ஈருயிர் ஓருடல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 3,781 
 

சிகியை இன்று அவளது கல்லூரி விழாவில் பார்த்ததிலிருந்து எனக்குள் ஏதோ பிரளயம் ஏற்பட்டது போலிருந்தது. மனம் வித்தியாசமான வேலையை செய்ய ஆரம்பித்தது புரிந்தது. பள்ளியில் சேர்ந்தது முதல் பள்ளிப்படிப்பு முடியும் வரை ஒரே வகுப்பு என்றாலும் எப்போதும் முன் வரிசையில் எனக்கு முன் அமர்ந்திருப்பாள். பின்னால் இருப்பவர்களைத்திரும்பிப்பார்க்கும் பழக்கமோ, நேரில் வருவோரை நிமிர்ந்து பார்க்கும் பழக்கமோ இல்லாதவள். அவளுக்கு தோழிகள் கூட மிகவும் குறைந்த அளவினரே இருந்தனர். வகுப்பு துவங்கும் முன்பே வந்து விடுவாள். முடிந்து அனைவரும் சென்ற பின்பே செல்வாள்.

படிக்கும் காலத்தில் பருவக்கிளர்ச்சி என்னை பாதிக்கவே இல்லை. அதனாலேயே முதல் மாணவன் எனும் நிலையை எனக்கே வைத்துக்கொள்ள முடிந்தது. சிகியின் முகத்தை அவள் பார்க்காத போது வகுப்பறையில் நான் பார்ப்பதுண்டு. மிகவும் பிடித்தவர்களை வளர்ச்சியடையாத நம் மனம் அருகாமையில் பார்க்கக்கூச்சப்படும். அதன் காரணமாகவே அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அவளுடன் பேச பள்ளிப்படிப்பு காலத்தில் முயற்ச்சிக்காமல் விட்டு விட்டேன். தூரத்திலிருக்கும் போது மட்டும் பார்த்துக்கொள்வேன்.

பள்ளிக்காலங்களில் அவளது பார்வை தீர்க்கமாக என் மீது விழவில்லை என நினைக்கிறேன். இல்லையென்றால் கல்லூரியில் பார்த்ததும் பேச முற்படாமல் ஒதுங்கிப்போயிருக்க மாட்டாள். சிலர் தெரிந்திருந்தும் ஒதுங்கிப்போவர். சிகி அந்த வகையானவர்களைச்சேர்ந்தவளில்லை.

பல நூறு மாணவ, மாணவர்கள் படிக்கும் பள்ளியில் அனைவரிடமும் பழகுவதோ, நட்பு கொள்வதோ சாத்தியமில்லாதது. அனைவரின் முகங்களையும் மனதில் பதிய வைப்பதும் இயலாதது. “நான் உங்கள் பள்ளியில் உங்களுடன் தான் படித்தேன்” என சிலர் கூறும் போது நம்மை யோசிக்க வைப்பதும் உண்டு. தவிர வளரும் பருவம் என்பதால் ஒவ்வொரு நாளும் முக மாற்றம் ஏற்படுவதும் கூட அடையாளம் கண்டு பேச தடையாக உள்ளது. இவ்வகையான நிலை தான் சிகியுடன் எனக்கும்.

கல்லூரியில் ஆண்களுடன் பழகிவிடாதவாறு அவளது பெற்றோர் திட்டமிட்டே பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் அவளைச்சேர்த்து விட்டிருக்கக்கூடும் என நினைத்தேன். அதே வழியில் உள்ள அடுத்த கல்லூரியில் நான் சேர்ந்து படித்தாலும் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்கள் முன்னால் நிற்கும் பழக்கத்தால் அங்கும் அவள் முகத்தைப்பார்க்காமலேயே இருக்கின்ற துர்பாக்கிய நிலைதான்.

அவளது கல்லூரி விழாவில் அவளுடன் பேச வேண்டுமென்று திட்டமிட்டே கலந்து கொண்டு சந்தித்த போது அவள் எனது முகத்தை முற்றிலும் மறந்து போயிருந்தாள். அல்லது அவளது மனப்பதிவில் என் முகத்தைச்சேமித்திருக்கவில்லை. அவள் மேடையில் சொன்ன கவிதையின் அர்த்தத்தை நான் அவளைத்தேடிச்சென்று கூறிய போது மிகவும் வியந்து, மகிழ்ந்து நன்றி சொன்னாள். “எனது முதல் வாசகர் நீங்கள் தான்” என அவள் சொன்ன போது எனக்குள்ளும் ஒரு வித வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சில உணவுகளை சாப்பிடும் போது வயிறும், சில பேரிடம் பேசும் போது மனமும் பூரிப்படைவதுண்டு. அப்படிப்பட்ட உணவு வகைகளையும், மனிதர்களையும் நாம் தேடிச்செல்ல வேண்டும் என்பது மட்டும் நன்றாகப்புரிந்தது.

“என் பேரு ரகு. உங்க கூட எல்.கே.ஜில இருந்து பயணம் பண்ணறேன். ஆனா ஒரு நாள் கூட, ஒத்த வார்த்தை கூட உங்க கூட பேசியதில்லை. ஆனா மற்ற பெண்களை விட உங்களை மட்டுமே எனக்கு பிடித்திருந்தது. காலேஜ்ல தான் தள்ளி இருக்கோம்….” என்றதும் “ஓ…வெரி இன்டர்ஸ்டிங்…. நான் உங்களை ரொம்பவுமே மிஸ் பண்ணியிருக்கேன் பாருங்களேன்…” என அவள் கன்னத்தில் குழி விழும்படி, அந்தக்குழியை நான் பார்க்க வேண்டுமென்பது போல் முகத்தைத்திருப்பிக்காட்டியதும் எனக்கு தலை கால் புரியவில்லை. 

அடுத்த நாள் முதல் பேருந்தில் எனதருகே உள்ள இருக்கையிலேயே கூச்சப்படாமல் அமர்ந்து கொண்டு இடை விடாமல் பேசிக்கொண்டே கல்லூரி பயணத்தைத்தொடர்ந்தாள். எனது நண்பர்களுக்கு அவளது நெருக்கமான என்னுடனான பழக்கம் பொறாமையைத்தந்திருக்க வேண்டும். இல்லையென்றால் முன்பு போல் பேசாமல் செல்வார்களா? ஒரு நல்ல தோழி கிடைத்து விட்டதாகவே மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு மேல் அவளுடன் என்னை இணைத்து தேவையற்ற கற்பனை செய்ய எனது மனதுக்கு நான் அனுமதியளிக்கவில்லை.

சிகி ஒரு வெகுளி. மனதில் பட்டதை மறைக்காமல் பேசி விடுவாள். அவளது மாமன் மகன் கெவின் அவளுடன் தனியாக இருக்கும் போது தவறாக நடந்து கொள்ள முயன்றதையும், அதிலிருந்து அவனை வெறுத்து விட்டதையும் கூறிய போது நான் அது போல் அவளிடம் கெட்ட பெயர் வாங்கி விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன்.

“ரகு உனக்கு என்னை ரொம்பப்பிடிச்சிருக்கா?” ஒருமையில் பேசியது பிடித்திருந்தது.

“ஆமா. அதுல என்ன சந்தேகம்..‌..?”

“இல்லே நீயும் கெவின மாதிரி என்னோட அழகுல மயங்கி, என்னைப்பார்க்க திட்டம் போட்டு என்னோட காலேஜ் பங்ஸனுக்கு வந்திட்டியோன்னு மனசுல பட்டுது. உடனே கேட்டிட்டேன். கேட்டிருக்கக்கூடாதா…? உன்னோட மனசு வலிக்குதா….?”

“ச்சே…சே… அப்படி ஒன்னுமில்லே. உன்ன மாதிரி வெகுளித்தனமா, மனசுல பட்டத பேசறவங்கள எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதான்” என நான் கூறிய போது தள்ளி அமர்ந்திருந்தவள் நம்பிக்கை வந்தவளாக சற்று எனதருகே நெருங்கி அமர்ந்தாள்.

அவளது அருகாமை மகிழ்ச்சியைக்கொடுத்தது. உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றாக உள்ளத்தில் குதூகலம் அதிகரித்தது. உடலின் விருப்பங்களை விட உயிரின் விருப்பங்கள் உன்னதமானது. காதலின் முடிவு உடலின் தேவைகளின் பூர்த்தி என்பதில் எனக்கு ஒரு சதவீதமும் உடன்பாடு இல்லை. காதலின் தொடக்கமே உயிரின் விருத்தி என்பது தான் எனது தீர்க்கமான முடிவு.

“நான் பொண்ணுங்க கூட இவ்வளவு நெருக்கமா உட்கார்ந்தா தோள்ல கை போடுவாங்க, கன்னத்த, இடுப்ப கிள்ளிடுவாங்க. நீ என்னடான்னா முற்றிலும் துறந்த முனிவர் மாதிரி சலனமே இல்லாம, சங்கோஜப்படாம சாதாரணமா இருக்கே? உண்மையிலேயே நீ நூறு பர்சன்ட் இருபத்து நாலு கேரட் சுத்தத்தங்கந்தான்.

ஆனா சுத்தத்தங்கத்துல நகை செய்ய முடியாது. கொஞ்சம் கலப்படம் செய்யனம்” என்று சிகி பேசிய போது நான் இது வரை இப்படி நூறு சதவீதம் நல்லவனாக இருந்ததற்காக பெருமைப்பட்டேன்.

“நகையா நான் மாறனம்னா எனக்கு மனைவியா வர்ற பொண்ண சேர்த்துத்தான் கலப்படம் செய்யனம். அதுக்கு உனக்கு சம்மதமா….?” எனக்கேட்டு விட்டு உதட்டைக்கடித்துக்கொண்டேன். யோசிக்காமல் பேசும் கெட்ட பழக்கம் என்னிடம் சில சமயம் உண்டு.

“உதட்ட விடுங்க. அது என்ன பாவம் பண்ணுச்சு? எனக்கும் உங்க கூடவே வாழ்நாள் முழுவதுமே பயணம் பண்ணனம்னு ஆசை இருக்கு. இப்ப நீங்க என்னோட உடம்பை விட உயிரோட நெருக்கமாயிட்டீங்க. இது எனக்கு பயங்கர மகிழ்ச்சி. நெறையப்பேர் உடம்பத்தான் உயிரா நேசிக்கறாங்க. அது உடல் வசியம். உங்க மேல நான் வெச்சிருக்கிறது உயிர் வசியம். நீங்களும் அப்படித்தான்” என கூறியவள் திடீரென யதார்த்தமாக ஒரு சேயின் மனநிலையில் எனது மடியில் தலை சாய்த்தவள், தேம்பித்தேம்பி அழுதபோது என்னாலும் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவள் காரணத்தோடு அழுதிருக்கலாம். நான் காரணம் புரியாமல் அழுதேன்.

இறங்குமிடம் வந்தும் இறங்க மனமில்லாமல் அவளது இறங்குமிடம் வரை சென்று பின் திரும்பவும் வேறு பேருந்தில் ஏறி வந்து வீட்டிற்குச்சென்றேன். எனது இந்த செயல் அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் நான் இறங்குமிடம் வந்ததும் ஞாபகப்படுத்தியிருப்பாள். 

அவள் எனது மடியில் படுத்தவாறு அழுத காரணத்தை யோசித்து இரவு தூக்கம் தொலைத்தேன். அன்பின், பாசத்தின், காதலின் வெளிப்பாடு கூட அழுகையில் வெளிப்படும் என்பதை ஒரு சிறுகதையில் படித்துள்ளேன். ‘அல்லது வேறு பிரச்சினையோ? உடலில் தீராத நோய் ஏதாவது வந்திருக்குமோ?’ எனப்பலவாறு யோசித்தேன்.

காலையில் பேருந்து பயணத்தில் அவளைக்காணாமல் பதறிப்போனேன். கல்லூரியில் பாடம் மனதில் பதியவில்லை. அவளது நினைவாகவே இருந்தது. அவளது வீட்டின் தொலைபேசியில் அழைக்கலாம் என்றால் ‘அவர்களது வீட்டினர் என்னைத்தவறாக நினைப்பார்களோ?’ என நினைத்து ஒரு நாள் பொறுத்துக்கொண்டேன். உண்மையில் ஒரு நாள் ஒரு யுகமாக கடந்தது. 

அடுத்த நாள் பேருந்தில் பயணம் செய்தாள். என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை. துடித்துப்போனேன். காரணம் புரியாமல் தவித்தேன். கல்லூரியில் வகுப்பிற்குப்போக மனமில்லாமல் கேண்டீனிலேயே நேரத்தைக்கடத்தினேன். ‘மாலை ஒரே பேருந்தில் ஏறினால் அவள் பேசாமல் போனால் நம் மனம் என்ன பாடு படுமோ?’ என நினைத்து வேறு பேருந்தில் ஏறினேன்.

பக்கத்தில் பார்த்து புகழ்ந்து பேசியதைக்கேட்டு மயங்கி நம்முடன் பழகினாலும் தான் வசதியானவள் எனும் மனநிலை சிகிக்கு வந்திருக்குமோ….? வசதி வசியத்தைத்தடுத்திருக்குமோ….? என பல வகையில் யோசித்தேன்.

நான் அறிவாளி தான். ஆனால் போராளி இல்லை. அவளுக்கு ஒரே நாளில் வெறுப்பு வந்த காரணத்தை இனிமேலும் யோசித்தால் படிப்புக்கெட்டு, குடும்ப வறுமையை போக்கும் கடமை மாறிவிடும் என மனதைக்கல்லாக்கி தினமும் வேறு பேருந்தில் பயணித்து, படிப்பை சிறப்பாக முடித்து நல்ல வருமானம் தரும் வேலையிலும் சேர்ந்து விட்டேன்.

எனது கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். நான் பட்டம் பெறும் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து மெல்லிதான கைதட்டல் என் உயிரைத்தொட்டது. அங்கே பார்த்தேன் சிகி….! மகிழ்ச்சியுடன் கைதட்டிக்கொண்டே இருந்தாள். பக்கத்தில் அவளது பெற்றோரும், மருத்துவர் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். நேராக, தைரியமாக அவளது இருக்கையை நோக்கிச்சென்றேன்.

அன்று நான் பட்டம் பெற்ற மிக நல்ல நாள். எனது பட்டத்து ராணியை இழந்து விட்ட மிக மோசமான நாளும் அன்று என்பதை அவளருகில் சென்ற போது தான் புரிந்து கொண்டேன். ஆம் சிகி தன் உடலை விட்டு முற்றிலுமாக வெளியேறியிருந்தாள். கேன்சர் நோய் எனும் அரக்கன் அவளைக்கொல்ல வந்திருந்தான். பிழைக்கவே முடியாது எனும் நிலையில் அவளது கடைசி ஆசையை அவளது குடும்பத்தினர் கேட்ட போது ‘நண்பன் ரகு கல்லூரியில் பட்டம் வாங்குவதைப்பார்க்க வேண்டும்’ எனக்கூறியிருக்கிறாள்.

அந்த இடத்தில் என் கண்களில் கண்ணீர் பெருகவில்லை. மாறாக அவளது உயிர் எனது கண்கள் வழியாக எனது உடலுக்குள் கலந்து ஊடுறுவி நின்றது. அந்த நொடி முதல் சிவன் பார்வதிக்கு பாதி உடலைத்தந்தது போல நானும் சிகிக்கு எனது உடலின் பாதியைக்கொடுத்து விட்டதாக உணர்ந்தேன். ஈருடல் ஓருயிர் ஆனோம் என இல்லை. ஈருயிர் ஓருடலானோம் என மாறியிருப்பதாகப்புரிந்தது.

எனது உடலையும் அவளைப்போலவே விட்டு விடலாம் என நினைத்தவனுக்கு, அவள் எனது உடலுக்குள் புகுந்ததை உணர்ந்ததால் அன்று முதல் எனது அல்ல எங்கள் உடலை மிகவும் பாது காத்து வருகிறேன்.

இந்த உலகில் சிகியை விட உயர்ந்த நேசிப்பு வேறு யாரிடத்திலும் எனக்குக்கிடைத்து விடப்போவதில்லை. அதனால் தான் அறுபது வயதிலும் அவளுடன் உடலால் மணவாழ்க்கை வாழ முடியா விட்டாலும், உயிரால் மன வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *