பிரேமா மகாலிங்கம்

 

பெயர்: பிரேமா மகாலிங்கம்

Name in English: Premapathi Mahalingam

மின்னஞ்சல் முகவரி:premapathi2303@gmail.com

பொறுப்பு: செயலவை உறுப்பினர்

முகநூல் பெயர்: பிரேமா மகாலிங்கம்

வணிக மேலாண்மைத் துறையில் பட்டியப் படிப்பை முடித்திருந்தாலும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக பயணித்தது ஒளிவரப்புத் துறையில்தான்.

சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பங்கை ஆற்றுவதற்கு விரும்புகிறார். அசூர வேகத்தில் வளர்ந்து வரும் நாட்டில் மாற்றங்களுக்குப் பஞ்சமில்லை. அதனால் ஏற்படும் குடும்பச் சிக்கல்களையும் சவால்களையும் எதிர் நோக்கும் மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தனது படைப்புகளை அமைத்து வருகிறார்.

தங்கமுனை பேனா விருது 2015-இல் சிறுகதைப் பிரிவில் மூன்றாம் பரிசினையும் முத்தமிழ் விழாப் போட்டிகளில் முதல் பரிசினையும் பெற்றிருக்கிறார். இவர் கவிஞரும் கூட.

பட்டாம்பூச்சிகளைத் துரத்துபவள்!

சில ஆண்டுகளுக்கு முன் நான் நூல் வெளியீடு செய்யவிருப்பதாக வதந்தி ஒன்று வந்திருந்தது. முதலில் எனக்கே நம்பச் சிரமமாகத்தான் இருந்தது. தவழ எத்தனிக்கும் வேளையில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க
நினைக்கலாமா? ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற நண்பர்களின் குரலும் கூடவே ஒலித்தது. சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய மன்றங்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் என் பயணத்திற்குப் பெரும் துணை புரிந்தன. மூன்று ஆண்டுகள் கழித்து இன்று என் முதல் இலக்கியக் குழந்தையின் பிரசவம்.

கருவறையிலிருந்து கல்லறைவரையிலான நமது பயணங்களில் பலரையும் சந்திக்கிறோம், ஆனால் எல்லாரும் நம்முடன் இறுதிவரை பயணிப்பவர்களா? காலையில் மலர்ந்து மாலையில் வாடும் மலர்களைப் போன்றுதான் சில அறிமுகங்கள். பலர் அவர்களின் தேவை முடிந்ததும் அவரவர்களுக்கான நிறுத்தங்களில் இறங்கிக்கொள்வார்கள். அதில் சிலர் அவர்களுடன் பயணித்ததற்கான சில நினைவுகளை விட்டுச் செல்வார்கள். என் கதைகளில் வரும் கதாமாந்தர்கள் கண்ணால் கண்ட மனிதர்கள், என்னோடு பயணித்த சக பயணிகள். அவர்களின் வாழ்வை, துயரை, அனுபவங்களை எழுத முயற்சித்திருக்கிறேன்.

‘மஞ்சள் வெயில்’ கதையில் வரும் கதாமாந்தர்கள் சுந்தரமும், கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஓஸ்மானும் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புனைவுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. கடகத்தில் வரும் திலகா என்ற பாத்திரத்தின் இறுதி மூச்சு, காற்றோடு கலந்து இன்னும் இந்த மண்ணில்தான் வாசம் செய்கிறது. ‘ஓர் இரவு ஒரு பகல்!’ கதையில் வரும் மருத்துவமனையில் நிகழும் சம்பவங்கள் வெறும் கற்பனைகளல்ல, எனது அவதானிப்புகள்.

பெரும்பான்மையான எனது கதைகளில் மரணத்தின் நிழல் படிந்திருப்பதை என் நெருங்கிய நண்பர்கள் சுட்டிக் காட்டியதுண்டு. எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து நான் சந்தித்த ஒவ்வொரு மரணங்களும் அதன் இருப்பை எனக்கு உணர்த்திக்கொண்டே போயின. மரணம் எனக்குள் ஏற்படுத்துதிய தாக்கங்களின் நிழல் உங்கள் மீதும் படருமானால் அதுவே இந்தத் தொகுப்பாக்கத்திற்காக எடுத்துக்கொண்ட முயற்சியின் வெற்றி. இது என் முதல் முயற்சி என்பதைவிட, இனி வரப்போகும் அடுத்தப் படைப்புகளுக்கான விதை.

கார்மேகக் கூட்டத்திலிருந்து சில நீர்த் திவலைகளைத் திரட்டி உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன். குடையில்லாமல் வாருங்கள், சேர்ந்தே மழையில் நனைவோம், உங்களுக்கான வானவில் தோன்றலாம், அதன் வளைவுகளில் சறுக்கி விளையாடுவோம்!

எனக்கு உருக் கொடுத்து, கல்வியோடு தமிழையும் புகட்டி, உயிராய் என்னை வளர்த்த என் பெற்றோர் அமரர்கள் திரு மகாலிங்கம், திருமதி ஆனந்த கௌரி அவர்களின் பாதங்களை வணங்கி, இந்நூலை எனது தாத்தா அமரர் திரு காளிமுத்து (INA – இராணுவ வீரர்) அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

– பிரேமா மகாலிங்கம், நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *