எழுத்தாளனின் மதம்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 21,400 
 
 

முதல் நாள் மாலை வீழ்ந்த சூரியன் இன்று காலை எழுந்து வருவான் என்று எதிர்நோக்கியவாறே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் சர்க்கரை வியாதிக்காரர்கள் சங்கமிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரையான சென்னை மெரீனாக் கடற்கரை.

கடலலைகள் தாவிக் குதித்து முத்தமிட்டு சத்தமிட்டு மிச்சமான எச்சிலை நுரையாக மணற்பரப்பில் ஒவியம் வரைந்துக்கொண்டிருக்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்த தீபாவின் முதுகுக்கு பின் வந்து அவளின் மீன்விழி கண்களை பொத்தி தன் மார்பில் இழுத்து அணைக்கிறது ஓர் உருவம்.

“ஹே மணி என்ன ……” என்று அவள் பேசி முடிப்பதற்குள்

“மணி இப்போ ஏழு முப்பது “ என்று சிலேடையிடுகிறான் மணிமாறன்.

” தீபு ! வந்து ரொம்ப நேரம் ஆச்சா..? நான் லைட் ஹவுஸ் வரைக்கும் இன்னிக்கு ஜாக்கிங் போனேன்டா அதான் லேட். சாரிடீ”

“ம்ம் சரி கவிஞரே..! நேற்று என்ன கவிதை எழுதினீங்க? இல்ல கதை எழுதினீங்களா ? . கண்டிப்பா எனக்காக எதுவும் எழுதி இருக்க மாட்ட. அவனவன் லவ் பண்ற பொண்ணுக்கு மானே, மயிலே, குயிலே ந்னு என்ன என்னவோ ஐஸ் வச்சி எழுதுவான். நீ என்னடான்னா அரசியல், சமூகம் ,கலாச்சாரம்ன்னு எப்போ பார்த்தாலும் ஒரே சோசியல் கவிதை தான் எழுதுற.. போடா செம போர்டா..” என்று பொய்யாக அலுத்துக்கொண்டாள் தீபா.

“டோண்ட் வொரிடா . கவிதைக்கே எப்படி கவிதை எழுத முடியும்.. நீயொரு தமிழ் களஞ்சியம் தீபு.. உன் கண்ணு சிலப்பதிகாரம், உன் நெற்றியும் மூக்கும் வைரமுத்து கவிதைகள். உன் இதழ்கள் இரண்டும் திருக்குறள்கள். உன் சங்கு கழுத்து சங்க இலக்கியம். அங்கும் இங்கும் குலுங்கும் அங்கங்கள் கலிங்கத்துப்பரணி. … ”

”போதும் போதும் போதும் கம்பனே என் காதலனே போதும்டா போதும் …. பாவி விட்டா போதுமே.. உனக்கு ..!! ……….ஆனாலும் இந்த சமாளிப்புகேஷன் பேச்சுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல. “

”ஒகே டா நாம ரூம்க்கு போகலாம். இன்னிக்கு என்ன டிபன் கொண்டு வந்திருக்கிற தீபு?”

“ஆப்பம் வித் தேங்காய் பால். உன் மாமியார் உனக்காக ஆசையா செஞ்சி கொடுத்தாங்க. “

“ வாவ்….கொடுத்த வச்சவண்டா மணி நீ…இப்படியொரு மாமியார் கிடைக்க ” என்று தனக்குதானே பேசிக்கொண்டான். பின்பு, தன் பைக்கில் தீபாவுடன் தான் வாடகைக்கு இருக்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு சென்றான்.

மணிமாறனுக்கு சொந்த ஊர் தருமபுரி. சென்னை ஓ எம் ஆர் சாலையிலுள்ள ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் கணினி மென்பொருள் விரிவுரையாளன். இருபத்தைந்து வயதுள்ள இளைஞன். பகல் வேளையில் அலுவலக வேலை. இவனுக்கு இரவுப்பணியாக இருப்பது எழுத்துப் பணி. ஆம்…மணிமாறன் பகுதி நேர எழுத்தாளன். தன்னை ஓர் எழுத்தாளன் என்று அடையாளப்படுத்திக்கொள்ள தீவிரமாக முயன்று வரும் துடிப்பான வாலிபன்.

அலுவலகத்தில் தனது குழுவில் வேலை பார்க்கும் தீபாவை காதலிக்கிறான்.தீபாவும் தான்.

தீபா சென்னையில் அவள் பெற்றோருடன் வசிக்கிறாள். தினமும் காலை உணவு எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சி செய்யும் தன் காதலனை பார்க்க கடற்கரைக்கு வருவாள் . பின்பு இருவரும் மணி தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்து சாப்பிட்டு ஒன்றாக பைக்கில் அலுவலகம் செல்வது வழக்கம். கைநிறைய சம்பாதிக்கும் அழகான, பண்பான, துடிப்பான இளைஞன் என்பதால் தீபாவின் அம்மா இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்.

இவ்வாறு சுமூகமாக சென்ற மணிமாறனின் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக வந்தது அந்த சம்பவம்.

ஒரு வார இதழில் மணிமாறன் எழுதிய ”மதமும் காதலும்” என்ற தொடர் கவிதைக்கு சிறந்த ’சமுதாய நல்லிணக்க கவிதை’ என்று பாராட்டி விருது வழங்குவதாக அறிவித்தது சென்னையிலுள்ள பிரபல தனியார் NRM பல்கலைக்கழகம்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து புதிய விடியல் தொலைக்காட்சியின் செய்தியாளர் , மணிமாறனை பேட்டியெடுக்க அவன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் மணிமாறனுடன் எடுத்த சிறிய பேட்டி……

”மதமும் காதலும் என்ற கவிதைக்கு யுனிர்வர்சிட்டி கொடுக்கும் விருது பற்றி உங்க கருத்து ? ”

“ எதிர்பார்க்கல சார். கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கு. கெளரமா நினைக்கிறேன். நான் சொன்ன கான்செப்ட் சரியா மக்களுக்கு சென்றடையனும். அதுதான் எனக்கு சரியான விருதா இருக்கும்”

“ சரி. நீங்க கவிதை எழுதினதுப்போல மத்தவங்களுக்கு நீங்களே எடுத்துக்காட்டா இருப்பீங்களா ?”

“ ஒய் நாட்.. இவ என் லவர். நேம் தீபா ஆரோக்கியராஜ். கிறிஸ்டியன். என் பேரு மணிமாறன், இந்து. நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரத்தில எங்க வீட்டுல பேசி மேரேஜ் பண்ணிக்க போறோம். ”

“ ஓ குட் ! உங்க லவர் கூட சேர்ந்து நிக்கிறீங்களா? . வீடியோவுல பதிவு பண்ணிக்கிறோம் “

“ யா . ஸீயூர்..! “ என்ற மணிமாறன் தீபாவுடன் இணைந்து நின்றான். கேமரா இருவரையும் நன்றாக அழுத்தமாக உள்வாங்கிக்கொண்டது.

“மிஸ். தீபா..! உங்க லவர் ஒரு கவிஞராகவும் , சீர்திருத்த சிந்தனைவாதியாகவும் இருக்கிறார் சோ உங்களுக்கு எந்தளவு பெருமையா இருக்கு..?”

“ என்ன சார் இப்படி ஒரு கேள்வி. மணி கிட்ட பிடிச்ச விஷயமே இந்த ரைட்டிங் ஸ்கில்ஸ் அண்ட் இந்த திங்கிங் தான். ரொம்ப பெருமைப்படுகிறேன். கிரிக்கெட்டர் சச்சின் மனைவி எப்படி பெருமைப்பட்டங்களோ அதைப்போல.. அதைவிடவும் பெருமையா நினைக்கிறேன்.”

“ வாவ் கிரேட்.. சோ உங்க மேரேஜ்ல எந்த ப்ராப்ளமும் இருக்காது . பட் எதாவது ப்ராப்ளம் வந்தா? “

“ யார் எதிர்த்தாலும் அவங்களுக்கு எங்க லவ் பற்றி புரிய வைப்போம். புரிஞ்சுக்கலைன்னாலும் நாங்க பிரிய மாட்டோம்.” என்று ஆணித்தரமாக சொல்லும் தீபாவை தன் கைகளால் அரவணைத்து பெருமிதமாக மணிமாறன்

“ இதுதான் சார் எங்க லவ். மதம் ஒரு போதும் எங்க காதலுக்கு தடையா இருக்காது. அப்படி தடையா இருந்தாலும் அந்த மதத்தை நாங்க தடை செய்வோம். “

“ வெரிகுட் … உங்க இருவரையும் எங்க புதிய விடியல் சேனல் சார்பா பாராட்டுகிறோம். ஆல் தி பெஸ்ட்.. விருதுக்கும் உங்க வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள் !! “

பேட்டி பதிவாகி விட்டது. நாளை மாலை ஒளிபரப்பப்படும் என்ற தகவல் சொல்லி விடைப்பெறுகிறது புதிய விடியல் தொலைக்காட்சி குழு.

—————————————————————————-
தருமபுரி அருகிலுள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமம்..!

மணிமாறனின் பேட்டியை புதிய விடியல் அலைவரிசையில் மணிமாறனின் பெற்றோர்கள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

“ ஏன்டி.! உம் பையன் வேலைக்கு போனான்னா இல்ல கண்ட கழுதையை கல்யாணம் பண்ணிக்க போனான்னா? எவ்வளவு தைரியம் இருந்தா காதல் கீதல்ன்னு டிவிலயே பேசுவான். “ மணிமாறனின் தந்தை தன் மனைவியிடம் ஆவேசமாக கத்துவதைக்கண்டு, அருகிலிருக்கும் மற்ற சொந்தக்காரர்கள் விரைந்து வந்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல அவரின் கோபத்தை அதிகரிக்க செய்தனர்.

“ ஏம்பா சுந்தரம்.. உம் பையன் கண்ட கண்ட ஜாதியில பெண் எடுத்தா இந்த ஊர்காரங்க ஒத்துக்கமாட்டாங்க. ஏன் உம் பையனுக்கு நம்ம ஜாதி பொண்ணுன்னா குறைச்சலா போச்சா..” மணிமாறனின் பெரியப்பா

”அந்த பொண்ணு செவ செவன்னு வெள்ளையா இருக்குன்னு பய மயங்கிட்டான் போல” மணிமாறனின் சித்தி

“இயேசு சாமி கும்பிடுற ஜாதியில பொண்ணு எடுத்தா… அண்ணா.! நம்ம குலதெய்வம் பாவம் உம்மை சும்மா விடாது. ஆமா சொல்லிட்டேன். சாமி குத்தம் ஆயிடும்..” மணிமாறனின் சித்தப்பா.

“ அவன் அந்த பொண்ணை கல்யாணம் கில்யாணம் பண்ணிட்டு ஊருக்குள்ள வரட்டும்.. சொந்த அக்கா பையன்னு பார்க்கமாட்டேன். கண்ட துண்டாம வெட்டிப்புடுவேன்” மணிமாறனின் தாய்மாமன்.

“ஏங்க கிளம்புங்க நம்ம ரெண்டு பேரும் அவனுக்கு போன் போட்டு என்னான்னு கேட்போமே.. என்ன விவரமுன்னு கேட்டு பாப்போங்க “ என்று மணிமாறனின் அம்மா தன் கணவரிடம் கெஞ்சுகிறார்.

—————————————————————————-
அதே சமயம்….

சென்னை மைலாப்பூரிலுள்ள தீபாவின் வீட்டில்..

தீபாவின் தந்தை… “ தீபா……..! ஏய் தீபா…..! இங்க வாடி…. என்ன இது..? “ டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மணிமாறன் பேட்டியில் தீபாவும் மணிமாறனுடன் நெருங்கி நின்று பேட்டி கொடுக்கும் காட்சியை சுட்டி காட்டுகிறார்.

“டா டாடி… நானும் மணியும் லவ் பண்றோம் பா. ப்ளீஸ் டாடி . ஹீ இஸ் குட் ரைட்டர். “

“ஸ்டாப் இட் தீபா.. படிச்சு வேலைக்கு போயி கையில கொஞ்சம் காசு பார்த்தா நீயே எல்லாம் முடிவும் பண்ணிப்ப இல்ல. அப்பான்னு நான் எதுக்கு இருக்கேன்.? என்கிட்ட சொல்லகூட உனக்கு டைம் இல்லையா..? நானே டிவி பார்த்து தெரிஞ்சக்கணும். ம்ம்ம் “

“ டாடி.. மம்மி க்கு இது தெரியும். உங்ககிட்ட அவனை நேர்ல கூட்டி வந்து சொல்லாம்ன்னு இருந்தேன். அதுக்குள்…..”

“ ஓ அம்மாவும் பொண்ணும் முடிவு பண்ணிட்டீங்களோ.. என்ன நான்சி இது ? என்னை இன்சல்ட் பண்றீயா நீ ? “

“ இல்லீங்க.. நீங்க பிசியா இருந்தீங்க. சும்மாவே டென்ஷன் ஆவிங்க. அதான்.. மெல்லமா ரிலாக்ஸ்சா சொல்லலாம்ன்னு இருந்தேன். நீங்க வீட்ல இருக்கிற நேரத்தில இன்னிக்கு டிவில இந்த இண்டர்வியூ வரும்ன்னு நான் நினைக்கலங்க. மணி நல்ல பையனுங்க. நீங்களே பாருங்க . உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் நமக்கு ஒரே பொண்ணு அவ இஷ்டப்பட்ட வாழ்க்கை அமையட்டும். கர்த்தர் நமக்கு நல்ல அன்பான பையன்னை காமிச்சு இருக்கிறார். “ என்று தீபாவின் அம்மா தன் கணவரை ஒருவழியாக சமதானம் செய்தார்.
“ ஓகே நான்சி. பையன் நம்ம ஆளா ? “

“ இல்லப்பா அவன் இந்து.” தீபா உற்சாகமாக சொல்ல

“ ம்ம் சரி நாளைக்கு ஈவினிங் நீங்க ரெண்டு பேரும் சாந்தோம் சர்ச்க்கு வாங்க.” என்று தீபாவின் தந்தை ஒரு புதிர் போட்டார்.

—————————————————————————-

மறுநாள் காலை சென்னை மெரீனா கடற்கரை சாலையிலிருக்கும் காந்தி சிலைக்கு பின்புறமுள்ள ஒரு பூங்காவில் மணிமாறனுடன் தீபா “ மணி . என்ன ஒன்னும் சொல்லாம இருக்க..!. இன்னிக்கு ஈவினிங் அப்பா உன்னையும் என்னையும் சர்ச்க்கு வர சொல்லி இருக்கிறார். போகலாம்ல?”

“ தீபு.. நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்டா, நேத்து டிவி பார்த்த உடனே ஊர்லிருந்து அப்பா போன் பண்ணினார். உன்னை கல்யாணம் பண்ணனும்ன்னு நான் பிடிவாதம் பண்ணினா. என்னை ஊருக்கே வர வேண்டாம். இங்கே இருந்து நாசமா போன்னு சொன்னார்டா”

“ மணி.. என்ன இது இப்படியுமா பேசுவாங்க.. இத ஏன் என்கிட்ட சொல்லல. நேத்து உனக்கு மூணு டைம் கால் பண்ணி இருந்தேன்ல..?”

“ம்ம் தீபு உன்னையும் ஏன் அப்செட் பண்ணனும்ன்னுதான் சொல்லல.. அதான் இப்ப சொல்றேன்ல.. “
“ சரி சரி என்னதான் அவங்களுக்கு பிரச்சினையாம் ? “ தீபா படுகோபமாக கேட்க

“ தீபு எங்க ஊர்ல ஜாதி ஜாதின்னு ரொம்பவும் செண்டிமெண்ட்டா இருப்பாங்க. முற்போக்கா யோசிக்கிற அளவிற்கு அங்கு இருக்கிற சில அரசியல் கட்சிக்காரங்க விடுவது இல்லை. இதுதான் உண்மை. நானும் எவ்வளவோ பேசி பார்த்தேன். அப்பா ரொம்பவும் பிடிவாதம் பண்றார். நான் ஊருக்கு போனா ஒன்னு என்னை வெட்டி சாக அடிப்பாங்களாம் இல்லைன்னா அம்மாவும் அப்பாவும் தூக்குல தொங்குவாங்களாம் அப்படீன்னு சொல்லிட்டு போன் கட் பண்ணிட்டாங்க. நான் நிறைய டைம் கால் பண்ணி பார்த்தேன். எடுக்கமாட்டிங்கிறாங்க. இப்போ போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு.” என்ற மணிமாறனை பார்த்து மிகவும் கவலையுடன் தீபா…

“ மணி.. என்ன சொல்றதுன்னு தெரியல டா.. நீ எழுதுற கவிதையில , கதையில மட்டும் தான் டா இப்படி மதம் மாறி லவ் பண்ணி சக்ஸஸ் ஆகும் டா. முற்போக்கு சிந்தனைன்னு பெருமையா சொல்றோம். ஆனா நம்ம வாழ்க்கையில இப்படி பிற்போக்கா இருக்கேடா… அட ச்சே.. எவண்டா இந்த ஜாதியும் மத்தையும் கண்டுபிடிச்சான். ”

“தீபு நீ உங்க அப்பாவுக்கு போன் பண்ணி.. எதுக்கு சர்ச்க்கு வர்ற சொன்னீங்கன்னு கேளு…”

“ஏன் எதுக்கு டா ? “

“ கேளு தீபு… உனக்கே புரியும்”

தீபா தன் தந்தைக்கு போன் செய்கிறாள் ..

“ டாட்.. ஈவினிங் சர்சக்கு வர சொன்னீங்கல எதுக்கு டாடி? “ தீபா
“நீங்க ரெண்டு பேரும் வாங்க. அப்புறம் பேசிக்கலாம்..” தீபாவின் தந்தை பிடிக்கொடுக்காமல் பேசுகிறார்.
“ நோ டாட்.. சொல்லுங்க.. சம்திங் நீங்க மறைக்கிறீங்க…”
” நத்திங் மை சைல்ட்.. மணி யை கிறிஸ்டியன்னா கன்வர்ட் பண்ண ஏற்பாடு செய்திருக்கிறேன். மாப்பிளை வந்து ஒரு சைன் போட்டா போதும்..”

“ நோ.. டாடி நான் ஒத்துக்க மாட்டேன்.. அவன் எதுக்கு கிறிஸ்டியன்னா கன்வெர்ட் ஆகணும் . ஏன் அவன் இந்துவா இருந்தா ஜீசஸ் ஏத்துக்கமாட்டேன்னு சொன்னரா ? இப்படி பிளாக்மெயில் பண்ணுவதை போல மணியை மதம் மாற வைப்பது. எனக்கு பிடிக்கல டாடி. அப்படி நீங்க முடிவுபண்ணி இருந்தா அத மறந்திடுங்க . நான் ஒத்துக்கமாட்டேன்”

“ ஓஹோ அவ்வளவு திமிரா போச்சா உனக்கு.. அவனை கல்யாணம் பண்ணிக்கனும்ன்னா .. கன்வெர்ட் ஆகிதான் தீரணும் . இல்லான்னா நீ அவனை மறந்துடு. முடியாதுன்னு சொன்னா எங்கள மறந்துடு. உனக்கு டாடி, மம்மி யாரும் இல்லைன்னு நினைச்சிக்கோ… என் கிட்டயே இவ்வளவு தைரியமா பேசுறீயா நீ… ”

“டாட் நான் உங்க பொண்ணு.. உங்க பிடிவாதம் எனக்கு இருக்கு. மணி என்னோட லைப். நீங்களும் என் லைப்பா இருந்தீங்க டாடி.. ஆனா நீங்க இப்படி மத மிருகமா இருப்பீங்கன்னு நினைக்கல.. குட் பை டாடி “ என்று சொல்லி போன் கட் செய்தாள்.

மணி தீபா ஆக்ரோஷமாக பேசுவதை பார்த்து திகைத்துதான் போனான். “ தீபு ஏன். என்னாச்சு ? .. பொறுமையா பேசி புரிய வைப்போம் தீபு “
“ சாரி டா மணி . உங்க அப்பாவை போல என் அப்பாவுக்கும் மதம் பைத்தியம் பிடிச்சு இருக்கு. உன்னை கிறிஸ்டியன்னா மாற சொல்றார், அதுக்குதான் சர்ச்க்கு வர சொல்லி இருக்கிறார்.. எங்க அப்பா பத்தி உனக்கு தெரியாது மணி. அவருக்கு எப்போதும் கிறிஸ்டியன் பத்தி பெருமையா நினைப்பார். அதுக்காக உன்னை கிறிஸ்டியன்னா மாற சொன்னா எப்படி.? சோ . அவரை நம்பி இனி எதுவும் பேச முடியாது. ”

“ எனக்கு தெரியும் தீபு.. அதான் கேட்க சொன்னேன். பட் நீ ஒகே சொல்லு ,உனக்காக நான் மாறுறேன்டா.. நீ எனக்கு வேணும்.. “ என்ற மணிமாறனை ஓங்கி கன்னத்தில் அறைந்தாள்.

“ நீ பெரிய தியாகியா? எனக்காக நீ மதம் மாறுவீயா? மதம் பார்த்து தான் என் மேல உனக்கு ல்வ் வந்துச்சா ? . நான் நாளைக்கே செத்துப்போனா.. வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேற மதம் மாறுவீயா..? மணி நீ அன்னிக்கு டிவி இண்டர்வியூல என்ன சொன்ன?
காதலுக்கு மதம் தடையா இருந்தா.. அந்த மதத்தை தடை செய்வோம்ன்னு சொன்னீல.. சொன்னதை செஞ்சு காமிப்போம். நான் இனி வீட்டுக்கு போகல உன் கூடவே நான் ஸ்டே பண்ணிக்கிறேன். அம்மா கிட்ட சொல்லிடுறேன். “

“ ஹே தீபு.. ஏண்டி இப்படி அடிக்கிற…. ? நீ என்னையும் நம்ம லவ்வையும் எப்படி புரிஞ்சு வச்சிக்கிறான்னு தெரிஞ்சக்க தான் அப்படி சொன்னேன்…என்ன ஒரு கோபம் உனக்கு? ”

“ஓஹோ என்னையே கிராஸ் செக் பணணுறீயா.. மணி.. நீ எனக்கும் நான் உனக்குன்னு முடிவு பண்ணினது மதம் அல்ல நம்ம மனசுதான் டா.. அப்போவே நாம ஒண்ணாகிட்டோம்..” என்று உணர்ச்சிவயப்பட்டவளை மணிமாறன் அமைதிப்படுத்தி

.” ஒகே தீபு. நாளைக்கு எனக்கு அவார்ட் கொடுக்கறாங்ன்னு சொல்லி இருக்காங்கல.. சரி அங்க நான் ஒரு முடிவு சொல்லப்போறேன். ”

“ என்ன மணி. என்ன சொல்லப்போற.?. “

” வெயிட் அண்ட் சீ “

—————————————————————————-

என்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலுள்ள கலையரங்கம்.

இளம் வளரும் கவிஞர்களை உற்சாகப்படுத்தும் NRM பல்கலைக்கழகம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விருது அளித்துக்கொண்டிருந்தது. அதில் சிறந்த சமூக நல்லிணக்க கவிதை எழுதிய இளம் கவிஞர் என்ற விருது மணிமாறனுக்கு அளிக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொண்ட மணிமாறன், மேடையில் சில நேரம் பேச வேண்டும் என்று அனுமதி வாங்கி பேச ஆரம்பிக்கிறான்.

”அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாள் நான் காத்திருந்த ஓர் அங்கீகாரம் இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இது என் முதல் விருது. கடைசி விருதும் கூட… இந்த விருதை வாங்க வராமல் இருந்திருப்பேன். ஆனால் விருது தரும் நல் உள்ளங்களை அவமானப்படுத்தும். இதை வாங்கிய பிறகு காரணத்தோடு விருதை திரும்பவும் நாணயமாக விழா குழுவிடம் ஒப்படைக்கவே நான் வந்தேன்.

சான்றோர்களே….!
இந்த விருது பெற காரணமான மதமும் காதலும் என்ற என் கவிதையின் கருத்தின்படி நான் இருக்கிறேன்னா என்றால் இல்லை என்று என்னிடம் பதில் வருகிறது. காரணம் மதங்களை மறந்து, மதங்கள் மாறி காதல் செய்து சமூகத்தில் ஒற்றுமை நிலவ வேண்டி நான் எழுதிய கவிதையின் நோக்கத்தை என்னாலேயே முன் எடுத்து செல்ல முடியவில்லை.

ஆம் நான் இந்து, என் காதலி கிறிஸ்துவம். எங்கள் இருவரின் பெற்றோர்களும் மதத்தை காரணம் காட்டி எங்கள் காதலுக்கு தடை போடுகிறார்கள்.

ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

இந்து மதத்திலுள்ளவர்களின் இரத்தம் காவி நிறத்தில் இருப்பதில்லை
முஸ்லீம் மதத்திலுள்ளவர்களின் இரத்தம் பச்சை நிறத்தில் இருப்பதில்லை
கிறிஸ்துவ மதத்திலுள்ளவர்களின் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை.

ஆண்-பெண் கூடும் போது பெண் கருமுட்டையுடன் சேரும் விந்து துளி எந்த மதம் என்று பார்த்து சேர்வதில்லை.
விளையும் காய்கறிகள் மதங்களுக்கு ஏற்ப காய்ப்பதில்லை.
உண்ணும் அரிசியை எந்த மதத்துக்காரன் வியர்வை சிந்தி அறுவடை செய்தான் என்று நாம் யாரும் பார்ப்பதில்லை.

ஜொலிக்கும் நிலா
உதிக்கும் சூரியன்
பொழியும் மழை
நிழல் தரும் மரம்
இந்த பூமி
அந்த வானம்
நாய்,குரங்கு, பூனை, யானை, காக்கா, குருவி, மாடு, ஆடு,கிளி, புறா போன்ற எந்த ஜீவனும் மதம் பார்த்து மனிதனுக்கு சேவை செய்வது இல்லை.

இன்னும் இன்னும் என்ன என்ன அற்ப மாயைகளுக்கும் கூட மதம் என்று ஒன்று தெரியாது. ஆனால் ஆறு அறிவு உள்ள நம் மனித இனம் மதம் மதம் மதம் என்று அன்பு கொண்ட மனங்களை கொன்று குவிக்கிறது.
இனப்படுகொலையும் , சமத்துவ சமுதாயம் தோற்றுவிக்கும் இந்த காதலை அழிக்கும் மத வெறியும் என்னைப்பொறுத்த வரை ஒன்றுதான்.

எந்த ஒரு சமூக படைப்பிலும் ஓர் எழுத்தாளன் சொல்லும் அறிவுரைகளுக்கு அவனே முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஆக நான் என்னாதான் அழகான வார்த்தை வர்ணிப்பிலும். இலக்கிய திறமையிலும், தமிழ் அமுதத்தில் வார்த்து எடுத்து எழுதினாலும் என்னால் ஒற்றுமை பற்றியும். சமுதாய நல்லிணக்கத்தை பற்றிய சிந்தனைகளையும் குறைந்தப்பட்சம் என் தாய் தகப்பனுக்கு கூட உணர்த்த முடியவில்லை எனும் போது ,நான் எப்படி எழுத்தாளன் என்று பெருமைப்பட முடியும்?. நான் எப்படி இந்த விருது வாங்கும் தகுதியை பெற முடியும்? சமூக சிந்தனையாளன் என்று எனக்கே நானே எப்படி சொல்லிக்கொள்ள முடியும். ? என்னால் எழுத்தில் ஒரு கருத்தையும் மனதில் ஒரு கருத்தையும் வைத்து எழுத முடியாது, நான் வேசமிடும் எழுத்தாளன் அல்ல..!

இதோ இதோ.. என் எழுதுகோலை இங்கே உடைத்து எறிகிறேன். இனி நான் சமூக படைப்புக்களை எழுத போவதில்லை. சமூக சிந்தனைகளில் என்னை ஈடுப்படுத்திக்கொள்ள போவதில்லை. என்னால் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனும் போது எதற்கு இந்த எழுதுகோல்…..? ” என்று மணிமாறன் ஆவேசமாக தன் கையிலிருக்கும் எழுதுகோலை தரையில் முட்டி உடைத்து வீசுகிறான். பின்பு தான் வாங்கிய விருதை திரும்ப கொடுத்துவிட்டு.. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு மேடையிலிருந்து கீழே இறங்குகிறான்.

முதன் முறையாக விருதை புறக்கணித்த ஒரு கர்வம் பிடித்த கவிஞனுக்கு பலத்த கைத்தட்டல்கள் அங்கு எழுப்பட்டன.

” தீபா……….! வா போகலாம்.. “ என்றவாறே தன் காதலியின் கையை இறுக்கமாக இணக்கமாக பிடித்து, காதலுக்கு தடையாக இருக்கும் மத நம்பிக்கைகளை தகர்த்தெறியும் வேகத்துடன் வீறு நடையில் அந்த கலையரங்கத்தை விட்டு வெளியேறினான் இளைய எழுத்தாளன் மணிமாறன்.

இதனை கவனித்த என்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் “ மிக காத்திரமான எழுத்தாளன். அவன் சரித்திரம் படைக்க கூடிய வல்லவன். அவனை மீண்டும் எழுத வைப்போம் “ என்று பெருமிதத்துடன் மணிமாறன் சென்ற திசையை நோக்கினார். மாலைச் சூரியன் தன்னை மறைத்து கொண்டிருந்ததை கவனித்தவர்… மீண்டும் நாளைக் காலை சூரியன் எழும் என்றும் தீர்க்கமாக நம்பினார்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “எழுத்தாளனின் மதம்

 1. அருமை அருமை ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக திகழும் கதை .. காதலுக்கு ஜாதி மதம் என்று எதுவும் இல்லை … ஜாதி மதம் பார்த்து வந்தால் அது காதலே இல்லை ..

 2. மிக அருமையான சிறுகதை. நான் ஒரு நாவல் கிறுக்கி. அனால் இந்த சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது.

  எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  அன்புடன்
  கு.கல்பனா தேவி

 3. மிக அருமை நண்பா..
  ஜாதி மத மிருகங்களுக்கு சவுக்கடியாக மிக அருமையாக சாட்டையை சுழற்றியுள்ளீர்கள்..
  காதலோடு பயணித்து அருமையான கருத்தும் கதையில்..
  வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *