கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 15,106 
 
 

அ,ஆ, (அன்பே, ஆருயிரே)

எப்படி இருக்கேங்க? என்னை யாருனு தெரியுதா? மொட்டை மாடி, மொட்டை மாடி. இப்போ? இன்னும் தெரியலையா? சரி, எதுக்கு சஸ்பென்ஸ், பில்டப் எல்லாம். நான் உங்க பக்கத்து வீட்டுலே இருக்கேன். உங்களுக்குக் கூட என்னை நல்லாத் தெரியும். அடிக்கடி பார்ப்போமே. அதாவது, வந்து….நான் உங்க காதலனாக வர ஆசைப்படறேன். அதான் இந்த லெட்டர். என்னடா, நாம பக்கத்து வீட்டுலே குடி வந்து முழுசா 2 மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள எப்படி லவ் வந்ததுனு யோசிக்காதீங்க. எத்தனை படம் பார்த்திருப்பேங்க, அதுலே லவ் அட் பர்ஸ்ட் சைட் வந்ததில்லை, அதான்னு நினைக்கிறேன். எனக்கே தெரியலை, எப்படினும் புரியலை. உங்களைப் பார்த்தவுடனேயே நீங்க தான் எனக்கு எல்லாம்னு தோணுச்சு, ஏதோ விட்ட குறை, தொட்ட குறை போல. நீங்க என் மனசுக்குள்ளே புகுந்து, என் இதயத்தையும் வயித்தையும் ஒரு கலக்கு கலக்குறீங்க. சாப்பிட முடியலே, தூங்க முடியலே,ஒரு படம் போக முடியலே. பிரண்ட்ஸோட அரட்டை அடிக்க முடியலே. அதான் என் காதலை வெளிப்படுத்தி ரெண்டிலே ஒன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். தயவுசெய்து நோ மட்டும் சொல்லிடாதேங்க. வெட்கமா இல்லை, மூளையில்லையானும் கேட்காதேங்க. கண்ணுக்குத் தெரியாத பொருள் பற்றியோ, இல்லாத விஷயத்தைப் பற்றியோ டிஸ்கஸ் பண்ண விரும்பலை. இது வரை லவ் லெட்டர் எழுதினதில்ல, இதான் முதல் தரம், ஸோ தவறு இருந்தாலோ, கோர்வையா இல்லாம இருந்தாலோ மன்னிச்சுக்கங்க.

வித்யா, நான் மொட்டைமாடியில் இருக்கும் போது, நீங்க உங்க வீட்டு மாடி ஜன்னல் வழியா என்னைப் பார்ப்பேங்க. ஒவ்வொரு தரம் நீங்க பார்க்கும் போதும் என் மனசுலே ஒரு ஷாக்(இருக்காதா பின்னே, சூப்பர் பிகர் நீ, என்னை லுக் விட்டா) வைத்த கண் வாங்காமல் நீங்கள் என்னை வெறித்துப் பார்க்கும் அழகே தனி. எனக்கே ஆச்சர்யம், நீங்கள் என்னை வெறித்துப் பார்க்கும் அளவிற்கு நான் அத்தனை அழகா என்று, நானும் மன்மத ராசா என்பதை உங்கள் பார்வையிலிருந்து புரிந்து கொண்டேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் உங்க கூட சுவிட்சர்லாந்து, நியுசிலாந்துலே இருக்கிற எல்லா சந்து, பொந்துகளிலும் டூயட் பாடிட்டு வந்தேன். ஏன்னா இப்போ அதானே பேஷன்.

பேசாம நீங்க என் காதலை ஏத்துக்கிறது தான் உங்களுக்கு நல்லது. ஏன் சொல்றேன்னா சமீபத்தில் வெளியான ‘7 ஜி ரெயின்போ காலனி’ படம் பார்த்தேங்கனா, அதுலே வரும் ஹீரோ தாடி வச்சுக்கிட்டு கடைசி வரை ஷேவ் பண்ணியிருக்க மாட்டான். நானும் அது மாதிரி தான் தாடி வச்சுருக்கேன். ஹீரோயின ஹீரோ விழுந்து விழுந்து காதலிப்பான், காதலி லவ் பண்ணலைனு தெரிஞ்சும், ஏன் அவ அவனைச் செருப்பாலே அடிச்சும் லவ் பண்ணச் சொல்லி கடைசி வரை கால்லே விழுந்து கெஞ்சுவான். அந்தத் தன்னம்பிக்கை எனக்குப் பிடிச்சது. படம் முழுக்க பொறுப்பில்லாதவனாக வரும் அந்த ஹீரோ தான் என் வாழ்க்கைக்கும் ரோல் மாடல். அவ்வளவு ஏன்? நீங்க கல்யாணம் ஆகிப் போனாக் கூட உங்க மனசுலே இடம் கேட்டுக் கெஞ்சுவேன். ஸோ நோ சொல்லக் கூடாது.

“என்னுயிரே,
நீயின்றி நானில்லை,
நானின்றி நீயுண்டு,
வானின்றி மேகமில்லை,
மேகமின்றி வானுண்டு.”

உங்களாலே கவிஞனாகிட்டேன் பாருங்க, பத்தாம் வகுப்பு மாதத்தேர்வுலே 10 தரம் பெயில் ஆனா நான் கவிதை சொல்றேன்னா என்னோட அவசரம் உங்களுக்குப் புரியுதா? அவசரத்தில் முளைத்தாலும் காதல் பூ பூ தான், பெயின் பெயின் தான்.

நான் உங்களைக் கடைசி வரை கைவிட மாட்டேன். உங்களுக்கு ஒண்ணுனா நான் வேலைக்குக் கூடப் போகாம வீட்டிலேயே இருப்பேன்.

உங்கள ஒருமையில் பேசறேன்னு தப்பா நினைக்காம உரிமையில் பேசறேன்னு நினைச்சுக்கங்க.

நான் உனக்காக இருப்பேன், உனக்காக இறப்பேன். அதுக்காக சாகச் சொல்லிடாதே, உங்கூட வாழணும். அதுவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள்.

இப்போ என் குழந்தை மனசு, என் பரிசுத்தமான காதல் உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீயும் லவ் பண்றியோனு தோணுது, அப்படி இல்லைனா இந்த இதயம் நொறுங்காத மாதிரி உன் பதிலைச் சொல்லு. ஏன்னா இந்த இதயத்தில் நீ தான் இருக்கே.

(ஒரே ஒரு பின் குறிப்பு: என்னை-என் காதலைப் பிடிக்கலைனா டைரக்டா என்கிட்டே சொல்லிடு, அப்பா, அம்மாகிட்ட சொல்லி மானத்தை வாங்கிடாதே. எதுவா இருந்தாலும் நமக்குள்ள தான். புரிஞ்சதா?)

சரி,இதோ வருகிறேன், உன்னைத் தேடி, உன் காதலை நாடி, உன் நினைவு தந்த சுமையைக் கவிதைக்கடிதமாகக் காகிதத்தில் ஏற்றிக்கொண்டு,

பேனா மை தீர்ந்த போதும் காதலில் மை தீராத,

உன் ஜி.கே.

RaviKrishnaமீண்டும் மீண்டும் தன் கடிதத்தைப் படித்து எழுத்துப்பிழை இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டான் ஜி.கே என்ற கோபால கிருஷ்ணன், முழுப்பெயர் கோபால கிருஷ்ண வெங்கட் ரமணன். நீண்ட பெயராக இருக்கிறதே என்று வியப்பவர்களுக்கு பெயர்க்காரணம், கோபால கிருஷ்ணன் என்பது ஜி.கேயின் அப்பாவின் அப்பா பெயர், ஜி.கேயின் அம்மாவின் அப்பா பெயர் வெங்கட் ரமணன். மனைவிக்கும் சம அந்தஸ்து தருவதாகச் சொல்லி மனைவியின் தகப்பனார் பெயரையும் குழந்தைக்குச் சூடி அழகு பார்த்தவர் ஜி.கேயின் தந்தை இராமானுஜம்.

இராமானுஜம் ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டு பையன்கள், மூத்தவன் அமெரிக்காவில். இளையவன் அம்பத்தூரில் இவர்களோடு. இளையவன் தான் கதை நாயகன். இராமானுஜம் சரியான குறும்புக்காரர். யாரையாவது சீண்டிக் கொண்டே இருப்பார். அதிலும் கோபால கிருஷ்ண வெங்கட் ரமணன் கிடைத்தால் அவருக்கு அல்வா தான். நல்ல வேளையாக இங்கு இல்லை. ஒரு அலுவல் காரணமாக திருச்சி வரை சென்று இருக்கிறார். அவர் மட்டும் இங்கிருந்திருந்தால் பையன் திருட்டு முழியை வைத்தே விஷயம் என்னவென்று ஆரூடம் படித்திருப்பார்.

முழுப்பெயரையும் சொல்லி அழைப்பவர்களை ஜி.கேவிற்குப் பிடிக்காத காரணத்தால் நாமும் ஜி.கே என்றே அழைப்போம். ஜி.கே ஆறடி உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டவன். பரந்த முகம், துறுதுறு கண்களுக்குச் சொந்தக்காரன். பி.காம் முடித்திருந்தான். ஓரிரு பேப்பர் அரியர்ஸ் உண்டு. வேலை தேடினான், தேடுகிறான்,தேடுவான் என்று முக்காலத்திலும் கூறலாம். அவனுக்குத் திறமை உண்டு. ஆனால் கடின உழைப்பு இல்லை. பொறுப்பில்லாமல், வேலையில்லாத, வேலை கிடைத்தாலும் செல்ல விரும்பாத நண்பர்களுடன் சுற்றித் திரிபவன். திண்ணைப்பேச்சு, வெட்டி அரட்டை தான் பொழுதுபோக்கு. திரைக்கதாநாயகர்கள் தங்கள் படங்களில் எந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துடன் வலம் வருகிறார்களோ அதே ஒப்பனையுடன் ஜி.கேயும் ஓரிரு மாதங்களுக்கு நகரை வலம் வருவான். ஒரே ஒரு நிபந்தனை, அந்தக் கதாநாயகனை ஜி.கேவிற்குப் பிடித்திருக்க வேண்டும். தற்போதைய ஒப்பனை தாடியும் சந்தனப்பொட்டும் குங்குமமும் நெற்றியில் இடுவதும் தான்.

திரையரங்கு தான் பாதி நேரம் ஜி.கேயின் இருப்பிடம். வணிகவியல் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தெரியுமோ, இல்லையோ,திரைப்படம் பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும் சரியான விடை வந்து விடும். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்று எதையும் விடுவது கிடையாது. டாம் ஹாங்க்ஸ் முதல் விவேக் வரை அவர்களது திரைப்பட வரலாறும் குடும்ப வரலாறும் அத்துப்படி. ஒரு பாடலைப் பாடினால், எந்தப் படம், எந்த ஆண்டு வெளிவந்தது, யார் இயக்குனர், யார் பாடலாசிரியர் என்று புட்டு புட்டு வைக்கும் அபார ஞானம் உண்டு. ஆனால் கொஞ்சம் சமத்து காணாது என்று ஜி.கேயின் தாய் சொல்லுவது வழக்கம்.

Sonia Agarwalவித்யா ஜி.கேயின் காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் பக்கத்து வீட்டுத் தேவதை. பலவகைக் காதல் உண்டு, இது ஒருதலைக்காதல்,தேர்விற்குக் கூட விழுந்து விழுந்து படித்து எழுதினது கிடையாது. கல்லூரிப் பாடத்தில் தோல்வியுற்றால் திரும்ப எழுதிக் கொள்ளலாம், ஆனால் காதல்? அதனால் தான் என்னவோ தான் எழுதிய கடித்ததைப் பல முறை திருத்திக் கொண்டும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டும் இருந்தான். இந்த முறை கடிதம் முழுத்திருப்தியை அளித்திருக்க வேண்டும். அதைச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“டேய் கோபால கிருஷ்ணா, எங்கடா போறே?”

அம்மாவின் குரலில் சற்றே ஆடிப்போனான். இவ்வளவு நேரம் கடிதத்தை உரக்கப் படித்ததைக் கேட்டிருப்பாளோ? நிச்சயம் இருக்காது. சீரியல் பார்த்து கண்ணீர் சிந்தும் நேரத்தை விட்டு விட்டு தன் அறையின் வாசலிலே நின்று ஒட்டுக் கேட்டிருக்க மாட்டாள் அம்மா,பின்னே ஏன் மிரட்டும் தொனியில் குரல்? தைரியமாகத் திரும்பிப் பார்த்தான்.

“அம்மா உனக்கு எத்தனை தரம் சொல்லறது, என் பேரை கோபால கிருஷ்ணன்னு கூப்பிடாதே, ஜி.கேனு கூப்பிடணும்னு, சரி, டிஸ்டர்ப் பண்ணாதே, நான் ஒரு நல்ல காரியத்திற்கு போயின்டு இருக்கேன், தடுக்காதே. ஓ.கே?”

“அரியர் எக்ஸாம் எழுதப் போறியா செல்லம்? இல்லைனா அக்கவுண்டெண்ட் வேலை பார்க்காம ஒரு கடையிலிருந்து ஓடி வந்தியே, அதைக் கன்டினியூ பண்ணப் போறியா?” என்று கேட்டு குறும்புச் சிரிப்பு செய்த அம்மாவைக் கோபத்துடன் பார்த்தான்.

நானே இன்னைக்குத் தான் என் இதயத்தை ஓபன் பண்ணி, அதுலே அபார்ட்மெண்ட் கட்டிக் குடியிருக்கிற வித்யாவைக் காட்டப் போறேன், இந்த நேரத்தில் அரியர் பேப்பர், ஓடி வந்த வேலையப் பத்தியெல்லாம் பேசி இப்படி டிஸ்கரேஜ் செய்யணுமா? மனதிற்குள் புலம்பினான்.

“சரி, என்ன பண்றியோ, எங்கே போறியோ அது எனக்குத் தேவையில்லை,மிஞ்சிப் போனா எங்க போவே? எதாச்சும் புதுப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும். அதுக்குப் போவே, எதிர்த்தாத்து மாமி உறவூத்த தயிர் கேட்டா, நீ போற வழியில் கொடுத்துடுவியா? எனக்கு சீரியல்லே வினோதினி தூக்கு மாட்டிப்பாளா மாட்டாளானு பார்க்கணும். மெகா சீரியல்லே அவளையும் தூக்குக் கயிறையும் காட்டியே ஒரு மாசமா வெறுப்பேத்திட்டான். அதனாலே இன்னைக்கு மட்டும் டைரக்டர் அவளைத் தூக்கு மாட்டிக்க விடலேன்னா நானே மாட்டி விடலாம்னு இருக்கேன்.

கயிறே, தூக்கு கயிறே…. நாடகத்தின் பாடல் அழைக்க,

“டேய் விளம்பரம் முடிஞ்சு சீரியல் போட்டுட்டான்டா, தயிரை வித்யா ஆத்துலே கொடுப்பியா? வயசான காலத்துலே நான் தான் அலையணுமா?”

வாவ், வித்யாவிற்கா? குதூகலித்தான்.

“ஏம்மா, இத முதல்லேயே சொல்லி இருக்கக் கூடாது, என் செல்ல அம்மா” அம்மாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, அம்மா எடுத்து வைத்திருந்த தயிர் பாத்திரம் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான். இனி ஜி.கே என்ன பேசினாலும் மெகா சீரியல் பார்க்கப் போகும் அம்மாவின் காதுகளில் விழாது என்பது அவனுக்கும் தெரியும். அவனும் தனக்குக் காதலியாகப் போகிறவளுக்காகச் சேர்த்து வைத்த வார்த்தைகளையும் நேரங்களையும் அம்மாவிடம் செலவிடத் தயாராக இல்லை.

வாசல் கதவைத் திறந்தான். என்ன ஆச்சரியம். தன் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். யாரைப் பார்த்துத் தன் காதலைச் சொல்ல துடித்துக் கொண்டிருந்தானோ அந்த வித்யாவே தான். கையில் பையுடன் நின்றிருந்தாள். இன்று தான் மிக அருகில் அவளைப் பார்க்கும் புண்ணியம் கிட்டியிருக்கிறது. கரிய நீண்ட கூந்தல் (சவுரியாக இருக்குமோ), திராட்சைப்பழம் போன்ற அழகிய இரு கண்கள்(ச்சே, எல்லாருக்கும் அப்படித் தானே இருக்கும்) சிவந்த கோவைப்பழம் போன்ற உதடுகள், மஞ்சள் நிற சுரிதார் அணிந்திருந்தாள். நீ மட்டும் என்னை லவ் பண்ணினால் என் அம்மாவின் புடவைகள் எல்லாம் என்னால் உனக்குச் சுரிதாராக மாறும் கண்ணே, முணுமுணுத்தான். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல் மெய்மறந்து நின்றிருந்தான்.

( இடை வேளை )

தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவனைக் கைகளால் ஆட்டி, சொடக்குத் தட்ட சொக்கிப் போனான். கனவா? நினைவா? ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். வலித்தது. நிஜம் தான்.

“ஹலோ”

“ஹ லோ, ம் வாங்க, அம்மா தானே, உள்ளே இருக்காங்க”

ஒரே படபடப்பு. ஜி.கேவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, வியர்த்து விட்டிருந்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே,”அம்மா, உன்னைப் பார்க்க யார் வந்திருக்காங்க பாரு, ஓடி வா வா வா” குழந்தையை அழைப்பது போல் அழைத்தான்.

“யாரு வந்தாலும் உள்ளே அனுப்பு, சீரியல் பார்க்கட்டும், உள்ள வர முடியாதுனா நீயே பேசி அனுப்பு, நான் பிஸி” இது அம்மாவின் குரல்.

குரல் வந்த திசையை முறைத்துப் பார்த்தான்.

இந்த அம்மாவிற்கு விருந்தோம்பலே தெரியவில்லையே என்று நொந்து கொண்டு வித்யாவைத் தானே வரவேற்று உபசரித்தான். இருக்கையில் அமரச் செய்தான்.

“ஒரு நிமிஷம், நீங்க அந்த புக் படிங்க, நான் இப்போ வந்துடறேன்” என்று சொல்லி மாடிப்படிக்கட்டின் இடுக்கிற்குப் போய் மின்சார இணைப்பை அணைத்தான்.

அம்மா தொடர்ந்து ஒளிபரப்பாகும் 5 மெகா சீரியல்கள் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு நகர மாட்டாள் என்பது தெரிந்த விஷயம் என்பதால் சாதாரணமாக மின் இணைப்பு போனது போல் மெயின் ஸ்விட்சை அணைத்து விட்டு வந்தான். தொலைக்காட்சியை அடுப்படி அருகே உள்ள சாப்பாட்டு அறையில் வைத்திருந்தார்கள். அப்பொழுது தான் அம்மாவிற்கு காலை முழுவதும் ஒரு பேட்ச் மெகா சீரியல், மதியம் சமையல், மீண்டும் இரவு நேரத்தில் சீரியல் என்று பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

சொல்லி வைத்தாற் போல அம்மாவும் ஹாலிற்கு வந்தாள்.

“கரண்ட்காரன் சரியான கடன்காரன், நல்ல நேரத்திலே கரண்டைக் கட் பண்ணிட்டான்” என்று ஈபீகாரனுக்கு இலவச அர்ச்சனை வழங்கினாள்.

“அடடே வித்யாவா? வாம்மா, எப்ப வந்தே? உள்ளே வந்திருக்கலாமே, உன்னை மாதிரியே அழகான பொண்ணு சீரியல்லே,அவளுக்கு என்னாச்சு தெரியுமா?”

“பரவாயில்லை மாமி, தயிர் வாங்கத் தான் வந்தேன். காலேஜ் இருக்கு, மதியம் போகணும்”

வித்யா மட்டும் அம்மாவைப் பேச அனுமதித்திருந்தால் 2 மெகா சீரியல் கதைகளை வித்யாவிடம் விரிவாகச் சொல்லி,அவளைக் கதற கதற அழ வைத்திருப்பாள். பாவம் என் வித்யா, நல்ல வேளை. தப்பித்தாள்.

அம்மா தன்னை அறிமுகப்படுத்தி வைப்பாள் என்ற ஆசையில் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜி.கே.

அம்மா ஜி.கேயின் மனக்குறிப்பை உணர்ந்தது போல் சிரித்துக் கொண்டு குடுகுடுவென உள்ளே ஓடினாள். உள்ளே ஓடிப் போய் ஜி.கேயின் அண்ணன் சந்தானகிருஷ்ணனின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“நீ என் மூத்த பையனைப் பார்த்திருக்கியோ என்னவோ, பேரு சந்தானம், படு ஸ்மார்ட், அமெரிக்காவில் சிட்டி பாங்க்லே வேலை, எங்களையும் அங்கே கூப்பிட்டுண்டே இருக்கான், நான் தான் உனக்கு ஒரு கல்யாணம் ஆகட்டும், அப்புறம் வர்ரோம்னு சொல்லியிருக்கேன். பாஸ்டன்லே பிரண்ட்ஸோடு அவன் எடுத்துண்ட போட்டோஸ், சூப்பரா இருக்கான்ல” என்று வித்யாவிடம் புகைப்படங்களை நீட்டி, சந்தானத்தைச் சுட்டிக் காட்ட, ஜி.கேயின் பார்வை அனலைக் கக்கியது.

இந்த அம்மா ஏன் தான் இப்படி இருக்கிறாளோ, விட்டால் ஜாதகப் பொருத்தம் பார்த்து எனக்கு வித்யாவை மன்னி ஆக்கி விடுவாள் போல.

அம்மா….

அம்மா ஜி.கேயைக் கைகாட்டிப் பேசத் தொடங்கின பிறகு தான் அமைதியானான்.

“இவன் சின்னவன், வேலை தேடறான், உருப்படியா ஒரு வேலையும் கிடைக்க மாட்டேங்குது, உங்காத்துலே எம்பிளாய்மென்ட் சம்பந்தமா பேப்பர் வாங்கறேள்லே? நீ எதாச்சும் வேலை பத்தித் தகவல் தெரிஞ்சா சொல்லேன். காலேஜ்லேயும் அரியர் 2 பேப்பர் பாக்கி, ரெண்டு பேப்பரா? மூணாடா? என்று ஜி.கேயை நோக்கிக் கேட்க, ஜி.கேயின் மெய்ப்பாடு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“இந்த அம்மா என்ன பெரிய கலெக்டரா? இந்த அம்மாவைப் பற்றி எனக்காத் தெரியாது, அப்பா தான் சொல்லியிருக்கிறாரே, அப்பா பொண்ணு பார்க்கப் போன இடத்துலே அம்மா கிருஷ்ணா வா வானு சுருதி இல்லாம பாட்டுப் பாடி, எங்கே இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணச் சம்மதிக்கலைனா, வேறொரு பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் அம்மா மீண்டும் பாடி, தன்னைப் போல பெண் பார்க்க வரும் இன்னொருவர் பாதிப்படஞ்சுடக் கூடாதுனு தானே அம்மாவையே பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கல்யாணம் செய்துண்டா, அப்படிப்பட்ட திறமையுள்ள அம்மாவா என்னைப் பற்றிக் குறை கூறுவது? நான் எப்படிப்பட்டவன், என் கல்வித்தகுதி ஏதாச்சும் வித்யா கேட்டாளா? எதுக்குத் தான் இந்த முந்திரிக்கொட்டைத்தனமோ, ச்சே, தப்பு பண்ணிட்டேன். என்னை நானே அறிமுகப்படுத்தியிருந்திருக்கணும் , இப்போ அவ என்னைப்பத்தி என்ன நினைப்பாளோ?”மனம் பரிதவித்தது. வித்யா சென்ற பிறகு அம்மாவைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான்.

வித்யா தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க முயற்சித்தபடியே அவனை ஓரக்கண்ணில் நோட்டமிட்டாள்.

நீ சிரிக்க நான் கோமாளியாகக் கூடத் தயார், மனதிற்குள் கவிதை வாசித்தான். நல்ல வேளையாக அப்பா ஊரில் இல்லை, அவர் மட்டும் இந்தக் காட்சியில் இருந்திருந்தால் தன் மூத்தப்பையன் சந்தானகிருஷ்ணன் புராணமாகத் தான் இருந்திருக்கும். தன்னையும் அவனையும் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்தியிருப்பார். அதற்கு அம்மா பரவாயில்லை, ரொம்ப மோசமா என்னைப் பத்திச் சொல்லலையே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு உதட்டில் புன்னகையை வருவித்தான்.

“சரி மாமி, நான் கிளம்பறேன்”

“சரிம்மா உங்கம்மா பிரியா இருந்தா இங்கே அனுப்பு, நேத்து சீரியல் பார்க்க முடியலே, கொஞ்சம் அது பத்தி டிஸ்கஸ் செய்யணும்” என்று வித்யாவைப் பார்த்து சொல்லி விட்டு, அந்தத் தயிரை வித்யாவிடம் கொடுக்க நினைவுறுத்த, தன் நினைவிற்கு வந்தவனாய் ஜி.கே மேஜையின் மேலிருந்த தயிர் பாத்திரத்தைக் கொடுத்தான்.

வித்யா விடை பெறும் போது, ஜி.கேயும் வெளியில் செல்வதாகப் புறப்பட்டான்.

“சீக்கிரம் வந்துடுடா”

அதற்கு மேல் அம்மாவின் குரலை உயர்த்த விடாமல் ஜி.கே சீக்கிரம் வருவதாகத் தலையாட்டினான். இன்னும் மிச்ச சொச்ச மானத்தை வாங்கி விட்டால் என்ற உள்ளுணர்வு காரணமாக அனிச்சை செயலாக அவன் தலை அசைந்தி¢ருக்க வேண்டும்.

கடிதத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் கொடுக்கலாம், தற்பொழுது சமயம் சரியில்லை என்று எண்ணிக் கொண்டான். வாசல் கேட்டைத் தாண்டி இரண்டடி நடந்திருப்பான்.

Ravikrishna Soniaஎக்ஸ்கியூஸ்மீ…. என்ற குரல்.

இந்தக் குரலுக்குச் சொந்தக்காரி வித்யாவாகத் தான் இருக்க முடியும். ஜி.கேவிற்கு வித்யாவின் குரல் வீணையின் நாதத்தை நினைவுபடுத்த, நீயும் உன் காதலை வெளிப்படுத்தத் தான் வந்திருக்கிறாய் என்பது புரிகிறது கண்ணே, எத்தனை நாட்கள் தான் நீயும் உன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியும்?

“அன்று உன் கண்கள் வார்த்தைகளைப் பேசியது.
இன்று உன் வாய் ஸாரி, இதயம் பேசப்போகிறது”

தனக்குள் ஊறிய கவிதைக்கு மனதில் அணை போட்டான்.

“ஏங்க, நீங்க பாடினேங்களா?”

“இல்லையே” வித்யா வெட்கத்துடன் சொல்ல,

“சொல்லுங்க, என்ன விஷயம்? வீட்டுக்கு என்னைப் பார்க்கத் தானே வந்தேங்க?”

“எப்படிங்க கண்டுபிடிச்சேங்க? சரி, உங்க பேரென்ன?”

காதலுக்கு மொழி ஏது? பெயர் ஏது? அதிலும் கண் பேசும் வார்த்தைகளுக்குப் பெயரில்லை.

‘ஜி.கே’

“மிஸ்டர் ஜி.கே நான் உங்களுக்கு ரொம்ப கடன்பட்டிருக்கேன் அதுக்கு ரொம்ப தாங்க்ஸ்”

“எதற்குப் பெண்ணே நன்றி என்ற மூன்று எழுத்துக்களைக் கூறி நம் காதலைக் கொச்சைப்படுத்துகிறாய்?” தனக்குத் தானே உருகினான்.

“எதுக்கு நன்றிலாம் சொல்றேங்க?”

“நான் சொல்லப் போறதை எப்படி எடுத்துப்பேங்கனு தெரியலே, பேசிக்கலீ நான் ஓவியம் படிக்கிற மாணவி. எங்களுக்கு ஒரு பீல்டு வொர்க் கொடுத்திருந்தாங்க. அதாவது காதலில் தோத்தவங்க நடை, உடை, பழக்கவழக்கம், செய்கைகள் எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து, கூர்ந்து கவனித்து ஒரு ஓவியம் தீட்டி கட்டுரை வரையணும். நான் காதல்லே தோத்த ஒருத்தரை என் ஓவியத்திற்கு மாடலா செலக்ட் பண்ணியிருந்தேன். ஆனா அவர் நான் பாதி வரைஞ்சுகிட்டு இருந்தப்போ இன்னொரு பெண்ணோடு எங்கேயோ ஓடிட்டார். தேடினேன், கிடைக்கலை, புதுசா ஒரு ஓவியம் வரையலாம்னா அதுக்கு எல்லாம் டயம் இல்லை. ஸோ…. உங்க முகம், தாடி, காதலில் தோற்றது போன்ற முகத்தோற்றம் எனக்குத் தெம்பு கொடுத்துச்சு. ஸோ என் வொர்க்கைக் கன்டினியூ பண்ணினேன். உங்ககிட்டே அனுமதி வாங்கியே பண்ணியிருக்கலாம், ஆனால் பெர்பார்மென்ஸ் நேச்சுரலா வரணும்னு தான் சொல்லலை. உங்க சிரிப்பு, பார்வை இப்படி பல கோணங்களில் உங்களை உத்துப் பார்த்து வரைஞ்சு, கட்டுரையும் எழுதி, என் தீஸீஸ் முடிச்சேன். நீங்களும் நான் உங்களைப் பார்க்கும் போது உங்களையும் அறியாம என்னையே உத்துப் பார்த்து எனக்குக் கோ ஆப்பரேட் பண்ணினேங்க. என் கட்டுரைக்கும், ஓவியத்திற்கும் தான் பர்ஸ்ட் பிரைஸ். அதுக்கு எனக்கு இந்தப் பரிசு கொடுத்தாங்க, நியாயமா இந்தப் பரிசிற்குச் சொந்தக்காரரே நீங்க தான். தேங்க்யூ ஸோ மச்” என்று ஜி.கே கையில் கண்ணாடியில் செய்யப்பட்ட தாஜ்மகால் பரிசுப்பொருளைக் கொடுத்து விட்டு சிரித்துக் கொண்டே வித்யா நகர்ந்தாள்.

கண் பேசும் வார்த்தைகள் புரிந்ததால் தலை சுற்றி கீழே விழுந்தான் கோபாலகிருஷ்ணவெங்கட்ரமணன் மன்னிக்கவும்.ஜி.கே.

கீழே விழுந்த கதாநாயகனை அப்படியே விட்டு விட்டுச் செல்ல முடியவில்லை. எனவே, ஒரு பின்குறிப்பு.

(மேற்கண்ட சம்பவம் ஜி.கேயை வெகுவாக மாற்றியிருக்க வேண்டும். அரியர்ஸ் எழுதினான். மேற்கொண்டு எம்.பி.ஏ முடித்தான்,பொறுப்பானவனாக மாறினான். நிர்வாகத்துறையில் கணிசமான சம்பளம் பெறும் அவனுக்குத் திருமணமும் ஆயிற்று. மனைவி….. வித்யா என்று ஊகித்தவர்களுக்கு ஒரு சபாஷ். வித்யாவே தான். யாருக்கு எப்போது யார் மேல் காதல் வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அப்படித் தான் வித்யாவிற்கும் ஜி.கேயின் மேல் காதல் வந்தது. விரும்பினால் விலகும், விலகினால் விரும்பும். தன் காதலை வித்யாவே வெளிப்படுத்தினாலும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகே கல்யாணம் என்று உறுதியாகக் கூறி விட்டான். நினைத்தபடி, நல்ல வேலையில் சேர்ந்து, தன் திறமைகளை மேம்படுத்தி, சாதித்துக் காட்டினான். தற்போது (திரு)மணம் செய்து (நறு)மணமாக வாழ்கின்றனர் வித்யா-ஜி.கே தம்பதியர். அவர்கள் காதலின் சின்னமாய் இன்றும் அவர்கள் வீட்டு வரவேற்பறையின் அலமாரியில் கம்பீரமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது தாஜ்மகால்.)

– காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com] – டிசம்பர் 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *