கண்டு கொண்டேன் காதலை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 8,259 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-13

பந்தயக் துடித்த இதயத்தைச் வேகத்தில் குதிரை சமனப்படுத்துவது, சாருமதிக்குப் பெரும்பாடாக இருந்தது.

ஆனால், அஞ்சி நடுங்கி அதிலேயே அரை உயிராகி, எதிரிகளுக்கு இன்னமும் வசதி பண்ணிக் கொடுப்பதில் என்ன லாபம்? அதைவிட, மூளையையேனும் தெளிவாக வைத்துக் கொண்டால் தப்பிப் பிழைக்க, ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கலாம்! 

வெகு சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, சாருமதி யோசித்தாள். 

இவர்கள், குற்றத்திலேயே பழகிவிட்ட முழு வில்லன்கள் அல்ல! பணத்தாசையில், ஏதேதோ பேசியபோதும், கொலை என்கிற அளவுக்குச் செல்லத் துணிவிராது! 

அல்லது, மோகனசுந்தரம் கூறியது போலத் திடுமெனக் கண்ட பெரும் பணம், எதைச் செய்யவும் தூண்டுமா? 

நாற்காலியோடு கண்டபடி இறுகக் கட்டப்பட்டிருந்த நிலையில், சாருமதியின் உடம்பில் அங்கங்கே வலி பிடுங்கத் தொடங்கியது. லேசாக அசைந்து கொடுத்து வலியைக் குறைத்துக் கொள்ள முயன்றவள், திகைத்தாள். 

நண்பர்கள், நண்பர்கள் என்று உயிரை விடுகிறவள், சாருபாலா, சகோதரிகள் இருவருமாகச் சேர்ந்து பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும்போதே அப்படி! 

சாருமதியின் திருமணத்துக்குப் பிறகு நேர்ந்த தனிமையில், ஒரேடியாக, எல்லாமே அவர்கள்தான் என்ற நிலைக்குப் போயிருந்தாள்.

அதிலும் தினேஷின் ஆசை வார்த்தைகள் அவன் கைக் கயிற்றில் ஆடும் பம்பரமாகவே அவளை மாற்றியிருந்தன. 

ஆனால், பதறிக் கொண்டு சாருமதி, கொண்டுவந்த பத்து லட்சம், அவளுடைய நண்பர்களை தோலுரித்துக் காட்டியதோடு, உடன் பிறந்த தமக்கையின் பாசத்தையும் எடுத்துக்காட்டி, சாருபாலாவை மாற்றியது. 

ஆனால், பணத்தின் முன் மனச்சாட்சி மறைந்த நாலுபேர்! அவளது பிழையால் கட்டுண்டு கிடக்கும் சகோதரி! இந்த நிலையில், அவள் ஒருத்தி, தனியாக இவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும்? 

அதிலும் சோனாவின் கையில் இருந்த கத்தி, பாலாவை இன்னமும் நடுக்கியது. அவள் சும்மாவே, ஒரு மாதிரி! என்னவோ தன் வெள்ளைத் தோலாலேயே, தான்தான் உலக அழகி என்று நம்புகிறவள்! 

“என்ன பெரிய வெள்ளை? உன் கண்ணழகு, அவளுக்கு வருமா?” என்று தினேஷ் சொல்வான். ஆனால் அவன் சொன்னதில் இப்போது எதை நம்புவது? அவன் பேச்சை நம்பி, அன்பான தமக்கையை வேறு மாட்டி வைத்துவிட்டாளே! 

சாருமதியின் முகத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் முயற்சி தெரியவும், அவளால் பொறுக்க முடியாமல் போயிற்று. 

கவனத்தைச் சாருபாலாவிடம் வைத்தவாறு, ஏதோ வாதிட்டுக் கொண்டிருந்த மற்றவர்களை அணுகி, “தினேஷ் இப்போது நீங்கள் என்ன சதி செய்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. ஆனால், என் அக்கா நல்லவள். உங்களோடு சேர்ந்த பாவத்துக்கு, என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, அவளை விடுவித்து அனுப்பி வையுங்கள் ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள். 

“அட, இதைப் பார்டா. புதுப்பாசம் ஒன்று பொத்துக்கொண்டு வந்திருக்கிறது! அக்காக்காரியைப் பார்த்து வயிறெரிந்தது எல்லாம். அதற்குள்ளே மறந்துவிட்டதா?” என்று ஏளனம் செய்தான் தினேஷ். 

முகம் கன்ற, “தப்புதான், பெரிய தப்புதான் செய்துவிட்டேன். ஆனால், அதற்கு உரிய தண்டனையை எனக்குக் கொடுங்கள். என்றுதானே கேட்கிறேன்? அக்காவுக்கு வலிக்கிறது. தயவு பண்ணி அவள் கட்டுக்களை அவிழ்த்துவிடு, ப்ளீஸ் தினேஷ்” என்று அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டாள்.

“ஐய்யோ, அக்காவுக்கு வலிக்குதாமே! இந்தாம்மா, இப்படித் துடிக்குது! ஒன்று செய்வோமா ? இந்தப் புதூ.. ப் பாசம் எவ்வளவு வலுவானது என்று பார்ப்போமா? ரைட்! நாங்கள் இப்போது திட்டம், நீ சொன்னது போலப் பக்காவாகச் சதி பண்ணியாயிற்று! உன் அக்காவுக்கு விலை, இரண்டு கோடி என்று முடித்திருக்கிறோம்…” 

“என்னது?! இ…இரண்டு… உங்கள் பேராசைக்கு அளவே இல்லையா?” 

“பேராசையா? இரண்டு கோடியை நாலாகப் பிரித்தால், ஆளுக்கு ஐம்பது லட்சம்தான் வருகிறது. இந்தக் காலத்தில், இதை வைத்து என்ன செய்ய முடியும்? ஆனால், இதற்கு மேலே கேட்டால், இந்தப் பொண்டாட்டியே வேண்டாம், வேறே கட்டிக் கொள்கிறேன் என்று விடுவானோ என்றுதான். இதிலே நிறுத்தினோம்” 

“எவ்வளவு கேட்டாலும் கொடுப்பான் என்று சொன்னால், உங்கள் யாருக்கும் புரியவில்லையே! ஒரு நாளைக்கு ஒரு லட்சம்தான் கேட்டேன், அவனுக்கு. அவனுடைய மனைவியே போதுமாம். என்னிடமே சொல்கிறான்! அதனாலே இவள் அக்கா முகத்தில் கத்தியாலே நாலு கோடு போடலாம் என்று…” என்று கத்தியை நீட்டினாள் சோனா. 

“ஐயோ, வேண்டாம். வேண்டாம், தினேஷ் உன் காலில் விழுகிறேன். அக்காவை எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லு” என்று மெய்யாகவே, அவன் காலிலேயே விழுந்தாள் பாலா. தங்கையின் தவிப்பு தாங்காமல் “விட்டுவிடு, பாலா, முதலில் அவர்கள் திட்டம் என்ன என்று கேட்போம்” என்றாள் சாகுமதி, மெதுவாக. 

கத்தியை நீட்டியதும், அவளுக்கும், நெஞ்சு வெடித்துவிடும்போலத் துடிக்கத்தான் செய்தது. ஆனால், அதை வெளிக்காட்டி அவர்களது எக்காளத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் பெரியவள். 

அத்தோடு, மனைவி போதும் என்று கணவன் சொன்னான் என்று கேட்கையில், அந்த நிலையிலும் ஒரு பூரிப்பு எட்டிப் பார்க்கத்தான் செய்தது. 

யோசித்துப் பார்த்தால், முதலில் இதைவிட, மோகனசுந்தரத்தின்.. அன்பும் ஆசையும் எவ்வளவோ பெருகித்தான் இருந்தது. இப்படியே போயிருந்தால், பின்னொரு காலத்தில் ‘ஓருடல் ஈருயிராக’ அவர்கள் மாறக்கூட வாய்ப்பிருந்தது. 

ஆனாலும், இன்றைய நிலையில், இரண்டு கோடியை, அவளுக்காகக் கணவன் அள்ளிக் கொடுப்பான் என்ற நம்பிக்கை சாருமதிக்கு வர மறுத்தது. 

அதுவும் அவனிடம் அனுமதி பெறாமல், பத்து லட்சம் ரூபாயை வேறு, அள்ளிக் கொண்டு வந்திருக்கிறாள்! 

“பாருங்கள் தினேஷ், எங்களைப் பற்றிய எல்லா உண்மைகளையும், பாலா உங்களிடம் சொல்லியிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். நீங்களே, யோசித்துப்பாருங்கள். சுந்தர் எனக்காக இரண்டு கோடி ரூபாய் கொடுப்பாரா?” என்று முடிந்த அளவு நிதானமாக வினவினாள். 

எப்படியாவது பேசி, இந்தப் பத்து லட்சத்தோடு, அவர்களை அனுப்பி விட முடியாதா என்பது, அவளுக்கு. அதுவுமே சும்மா வந்த காசதானே? 

தாடையைத் தடவியபடி, “எனக்கும் அதுதான் சந்தேகமாக இருக்கிறது! ஆனால், இந்த சோனாதான் பிடிவாதமாகச் சொல்லுகிறாள்…” என்று அவள் இழுத்தபோது, உள்ளூர அவளுக்கு நம்பிக்கை தலை தூக்கத் தொடங்கியது. 

ஆனால் திடுமென நிமிர்ந்து “என்ன? என்னவென்று உன் கணவனைச் சொன்னாய்? சுந்தரா? ஹூம்! சுந்தர் கிந்தர் என்று செல்லப் பெயரெல்லாம் துள்ளி விளையாடுகிறது, பணம் மட்டும் தர மாட்டானாமா? எங்களை ஏமாற்றப் பார்க்கிறாயா? எல்லாம் தருவான். இதற்கு மேலே, ஒரு வார்த்தை நீ பேசக் கூடாது! என்னையே, ஒரு கணம் குழப்பிவிட்டயே! சோனா, நீ சொன்னதுதான் சரி. அந்தக் கத்தியைக் கொடு. இதேபார், சாருபாலா. நீ நேரே உன் அக்கா புருஷனிடம் போகிறாய், அவனிடம் உள்ள நிலைைையச் சொல்லி, இரண்டு கோடி ரூபாய் வாங்கி வருகிறாய். என்னமாவது, திரிசமன் பண்ணினே, உன் அக்கா குளோஸ்! அதுவும் இந்தக் கத்தியாலே, உடம்பு, முகம் எல்லாம் கோலம் போட்டு! கிளம்பு!” என்றான் தினேஷ். அடித்தொண்டையில் அதிகாரமாக.

கவனமற்றுச் சொன்ன ஒரு வார்த்தையில் கெடுத்துக் கொண்டேமே என்றிருந்தது சாருமதிக்கு.

ஆனால், அது பற்றி, இனி எண்ணிப் பயன் இல்லை! தப்புவதற்கு வேறு வழியைத்தான் பார்க்கவேண்டும்.

ஆனால், கையில் ஆயுதத்தோடு, அவர்கள் நாலுபேர்! இது தெரியாத இடம் வேறு! ஒரு வேளை பாலாவுக்குத் தெரியுமோ என்ற நம்பிக்கை, உடனே அழிந்தது. 

ஏனெனில், “கிளம்பு, கிளம்பு என்று அதட்டுகிறாயே, இங்கிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழிகூட எனக்குத் தெரியாதே! பின்னாலே யாரேனும் விசாரித்தாலும், வழி காட்டத் தெரியாமலே இருக்கட்டும் என்று, எங்கெங்கோ சுற்ற வைத்துதானே என்னை இங்கே கூட்டி வந்தீர்கள்? இப்போது போ, போ என்றால், நான் எங்கே போய் முட்டிக் கொள்வது? இப்போது இருட்டாக வேறு. இருக்கிறது!” என்று எரிச்சலை மறையாமல் காட்டிக் கேட்டாள் சாருபாலா. 

இவர்களை இப்படி நம்பினோமே என்று.அவளுக்கும் மறுகல்! 

“ஆமா…ம்! அதுவும் சரிதான்! சங்கர்” என்று தாடிக்காரனை கூப்பிட்டான் தினேஷ். “நீ, இவளை வந்த மாதிரியே கூட்டிப்போய், ரயிலடியில் விட்டுவிட்டு, அப்படியே நமக்கு, இரண்டு ரொட்டியும் வாங்கி வந்துவிடு, காலை உணவுக்குத் தேவைப்படும்” என்றான். 

“போ, தினேஷ் இப்போதுதான் இந்த அக்காக்காரியை நீ சொன்ன விதமாக அழைத்து வந்ததில், காலெல்லாம் ஒரே வலி! சுரேஷூக்கு காய்ச்சல் என்பதால், சோனாவை வேணுமானால் போகச் சொல்லேன்” என்றான் சங்கர் அலுப்புடன். 

“என்னப்பா நீ! ஐம்பது லட்சம் வேண்டும் என்றால், கொஞ்சம் கஷ்டப்படாமல் கிடைக்குமா? சோனாவும், பாலாவும் இப்போது மனநிலைக்கு, வழியில் இருவரும், குடுமிப் பிடிச் சண்டையே போடலாம்! பின் பக்கமாக என் பைக் நிற்கிறது. புதிசுப்பா. ஜாக்கிரதை! எங்கேயும் இடித்து விடாதே!” என்று சாவியை எடுத்துக் கொடுத்தான்.

“போகும் வழி மட்டும் முன்னைப் போலவே, ஓட்டு” என்று சொல்லி அனுப்பினான். 

செல்லுமுன் சாருபாலாவிடம் மறுபடியும் ஒருதரம் எச்சரித்தான்.

சற்றுப் பெரிய தொகை என்பதால், அதைத் தயார் பண்ணத்தான், இப்போதே, அவளை அனுப்புவது, நாளைக்குப் பணத்தை, எப்போது, எப்படி கொண்டு வருவது என்று, அவளுக்குத் தகவல் வரும் என்றான்.

*எப்படி? என் செல்ஃபோனையும் பிடுங்கிக் கொண்டாயே! அது மட்டுமில்லை. இந்த ராத்திரியில், எந்த பாங்க் திறந்திருக்கும்?” என்று ஏளனமாகக் கேட்டாள் சாருபாலா. 

இவள் வாயை மூடிக்கொண்டு போக மாட்டாளா என்றிருந்தது, சாருமதிக்கு. 

இந்த கூட்டத்தின் பிடியிலிருந்து பாலா விலகிப் போய்விட்டால், அப்புறம் அவள் ஒருத்தி மட்டும் தப்புவதைப் பார்க்கலாம்! 

அசட்டுத்தனமாய், அவர்களுக்கு கோபமூட்டி, உள்ளதையும் கெடுத்துவிடக் கூடாதே! 

எனவே, “பாலா, அதெல்லாம் அவர்கள் பொறுப்பு! பணம், அவர்களுக்குத்தானே தேவை? எப்படியோ தகவல் கொடுப்பார்கள்! அதன்படி மட்டும் நீ, ஒழுங்காகச் செய். நாம் இருவரும் நல்லபடியாக மீள, அது ஒன்றுதான் வழி!” என்றாள் தங்கையிடம். 

“பெரியவள் என்றால் பெரியவள்தான்!” என்று சிலாகித்தான் தினேஷ். “இந்தச் சிலுப்பட்டை மாதிரி, பொறுப்பில்லாத அசட்டுக் கேள்விகள் கேட்டுத் தொல்லை தருவதில்லை! அட அடி முட்டாளே பாலா, உன் அக்கா கணவன் கேட்டால், இரண்டு என்ன இன்னும் நாலு கோடி சேர்த்துக் கொடுப்பதற்குச் சென்னையில், எத்தனையோ வட்டிக் கடைக்காரர்கள், தயாராக இருக்கிறார்கள், தெரியுமா? கேட்டு வாங்குவதற்கு, அந்தாளுக்கு அறிவிருக்க வேண்டும். கட்டின பெண்டாட்டி மேல் அக்கறையும் இருக்க வேண்டும். அத்தோடு அக்கா சொன்னது போல, ஏதோ ஒரு வழியில், நான் உனக்குத் தகவல் கொடுப்பேன். அவ்வளவுதான். இதற்கு மேலே ஏதாவது கேட்டு எரிச்சல் படுத்தாமல், உடனே கிளம்பு! போ!” என்றான் முடிவாக. 

தமக்கையை அந்தத் துரோகிகளிடம் தனியே விட்டுப் போக மனமின்றி, கலக்கத்துடன் “அக்கா!” என்று அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தாள் பாலா. 

ஆனால், “நீ சீக்கிரமாகப் போனால், நம் இருவரும் சீக்கிரமாக மீள முடியும். சீக்கிரமாகப் போ, பாலா” என்று அவளை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள் சாருமதி. 

தினேஷ் குழுவுக்கும் அதுவே ஏற்புடையதாக இருக்கவே, ஒரு வழியாகப் பாலா புறப்பட்டுச் சென்றாள். 

பாலா கிளம்பிச் சென்றதும், சாப்பிடுகிறாளா, பாத்ரூம்போக வேண்டுமா என்று சாருமதியிடம் கேட்டார்கள். 

இரண்டையுமே அவள் மறுக்கவும் “என்ன ஒத்துழையாமைப் சந்தேகமாகப் பார்த்து, போராட்டமா? உனக்குத்தானே, சிரமம்?” என்றான் தினேஷ். 

“அப்படியில்லை. ஒருதரம் கட்டியதே. எங்கெல்லாம் கை பட்டு அருவருப்பாக இருந்தது. இன்னொரு தரம். கட்டை அவிழ்த்து, மறுபடியும் கட்டி… வேண்டாம் அதைவிட, நான் இப்படியே இருந்து கொள்வேன்” என்றாள் சாருமதி. 

தோளைக் குலுக்கிவிட்டு சோனா செல்ல, தினேஷ் பின் தொடர்ந்தான். 

சற்று நேரத்தில் பாலாவை ரயில் நிலையத்துள் விட்டுவிட்டதாக சங்கர் ஃபோன் செய்தான். 

சுரேஷுக்குக் காய்ச்சல் அதிகமாயிருப்பதால், மருந்துக் கடையில் சொல்லி, மாத்திரையும் வாங்கி வருமாறு. தினேஷ் கூறினான். 

பிறகே, அவள் வந்தபோது பாலாவின் அருகில் நின்றிருந்த சுரேஷ், சுவரில் மெல்லச் சரிந்து, இப்போது படுத்தே விட்டான் என்பதைச் சாருமதி கவனித்தாள். 

அங்கே கிடந்த விரிப்பில், தினேஷ், சோனா இருவருமாகச் சேர்ந்து, அவனைப் புரட்டிப் படுக்க வைத்தனர். 

அந்த விரிப்பு கூடப் பாலாவினது என்று கண்டதும், அடப்பாவிகளா என்று இருந்தது, சாருமதிக்கு! 

ஆனால், இது நல்ல தருணம்! 

இருவருமாக, சுரேஷை நேராகப் படுக்க வைத்து, இன்னொரு போர்வையைச் சுருட்டித் தலைக்கு வைத்து, இயன்றவரை வசதி பண்ணிக் கொடுத்துவிட்டுத் திரும்பினால், சாருமதியைக் கட்டி வைத்திருந்த நாற்காலி காலியாக இருந்தது.! 

தமக்கையைக் கட்டியது பொறுக்காமல், கட்டை அவிழ்க்க முயன்று, தினேஷிடம் அறை வாங்கி பாலா தரையில் முட்டிக்கொண்டு விழுந்தபோது, சாருமதியைக் கட்டியிருந்த கயிற்றின் ஒருமுனை சின்னவளின் கையிலேயே இருந்தது. 

அறை விழுந்த வேகத்தில் தரையில் போய் முட்டியபோது, கையிலிருந்த கயிறும் இழுபட்டு கடைசியாக முடிச்சிட்டிருந்ததும் அவிழ்ந்துவிட்டது. முடிச்சு அவிழ்ந்ததே தவிர, சுற்றியிருந்த கயிறு தளராததால், கட்டு அவிழ்ந்ததை, யாரும் அறியவில்லை.

வலியெடுத்ததும் அசைய முயன்ற போதுதான், சாருமதியே அதைக் கவனித்தது. 

அதிலிருந்து யாரும் கவனியாத சமயங்களில், மெல்ல மெல்லக் கட்டைத் தளர்த்திக் கொண்டே வந்தாள். 

இது, தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவள் உணவு இயற்கை வசதிகளை மறுத்ததே!

பாலா அவர்கள் பிடியில் இல்லை என்றானதும். சரியான தருணத்திற்காகக் காத்திருந்தாள். 

இவள் தப்பிக்கக் கூடும் என்ற எண்ணமே இல்லாமல், சோனாவும், தினேஷும் நோயாளியிடம் முழுக் கவனத்தையும் செலுத்தியது, அவள், அங்கிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. 

ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தவளுக்கு, அங்கிருந்து எங்கே எப்படிப் போவது என்று ஒன்றும் தெரியவில்லை.

சரியான வழியில் சென்றாலும் கூட, பைக்கில் வந்து கொண்டிருக்கும் சங்கரிடம் மாட்டிக் கொள்ள நேரிடலாம்.

மின் தொடர்பு இல்லாததாலோ என்னவோ இருள் அதிகமாகவே இருந்தது. 

ஒருவகையில் அந்த இருளை வசதியாகி, அவளைப் பிறர் கண்ணில் படாமல் மறைத்தபோதும், அவளுக்கு செல்லுமிடம் தெரியாது போயிற்று! 

கால் போன போக்கில் போய், இடக்கு முடக்காக எங்கேனும் அவர்களிடம் சிக்குவதைவிட, குட்டிச் சுவராகிவிட்டிருந்த சுற்று மதிலை ஓட்டியே மறைந்திருப்பது மேல் என்று முடிவு செய்தாள். 

உள்ளிட்ட கேட்ட குரல்கள், அவள் தப்பியதைக் கண்டுவிட்டார்கள் என்பதை உணர்த்தின. சங்கரோடு தொடர்பு கொண்டு பேசுவது கேட்டது. 

இப்போது அவர்களுக்கு, அவள் இரண்டு கோடி ரூபாய் சொத்து! முழு மூச்சுடன் தேடுவார்கள். மறுபடியும் மாட்டிக்கொண்டால், அவளைக் குரூரமாகப் பழிவாங்காமலும் விட மாட்டார்கள். அதிலும் கத்தியோடு காத்திருக்கும் அந்த சோனா! 

அந்த வீட்டில் இருந்த மெழுகுவர்த்தியை எடுத்துவந்து தேட முடியாது என்று சாருமதி சற்று அமைதி அடையும்போதே, செல்ஃபோன்கள் ஒளிர்வது தெரிய, சட்டெனத் தரையோடு படிந்தாள். 

வீடு வரை வந்துவிட்டுத் திரும்பிச் சென்ற பைக்கின் முன் விளக்கு பாய்ச்சிய ஒளி வெள்ளம் படாதவாறு வீட்டின் ஒருபுறமாக மறைந்தாள். 

முதலில் வரும்போது சுற்றிச் சுற்றி வந்த சந்துகளை அலசியவாறு பைக் சென்றுவிட, சற்றே மூச்சு நேராக வந்தது. அந்த அளவு வெளிச்சம், இனி இராதல்லவா? 

இரு செல்ஃபோன்களின் சிறு ஒளி கற்றைகளும் கூட சுற்றிச் சுற்றி, இங்கும் அங்குமாக அலைந்த வண்ணம் வீட்டை விட்டு விலகியே சென்றன. 

அவை திரும்பி வரும்போதும், தன் மேல் பட்டுவிடாமல் மறைந்துகொள்ள எண்ணிப் பின்புறமாக மெல்ல நகர்ந்தவள். மெத்தென்று எதிலோ மோதிக் கொண்டாள். 

அச்சத்துடன் அலறப் போனவளின் வாயை, ஒருகரம் இறுகப் பொத்தியது. 

ஒருகணம் முழு மூச்சுடன் திமிறியவள், ஓசையற்ற விசும்பலுடன் அந்த உருவத்தின் தோளில் அடங்கிப் போனாள்! 

அத்தியாயம்-14

கனவில் நிகழ்வது போலத் தொடர்ந்து நடந்த சில நிகழ்ச்சிகளைச் சாருமதியால் நம்பக்கூட முடியவில்லை. 

ஆனால், கணவனின் தோள் தந்த அடைக்கலத்தை விட்டு, அவள் அசையக்கூட விரும்பவில்லை. 

அசைந்து, இந்தக் கனவு கலைந்துவிட்டால்? 

நல்லவேளையாக, அவனும் அவளை விலக்கவில்லை! 

அது பின்னால் வரலாம். பத்து ரூபாய்கூடக் கொடுக்கக் கூடாது என்றால், பத்து லட்ச ரூபாயை தூக்கிக்கொண்டு போய்த் தாரை வார்த்தாயா? போ வெளியே என்று, வீட்டை விட்டே வெளியே துரத்தவும் செய்யலாம்! 

ஆனால், அது நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது. இந்த சொர்க்கம் அவளுக்குக் கட்டாயம் வேண்டும், இல்லாமல் தீராது! 

செல்ஃபோன் தந்த சிறிய ஒலியில் அதிகம் தேட முடியாததாலோ, ஜுரத்தில் கிடக்கும் சுரேஷைத் தனியே அதிக நேரம் விட மனமின்றியோ, நடந்து தேடப் போனவர்கள் சீக்கிரமே திரும்பி விட்டார்கள். 

அடுத்த நடவடிக்கை பற்றி ஆ லோசிப்பதற்காக, சங்கரையும் வரச் சொன்னார்கள். 

இந்த இருட்டில், சாருமதியைத் தேடுவது, அவர்களுக்கு எவ்வளவு சிரமமோ, அதே போலத் தப்பிச் செல்வது, சாருமதிக்கும் கடினம் என்று சரியாகவே கணித்தார்கள். 

இது, பின்னிலவுக் காலம், நிலவு எழும்பி சற்று இருள் விலகும்வரை காத்திருந்துவிட்டு, மூவருமாக அதற்குள் காய்ச்சல் விட்டுவிட்டால் நால்வருமாகச் சாருமதியைத் தேடிக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று, இருவருமாக முடிவு செய்தார்கள். 

“அந்த நாய் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்” என்று வன்மத்துடன் சோனா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோது, பைக் ஒளி கேட்டது. 

பைக்கை நிறுத்திவிட்டு, மூவருமாக வீட்டினுள் செல்லவும், மோகனசுந்தரம் மனைவியிடமிருந்து ஒரு கையைப் பிரித்து, உயர்த்தினான். உயர்த்திய கையில் ஒரு சின்ன ஒளி வட்டம். 

அதன்பின் நிறையக் காரியங்கள், மடமட மடவென்று நடந்தன.

அங்கிங்கெனாதபடி மரங்கள், குத்துச் செடிகள், பாறைகள், கற் குவியல்களின் பின்னிருந்து கூட, நிறையப் பேர் ஓடிவந்து, அந்த வீட்டைச் சூழந்து கொண்டார்கள். 

என்ன சத்தம் என்று பார்க்க வந்தவர்களின் மீது, பல டார்ச் விளக்குகளின் மூலம் ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்டது, 

மந்திரத்தில் நடப்பது போல, போலீஸ், ஜீப், வேன், கார் எல்லாம் வந்தன. 

வந்து நின்ற காரிலிருந்து “அக்கா!” என்று ஓடி வந்து பாலாவைப் பார்த்தபோதுதான், கனவின் மெய்மை, சாருமதிக்குக் கொஞ்சம் குறைந்தது. 

தமக்கையை அணைத்துக் கொள்ள ஓடி வந்த சாருபாலா, கணவனின் கையணைப்பில் அவள் நின்ற நிலையைக் கண்டதும் சற்றுத் தயங்கினாள்.

பிறகு சிரிப்பும் கண்ணீருமாகச் சாருமதியின் கையைப் பற்றிக் கன்னத்தில் அழுத்தி வைத்துக் கொண்டாள்.

“எங்களை எதற்கு சார், கைது பண்ணுகிறீர்கள்? நாங்கள் தப்புப் பண்ணியதற்கு, உங்களிடம் சாட்சி இருக்கிறதா?” என்று எகிறினான் தினேஷ். “இவர்கள் இரண்டு பேரும். எங்ளோடு ஜாலியாக இருப்பதற்காக வந்துவிட்டு, அதிகப் பணம் கேட்டு தகராறு செய்ததற்காக, அடித்துத் துரத்தினோம், அதற்குப் பழி வாங்குவதற்காக, இவர்களை கடத்தியதாகப் பொய்ப்புகார் கொடுத்து, உங்களைக் கூட்டி வந்திருக்கிறார்கள், நம்பாதீர்கள்” என்று அசிங்கத்தைக் கொட்டினான்.

“ஓகோ! அப்படியாப்பா? ஆனால் இவர்கள் ஆள் கடத்தல் புகார் கொடுத்தார்கள் என்று. உனக்கு எப்படியப்பா தெரிந்தது? அது நிஜம் என்பதால்தானே?” என்று காவல் அதிகாரி மடக்கவும், அவன் ‘ஞே’ என்று விழிக்க, “உன் வாயால் நாங்களும் கெடுவதா? எல்லாம். இவனால்தான் சார். இவன்தான்” “இவன்தான்” ஒருவருக்கொருவர் கைகாட்டி, மற்றவர்கள் உளறிக் கொட்டினார்கள்.

“நீங்கள் கவலைப்படாதீர்கள், சார். ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கிற விதத்தில் இவர்களில் யாருமே, இனி உங்கள் குடும்பத்துப் பக்கமே திரும்ப மாட்டார்கள். வருகிறோம்” என்று போலீஸ் குற்றவாளிகளோடு கிளம்பிப் போன பிறகே, இறுகி நின்ற சாருபாலா, சற்று உடல் தளர்ந்தாள். 

“உனக்கும் அத்தானுக்கும் எவ்வளவு பெரிய. அவமானத்தையும், நஷ்டத்தையும் கொண்டு வர இருந்தேன்! உங்களால், என்னைக் கொ… கொஞ்சமேனும் மன்னிக்க முடியுமா, அக்கா?” என்று விம்மினாள். 

“நீங்கள் இருவரும் காருக்குப் போங்கள். நான் இதோ வருகிறேன்” என்று அவன் கை காட்ட, அவன் கார் அருகில் வந்து நின்றது. 

காரை ஓட்டி வந்தவர், இறங்கி சாவியை மோகனசத்தரத்திடம் கொடுத்தார். 

அவரது கையைப் பற்றி குலுக்கி “உங்களால்தான் சார். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. உங்கள் ஆட்கள் எல்லோருமே, பிரமாதமாக வேலை செய்தார்கள். இரவு நேரத்தில் இந்தக் காட்டிலும் மேட்டிலும் கிடந்து… அதற்காக, போனஸ் ஒரு தொகையும் சேர்த்து பில் அனுப்புங்கள்” என்று கூறி, அவரிடமிருந்து விடை பெற்றான் மோகனன்.

“இருவருமே முன்புறமே ஏறுங்கள். திரும்பிப் பார்த்து பேச வேண்டியிராது” என்று மோகனசுந்தரம் கூறியது, கணவன் அருகாமையை விட்டு விலகவும் பிடிக்காமல், தங்கையை தனியே விடவும் மனமின்றி நின்று கொண்டிருந்த சாருமதிக்கு ஆறுதலாக இருந்தது.

இருவரிடமுமே கேட்க, அவளுக்கு நிறைய கேள்விகளும் இருந்தன. கார் ஓடத் தொடங்கியதும் “இருவரும், இவ்வளவு சீக்கிரம் எப்படி வந்தீர்கள்?” என்று முதல் கேள்வியைக் கேட்டாள், “கொஞ்ச நேரத்துக்கு முன்தானே பாலா, நீ கிளம்பினாய்?” என்றாள் தங்கையிடம். 

“ஆமாக்கா!” என்று அவள் விவரம் சொன்னாள். 

ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, சங்கரின் பைக் கிளம்பியதுமே, சாருபாலா, பக்கத்தில் ஏதாவது டெலிஃபோன் பூத் இருக்கிறதா என்று தேடினாள். ஒருத்தி, செல்ஃபோனில் பேசி முடிப்பது கண்ணில் படவும் அவசரத் தேவை என்று, அவளிடம் செல்லை கேட்டு வாங்கி. மோகனசுந்தரத்துக்கு ஃபோன் செய்தாள். 

அவன் அருகில்தான் இருப்பதாகச் சொல்லி, வெளியே வந்து, தன் காரில் ஏறச் சொன்னான். 

“அதிலிருந்து நான் இந்தக் காரிலேயேதான் அக்கா, இருந்தேன். அத்தான் எப்படி வந்தார், என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றும் தெரியாது” என்றாள் அவள். 

கணவன் புறம் லேசாகச் சாய்ந்து “எப்படியப்பா வந்தீர்கள்?” என்று வியந்து கேட்ட சாருமதி, சட்டென நிமிர்ந்தாள் “கந்தசாமி? அவன்தானே? காலில் செருப்புப் போடவில்லையே என்று அவன் கேட்டபோதே, உங்களிடம் சொல்வானோ என்று தோன்றியது! ஆனால், இந்த ஊர்? குறிப்பாக, இந்த வீடு? எப்படி வந்தீர்கள்?” 

வெளியே தெரியாமல், அவளை மறுபடியும் தோளில் சாய வைத்துக்கொண்டு, மோகனசுந்தரம் பதில் சொன்னான். 

சாருபாலாவை, அவளுடைய நண்பர்கள் வெகுவாகத் தூண்டி விடுவதாகத் தெரிந்ததும், முதலில் எடுத்த பணத்தைச் செலவு செய்துவிட்டு, அவர்கள், அடுத்த வருமானத்துக்குத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு உண்டாயிற்று. 

“அந்தப் பைக்கூட, அதில் வாங்கியது போலத்தானே, தெரிகிறது. சும்மா இருந்து சாப்பிடுகிறவனிடம். அதற்கு மேல் பெரிதாக என்ன மிச்சமிருக்கும் ? சும்மா வந்த பணம், அதே வழியில்தானே, யோசிக்கத் தூண்டும்? நம் நிறுவனங்களின் பாதுகாப்பைக் கவனிக்கும நிறுவனத்தின் கிளையாகத் துப்பறியும் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இவர்களை லேசாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தினேஷ், பைக் வாங்கியது, முதல் குறிப்பு! பிறகு ரொம்பவே கவனிக்கத் தொடங்கினார்கள். அப்புறம் என்ன? கந்தசாமியின் ஃபோன் வந்ததும். நீ ஏதாவது, குறிப்பு வைத்திருப்பாய் என்று வீட்டுக்குப் போய் பார்த்தேன். துப்பறியும் நிறுவனத் தலைவருக்கு வேண்டிய காவல் அதிகாரியைப் பிடித்தோம். உங்கள் இருவருக்கும் சேதம் ஏற்படாமல் காப்பாற்றுவதுதான், ஒரு பிரச்சினையாக இருக்குமே என்று எண்ணினோம். அதுவும், உன்னைக் கட்டி வைத்திருப்பது, சோனாவின் பேச்சு எல்லாம் பாலா சொன்னாளா? பாதி உயிர் போய்விட்டது! ” என்று உடல் சிலிர்த்தான் மோகனன். 

கட்டிலிருந்து தப்பிய விதம் குறித்துச் சாருமதி கூறுகையில், மூவருக்கும் சிரிப்பே வந்தது. 

தங்கையின் வீங்கியிருந்த நெற்றியை, மென்மையாக வருடிக் கொடுத்தாள் சாருமதி. 

“யாரும் சாப்பிட்டிருக்க வழியில்லை, எனக்குப் பசிக்கிறது. அதனால்….” என்று வழியில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்குள் காரைச் செலுத்தினான் மோகனசுந்தரம். 

“ஐயோ. எங்கள் உடை…” என்றபோதும், பெண்களும் மறுக்காது சாப்பிடப் போனார்கள். எல்லோருக்குமே நல்ல பசி! 

சென்னைக்குள் கார் நுழைந்ததும், “என்னை விடுதியிலேயே விட்டுவிடுங்கள், அத்தான். நீங்கள் இருவரும் விரும்பியது போல, என் காலில் நின்று வளரவே, இப்போது நானும் விரும்புகிறேன்” என்று சாருபாலா கூறியது, அவளது முழுமையான மன மாற்றத்தைப் பறை சாற்றியது. 

“செய், பாலா. உன் அந்த வளர்ச்சிக்கு எங்கள் துணை எப்போதும் இருக்கும்” என்றான் மோகனசுந்தரம். 

வீட்டுத் தனிமை கிடைத்த வினாடியிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும். ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியவே முடியவில்லை, காற்றுப் புக இடமில்லாத ஒட்டல்! 

அவரவர் தாகம் தீர்க்க அணைத்தவர்கள், அடுத்தவரிடம் இருந்தும், அதே வேகத்தை உணரவும், வியப்பும் திகைப்புமாக விழி மலர நோக்கினார்கள். 

“ஹே, சாரு நீ… நீயுமா?” என்று அவன் கேட்க “சுந்தர், உங்களுக்குமா?” என்று வினவினாள் அவன் மனைவி! 

“ஒரு காரணத்துக்காக மணந்தவர் நீங்கள்! பிரியவும் கூடும் என்று சொன்னீர்களே! அதை நினைத்து, எவ்வளவு வருந்தியிருக்கிறேன், தெரியுமா?”

யோசனையோடு மனைவியைப் பார்த்தான் மோகனன்.

“இங்கே வா!” என்று அவளைக் கை வளைவிலேயே அழைத்துச் சென்று இருவருமாக அமர்ந்தார்கள். 

“அப்போது என் மனநிலை அப்படித்தான், சாரு. ஆனால் அந்த இக்கட்டில் உன் வேதனையைத் தீர்க்க வேண்டும் என்பதும், நம் திருமணத்துக்கு ஒரு முக்கியமான காரணம், யாரோ ஒருத்தியான உன் வருத்தம் பற்றி, எனக்கென்ன என்ன இருக்க முடியவில்லை. அதைக் காதல் என்றும் அப்போது நான் நினைக்கவில்லை. இந்த தலைமுறையில், கொள்கைப் பிடிப்புள்ள ஒரு நல்ல பெண் வருந்தக் கூடாது என்று எண்ணினேன். அத்தோடு, நானும் ஒருநாள் மணந்துதான் ஆக வேண்டும். அது நீயாக ஏன் இருக்கக்கூடாது என்று தோன்றியது. ஆனால், பிரிவு பற்றிப் பேசியதன் பாதிக் காரணம், நீயும்தான்…”

“நானா? நான் எப்போது அப்படிச் சொன்னேன்?” 

“சொல்லவில்லை. ஆனால், ஒரு பெரிய இக்கட்டு தீர்வதற்காக, உன் தங்கைக்காக என்னை மணப்பவள், நீ. ஒருவேளை என்னோடான வாழ்வு, உனக்குச் சகிக்க முடியாமல் போய்விட்டால், விடுதலை கொடுக்க வேண்டும் என்றும் எண்ணினேன்” 

“ஓஹோ!” என்றாள் அவள் வியப்புடன். 

சட்டென அவனது பிடி இறுகியது “ஆனால், அன்று மொட்டை மாடிச் சுவர் மேல், நின்றாய், பார்! ஒருகணம் என் இதயத் துடிப்பே நின்று போயிற்று! நீ இல்லாத உலகில், எப்படி வாழ முடியும் என்று… அன்று, எனக்கு எல்லாம் தெளிந்துவிட்டது. என் வாழ்க்கை முழுதுக்கும் நீதான், இல்லாமல், எனக்கு ஒன்றுமே இல்லை என்று, என்னவோ ‘ஐயம் திரிபற, அறுதியிட்டு உறுதியாக’ என்று பழைய சொற்றோடர் ஒன்று சொல்வார்களே, அதுபோலத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அதனால்தான், இன்றைக்கும் மனம் நடுங்கிவிட்டது” என்றவன் ஒரு சிறு இடைவெளியின்பின், “ஆனால் அவ்விடம் எப்படி? அம்மையார் தியாகசீலியாகத் தங்கைக்காக, என்னை மணந்தவர்கள் ஆயிற்றே!” என்று கிண்டலாகக் கேட்டான் மோகனசுந்தரம். 

புன்னகை செய்தாள், சாருமதி. அவளது மனமாற்றம் பற்றி, அறிய ஆசைப்படுகிறான்! 

“சுந்தர், நான் உங்களைப்போல இல்லை, அதிரடியான திடீர் திருப்பங்கள் எதற்காகவும் என் மனம் காத்திருக்கவே இல்லை. அன்று, நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று பேசினோமே! நினைவிருக்கிறதா? ஒரு குறும்புச் சிரிப்போடு என்னைப் பார்த்தீர்கள். அந்த முகம், அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சித்திரம் பயின்றிருந்தால், இப்போது கூட அந்த முகத்தை வரைந்து விடுவேன். அதற்கு முன்பே, திருமணம் பற்றிப் பேசிய முதல் நாள், கையில் முத்தமிட்டீர்களே. எத்தனை நாள், அந்த இடம் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது தெரியுமா? இப்போது கூடத் திடுமென, அதே போல உணர்ச்சி தோன்றுவதுண்டு. அப்புறம்… எப்போதுமே, நீங்கள் அருகில் இருந்தால் துள்ளிக் குதிக்க வேண்டும் போல, உள்ளூர ஓர் உற்சாகம்! 

“பிரிவு பற்றிச் சொன்னீர்களே. அப்படி ஒரு நிலை வந்தால், எப்படி வாழ முடியும் என்று எவ்வளவு வருந்தியிருப்பேன்! 

“அதைப் பற்றி நினைக்கக் கூடாது, இப்போதைய மகிழ்ச்சியை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று, கஷ்டப்பட்டு மனதைத் தேற்றிக் கொள்வேன்”

“ஐயோடா கண்மணி, அனாவசியமாய்த் துன்பம் அனுபவித்திருக்கிறாயே” என்று பரிவுடன், அவள் முதுகை வருடிக் கொடுத்தான் கணவன். 

முறுவலித்து “எத்தனை நாள் நீங்கள் தூங்கும்போது உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு, சும்…மா உட்கார்ந்திருப்பேன். தெரியுமா? அந்த சுகத்தில், நானும் இரவில் தூங்க வேண்டும் என்பதே. எனக்கு மறந்துபோகும்!” என்று தன் செயல், மற்றும் உணர்வுகளைச் சாருமதி விவரித்தாள். 

அவனுக்குச் சிரிப்பு வந்தது, ஆனந்தச் சிரிப்பு! 

சிரித்துக்கொண்டே “ஆஹா! எனக்குத் தெரியாமல், இந்த வீட்டில் இப்படியெல்லாம் வேறு நடக்கிறதா? இதையெல்லாம், இனிமேல், நான் கவனித்துக் கொள்கிறேன், பார்” என்றான் அவன் கம்பீரக் குரலில்.

கிளுக்கிச் சிரித்து “தூங்கும்போது எப்படிக் கவனிப்பீர்களாம்?” என்று மடக்கினாள் மனைவி.

“அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றான் அவன் கெத்தாக. 

அன்றிரவு, மறக்க முடியாத ஓர் இரவாக அமைந்தது.

இனிய மயக்கத்தில் இமைகள் செருகியபோது, மோகனசுந்தரத்தின் கைகள், சாருமதியை இறுக அணைத்துக் கை வளையத்துள் கொண்டு வந்தன. 

காதோரம் சரிந்து “எப்படிக் கவனிக்கப் போகிறேன் என்று புரிகிறதா? நீ அசைந்தால், நானும் விழித்து விடுவேனே! அப்புறம் இருவருமேதானே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!” என்று நகைத்தான் அவன். 

இதுதான் அவளுடைய கணவன். எதற்கும் உரிய வழி ஒன்றைக் கண்டுபிடிப்பான். அவளைப் பொறுத்தவரை அது இனிய வழியாக இருக்கும்! 

மையலாய் நகைத்தவாறு, அவன் கைகளில், வாகாகச் சுருண்டு கொண்டாள் அந்தக் காதல் மனைவி. 

(சுபம்)

– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *