கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 2,907 
 

மீசை கொஞ்சம் பெரியதாகத் தான் இருக்கிறது மீசை பெரிதாக இருப்பதால் அது அழகாக இருப்பதாக நான் அடிக்கடி நினைத்து கொள்வதுமுண்டு. என்னிடமுள்ள சிறப்புகளில் முக்கியமானதாக நான் மீசையைத்தான் கருதுகிறேன். இந்த மீசையைத் தான் ஒரு நாளைக்கு எத்தனை முறை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன். தலைவாரிக் கொள்வதைப்போல மீசை வாரிக் கொள்ளும்போது இப்படி ஒரு மீசை எனக்கு வளரும் என்பதை முன்பு ஒருக்கிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனாலும் அது இயல்பாகவே வளர்ந்துவிட்டது.

இன்று காலை மீசையின் தும்பை வெட்டி விடும்போது தான் மீசையின் ஒரு முடித்துண்டு என் வாயில் போய் மேல் முன் பல்லின் பின்பக்கம் ஈனியின் இடுக்கில் வசமாகப் போய் குத்திக் கொண்டது. இது வரையிலும் ஒராயிரம் முறைக்கு மேலே நாக்கு நுனியால் நிமிண்டிப் பார்த்தும் ஈனியின் இடுக்கில் சிக்கிய எனது மீசை முடித்துண்டு வெளியேறவில்லை. தண்ணீரால் விதவிதமாக வாய் கொப்பளித்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. இரண்டாவது முறையாக பல் தேய்த்துப் பார்த்தேன். வளைந்தும், தெளிந்தும் தெரிந்த வித்தை எல்லாம் காட்டியும் நான் அழகிய மீசை என்று கருதும் எனது மீசை முடித்துண்டு என்னை ஒபத்திரம் செய்துகொண்டே இருக்கிறது.

காலை பத்திரிகை படிக்கும் போது நாக்கின் நிமிண்டல் தனி ஆவர்த்தனம் நடத்தியது. முடித்துண்டு வெளியேறி விட்டதைப்போல தோன்றினாலும் எச்சிலைக் கூட்டி துப்பி விட்டு மீண்டு நாக்குநுனியால் நிமிண்டிப் பார்க்கும் போது அந்த நெருடல் அப்படியே இருந்தது. எரிச்சலில் வலது கை பெருவிரலின் நகத்தால் ஈனியில் கிழறியபோது ரத்தம் கசிந்தது. ஆனாலும் மீசை முடித்துண்டு அசங்கவில்லை.
சின்ன குழந்தையாக இருந்தபோதே வாப்பாவின் மீசையில் எனக்கு நிறைய லயிப்பு உண்டு. அவர் மார் மீது தூக்கி வைத்துக் கொள்ளும் போதெல்லாம் கம்பி போன்ற அவரின் கட்டை மீசையின் தும்பை பிடித்து இழுக்கும்போது அவருக்கு விவரிக்க முடியாத சுகமாக இருந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அவரின் மீசை எனது முகத்துக்கு நேராக என் விரல்கள் அளைவவதற்கு தோதாக வரும்.
மீசை இல்லாத பருவத்தில் மீசை இருப்பதாக கருதி உதட்டின் தும்பில் வேண்டுமென்றே கை வைத்து முறுக்கிப் பார்த்த நினைவுகளும், கரிக்கட்டையை பொடியாக்கி துப்பணித் தொட்டு முறுக்கு மீசை வரைந்து தோப்பில் கட்டப்பொம்மன் வசனம் பேசிய அந்த நாட்களெல்லாம் ரசனைக்குரிய காலம்.

அரும்பு மீசை முளைத்த நேரத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வழித்து தேங்காய் எண்ணெய் போட்டுப்போட்டு முகத்தில் ரத்த ஓட்டம் வந்தால் மீசை வேகமாக வளரும் என்று யாரோ சொன்னதை நம்பி பள்ளி தென்னை மரமூட்டில் யாருமற்ற நேரத்தில் தலைகீழாக நின்று நான் வளர்த்திய எனது அழகிய மீசையின் ஒரு முடித்துண்டு தான் இப்போது எனது ஈனியும் பல்லும் இணையும் இடுக்கில் போய் உக்கார்ந்து என்னை பெரும்பாடுப்படுத்தியது.

எனக்கு மீசை வளர ஆரம்பித்த நேரத்தில் எப்படி மீசை வைத்துக் கொள்வது என்பதை குறித்த நிறைய சிந்தனைகள் உண்டு. வாரஇதழ்களில் அட்டைப்பட நடிகைகளின் முகங்களில் கோணல் மாணலாக ஒரு மீசையை வரைந்து விட்டு லயித்துப் பார்த்து விட்டு வாயை பொத்தி விழுந்து விழுந்து சிரிப்பேன். எம்.ஜி.ஆர். படங்களுக்கு பலவிதமான மீசை வரைந்ததும் அது கடைசி வரை திருப்தி தந்ததில்லை. நான் ஒரே மீசையிலிருந்து பல வகை மீசைகளை வரையும் நேர்த்தியை நிரம்ப பெற்றிருந்ததாக நினைத்துக் கொண்டதுண்டு. ஒரு கட்டை மீசையை வரைந்து பிறகு முறுக்கு மீசையாக மாற்றி அதையே தாடியோடு கலரும் மீசையாகவும் மாற்றி விடுவேன்.

ஊரில் பார்த்த ஒரு பாடு மீசைகள் ஞாபகத்தில் வந்தது. பெரிய பெரிய தலைவர்களின் மீசைகளெல்லாம் அலசிப் பார்த்தேன். பிரதமராக இருந்த பலருக்கும் மீசை இல்லை. சந்திரசேகரின் மீசையை மீசை என்று சொல்ல முடியாது. அது மீசைக்கான தனித்தும் இல்லாமல் தாடியில் பதுங்கி கிடந்தது. பிற்காலத்தில் வி.பி.சிங்கின் மீசை எனக்கு பிடித்திருந்தாலும் கூட அதற்கு முன்னாலே எனக்கு மீசை வளர்ந்து விட்டது. பாரதியின் மீசை எனக்கு ரொம்பவும் இஷ்டமானது. எனக்கு சிறு வயதில் இருந்தே போலீஸ் மீசைகள் மீது ஒருபாடு பயம் உண்டு. அந்த பயம் இப்போது வரையில் விலகவில்லை.

உதட்டின் விளிம்பில் ஒரு கனத்த நூல்போல் இருந்த பெரியப்பாவின் மீசையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அடிக்கடி அக்காவின் ‘மை’ பென்சிலால் அதுபோல கோணல் மாணலாக மீசை வரைந்து கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்துச் சிரிப்பேன். வீட்டில் எல்லோரும் கூடிவிடுவார்கள். இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு தரையோடு கமுந்து படுத்துக் கொள்வேன். எல்லோருமாக பெரும் பாடுபட்டு என்னை தூக்கி நிறுத்தி எனது இருகரங்களையும் அக்காவும் தம்பியும் இழுத்து பிடித்துக் கொள்ள நான் முகம் பொத்த முடியாமல் வெட்கப்பட்டு கண்களை மூடிக் கொண்டு முகத்தை ஒரு மாதிரியாக சுளித்துக் கொள்ளும்போது அந்த வினோத தோற்றத்தைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பார்கள்.

மைதீன் கண்ணப்பாவின் மீசையில் ஒரு கம்பீரம் உண்டு. அவரை ஊரில் எல்லோரும் மீசைக்காரப்பா என்று தான் கூப்பிடுவார்கள். உதட்டுக்கு மேலே அழகாக மீசையை கத்தரித்து கன்னத்தில் ஒரு சிறிய வட்டமாக அது படர்ந்து கிடக்கும் அழகைப்பார்த்துக் கொண்டே இருக்கலாம். சமீபகாலமாக எனக்கு அந்த கிறக்கம் சொக்கலிங்க அண்ணாச்சியின் கிருதா மீதும் உண்டு. அதுபோலவே முஸ்தபாவின் மீசையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மீசைதான் முஸ்தபா முஸ்தபாதான் மீசை என்று சொல்லுமளவுக்கு எனக்குள்ளே பிரபலமாகிப் போனது. முற்றிய கதிர் வரப்பில் சாய்ந்து கிடக்கும் அழகைப்போல உதடுகளை முழுமையாக மூடிக்கிடக்கும் அவனின் மீசையின் கம்பீரம் அழகானது.

எனது பத்தாவது வயசில் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு கார் பிடித்து குடும்பத்தோடு போனபோது வாப்பாவிடம் அக்கா சிலேடு வாங்கிக் கேட்டாள். தங்கச்சிக்கு பொம்மையும், தம்பிக்கு பேட்டரி காரும் வாங்கிக் கொடுத்து விட்டு உனக்கு என்ன வேணும் என கேட்டதும் அங்கே மீசை, தாடி வித்துக் கொண்டிருந்தவனைக் காட்டி ‘எனக்கு மீசை வேணும்’ என சொன்ன போது வாப்பாவிற்கு கோபம் வந்தது. பிறகு உடனே சிரித்து விட்டார். வீட்டுக்கு போய் தான் மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிசனோடு வாங்கித் தந்தார். ஆனாலும் ஒன்றிரண்டு முறை அவருக்குத் தெரியாமலேயே அங்கேயே வைத்துப் பார்த்தேன். இரண்டு சிறு கம்பி வளையம் மூக்கின் உள் மத்தியில் வைத்து அமுக்கி விட்டால் பிடித்துக் கொள்ளும். அந்த மீசையை வீட்டில் வந்ததும் அக்கா வைத்துப் பார்த்தாள். தம்பியும், தங்கச்சியும் வைத்துப் பார்த்தார்கள். ஒரு முறை உம்மா உறங்கும் போது அவளுக்கும் அந்த மீசையை வைத்து விட வீடே சிரித்துக் குலுங்கியது. எனக்கும் அக்காவுக்கும், தங்கச்சிக்கும் தம்பிக்கும் மகிழ்ச்சியைத் தந்துக் கொண்டிருந்த அந்த மீசை அக்காவின் கல்யாணத்திற்குப் பிறகு எப்படியோ காணாமல் போய்விட்டது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இப்போது இருப்பதைப் போல பெரிதாக இல்லாமல் சுமாரான மீசை இருந்தது. ஒரு முறை கல்லூரி நாடகத்தில் பெண் வேசம் போட எனது மீசையை வழித்துக் கொண்டேன். சிகரெட் பிடித்து பிடித்து கீழ் உதடு தடித்துப் போனதால் மீசையும் இல்லாமல் பார்க்க சகிக்காமல் அசிங்கமாகிப் போனது. மீசை அற்ற எனது முகம் அழகாக இல்லையென்று ஷியாமளா சொன்னாள். அப்போது தீர்மானித்துக் கொண்டேன். இனி எப்போதும் மீசையை எடுப்பதில்லையென்று.

எல்லா முடி திருத்தும் நிலையங்களிலும் நான் மீசை வெட்ட அனுமதிப்பதில்லை. நானாக வெட்டிக்கொள்வேன். மற்றபடி முருகன் மட்டும் தான் என் மீசையை வெட்டி இருக்கிறான். உலகில் அவன் மட்டும் தான் மீசை வெட்டும் கலையை அற்புதமாக அறிந்திருப்பதாக நான் நம்புகிறேன். இதில் என்ன கொடுமை என்னவென்றால் முருகனுக்கு மீசை கிடையாது. எவ்வளவோ மருந்தெண்ணெய்கள் வாங்கி தேய்த்துப் பார்த்தான். நிறைய வைத்தியர்களிடம் லேகியம் கூட சாப்பிட்டுப் பார்த்தான் ஆனாலும் அவனுக்கு மீசை வளரவில்லை. பூச்சி முடிமாதிரி பத்து பதினைந்து முடிகள் குருத்து நிற்கும். அவைகளை அவன் அனுமதிப்பதில்லை. முருகனுக்கு முழுமையாக மீசை வளராத கவலை ஒருபாடு உண்டு.

ஒரு நாளைக்கு எத்தனை மீசைகளைத்தான் அவன் பார்க்கிறான். அடர்த்தியான மீசை, அடர்த்தி குறைந்த மீசை, முறுக்கு மீசை, நூல்மீசை, உளி மீசை, எலி மீசை தாடியோடு கலரும் மீசை விதவிதமான மீசைகளை கத்தரித்து அழகுபடுத்தும் அவனுக்கு மீசை இல்லை.

முருகன் முதலில் சீப்புக் கொண்டு மீசையை அழகாக சீவி விடுவான். பிறகு அதன் தும்புகளை ஒரே நேர்க்கோட்டில் லாவகமாக வெட்டி எறிவான். ஒரு முடித்துண்டு கூட முகத்தில் படாது. அவன் தீர்மானித்து வெட்டிய எல்லைக்கு கீழே ஒரு முடித்துண்டு கூட நீண்டு நிற்காது. இப்படியும் அப்படியும் முகத்தை திருப்பித் திருப்பிப் பார்ப்பான். தலையை பின்பக்கமாக சாய்த்து உற்றுப் பார்ப்பான். மீசையற்ற அவன் முகத்தில் புன்னகைத் தவழும். முருகன் கத்தரிக்கும் மீசையை எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாது.

முருகன் தான் என் முகத்திற்கு பெரிய மீசை இருந்தால் அழகாக இருக்கும் என்று முதலில் சொன்னான். என் சுண்டு மறையும் அவவுக்கு மீசை வளர நீண்ட நாட்கள் பிடித்தன. பெரிய மீசை வளர்ந்தபோது எனக்குள்ளே ஒரு பிரம்மாண்டமான கம்பீரம் வந்து விட்டதாக நான் கருதிக் கொண்டேன். ஆரம்பத்தில் எனது பெரிய மீசையின் தும்பை நான் கடித்துக் துப்புவதுண்டு. மீசை மீதிருந்த தீவிரமான காதலால் மீசை கடிக்கும் பழக்கம் என்னிலிருந்து விலகிக் கொண்டது. மீசை கடிக்கும் பழக்கம் இருந்த நேரத்திலும் கூட முடித்துண்டு இப்படி ஈனியின் இடுக்கில் சிக்கியதில்லை. ஈனியிலும், பல்லிடுக்கிலும், தொண்டையிலும் பலமுறை மீன்முள் சிக்கிய அனுபவமுண்டு. ஆனால் முடி எனக்கு புதிய அனுபவம். பெருவிரலிலும் ஆட்காட்டி விரலிலும் நீண்ட நகம் இருந்திருந்தாலாவது பிடுங்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். நகம் வளர்த்தால் தரித்திரியம் என்ற நம்பிக்கையில் வளர்ந்து விட்டதால் அதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மதியத்திற்கு பிறகு மனதில் ஒரு சபதம் எழுந்தது. ஈனியின் இடுக்கிலிருந்து மீசை முடித்துண்டு அது பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும். இனி அது பற்றி சிந்திக்க வேண்டாம். சிந்திப்பதால் தான் பிரச்சனை என மனசைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியே மிஞ்சியது. நாக்கு என் கட்டுபூபாட்டை உடைத்துக் கொண்டு மீண்டும் நிமிண்டிக் கொண்டே இருந்தது.

எனது ஒட்டு மொத்த கோபமும் நாக்கின் மீது திரும்பியது. நாக்கு எது சொன்னாலும் கட்டுப்படுவதில்லை. மதியம் தூங்கும் முயற்சியிலும் தோற்றுப் போனேன். கண்களை இறுக்கி மூடினேன். ஒன்று, இரண்டு நூறுவரை சொல்லிப் பார்த்தேன். தூங்க முடியாத அளவுக்கு தவிப்புக் கூடிப்போனது. மேல் உதட்டுக்கு கீழே மீசை வளர்ப்பது ஹராம் என்று அடிக்கடி என் மீசையைப் பற்றி பேசுகிற மலுக்கு சொல்லியிருந்தார் அவர் சொல்லைக் கேட்டு மீசையை வெட்டியிருக்கலாம் என்று தோன்றியது. மாலையில் என் உலைந்த முகத்தைப் பார்த்து மலுக்குக் கேட்டார் ”என்னா மீசைக்காரா ரொம்ப டல்லா நிக்கே….”

”மீசையாலே பெரிய இம்சை கேட்டியளா…?” எனத் தொடங்கி ஈனியின் இடுக்கில் சிக்கிய மீசை முடித்துண்டின் கதையைச் சொன்னேன்.

”அதான் ஹராமான மீசை வேண்டாம்னு சொன்னேன்…” எனச் சொல்லி விட்டு யானை முடி மோதிரம் கிடந்த கையால் வாயைப் பொத்திச் சிரித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *