக்க தெரியாத இப்படி ஒருத்தி உனக்கு மனைவியாக வரவேண்டுமா? நீயே சிந்தித்துப்பார்” எனறான் அமைதியாக காந்தன்.
“ சற்று நேரம் பேசாமல் இருந்த சந்திரன் எழுந்து போய் தன் கட்டிலுக்கு அருகே மேசையி;ல் இருந்த மைதிலியின் படத்தைக் கொண்டுவந்து, படத்தை வெளியே எடுத்து சுக்கு நூறாக கிழித்தான். தனது சோகத்தை அடக்கமுடியாது கட்டிலில போய் இருந்து அழத் தொடங்கினான்.
காந்தனுக்க அவனைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. காந்தனின் மனதுக்குள் சந்திரன மைதிலியின் காதல் சிக்கலில் தான் ஏன் அகப்பட்டுக் கொண்டு செய்வது என்ன என்று தெரியாமல பரிதவிக்கிறேன் என்று சிந்தித்தான். மைதிலியை சந்திரனிடம் இருந்து பிரித்துவிட்ட பாவத்திற்கு ஆளாகிவிட்டேனா? பேசாமல அறையை விட்டு அவன் வெளியேறினான்.
*****
சத்திர சிகிச்சை முடிந்து நான்கு மாதங்களாகியும் மைதிலியை சந்திக்கவோ அவளோடு பேசவோ சந்திரன் முயற்சி செய்யவில்லை. அவ்வளவுக்கு அவள் மேல் அவனுக்கு கோபம். இப்படியும் ஒரு பெண்ணா? அதுவம் இவ்வளவு காலம் காதலித்துவிட்டு என் உடல் நிலையை காட்டி காதலை உதறித்தள்ளுபவளா?. அப்போ இவளை திருமணம் செயடத பின்னர் எனக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்னை விட்டு வேறு ஒருவனை உடலுறவுக்காக போய் விடுவாளா? சீ என்ன மன நிலை கொண்ட பெண் இவள். சிந்தித்தவாரே ஆஸ்பத்திரியில உள்ள இருதய வைத்திய பகுதிக்குச் சென்று வைத்தியரைக் கண்டு , இரத்த பரிசோதனைகளை முடித்து விட்டு வீடு திரும்ப லிப்டில் வந்து ஏறிய போது அவன் எதிர்பார்க்காத வாறு மைதிலியின் மாமியையும் மாமனையும் கண்டான். அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்ததால் அவனுக்கு அவர்களைத் தெரியும்.
“என்ன சந்திரன் ஹார்ட் ஒப்பிரேசனுக்கு பிறகு நல்லாய் மெலிந்து விட்டீர். சாப்பாட்டில் கவனம் போல இருக்கு” மைதிலியின மாமன் கேட்டார்.
“ ம் ” என்றான் சுருக்கமாக சந்திரன். அவரோடு பேச அவன் விரும்பவில்லை
லிப்ட்டை விட்டு வெளியே வந்த போது “ ஏன் சந்திரன. மைதிலியை வந்து பார்க்க வரவில்லை?. அவள் மேல உமக்கு அப்படி என்ன கோபம்?” மாமி கேட்டாள். அவளது கேள்வி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு விஷயம் தெரியாதா?
“ நான் ஏன் அவளை பார்க்க வேண்டும்?. எனக்கும் அவளுக்கும் இருந்த உறவு தான் எப்பவோ முடிந்த கதையாயிற்றே?”
“ என்ன சொல்கிறீர் சந்திரன்?. மைதிலிக்கு நடந்தது உமக்கு தெரியாதர?” மாமா விசனத்துடன கேட்டார்.
“ எனக்கு தெரிய வேண்டிய அவசியமிலலை. அவள் என்னை ஏமாற்றி விட்டாள். எனக்கு ஹார்ட் அட்டாக வந்து சந்திர சிகிச்சை செய்த பிறகு ஒரு நாளும் அவள் என்னை பார்க்க வரவில்லை. அதோடு என் நண்பன் சொன்னான் அவளுக்கும் அவளோடு வேலை செய்கிற ஒரு வெள்ளையனுக்கும் தொடர்பு இருப்பதாக. அவள் விருப்படி அவனை திருமணம் செய்து கொள்ளட்டும்.”
“ அவளுக்கு திருமணமா? என் நீ சொல்கிறீர்?. அதுவம் தன் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவளுக்கு கலியாணமா?
சந்திரனுக்கு மாமி சொன்ன வார்த்தைகள் பெரும் தாக்கத்தைக் கொடுத்தது.
“என்ன நீங்கள் சொல்லுகிறீர்கள்?
“ஆமாம் அவளுக்கு லூக்கேமியா என்ற இரத்த புற்று நோய் வந்து ஆற மாத காலமாயிற்று. இவ்வளவு காலம் பிழைத்திருப்பதே ஆச்சரியம். இப்போ நோய் முற்றி விட்டது. இன்னு ஓரிரு வாரங்கள் தான் அவள் வாழ்வாள் என டாக்டர்கள் சொல்லி விட்டர்கள். 28 வயதில் அவளுக்கு இந்தநோய வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. அவளது பெற்றோர்களுக்கு கூட நாங்கள் அறிவித்து நாளை ஊரில் இருந்து வருகிறார்கள். ஆறாம் மாடியில் உள்ள புற்று நோய் வார்டில அவனை பார்த்துவிட்டு இப்ப தான் வருகிறோம். அவளைப் பார்த்தால் நீர் அடையாளம் கூட காணமாட்டீர். அவ்வளுவுக்கு மெலிந்து எலும்பும் தோலுமாகிவிட்டாள். யாரோடையும் பேச மறுக்கிறாள். உமக்க அறிவிக்க வேண்டாம் என்று எப்பவோ எஙகளுக்க சொல்லிவிட்டாள். அதுவம் நீர் இருக்கிற நிலையில் உமது உயிருக்கு ஏதும் பிரச்சனை வரக்கூடாது எனபதற்காக”
“ அப்போ எனக்கு ஹாhட் அட்டாக் வர முன்னரேர அவளுக்கு தனது வியாதி பற்றி தெரியுமா?. அதனால் தானா அவள் என்னை விட்டு விலகி விலகிப் போனாள்?”
“ ஆமாம் தம்பி நீர் சொன்ன திருமணக் கதையெல்லமே அவள் உமது நண்பனுக்கு சொன்ன கட்டுக் கதை. அப்படியென்றால் சிறிது காலம் வாழப் போகும் தன்னை நீர் மறப்பீர் என்பது அவள் எண்ணம். அவளுக்குத் தெரியும் உமக்கும் தனக்கும் உள்ள காதல் அழிக்கமுடியாத காதல் என்று ” மைதிலியின் மாமா சொன்னார்
“ அய்யோ மைதிலி! உன்னை நான பிழையாக நினைத்துவிட்டேனே. உனக்கு என்ன வியாதி இருந்தாலும் உனக்கு தாலி கட்ட நான் சம்மதித்ததிருப்பேனே. என் காதல் புனிதமானது ? என்று வாய் விட்டு சந்திரன் அழத்தொடங்கினான்.
“ வாரும் சந்திரன. நாங்கள் போய் மைதிலியை வோர்ட்டில பாhப்போம். அப்போது தான் உம் மனசும் ஆறும். அவளம் சந்தோஷப்படுவாள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள்.”
சந்திரன் மறு பதில் பேசாமல் மைதிலியின் மாமனுடனும் மாமியுடனும் திரும்பவும் ஆறாம் மாடிக்குப் போக லிப்டுக்குள் ஏறினான்.