வார இறுதி பெசன்ட் நகர் பீச்.. சொல்லவே வேணாம், கடல்த் தண்ணிக்கு போட்டியா ததும்பி வழிந்து கொண்டிருந்தது கூட்டம்! பஸ்ஸ விட்டு இறங்கி சர்ச் எதிர்ல போய் மாதாவுக்கு செல்லமா ஒரு ஹாய் சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவன் எங்க நிற்கிறான்னு தெரியல, மொபைலை எடுத்து அவன் நம்பருக்கு போட்டேன், கிடைக்கவில்லை.. சமயத்துல இப்பிடித்தான் கழுத்தறுக்கும். திரும்ப ட்ரை பண்ணினேன்.. ம்ம்ஹூம்…கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒருமுறை அஷ்ட லட்சுமி கோவிலுக்கு பக்கத்தில மீட் பண்ணிருக்கிறோம், ஒரு யூகத்தில் நடக்க ஆரம்பித்தேன். அவன பார்க்கிறதுக்குள்ள என்னைப் பத்தி சொல்லிர்றேன், ஏன்னா அதுக்கு அப்பறம் என்னை எங்க அவன் பேச விடப்போறான்?
நான் அனுஜன்யா, சுருக்கமா அனு! இப்ப நான் பார்க்கப் போறனே அந்தப் பொறுக்.. ச்சே அவன் பேர் அபினவ், சுருக்கமா அபின்னு கூப்பிடுவேன். அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? உண்மையச் சொல்லப்போனா, ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனா இப்ப? அவன் இல்லாம நானே இல்லை! அப்பிடி ஆக்கிட்டான் அந்தப்பாவி! கொஞ்சம் இருங்க.. நீங்களும், “இந்தப் பாழாப்போன லவ்வான்னுதானே?” கேக்கப்போறீங்க? தமிழ் சினிமா ஓவரா பாக்காதிங்க!
அந்தப்….ச்சே… அவன் பேரே வர மாட்டேங்குதுங்க, பொறுக்கின்னுதான் வருது, அப்பிடியே சொல்றேன் கண்டுக்காதிங்க. அந்த பொறுக்கிதான் எங்க வீட்ல எனக்காக பார்த்துப் பார்த்து தேடி கொண்டு வந்த மாப்பிள்ளை! அந்தப் பொறுக்கி பொண்ணு பார்க்க வந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கு.
ரொம்பத் தடபுடலா வருவாங்கன்னு எதிர்பார்த்த எங்களுக்கு சிம்பிளா அபி, அவனோட அம்மா அப்பா மூணு பேரு மட்டும் கார்ல வந்து இறங்கினதப் பார்த்ததுமே ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்து ஒட்டிக்கொண்டது. வந்ததுமே எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக பேச ஆரம்பித்தார்கள், அவனும்தான்! அவன் என் அப்பா எதிரே இருந்ததால் பின் பக்கம் இருந்து அவன் மூஞ்சியை சரியாகப் பார்க்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் என் தவிப்பு புரிந்தோ என்னவோ, அவனே ரெஸ்ட் ரூம் எங்க இருக்குன்னு அப்பாவிடம் கேட்பதும் “அனு.. உன் ரூம்ல உள்ள ரெஸ்ட் ரூமுக்கு கூட்டி போம்மா” என்ற அப்பாவின் குரலும் கேட்டது.
எதுவும் சொல்லாமல் மாடிக்கு நான் நடக்க என் பின்னால் அவனும் வந்தான். ரூமுக்குள் போனதும் ரெஸ்ட் ரூமைப் பார்த்து கை காட்டினேன். அவன் போக வில்லை, மெதுவாகத் திரும்பினேன்.. அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நானும் ஒரு உந்துதலில் அவனைப் பார்த்தேன் சரியான உயரத்தில் கருப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் ஒரு கவர்ச்சியான நிறத்தில் சின்ன மீசையோடு சுத்தமாக சேவ் செய்த தாடையோடு கண்ணில் உள்ள குறும்பை மறைக்கத் தெரியாமல் நின்றான்! பார்த்ததுமே ஒருத்தனைப் பிடிக்குமா என்ன? எனக்கு அவனை அன்றைக்கு அப்படித்தான் பிடித்துப் போனது!
ரெஸ்ஸ்ஸ்ட் ரூம்ம் அங்க… என்றேன் தயங்கியபடி..
அதுக்கு அந்தப் பொறுக்கி என் எதிரில் வந்து.. “ஆக்சுவலா உங்க வீட்டுக்குள்ள வரும்போது பேஸ் வாஷ் பண்ணிக்கனும்னு நினைச்சது உண்மைதான்.. பட் இப்ப அது தேவையில்லை” என்றான்!
ஒன்றும் புரியாமல் பார்வையாலே ஏன் என்று கேட்டேன்.
அதுக்கு அந்தப் பொறுக்கி “உன் அப்பா எதிர்ல உக்காந்து பேசினா அவரே ஃப்ரீயா பேஸ் வாஷ் பண்ணி விடறாரே? அதான் பேச வாயத் தொறந்தா ஷவர் தெறிக்குதே?” என்றான் சிரிக்காமல்.
ஆனால் நான்தான் என் அப்பாவை கிண்டல் செய்கிறான் என்ற ரோசம் கூட இல்லாமல் சத்தமாகச் சிரித்தேன்! அப்போது ஆரம்பித்தவள்தான்.. திகட்டத் திகட்ட சிரித்துக்கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை! அதன்பிறகு எங்கள் பேச்சு வளர்ந்து இரண்டு முறை இதே பீச்சில் மீட் பண்ணியும் விட்டோம்! இப்பவும் அதே பொருக்கியத்தான் பார்க்கப் போறேன்! உங்களுக்கு கதை சொல்ற சாக்குல இதையெல்லாம் அசை போட்டுக்கிட்டே கோவிலையும் தாண்டி நடந்தேன் போல…
பின்னாடி இருந்து அனு..அனு… அனுன்ன்ன்னு…..சத்தமாகக் கேட்டது!
திரும்பிபார்த்தால் அந்த பொறுக்கி..ரெண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு மூச்சு வாங்கநின்றான்!
“அடிப்பாவி… உன் பின்னாடி ஓடி வந்த இந்த ஓட்டத்தை ஒலிம்பிக்ல ஓடியிருந்தேன்னா தாலி பண்ணத் தங்கமாவது கிடைச்சிருக்கும்” என்றான்
ஒன்றும் சொல்லாமல் பார்வைலே மன்னிப்புக் கேட்டபடி நின்றேன்..
அவனும் கோபத்தை மறந்து சேலையில் என்னைப்பார்த்ததும் உற்சாகமானான்! “வாவ் என்ன மேடம் இன்னைக்கு சேலைல வந்துருக்கீங்க?” என்றான்
அதற்கு ஏதும் பதில் சொல்லாமல், அவன் கைகளைக் கோர்த்துக்கொண்டேன், அவன் தோளில் சாய்ந்து கொண்டேன், ஒரு பெண்ணுக்கு உச்சபட்ச சந்தோசமே இதுதான் என்று தோன்றியது எனக்கு. “டேய்.. பூ வாங்கித்தாடா” என்றேன், என்னை ஆச்சர்யமாகப் பார்த்தவன் மறு பேச்சு பேசாமல் ஓடிப்போய் வாங்கி வந்து அவனே என் தலையில் வைத்துவிட்டான். அப்பிடியே அவன் கைகளைப் பிடித்தபடியே நடந்து போய் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு மேடான பகுதியில் உக்கார்ந்தோம். எவ்வளவு நேரம் அமைதியாக அலைகளைப் பார்த்திருப்போம் என்று தெரியாது, இரண்டு பேருக்குமே அது பிடித்திருந்தது. அவன் தோளில் சாய்ந்தபடி நானும் ஆறுதலாய் என் கைகளைப் பிடித்தபடி அவனும்… இந்த உலகம் அப்பிடியே ஃபிரீஸ் ஆகக் கூடாதா என்று தோன்றியது.
“அபி…” என்றேன் நான்.
‘என்னடி..ஆச்சர்யமா பேர் சொல்லிக் கூப்பிட்ற?” என்றான்.
“போடா பொருக்கி” என்றேன் வெட்கத்தோடு..
“ம்ம்..இது அழகு…” என்றான் சிரித்துக்கொண்டே.
“டேய்.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு.. ஆனா மனசளவுல இப்பவே நான் உன் வைஃபாத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன், இனிமே நீ இல்லாத நிமிசங்கள என் வாழ்க்கைல கற்பனை கூடப் பண்ண முடியாது, என்னைய அப்பிடி மாத்தி வச்சிருக்க நீ! பொருக்கி.. காதலே சுத்த ஹம்பக்னு சொன்ன என்னையவே இப்ப உருகி உருகி காதலிக்க வச்சிட்ட! சத்தியமா சொல்றேண்டா.. சாகுற வயசுல கூட உனக்கு ஒரு நாள் முன்னாடியாவது நான் செத்துறனும்! ஏன்னா..ஒரு நிமிஷம் கூட உன்ன விட்டு என்னால இருக்க முடியாது” என்று சொல்லி முடிப்பதற்குள் என்னையும் மீறி கண்களில் கண்ணீர் கொட்டியது!
இரு கைகளாலும் என் முகத்தை ஏந்தியவன்… எதுவுமே சொல்லாமல் என்னை அனைத்து என் உதடுகளைக் கவ்விக்கொண்டான்! நானும்தான்.. ஆயிரம் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை ஒரு முத்தத்தால் புரிய வைத்தான்! அதன்பிறகு எதுவும் பேசவில்லை, கைகளைக் கோர்த்தபடி நடந்தோம், என்னை ஆட்டோவில் அனுப்பிவிட்டு அவனும் வீட்டுக்கு போனான்.
வீட்டுக்கு வந்தும் ‘சாப்ட வாடி” என்ற அம்மாவிடம் சாப்பிட்டேன் என்று மையமாக பதில் சொல்லிவிட்டு ரீச்ட் சேஃப்லி என்று அவனுக்கு மெசஜ் அனுப்பிவிட்டு, சோபாவில் உட்கார்ந்தேன், கொஞ்சம் சுகமாக வலித்தது உதடு, பாவி.. அம்மா என்னமோ கேட்டாள், அப்பா எதுவும் பேச வில்லை, எப்போது போய்ப் படுத்தேன், எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை, காலையில் மணி பார்த்தேன் ஆறுதான் ஆயிருந்தது! அப்போதும் எந்திரிக்க மனம் இல்லை, மனம் முழுவதும் நேற்று நடந்ததை அசை போட ஆரம்பித்தது!
நேத்து பீச்ல நடந்துகிட்டத நெனச்சா எனக்கே வெட்க்கமா வந்தது, ச்ச்சே… அபி ஃபீல் பண்ணிருப்பான் பொறுக்கி.. ஆனா அந்த அழுகையும் அதுக்குபிறகு கொடுத்துகிட்ட முத்தமும் இன்னமும் நெஞ்சுக்குள்ளே இருந்தது. இதுக்காகவாது இன்னொருவாட்டி அழுகுற மாதிரி சீன் போடலாம். இந்நேரம் அந்த ராஸ்கல் என்ன பண்ணுவான்? பேசணும்போல இருந்தது. ஆனாலும் பொருக்கி ராஸ்கல் முத்தம் கொடுக்கிற சாக்குல உதட்ட நல்லா கடிச்சி வச்சிட்டான்! அம்மா என்னடின்னு கேட்டதுக்கு பதிலே சொல்ல முடியல. அப்பா சொல்லவே வேண்டாம்..ஒரு மாதிரி பார்த்துகிட்டே போயிட்டாரு. எல்லாம் இவனாலதான்.. ஸ்வீட் ராஸ்கல்.. என்னடா பண்ற? உன்கிட்ட பேசனும்டா இப்ப.. ஐயோ.. அனுஜன்யா உனக்கு என்ன ஆச்சுடி? இப்பிடி புலம்ப வச்சிட்டானே?
நான் நெனச்சது அவனுக்கு எப்பிடி தெரிஞ்சதுன்னு தெரியல? என் மொபைல் பொறுக்கின்னு அவன் பேரைத் தாங்கி சிணுங்க ஆரம்பித்தது… பொருக்கி…நான் புலம்புறது தெரிஞ்சா அதுக்கும் கிண்டல் பண்ணுவான்… ஒண்ணுமே நினைக்காத மாதிரி பேச நினைத்து..ஹலோ என்றேன்…
ஹாய் டார்லிங்… என்னடி என்னையே நெனச்சிக்கிட்டு இருக்கியா? இல்லை.. நான் கொடுததையா?
(ராஸ்கல்..வீட்ல ஒளிஞ்சிருந்து பார்த்த மாதிரியே கேக்குறானே?) போடா..பொருக்கி.. எனக்கு வேற வேலை இல்லையா? நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்.. எழுப்பிவிட்டு கேள்வி வேற? என்னடா வேணும்?
ஒரு சந்தேகம் கேக்கணும் குட்டி.. நீ தனியா இருக்கியா? இல்லை.. உதட்டுக்கு மேல அட்டபூச்சிய ஒட்டி வச்சிருப்பானே அவன் இருக்கானா பக்கத்துல?
டேய்ய்..பொருக்கி…அப்பாவ கிண்டல் பண்ணாதடா… அவரு தூங்குவாரு, காலங்காத்தால என்னடா சந்தேகம் உனக்கு?
என்னது தூங்குறானா? எனக்கு ஏன் கொழுந்தியா இல்லாம போச்சுன்னு இப்பதாண்டி தெரியுது.. கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாத அப்பன்டி உனக்கு..
ஏய்ய்….லூசு…. ஏன்டா இப்பிடி படுத்துற? என்னமோ கேக்கனும்னியே? கேட்டுத்தொலைடா..எனக்கு தூக்கம் வருது.. என் உதடுதான் இப்படி சொன்னதே தவிர.. இந்த ராஸ்கல் நடுராத்திரி பேசுனாலும் பேசிக்கிட்டேதான் இருக்கதோணுது, எனக்கே எனக்காக இவன பெத்து கொடுத்ததுகாகவாது அவனோட அம்மாவை கைமேல் வைத்துத் தாங்கனும்போல தோணியது. இப்ப என்னோட உலகத்துல அபி..அபி…அபிதான்… என்னையே எனக்கு மறக்கடிச்சிட்டான் ராஸ்கல்!
நேத்து இப்பிடித்தான் பீச்ல அபிய பார்க்கபோற சந்தோசத்துல என் அம்மாவோட ஜாக்கெட்ட எடுத்து போட்டுக்கிட்டு, அம்மாகிட்ட போய் என்னம்மா இது ஒரே நாள்ல இப்பிடி ஸ்லிம் ஆயிட்டேன்னு கேட்டேன்! அதுக்கு அம்மா பார்த்த பார்வை இருக்கே? எல்லாம் அந்தப் பொருக்கியாலதான்.. அவன்கிட்ட சொல்லணும் டேய் தங்கக்குட்டி ஒருநாளாவது உன் குட்டிமா ட்ரெஸ் இல்லாம வெளில போறதுக்குள்ள கல்யாணம் பண்ணி கூட்டி போயிருடா… இப்பிடி வெட்க்கமில்லாம அவன்கிட்ட சொல்லணும்.. என் செல்லப் பொருக்கிகிட்ட எனக்கு என்ன வெட்கம்?
ஹலோ..ஹலோ…. ஹலோலோலோ… அபி அந்த முனையில் கத்திக்கொண்டிருந்தான்…
சொல்றா ராஸ்கல்..இருக்கேண்டா…ஏன்டா கத்துற?
என்னடி குட்டி.. டூயட் பாட போயிட்டியா? குளிச்சிட்டு வந்து பாடுடி…அழுக்கி..உன் அப்பன மாதிரியே இருக்கியே நீயும்? குடும்பமே குளிக்கிறது இல்லையோ?
ஏய்ய்… இப்ப ஏன்டா அவர இழுக்குற? உனக்கு என்னமோ சந்தேகம் கேக்கனும்னியே அத கேளுடா மொதல்ல, முரட்டு ரவ்டி.. சின்ன புள்ளைங்க பப்பர் முட்டாய கடிக்கிற மாதிரி உதட்ட கடிச்சிட்டு பேச்சைப்பாரு.. வீட்ல யார் மூஞ்சியும் நான் பாக்க முடில தெரியுமா?
சரி விட்ரி செல்லம்.. அதுக்கு ஒரு மருந்து இருக்கு, அடுத்தமுறை பார்க்கும்போது அதையும் தர்றேன், அதவிடு இப்ப, ஏண்டி.. படிச்ச கவிதை.. பார்த்த படம் எல்லாத்துலயும் பெண்கள் உதடு தேன் மாதிரி இனிக்கும்.. வண்டு வந்து உட்காரும்னு பாடுனாங்க.. நேத்து என்னடி உன் உதடு ஒரே உப்பு கரிச்சது? ஆல் லேடிஸ் எங்கள ஏமாத்துரீங்கடி.. உன் உதடு ஏன்டி இனிக்கல? பதில் சொல்லுடி..
அட..அறிவே இல்லாத என் அறிவு செல்லமே! நேத்து அழுததால கண்ணீர் வழிஞ்சு உதட்டுல இருந்துச்சுடா…அதனாலதான் உப்பா இருந்திருக்கும்… சந்தோசமா இருக்கும்போது கொடுதுப்பாரு.. அப்ப தெரியும்! இன்னைக்கு நான் ரெம்ப சந்தோசமா இருக்கேண்டா வாலு..!
போடி…நீ அங்க சந்தோசமா இருந்தா எனக்கென்ன?
டேய்ய்..என் ட்யூப்லைட் மடையா… நான் என்ன சொன்னேன்… நான் இப்ப ரெம்ப சந்தோசமா இருக்கேண்டா!
ஏய்ய்..என்ன சொன்ன? இரு.. ஆஆ…செல்லகுட்டி குளிச்சிட்டு ரெடியா இருடி… பத்து நிமிசத்துல அங்க இருக்கேன்.. அந்த அண்டா வாயனையும்.. அவனோட பிகரையும் ஏதாவது கோவிலுக்கு அனுப்பி வச்சிரு போகலைன்னு சொன்னா குண்டு கட்டாத் தூக்கி வெளில போட்டுரு, நான் இதோ வந்துகிட்டே இருக்கேன்” என்றபடி போனைக் கட் பண்ணிவிட்டான்.
எனக்கு அதுக்கு அப்பறம் படுக்கையில் இருக்கப் பிடிக்கவில்லை, வேகமாக எழுந்து குளித்து அவனுக்குப் பிடித்த சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு கீழே வந்தேன், அப்பாவுக்கு டிபன் கொடுத்துக் கொண்டிருந்த அம்மா என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்! “அம்மா.. இன்னைக்கு உங்க ப்ரோகிராம் என்னம்மா?” என்றபடி தட்டை எடுத்து வைத்துக்கொண்டு நானும் உக்காந்தேன்.
“ப்ரோகிராமா? என்னடி சொல்ற?” என்றாள் அம்மா.
அதாம்மா, நீயும் அப்பாவும் பத்திரிக்கை கொடுக்க போகணும்னு சொன்னீங்கல்ல, நீங்க போங்கம்மா, மதியத்துக்கு நான் சமைச்சு வைக்கிறேன் என்றேன்.
என்னை ஆச்சர்யமாக மேலும் கீழும் பார்த்த அம்மா :என்னடி? சோனையன் குடுமி சும்மா ஆடாதே? என்னடி விசயம்?” என்றாள்
அப்பாவுக்கு புரிந்துவிட்டது போலும் “ஏய்.. அதான் புள்ள சொல்லுதுல்ல சமச்சி வைக்கிறேன்னு, கெளம்புடி பேசாம” என்று கை கழுவ போனார்.
அம்மாவுக்கு அப்போதும் புரியவில்லை போல என்னிடம் மெதுவாக வந்து “என்னடி விசயம்?” என்றாள்.
அது… அது வந்தும்மா…. அந்தப் பொ… நாக்கை கடித்துகொண்டேன், அவரு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரும்மா, அதான் நானே சமைக்கலாம்னு…. என்று இழுத்தேன்..
“அதானே பார்த்தேன்! என்னைக்கும் இல்லாத திருநாளாசமைக்கிறேன்னு சொல்றியேன்னு” என்று கிண்டல் பண்ணிவிட்டு கொஞ்ச நேரத்தில் இருவரும் பத்திரிக்கைகளை பையில் போட்டுகொண்டு கிளம்பிவிட்டார்கள்.
மெதுவாக சமையல் அறைக்குள் புகுந்தேன்.. என்ன சமைக்கலாம்? அந்த ராஸ்கலுக்கு என்ன புடிக்கும்னு யோசிக்கும் போதே ஒரு முறை ரெஸ்ட்ராரண்டில் சாப்பிடும் போது ‘எனக்கு நான் வெஜ்ஜ விட வெஜ்ஜுதான் புடிக்கும், அதுவும் காலிஃப்ளவர்ல எது செஞ்சாலும் சாப்பிடுவேன்” என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது, கிச்சனில் பார்வையை விட்டேன், காலிஃப்ளவரைத் தவிர எல்லாம் இருந்தது, சரி வாங்கிகிட்டு வந்து சமைக்கலாம் என்று வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன். மார்கெட் நடந்து போகும் தூரம்தான், ரயில்வே கிராசிங்கைத் தாண்டினால் வந்துவிடும், அந்த ஸ்வீட் ராஸ்கலுக்காக இது கூட செய்ய மாட்டனா என்ன?
அபிக்கு என்னென்ன சமைக்கணும், அவன்கூட என்னென்ன பேசணும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டே நடந்தேன், கேட் குளோஸ் ஆகி இருந்தது, ஓவர் ஹெட் ப்ரிட்ஜ் ஏறி போகவும் பொறுமை இல்லாமல் அனைவரையும் போல நானும் குறுக்கே நடக்க ஆரம்பித்தேன், அந்த நேரம் பார்த்து போன் அடித்தது, எடுத்துப்பார்த்தேன் அபி! இந்த ராஸ்கலுக்கு வீட்டுக்கு வர்ற வரையும் கூட பொறுமை இருக்காதே? என்று நினைத்துக்கொண்டு ஆன் பண்ணி “ஏன்டா பொறுக்கி..அதான் வீட்டுக்கு வர்றீல்ல? அப்பறம் என்ன போன்? என்றேன்.
அந்தப்பக்கம் “ஹலோ..ஹலோ…யார் நீங்க?” என்றது குரல்
அதிர்ச்சியாகி நம்பரைப் பார்த்தேன்… பொறுக்கி என்று இருந்தது, அவன் நம்பர்தான்! ஹலோ..இது அபி போன்தானே? நீங்க யாரு? என்றேன்.
“சாரிங்க.. அவரு பேரு அபியா? இங்க அமிஞ்சிக்கரைல ஒருத்தர் வண்டில வந்துகிட்டு இருக்கும் போது, பசங்க பட்டத்துக்கு போட்ட மாஞ்சா நூலு அறுந்து வந்து அவரு கழுத்துல சிக்கி கழுத்தை அறுத்துருச்சு போல.. அவரு நிலை தடுமாறி விழுந்து பின்னாடி வந்த லாரி ஏத்தி ஸ்பாட்ல உயிர் போச்சுங்க.. அங்க கிடந்த செல்போன எடுத்து அவரு கடைசியா பேசின நம்பருக்கு…..” மறுமுனையில் சொல்லிக்கொண்டே போக எனக்கு காலடியில் உலகம் நழுவியது, கையில் இருந்த செல்போனும் நழுவியது….
உலகமே நிசப்தமாகத் தோண. என்னைப்பார்த்து மட்டும் ஒரு கூட்டமே கத்திகொண்டிருப்பதைப் பார்த்தேன்.. எதற்கென்று புரியாமலே தலையைத் திருப்பினேன்….
என்னை நோக்கியபடி ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது! ஒருவேளை அபிதான் என்னைக் கூப்பிட வருகிறான் போல… எனக்கு ஏனோ விலகத் தோன்றவில்லை!
“அபிபீபீபீபீபீ…”
– டிசம்பர் 2013