தனயன் தனுவின் தாடிவைத்த, சோகமே உருவான முகம் கண்டு தாய் தேனு மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள். தன் சகோதரனின் மகள் அனு அழகிலும், அறிவிலும், அன்பாக, பண்பாக நடந்து கொள்வதிலும் அனைவரின் விருப்பத்துக்கும் பாத்திரமானவள் தான். அவளைத்தன் மருமகளாக்கிக்கொள்ள தேனுவுக்கும் ஆசை தான்.
தன் மகன் தனுவுக்கோ சிறுவயதிலிருந்து பெரியவர்கள் சொல்லி, சொல்லி மாமன் மகள் அனுவை தன் மனைவியாகவே எண்ணி வாழத்துவங்கியவனுக்கு, அவளை அவளின் தந்தை தன் வசதிக்கு மேலான இடம் வரவே அங்கே சம்மதம் பேசி நிச்சயம் செய்து விட்டார்.
அனுவுக்கு நேற்றையும், நாளையும் விட நிகழ்கால நடப்பினடிப்படையில் வாழ வேண்டும் எனும் எண்ணப்போக்கு உண்டு என்பதால் தந்தை காட்டிய வழியில் பயணம் செய்ய ஆயத்தமாகி விட்டாள்.
தனுவுக்கு, ‘தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற எண்ணம் மனதில் அதிகரிக்க, அதுவே வெறியாக மாறியது. திட்டம் தீட்டினான். அதற்கு இன்னொருவரின் துணை தேவைப்படவே தன் நண்பன் கனுவின் வீட்டிற்குச்சென்று வந்த விபரம் சொன்னான்.
கனு, தனுவிடம் ‘முதலில் சாப்பிடு’ என உணவிட்டான். பின் அமைதியாக கட்டிலில் தன் தனியறையில் அமர்ந்து, தலையணையை மடியில் வைத்தபடி “இத பாரு தனு, நீ இப்ப சாப்பிட்ட சாப்பாடு உனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. ஆனா தினமும் இங்கே தங்கி சாப்பிடமுடியாது. படிக்காத, ஏழையான, கணவனை இழந்த உன் அம்மா கூலி வேலைக்கு போய் இவ்வளவு சுவையான உணவை தினமும் உனக்கு கொடுக்க முடியாது. பண்டிகைக்கு தான் கொடுக்க முடியும். ஆனா உன் அம்மா சாப்பாடும் உயிர் வாழ தகுதியானது தான். நீ படிச்சு முன்னேறி உழைச்சா இதை விட சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். பசியில் உள்ள பலபேருக்கு ருசியான உணவை உன்னால் இலவசமாக வழங்கவும் முடியும். பூரி முடிஞ்சுதுன்னு சொன்ன சர்வர் மேல கோபப்படாம, சப்பாத்தி சாப்பிடலாம்னு முடிவெடு. இரண்டுடைய மூலப்பொருளும் ஒன்னுதான்”.
“…………”
“உன் மாமா பொண்ணு அனு மாதிரி பல பெண்கள் இருக்காங்க. ஏன், அதை விட சிறப்பா இருக்காங்க. ஏழை வீடுகளில் அழகான, அன்பான, அறிவான பெண்களே இல்லையா? நீ செல்லும் பாதையில் சென்று கொண்டேயிரு. பலரை சந்திக்கலாம், நேசிக்கலாம். ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒன்றுக்காகவே போராடுபவன் அறிவாளி அல்ல, கிணற்றுத் தவளை” என்ற தன் நண்பன் கனுவின் புத்தனைப் போன்ற ஞானப்பேச்சால் மனம் மாறிய தனு, தன்னுள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தூர எறிந்துவிட்டு, பூங்கொத்து வாங்கிக்கொண்டு தன் மாமனுடைய வீட்டிற்குச்சென்றான், தன் மாமன் மகள் அனுவுக்கு திருமணம் நிச்சயமானதுக்கு வாழ்த்துச்சொல்ல.