(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘தன் காமத்தினவுக்குத் தீனியிடும் கருமத்தில் பெண் ஒருத்தி கருத்தரிக்கின்றாள் அதற்கு அவள் பெறும் தண்டனை தான் மகப்பேறு…….’
அனைத்தின் அனைத்துமே அன்னை! எனவே, அண்ட சராசரங்களும் அன்னை வடிவானது. உயிர் அன்னை அருளியது – இஃதே அந்த மகான் வரித்திருந்த மதத்தின் சாரம்.
பெண்மையில் அவர் தாய்மையைத் தரிசித்ததினால் இல்வாழ்வில் மனம் ஒப்பவில்லை. துறவறம் பயின்றார். தன் அன்னையின் உருவத்தையே வழிபட்டு, ஆசிரம வாழ்க்கையில் இன்பந் துய்க்கலானார்.
வழக்கம் போலவே அன்றும், அதிகாலையில் காலைக் கடன்களை முடிக்க ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கு ஓர் அழகிய இளம் பெண் அமர்ந்திருந்தாள். சிசுவுக்குப் பாலூட்டும் பணியில் ஒன்றினாள். சிசுவும் தாயின் இன் அணைப்பினைச் சுகித்து மகிழ்ந்தது.
அவருடைய மனத்திலே உண்மை ஒன்று விண்டதைப் போன்ற எண்ணப் பிரகாசம்.
‘நிஷ்காமிய கருமத்தின் செவ்வை. அது பயனிற் பற்றின்றியே இயற்றுதல் ஒழிக்க இயலாமை வழி இயற்றுவது. அதன் சுரப்பே தாய்ப்பால்….’
மகானின் மனத்தில் நிறைவு.
அவர் தன் கடன்கள் முடித்துத் திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்பெண் தூரத்திற் செல்வது தெரிந்தது. அவள் கையிற் சிசுவைக்காணவில்லை. ஓர் ஐயத்தின் சிலிர்ப்பு.
தாம் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கையில், ‘வீல்’ எனக் கத்திய பிஞ்சுக்குரல் கேட்டதும், ஏதோ ஒன்று ஆற்றிலே வீசப்பட்டதான சத்தம் தொடர்ந்ததும், நினைவு மனத்தின் சுழற்சியில் வெண்ணெய் திரண்டு விளைய…. நடைக்கு விரைவு சேர்த்து அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தினார்.
‘உன் குழந்தை எங்கே?’
‘அதனை ஆற்றிலே வீசிவிட்டேன்’.
‘நீ பெற்ற பிள்ளையைக் கொன்ற பாவி! உன் செயல் அன்னைக் குலத்திற்கே மாசு….’
‘அந்தக் குழந்தைக்கு உயிரளிக்க நானே சாதனமாக அமைந்ததால், அதனை அழிக்கும் நிமித்தமாக நான் ஏன் என்னை நியமித்துக் கொள்ளக்கூடாது?’
மகான் துகட்பொழுது நேரம் யோசித்தார்.
‘சற்று முன்னர் அதற்கு உன் முலையிற் பாலூட்டினாய். அஃது அன்பின் பூரிப்பில் விளைந்த செயலன்றோ?’
‘பால் வேதனையைத் தாங்கமாட்டாததாலல்லவா அதற்குப் பாலூட்டினேன், இதில் எவ்வாறு புகுந்தது அன்பு?’
புதிய உண்மையொன்று சிரசுதயங் காட்டுவதான மனமயக்க ஜாலம்.
‘ஏன் அதனைக் கொன்றாய்?’
‘அஃது அழுக்கின் கறை. என் மாம்ஸ இச்சைகளுக்கு என் உடலை அர்ப்பணித்தேன் என்ற பலவீனத்தின் சின்னம்….’
‘அன்னை கருணை வடிவானவள்….’
‘வெறும் பிரமை! தன் காமத் தினவுகளுக்குத் தீனியிடும் கருமத்தில் பெண் ஒருத்தி கருத்தரிக்கின்றாள். அதற்கு அவள் பெறும் தண்டனைதான் மகப்பேறு. கட்டுடலைத் தளர்ச்சி செய்யும் மகப்பேறு புனிதமானது என்று உலக ஒப்பாசாரத்திற்காக ஏற்றுத் தன்னையும் பிறரையும் ஏமாற்றுகின்றாள்.
‘சக்தி வடிவாக நான் வழிபடும் என் அன்னை?’
‘நீர் யோனி வழிப்பிறந்தீர்! எனவே, உமது அன்னையும் பத்தோடு இன்னொன்று….’
அவள் நடக்கத் தொடங்கினாள். அவளைத் தடுத்து நிறுத்தும் தைரியம் தன் வசம் இற்றுவிட்டதை அவர் உணரலானார்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.