காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 4,118 
 
 

பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

இரவு தீபக் வீடு வந்த போது மணி ஏழாகி இருந்தது. வேதவல்லி ஹால் சோஃபாவில் மகனுக்காக காத்திருந்தாள்.

“வாப்பா முகமெல்லாம் வாடிக் கிடக்கு. அதிக வேலையா?” என பக்கத்தில் வந்தமர்ந்த தீபக்கின் கையைப் பிடித்தாள்.

தீபக் புன்னகைத்து “கொஞ்சம் அதிகம்தான். இத்தனை நாள் கணக்கை எடுத்து பார்த்தேன். ஒரே குளறுபடி. மெதுமெதுவா சரியாகும். ஓகே சாப்பிட்டீங்களா?”

வேதவல்லி “இல்லேப்பா. வா சாப்பிடலாம்.”

“நான் ஃபிரஷ்ஷாயிட்டு வந்துடுறேன்.” என்று எழுந்து தன் ரூமிற்குப் போனான்.

இரவு சாப்பிட அனைவரும் உட்கார்ந்தனர். சுடச்சுட ஆப்பம் தேங்காய் பால், சட்னி, சாம்பார் என மனமனத்தது. தீபக் ரசித்து சாப்பிட்டான். காசி ” அவுட்லட் ஸ்டோருக்கு புதுசா அக்கவுண்டண்ட் அப்பாயிண்ட் பண்ணச் சொன்னியாம். அதைத்தான் ஷாம் பாக்குறானே. புதுசா ஒருத்தரை வேலைக்கு வச்சா சம்பளம் கொடுக்க வேண்டாமா? நமக்கு எதுக்கு வீண் செலவு?”

தீபக் நிமிர்ந்து “ஆபீஸ் விஷயத்தை ஆபீஸில்தான் பேசணும். நாளைக்கு ஆபீஸில் கேளுங்க.” என முகத்தில் அடித்தது போல பேசினான். காசி, ஷாம், ரேணு முகம் மாறியது.

இரவு மொட்டை மாடியில் நின்று ஜில்லுனு வீசும் காற்றை அனுபவித்தபடி தீபக் நின்றிருந்தான். மெலிதாய் கொலுசு ஒலி கேட்டது. பின்னால் ரேணு வந்து இவன் அருகே மொட்டை மாடி சுவரை இரு கைகளாலும் பிடித்தபடி எதிரே தெரியும் மலைகளின் அழகைப் பார்த்தாள். நிலவின் ஒளி அவள் மேல் பட்டு அவளை அழகாய் காட்டியது. ரேணு அவ்வளவு அழகில்லை என்றாலும் பார்க்க லட்சணமாக இருப்பாள். “என்ன ரேணு? தூங்கப் போகலை.” தீபக்.

ரேணு பெருமூச்சுடன் “தூக்கம் வரலை மாமா. மனசெல்லாம் ஒரே பாரமா இருக்கு.”

தீபக் ஆச்சர்யமாக “பாரமா? ஏன்?”

“நீங்க கண்டுக்க மாட்டேன்றீங்க.”

“நான் என்ன கண்டுக்கணும்?”

“போங்க மாமா. தெரியாத மாதிரி கேட்கிறீங்க?”

“நிஜமா எனக்குப் புரியலை”

“ஓகே என்னைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“நீ என் மாமா பொண்ணு. சின்ன வயசுல நீ, ஷாம், நான் எல்லோரும் விளையாடி இருக்கோம்‌.”

ரேணு சிணுங்கலாய் “மாமா! ஒரு பொண்ணா என்னைப் பத்தி சொல்லுங்க”

தீபக் “உனக்கென்ன ஒடிசலா அழகா இருக்கே. நல்லா சமைப்பேன்னு அம்மா சொன்னாங்க. தட்ஸ் ஆல்.”

ரேணு “உங்களையே நினைச்சுகிட்டுருக்கேன் மாமா. எனக்கு நீங்கன்னா உயிர். நீங்க எப்ப வருவீங்க எப்ப வருவீங்கன்னு காத்திட்டு இருந்தேன். இன்னும் சொல்லப் போனால் வெளிநாட்டில யாரையும் காதலிச்சிடக் கூடாதேன்னு சாமி வேண்டிட்டுருந்தேன்.”

தீபக் விநோதமாக அவளைப் பார்த்து சிரித்து “ஏய் நீ என்ன இப்படி பேசறே?”!!

ரேணு கண்கள் காதலில் கிறங்க “நீங்க இங்க வந்ததும் ரகசியமா காதல் பார்வை பார்ப்பீங்க . சீண்டுவீங்க. கிண்டல் கேலி பண்ணுவீங்க. தொட்டுப் பேசுவீங்க. இப்படியெல்லாம் கனவு கண்டிருந்தேன்.”

தீபக் “உன் மனசில் இப்படி ஒரு ஆசையா!!? சரி மனசை அமைதியா வச்சுகிட்டு போய் தூங்கு.”

ரேணு பதில் பேசாமல் கிளம்பியவள் ஓடி வந்து தீபக்கை பின் பக்கமாக கட்டி அணைத்தபடி “மாமா எனக்கு நீங்க வேணும். என்னை மறந்திடாதீங்க.” என்று கூறியதும் தீபக்கிற்கு நைனிகா நினைப்பு வந்தது.

அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி “போ போய் தூங்கு.” என்று அனுப்பினான்.

மறுநாள் காலை அழகாய் விடிந்தது. ஆதிரா குளித்து முடித்து அழகான பிங்க் நிற பாவாடை, ப்ளவுஸ் நாவல் பழ நிறத்தில் தாவணியும் உடுத்தி தலை வாரி பின்னல் போட்டு பளிச் முகத்தில் பவுடர் பூசி புருவ மத்தியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்து கண்மை பூசியதும் அந்த அழகான கண்கள் மேலும் எடுப்பானது. அப்பாவுடனே சாப்பிட்டு தன் மார்க் ஷீட் அடங்கிய ஃபைலை மார்போடு அணைத்தபடி அப்பா ஸ்கூட்டியில் அப்பா தோளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

கனகம் “இதப்பாருடீ. வாயாடாதே. கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லு. பெரிய முதலாளி ரொம்ப நல்ல மனுஷன். இப்ப சின்ன முதலாளி இருக்காராம். அவர் எப்படியோ தெரியாது. பார்த்து நடந்துக்க. உன் அதிகப்பிரசங்கிதனத்தை அங்கே காட்டினா வேலை எதுவும் கிடைக்காது.”

ஆதிரா “ஆல் தி பெஸ்ட்ங்கிறதை ஷார்டா சொல்லாம நீதான் நீட்டி முழக்கிறே.”

பாலு “சரி சரி கிளம்புறோம்”.

கனகம் “போயிட்டு வாங்க.”

ஸ்கூட்டியில் பயணித்தனர்.

எஸ்டேட் ஆபீஸ் வந்தனர். மானேஜர் அறைக்கு வந்த போது அங்கே ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார்.காசியும் இருந்தார் இவர்களைப் பார்த்ததும் மானேஜர் “வா பாலு இதுதான் உன் மகளா?”

பாலு பவ்யமாக “ஆமா ஸார்”.

மானேஜர் ஆதிராவிடம் “உன் பேர் என்ன?”

“ஆதிரா”

“என்ன படிச்சிருக்கே ?”

“பி.காம்.”

“அக்கவுண்ட் பார்க்கத் தெரியுமா?”

“அதுதானேவேலை ?”

“என்னம்மா ரஃப்பா பேசறே !?” காசி

“பி.காம் படிச்ச என்கிட்டே அக்கவுண்ட்ஸ் தெரியுமான்னு கேட்டா என்ன அர்த்தம்? தெரியலைனாலும் ட்ரெயினிங் கொடுங்க. வேலை கொடுத்தா சின்ஸியரா இருப்பேன். மற்றபடி ஏறுக்குமாறா பேசினா நானும் பதில் சொல்லுவேன்.”

மானேஜர் ஆச்சர்யமாக பார்த்தார். பாலு, ஆதிராவிடம் “அப்படி பேசக்கூடாது. உன்னைவிட பெரியவங்க. இப்படி பேசினா எப்படி வேலை கொடுப்பாங்க?” என கிசுகிசுப்பாய் அதட்டினார்.

ஆதிரா தைரியமாக “நான் சரியாத்தான்பா பேசறேன். என்னைப் பத்தி தெரியாது இல்லப்பா அதான் சொல்றேன். இதுல இவங்க மதிப்பு கெட என்ன இருக்கு? தன்மானம்ங்கிறது ஆணுக்கும் மட்டுமில்லே பெண்ணுக்கும் இருக்குப்பா”

மானேஜர் உள்பட காசியும் அசந்து போனார்கள்.

மானேஜர் புன்னகையுடன் “நீ சொல்றது சரிதான். ஆனா வேலை பார்க்கிற இடத்துலே பணிவாக நடக்கணும் இல்லையா?”

ஆதிரா “கண்டிப்பா. ஆனா சம்பளத்திற்கு வேலை பார்க்கிறதற்காக அடிமை மாதிரி எதுனாலும் என்கிட்ட பேசினா அது முதலாளியாக இருந்தாலும் பதில் சொல்லுவேன். மத்தபடி வேணும்னே பிறரை காயப்படுத்தற மாதிரி பேச மாட்டேன்.” மானேஜர் யோசித்தார். ‘இந்தப் பெண் பட்பட்டென்று பேசுகிறதே. நம்ம ஆபீஸிற்கு சரிபட்டு வருமா?’ ஆனால் காசிநாதன் மனதுள் ‘தீபக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட இவள் தான் சரி. தீபக்கின் திமிரும் அடங்கும். இவளை பட்டை தீட்டி தீபக்கை அக்குவேரு ஆணிவேராக ஆக்கிவிட ஆதிரா எனும் இந்த கத்திதான் சரியானது.’

காசி “மானேஜர் ஆதிராவை அப்பாயிண்ட் பண்ணுங்க.”

மானேஜர் “M.D இவங்களை பார்க்கணும்னு சொல்லிருக்காரு.”

“சரி பார்க்கட்டும். ஆனா வேலை இந்தப் பொண்ணுக்குத்தான். நான் தீபக்கிடம் பேசுறேன்.” ஆதிரா முகத்தில் வெளிச்சம். புன்னகையுடன் “தேங்க்யூ ஸார்.”

பாலு கை கூப்பி நன்றி தெரிவித்தார். மானேஜர் தயக்கமாக “ஓகே பாலு நீங்க போங்க. நான் சிவகுரு, ஆதிரா ரெண்டு பேரையும் M.D அறைக்குக் கூட்டிப் போறேன்.” என்றதும் பாலு சரியென்று தலையாட்டி விட்டு ஆதிராவின் கையைப் பிடித்து இழுத்து சற்று தள்ளிப் போய் “ஆதி பவ்யமாக பேசு. முதலாளிக்கு சின்ன வயசு. உன்னை மாதிரி அவுகளுக்கும் கோவம் வரும். வேலை வேணும்னு நினைச்சேன்னா பார்த்து நட. சரி நான் கிளம்பறேன். நீ வீட்டுக்குப் போயிடு.”

ஆதிரா “சரிப்பா. நான் பார்த்துக்கிறேன்.” என்றதும் பாலு கிளம்பி போனார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *