இன்னும்
எத்தனை யுகங்களானாலும்
காத்திருப்பேன் – கனத்த
மௌனத்தைச் சுமந்தபடி…
அதுவொன்றும் வலி தராது…
மௌனத்துக்கு முந்தைய
உன் வார்த்தைகளை விட!
அவனையும் தண்டவாளத்தையும் தவிர யாருமில்லை அந்த ரயில் நிலையத்தில்! ஒரு மூலையில் கிடந்த சிமென்ட் பெஞ்ச்சில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான் காற்றின் கண்களில்கூடப் பட்டு விட விருப்பமின்றி! மனதுக்குள் மீண்டும் ஒருமுறை கவிதை வரிகள் வந்து போயின.
‘நான்தான் கடைசி.. ஏறணும்னா ஏறிக்கோ..’ என்பது போல அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்ற மின்சார ரயில் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு ‘ஹூம்ம்ம்..’ என்ற பெரும் கூச்சலோடு புறப்பட்டுப் போனது. அவனுக்கு எந்த ஊருக்கும் போகவேண்டியிருக்கவில்லை. அல்லது, எந்த ஊரும் அவனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
காதல் மணம் புரிந்து கொண்ட நாளின் அதிகாலை நேரத்திலேயே அவனுடைய ஊர் அவனை புறக்கணித்து விட்டது. காதலியைக் கைப்பிடித்துக் கொண்டு ரயிலேறி விட்டான். அதன் பிறகு திருமணம், சாவு என்று எதற்கும் அவனால் ஊருக்குச் செல்ல முடியவில்லை.
சிறு வயது முதல் ஒன்றாகப் படித்த நண்பனின் திருமணத்தை ஓராண்டுக்குப் பிறகு தற்செயலாகத் தெரிந்து கொள்ள நேர்ந்தபோது குமுறிக் குமுறி அழுதான். ‘இனி அந்த ஊருக்கும் எனக்கும் உறவேதும் இல்லை’ என்ற முடிவுக்கு வந்த தினமும் அதுதான். அவனுடைய மனைவியின் ஊரிலும் அதே நிலைதான். ஒரே ஒருமுறை அவளோடு போய் இறங்கியபோது தெருவாசலிலேயே செருப்பு வந்து விழுந்தது. சொந்தமான ஊர்கள் இரண்டும் விலக்கிச் சென்ற பிறகு எந்த ஊரும் பிடிக்கவில்லை. ஆனால், ஊர் ஊராக அலையும் மருத்துவ விற்பனைப் பிரதிநிதி அவன்.
அவனைத் தாண்டிப் படுத்திருந்த பிளாட்பார நாய் ஒன்று மெள்ள எழுந்து வந்து அவனை முகர்ந்து பார்த்து விட்டு மீண்டும் போய்ப் படுத்துக் கொண்டது. ”சீந்துறதுக்கு என்னை விட்டா உனக்கு ஒரு நாய் கூடக் கிடையாது” என்று அவள் நேற்றிரவு சொன்னது மின்னலாக நினைவில் அலையடித்துச் சென்றது.
இப்போதுதான்.. சமீபமாகத்தான்.. அவளிடமிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விழுகின்றன. திருமணமாகி வந்த புதிதில் அவள் நாயைக்கூட நாய் என்று சொன்னதில்லை. எந்த நாயைப் பார்த்தாலும் ‘மணி’ என்றுதான் குரல் கொடுப்பாள். அந்த ‘மணி’யும் அவள் முன்னால் வாலைக் குழைத்துக் கொண்டு வந்து நிற்கும்.
”அதோட பேர் ‘மணி’ங்கிறது உனக்கு எப்படி தெரியும்?” என்று அவன் ஆச்சரியத்தோடு கேட்டால், ”இதோட பேர் எனக்குத் தெரியாது… எங்க வீட்டுல நான் வளர்த்த நாயோட பேரு மணி. அதனால, எல்லா நாயுமே எனக்கு மணிதான்..” என்பாள்.
அவர்கள் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரரை அவள் ‘அப்பா’ என்று அழைத்ததும், எதிர் வீட்டுப் பெண்மணியை ‘அத்தை’ என்று அழைத்ததும்கூட அப்படித்தான்!
அவர்கள் திருமணமாகி வந்து இறங்கிய முதல் நாள் அவனுக்குள் பசுமையாகக் கிடக்கிறது. அவனும் சில நண்பர்களும் சேர்ந்து வாடகைக்குப் பிடித்திருந்த வீடு.. திடீர் திருமணத்தால் அந்த வீட்டை அவனுக்குக் கொடுத்து விட்டு, நண்பர்கள் வேறிடத்தில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு. உடனடியாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.
அவள்தான் ஆரம்பித்தாள்.. ”எனக்கு முறையா இவரைக் கட்டி வெச்சிருந்தா நான் வாழப்போற வீட்டுல மச்சான், கொழுந்தன் இருந்தா விரட்டி விட்டுட்டா குடும்பம் நடத்துவேன்.. நீங்க இப்படி அடிச்சுப் பிடிச்சு காலி பண்றது என்னை அவமானப்படுத்தற மாதிரி இருக்கு..” என்று அவள் சொன்னபோது நண்பர்கள் கூட்டம் கொஞ்சம் கலங்கித்தான் போனது.
ஒரே மாதத்தில் எல்லோரும் தனித் தனி அறை தேடிப் போய் விட்டாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் பால்காரருக்கு முன்பே அவன் வீட்டில் நண்பர்கள் கூடினார்கள். சலிக்காமல் எல்லோருக்கும் வடித்துக் கொட்டினாள். பேதம் பார்க்காமல் எல்லோருடைய சட்டைகளையும் சலவை செய்து கொடுத்தாள்.
முதல் நாள் சமையல் ஏற்பாடுகளுக்கு வழியில்லாததால் வீட்டுச் சொந்தக்காரர் வீட்டில்தான் சாப்பாடு. எல்லோரும் சாப்பிட்டு முடித்து வெளியேற, அவள் மிகவும் சுவாதீனமாக வீட்டுக்காரம்மாவுடன் சேர்ந்து அடுக்களையைச் சுத்தம் செய்து பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தாள்.
”ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்று சம்பிரதாயமாகச் சொல்லிவிட்டு அவனும் நண்பர்களும் மெதுவாக சிகரெட்டுக்காக ஒதுங்கி, அப்படியே படியேறி வீட்டுக்கு வந்து விட்டனர். கொஞ்ச நேரத்தில் கீழிருந்து குரல் வந்தது. அவனை ”என்னங்க” என்று அழைத்தாள் அவள்.
அவனும் படியிறங்கிச் செல்ல, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்காரர் முன்னால் நின்றாள். ”அப்பா.. உங்க நிழல்ல வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கோம். வயிறார சோறு போட்டீங்க… மனசார வாழ்த்துங்க…” என்று அவனையும் இழுத்துக் கொண்டு அவர் காலில் விழுந்து விட்டாள். ஒருகணம் திகைத்துப் போனவர், சுதாரித்துக் கொண்டு தன் மனைவியையும் அருகில் அழைத்து தம்பதி சமேதராக வாழ்த்தினார்.
”அம்மா தாயி.. இந்தப் புள்ளைகளை எனக்கு பத்து வருஷமாத் தெரியும். ஒருத்தருக்கு ஒருத்தர் பாசமா இருப்பாங்க.. உண்மையிலேயே நீ ரொம்பக் கொடுத்து வச்சவம்மா.. ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்.. அவன் வேலையைப் பத்தி உனக்குத் தெரியும். ஒரு நாளைக்குச் சீக்கிரம் வர முடியும். சில நாள் டாக்டர்களை எல்லாம் பார்த்துட்டு வர ராத்திரி ரொம்ப நேரமாகிடும். அவன் வேலையா வெளியில எங்க சுத்தினாலும் கவலையில்லை. ஆனா, வேலை முடிஞ்ச செகண்டு வீட்டைப் பார்த்து வண்டி திரும்பணும்.. இல்லைன்னா, எங்கேயோ தப்பு இருக்குனு அர்த்தம். வாழ்க்கை மொத்தமும் அதுக்குள்ளதான்.. சூதானமா நடந்துக்கோ!” என்று அறிவுரை சொல்லி விபூதி பூசினார்.
வேலை முடிந்து நடு இரவைத் தாண்டியும் வீட்டை நோக்கிச் செல்லவில்லை இந்த வண்டி. இத்தனை வருடங்களில் இது முதல் முறை.
ரயில் நிலையத்தின் பிரதான விளக்குகள் அணைக்கப்பட்டு விட, ஸ்டேஷனின் இன்னொரு மூலையில் கிழிந்த கம்பளிக்குள் சுருண்டு கிடந்த நோயாளி பிச்சைக்காரன், நீளமாக இருமி அமைதியைக் கலைத்தான். அவன் கடிகாரத்தை உயர்த்தி மணியைப் பார்த்தான். ஒன்றே முக்கால் என்று ஒளிர்ந்தது கடிகாரம்.
அவன் நள்ளிரவில் வீடு திரும்பும் சமயங்களில்கூட அவனுக்காகக் காத்திருப்பாள் அவள். முகம் கழுவி வந்து உட்காரும்போது தட்டில் டிபனோடு எதிரே உட்காருவாள். ‘ஏன்ப்பா.. இவ்வளவு நேரமாகும்னா எங்கேயாவது சாப்பிட்டுட்டு வரலாம்ல.. குலை ஒடுங்கிப் போயிராது..” என்பாள். அவனுக்காக அவள் எப்போதுமே காத்திருந்தது கிடையாது. ‘என் பசிக்கு நான் சாப்பிடுறேன்… நீ வந்து என்ன ஊட்டி விடவா போற..? இல்ல.. இருக்கறதை ஆளுக்குப் பாதியா சாப்பிடுற நிலைமையில இருக்கோமா?. நல்லாத்தானே இருக்கோம். பிறகென்ன? உனக்காகக் காத்துக் கெடக்கணும்னு தலையெழுத்தா என்ன..?’ என்பாள். எப்போதும் அவள் குரலில் யதார்த்தம் தெறிக்கும்.
”ஒவ்வொருத்தி புருஷன் சாப்பிட்ட தட்டுல சாப்பிடணும்னு தவம் கிடக்கறா.. எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமப் போச்சு..” என்று சீண்டிப் பார்ப்பான் அவன். அவளோ, ”உன் எச்சிலைச் சாப்பிடணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா… அப்படித்தான் சாப்பிடணும்னா நான் பட்டினியாவே கிடந்துடுவேன்.. அதுல என்ன சாகா அமிர்தமா வந்துடப் போவுது..” என்று வெட்டிக் கொண்டு போவாள். பிறகு படுக்கைக்கு வரும்போது, ”நிஜமாவே நீ சாப்பிட்ட தட்டுல நான் சாப்பிடணும்னு ஆசைப்படுறியா…” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்பாள்.
சமீப காலமாக, இப்படித் துவங்கும் கொஞ்சல்களேகூட சண்டையில் போய் முடியத் துவங்கியுள்ளன. அவள் ஆசைப்பட்ட சினிமாவுக்குப் போக முடியா விட்டால் சண்டை, அவனுக்குப் பிடித்த பலகாரம் செய்யா விட்டால் சண்டை என்று இருவருக்குள்ளும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால், நேற்று காலையில் அந்தத் திருமணப் பத்திரிகை வந்த பிறகுதான் சண்டை என்றால் என்ன என்பதை இருவருமே உணர்ந்து கொண்டார்கள்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவனுடைய ஊர் அவனை அழைத்திருக்கிறது. அவனுடைய சித்தப்பா மகன் தன்னுடைய திருமணத்துக்கு தனிப்பட்ட முறையில் அச்சடித்திருந்த பத்திரிகையை அனுப்பியிருந்தான். அவனுடைய அப்பா அழைப்பது போல குடும்பத்தில் அடித்திருந்த பத்திரிகை அல்ல அது! இது நிச்சயம் பெரியவர்களுக்குத் தெரியாமல் தம்பி அனுப்பியதுதான். ஆனாலும்.. ஊர் அவனை இழுத்தது.
”போகாதே.. வாங்குபட்டுத் திரும்புவே..” என்றாள் அவள். ”என் அப்பாவும் அம்மாவும் என்னைச் சேர்த்துக்கிடுவாங்களோனு உனக்குப் பொசுங்குது…” என்றான் அவன். அதற்குத்தான் சட்டென்று ”சீந்துறதுக்கு என்னை விட்டா உனக்கு ஒரு நாய்கூடக் கிடையாது” என்றாள் அவள்.
தன்னைப் பெற்றவர்களை அவள் நாயோடு ஒப்பிட்டுப் பேசியதில் அவனுக்குள் ஆத்திரம் பொங்கியது. சட்டென்று வெளியே கிளம்பி விட்டான். தன் நண்பர்களைச் சகோதர்களாகவும் மச்சான், கொழுந்தன்களாகவும் ஏற்றுக் கொள்ளத் தெரிந்தவளுக்கு, வீட்டுச் சொந்தக்காரரை அப்பா என்று ஏற்றுக் கொள்ளத் தெரிந்தவளுக்கு இந்த அன்பு ஏன் தெரியவில்லை? பொருள் தெரிந்துதான் சொன்னாளா..? அவளை அறியாமல் வந்த வார்த்தையாக இருக்கும் என்று தோன்றியது. காலையில் இருந்த கோபமும் ஆவேசமும் இப்போது அவனுக்குள் இல்லை. இன்னும் எத்தனை நேரத்துக்கு இப்படியே இருக்க முடியும் என்று யோசித்தான். இந்நேரம் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்?
எந்த பூமியிலோ விதைக்கப்பட்ட பயிர் அவள். நாற்றங்காலில் இருந்து வயலுக்கு பிடுங்கி நடப்படும் நெல்லுக்கு பிடுங்கி நடுபவனின் தயவு இருக்கும். உரமிடுவான்.. பராமரிப்பான்.. ஆனால், இவள் தண்ணீரோடு சேர்ந்து கொண்டு தடம் மாறி வந்த விதை. தானே நின்று முளைத்து நிற்கிறாள்.
நீண்ட பெருமூச்சோடு எழுந்து வெளியேறி வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான். வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு படியேறி மேலே சென்றபோது வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். அவனுக்குப் பிடித்த லாவண்டர் நிறப் புடவை அணிந்து, தலையில் ஒற்றை ரோஜாவைச் சூடி, டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் நிதானமான நடையில் உள் அறைக்குச் சென்று உடை மாற்றி, கைலியை அணிந்து கொண்டு கை, கால் முகம் கழுவிக் கொண்டு வந்தான்.
சப்பாத்திகளையும் பருப்பையும் டி.வி-யின் முன்னால் தரையில் எடுத்து வைத்திருந்தவள், ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அவனை ஒட்டி அமர்ந்தாள். ”நீ சாப்டுட்டுத் தட்டைக் கொடு.. அதிலேயே நான் சாப்ட்டுக்கறேன்..” என்றாள். அதற்கும் மேல் முகத்தைத் திருப்ப இயலாமல், சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு ”ஐ லவ் யூ..!” என்றான் அவன்.
– மார்ச் 2009