சர்மிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கதறி அழவும், கத்திப்பேசவும் முடியாமல் திணறினாள். சற்று நேரத்தில் தண்ணீரைக்குடித்து ஆசுவாசப்படுத்தியவுடன் பேச்சு கர கரவென வந்தது. “துரோகம், நட்புக்குத்துரோகம், பாவி, படு பாவி” என தனக்குத்தானே பேசிக்கொண்டவள், “நாசமா….”என வார்த்தை வெளிப்பட்டபோது நாக்கைக்கடித்து பேச்சை நிறுத்தினாள்.
“நல்லா இருக்கட்டும். இருந்துட்டு போகட்டும். ஏமாத்திட்டானே…. என்னை மறந்துட்டானே…. என் கிட்ட என்ன குறை? உலக அழகி ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கேன்னு சொல்லுவானே… உன்னக்கட்டிக்கப்போறவன் அதிரஷ்டசாலின்னு சொல்லுவானே… அப்புறம் எதுக்கடா என்னை விட்டுட்டு இன்னொரு பெண்ணோட… நல்லா இருக்கட்டும். இருந்துட்டு போகட்டும்” என புலம்பியவள் மனச்சோர்வால் உடலும் சோர்வுற உறங்கிப்போனாள்.
சரண் கல்லூரியில் உடன் படித்த சக மாணவன். வகுப்பு துவங்கிய முதல் நாளே சர்மியின் முதல் நட்பின் பார்வையில் விழுந்தவன். சர்மி எந்த வேலை கொடுத்தாலும் மறுக்காமல் செய்வான். நன்றாகப்படித்து முதல் மதிப்பெண் வாங்குவான். எந்தப்பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான். தண்ணி, தம், கஞ்சா, என எந்தப்பழக்கமும் கிடையாது. உணவு கூட சுத்த சைவம் தான். முட்டை சைவம் என கொடுத்தாலும் பிடிவாதமாக சாப்பிட மாட்டான். நெற்றியில் திருநீறு பூசி, சந்தனம், குங்குமம் வைத்திருப்பான்.
” டேய் சாமியார் இங்க வாடா…சாரி இங்கே வாங்க.. சாப்பாட்ல தான் சைவம்னா படிப்புலயும் சுத்த சைவமா இருந்தா எப்படி? படிப்புலயாச்சும் ஒரு முட்டை வாங்கலாமில்ல” என சக மாணவர்கள் கலாய்த்தாலும் கோபப்படாமல் “ட்ரை பண்ணறேன் சகோ…” என கூலாக கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவான். பெண்கள் மத்தியில் ‘நல்லவன்’ எனும் பட்டம் வாங்கியவன்.
‘நம்பிக்கை ஏற்படுத்தி துரோகம் செய்தால் அது நம்பிக்கைத்துரோகம். ஒரு துரோகியை நான் மட்டும் நம்பியது என்னோட குற்றம். அதனால் இதை துரோக நம்பிக்கைன்னு தான் சொல்லனம்’ என தோழிகளுடன் கண்ணீர் வடிய சோகமாகப்பேசிக்கொண்டிருந்தாள் சர்மி.
“அவன் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிறதா எப்பவாவது வாக்கு கொடுத்தானா?
“இல்லை”
“உன் கூட காலேஜ் தவிர எங்காவது ஊர் சுத்த வந்தானா?
“இல்லை”
“முத்தம் கித்தம்னு ஏதாவது குத்தம் பண்ணிட்டானா?
“இல்லவே இல்லை”
“அப்புறம் எப்படிடி அவன துரோகின்னு சொல்லறே…?”
“இங்கே பல பேர்….ஏன் நீ கூட எங்கள லவ்வர்ஸ் னு சொன்னத என் காதார கேட்டேனே….”
“ஊர் பல விதமா பேசத்தான் செய்யும். உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி வேலை செஞ்சிருக்கனம். நீ இல்லாம அவனில்ல. அவனில்லாம நீயில்லைன்னு டீப் லவ் இருந்து, இப்ப அவனுக்கு வேற பெண்ணோட எங்கேஜ்மெண்ட் ஆயிருந்தா நீ சபிக்கலாம், கவலைப்படலாம், கல்யாணத்தையே நிறுத்தலாம். வெளில நட்பா பழகிட்டு, உன் மனசுல மட்டும் கற்பனையா காதலை வளர்த்துட்டு, அவனுக்கு வேற பெண்ணோட முடிவான பின்னாடி, ‘நான் காதலிக்கறேன்’னு போர்க்கொடி தூக்கி கல்யாணத்த நிறுத்த முயற்ச்சி பண்ணறது நீ அவனுக்கு செய்யற…,ஏன் நட்புக்கு செய்யற துரோகம். அப்புறம் உனக்குத்தான் கேவலம். உன்ன பொண்ணு கேட்டு யாரும் வராம பண்ணற, உன்னோட தலைல நீயே மண்ணை வாரிப்போட்டுக்கிற முட்டாள் தனம்” என தோழி தியா பேசியதைக்கேட்ட பின் உண்மை நிலையைப்புரிந்து, பின் விளைவுகளை சிந்தித்து சாந்தமாகி, அலை பேசியை எடுத்து சரணுக்கு வாழ்த்துச்சொன்னாள் சர்மி.