என் முதல் ஆங்கிலக் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 14,984 
 
 

கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.

பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு பெற நேர்ந்தது. அந்த நாடக விழாவில்தான் நான் பார்பராவைச் சந்தித்தேன்.

பார்பரா தமிழ் பேசத் தெரிந்த ஒரு அமெரிக்கப் பெண். வயது இருபதிலிருந்து இருபத்தைந்து இருக்கலாம். தமிழ் நாட்டுக்கு, அதுவும் இதுபோன்ற கலை விழாக்களுக்கு வரும் அமெரிக்கர்கள் என்றாலே எனக்கு ஒரு எரிச்சல் உண்டு. காரணம் – இவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவுடனேயே தங்களை இணைத்துக் கொண்டு விடுவதுதான். இலக்கியம் என்றால் கூட அது சங்க இலக்கியம் – அல்லது அதிகம் போனால் பக்தி இலக்கியம் வரை வருவார்கள். அதற்கும் மேல் நவீன இலக்கியம் என்றால் – மூச்! பேசக்கூடாது.

ஆக, பார்பராவும் இப்படிப்பட்ட ஒரு அமெரிக்கப் பெண் தான் என்று நினைத்து அதிகம் பேசாமல் இருந்து விட்டேன். அதனாலேயே நாடக விழாவின் கடைசி நாளன்று நடக்க இருந்த எங்கள் நாடகத்தை பற்றிக்கூட அவளிடம் பிரத்யேகமாக எதுவும் சொல்லாமல் இருந்து விட்டேன்.

விழாவின் பங்குபெற்ற நாடகங்கள் எல்லாமே ஒரே ‘ கடி ’ யாக இருந்ததால் ( எல்லாம் நவீன நாடகங்கள் ) பார்பரா கடைசி நாளன்று வராமல் இருந்து விட்டாள். நாங்கள் பாலியல் விவகாரங்களையும் எங்கள் நாடகத்தில் சேர்த்திருந்ததால் ஆபாச நாடகம் என்று சொல்லி ஒரே கலாட்டாகவும், அடிதடியாகவும் போய் விட்டது. அது போதாதென்று நாடகத்தின் ஒரு பாத்திரத்தின் பெயர் மதுரையின் ஒரு முக்கியமான அரசியல் புள்ளியின் பெயராகவும் போய் விடவே அந்த புள்ளியின் ரசிக மணிகளும் அடிதடியில் இறங்கினர். அடிதடி முடிந்த பிறகு ‘ இதையெல்லாம் முன் கூட்டியே யோசித்திருக்க வேண்டாமா மடையா? ’ என்று மாணிக்கமும் நானும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டது வேறு விஷயம்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. மேலும் ஒரு நாடகம் எழுதியிருக்கிறானோ என்று பயந்து கொண்டே கடிதத்தைப் பிரித்தால் அதில் அவன் பார்பராவைப் பற்றி எழுதியிருந்தான். அவள் தன்னை வந்து சந்தித்ததாகவும், நடந்த அடிதடிகளைப் பற்றி மிகுந்த அக்கறையோடு விசாரித்ததாகவும் எழுதியிருந்தான். அப்போதும் பார்பராவிடம் எனக்கு அதிக ஈடுபாடு ஒன்றும் ஏற்படவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து வந்த கடிதத்தில் பார்பராவை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தான்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்த மாணிக்கம் ‘பார்பராவைப் பார்க்கப் போகலாம் வா ’ என்று அழைத்தான். அவனுடன் வந்திருந்த நண்பர்களையும் சேர்த்து – என் மகள் ரேஷ்மா உட்பட மொத்தம் ஒன்பது பேர் பார்பராவின் வீட்டுக்கு சென்றோம்.

பார்பரா சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் நாட்டின் ‘செக்ஸ் தொழிலாளிகளைப் ’ பற்றி ஆய்வு செய்ய இங்கு வந்ததாகவும் இரண்டு வருடம் மதுரையிலும் இப்போது ஒரு வருடம் சென்னையிலும் ஆய்வு முடித்துவிட்டதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் யு. எஸ் திரும்ப இருப்பதாகவும் ( ‘ யு.எஸ் ’ என்பதை ‘ யுவெஸ் ’ என்று சொன்னாள் பார்பரா) தெரிந்தது.

தமிழ் நன்றாகவே பேசினாள் பார்பரா. ஆனாலும், அந்தச் சந்திப்பில் அவளுடன் அதிகம் பேச முடியவில்லை. எனென்றால் மொத்தம் பத்து பேருக்கான சமையலில் ஈடுபட்டிருந்தாள் பார்பரா. சாம்பாரும், தொட்டுக் கொள்ள கோவைக்காய் கறியும். நாங்கள் வரும் போதே கோவைக்காய் வாங்கி வந்திருந்தோம்.

இரவு பார்பராவின் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் காலை கிளம்ப ஆயத்தமானோம்.

” இருங்கள். சாப்பிட்டு விட்டு போங்கள். நேற்று இரவுகூட நீங்கள் யாரும் சரியாக சாப்பிடவில்லை ” என்று சொன்னாள் பார்பரா. சொல்லிவிட்டு மூன்று பெரிய தூக்குகளை எடுத்துக் கொண்டு மாணிக்கத்துடன் ஸ்கூட்டரில் கிளம்பினாள்.

திரும்பி வந்தபோது கிட்டத்தட்ட நாற்பது பேர் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி என்று வந்திறங்கியது.

எக்கச்சக்கமாக மீதியாகிப் போகவே எல்லாவற்றையும் மறுபடியும் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள் பார்பரா. ” எங்கே ? ” என்று கேட்டேன். ” ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய் கொடுக்கப் போகிறேன் ” என்றாள். கிளம்பும் போது ” மீண்டும் வாருங்கள் , சாவகாசமாகப் பேசலாம் ” என்றாள்.

ஒரு வாரம் கழித்து போன் செய்தேன். வெகு நாள் பழகிய தொனியில் பேசினாள். அன்றைக்கு மறுபடியும் சந்தித்தேன். கூடவே ரேஷ்மாவையும் அழைத்துப் போயிருந்தேன். அன்று இரவு முழுக்கவும் பேசிக் கொண்டிருந்தோம். “எப்போதோ நாம் சந்தித்திருக்கலாம் ” என்றாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்னையில் தான் இருப்பதாகவும் மாதம் இரண்டு முறை மதுரை போய் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.

பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்தித்தோம். நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டாள் பார்பரா. இங்கு உங்கள் நாட்டில் ஓரல் செக்ஸ் என்பதெல்லாம் ரொம்பவும் அசாதரணமான விஷயமா என்ன ? நான் சந்தித்த ‘செக்ஸ் தொழிலாளி ’ களெல்லாம் அவர்களிடம் வரும் பெரும்பாலானவர்கள் ஓரல் வச்சுக்கத்தான் வருவதாகச் சொல்கிறார்களே ?

இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள். விவாதங்கள். ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க சிநேகிதமும் தீவிரமானது.

நான் என்னுடைய நாவலையும், என் நண்பன் ரமேஷின் நாவலையும் அவளிடம் காண்பித்தேன். அதன் அட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே குதிக்க ஆரம்பித்து விட்டாள் பார்பரா.

“உங்கள் நாவலைப் படிக்கச் சொல்லி ஒரு நண்பர் அடிக்கடி என்னிடம் குறிப்பிடுவார் ” என்றார்.

“யார் மாணிக்கமா ?“ என்று கேட்டேன்.

“இல்லை. குமார் என்று வேறு ஒரு நண்பர் ”

“குமாரும் எனக்குச் தெரிந்தவன் தான். ஆக என் நாவலைப் பற்றிக்கூட, உனக்கு (இதற்குள் நாங்கள் ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கியிருந்தோம்) மாணிக்கம் சொல்லவில்லையா? நான் மட்டும் உன்னை ஒரு வருடத்திற்கு முன்னால் சந்தித்திருந்தால் உன் கால், கைகளைக் கட்டி பாண்டிச்சேரிக்குத் தூக்கி கொண்டு போயிருப்பேன் ”

“இரண்டு விஷயங்கள் புரியவில்லை. ஒன்று – எதற்கு கால், கைகளைக் கட்ட வேண்டும் ? இரண்டாவது – பாண்டிச்சேரியில் என்ன விஷேசம்? ”

“பாண்டிச்சேரியில்தான் என் நெருங்கிய நண்பன் ரமேஷ் இருக்கிறான். அங்கே கூப்பிட்டால் நீ அப்புறம் பார்க்கலாம் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்வாய். அதனால் தான்…. ”

” நீ என்னைப் புரிந்து கொண்ட்து அவ்வளவுதானா ? நான் அமெரிக்காவில் இருந்தாலும் நானும் உன்னைப் போல் ஒரு அனாதைதான். அங்கே ஜனாதிபதியிலிருந்து அடிமட்டக் குடிமகன் வரை எதிர் கலாச்சாரம் பேசுவதால் என்னைப் போன்ற ஆட்கள் மிகவும் தனிமைப்பட்டுக் கிடக்கிறோம் ”

“இங்கே எங்கள் நாட்டிலும் கூட எதிர் கலாச்சாரம் என்பது அந்த நிலையில் தான் இருக்கிறது. சமீபத்தில் என் நண்பர்கள் நடத்திய ஒரு ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கில் மாட்டுக்கறி சாப்பிட்டு அதை தங்களின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக அறிவிப்பு செய்தார்கள் ”

இதைச் சொன்னதும் பார்பரா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். பிறகு சற்று நேரம் கழித்து, சற்று சீரியசான குரலில் “மாட்டுக்கறிக்கும் எதிர் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஏன், நாய்கறியோ பூனைக் கறியோ சாப்பிட வேண்டியது தானே? உங்கள் நாட்டில் ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்தவர்கள் பூனையையும், காகத்தையும் சாப்பிடுவதாக படித்திருக்கிறேன். யார் அவர்கள் ? பெயர் மறந்து விட்டது ” என்று கேட்டு நிறுத்தினாள்.

“குறவர்கள் ”

“யெஸ் குறவா. நாய்க்கறி என்றதும் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. நீங்கள் அரிசி சாப்பிடுவதைப் போல் நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறோம். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதைப் போல் வியட்நாமியர்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள். ஒரு முறை நான் வியட்நாம் சென்றிருந்தபோது அங்கே என் வியட்நாம் தோழி ஒருத்தி என்னை அவள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தாள். போனதும் ‘ உனக்கு இன்று ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று தயார் பண்ணப் போகிறேன் ’ என்றாள். ‘என்ன அது? ’ என்று ஆர்வத்துடன் கேட்ட என்னை கிச்சனுக்குள் அழைத்துச் சென்று ப்ரிஜ்ஜை திறந்து காட்டினாள். அவ்வளவுதான். பேயைக் கண்டதுபோல் அலறிவிட்டேன். ஆமாம். பேயேதான். ப்ரிஜ்ஜுக்குள் பேயின் தலை. தோலெல்லாம் உரிக்கப்பட்டு பயங்கரமாக கண்களை விழித்துக் கொண்டு ஒரு நாயின் தலை ! அவர்கள் நாட்டில் நாய்த்தலைதான் ஸ்பெஷலாம் ! நீ என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர் கலாச்சாரம் என்கிறாய் ! “

எனக்கும் அவள் சொன்னது நியாமாகவே தோன்றியது. ஏனென்றால் எந்த கருத்தரங்கில் நானும், ரமேஷும் சாப்பாட்டில் கடைசிப் பந்தியாகிவிட்டோம். சாப்பிடுவதற்கு முன்னால் கொஞ்சம் பீர் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று நினைத்ததால் வந்த வினை. கடைசிப் பந்தி என்பதாக் குழம்பில் ஒரு துண்டு கூட கிடைக்கவில்லை. ஆனால், சாப்பிட்டு முடித்து இலையை எடுத்துக் கொண்டு குப்பைத் தொட்டிப் பக்கம் போனபோது தான் நண்பர்கள் எவ்வளவு தீவிரமான எதிர் கலாச்சாரவாதிகள் என்பது தெரிந்தது. ஏனென்றால் குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் ஒரே கறி. ஆறு கிலோ கறி எடுத்து அதில் நான்கு கிலோவை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறார்கள். ‘ என்ன அநியாயம் இது? ’ என்றேன் ரமேஷிடம். “இதெல்லாம் பழக்கமில்லாமல் ஒரே நாளில் வந்துவிடும ? போகப் போகத்தானே பழகும் ” என்றான் ரமேஷ். “அடபோடா, இவர்கள் பழகுவதற்குள் நம் நாட்டிலுள்ள அத்தனை மாடுகளும் காலியாகிவிடும் போலிருக்கிறதே! ” என்றேன்.

இதைப் பார்பராவிடமும் சொன்னேன். சிறிது நேரம் யோசித்து விட்டு “உங்கள் நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட, வெஜிடேரியனாக இருப்பது தான் எதிர் கலாச்சாரமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சமீபத்தில் ரியோவில் நடந்த மாநாட்டில் இந்தியாவில் மாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், மாட்டுச் சாணம் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்றும் பணக்கார நாடுகள் சொல்லியிருக்கின்றன. முக்கியமாக யு.எஸ். அவர்கள் இப்படிச் சொல்வதற்கு காரணம் அவர்களுக்கு தோல் வேண்டும் என்பதுதான். ஒரு மாட்டின் மொத்த கறிக்குமான விலையை விட பல நூறு மடங்கு அதிகமான விலையில் அவர்கள் அந்த தோலை ஏற்றுமதி செய்கிறார்கள். தோலை எடுத்துக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத கறியை உங்களிடம் தருகிறார்கள் அவர்கள். நீங்கள் என்னவென்றால் அவர்கள் தூக்கிப் போடும் கறியைத் தின்று விட்டு இது எதிர் கலாச்சாரம் என்கிறீர்களே. வேடிக்கைதான் ” என்றாள்.

பார்பரா சொல்வது சரிதான். மாட்டுக்கறி நடுத்தர வர்க்கத்து உணவில் சேர்ந்துவிட்டது. மைலாப்பூர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி என்று எல்லா இடங்களிலும் தெருவுக்கு தெரு தள்ளுவண்டிகளில் இரவு எட்டு மணியிலிருந்து நைட்ஷோ விடுகிற வரை சூடான இட்லியுடன் மாட்டுக்கறி வறுவலும் சேந்து, ஐந்து வருடம் ஆகிறது.

நான் வேலூரில் வேலை பார்த்தபோது அங்கே தள்ளுவண்டியில் ’ பீப் பிரியாணி ’ என்ற போர்டை பார்த்து பல நாட்கள் அர்த்தமே புரியாமல் மிரண்டிருக்கிறேன். யாரிடமும் கேட்கவும் துணிவில்லாமல் தலைமுடியை பிய்த்துக் கொண்டு குழம்பியிருக்கிறேன். பிறகு சென்னைக்கு வந்து இங்குள்ள தள்ளுவண்டிகளில் ‘பீஃப் பிரியாணி ’ என்று போட்டிருப்பதை பார்த்த பிறகுதான் விஷயம் விளங்கியது. ஆயுத கலாச்சாரத்தை பார்த்து பயந்தோ என்னமோ வேலூரில் ஆயுதத்தை எடுத்துவிட்டார்கள் போலும்! இப்படி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆயுதத்தோடும், ஆயுதமில்லாமலும் மாட்டுக்கறி உணவு கொடி கட்டிப் பறக்கிறது. பாண்டிச்சேரி கடற்கரையில் காந்தி சிலையை ஒட்டியுள்ள மூன்று தள்ளுவண்டிகளில் ஒவ்வொரு வண்டியிலும் தினந்தோறும் ரூ 3000/-க்கு குறையாமல் வியாபாரம் நடக்கிறது. ஒரு பிளேட் மாட்டுக்கறி வறுவல் ரூ.7. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஒரு ஆள் நிச்சயமாக நான்கு பிளேட்டுகள் சாப்பிடலாம்.

எல்லாவற்றையும் பார்பராவிடம் விளக்கமாகச் சொன்னேன். “மாடு என்பது உங்களுக்கு ஒரு அசூயை தரக்கூடிய பிராணியாக இல்லாமல் இருப்பதால் தான் அதை சுலபத்தில் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் உங்களால் எந்தக் காலத்திலும் பன்றிக் கறியை ஏற்றுக் கொள்ள முடியாது ” என்று சொன்னாள்.

“ஆமாம். நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஒரு அராபியருக்கு பெட்ரோல் கிணறு எப்படியோ அப்படித்தான் எங்களுக்கும் ஒரு காலத்தில் பசுவும், முருங்கையும் இருந்தது. முருங்கை அழிந்துபோன நிலையில் ஒரு சினிமா நடிகர் வந்துதான் அதை காப்பாற்றினார். இப்போது மாட்டை எப்படி யார் காப்பாற்ற போகிறார்கள் “ என்று தெரியவில்லை.

” ஓ.கே. நாம் டீ சாப்பிடலாம் “ என்று சொல்லிவிட்டு இரண்டு பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தாள்.

ஒரு கனத்த அமைதிக்குப் பிறகு ” நாம் எப்போதோ சந்தித்திருக்க வேண்டும். இந்த ஒரு வருடமும் நான் பேசுவதற்குக் கூட ஆள் இல்லாமல் தவித்துக் கிடந்தேன் “ என்றாள்.

“ஏன் உனக்கு இங்கே நண்பர்கள் யாரும் கிடையாதா ? ”

“நான் யாரிடம் பேசுவது ? இது ஒரு செக்ஸ் வறட்சி பிடித்த சமூகமாக இருக்கிறது. என் கைகளைக் கூட வெளியே காட்ட முடியவில்லை. நீ கோபித்துக் கொள்ளாதே சாரு. இங்கே இருக்கும் ஒரு ஆணுக்குக் கூட, என் கண்களைப் பார்த்து பேசத் தெரியவில்லை. எல்லாருமே என் மார்பை பார்த்துத்தான் பேசுகிறார்கள். சீக்கிரமாக இங்கிருந்து போய் விட வேண்டும் ’ என்ற வேகத்தில் இருந்தபோதுதான், உன்னைச் சந்திக்க நேர்ந்தது. இப்போது ஏன் போகிறோம் என்று இருக்கிறது. ஆனால், எல்லாமே முடிந்து விட்டது. இனிமேல் தள்ளிப் போட முடியாது.

இறுக்கமாக என் கைகளைப் பற்றியிருந்த அவளுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஒரு வருடமாக அவளைப் பற்றி ‘பிலிம் ’ காண்பித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை மனதாரத் திட்டினேன்.

“இருந்துவிடு பார்பெல்…. எல்லாவற்றையும் கேன்சல் செய்து விட்டு இருந்துவிடு “ என்றேன்.

“என்னை இதுவரை யாருமே பார்பெல் என்று கூப்பிட்டதில்லை ” என்று புன்முறுவலுடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள். “முடியாது சாரு… இந்த ‘ பி.எச்.டி ’ யை முடித்தால் தான் ஓரளவுக்கு பிழைக்க முடியும். காலம் கடந்து விட்டது. உன்னை ஒரு வருடத்திற்கு முன்பு சந்தித்திருந்தால் சரியாக திட்டமிட்டிருக்க முடியும். சரி, ஒன்று சொல்கிறேன் கேட்பாயா … ? ஏதோ பெரிதாக சிநேகிதி, சிநேகிதி என்று காதில் பூ சுற்றுகிறாயே ” என்று சொல்லிக் கொண்டிருந்தவளை இடைமறித்து ” காதில் பூ சுற்றுவதெல்லாம் கூட உனக்குத் தெரியுமா ? “ என்று கேட்டேன்.

அதற்கெல்லாம் நான் என் புரொபசருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.

(புரொபசர் என்று அவள் சொன்னது சமீபத்தில் காலமான ஏ.கே.ராமானுஜத்தை தான். பார்பரா, ஏ.கே.ராமானுஜத்திடம் தமிழ் படித்தவள் )

“சரி, நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். ரேஷ்மாவை நான் என்னுடன் அழைத்துப் போய்விடுகிறேன். என்ன சொல்கிறாய் ? ”

ரேஷ்மா, பார்பராவுடன் போனால் பிரமாதமாக இருப்பாள்தான். ஆனால், ரேஷ்மாவை இந்த நான்கு வயதில் முழுக்க முழுக்க பிரிவது என்பதை என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.

“ நோ பார்பெல்… சாத்தியமேயில்லை ” என்றேன். பிறகு நீண்ட நேரம் மெளனம். புல் தரையில் கைகளை தலைக்கு வைத்தபடி மெளனமாக படுத்திருக்க பார்பரா திடீரென்று என்னைப் பார்த்து சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய் ? ”

“எனக்குத் தெரியும். நீ இப்படித்தான் சொல்வாய் என்று ”

“என்ன பார்பெல் இது ? உன்னைப் பிரிவதே எனக்கு தாங்க முடியாத வலியாகவும், சித்ரவதையாகவும் இருக்கிறது. ரேஷ்மாவும் போய் விட்டால்… நான் அனாதையாகிவிடுவேன் பார்பெல் ”

“ஓக்ஹாய்… பர்கெட் இட்”

அவளுடைய ஓக்ஹாயை ரசித்தேன். அமெரிக்க ஓகே. பிறகு மீண்டும் அவள் ஆரம்பித்த இடத்திற்கே வந்தேன். இங்கு நம்முடைய காதல் தேவதையாக இருக்கும் ஒரு சினிமா நடிகையை பற்றிச் சொல்லி “அவளைப் போலவே நீயும் இருப்பதால்தான் உன்னை அப்படிப் பார்க்கிறார்கள் இங்கே. மற்றபடி இது செக்ஸ் வறட்சி கொண்ட ஒரு நாடு என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் செக்ஸைப் பொருத்தவரை ஓரளவுக்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு வெளிப்படையான சமூகத்திலும் கூட ‘போர்னோ ’ என்பது மிகப்பெரிய வியாபாரமாகத்தானே இருந்து வருகிறது? ” என்றேன்.

” இதற்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. யோசித்து எழுதுகிறேன் “ என்றாள்.

எனக்கு அப்போது ஒரு பயம் பிடித்துக் கொண்டது. நான் பார்பராவுக்கு கடிதம் எழுத வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். அவளுக்குப் பேச்சுத் தமிழ் நன்றாகவே தெரிந்திருந்தாலும், எழுதவும், படிக்கவும் சரளமாக வராது. எனக்கோ அலுவலகத்தில் ‘ காஷூவல் லீவ் ’ விண்ணப்பத்தைத் தவிர வேறு எதுவுமே ஆங்கிலத்தில் எழுதிப் பழக்கமில்லை. அவளிடம் இதையும் சொன்னேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ எழுதுகிறாய்“ என்றாள்

தொடர்ந்து “ஒவ்வொரு நாளும் ஊருக்கு கிளம்புவேனா என்றே சந்தேகமாகிக் கொண்டு வருகிறது “ என்று சொல்லி சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் “ நோ… போய்த்தான் ஆகவேண்டும் ” என்றாள்.

சொல்லிவிட்டு அப்படியே திரும்பி தலையை கவிழ்த்துகொண்டு படுத்தாள். எதுவும் பேச முடியவில்லை. குலுங்கி அழுவது தெரிந்தது. “ நோ பார்பெல்… நோ… ” என்று சொல்லியபடி அவளுடைய முதுகில் சாய்ந்தேன்.

நீண்ட நேரம் கழித்து சன்னமான குரலில் “ஒரு கால் நூற்றாண்டு காலம் மிகத் தீவிரமாக பழகி பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒரு பத்தாண்டுகளுக்கு பிறகு அந்த நபரை ஒரு ரயில்வே பிளாட்பார்மில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலிருந்து பார்த்து கைகளை அசைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சாரு. இது ஒரு சித்ரவதை சாரு. இதை என்னால் தாங்க முடியவில்லை… ” என்றாள்.

பார்பரா ஊருக்குக் கிளம்ப இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அன்று ஒரு விடுமுறை தினம். காலை பத்து மணி அளவில் போன் செய்தேன். “ வருகிறாயா ? உடனே வா. உடனே உன்னைப் பார்க்க வேண்டும். எப்போது வருகிறாய் ? நான் இரண்டு மணிக்கு கிளம்பவேண்டும் “ என்றாள்.

“வருகிறேன். பனிரண்டு மணி அளவில் சந்திக்கிறேன் “ என்றேன்.

“பிரேக்ஃபாஸ்ட் முடித்தாயிற்றா? “ என்று கேட்டாள். நான் காலையில் அருகம்புல் சாறு மட்டுமே குடித்திருந்தேன். ‘கபகப ’ வென்ற பசி. இருந்தாலும் ‘ஆயிற்று ’ என்றேன்.

“சாப்பிட்டாயா? ’ என்று என்னை, என் ரமேஷைத் தவிர வேறு யாரும் கேட்டு எவ்வளவு ஆண்டுகளாயிற்று என்று நினைத்துக் கொண்டேன். நினைக்க நினைக்க நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. இது என்ன நாற்பது வயதில் – அதிலும் ஒரு வாரத்தில் ஒரு யு.எஸ். போய் விடப்போகிற ஒரு பெண்ணிடம் இத்தனை ஈடுபாடு என்று தோன்றியது.

அண்ணா நகரிலிருந்து பார்பரா இருக்கும் பெசண்ட் நகருக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். அடையாறு டெப்போவில் இறங்கி எதிரே இருந்த ஐயங்கார் பேக்கரியில் பை நிறைய நொறுக்குத்தீனி வாங்கிக் கொண்டு, ஆட்டோ பிடித்து, பார்பராவின் வீட்டை அடைந்த போது மணி 12.45.

நான் அண்ணா நகரிலிருந்து, பெசண்ட் நகர் வரும் பயணத்தை பற்றி விளக்கினேன். அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

“மை காட்! என் சாருவை ஒவ்வொரு முறையும் இவ்வளவு தூரம் சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறேனா? ” என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.

“இரண்டு மணிக்கு நான் அந்த ‘செக்ஸ் தொழிலாளர்களை ’ சந்திக்க வேண்டும். நாம் இப்போது இரண்டு மணி நேரம்தான் பேச முடியும். இரண்டு மணி நேரம் பேச நான்கு மணி நேரப் பயணமா! ” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

“சரி, அப்படியானால் நாளை மாலை வருகிறேன். இரவு முழுவதும் பேசலாம். ரேஷ்மாவையும் அழைத்து வருகிறேன் ” என்றேன்.

அப்படியே சந்திப்பது என்று முடிவாயிற்று.

மறு நாள் மாலை வந்த போது வீட்டுக்கு வெளியிலிருந்த புல் தரையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடி அமர்ந்திருந்தாள் பார்பரா. நானும் பக்கத்தில் அமர்ந்தேன். ரேஷ்மாவிடம் கொஞ்சிவிட்டு என்னைப் பார்த்து ” இன்னும் ஐந்து நாட்கள் ” என்றாள்.

“வேறு ஏதாவது பேசேன் பார்பெல் ”

திடீரென்று அவளும், ரேஷ்மாவைப் போல் ஒரு குழந்தையாகத் தோன்றினாள்.

நானே போய் மூன்று பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தேன். டீயை குடித்துவிட்டு ரேஷ்மா ‘டிவி ’ பார்க்க உள்ளே போய் விட்டாள்.

திடீரென்று மணியைப் பார்த்தேன். எட்டு ஆகியிருந்தது. “ஓ.கே பார்பெல்… ரேஷ்மாவுக்குப் பசிக்கும். மூன்று பேரும் எங்காவது ரெஸ்டாரண்டுக்குப் போய் வருவோம் ” என்றேன். பார்பரா பேசவில்லை. நானும் அவள் பேசட்டும் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். திடீரென்று வெறிபிடித்தாற்போல் என் தோள்களை உலுக்கி “ஓய் டிட்யூ மீட் மீ? ப்ளீஸ் கோ அவே. ப்ளீஸ்… இன்று இரவு இங்கே தங்காதே ” என்று சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் கண்களில் முத்தமிட்டு விட்டு முழந்தாளிட்டு தலைகவிழப் படுத்துக் கொண்டாள்.

நான் அவள் பக்கத்தில் போய் “இதோ பார் பார்பெல். இன்றிரவு நான் தங்குவதுதான் பிரச்னை என்றால் நீயும் ரேஷ்மாவும் மாடிக்குப் போய் தூங்குங்கள். நாம் பேச வேண்டாம். கீழே நான் படுத்துக் கொள்கிறேன். மற்றதை காலையில் பார்த்துக் கொள்ளலாம் ” என்றேன்.

ஆனால், அவள் மறுபடியும் “புரிந்து கொள்ள முயற்சி செய் சாரு . தயவு செய்து இன்று இரவு இங்கே தங்காதே…ப்ளீஸ் ” என்றாள். அவள் உடம்பு முழுவதும் குலுங்கிக் கொண்டிருந்தது.

நான் ஒன்றுமே சொல்லாமல் அவள் தோளைத் தொட முயன்ற போது பின் பக்கம் திரும்பாமலேயே “ டோன்ட் சாரு. ப்ளீஸ் டோன்ட் . ஐ பெக் யூ…. ” என்றாள்

சட்டென்று எழுந்து உள்ளே போய் ரேஷ்மாவை கூப்பிட்டேன். கிளம்புகிறோம் என்று அறிந்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் ரேஷ்மா. ஷூவையும் போடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஷூவை எடுத்து பையில் போட்டுவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் பார்பராவை பார்க்கவில்லை. போனிலும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், மூன்றாம் நாளும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. மண்டையே வெடித்து விடுகிறாற்போல் ஒரு உணர்வு. உள் ஜூரம். அவள் ஊருக்கு கிளம்ப இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன.

போனில் தொடர்பு கொண்டேன். நான் தான் என்று தெரிந்ததுமே “இன்று மட்டும் நீ போன் செய்யாமல் இருந்திருந்தால் நானே நேராக கிளம்பி வந்து உன்னைக் குத்தி கொலை செய்திருப்பேன். உடனே கிளம்பி வா “ என்றாள்.

போனேன். மிகவும் சோர்வாக படுக்கையில் சாய்ந்திருந்தாள். பதற்றத்துடன் “என்ன ஆயிற்று? ” என்று கேட்டு கையை அவள் நெற்றியருகே கொண்டு போனவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் கையை இழுத்துக் கொண்டேன்.

“டோன்ட் பி சில்லி மேன்… ” என்று சொல்லி என் கையை பிடித்து தன் நெற்றியிலும், கழுத்திலும் வைத்தாள். “இரண்டு நாளாய் கடுமையான ஜூரம். அது இருக்கட்டும். நீ ஆபிசில் தான் வேலை செய்கிறாயா? அல்லது ஏதாவது அன்டர்கிரவுன்ட் வேலையில் ஈடுபட்டிருக்கிறாயா? ஜூரத்தில் படுக்கையை விட்டுக்கூட எழுந்து கொள்ள முடியாமல் உனக்கு போன் செய்து செய்து கையே முறிந்து விட்டது. மீனாட்சி மட்டும் இருந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை ” என்றாள்.

“அமெரிக்கப் பெண்ணான உனக்கு இங்குள்ள அரசாங்க அலுவலகம் பற்றிச் சொன்னால் புரியாது. அதைப் புரிய வைக்கவும் இப்போது நேரமில்லை. உன் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது? முதலில் அதைச் சொல் ”

” இப்போது சரியாகிவிட்டது. அது சரி.. அன்றைக்கு எப்படி போனாய்? நீ போன பிறகுதான் உனக்கு அந்த நேரத்தில் பஸ் கிடைத்ததோ, இல்லையோ என்ற ஞாபகமே வந்தது. ஐயாம் ரியலி சாரி சாரு. நீ என்னை மன்னிக்கத்தான் வேண்டும். அன்றைக்கு நான் என் வசத்திலேயே இல்லை. உன்மத்தம் பிடித்த நிலையில்தான் இருந்தேன். நீ மட்டும் அதற்குமேல் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் நான் யு.வெஸ் போவது நடக்காமல் போயிருக்கும். அதற்காக நான் உனக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும், நீ ஒரு கல்நெஞ்சுக்காரந்தான். ஊருக்குப் போக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிற இந்த நிலையில் இரண்டு நாட்களாக போன் செய்யாமல் இருந்து விட்டாயே? “ என்றாள்.

பின் குறிப்பு : இப்போது பார்பரா ஒரு கனவு. அவளுடன் பழகிய அந்த ஒரு மாத காலம் ஒரு கனவு. அந்த பெசன்ட் நகர் வீட்டின் புல்தரை ஒரு கனவு. ‘சாப்பிட்டாயா? ’ என்று என்னை அவள் ஆதுரத்துடன் கேட்டது ஒரு கனவு. என் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தபோது அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது ஒரு கனவு. ‘ என்னைத் தொடாதே, போய் விடு ’ என்று சொல்லிச் சொல்லி குலுங்கி அழுதது ஒரு கனவு. கனவையெல்லாம் நினைவாக்கி இப்போது பார்பராவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிக்கிறேன்.

என் முதல் ஆங்கிலக் கடிதம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *