ஒரு பஸ்தோப்புக் குயில் பாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 23,164 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(குயில் பாட்டுத் தெரிந்தவர்களுக்கு மட்டும்)

“..நாற்கோணத்துள்ள பல நகரத்து வேடர்களும் வந்து பறவை சுட வாய்ந்த பெருஞ்சோலை….”

அது ஒரு பஸ் நிற்பாட்டுகிற இடம். ஊர்த் தலைநகரம். பல நாகரிகங்களும் சேர்ந்து ஒரேயொரு நாகரிகமாகப் பரிணமிக்கும் ஒரு சொர்க்க நரகம். இந்த லோகத்திலேயே சபிக்கப்பட்ட பிச்சைக்காரர்களைத் தாபரிக்கிற நரகம். இல்லை, அப்படி இல்லை… ‘சிக்’கென உடையணிந்த ரம்பைகள் நிறைந்த தேவலோகம். இதில் ஜயப்பாடு இருந்தால், இந்த பஸ் நிற்பாட்டும் இடத்தைப் பாருங்கள். அது ஒரு பெருஞ் சோலை!

இந்த பஸ் நிற்பாட்டுகிற இடத்தில் தான் ஒருநாள், அது வரைக்கும் தன் வேலை, தன் வீடு, தன் புத்தகங்கள் என்று இருந்த கதிர்காமநாதன் தன் குயிலைக் கண்டு கொண்டான். அவன், காரியாலயமொன்றில் ஒரு கிளார்க்கன். வீட்டில் ஒரு கவிஞன்; தெருவிலுந்தான்.

குயில் சின்னது, அழகானது. ஒரு நாளைக்கு ஒரு நிறத்தில் பஸ்சிற்கு நிற்கும். அது போகிற பஸ் வேறு. கதிர் போகிற பஸ் வேறு.

“…யதனிலோர் காலையிலே” அவன் யோசனை சூழலில் பதிந்துபோய்விட்டதில் குயிலைக் கண்டு கொண்டான். அவள் நிற்பதுவும் மணிக்கூட்டைப் பார்ப்பதுவும், தெருவில் வருவதையும் போவதையும் பார்ப்பதுவும் இசையாயிருந்தது கதிருக்கு.

“காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்”

என்ற இசை, அவள் அசைவில் அவனுக்குத் தெரிந்தது.

“…இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல், காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?”

என்ற மன எழுச்சியுடன், குயில் பஸ்சில் ஏறிப் போகும் வரை பார்த்துக்கொண்டு நின்றதில், அரைநாள் லீவாகிப் போய்விட் டது. காரியாலயத்தில் அவள் நினைவுதான்; வேறொன்று மில்லை .

“..காதலை வேண்டிக் கரைகின்றேன். இல்லை யெனில் சாதலை வேண்டித் தகிக்கின்றேன்” என்று குயில் கூவுவது கேட்டது.

எதிரொலியாய் அவன் முணுமுணுத்தான்.

“காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் சாதலோ சாதல்…”

‘கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் ஒன்றே யாதுவாய் உலகமெலாந் தோற்றமுற’ அவன் வீட்டில் போய் ஒதுங்கிக்கொண்டான். கற்பனையின் வீச்சில், கவிதையும் கற்பனையுந்தான்.

“நாளொன்று போயினது; நானு மெனதுயிரும்
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்…”

சிரித்துக் கொண்டான். அன்றிரவு அவனுக்கு நித்திரையில்லை .

அடுத்த நாள் விடிந்தவுடன் புத்தி மனஞ் சித்தம் புலனொன்றறியாமல்’ பஸ்தோப்பை அடைந்தான். அங்கே அவள் நின்றிருந்தாள்; தனியே இல்லை.

“நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!”

ஒரு நெடுத்த பயல். மெலிந்த பயல். தலைமயிருக்கு எண்ணெயும் இல்லை. இடுப்பில் அகலமான பெலற்றின் முனையின் ஒரு பாகம் சற்றே நீட்டிக்கொண்டிருந்தது. அவள் ஏதோ அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் சந்தோஷம் கதிருக்குத் தெரிந்தது. “குரங்கன்” என்று கறுவிக்கொண்டான்.

“வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்கனே
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
ஆவி யுருகுதடி ஆஹா ஹா!” என்பதுவும்

கண்ணைச் சிமிட்டுவதும் காலாலுங் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்…”

கதிர், நெட்டைக் குரங்கனை ஒரு பார்வை பார்த்தான். அதற்குள் அவன் ஒரு பஸ்சில் போய்ச் சேர்ந்தான். அவள் வேறொன்றில்…

காரியாலயத்துக்குப் போய்ச் சேர்ந்த கதிரை, அவன் நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். “என்ன ஒருமாதிரி இருக்கிறாய்?”

பிறகு, ஒரு கிழமை அவளைக் காணவில்லை. நாளுக்கும் கிழமைக்கும் என்ன நேர வித்தியாசம் இருக்க முடியும்?

‘பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயரெனது மார்பை யெலாங் கவ்வுவதே!’
அன்று பார்த்தால்….

ஒருவன் நன்றாக உடையணிந்திருந்தான். அவன் முகத்துச் சதைகள் பருத்துத் தொங்கிக்கொண்டிருந்தன. அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். அவன் கையில் ஒரு விறைத்த தோல் பை. நரைமயிர்களும் அழகாய்த்தான் இருந்தன. குயில் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள், ஏதேதோ. அவள் சிரிக்கிறாள். குலுங்குகிறாள். நெளிகிறாள்.

கதிர் கிட்டப் போகவேயில்லை. தூர நின்றே அந்தக் கிழ மாடனைப் பார்த்து முறைத்தான். பஸ்கள் வந்து சேர்ந்து வெவ்வேறு திசைகளில் போய்ச் சேர்ந்தார்கள்.

கதிர் இன்னும் நம்பிக்கை வைத்திருந்தான். அவள் தன்னிடம் வந்து ஒருநாள் பேசப்போவதாக நம்பினான். புளகாங்கிதம் அடைந்தான்.

“புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான் கண்டு மென்மையுறக் காதல் விளையாடி னேன் என்றீர்; என்சொல்கேன்! எங்ஙனுயவேன்! ஏதுசெய்கேன், ஐயனே! நின்சொல் மறுக்க நெறியில்லை; ஆயிடினும் என்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்? நின்மேல் சுமை முழுதும் நேராகப் போட்டுவிட்டேன்.”

பிறகு, அவளேதான் நினைவு முழுவதும். வீட்டுக்குப் போகும் போது,

“ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடியிருந்த விழிநான்கு”

என்பதில் ஆழ்ந்தான். பிறகென்ன?

“காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல்”

என்ற பல்லவிதான். இந்தப் பல்லவியோடு இதையும் சேர்த்துக் கொண்டான்.

“…கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.”

ஒருநாள்,

கதிர், தெருவின் இக்கரையிலிருந்து அவள் வழக்கமாய் நிற்குமிடத்தை நோக்கியபடியே தெருவைக் கடந்து கொண்டிருந்தான். அவள் அங்கு இல்லை என்றாலும்,

“பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்கனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் …”

‘கிறீச்’ சென்று ஒரு பஸ்சின் பிறேக் சத்தம். கதிர், ரத்தம் சூழ விழுந்தான். சிலர் அவனைத் தூக்கிப் பார்த்தபோது அவன் இறந்திருந்தான். அவன் சட்டைப்பையில் ஏதேதோ கவிதைத்துண்டுகள், ரத்தத்தில் நனைந்து போயிருந்தன. நின்று, விபத்தைப் பார்த்துவிட்டுப் போகிற கார் வரிசையில் ஒரு கார் வந்தது. அதில் குயில் இருந்தது. அதன் கழுத்தில் தாலி.

“என்னால் இவைகளைப் பார்க்க முடியாது” என்று, குயில் கண்ணை மூடியபடி புருஷன் பக்கம் சாய்ந்து கொண்டாள்.

அவன் வேகமாகக் காரைச் செலுத்தினான்.

ஒரு பொலிஸ்காரன் ஒரு கவிதைத்துண்டைப் பார்த்தான். எல்லா வரிகளிலும் ரத்தம் ஊறியிருந்தது; ஒரு வரியைத் தவிர.

‘காதலோ காதல்! காதல் கிடைத்திலதேல் சாதலோ சாதல்!

– 1975

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *