ஒரு ஊதா பூ நிறம் கூடுகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 19,991 
 
 

“அவள் எதற்கோ திரும்புவாள்….. நான் எனக்கென்று நினைத்துக் கொள்வேன்…”-இப்படித்தான்…. இந்தக் கதையை நான் ஆரம்பிக்க வேண்டும்.

சரி… இது யார் பற்றிய கதை…? எப்படியும் சுற்றி சுற்றி இவன் நியந்தாவுக்குத்தான் வருவான் என்று நினைத்தீர்களானால் அதுவும் சரியே. ஆனால் அந்த சரிக்குள் இப்போது நான் போக முடியாது. எழுதும் நானே நான் அல்ல. இக் கதையை எழுதுபவன் இக் கதையின் ஒரு கதாபாத்திரம். அவன் காணும் காட்சிகளில்… காலத்தை பின்னோக்கி நகர்த்தும் வேலையை மட்டுமே நான் செய்கிறேன்….. எப்போதும் போல.

தோழர்களே….. அவள் மிக அதி உன்னதமான ஒரு ஜீவன். அவள் அழுகை கூட சிரிப்பது போலவே இருக்கும். சிரிப்பு தேசத்தின் சிருங்கார மழைத் துளிகளால் செய்த மேக ஓவியம் அவளென்றால்…………!!!!!………??????????…… நான் அப்படித்தான் கூறுவேன். அப்படி, உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெண்.. உங்கள் அருகிலேயே இருக்கிறாள்… பேசுவதற்கு அத்தனை சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது…. நீங்கள் அந்த சந்தர்ப்பங்களை தவற விடுவீர்களா….?….. விட்டு விட்டு, வெறும் ஜாடைகளால் மட்டுமே அவளுடன் பேசுவீர்களா….?!!!!!….. நான் பேசி இருக்கிறேன்…. ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல.. ஒரு மாசம் அல்ல இரண்டு மாசம் அல்ல… மூன்று வருடங்கள். கண் ஜாடைகளாலும் கை ஜாடைகளாலும்… உடல் மொழிகளாலும்…எங்கள் மொழிகளில் இல்லாத கவிதை ஒன்றும் எப்போதும் இருந்து கொண்டேதான் இருந்திருக்கும். அது எழுத்துப் பிழையாக கூட இருக்கலாம்…. அல்லது பிள்ளையின் கிறுக்கலாகவும்.

எங்கள் வகுப்பில்,அவள் இடது பக்க வரிசையில் முதலாவதாக அமர்ந்திருப்பாள். நான் வலது பக்கம் மூன்றாவது வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருப்பேன். அவள் எதற்கோ திரும்புவாள். நான் எனக்கென்று எடுத்துக் கொள்வேன். அருகில் நண்பர்கள் என்னை பார்த்து ” மாப்ள உன்ன தான் பாக்காறாடா” என்பதுபோல மௌனப் புன்னகை தருவார்கள்.. உள்ளுக்குள் கூழாங்கற்கள் உருள ஒரு ஆற்றைக் கடந்திருப்பேன் மதியத்துக்குள்.

அவள் பெயர்….ம்ம்ம்…. பொட்டுக்கன்னியாகவே இருக்கட்டும்…. அவளின் உண்மையான பெயரை விட இது எனக்கு நெருக்கமான பெயராகவே இருந்தது. இருக்கிறது.. வாழ்வின் ஒரு கட்டத்துக்கு மேல் பெயரில் தானே நாம் அடையாளப் படுத்தப் படுகிறோம்….! அது நிஜமும் கூட.. யோசித்துப் பாருங்கள்.. உங்கள் பெயரை விடுத்து நீங்கள் யார்…நம் காலம் முழுக்க நம்மையும் அறியாமல், நம் பெயர் கொண்டவர்களை நாம் நெருங்கிக் கொண்டு தானே இருக்கின்றோம்… மனதளவில்.

வகுப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். என் பார்வை முழுக்க அவள் வைத்திருக்கும் ரோசா பூவின் மேலேயே இருக்கும். ஏதோ நான் கூப்பிட்டது போலவே சட்டென திரும்பி என் கண்கள் கண்டு “என்ன” என்று புருவம் தூக்கி ஜாடை செய்வாள்.. அவளின் திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல்… அசடு வழிய “இல்ல.. ஒண்ணுமில்ல..” என்று நானும் ஜாடை செய்வேன். அவள் எல்லாம் புரிந்தவளாய் மெல்ல சிரித்து விட்டு திரும்பிக் கொள்வாள். மெஸ்மரிசம்… நோக்கு வர்மம் பற்றி அப்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரியாத கணங்களில்தான் எல்லாம் தெரிந்தது போல நமக்கான வாழ்க்கை கடந்து விடுகிறது.

பெரும்பாலும் பெண்கள் உணர்தலில் ஒரு படி மேல்தான் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு பெண்ணிடம் காதலோடு நெருங்குகிறீர்களா…. இல்லை காமத்தோடு நெருங்குகிறீர்களா என்பதை சட்டென கண்டு பிடித்து விடும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அவளுக்கு அதிகமாகவே உண்டு. என் பார்வையை அவள் ரசித்தாள். ஒரு போதும் அவள் என்னை ஒதுக்கியது இல்லை. என் ரசனையை அவள் ரசிக்கத் தயங்கியதே இல்லை. என் தத்து பித்து கவிதைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி… எனக்கு நேராக பக்கவாட்டில் இருக்கும் அனிதாவிடம் (பெயரை மாற்றி இருக்கிறேன்) கொடுக்க, அடுத்து அது அமுத மொழி (பெயரை மாற்றி இருக்கிறேன்) இடம் போய், அடுத்து சரிதா (பெயரை மாற்றி இருக்கிறேன்) விடம் போய் அடுத்து பொட்டுக்கன்னியிடம் போகும்… அவள் வாங்கியதும் இன்னும் தலை குனிந்து கொள்வாள். இன்னொரு விஷயம் இங்கு சொல்லியே ஆக வேண்டும்… அந்த வகுப்பு நடத்தும் ஆசிரியை பெயரும் அவள் பெயர் தான்.. பொட்டுக்கன்னி அல்ல…

நான் அடிக்கடி பொட்டுக்கன்னியைப் பார்ப்பதை பார்த்து விட்டு யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் புரியும் பாஷையில் நாக்கை கடித்து “வேண்டாம்” என்பது போல மிரட்டும்.

நானும்…. “இல்ல மாம்..” என்பது போல… கண்களாலே திகைப்பேன். புருவங்களால் சிரித்து விட்டு அவளை ஒரு கணம் நோட்டமிடும். (இத்தனையையும் பொட்டுக்கன்னியின் கசின் என் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டுதானிருப்பான் (எங்களோடு தான் அவனும் படிக்கிறான்.. எனக்கு நண்பனும் கூட) என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்வான். கீழே குனிந்தவள்…. சட்டென தலை தூக்குவாள்….சிலர் சிரிக்கும் போது உதடு மட்டும் சிரிக்காது.. கண்கள் கூட சிரிக்கும்.. முகமே சிரிக்கும்… அப்போது தான் பூத்த ஒரு பெயரில்லாத பூ போல…. நான் பூ மலரும் தருணத்தை எப்போதுமே அவளின் புன்னைகையோடுதான் யோசிப்பேன். இரண்டுக்கும் ஓரிரண்டு வித்தியாசங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால்…. அவளின் புன்னகை ஒரு படி, மேல்… நான் படி தாண்டியே பழக்கப்பட்டவன் என்பதால்.. எனக்கு மட்டும் இன்னும் ஒரு படி மேல்…..

மூக்குத்திக்காரி அவள்.

அப்போது தான் தட்டு தடுமாறி ஜன்னல் கம்பிகளுக்கிடையில் முட்டி மோதி உள்ளே வந்திருக்கும் சூரிய கதிர் ஒன்று அவள் மூக்குத்தியில் பட்டு திசை திரும்பி என் முகத்தில் படுவதாக நான் கண்கள் கூசுவேன். அது மாய யதார்த்தங்களில் வளரும் என் அன்பை சொல்லும் மெய்பித்தலாக நான் உணர்ந்து கொள்வேன்…”இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்ல… இன்னும் நிறைய எழுதுவேன்….” என்பது போல ஒரு புன்னகையை தந்து விட்டு வேறு பக்கம் பார்த்துக் கொள்வேன். அதற்கும், எல்லாம் புரிந்தவளாய் ஒரு புன்னகை மட்டுமே தருவாள். எல்லாம் புரிந்தவளிடம்…. எங்கு இருந்து ஆரம்பிப்பது….. ஆரம்பம் ஒன்றும் உண்டோ…? இங்கு… உண்டென்பதில் இல்லாத ஆரம்பங்கள், தேடியேதானே சுழலுகிறோம் என்று பின்னாளைய பிரிவுகளில் நான் புரிந்ததுண்டு.

ஒரு நாள் நான் தாமதமாக வகுப்பு வந்த போது… மெல்ல திரும்பி… “ஏன் லேட்” என்று ஜாடை செய்தாள்…. “பஸ் லேட்” என்று ஜாடை செய்யும் போது… பட்டென வந்து என் கழுத்தில் விழுந்தது எங்கள் எகனாமிக் சாரின் கையில் இருந்து வீசப்பட்ட சாக்பீஸ். கணம் ஒன்றில் அவர், என் ஜாடையில் வால் பிடித்து திரும்ப, பொட்டுக்கன்னி சட்டென திரும்பி குனிந்து கொண்டாள்… அவரால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை…….(ஒரு வேளை வேண்டும் என்றே விட்டு விட்டாரோ…) (வேர்ட்ஸ் சோ பார் – வாழ்க…) (வேர்ட்ஸ் சோ பார்-அடிக்கடி அவர் சொல்லும் வாசகம் )

எங்கள் வகுப்பிலேயே ரெம்ப குட்டி பெண் இந்த பொட்டுக்கன்னி. கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடித்த ஒரு பெண். நன்றாக படிப்பாள்… பாடவும் செய்வாள்.. அவள் பாடிய வசீகரா பாடல் இன்றும் என் காதில் தேன் சிந்தும்….. தேன் மட்டுமே சிந்தும், தெவிட்டாத குரல்….பிடித்த பாடலை மனதுக்கு பிடித்த ஒருத்தர் பாடும் போது அந்த பாடலின் வரிகளில் எறும்பு சேர்க்கும் சர்க்கரையும் சேர்ந்து விடுவதில் கூட்டாஞ்சோற்று மண் வாசனையை வராத மழையும் தருவதாகப் படுகிறது. பட்ட நொடிகளில் எல்லாம் அவளின் பாடலே பாடுகிறது….காலத்தின் கைப்பிடி சில போது குரல் வலையத்தையுமே நெருக்கி விடுகிறது… அப்படி நெருக்கி விட்டதோ என்னவோ… பாடலின் உச்சிக்கு போய் இருக்க வேண்டியவள்… கடவுளுக்கான பாடலை மட்டுமே பாடிக் கொண்டிருக்கிறாளோ…. என்று நான் யோசிப்பதுண்டு,……யோசனைகளில் பாடாத ஊமை மனதுக்கும் ஒரு பாடல் இருக்கத்தானே செய்கிறது…..

அருகருகே அமரும் சமயங்களில் நான் அவளை யாரோ ஒருத்தி என்பது போலவேதான் கண்டும் காணாமல் இருப்பேன்.. அவளும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.. அவரவர் இருக்கைக்கு போன பின்தான் இத்தனை ஜாடைகளும்….. ஆனால் மூன்று வருடங்கள் முடிந்து அந்த கடைசி நாளில் எங்கள் கல்லூரி மைதானத்தின் முகப்பில் அமர்ந்தபடி நான் இருக்க .. எதுவும் பேசாமல் மெல்ல ஒரு காற்றில் ஒரு ஊதாப் பூ நிறம் கரைவது போல ஒரு காலத்தின் கைபிடிக்குள் அவள் காணாமலே போனாள்… அன்று இரவு நான் மெல்ல விசும்பினேன்….. ஒரு மூட்டை வார்த்தைகள் என் அறையெங்கும்…. உருண்டு கிடந்தன… பசியோடும்….ருசியோடும்….

தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே….. நான் காத்தும் இருக்கவில்லை…. அவள் பார்த்தும் வரவில்லை….

எல்லாரும் கடந்து போன நட்பு வட்டத்தில் நாங்கள் நண்பர்கள் ஆனோம். அதன் பிறகான தொலைபேசி உரையாடலில்…. “ச்சே… மூணு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேன்… ” என்று நான் கூறும் போது…. “இல்லைடா….. அதனாலதான் இன்னும் அதே அன்போடு இருக்கற…” என்பாள்…..(எல்லாம் புரிந்தவளாயிற்றே…) நான் யோசித்திருக்கிறேன்…. இதுவரை நான் கோபமே படாத ஒருத்தி இந்த பொட்டுக்கன்னிதான்…. ஏன் என்று என்னையே கேட்கிறேன்….. எனக்கு கேட்காதது போல..(எனக்கும் கொஞ்சம் தெரியத்தானே செய்கிறது இப்போதெல்லாம்) அவ்வவ்போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்… அவளின் பாரதி, கல்லூரி காலத்தில் நிறைய பாடினார்…. என் பாரதி… ஊமையாகிக் கிடந்தார்…. இன்று என் பாரதி முழங்கிக் கொண்டும்.. அவள் பாரதி… மௌனித்தும் கிடக்கிறார்கள்…. காலங்களை நாங்கள் ஒருபோதும்… கடக்க எண்ணியதே இல்லை…. காற்றடித்த திசையெங்கும் சாயும் கிளையென ஒரு வாழ்வு அவளுக்கு… காற்றில்லா செவ்வாயில் மூச்சடைத்தே பழகிய நான் ஆத்மாக்கள் தேடும் சந்தர்ப்பத்தில் பூதங்களின் கையில் நான் கதையை ஆரம்பித்த கதையின் கதாபாத்திரம் கதையினிடையே மயங்கிக் கிடந்த ஒரு நூலிலையில் வேறு வழியே இல்லாமல் நானேதான் கதையை சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன்… ஆனால் கதையை முடிக்கப் போவது நானும் அல்ல..

சரி யார்….. ? அதையும் கூறுகிறேன்…. சமீப காலமாக நானும் சந்தோஷ் ஜியும் பேசிக் கொள்ளும் அலைபேசியின் உரையாடலில் இடையிடையே வந்து பொட்டுக்கன்னி, ஏதோ சொல்ல முயற்சிக்கிறாள்……. அதாவது ஒரு மாதத்திற்கு முன் சந்தோஷ்ஜி -“ஜி…. உங்க கூட சேர்ந்து இன்னோர் குரலும் கேட்குதுஜி”… என்று கூறினார்…… நான் அவர் விளையாடுகிறார் என்று நினைத்து….. “ஜி… அதும் நான்தான் ஜி.. இல்ல நியந்தாவா இருப்பா….” என்று நானும் விளையாடினேன்…….

ஆனால் அவர் அடிக்கடி சொல்ல, எனக்கே ஒரு மாதிரிதான் இருந்தது. யோசிக்கத் தொடங்கினேன்….நான் பேசும் போதும் வேறு ஒரு மூச்சு சப்தமும் கேட்பதை நான் உணரத் தொடங்கினேன்………. ஒரு நாள் சந்தோஷ்ஜியின் அலைபேசி எண்ணில் ஒரு பெண் குரல்…. கொஞ்சம் யோசித்தபடியேதான் பேசினேன்… “இது சந்தோஷ்ஜி நம்பர் ஆச்சே.. நீங்க யாரு…”

“டேய் விஜய்… நான் தாண்டா பொட்டுக் கன்னி……….. .. உன் கூட பேச நான் என்னெல்லாம் பண்ண வேண்டி இருக்கு… அலைக்கற்றைக்கிடைய பயணிக்கறது அத்தன சுலபமல்ல முட்டாள் கவிஞனே…. உன் நியந்தாதான் வழி சொல்லிக் கொடுத்தா….”

நான் மிரண்டு போனேன்…நியந்தாவா…. அவள் எப்படி இவளுடன் பேச முடியும்….. நான்… யோசித்தபடியே…… இருக்க.. என் பின்னால் ஏதோ நிழல்கள்… எப்போதும் நியந்தாவின் ஆன்மா… அறைக்குள் அங்கும் இங்கும் அலையும்.

சரி… ஆனால் இன்று இரண்டு பேர் இருப்பதாக தோன்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *